கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 8 – அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி

This entry is part of 41 in the series 20071122_Issue

வாஸந்தி


“ஒரு முக்கிய அறிவிப்பு” என்கிற ஒரு எதிர்பாராத ஊடுருவலைத் தொடர்ந்து என்னுடைய அன்றைய கருப்பு வெளுப்பு தொலைக்காட்சிப் பெட்டியில் திடுதிப்பென்று பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் முகம் தெரிந்தது. சுற்றி வளைத்துப் பேசாமல் மிதமிஞ்சிய சோக பாவத்துடன் வார்த்தைகள் ஹிந்தியில் வெளிப்பட்டன.
” ஹம் மஜ்பூர் ஹைன்”.
” நாம் நிர்பந்தத்தில் இருக்கிறோம். தேச விரோத சக்திகளை அடக்கியாகவேண்டிய நிர்பந்தம்”.
சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் சந்தித்திருந்த சவால்கள், வெற்றிகள், இழப்புகள், சோகங்கள் அனைத்தும் அந்தப் பெரிய சாகரக்கண்களில் புதையுண்டு இப்போது விவரிக்க இயலாத ஆற்றாமை தளும்பி நின்றது. முன்னறிவிப்பில்லாமல் நாட்டின் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்கவேண்டுமானால் அது தலைபோகிற விஷயமாகத்தான் இருக்கும் என்று தில்லி வாழ் மக்களுக்கு நன்றாகத்தெரியும். முன்பு சற்றும் எதிர்பாராமல் வந்த இந்தியச் சீனப்போரின் போது இந்திய துருப்புகள் தோற்றுப் போன அதிர்ச்சி தாங்காமல் இப்படித்தான் வானொலியில் முக்கிய அறிவிப்பு என்ற அறிவிப்புக்குப்பின் நேரு நடுங்கும் குரலில் ” பொம்டில்லா விழுந்துவிட்டது” என்று சொன்னது எனக்கு
நினைவுக்கு வந்தது. துருப்புகள் பின்வாங்க நேர்ந்ததைவிட நண்பன் என்று நினைத்து உறவாடிய சீனா முதுகில் குத்திய அதிர்ச்சிதான் நேருவுக்குத் தாளமுடியாததாக இருந்திருக்கவேண்டும். இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பையே தனது அறியாமையால் பணயம் வைத்துவிட்ட குற்ற உணர்வு அவரை ஆயாசப்படுத்தி இருக்கவேண்டும். சீனப் போருக்குப்பின் நோயில் படுத்த நேரு அதிலிருந்து மீளவில்லை.
இப்போது இந்திரா காந்தியின் குரலிலும் நடுக்கம் தெரிந்தது. முகத்தில் சோகமோ கவலையோ பதட்டமோ அல்லது அவை எல்லாமான கலவையோ தெரிந்தது.
“நமக்கு வேறு வழியில்லை. மிகக் கனத்துப்போன இதயுத்துடன் இதைச் சொல்கிறேன்”. எதற்கு இந்த பீடிகை ? தயங்கியபடி வார்த்தைகள் வந்தனவே ஒழிய விஷயம் என்ன என்று தெளிவாகவில்லை. சொல்லவந்த வார்த்தைகளைச் சொல்ல பயந்ததுபோல, எதற்கோ நாட்டு மக்களைத் தயாரிப்பதுபோல அறிவிப்பு அத்துடன் நின்றது. அந்த காலகட்டத்தில்தான் பஞ்சாப் பிரச்சினை செய்தியில் உச்சகட்டத்தில் இருந்த காரணத்தால் அங்குதான் ஏதோ நிகழ்ந்திருக்கவேண்டும் என்று எல்லோரும் அனுமானித்தாலும் திடுக்கிடும்படியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. மறுநாள் நாளேடுகளில் “பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம்!” என்ற தலைப்பு அலறிற்று. தலைப்புச் செய்திக்குப்பின் அரசின் அறிவிப்பு.
“இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் சக்திகள் அம்ருத ஸரஸ் பொற்கோவிலை ஆக்கிரமித்திர்ப்பதாலும் சரண் அடைய மறுப்பதாலும், ராணுவம் பொற்கோவிலுக்குள் அனுப்பப்பட்டிருக்கிறது.”
முகத்தில் அறைந்த சேதியாக இருந்தது அது. மிகப் புனித ஸ்தலமாக நம்பிக்கையில்லா சீக்கியனும் கருதும் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைத்தது என்றால், அது எப்படிப்பட்ட நிர்பந்தமாக இருந்தாலும் அதை சீக்கிய சமூகம் எப்படி எதிர்கொள்ளும் என்று நினைத்துப் பார்க்கவே சங்கடமேற்பட்டது. ஒவ்வொரு சீக்கியனும் தான் அவமதிக்கப்பட்டதாகவே நினைப்பான். அந்தக் கோபம் எதில் கொண்டு முடியும் என்று சொல்வது கடினம். இதெல்லாம் அரசுக்குத் தெரிந்திராதா? நிச்சயம் தெரிந்துதான் இத்தகைய ‘தற்கொலை’ முடிவை எடுத்திருக்கவேண்டும். அதனால்தான், பின்னிப்பின்னி வார்த்தைகள் வந்தன– ‘ஹம் மஜ்பூர் ஹைன்!”
பஞ்சாபைப்பொறுத்தவரை பல பிரச்சினைகள் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருந்தன. பஞ்சாபின் பலம் மிக்க அகாலிதல கட்சி காங்கிரஸ்ஸின் எதிரி. அட்டகாசமான சில கோரிக்கைகளை மத்திய காங்கிரஸ் அரசின் முன்வைத்தது. எளிமையாக ஆரம்பித்த கோரிக்கைகளை வெறும் பேச்சு வார்த்தையால் தீர்வு காணமுடியாத அளவுக்கு இரு தரப்பும் ஈகோ பிரச்சினையில் சிக்கின.தவிர மதப் போர்வை போர்த்திய அகாலிதலத்தின் கோரிக்கைகள் ஹிந்து சமூகத்தை அச்சுறுத்திற்று.
எங்கள் கோரிக்கைகளை ஒத்துக்கொண்டால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றார்கள் அகாலிகள் மெதப்பாக. நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கே நான் ஒப்புக்கொள்வேன் என்றார் இந்திரா காந்தி. இதற்கு இடையில் இந்திரா வேறு ஒன்றையும் செய்தார். அகாலிகளை அடக்கிவைக்க மாற்று ஒன்றைத் தேடினார். பிந்திரன்வாலே என்ற பெயர் தெரியாத ஒரு ஆளை உசுப்பிவிட்டு அகாலிகளுக்கு எதிராக
சீக்கிய மதத் தலைவன் என்ற போர்வை போர்த்தி பெரிய ஆளாக உருவாக்கினார்.வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை விட மோசமாக, பிந்திரன் வாலே அதிகாரம் கிடைத்த போதையில் , மதம் பிடித்த
சீக்கிய மத வெறியனானான். ஆயுதம் தாங்கிய படைகள் சேகரித்தான். அப்பாவி ஹிந்துக்கள் சகட்டுமேனிக்கு கொல்லப்பட்டார்கள். கிராம மக்களை ஈர்க்கும் விதத்தில் மிகப் பிற்போக்குத்தனமான கொள்கைகளைப் பரப்பலானான். பிந்திரன்வாலேயின் பிரவேசம் பஞ்சாபின் துர்பாக்கியம் என்று எனது பல சீக்கிய நண்பர்கள் சொல்வார்கள். அவனை எதிர்த்த முற்போக்கு எண்ணம்கொண்ட சீக்கியர்களும் கொல்லப்பட்டார்கள்.பிந்த்ரன்வாலே சடுதியில் ஒரு பயங்கர அதிகார மைய்யமானான். காலிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று பிரிவினைவாத கோஷம் மீண்டும் தலைதூக்கும் நிலை ஏற்பட்டது.தான் உருவாக்கிய நபர் ·ப்ரான்கின்ஸ்டீன் பூதம்போல் மாறிப்போனதை எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்திய அரசு விழித்தது. தான் கைது செய்யப்படலாம் என்று உணர்ந்து பிந்த்ரன்வாலே தனது ஆயுதங்கள், ஆயுதம் தாங்கிய ஆட்களுடன் பொற்கோவிலுக்குள் ஒளிந்து கொண்டான். ராணுவத்தைப் பொற்கோவிலுக்குள் அனுப்பவதைத்தவிர அவனை கைதுசெய்யும் வழி வேறு இல்லை என்ற முடிவுக்கு அரசு வரவேண்டிவந்தது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் பிந்திரன்வாலேயும் இன்னும் சிலரும் சுட்டுத்தள்ளப்பட்ட செய்தியும் அங்கு குவிக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்க¨ளைப் பற்றின பட்டியலும் வந்தன. சீக்கியரல்லாதவர்கள், முக்கியமாக பஞ்சாபி ஹிந்துக்கள், பிந்திரன்வாலே ஒழிந்தான் என்று சமாதானப்பட்டுக்கொண்டார்கள். ஆனால் எதிர்பார்த்ததுபோல பஞ்சாபில் சீக்கியர்களுக்கு பிந்த்ரன்வாலேயின் மரணம் அவனைத் தியாகி ஆக்கியது.
‘ஷஹீத்’ என்ற புனித பட்டம் கிடைத்தது. அப்படி நினைக்காத அறிவுஜீவிகளும் ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்ததை மன்னிக்க முடியாத கோபத்தில் இருந்தார்கள். என் சீக்கிய சினேகிதியின் மாமனார் அன்றிலிருந்து தலையைச்சுற்றி ஒரு கருப்புப் பட்டையைக் கட்டிக்கொண்டார் தமக்கு ஏற்பட்ட அவமானத்தின் சின்னமாக.
அடுத்து நகர்ந்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு சீக்கியனின் உள்ளத்திலும் ஒரு மௌனப்போராட்டம் நடந்திருக்கும் என்பதயோ பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மௌனப் புயல் உருவாகிக்கொண்டிருந்ததையும் வெளி உலகம் கவனிக்கவில்லை. உளவுத்துறைக்கு என்ன தகவல் கிட்டியிருந்தாலும் இந்திரா காந்தி அவர்களது எச்சரிக்கைகளைக் கேட்டுக்கொள்ளவில்லை. குண்டு துளைக்காத அங்கி அணிய மறுத்தார். தனது ப்ரத்தியேகப் பாதுகாப்புக்காக இருந்த இரு சீக்கியர்களை மாற்றவும் சம்மதிக்கவில்லை.
ஒரு நாள் காலை ஒன்பதேமுக்கால் மணிக்கு நண்பர் அவஸ்தியிடமிருந்து ·போன் வந்தது.
“போய்விட்டாள்”என்றார் சுறுக்கமாக ஹிந்தியில். ” அவளுடைய சீக்கிய செக்கூரிடி கார்ட்ஸ் சுட்டுத்தள்ளிவிட்டார்கள்.” எனக்கு அதிர்சியில் பேச்சு வரவில்லை. ஆனால் இது வினோதமாக எதிர்பார்க்கப்பட்ட அதிர்ச்சியாக இருந்தது. இந்திரா காந்தியின் தவறு எதுவாக இருந்தாலும் படுகொலை என்பது அநியாயமாகப் பட்டது.
பிரதமர் இறந்துபோன செய்தியை அரசாங்கபூர்வமாக அரசு மாலைவரை வெளியிடவில்லை. ஆல் இந்தியா ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் தாக்கப்பட்ட செய்தி மட்டுமே சுறுக்கமாக வந்தது, ஆல் இந்தியா மெடிகல் சயன்ஸ் மருத்துவமனையில் சிகிட்சைப்பெற்று வருவதாக. ஆனால் தில்லி முழுவதும் பிரதமரின் அந்தரங்க சீக்கிய பாதுகாவலரே அவரைச் சுட்டுவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவிற்று. பள்ளிகளும் கல்லூரிகளும் பத்துமணிக்கு மூடப்பட்டு பிள்ளைகள் வீடு திரும்பிவிட்டார்கள். ‘சீக்கிய பாதுகாவலர்’ என்கிற விவரம் பாமரர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. மாடியிலிருந்து பார்த்தபோது அரசாங்க குவாட்டர்ஸ் பணியாட்கள் எல்லாம் கீழே சாலையில் நின்று காரமான வாதத்தில் ஆழ்ந்திருந்தது தெரிந்தது. என்னுடைய நேப்பாள வேலைக்காரனும் அவன் மனைவியும் சீக்கியர்களைத் திட்டினார்கள். உப்பிட்டவரையே கொல்லத்துணிகிறவன் எத்தனை நீசத்தனம் கொண்டவனாக இருக்கவேண்டும் ? பிந்திரன்வாலே எத்தனை அப்பாவி இந்துக்களைக் கொன்றான்? அவனை அரசு தாக்கினதற்கு நியாயமான காரணம் இருந்தது. அதற்காக நாட்டை ஆளுகிற பிரதமரை, ஒரு பெண்மணியைப் படுகொலை செய்வதா? ஒரு சீக்கியனையும் நம்பமுடியாது ! எல்லாரும் காலிஸ்தானிகள் . இந்திய பற்று இல்லாதவர்கள். இவர்களையெல்லாம் ராணுவத்திலும் போலீஸிலும் வைக்கக்கூடாது. ப்ரதமரின் அந்தரங்க பாதுகாவலராக சீக்கியனை வைத்திருக்கலாமா?
அனைவரும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்கள். ராஜ விசுவாசிகள் மன்னனுக்கு ஏற்பட்டுவிட்ட விபத்தைக்கண்டு கலக்கமடைந்ததுபோல், மாய்ந்து போனது போல் தோன்றிற்று. தீக்குச்சியைக் கிழித்துப் போட்டால் நெருப்பாய் மாறுவார்கள் என்கிற உணர்வு நிலை அது என்று நான் கவலைப்பட்டேன். ஆனால் அதை ஆத்திரக்கார காங்கிரெஸ் கட்சிக்காரர்கள் அபாயகரமாக உபயோகித்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. கடையெல்லாம் மூடிவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் வேலைக்காரனைக் கடைக்கு அனுப்பி நான்கு நாட்களுக்குத் தேவையான காயும் பழமும் ரொட்டியும் வாங்கி வரச் சொன்னேன். சட்டென்று நினைவு வந்தவளாக பக்கத்தில் இருந்த எனது சீக்கிய சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று வெளியில் எங்கும் போகாதீர்கள் என்று எச்சரித்து விட்டு அவர்களுக்கு முட்டையோ பாலோ எது வேண்டுமானலும் நான் அனுப்புகிறேன் என்று சொன்னேன். சிநேகிதி மிகுந்த கலக்கத்தில் இருந்தாள். நான் கிளம்பும் சமயத்தில் கவனித்தேன். அவளுடைய மாமனார் தனது கருப்புப் பட்டையை கழற்றிவிட்டிருந்தார். எனக்கு இனம்புரியாத சங்கடம் ஏற்பட்டது.
மாலை நான்கு மணிக்குள் நம்பமுடியாத செய்திகள் எனது பத்திரிக்கைத் துறை நண்பர்களிடமிருந்து வரத்துவங்கின. சீக்கியர்களுக்குச் சொந்தமான கடைகளை வாகனங்களை ஆட்டோக்க¨ளை குறிவைத்து ரவுடிக்கும்பல்கள் தாக்குவதாக , பெட்ரோல் ஊற்றி கொளுத்துவதாக… ஆட்டோக்கள் கடைகள் எரிவதைப் பார்த்ததாகப் பலர் சொன்னார்கள். அதைவிட பயங்கரங்கள் மறுநாள் நடந்தன. சீக்கிய இளைஞர்கள் முதியவர்கள் என்று யாரை வேண்டுமானாலும் வெளியில் இழுத்து பெட் ரோல் ஊற்றி ரவுடிக் கும்பல்கள் கொளுத்த ஆரம்பித்தன. போலீஸ் என்பது காணாமல் போயிற்று. அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது போல்
இருந்தது. ரவுடிக்கும்பல்கள் எல்லாம் காங்கிரெஸ் கட்சிக் காரர்களால் அனுப்பப்பட்டவர்கள் என்றும் பல இடங்களில் முகம் அறிந்த காங்கிரெஸ் தலைவர்களே அவர்களை முடுக்கிவிடுவதில் ஈடுபட்டதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். ஊரடங்கு சட்டம் ப்ரகடனப்படுத்தப்பட்டது. இந்திரா காந்தியின் உடல் மக்களின் பார்வைக்கு தீன்மூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்தது. அதைக்காண நடக்கும் தொலைவில் வசித்த மக்கள் மட்டுமே சென்றார்கள்.
நண்பர் அவஸ்தி கூப்பிட்டதால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அலுவலகக் கட்டிடத்துக்குச் சென்றேன். அவர் என்னை கட்டிடத்தின் உச்சிக்கு, 17ஆம் தளத்திற்கு அழைத்துச் சென்றார். பரந்த மொட்டைமாடியில் பலர் நின்று வெளியே தொலைவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்வையை சுழற்றிய நான் திடுக்கிட்டேன். தில்லி முழுவதிலும் ஏகமாகக் கரிய தூண்கள் எழும்பியிருந்தன. புகைத் தூண்கள். தில்லி மாநகரம்
எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு பெண் அப்படியே தரையில் சாய்ந்து கட்டுப்படுத்தமுடியாமல் அழ ஆரம்பித்தாள். எனக்கு நாடி நரம்பெல்லாம் விதிர்த்துப் போயிற்று.
எத்தனை சீக்கியர்கள் இறந்தார்கள் எத்தனைபேர் விடும் வாசலும் இழந்தார்கள் என்கிற சரியான புள்ளிவிவரம் யாருக்கும் தெரியாது. சீக்கிய சமூகம் மிக கர்வம் பிடித்த சமூகம் அவர்க¨ளைக் கொஞ்சம் தட்டி வைத்தால்தான் அவர்கள் கொட்டம் அடங்கும் என்று பலர் பகிரங்கமாகப் பேசியதைக் கண்டு நான் அதிர்ந்தேன். மனித நேயம் மடிந்த நான்கு நாட்கள் என்று தலைப்பிட்டு அந்த நான்கு நாட்கள் நடந்த வெறியாட்டத்தை கல்கி பத்திரிக்கைக்கு எழுதினேன்.
அந்த இன வெறியாட்டம் என்னை உலுக்கிவிட்டது. இந்த வெறியும் கோபமும் எங்கிருந்து எதனால் ஜனிக்கிறது என்கிற கேள்வி விடாமல் துன்புறுத்திற்று. சக ப்ரஜைகள் என்கிற தெம்புடன் நேற்றுவரை வளைய வந்த சீக்கியர்கள் இன்று வேட்டையாடப்படும் அன்னியர்கள்போல் பயந்து போயிருந்தார்கள். ஒரே நாள் போதில் தாங்கள் வேண்டப்படாதவர்கள் ஆகிப்போனதைக்கண்டு காலுக்கடியில் இருந்த பூமி நழுவியதைப்போல மிரண்டு போயிருந்தார்கள். என்னுடைய சிநேகிதி என் கைகளைப்பிடித்துக் கொண்டு அழுதாள் .” எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. இப்போது என் வாழ்வில் அரசியல் நுழைந்து விட்டது !”
அரசியல் எல்லோர் வீட்டுக்குள்ளும் நுழைந்து விட்டது. ‘நாம் – அவர்கள்’ என்று நடுவில் சுவர் எழுப்பிய அரசியல். சீக்கியர்களின் , ஹிந்து பஞ்சாபியரின் வீடுகளிலேயே சுவர் எழும்பியது பெரிய சோகம்.
ஹிந்து பாஞ்சாபியரின் குடும்பங்களில் ஒரு மரபு இருந்தது. தமிழ் நாட்டில் குழந்தை இல்லாதவர்கள் அல்லது இழந்தவர்கள் குழந்தை பிறந்தால் ‘பிச்சை’ என்று பெயர் வைக்கிறேன் என்று நேர்ந்துக்கொள்வதுபோல குழந்தை பிறந்தால் அவனை ‘கால்சாவுக்கு’– சீக்கிய மதத்திற்குக் கொடுக்கிறேன் என்று நேர்ந்துக் கொள்வார்கள். அந்த வகையில் ஹிந்து குடும்பங்களுக்குள்ளேயே சீக்கியர்கள் இருந்தார்கள். பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்த தருணத்திலேயே பிளவு ஏற்பட்டது. இப்போது இந்திரா காந்திப் படுகொலைக்குப்பின் நடந்த இனவெறி தாக்குதலினால் விரோதம் சேர்ந்துகொண்டது.
என்னைத் தூங்கவிடாமல் பலநாட்கள் அலைக்கழித்த இந்த சம்பவத்தை வைத்து ஒரு நாவல்
எழுதவேண்டும் என்று பட்டது. என் எண்ணத்தைக் கல்கி ஆசிரியர் ராஜேந்திரனுக்குத் தெரிவித்தபோது, மிக ஆர்வத்துடன் எழுத ஊக்குவித்தார். களப்பணிக்காகப் பஞ்சாபுக்குச் சென்றேன்.
அப்போதுதான் புரிந்தது பஞ்சாபின் தகிக்கும் கோபம்— தில்லியில் அமர்ந்தவர்களால் அதை உணர்ந்துகொள்ளமுடியாது என்று புரிந்தது.அரசியல் என்பது ஒரு கலாச்சாரத்தையே பொசுக்கும் என்று புரிந்தது.

[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation