ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்

This entry is part of 37 in the series 20070329_Issue

ஸ்ரீனி


பிளாக் எனப்படும் வலைப் பூ எழுதும் உந்துதல் உள்ளவருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப் பட்டது.தமிழ் வலைப் பூக்கள் துவக்கத்தில் தொழிற் நுட்பக் காரணங்களில் தடுமாறினாலும்,மெல்ல மெல்ல மற்ற மொழியினர் வியக்கும் வண்ணம் வளர்ந்தது.படித்தவர்கள், இளைஞர்கள்,பெண்கள் என்று பல தரப்பிலும் பதிவர்கள் உண்டாயினர்.அச்சில் தன் எழுத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு தங்கள் கருத்தைப் பகிரவும்,எழுத்தை மேம் படுத்தவும் இது நல்ல மேடையாக அமைந்தது.

நன்றாக வளரும் வேளையில் பிடித்தது சனி! சாதாரண ஆத்திக நாத்திக வாதங்கள் சாதிச் சண்டையில் கொழுந்து விட,இது எந்தஅளவிற்கு போய் விட்டது என்றால்,இன்று ஒரு பதிவர் எனக்கு அந்த நடிகரைப் பிடிக்கும் என்றால் அவரை நடிகரின் சாதியோடு இணைத்து ஏசும் அளவிற்கு!ஒரு குறுப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் மதுரையில் அதிகமாம்.அதனால் எனக்கு மதுரை பிடிக்கும் என்றால் கூட ஏச்சு விழுகிறது!பாரதியார் பற்றி எழுதினால்,அதில் சாதி,தேசீயம் என்றால் அதில் சாதி,வால் மார்ட் பற்றிக் கூறினாலும் சாதி,திரை விமர்சனம் எழுதினால் கூட சாதி!எதைப் பற்றி கூறினாலும் அதில் சாதியை நுழைப்பதே தலையாயமாகி விட்டது.இன்று தமிழ் மணம் என்ற திரட்டியில் பாருங்கள்;வரும் பதிவுகளில் பாதிக்கு மேல் சாதி மதங்களைப் பற்றித்தான்.

இதில் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் பெண் பதிவர்கள்தாம்.பல பெண்கள் தங்கள் எழுத்தா ர்வத்தை வெளிப்படுத்துவதற்கு வலைப் பூக்கள் ஒரு நல்ல வடிகாலாயின.ஆனால் என்ன சொல்வது?இன்று பல பெண்கள் வலையில் எழுதுவதில்லை.காரணம்,பின்னோட்டம் என்ற பெயரில் வரும் ஆபாசங்கள்தான் மூல காரணம்.என்னதான் கமென்ட் மாடரேஷன்களைப் போட்டாலும் இந்த ஆபாசங்கள் புகுந்து விடுகின்றன.அதிலும் மணமான பெண்கள் என்றால் பின்னோட்ட ஆபாசம் அதிகம்.

எதிர் கருத்துக்களை நாகரீகமாகவும் வெளியிட முடியும் என்று தெரியாதவர்களா இவர்கள்.இல்லை என் கருத்துக்கு எதிர் கருத்தே கூடாது என்பவர்களா?இதில் குரூப்பிசம் வேறு!அதாவது dictorship of idiots என்பார்களே அதுதான் நடக்கிறது. ஒருவருடய கருத்தை மற்றவர் மாற்ற இயலுமா? இயன்றாலும்அது தேவையா?இதனால் விரோத பாவங்கள் கூடுதலும்,கால விரயமும் தானே மிச்சம்.

மற்ற மொழிகளின் வலைப் பூக்களைப் பார்த்தால் போர்னோ மற்ற வகையறாக்கள் ஒரு 3 விழுக்காடு இருக்கும்.நம் மொழியினர் போல சாதிச் சாக்கடை நாறவில்லை!செம்மொழி அல்லவா!!

வலையில் எழுதும் முக்கால் வாசிப் பேர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்,இந்தியாவிலும்,கடல் கடந்தும்.வயதில் இளையவர்கள்.படித்தவரிடம் நல்ல பண்பு இருக்கும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை.இன்றைய பதிவுகளைப் பார்த்தால் நம்பிக்கை பொய்யோ எனப் படுகிறது.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation