ஏக இறைவன் கோட்பாட்டின் உள்ளார்ந்த வன்முறை

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மத வேறுபாடுகளே உலகில் மிகவும் மோசமான வன்முறை மோதல்களை உருவாக்குகின்றன. இது நிறுவன மதங்களின் ஆதரவாளர்களும் விமர்சகர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு உண்மையாகும்.

எழுத்தாளர் ஜோனதன் கிர்ஸ்க் இந்தக் குற்றச்சாட்டில் மற்றொரு நுண்ணிய பகுதியை விளக்குகிறார். ஒரே இறைவன் எனும் கோட்பாட்டினை வலியுற்றுத்தும் உலகின் முக்கிய ‘ஒரு கடவுள்’ மதங்களான யூதம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகியவற்றினை வரலாற்றில் மதப்போர்களில் பெருமளவு பாய்ந்த மானுட இரத்தத்திற்கு பொறுப்பாளி ஆக்குகின்றார். இதற்கு காரணம் ஒவ்வொரு ‘ஒரே கடவுள்’ மதமும் தங்களுக்கு மட்டுமே, (தங்கள் திருமறை அல்லது தங்களால் இறைத்தூதர் என நம்பப்படுபவர் மூலமாக மட்டுமே-மொபெ) இறை உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என நம்புவதே என்கிறார் கிர்ஸ்க். ‘கடவுளருக்கு எதிராக கடவுள் : ஏக இறைக்கோட்பாடிற்கும் பல தெய்வ வழிபாட்டிற்கும் இடையிலான போரின் வரலாறு’ எனும் நூலின் ஆசிரியரான கிர்ஸ்க்கினைப் பொறுத்தவரையில் பல-தெய்வ வழிபாட்டுமுறையை பின்பற்றிய இறுதி ரோமப்பேரரசன் ஜூலியன் (தி அபோஸ்டேட்) இளவயதில் போர்க்களத்தில் மரணமடைந்தது உண்மையிலேயே துரதிர்ஷ்டமான விஷயம். வரலாற்றின் மிகப்பெரியதோர் ‘என்ன நடந்திருக்கும் வரலாற்றில்’ எனும் ஊகக் கேள்விக்கானது ஜூலியன் வாழ்ந்திருந்தால் எனும் கேள்வி என்கிறார் கிர்ஸ்க். கிர்ஸ்க்கின் முந்தைய நூல்கள் ‘தெருவோர விபச்சாரி : விவிலியத்தின் புறக்கணிக்கப்பட்ட கதைகள்’,மற்றும் ‘தாவீது அரசன் : இஸ்ரேலை ஆண்ட மனிதனின் உண்மை வாழ்க்கை’ ஆகியவை.

மானுட வரலாறு என்பது தனிமனித சுதந்திரம் மென்மேலும் விரிவடையும் மானுட குலத்தின் பரிணாம இயக்கமே ஆகும். எனக்கு எப்போதும் எழுகிற எண்ணம் என்னவென்றால் ஜூலியன் உயிருடன் இருந்திருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் மேற்கத்திய பண்பாடு இன்றைக்கு நாம் எட்டியிருப்பதைக் காட்டிலும் விரைவாக அந்த இலக்கில் வேகமாக நடை போட்டிருக்க முடியும் என்பதுதான்.” என்கிறார் க்ரிஸ்க். பல தெய்வ வழிபாடு பண்டை உலகின் முக்கிய வழிபாட்டு சமயமாக இருந்தது. இன்றைக்கு அது முக்கியமாக ஹிந்து தர்மத்திலும் வனவாசி சமூகங்களின் பாரம்பரியங்களிலும் சந்தேரியா வூடோ போன்ற ஆப்பிரிக்க கரிபீய வழிபாட்டு முறைகளிலும், வட அமெரிக்க ஏனைய மேற்கத்திய நாடுகளின் விக்கா மற்றும் நியோ-பாகன் இயக்கங்களிலும் நிலவுகிறது. கிரேக்க-ரோமானிய பல தெய்வ வழிபாட்டு மரபுகளின் உச்சம் நியோ-ப்ளேடோனிய தரிசனத்தில் நிகழ்ந்தது. நியோ-ப்ளேட்டோனியம் அனைத்தும் கடந்த அனைத்தையும் இணைக்கும் சத்தியத்துடன் இணைந்த தார்மீக வாழ்க்கை நெறியை முன்வைத்தது.

பல தெய்வ வழிபாட்டின் மைய குணாதிசயம் இறையியல் பன்மையினை (theological pluralism) ஏற்பதாகும். இது ‘ஒரே இறைவன் மட்டுமே’ என வலியுறுத்துவதன் மூலம் ஒரே ஒரு இறையியல் கோட்பாட்டினை ஏற்க நிர்பந்திக்கும் ஏக இறைவாதத்திற்கு நேர் எதிரானதாகும். இறையியல் சுதந்திரம் என்பது பிற விஷயங்களிலும் வேறுபட்ட கருத்துக்களுக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் வழிவகுக்குபதாகும் என்கிறார் 54 வயதாகும் கிர்ஸ்க். அவரைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியாக மதநிறுவனத்தையும் அரசையும் வேறுபடுத்தியதேயாகும். நவீன விவிலிய ஆராய்ச்சியினை பிரபலப்படுத்தியவர் என்பதாக தம்மை அடையாளப்படுத்தும் கிர்ஸ்க் ஏக இறைக் கோட்பாட்டின் மூலவேர்களை கிமு 14-ஆம் நூற்றாண்டு எகிப்திய அரசனான அக்தெனாதனிலிருந்து அடையாளம் காண ஆரம்பிக்கிறார். (விவிலிய புராணங்களில் வரும்
இறைவாக்கினரான ஆபிரகாம், மோசஸ் ஆகியவர்களை அவர் விட்டுவிடுகிறார். ஏனெனில் அவர்களுக்கு எவ்வித வரலாற்று ஆதாரங்களும் இல்லை என அவர்களினை தம் ‘ஏக இறைக் கோட்பாட்டின் வரலாறு’ குறித்த ஆய்வுக்கு அவர் உட்படுத்தவில்லை.)

கிறிஸ்தவ எழுத்தாளர்கள் கான்ஸ்டண்டைன் மதம் மாறியது உள்ளார்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் என கூறுவர். கிர்ஸ்க் கான்ஸ்டண்டைனுடைய (மதமாற்றத்தின்) அரசியல் காரணங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். ‘முழுமையான சர்வாதிகார அரசினைக் கண்டுபிடித்த முதல் ரோமானிய கிறிஸ்தவ பேரரசர்’ எனும் தலைப்பு கொண்ட அத்தியாயத்தில் அவர் பின்வருமாறு விளக்குகிறார். “கான்ஸ்டண்டைன் பல தெய்வ வழிபாட்டுக்கு பதிலாக ஒற்றைத் தெய்வ வழிபாட்டினை ஏற்றதற்கு காரணம், எவ்வாறு பிரபஞ்சமனைத்தும் கிறிஸ்தவ தேவனின் ஆட்சிக்குட்பட்டதோ அதே போல ரோமானியம் தனது ஆட்சிக்கு உட்பட்டது என்பதனை நிலைப்படுத்தவே.”

கிர்ஸ்க் மேலும் தொடர்கிறார்: (ரோமானிய சர்வாதிகாரி) கான்ஸ்டண்டைன் நிகாயிய பேரவையை பொது சகாப்தம் 325 இல் கூட்டினார். அப்பேரவையின் முடிவிலிருந்தே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை உருவானதாக கருதப்படுகிறது. அந்த உருவாக்கம் கட்டுக்கடங்காமல் விரிந்த கிறிஸ்தவ சபைகளின் மீது அதிகார கட்டுப்பாட்டினை ஏற்படுத்த உருவாக்கப்பட்டதே அல்லாமல் ஆன்மிக உண்மைகளைத் தேடுவதில் இறையியல் தெளிவினை அளிப்பதற்காக உருவாக்கப்படவில்லை.

கான்ஸடண்டைனின் மறைவினைத் தொடர்ந்து சந்ததி சர்ச்சைகளுக்குப் பிறகு 360 இல் அரியணை ஏறிய ஜூலியன் ஒரு மறு-புரட்சியாளராக விளங்கினார். பல தெய்வ வழிபாட்டிற்கு அரச ஆதரவினை நல்கினார். ஆனால் அவர் ரோமின் கிறிஸ்தவ பேரரசர்கள் பல தெய்வ வழிபாட்டினை அழிக்க முனைந்ததைப் போல ஒற்றைத் தெய்வ வழிபாட்டினை அழித்திட முனையவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி கிர்ஸ்க் கூறுகிறார்: “பல தெய்வ வழிபாட்டில் எனக்கு மிகவும் விருப்பமான விஷயம் இதுதான். பல தெய்வ வழிபாடு மற்றவர்களின் வழிபாட்டு மார்க்கங்களுக்கு திறந்த மனத்துடன் இடமளிக்கிறது.”

கிர்ஸ்க் பல தெய்வ வழிபாட்டினை விரும்புவர் என்றாலும் பற்பல தெய்வங்கள் தனித்தனியே இருப்பதாக அல்ல அவர் நம்பிக்கை.பல தெய்வ வழிபாட்டாளர்களும் ஒற்றைத் தெய்வ வழிபாட்டாளர்களைப் போலவே மூர்க்கத்தனத்துடன் இருக்கமுடியும் என்பதையும் அவர் மறுக்கவில்லை. ஆனால் அத்தகைய பல தெய்வ வணக்கம் கொண்டவர்களின் வன்முறைக்கும் ஒரு தெய்வ வழிபாட்டாளர்களின் வன்முறைக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ஒற்றைத் தெய்வ வழிபாட்டாளர்கள் செய்யும் கொலைகள் ‘இறையியல் மேன்மையை நிலைப்படுத்தும் கருவியாக விளங்குகிறது. இந்த வேறுபாடு நுண்ணியது என்றாலும் முக்கியமான வேறுபாடு. பல தெய்வ வழிபாட்டாளர்கள் பொதுவாழ்க்கையின் அதிகாரத்தை மட்டுமே விழைந்தார்கள். ஆனால் ஒற்றைத் தெய்வ வழிபாட்டாளர்களோ தனிமனித எண்ணங்களையே (வன்முறையின் மூலம்) கட்டுப்படுத்திட விழைந்தார்கள். மரபு சார்ந்த ஏக இறைவாதிகள் தமது எழுத்துக்களை மத நம்பிக்கைக்கு எதிரானவையாக பார்ப்பதை கிர்ஸ்க் அறிவார் என்ற போதிலும் அவர் தம்மை யூத ஏகத்துவ நம்பிக்கையாளர் என்றே கருதுகிறார்.

“யூத ஏகத்துவ மறைப்பாடலான ஷமா (ஷமா இஸ்ரேல் எலோகிம்…கேட்பாய் இஸ்ரேலே உனது தேவன்….தேவர்களுக்கெல்லாம் தேவன்) ஒவ்வொரு நாளும் நான் இசைத்திடும் அதே நேரத்தில் ஏக சத்தியத்தை பலரும் பலத்தன்மைகளில் உள்-வாங்குகின்றனர் என்கிற உண்மையையும் நான் ஏற்கிறேன். எனது நம்பிக்கைகள் மாறுபட்ட பார்வைகளால் அச்சுறுத்தப்படாதவை.” என்கிறார் கிர்ஸ்க்.

இது தொடர்பாக பௌத்தம் சார்ந்த எளிய சிறு விளக்கத்தை அளிக்கிறார்: “ஒரு நிலவு. பல நீர் நிலைகள். பல நீர் நிலைகள் . ஒரு நிலவு”. விஷயம் என்னவென்று அவர் விளக்குகிறார். ஓர் புள்ளியில் பிறக்கும் ஒளி பல வழித்தடங்களில் பிரதிபலிக்கிறது.”

ஆங்கில மூலம்: இரா ரி·ப்க்கின்
நன்றி: www.Beliefnet.com
One God to Bind Them All
In his new book, Jonathan Kirsch depicts monotheism as inherently violent.
By Ira Rifkin of Religion News Service
தமிழில்: அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்