கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்

This entry is part of 37 in the series 20071025_Issue

வாஸந்தி


என் கணவர் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் ” எனக்கு மிஜோராமுக்கு மாற்றல் ஆகியிருக்கு. இன்னும் பத்து நாட்களில் நாம் அய்ஜலுக்குப் பயணமாக வேண்டும்” என்றார்.நான் விழித்தேன். ” மீஜோராம் எங்கே இருக்கு?” என்றேன். ” வட கிழக்கில். பர்மாவுக்கு மிக அருகில்” என்றார் சுருக்கமாக. அவருக்கே விவரமாக எதுவும் தெரியாது என்று நான் சந்தேகித்தேன். “மீஜோ நிழல் உலக பயங்கர வாதி லால் டெங்காவைப்பத்திக் கேள்விபட்டதில்லை ?” என்றார் மைய்யமாக.
கேள்விப்பட்டிருக்கிறேன் .ஆனால் விவரமாகத் தெரியாது. அவன் இந்திய அரசுக்கு எதிராகக் கொடிபிடித்து நிழல் உலக பயங்கரவாத இயக்கம் நடத்தும் தீவிரவாதி என்றும் போலீஸ் அவனுக்கு வலைவீசியதில் பிடிபடாமல் லண்டனுக்கு ஓடிவிட்டான் என்றும் நினைவு. பழங்குடியினர் வசிக்கும் அதிகம் வளர்ச்சி காணாத பிரதேசம் மீஜோராம் என்று என் கணவர் சொன்னார். அதுமட்டுமல்ல, போராளிகளின் தாக்குதலின் அபாயத்தால் Assam Rifles ராணுவத்தினரும் எல்லைப்பாதுகாப்புப்படை போலீஸ¤ம் அங்கு எப்பவும் தயார் நிலையில் இருக்கக் குழுமியைருப்பதாகவும் சில விவரமறிந்தவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.எனக்கு திக்கென்றிருந்தது. நாங்கள் அப்போது கல்கத்தாவில் இருந்தோம். மூத்த மகன் ரவி கல்கத்தாவின் பிரபலமான பள்ளியான புனித ஜேவியரில் படித்து வந்தான். மூன்றாம் வகுப்புதான் என்றாலும் அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு என்பதோடு பிள்ளை அங்கு படிக்கிறான் என்று சொல்வதே பெற்றோர்களுக்கு மகன் IAS முதல் ரான்க் வாங்கினான்னென்பதுபோல. இரண்டாவது மகன் ஹரி நான்கு மாதக்குழந்தை. அவ்வளவு நல்ல பள்ளியை விட்டு விட்டு சிறு குழந்தையுடன் அந்தக் கேள்விப்பட்டிராத வனாந்திரத்தில் எப்படி இருப்பது என்று நான் குழம்பிப் போனேன்.

அநேக இந்தியர்களுக்கு இப்பவும் இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதிகளைப்பற்றித் [NORTH EASTERN FRONTIER AREA சுறுக்கமாக NEFA] தெரியாது. அங்கு வசிக்கும் பலதரப்பட்ட பழங்குடி மக்களைப்பற்றி அவர்களது வண்ணம் மிகுந்த கலாச்சாரத்தைப்பற்றித் தெரிந்திராது. அவர்களது
அறிவீனத்துக்குக் காரணம் அவர்களது அக்கறை இன்மை என்று சொல்லமுடியாது.பொதுவாக நமது செய்தி ஊடகங்கள் ஆரம்ப காலத்திலிருந்து அந்தப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம். மைய நீரோட்டத்தைச் சேர்ந்த பகுதிகளே முக்கியத்துவம் கொண்டவையாக, நாகரீக வளர்ச்சி கொண்டவையாக இன்றும் கருதப்படும் மெத்தனபோக்கே இந்த இருட்டடிப்புக்குக் காரணம் என்று சொல்லவேண்டும்.
மீடியாவின் இந்தப் பார்வைக்கும் நமது அரசியல் அமைப்பின் அணுகுமுறைதான் பொறுப்பு.இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் இந்த வட கிழக்கு மாநிலங்கள் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டு வந்தன.
அஸ்ஸாம் மாநிலத்துக்கு வட கிழக்கிலும் தெற்கிலும் இருக்கும் அருணாசலப் ப்ரதேசம், நாகாலாந்து, மேகாலயா மற்றும் மீஜோராம் ஆகிய மாநிலங்கள் எல்லாம் கொத்தாக NEFA என்று அழைக்கப் பட்டன.
உண்மையில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பழங்குடி இனத்தவரையும் வித்தியாசமான கலாச்சாரத்தையும் கொண்டவை என்று மத்திய நிர்வாகத்தினர் அறியவில்லை. தங்கள் கலாச்சாரத்தைப்பற்றி அந்தந்த மக்களுக்குப் பெருமை உண்டு என்பதும் அது அவர்களது பிறப்புரிமை என்பதும் கூட அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. ஏனென்றால் பழங்குடியினரை நகர் புரத்தினர் ஜங்க்லீ – காட்டுமிராண்டிகள் – என்று குறிப்பிடும் போக்கு இன்றும்- அவையெல்லாம் தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபின்னும், இருக்கிறது.
கணவருடன் மீஜோராமுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆனபின் அந்த மாநிலத்தைப் பற்றி ஏதேனும் விவரம் படிக்கக்கிடைக்குமா என்று நான் தேடியபோது ஒரு நண்பர் எனக்கு Verrier Elwin என்ற ஒரு ஆங்கிலேயர் எழுதியிருக்கும் மிகப் பிரபலமான – A philosophy for NEFA- என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார்.கிளம்புவதற்கு முன் அதைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை. கல்கத்தாவிலிருந்து அஸ்ஸாமிலிருக்கும் ஸில்ச்சர் என்ற இடத்திற்கு விமானத்தில் பயணம். அங்கிருந்து நெடுஞ்சாலை வழியாக அலுவலகம் அனுப்பியிருந்த ஜீப்பில் மலைப்பாதையில் மீஜோராமின் தலைநகரமான ஐஜலுக்குப் பயணமானோம்.அத்தனை செங்குத்தான மலைகளையும் ஒரு வழிப்பாதையையும் நான் அதுவரைப் பார்த்ததில்லை. சாலையின் ஒரு பக்கம் வானுயர்ந்த மலைமுகடு. மறுபக்கம் அதல பாதாளம். சறுக்கி விழுந்தால் பொறுக்கி எடுக்க ஒரு எலும்புத்துண்டு அகப்படாது. அப்படிப்பட்ட சூழலில் சாலையை ஒட்டினாற்போல் மூங்கில் கழிகளின் மேல் ஒரு அறை மட்டுமே கொண்ட சதுரமான வீடுகள் காட்சி அளித்தன. கம்பிகள் தடுப்புகள் ஏதுமற்ற திறந்த ஒரு ஜன்னல் போன்ற சதுர இடைவெளியில் மங்கோலிய முகத்துடன் சிவந்த நிறத்தில் பொம்மைபோன்ற ஒரு குழந்தையின் முகம் வெளி உலகத்தை எட்டிப்பார்த்தது. அது கீழே விழுந்தால் என்ன ஆவது என்று எனக்குப் பதைத்தது.”விழாது” என்று சிரித்தார் ஜீப் டிரைவர் பகதூர். ‘இங்கே மீஜோ குழந்தைகள் எல்லாம் பிஞ்சிலே பழுத்தவை’. ஐஜலை நெறுங்க நெறுங்க அதன் அசாதாரண இயற்கை எழில் என்னைப் பரவசப்படுத்தியது. கண்ணில் தென்பட்ட மீஜோ பெண்கள் மிக அழகாக இருந்தார்கள். வேஷ்டியைப்போல அழகிய வண்ணங்களுடன் கூடிய ‘போவான்’ என்ற கனமான கைத்தறி உடையை அணிந்திருந்தார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தற்காலிக வீட்டில் இறக்கப்பட்டதும் தான் ஒரு முற்றிலும் புதிய சூழலுக்கு வந்திருப்பது எனக்குப் புரிந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த அஸ்ஸாமிய குடும்பத்தினர் ‘இது சரியான பின் தங்கிய இடம் . நல்ல மருத்துவர் இல்லை. நல்ல பள்ளி இல்லை. மக்கள் சரியான காட்டுமிராண்டிகள். எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள் ‘ என்று எடுத்த எடுப்பிலேயே பயமுறுத்தினார்கள்.

என் கணவருக்கு அங்கு Principal Engineer என்ற பெரிய பதவி என்பதால் ஆள் உதவி நிறைய இருந்தது. சிவாஜி டில்லா என்ற மலைக் குன்றின் மேல் இருந்த ஒரு பழைய வீட்டை செப்பனிட்டு அங்கு செல்ல முடிவானது. அதை என் கணவர் ஒரு மிக அழகான வீடாக மாற்றி அமைத்தார். பணி முடிவதற்கு முன்பே அந்த வீட்டிற்குப் போனோம் . கட்டிட வேலைக்காக ஏழெட்டு மீஜோக்கள் தினமும் வருவார்கள். அவர்களை கவனிப்பது எனக்கு மிக சுவாரஸ்யமானதாக இருந்தது. சாவகாசமாக வருவார்கள். மேர்கத்திய உடை அணிந்திருப்பார்கள்.யாருக்கும் ஹிந்தியோ ஆங்கிலமோ வராது. எங்கள் வீட்டின் நடு முற்றம் பெரியதாக இருக்கும். அதில் வட்டமாக அமர்ந்து கூச்சமே இல்லாமல் பீடி புகைத்துக் கொண்டு சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் பேச்சும் முக பாவனைகளும் அங்க அசைவுகளும் கவனிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏதோ புரியாத மொழியில் ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றைப் பார்ப்பது போலத் தோன்றும். மீஜோ மொழிக்கு சொந்த லிபி கிடையாது. ரோமன் லிபியைத்தான் உபயோகித்தார்கள். பாதிரிமார்களின் கைங்கர்யம் அது.

இலக்கியம் வளராததாலேயே பேச்சு மொழி அப்படிப்பட்ட உத்வேகம் கொண்டதாகத் தோன்றிற்று. அவர்களுக்கு இயல்பாக நல்ல குரல் வளம் இருந்தது. தினமும் அதிகாலை யாரோ கிடார் இசைத்தபடி மிக அழகாகப் பாடுவது கேட்கும். எங்கள் படுக்கை அறையின் கீழ் மலை வளைவில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டிருப்பான். அநேக நிகழ்ச்சிகளிலும் நான் மீஜோக்கள் பாடுவதை கேட்டிருக்கிறேன். அருணாச்சல் ப்ரதேசத்திலும் கேட்டிருக்கிறேன். பழங்குடியினருக்கு இயல்பாகப் பாடும் அற்புத ஆற்றல் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
பணியாளர்கள் திடுதிப்பென்று டீ குடித்துவிட்டு வரப் போய்விடுவார்கள். பிறகு வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அவர்களை மேய்க்க பீஹாரைச் சேர்ந்த ஒரு மேஸ்த்ரி வருவார். ‘இவர்கள் இப்படித்தான் மேடம்’ என்று என்னிடம் ஹிந்தியில் அலுத்துக் கொள்வார். ‘வெறும் ஜங்கிலிகள். கோபித்துக்கொண்டாலும் இப்போது தகராறாகிவிடும். இவர்களிடம் வேலை வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மகா சோம்பேறிகள். கடைசியில் நமக்குக் கெட்ட பெயர்.’
எங்கே போகிறார்கள் எல்லாரும் என்று கேட்டேன். நாஷ்டா சாப்பிடப் போகிறார்கள் என்று பதில் வந்தது. மறு நாளிலிருந்து நான் நான்கு முழு நீள family size ரொட்டிகள் வாங்கி வைத்தேன். சமையல் கார பையன் பாகீரத்துக்கு மீஜோ மொழி தெரியும். ஒரு அடுக்கு நிறைய தேநீர் போட்டு ப்ரெட்டுடன் கொடுக்கச் சொன்னேன். பணியாளர்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றிற்று. ஆச்சரியமான மாறுதல் தெரிந்தது. உற்சாகமாக வேலை நடந்தது. எனக்குப் புரிகிறதா என்கிற கவலை இல்லாமல் என்னுடன் சிரித்துப் பேச ஆரம்பித்தார்கள்.
வர்க வித்தியாசம் துளியும் இல்லாத சமூகம் அது என்பது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது. ஒரு நாள் காலை வரவேற்பறையில் ஒரு மீஜோ சோபாவில் அமர்ந்திருந்தார். வந்திருப்பது யார் என்று பாகீரத்தைக் கேட்டேன். அவன் எட்டிப் பார்த்துவிட்டு, ‘ கக்கூஸ் கழுவ வந்திருப்பவர். நீங்கள் குளித்துக் கொண்டிருந்ததால் காத்திருக்கச் சொன்னேன்’ என்றான். மீஜோராமின் முதல்வர் அளிக்கும் விருந்திலும் முதலாளி பணியாளர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லாரும் ஒன்றாக உணவருந்துவதை மீஜோ அல்லாதவர்கள் வியப்புடன் குறிப்பிடுவார்கள்.

அங்கு பல வருஷங்கள் முன்பே கிறித்துவ பாதிரிகள் வந்து எல்லோரையும் கிறித்துவ மதத்திற்கு மாற்றியிருந்தார்கள். மதம்தான் மாறியிருந்ததே தவிர அவர்களது பழங்குடி வழக்கங்கள், சடங்குகள் மாறியிருக்கவில்லை.பைபில் சொல்லும் பத்து கட்டளைகளும் பாதிரிகள் போதிக்க மறந்துபோனதாகத் தோன்றிற்று. அவர்களது வாழ்க்கைமுறை அப்படிப்பட்ட சலுகைகள் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். கொலை கொள்ளை எல்லாமே மிக சகஜமாக ஏற்கப்பட்டது. காளாமுக கபாலிகள் போல முன்பு எதிரிகளின் மண்டை ஓடுகளை கழுத்தில் அணியும் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்கள். அவர்களது விருந்தோம்பல் மரபுப்படி விருந்தினருக்கு மனைவியை அளிப்பது தவரில்லை. அவர்களுக்கு மதுவும் மாமிசமும் இல்லாத சாப்பாடு ரசிக்காது. நானும் என் கணவரும் கொடுத்த விருந்துகளில் அவை இரண்டும் இராது என்பதால் அவர்கள் ஏதாவது சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பொதுவாக சமதரையிலிருந்து [plains] வருபவர்களுடன் அவர்கள் பழகத் தயங்கினார்கள் என்பதை நான் பிறகு புரிந்து கொண்டேன்.வெளியிலிருந்து வருபவர்களை அவர்கள் ‘வாய்’ – வெளிநாட்டவர் என்று அழைத்தார்கள். அதாவது அவர்களுக்குத் தாங்களும் இந்தியர்கள் என்ற எண்ணமே இல்லை!

மலைச் சரிவில் தோட்டம் பூவும் கனிகளுமாக விரிந்தது. குழந்தையை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்ளவும் சமையல் வேலை வீட்டு வேலை செய்யவும் நல்ல ஆட்கள் கிடைத்ததும் வெரியர் எல்வினின் புத்தகம் ‘ philosophy for NEFA’ NEFA வுக்கு ஒரு தத்துவம்- படிக்க நேரம் கிடைத்தது. அதைப் படிக்கப் படிக்க பல புதிய சாளரங்கள் திறந்த உற்சாகமும் பிரமிப்பும் எனக்கு ஏற்பட்டன. சாளரத்தின் ஊடாக எனக்குப் பரிச்சியமில்லாத முற்றிலும் புதிய ஒரு உலகம் அதன் பிறந்த மேனி அழகுடன் தெரிந்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அறிஞரான வெரியர் எல்வின் NEFA பழங்குடியினரைப் பற்றி மிக ஆழமான ஆய்வு செய்திருந்தார். ஜவஹர் லால் நேருவின் நெறுங்கிய நண்பர். நேருதான் வடகிழக்கு பிராந்திய மக்களின் தன்மையைப்பற்றியும் ஆளுமையையைப்பற்றியும் அவர்களது தேவையைப்பற்றியும் ஒரு ஆய்வறிக்கையை தமக்கு அளிக்குமாறு எல்வின்னைக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நாகா மற்றும் மீஜோ மக்களிடமிருந்து எதிர்ப்புகள் அப்போதே உருவாகியிருந்தன. அந்த எதிர்ப்புக் கிளம்பியதற்கான காரணங்களை எல்வின் மிகத் துல்லியமாக ஆராய்ந்து சொல்கிறார். மிக அமைதியாக இருந்த ப்ரதேசங்கள், பழங்குடி மரபுப்படி வர்க பேதம் இல்லாமல் கிராம நிர்வாகம் செய்து வந்த இடங்கள் சமதரையிலிருந்து அனுப்பப்பட்ட அதிகாரிகள் அவர்களை ‘நாகரீகப்’ படுத்த முயன்ற இங்கிதமற்ற போக்கினால் துவேஷமும் பிரிவினை வாதமும் மிகுந்ததாகப் போனதை விவரிக்கிறார். வெளியிலிருந்து இந்தப்பகுதிகளை நிர்வகிக்க அனுப்பப்பட்ட அதிகாரிகள், பெரும்பாலும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், இவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று ஓயாமல் திட்டினார்கள். அவர்களது மரபுகளைப் பழித்தார்கள். கற்பு என்கிற தீவிர பிடிமானம் இல்லாத சமூகம் என்கிற தைர்யத்தில் அதிகாரிகளும் ராணுவத்தினரும் மீஜோ பெண்களை ‘ரம் கொடுக்கிறேன், சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன்’ என்று ஆசை காட்டி உபயோகித்துக்கொண்டார்கள். ஐஜலில் மிலிடரி வளாகத்துள்தான் சினிமா கொட்டகை இருக்கும். ரம் என்பது தண்ணீர் பட்ட பாடு. மீஜோ பெண்கள் இவை இரண்டினாலும் கவரப்பட்டு சுலபமாகக் கிடைத்தார்கள். இது மீஜோ ஆண்களின் சுயகௌரவத்திற்கு மிகப் பெரிய அடியாக இருந்திருக்கவேண்டும். தீவிரமான விரோதத்திற்கும் எதிர்ப்பிற்கும் வித்திட்டிருக்க வேண்டும்.

தவிர அதிகாரிகள் ஊழல் மிக்கவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் லஞ்சம் வாங்கினார்கள்.மிஜோராம் வளர்வதற்கு பதில் அவர்கள் வளர்ந்தார்கள். நாங்கள் அங்கு சென்றபோது லஞ்சம் கொடுத்து எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் மீஜோக்கள் இருப்பது மாநில முதல்வரிலிருந்து கடைநிலை ஆள்வரை நம்பியது தெரிந்தது. மாநிலத்து அத்தனை அமைச்சர்களும், முதல்வர் உள்பட கட்டிட கன்டிராக்டர்களாகவும் இருந்தார்கள். என் கணவர் சுந்தரம் மாநிலத்தின் முதன்மை இஞ்சினியராக இருந்ததால் தினமும் ஒரு அமைச்சரிடமிருந்து ·போன் வரும் தனக்கு ஒரு திட்டத்தின் கான்டிராக்ட் கொடுக்கப்பட வேண்டுமென்று. உனக்கு எத்தனை லஞ்சம் வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்பார்கள். லஞ்சம் வாங்காத சட்டப்படி வேலைபார்த்துப் பழக்கப்பட்ட சுந்தரத்தை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதனால் பின்னால் மிகப் பெரிய பிரச்சினை வந்தது.

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. என் இளையமகனுக்குக் கம்பிளி சொக்காய் தேவைப்பட்டது. மீஜோ பெண்கள் இயந்திரத்தில் மிக அழகாக சொக்காய் தைய்ப்பார்கள். டிரைவர் தனக்கு ஒரு பெண்மணியைத் தெரியும் என்று என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் அந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்தேன். அந்த சந்திப்பிற்கு ஒரு தத்துவார்த்த விளக்கம் ஏற்படும் என்று அன்று சத்தியமாக நினைக்கவில்ல.
[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation