கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்

This entry is part of 41 in the series 20071115_Issue

வாஸந்தி


தில்லி மாநகரம் ஒரு தலைநகரத்துக்குத் தேவையான எல்லா லட்சணங்களையும் கொண்டதாக எனக்குத் தோன்றும்.பல நாடுகளின் தலை நகரங்களைப் பார்க்கும் வாய்ப்பு-அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்- எனக்குக் கிட்டியிருக்கிறது. நமது தில்லி அந்த மாநகரங்களுக்குச் சற்றும் குறைந்தது அல்ல என்று நான் சொன்னால் அது வெறும் அலட்டல் பேச்சோ கண்மூடித்தனமான தேசப் பற்று என்றோ சொல்லமுடியாது. லுட்யான்’ஸ் தில்லி என்று செல்லமாக அழைக்கப்படும் ·பிரென்சுக் கட்டடக் கலைஞர் லுட்யான் வடிவமைத்த புது தில்லி மிக நேர்த்தியான சாலைகளும் கட்டிடங்களையும் கொண்டது. புது தில்லியைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு- வாஷிங்டன் போன்ற நகரத்தின் அதி நவீனமில்லாவிட்டாலும்- குறைவில்லை. அரசு நிர்வாகத்தின் தலை நகரம் என்ற கவனத்துடன் பல்வேறு அமைச்சகங்களின் துறை சார்ந்த அலுவலகங்கள் கலை அழகுடன் , பசுமையான வளாகங்களுடன் வடிவமைக்கப்பட்டவை. நடு நாயகமாக ஜனா¡திபதியின் மாளிகையும், அதற்கு முன்பு விரியும் ராஜபாட்டையும், மையத்தில் விஜய் சௌக்கமும், இரு புறம் கம்பீரமாக எழும்பி விரியும் நார்த் ப்ளாக் சவுத் ப்ளாக் என்கிற உள்துறை வெளித்துறை செயலகங்களும் தலைநகரத்துக்கான கம்பீரத்தைப் பரைசாற்றுபவை. குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் இறுதி நாள் சடங்கான பீட்டிங் தி ரிட்ரீ£ட் அன்று முப்படைகளின் கம்பீரமான பாண்ட் அணிவகுப்பும் இசையும் பொழுது சாயும் நேரத்தில் எழும்பும் மணி ஓசையும் விஜய் சௌக்கத்தின் கட்டிடங்கள் மந்திரக்கோல் பட்டதுபோல சரவிளக்குகளில் ஒளிர்வதும் கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல, அதை பார்க்கும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதத்தில் நெகிழவைக்கும் அற்புதம். பிராந்திய வேறுபாடுகள் கரைந்து நாம் எல்லோரும் இந்தியர் என்கிற உணர்வு மட்டுமே தலைதூக்கும் அற்புதம்.ஒரு தலைநகர் என்பதன் ஆளுமையின் லட்சணம் அது. அது ஒரு நாட்டின் அடையாளம் – அதற்கு பிராந்திய அடையாளம் அவசியமில்லை.
தில்லி வெறும் நவீன நகரம் அல்ல என்பதுதான் அதன் வசீகரம். பல நூற்றாண்டு வரலாறு கண்ட நகரம். மஹாபாரத காலத்து குரு§க்ஷத்திரத்தையும் முகலாய சாம்ராஜ்யங்கள் விரிந்து நலிந்ததையும், ஆங்கிலேய ஆட்சியின் உதயத்தயும் அஸ்தமனத்தையும் கண்ட பூமி அது. படையெடுத்தவர்கள் சுமந்து வந்த கலாச்சார சின்னங்களைப் பெருமையுடன் கட்டிடங்களிலும் கலைகளிலும் இலக்கியத்திலும் தாங்கி நிற்கும் மண். வெள்ளையனை வெளியேற்றிய சுதந்திர போராட்ட ஆவேசங்களை சுமந்த காற்று. நள்ளிரவில் நமது புகழ்பெற்ற சுதந்திரத்தைப் பெற்றதும் முகலாய மன்னர்களின் உன்னதத்தைப் பரைசாற்றும் அடையாளமான செங்கோட்டையில் தான் நமது சுதந்திர இந்தியக் கொடி ஏற்றப்பட்டது. இப்பவும் வருசா வருடம் சுதந்திர தினத்தன்று அங்குதான் கொடி ஏற்றப்படுகிறது. இந்த மண்தான் இந்திய -பாக் பிரிவினையின் போது ஏற்பட்ட படுகள ரணத்தின் ஆறாத புண்ணையும் சுமப்பது.
அரசு ஊழியர்களுக்குக் கட்டப்பட்ட குவார்ட்டர்ஸ்களும் பதவிக்குத் தகுந்தபடி விஸ்தாரமானவை. அதிர்ஷ்டமிருந்தால் பெரிய தோட்ட வசதியுடன் கீழ் வீடு கிடைக்கும். அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு,முக்கியமாக அவரது குடும்பத்தினருக்கு தில்லி மிக சௌகர்யமான இடம். பணியாளர்களுக்கும் ஜாகை தனியாக இருந்ததால் நாள் முழுவதும் நமது கூப்பிட்ட குரலுக்கு உதவ பணிப்பெண் வந்து நிற்கும் சௌகர்யம். சமையல் வேலையிலிருந்து துணிக்கு இஸ்திரி போடுவது வரை இலவசமாகக் கிடைக்கும்
வீட்டிற்காக செய்வார்கள். [இதனால் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. என் புத்தகங்களைப் பதிப்பித்த ஒரு பதிப்பாளர் தில்லிக்கு வந்தபோது நாங்கள் இருந்த பெரிய வீட்டையும் ஆளையும் தேளையும் பார்த்துவிட்டுப் போனவர் எனக்கு ராயல்டி அனுப்புவதை நிறுத்திக் கொண்டார். ‘அந்தம்மா வசதியாத்தான் இருக்காங்க, அவங்களுக்கு எதுக்கு ராயல்டி’ என்றாராம் எனது ஞாபகப் படுத்தலைக் கண்டு!] என்ன ஜாதி என்று விசாரிக்காமல் திறமைக்கே வாய்ப்பு தரும் பள்ளிகள், கல்லூரிகள் – சாதாரணமாகப் படிப்புக்கு அதிக முக்கியத்துவமும் கவனமும் தரும் நடுத்தர வர்க அரசு அலுவலர் குடும்பங்களுக்குப் பெரிய ஆதாரங்கள். என்னுடைய மகன்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் தரம் மிக்க பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சீட் கிடைத்தது நாங்கள் தில்லியில் இருக்க நேர்ந்ததால் என்றால் மிகை இல்லை.

மத்திய அரசு நிர்வாகத்தின் மையம் அது என்பதால் இந்தியாவின் எல்லா மாநிலத்திலிருந்தும் இந்திய சட்ட சாஸனத்தில் இடம்பெற்ற அனைத்து மொழிகளின் பிரதினிதகளும் தில்லியில் சங்கமித்தார்கள். தேசிய மொழி இந்தி என்பதாலும் , வட இந்தியர்களின் மொழி / சந்தை மொழி அது என்பதாலும் தில்லி வாழ் மக்கள் எல்லோரும் இந்தி பேசுவது இயல்பானது. இந்தி ஒழிக என்று தமிழ் நாட்டில் கோஷம் போட்டவர்கள் தில்லி வந்ததும் ஹிந்தி கற்றார்கள், அன்றாட வாழ்வுக்கு அது அவசியமான மொழி என்பதால் மட்டுலில்லை, அடுத்த ப்ரமோஷன் கிடைக்க அதுதான் வழி என்று உணர்ந்து. என்னை சந்திக்க வந்த பல தமிழ் இளைஞர்கள்,தில்லியில் வேலை பார்க்க வந்தவர்கள், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் . ஹிந்தி தெரியாமல் தலைநகரத்தில் சிரமப்படுவது தமிழர்கள் மட்டுமே என்றார்கள் அதை சற்றும் எதிர்பார்த்திராதவர்கள் போல. உதாரணத்துக்கு மற்ற தென்னிந்தியர்களான கன்னடியரும் மலையாளிகளும் தெலுங்கரும் பள்ளியில் ஹிந்தி கற்றிருந்ததால் மற்ற வட இந்தியருடன் சுலபமாக கலந்துறவாட முடிந்தது. அதனால் வேலைபார்க்கும் இடங்களில் தமிழர்கள் சற்றுப் பின்தங்கநேரிடுவதாகச் சொன்னார்கள். தமிழ் நாடு ஹிந்தியை நிராகரித்ததால் தமிழ் சமூகத்துக்கு எந்த லாபமும் இல்லை
என்று தாம் அப்போது உணர்வதாகத் தெரிவித்தார்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்குச் சமூகத்தைப்பற்றின தொலைநோக்கு அக்கறை இல்லை என்றும் குறுகிய அரசியல் லாபத்திற்காகவே இளைஞர்களின் உணர்ச்சிகள் உசுப்பப்பட்டன என்றும் அபிப்பிராயப் படுவதாகச் சொன்னார்கள். தமிழ் நாடு தனித்தீவாக இந்திய அரசியல் அமைப்பில் இருக்க இயலாது என்பது அந்த உணர்ச்சி வேகத்தில் மாணவ சமூகம் உணரவில்லை என்று அங்கலாய்த்தார்கள்.
வரலாற்றை இப்போது புரட்டிப் பார்த்து தப்புசொல்வதில் ஏதும் அர்த்தமில்லைதான். அந்தக் கால கட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு ஒரு தேவையான அரசியல் அஸ்திரமாகவோ, பிராந்திய உணர்வுகளை வலியுறுத்தும் சாதனமாகவோ பயன்பட்டது. அதன் பயனாக மத்திய அரசும் தனது வீம்பைத் தளர்த்தி அந்த உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்தது. இருந்தும் அந்த இளைஞர்களின் அங்கலாய்ப்பில் விஷயம் இருந்தது என்று நான் நினைத்தேன். அதை நான் ஜெயலலிதாவிடம் ஒரு முறை தில்லியில் சந்திக்கநேர்ந்தபோது தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் சொன்ன விதம் அவர் எதிர்காலத்தில் தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார் என்கிற எண்ணத்தை எனக்கு நிச்சயம் ஏற்படுத்தவில்லை!
அந்தக் கால கட்டத்தில் ஜெய லலிதா ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். பாராளுமன்றக் கூட்டத்தொடரின்போது தில்லியில் தமிழ் நாடு இல்லத்தில் தங்குவார். அவரைப் பற்றின ஒரு சுவாரஸ்யம் தில்லி பத்திரிக்கை உலகுக்கு இருந்தது. அவர் முன்னாள் நடிகை என்பதால் மட்டுமல்ல. அவரது
வசீகரத்தையும், ஆங்கிலத்தில் சரளமாகவும் நேர்த்தியாகவும் பேசும் அழகையும் பிரபல பத்திரிக்கையாளரும் அப்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்த குஷ்வந்த் சிங் வெகுவாகப் புகழ்ந்திருந்தார். திராவிட அரசியல் உலகில் ஜெயலலிதா வித்யாசமானவர் என்பதை தில்லி பத்திரிக்கை மற்றும் அரசியல் வட்டாரம் சடுதியில் உணர்ந்து கொண்டது. திராவிடக்கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழர்களைப் பற்றின பொதுவான அபிப்பிராயம் வட இந்தியர்கள் மத்தியில் இருந்தது. எப்போதுமே விந்திய
மலைக்குக்கீழ் வசிப்பவர்களைப் பொத்தாம் பொதுவாக மதராசி என்று அழைப்பதும் ‘மதராசி காலி’ [கருப்பு] என்பதும் சகஜமாக இருந்தது. ஹிந்தியை வெறுப்பவர்கள் , தமிழைத் தவிர வேறு மொழி – ஆங்கிலம் உட்படப் – பேசத்தெரியாதவர்கள் என்ற முடிவுக்கு இப்போது வந்திருந்தார்கள். தமிழ் நாட்டு திராவிடக் கட்சி உறுப்பினர்களும் அப்படிப்பட்ட எண்ணத்தை அநேகமாக உறுதிபடுத்தினார்கள். மதராசிகள் பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கமாட்டார்கள் , நன்றாக உடை உடுத்தத்தெரியாது என்கிற எண்ணமும் வட இந்தியர்களுக்கு , முக்கியமாக பஞ்சாபியருக்கு முன்பு இருந்தது. பலர் என் காதுபட சொல்வார்கள் – ‘அவள் கொஞ்சங்கூட ஒரு மதராசி போல இல்லை. படு ஸ்மார்ட்டாக இருக்கிறாள்!’ அப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதா நுழைந்ததும் வட இந்திய ஆண்களின் கவனத்தை அவர் காந்தம் போல் ஈர்த்ததில் வியப்பில்லை. அவரது சிவந்த நிறம் எல்லாரையும் ஆகர்ஷித்தது. அவரது அலட்டலான பாவனைகளும் கண்சொடுக்காமல் பேசிய ஹிந்தியும் அதைவிட சரளமான ஆங்கிலமும் எல்லோரையும் அசத்திற்று. எல்லா பத்திரிக்கைகளும் அவரை பேட்டி காண ஆசைப்பட்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற தில்லியின் பிரபல ஆங்கில நாளேட்டின் பல ஹிந்தி பதிப்புகள் இருந்தன. அவற்றில் ‘காதம்பினி’ என்ற மாத இதழின் ஆசிரியர் ரஜேந்திர அவஸ்தி எனக்கு நெறுங்கிய நண்பர். ‘எனது பத்திரிக்கைக்காக நீ ஜெயலலிதாவை பேட்டி எடு’ என்றார்.
நான் தமிழ் நாடு இல்லத்தில் இருந்த ஜெயலலிதாவுடன் தொடர்பு கொண்டு காதம்பினி என்ற ஹிந்தி மாத இதழுக்காக பேட்டி காண விரும்புகிறேன் என்று ஆங்கிலத்தில் அவரிடம் பேசினேன். உடனடியாக நேரம் கொடுத்தார். இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அன்று அவரை சரளமாக அணுகமுடிந்தது. அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்றபிறகு அவர் யாருக்கும் லேசில் பேட்டி கொடுத்ததில்லை. நான் சென்னைக்கு இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியையாகப் பொறுப்பேற்று வந்தபின் அவரை பேட்டி காண ஒன்பது ஆண்டுகள் தலைகீழ் நின்றிருக்கிறேன். அவர் தரப்பிலிருந்து பதிலே வந்ததில்லை. அவராகவே ஒரு இரும்புத்திரையை தனக்கும் மீடியாவுக்கும் இடையே போட்டுக்கொண்டார். அது துளைக்கமுடியாத இரும்பு சுவராக இருந்தது. அவரது அந்தரங்க செயலர் யார் என்பதுகூட மூடுமந்திரமாக இருக்கும். தொடர்பு கொள்ளதரப்பட்ட தொலைபேசி எண் ஒலித்தபடி இருக்கும். ·பாக்ஸ் நம்பருக்கு உங்கள் கோரிக்கையைத் தெரிவியுங்கள் என்று சிலர் சொன்னதில் பல முறை அனுப்பி எந்தத் தகவலும் வராமல் ஜெயலலிதாவின் பார்வைக்குச் சென்றிருக்குமா என்று தெரியாமல் ஆயாசப்பட்டிருக்கிறேன். எந்த செயலரும் பேச பயப்படுவார்கள். அமைச்சர்களோ அதற்கு மேல் பயப்படுவார்கள். அது ஜனநாயகம் தானா என்று சோர்வு ஏற்படும். தன்னை அறியாமலே ஜெயலலிதா மீடியாவைத் தனது நிரந்தர விரோதியாக்கிக் கொண்டார்.மீடியாவின்மீது அவருக்கு சுத்தமாக நம்பிக்கையோ மதிப்போ இருக்கவில்லை. அதற்கு சொந்தமான வலுவான காரணங்கள் அவர் நடிகையாக இருந்தபோது ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் அவரது நிலைமை வேறு என்பதை அவர் உணர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுலபமாக அணுகக் கூடிய தலைவரால்தான் மற்றவரின் நம்பிக்கையைப் பெற முடியும்.
மீடியா உள்பட.
தமிழ் நாடு இல்லத்தில் அவரது அறையில் நான் நுழைந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். ‘ ஓ, நீங்களா, காதம்பினி பத்திரிக்கைன்னு சொன்னதும் யாரோ வட இந்தியர் வராங்கன்னு நினைச்சேன்’ என்றார்.
பேட்டியைப் பதிவுசெய்ய நான் ஒரு டேப் ரெக்கார்டர் எடுத்துச் சென்றிருந்தேன். தன் பங்குக்கு அதைவிட ஒரு பெரிய கருவியை வைத்து அவரும் பேட்டியைப் பதிவு செய்துகொண்டது எனக்கு வியப்பை அளித்தது. அவர் பதிலளித்தவிதமும் வித்தியாசமாக இருந்தது. எம் ஜி ஆர், அவரது அரசியல், மதிய உணவு திட்டம் ஆகியவைப் பற்றி நான் கேள்வி கேட்டபோது பொது மேடையில் நின்று பாமர மக்களுக்கு
எடுத்துச் சொல்லும் பாணியில் பதில் சொன்னார். நான் மகா முட்டாளாகக் காட்சி அளித்திருக்கவேண்டும்.
கடைசியில் நான் மொழிப் பிரச்னைக்கு வந்தேன். ஹிந்தி தெரியாததால் தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை எனக்குத் தெரிவித்ததைச் சொன்னேன். ஹிந்தி தெரிந்தால் வேலை வாய்ப்பிற்கு அதிக சௌகர்யம் என்றும் ஹிந்தி எதிர்ப்பு இப்போது யோசித்துப் பார்க்கும்போது தேவையற்ற ஒன்றாகவும் அவர்கள் கருதுவதாகச் சொன்னேன். ‘ஹிந்தி எனக்குத் தெரியுமே?’ என்றார். சட்டென்று அரசியல் ஞாபகம் வந்தவராய் ஹிந்தி எதிர்ப்பின் நியாயத்தை விளக்கினார். ஹிந்தியும் ஒரு மொழியா? அதற்குத் தமிழைப்போல இலக்கிய மரபும் பாரம்பர்யமும் உண்டா? போதிய சொற்கள் கூட அதில் இல்லை… மீண்டும் ஒரு மேடைப் பேச்சு.
இடையில் புகுந்து எதுவும் பேசவோ கேட்கவோ முடியவில்லை. நான் ஒன்றும் ஹிந்தி ஆதரவாளர் இல்லை. சமூக யதார்த்தத்தைப் பேசத் தான் முனைந்தேன். இன்றைய அரசியல் சூழல் தலைகீழாக மாறிவிட்டது. தமிழக அரசியல் வாதிகள் மத்திய மைய நீரோட்டத்தில் கலக்கும் தீவிரத்தில் இருக்கிறார்கள்.மொழி தெரிந்தவர்களைத் துணைக்குக் கூப்பிடுகிறார்கள். அவர்களது வாரிசுகள் தமிழைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து ஹிந்தியும் ஆங்கிலமும் கற்பது எல்லாரும் அறிந்த ரகசியம்.
நான் வீட்டிற்குத் திரும்பியதும் இரவு ஜெயலலிதா எனக்கு ·போன் செய்தார்.
‘ஹிந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்று சொன்னீர்களே?[ நான் அப்படிச் சொல்லவில்லை]
அப்படியானால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலை இல்லாத் திண்டாட்டமே இல்லையா?’ என்றார்.
எனக்கு அவரது வாதம் சிரிப்பைத் தந்தது. ” நான் சொன்னது வேறு. அதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?” என்றேன்.
” ப்ளீஸ், நான் சொன்னதை அப்படியே எழுதுங்கள்!” என்று டொக்கென்று ·போனை வைத்தார்.
அந்த பேட்டியை காதம்பினி வாசகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.
தில்லியின் சந்தை உலகம் அநேகமாக வட இந்தியர் ,முக்கியமாக பஞ்சாபிகளின் வசம் இருந்தது. பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள். அவர்கள் பெரும்பாலும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகளாக வந்தவர்கள். கடும் உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் துரிதமாக முன்னுக்கு வந்தவர்கள். பலர் பெரும் பணக்காரர்களானவர்கள். தில்லியின் புற நகரப்பகுதிகளில் ப்ரும்மாண்ட வீடுகளில் வசித்தார்கள். மிக நாசூக்கான நாகரீக வாழ்க்கை முறை கொண்டவர்கள். ஆடம்பரமான வீட்டலங்காரமும் மேற்கத்திய மேஜை உணவு பழக்கங்களும் உள்ளவர்கள். ஆனால் தங்களது மத உடை சம்பந்தமான விஷயங்களில் விட்டுக்கொடுக்காத பிடிவாதத்துடன் இருப்பார்கள். சீக்கியர்களின் சமூகம் மிகக் கட்டுக்கோப்பான சமூகம். எனது மூத்தமகன் ரவியின் சீக்கிய சினேகிதன் ஜஸ்வீந்தர் இடது சாரி கொள்கை உடையவன். இருந்தும் சிகையை வெட்டாமல் தாடி மழிக்காமல் இருப்பான்.
சீக்கிய சமூகம் தில்லி ஜனத்தொகையில் ஒரு சதவீதம் தான் என்றாலும் நகரத்தின் மிக முக்கியமான அங்கமாகிப் போயிருந்தார்கள். ராணுவத்திலும் போலீஸ் துறையிலும் கூட நிறைய இருந்தார்கள். எல்லோருடனும் மிக சினேகிதமாக இணக்கமாக இருப்பார்கள். சீக்கிய ஆண்கள் உலகத்து எல்லாப் பெண்களையும் காதலிப்பார்கள். எல்லா இனத்தவருக்கும் மிக நல்ல நண்பர்கள். மிக தாராள தயாள குணம் உள்ளவர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு கால கட்டத்தில் சுவர் எழும்பும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. புவியை ஆள்பவர்கள்போல கர்வத்துடன் வளைய வந்தவர்கள் உயிர் பாதுகாப்பைத்தேடி ஓடும் நிலை வரும் என்று நிச்சயம் யாரும் நினைத்திருக்கவில்லை. அந்தச் சுவரும் பீதியும் அகம்பாவம் பிடித்த அரசியலால் எழும்பும் , தில்லியின் ஆளுமையே மாற்றும் , ஒரு கோர கொலையையும், படுகொலைகளையும் ஆறாத வடுக்களையும் ஏற்படுத்தும் என்று நிச்சயம் நினைக்கவில்லை.
ஒரு இரவு தொலைக்காட்சி பெட்டித் திரையில் இந்திரா காந்தியின் முகம் தோன்றியது. பிறகு அவர் சொன்ன வாக்கியம் கேட்டது. ” எங்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. நமது தேசத்தின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் சவால் ஏற்பட்டிருக்கிறது.”
அன்றுதான் எழும்பியது சுவர்.


Series Navigation