மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்கள்

This entry is part of 39 in the series 20060825_Issue

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்


நா.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு என்னார் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். வேங்கடசாமி நாட்டாரின் நூல் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறதே தவிர துல்லியமான இலக்கிய, கல்வெட்டு, செப்புப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்படவில்லை. கள்ளர் சமூகத்தவரிடையே வழக்கத்திலுள்ள 348 பட்டங்களை வேங்கடசாமி நாட்டார் இந்நூலில் பட்டியலிட்டுள்ளார். ஆனால், இப்பட்டங்கள் எந்தக் காலகட்டத்திலிருந்து கள்ளர் சமூகத்தவர் மத்தியில் வழங்கி வருகின்றன என்பதையோ, இவையெல்லாம் தந்தை வழிப் பட்டங்கள்தாமா என்பது பற்றியோ அவர் குறிப்பிடவில்லை. வன்னியர் போன்ற மற்ற பல சமூகத்தவர்களுக்கும் இவற்றைப் போன்ற அச்சு அசலான பட்டங்கள் உள்ளன. கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் கள்ளர் சமூகத்தவர்கள் மத்தியில் இத்தகைய பட்டங்கள் பயன்படுத்தப்படத் தொடங்கின என விஜய நகர வரலாறு குறித்த தமது நூலில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) குறிப்பிட்டுள்ளார். நா.மு. வேங்கடசாமி நாட்டார் தம்முடைய நூலில் சில பட்டப் பெயர்களை அவரது தம்பியர் தொகுத்துத் தந்தபடி அப்படியே வெளியிட்டுள்ளார். உதாரணமாக, அண்ணூத்திப்பிரியர் என்ற பட்டத்தை ஏழாவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஐந்நூற்றுப்புரையர் என்பதன் திரிபாகும். இதே பட்டம், செம்பிநாட்டு மறவர்களிடமும் உள்ளது. ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகர்களுக்கு ஒரு காலகட்டத்தில் அவர்களுடைய பணிமக்களாக காவல் பணி புரிந்தமையால் இப்பட்டம் கிடைத்துள்ளது. 38ஆவதாக வருகின்ற ஈழத்தரையர் என்ற பட்டமுடையவர்கள் கல்லணைத் தோகூரில் வாழ்கிறார்கள். கரிகாலனால் ஈழநாட்டிலிருந்து போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டு கல்லணை கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் வம்சத்தவர்கள் இவர்கள் என்பதே சரித்திரத்திற்குப் பொருந்தி வருகிறது.

சமூக வரலாற்று ஆய்வு என்பதே மலைக்க வைக்கின்ற தகவல் குவியல்களிலிருந்து சரியான தகவல்களைத் தேர்ந்தெடுத்து சரியான விதத்தில் பொருத்தி அர்த்தமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்குவதுதான். ஒவ்வொரு சாதிக்கும் வரலாற்றில் ஓர் இடமுண்டு. அந்த இடம் உயர்வானதா அல்லது தாழ்வானதா என்பது நம்முடைய இன்றைய மதிப்பீடுகளின்படி நாமாகக் கற்பனை செய்துகொள்வதே தவிர நிரந்தரமான ஒன்றல்ல. நேற்று உயர்வாக இருந்தது இன்று தாழ்வாகக் கருதப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வைப் பொருத்தவரை அரசர் குலம் என்ற ஒன்று இருந்திருக்கிறதா – இருந்திருந்தால் அது இன்றைக்கு காற்றில் கரைந்து போய்விட்டதா அல்லது அதன் எச்சங்கள் எந்தச் சாதியினரிடமாவது காணப்படுகின்றதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்குலத்தோரை எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் மிகப் பழமையான போர்க்குடிகளில் இவர்களும் அடங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறத்தன்மை என்பது மிகவும் உயர்வான ஒன்றாக வரலாற்றில் போற்றப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் மறவர் என்றே இந்தச் சமூகத்தில் ஒரு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் முவேந்தர்கள் வம்சத்தவரா என்பது முதன்மையான கேள்விக்குரிய ஒன்றாகும். இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் அசுர குல வேந்தன் மகாபலி ஆவான். சோபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு மகாபலி மன்னன் ஆண்டதாகக் கருதப்படுகிறான். தக்காண பீடபூமி பகுதியில் இவ்வூர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும், வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் கேரளத்தில் வாழும் அகம்படியர் சமூகத்தவராகிய நாயர்கள் தங்கள் குல முதல்வனாகிய மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை ‘வாமன ஜெயந்தி’ என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாவலி வாணாதிராயர்களுடைய கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இவர்கள் தங்களை ‘ராஜகுல சர்ப்ப கெருடன்’ என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். ராஜகுலமாகிய மூவேந்தர் குலத்துக்கு எதிரிகள் என்பதுதான் இதன் பொருள்.

அகம்படியர் என்றால் சங்க கால இலக்கியங்களில் எயினர்-கள்வர் என்ற பெயரிலும், வட இந்தியப் புராணங்களில் சபரர் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகின்ற பாலை நிலக் குடிகளின் வம்சத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அரச வம்சத்தவ ஆணிடம் பிறந்ததவர்கள் என்று பொருள். ஆனாலும் இவர்கள் தாய்வழி அடையாளத்தையே முதன்மையான அடையாளமாகக் கொண்டிருந்ததால் பாலை நில குடிகளாகிய எயினர்-கள்வர் சமூகத்தவருடன் இணைந்து முக்குலத்தோராக தமிழ்நாட்டைப் பொருத்தவரை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 15-16ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பகுதிகளில் ‘மகாபலி வாணாதிராயர்கள்’ என்ற சிற்றரச வம்சத்தவர் ஆண்டுள்ளனர். இவர்கள் தம்மை மறவர் என்றும், வெட்டுமாவலி அகம்படியர் என்றும் கூறிக்கொண்டுள்ளனர் (ஆதாரம்: கணக்கன் கூட்டத்தார் பட்டயம், பக்கம் 233-243, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், பதிப்பாசிரியர்: செ. இராசு, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991). இந்திய வரலாற்றில் மகாபலி சக்கரவர்த்தி மறைக்கமுடியாத ஒரு வரலாற்றுப் பாத்திரமாவார். பாரத நாடு என்ற பெயரையே ‘மகாபலி தேசம்’ என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகூட ஒரு காலகட்டத்தில் எழுந்ததுண்டு. மகாபலியிடமிருந்து, வாமன அவதாரமெடுத்து விஷ்ணு நாட்டைப் பற்றிக் கொண்டார் என்ற கதையின் பின்னணி சுவையானது. மகாபலி 99 அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்து விட்டான். 100ஆவது அஸ்வமேதம் செய்து முடித்துவிட்டால் இந்திர பதவியை அடைந்து விடுவான். எனவே, மகாபலியின் இந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்கத் திட்டமிட்ட இந்திரன் விஷ்ணுவைத் தூண்டிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டான் என்பதே புராணம். இந்திர பதவியை மயிரிழையில் தப்ப விட்டுவிட்டாலும்கூட மகாபலி வம்சத்தவர்கள் பலீந்திரன் வம்சத்தவர்கள் என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் (அயோத்தியை ஆண்ட ராமன் வம்சத்தவரும், குரு§க்ஷத்திரத்தை ஆண்ட பாண்டவ கெளரவ வம்சத்தவர் உள்ளிட்ட மன்னர்களும்) சூரிய, சந்திர குலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சோழர்கள் சூரிய குலத்தவர்கள். பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள். சேரர்களும் சந்திர குலத்தின் கிளைக் குலத்தவரே. சேரர்களில் உதியன் சேரலாதன் மகாபாரதப் போரில் இறந்த சந்திர குல வீரர்களைத் தனது முன்னோராகக் கருதினான் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். சங்க காலத்தில் காஞ்சி நகரையாண்ட தொண்டைமான் இளந்திரையன் விஷ்ணு அல்லது கண்ணனுடைய பிறங்கடை மரபைச் சேர்ந்தவன் என்று பெரும்பாணாற்றுப்படையால் தெரிய வருகிறது. இவர்களைத் தவிர வரலாற்றில் பரமார மன்னர்கள் போன்றவர்களும், செளகான் போன்ற ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அக்கினி குல க்ஷத்திரியர்களாகத் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். ஆனால், கள்ளர் குலத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை தொண்டைமான் வம்சத்தவர்கள் தங்கள் பட்டயங்களில் இந்திர குலத்தவர் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர். சேதுபதி மன்னர்களோ காஸ்யப ரிஷிக்கு திதி என்பவள் வயிற்றில் பிறந்த தைத்யர்கள் (அசுரர்கள்) வம்சத்தவர் என்றே தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். (காஸ்யப ரிஷிக்கு அதிதி என்பவள் வயிற்றில் பிறந்தவர்கள் ஆதித்யர்கள். சோழர்கள் ஆதித்ய குலத்தவர்கள் ஆவர்.)

தமிழ்நாட்டுச் சமூக வரலாற்றில் அரச குலம், அதாவது க்ஷத்திரிய வர்ணம் என்பது ஆண் வழி வாரிசுரிமையை அடிப்படையாகக் கொண்ட சந்திர, சூரிய குலங்களாகும். மூவேந்தர்கள் இந்த அடிப்படையில் க்ஷத்திரிய வர்ணத்தவராவர். சரித்திர காலத்தில் மூவேந்தர்கள் வம்சத்தில் எந்தப் பெண்ணரசியும் ஆட்சி புரிந்ததாகவோ, வாளெடுத்துப் போர் புரிந்ததாகவோ சரித்திரம் இல்லை. கள்ளர், மறவர் குலத்தவர்களில் அண்மைக் காலத்தில்கூட ராணி வேலு நாச்சியார், மங்களேஸ்வரி நாச்சியார் போன்றவர்கள் ஆட்சி புரிந்ததாகச் சரித்திரம் உண்டு. மங்களேஸ்வரி நாச்சியார் ரிபல் சேதுபதி என்ற முத்துராமலிங்க சேதுபதியின் சகோதரி ஆவார். இவர் 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் ஆங்கிலேயக் கம்பெனி ஆட்சியாளர்களிடம் விண்ணப்பித்துத் தம் தம்பி மீது வழக்குத் தொடர்ந்து பதவியைப் பெற்றவராவார். இவருடைய தாயார் முத்துத் திருவாயி நாச்சியாருக்கு முதல் கணவரிடம் பிறந்தவர் தாம் (மங்களேஸ்வரி நாச்சியார்) என்றும், இரண்டாவது கணவருக்குப் பிறந்தவரே முத்துராமலிங்க சேதுபதி என்றும் அ·பிடவிட் பத்திரத்தில் இவர் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: பக்கம் 152, விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், எஸ்.எம். கமால், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987). இத்தகைய திருமண உறவுமுறை செம்பி நாட்டு மறவர் சமூகத்தவரால் ஏற்கப்பட்டிருந்ததால்தான் மங்களேஸ்வரி நாச்சியார் சட்டப்படி அரசுரிமையை அடைந்தார். இது அசுர குல மரபு என்ற அடிப்படையில்தான் இவர்களை தைத்யர் அல்லது தானவர் குலத்தவர்களாகவே தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர்.

திரு. என்னார் சார்ந்துள்ள சமூகத்தை எந்த விதத்திலும் குறைகூறிப் பேசுவது எங்கள் நோக்கமல்ல. இக்கட்டுரையில் நாங்கள் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல, ஒரு காலத்தில் உயர்வாகக் கருதப்படுகின்ற கருத்துகள் வேறு காலத்தில் தாழ்வானதாகக் கருதப்படுவது இயல்பு. கணவனை இழந்த பெண்டிர் உடன்கட்டை ஏறுவது ஒரு காலத்தில் உயர்வானதாகக் கருதப்பட்டது. அப்படி உடன்கட்டை ஏறியவர்கள் தெய்வமாகவே கருதப்பட்டார்கள். இன்றைய சமூக அமைப்பு இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகைய செயல்களைப் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்களாக பார்க்கின்றது. எனவே, வரலாற்றை அடிப்படையாக வைத்து உயர்வு தாழ்வு கற்பிப்பது எங்கள் நோக்கமல்ல. வரலாற்றில் யார் யாருக்கு எந்தெந்தப் பாத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

nellai.nedumaran@gmail.com

Series Navigation