பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

This entry is part of 39 in the series 20060825_Issue

நரேந்திர மோடிபாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐயின் பங்கு

இந்தியாவில் நடத்தப்படும் பெரும்பாலான பயங்கரவாதச் செயல்கள் பாகிஸ்தானின் உளவுஸ்தாபனமான ஐ.எஸ்.ஐயின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்படுகின்றன. 1993இல் நடந்த மும்பை குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் பங்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதநேயமற்ற காரியத்துக்கு பொறுப்பாக இருந்த டைகர் மேமோன் போன்ற முக்கியமான குற்றவாளிகளை பாகிஸ்தான் பாதுகாத்துவருகிறது. 1996இல் நடந்த டெல்லி குண்டுவெடிப்புகளுக்கும், மும்பையில் 1997இல் நடந்ததற்கும், 1998இல் நடந்ததற்கும் ஐ.எஸ்.ஐயே காரணம். கொல்கொத்தாவில் அமெரிக்க தூதராலயத்தில் நடந்த தாக்குதலுக்கும், குஜராத்தில் அக்ஸர்தாம் கோவிலில் (2002)இல் நடந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐயே காரணம்.

பயங்கரவாத அமைப்புவலையின் இன்னொரு முக்கியமான அம்சத்தைப் பற்றி பேச விழைகிறேன். ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் ஆபத்தான, மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் வெறி கொண்ட ஒரு குழு இருக்கும். மற்ற குடிமக்களைப்போலவே, தங்கள் வேலையை செய்து கொண்டு சாதாரண சட்டம் ஒழுங்கை கடைபிடித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், இவர்கள் அமைதியாக ஒரு பயங்கரவாதம் விதைக்கப்பட வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். மிகவும் நுண்ணிய முறையில் சில தவறான கருத்துக்களை விதைப்பதன் மூலம் பயங்கரவாதம் வளர ஏற்ற விளைநிலத்தை தயார் செய்வார்கள். சமூகத்தில் இவர்களுக்கு இருக்கும் உயரிய இடத்தின் காரணமாக இவர்களது கருத்துக்கள் நம்பப்படும். இவர்களது கற்பனைகள், சமூகசேவை என்ற போர்வையின் கீழ் பரப்பப்படும் இவர்களது கற்பனைகள் சமூகத்தின் ஆதார அமைப்பையே பலவீனப்படுத்தக்கூடியது. இது சட்டத்தை மதிக்கக்கூடாது என்பதையும் சொல்லித்தருகிறது. இதன் விளைவாக வரும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மையும், மக்களின் சுயமரியாதை அற்ற நிலைமையும் பயங்கரவாதத்தின் விளைநிலத்தை உருவாக்குகிறது.

மீண்டும் ஐ.எஸ்.ஐ பற்றிப் பார்த்தால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிரான குறிக்கோள்கள் இவை யாவன.

குறைந்த தீவிரம் கொண்ட போர்முறைகளை தொடர்வது(Operation Destabilisation, Operation K2 and Operation Garland).

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசியல் ஸ்திரமற்றற்ற தன்மையை ஊக்குவிப்பது, உதவி செய்வது உருவாக்குவது. போதைமருந்து பயங்கரவாதம், ஆயுதக்கடத்தல், வெடிகுண்டுகள் கடத்தல், வகுப்புக்கலவரங்களை உருவாக்குதல்.

போலி பணத்தை உலவ விடுதல், ஹவாலா முறையை ஊக்குவித்தல்

மத அடிப்படைவாதத்தை ஊக்குவித்து, இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிடுதல்

மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது. காஷ்மீர மற்றும் சீக்கிய பயங்கரவாதிகளுக்கு மா·பியா குழுக்கள் மூலமும் கடத்தல் குழுக்கள் மூலமும் உதவுதல்

மேற்கண்ட விஷயங்களை மனதில் கொண்டு, 1997க்கு முந்திய மத்திய அரசாங்கங்கள் இந்த பிரச்னைகளை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் என்றும், இதன் மூலம் பாகிஸ்தான் தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறது என்றும் கூறின. அதே வேளையில், காஷ்மீர் பிரச்னையுடன் மட்டுமே பாகிஸ்தானை தொடர்பு செய்யாமலும், எல்லை மீறிய பயங்கரவாதம் என்ற வார்த்தை மூலம் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் கடல்வழி வான்வழி நடக்கும் ஊடுருவல்களை விலக்கியும் பேசியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வைத்திருக்கும் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களையும் மற்ற அமைப்புக்களையும் குறிவைத்து பேசின. அவ்வாறு பேசியதனால், அப்படிப்பட்ட பயிற்சி முகாம்கள் மீது தாக்குதலை தொடங்க நியாயத்தை உருவாக்க்கிக்கொண்டன

இது இந்தியாவுக்கு பாதகமான இரு விளைவுகளை உருவாக்கியது. முதலாவது, இந்தியாவில் காஷ்மீரைத் தவிர மற்ற இடங்களில் நடக்கும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானின் பொறுப்பை இது மழுங்கடித்தது. பயங்கரவாதம் முழுக்க முழுக்க காஷ்மீர் மையமானதாக ஆக்கப்பட்டது. உலக நாடுகள் ஜம்மு காஷ்மீரை ஒரு தீர்வு பெறாத பகுதியாக பார்ப்பதாலும், பாகிஸ்தான் 1947முதல் காஷ்மீர் தனது என்று கூறிவருவதாலும், அங்கு நடக்கும் பயங்கரவாதம் அதற்கு உரிய தீவிரத்துடன் பார்க்கப்படவில்லை.

டிசம்பர் 2001இல் புதுதில்லியில் பாராளுமன்றத்தில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் உலகளாவிய நாடுகள் மத்தியில் இந்தியா மீதான ஆதரவை கொண்டுவந்தது. அதே நேரத்தில் இந்தியா தன் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் எடுக்க உரிமை கொண்டது என்பதையும் மற்ற நாடுகள் அங்கீகரிக்கும் நிலை வந்தது. அதே நேரத்தில், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியதோடு, பாகிஸ்தானையும் அதற்குள் இருக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக முயன்று அவற்றை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இது பாகிஸ்தான் அதிபரான முஷார·பை ஒரு சில வேலைகள் செய்யவைத்தாலும், எல்லோரும் எதிர்பார்த்தது போல, அது வெறும் நாடகமாகத்தான் இருந்தது. பாகிஸ்தானுள் இருக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகளுக்கு பாகிஸ்தானின் தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானை வலியுறுத்துவது குறைந்தது. நமது வலியுறுத்தும் சக்தி முஷார·பின் முன்னர் பயனற்றதாக ஆகிவிட்டது.

பாகிஸ்தானை உருவாக்க எந்த விதமான மனநிலை காரணமாக இருந்ததோ அந்த மனநிலையே இன்னமும் பாகிஸ்தானுள் நிலவி வருகிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் இந்திய மையம் கொண்டது. அது “இந்தியாவை வெறுப்போம்” என்ற பிரச்சாரத்திலேயே உயிர்வாழ்கிறது. இந்தியாவுடனான பிரச்னையை காரணம் காட்டி, உலகெங்கும் பாகிஸ்தான் நிதி உதவி பெற்றுக்கொள்கிறது. இதுவே இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் செயல்களின் காரணம். நாம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. ஐ.எஸ்.ஐயின் பயங்கரவாதத்தைக் குறிவைக்கும்போது இந்தியாவில் பலர் தயங்குகிறார்கள். பலமுறை அதன் ஆதரவாகவும் பேசுகிறார்கள். குற்றவாளி என்பவன் ஒரு குற்றவாளிதான். ஒரு பயங்கரவாதி பயங்கரவாதிதான். பயங்கரவாதிக்கும் குற்றவாளிக்கும் மதமில்லை. மதச்சார்பின்மை கண்ணாடிகளை போட்டுக்கொண்டோ, மதவாத அணுகுமுறையிலோ அணுகக்கூடாது. ஐ.எஸ்.ஐ (பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம்) எல்லா இடங்களிலும் தங்களுக்கு ஆட்களை வைத்திருக்கிறது. பாவ்நகரில் ஒரு ஐ.எஸ்.ஐ குழுவை உடைத்தோம். ஒரு பிராம்மண பையனை கைது செய்தோம். அவன் இப்போது சிறையில் காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறான். ஐ.எஸ்.ஐ வலைகளை மதத்தோடு இணைத்து பேசக்கூடாது. இந்த ஐ.எஸ்.ஐ குழுக்கள் பல மாவட்டங்களிலும், சமூகப்பிரச்னை மிகுந்த இடங்களிலும் தோன்றுகின்றன. அங்கிருக்கும் சமூக பிரச்னைகளை எவ்வாறு உபயோகப்படுத்திக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் கலவரங்களை உருவாக்குவது என்று முயற்சிக்கின்றன. இப்படிப்பட்ட வரைபடம் அவர்களிடம் தயாராகவே இருக்கிறது. ஐ.எஸ்.ஐ குழுக்கள் நாடெங்கும் வேலை செய்துகொண்டிருக்கின்றன. குஜராத்தில் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை அரசு தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு எதிராக சில வெற்றியை உருவாக்கியிருக்கிறோம். குஜராத் போலீஸை இது போன்ற பல சாதனைகளுக்காக பாராட்டுகிறேன்.

இன்னொரு வேலையும் நடந்திருக்கிறது. பாகிஸ்தானில் இன்னொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு நம் நாட்டில் எங்கெல்லாம் பிரச்னைகளை உருவாக்க முடியுமோ அங்கெல்லாம் வேலை செய்ய அமர்த்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இவர்கள் கோவாவுக்குச் சென்று அங்கு ஒரு சர்ச்சின் மீது குண்டுகளை வீசினார்கள். அங்கு குண்டு வீசப்பட்டபின்னால், அதற்குள் நுழைந்து குண்டு வீசியவர்கள் வி.ஹெச்.பி., பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸை சேர்ந்தவர்கள் என்பதாக அடையாளம் காட்டும் காகிதங்களை விட்டுச் சென்றார்கள். இதனை உடனே நம் நாட்டின் பத்திரிக்கை துறையில் இருக்கும் “மதச்சார்பற்ற” போராளிகள் எடுத்துக்கொண்டு சர்ச்சை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸைத் திட்ட உபயோகப்படுத்திக்கொண்டார்கள்.

இதே விஷயம்தான் குஜராத்திலும் இஷாரத் வழக்கில் நடந்தது. பத்திரிக்கைகளில் “மோடி இஷாரத்தை கொன்றார்” என்று எழுதப்பட்டன. மூன்றாம் நாள், பாகிஸ்தானிலிருந்து இஷாரத் அவர்களது இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும், அவள் தன்னாட்டுக்காகவும் அல்லாவுக்காகவும் உயிரைக்கொடுத்தாள் என்றும் அறிவிக்கப்பட்டதும், பத்திரிக்கையாளர்கள் தங்கள் சிவந்து போன முகத்தை எங்கே வைத்துக்கொள்வது என்று தெரியாமல் ஓடினார்கள். சிலவேளைகள் இதுதான் நடக்கிறது. பத்திரிக்கை துறையுடன் இப்படிப்பட்ட உறவுதான் நீடிக்கிறது. மூன்று நான்கு நாட்களுக்கு ஏதேனும் எழுத கிடைத்தால் போதும் அவர்களுக்கு. தேசத்தின் சில தலைவர்கள் இந்த வழக்கு சம்பந்தமாக நடந்துகொண்டதை பார்க்கவேண்டும். இஷாரத் மீது மூவர்ணக்கொடியை போர்த்த வேண்டியதுதான் பாக்கி. அவர்கள் அவளது இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டார்கள். ஒரு அரசியல் கட்சித் தலைவர் அந்த குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அளித்தார். இப்படிப்பட்ட மனிதர்களின் கலங்கிய மூளைகளைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது.

பாகிஸ்தானின் இந்த அமைப்புக்கு வருவோம். இதே வேலையை இன்னும் இரண்டு மூன்று சர்ச்சுகளில் செய்தார்கள். இந்த வேலை பயனளிக்கிறது என்று பெங்களூரில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க முனைந்தார்கள். ஆனால் விதி அவர்களை அங்கே மாட்டிவிட்டுவிட்டது. கர்னாடகா காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமாக இருந்ததும் ஒரு அதிர்ஷ்டம். அவர்களது கார், கம்யூட்டர், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உபகரணங்கள் ஆகியவை, அவர்களிடமிருந்த பிரச்சார காகிதங்கள் இந்த உபகரணங்கள் மூலமாகவே பதிப்பிக்கப்பட்டன என்று காட்டின. இது பாகிஸ்தானில் இருந்த ஒரு இஸ்லாமிய அமைப்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த அமைப்பு, கிரிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே விரோதத்தை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டிருந்தது தெரியவந்தது. இப்படிப்பட்ட புதிய அமைப்புகளையும், அவர்களது புதிய வழிமுறைகளையும் பற்றி நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இது ஆபத்தான முறை. இது சமூகப் பிரிவுகளை உபயோகப்படுத்திக்கொண்டு அதன் மூலம் பயங்கரவாதம் உருவாவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்குவது.

வட கிழக்கு பகுதி

பயங்கரவாதம் வெறுமே மேற்கு எல்லையில் மட்டும் நடப்பதல்ல. முழு வடகிழக்கும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இன, மொழி, மதவாதக் குழுக்கள் தங்களது எல்லைகளைப் பாதுகாக்கவும், தங்கள் அடையாளத்தை பாதுகாப்பதற்கும் பலவிதமான வன்முறை வழிகளைக் கையில் எடுத்துள்ளார்கள். இவர்களது முக்கிய குறிகள் அங்கிருக்கும் ராணுவம், போலீசுக்கு செய்தி அளிப்பவர்கள், அங்கிருக்கும் முக்கிய நிறுவனங்கள், மற்ற இனத்தைச் சார்ந்த மக்கள் ஆகியோர். இவர்கள் பண வசூலிப்பு, கொலை, ஆள் கடத்தல், கொள்ளை ஆகியவற்றை செய்கிறார்கள். பங்களாதேசத்து முஸ்லீம்கள் இந்தியாவுக்கு தொடர்ந்து நுழைவதையும் பயங்கரவாதத்தின் இன்னொரு முகமாகவே காணவேண்டும். சட்டப்பூர்வமற்ற அன்னியர்கள், வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்து அங்கு நிரந்தரமாகக் குடியேறுவதை, தங்களது வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள ஒரு வளமையான நாட்டினுள் நுழைகிறதாகவே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், இதே மக்களே பல்வேறு பயங்கரவாதக்குழுக்களின் உறுப்பினர்களாகவும் ஆகிறார்கள். உலகத்தில் எந்த நாடும் இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்புப் பிரச்னையை பொறுப்பற்று அணுகாது. இருப்பினும் பங்களாதேஷிலிருந்து பல்லாயிரக்கணக்கான அந்நியர்கள் இந்தியாவுக்குள் புகுந்த பின்னாலும், அஸ்ஸாம் மற்றும் இதர மாநில மக்கள் உரத்த குரலில் எதிர்த்த பின்னாலும், இதனைத் தடுக்க ஒரு செயலும் செய்யப்படவில்லை. பூடான், பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாட்டுப்பகுதிகள் இது போல வன்முறை குழுக்களாலும் பயங்கரவாதிகளாலும் மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூட்டான் அரசாங்கம் மட்டுமே தன் நிலத்திலிருந்து எல்லா பயங்கரவாதிகளையும் துரத்தவும் எல்லா பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழிக்கவும் உறுதியான செயல்பாடுகளை எடுத்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது ஒரு உதாரணம் மட்டுமே, ஐக்கிய நாடுகள் சபையில் தீவிரவாத எதிர்ப்பு தீர்மானங்களின் படி ஒரு சுதந்திர அரசாங்கம் தன்னிலத்தினுள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்த சிறந்த உதாரணம். இந்த சிறிய நாடு, தனது அருகே இருக்கும் பெரிய நாடுகளும் வெட்கி தலை குனியும்படி அருமையான உதாரண செயலைச் செய்து காட்டியிருக்கிறது.

உதாரணமாக இன்னொரு பயங்கரவாத அமைப்பு ஏப்ரல் 7, 1979இல் உருவாக்கபட்ட உல்பா எனப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA -United Liberation Front of Assam). இது பரேஷ் பருவா எனப்படுபவரின் தலைமையின் கீழ் உருவானது. அன்றைய அஸ்ஸாம் மக்களின் உள்ளக்கிடக்கையாக இருந்த பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய அன்னியர்களுக்கு எதிர்ப்புணர்வு என்ற பதாகையின் கீழ் இவர்கள் அந்நியர்கள் எதிர்ப்பு என்பதோடு இந்தியாவிலிருந்து பிரிவினை என்ற கோரிக்கையையும் கைக்கொண்டார்கள். அஸ்ஸாம் போராட்டத்துக்குப் பின்னர், பல முறை போராட்டத் தலைவர்களும் இந்திய அரசாங்கமும் பேசிய பின்னால், அஸ்ஸாம் ஒப்பந்தம் 1985ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்பின்னால், நடந்த தேர்தலில், அஸ்ஸாம் கன பரிஷத் ஆட்சிக்கு வந்தது. இந்த நிலைமையில் உல்பா தனது அடிப்படை கோரிக்கையை வலியுறுத்தி வன்முறை மூலம், “அஸ்ஸாமை இந்திய காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை அடையச்செய்வது” என்பதையும் “இறையாண்மை கொண்ட சோசலிஸ்ட் அஸ்ஸாம்” என்பதனை குறிக்கோளாகவும் வைத்துக்கொண்டது. அஸ்ஸாம் ஒப்பந்தமும், பிறகு நடந்த அரசியல் ஒப்பந்தங்களும் , அரசியல் நிலவரமும் இதற்கு ஒவ்வாததாக இருந்தமையால், தனது வன்முறை வழிகளை தொடர்ந்து உல்பா செய்துவந்தது. 1986இல் உல்பா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு கொண்டது. நேஷனல் சோசலிஸ்ட் கவுன்ஸில் ஆ·ப் நாகாலாந்து என்னும் NSCN அமைப்புடனும் உறவு கொண்டது. இவர்களோடு இணைந்து பங்களாதேஷில் பல பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றது. அத்தோடு பல வருமானம் வரும் தொழில்களையும் மேற்கொண்டது. குளிர்பானம் தயாரிப்பு, ஹோட்டல்கள், தனியார் மருத்துவ விடுதிகள், கார் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை. மேலும் மயன்மாரிலிருந்து தாய்லாந்து வரைக்கும் போதைப்பொருள் கடத்தலிலும் உல்பா ஈடுபட்டு வருகிறது.

இடது சாரி தீவிரவாதம்

ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கார்க்,பிகார், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பல பகுதிகள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2001இலிருந்து செயல் ரீதியாகவும் எண்ணிக்கை ரீதியாகவும் இடதுசாரி தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. 2003இல் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் 575 வன்முறை நிகழ்வுகள் நடந்தன. இவர்களது முக்கிய குறி போலீஸ், ஆளும் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் ரயில்வே , தபால் தந்தித்துறை ஆகிய மென் இலக்குகள். கையால் செய்யப்படும் குண்டுகள், மற்றும் நிலக்கண்ணிவெடிகள் ஆகியவைகளில் இவர்கள் திறமைசாலியாக இருக்கிறார்கள். 2003இல் கையால் செய்யப்பட்ட குண்டுகள் மூலம் ஆந்திர பிரதேச முதலமைச்சரைத் தாக்க முனைந்தார்கள். சிபிஐ.எம்.எல் (பி.டபிள்யூ) குழுவும் எம்.சி.சி குழுவும் இணைந்து செயல்பட்டிருந்தன. கிடைத்த தடயங்கள் மூலம், இவர்களுக்கு உல்பா,சிபி.என் (மாவோயிஸ்டு) , சிமி ஆகிய குழுக்களுடன் தொடர்பு உண்டு என்று தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் கோராபுத் மாவட்டத்தில் இவர்கள் போலீஸ் நிலையங்களை தாக்கியதன் மூலம் எங்கும் சென்று தாக்கும் சக்தி கொண்டவர்களாய் அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இந்த இடதுசாரி தீவிரவாதம் வெளிநாடுகளுடன் கொண்டிருக்கும் தொடர்புகள் கவலைதரும் விஷயமாகும். சீனாவிலிருந்து நேபாளம் வழியே பிகார், ஜார்க்கண்ட், சட்டிஸ்கார், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிராவில் சில பகுதிகள், ஆந்திர பிரதேஷ் வரைக்கும் இவர்கள் பரவியுள்ளார்கள். இந்த பகுதிகளில் நக்ஸலைட்டுகளின் இரக்கமற்றதன்மை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் பயனளிப்பதில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பதிலாக, இது நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பலவீனப்படுத்துவதும், நீதித்துறையை பலவீனப்படுத்துவதும்தான் பலன் என்று தெரிகிறது. இந்தப் பின்னணியில், ஆந்திரபிரதேச அரசாங்கம் இந்த தீவிரவாதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது எல்லோராலும் கண்டனம் செய்யப்பட வேண்டிய ஒன்று.

1960இல் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் “கிரீன் காரிடார்” (பச்சை பிரதேசம் ) என்ற சதியைப்பற்றிஎழுதப்பட்டிருந்தது. இது லக்னோவிலிருந்து வடக்கே இருக்கும் மக்கள் எண்ணிக்கையை மாற்றுவதன் மூலம் இந்தியாவை துண்டாடச் செய்ய ஒரு முயற்சியை விவரித்திருந்தது. அந்தக் காலத்தில் மதச்சார்பின்மைகென்ற பெயரில் இது போன்ற விஷயங்கள் குறித்து மௌனம் காப்பது வழக்கமாய் இருந்தது. ஆனால், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி அந்த விஷயத்தை மேலும் துல்லியமாக தைரியமாக எழுதியிருந்தது. நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடங்களில் உள்ள மக்கள்தொகையை ஒரு திசையில் மாற்றுவதன் மூலம் நாட்டை துண்டாட முயலும் ஒரு திட்டத்தை பற்றி எழுதியது. இப்போது “ரெட் காரிடார்” என்ற பிரச்னை இருக்கிறது. நாட்டின் வடக்குப்பகுதியை துண்டாட “கிரீன் காரிடார்” திட்டம் உருவானது போல, நாட்டின் கிழக்குப் பகுதியை துண்டாட “ரெட் காரிடார்” திட்டம் உருவாகியிருக்கிறது. நேபாள மாவோயிஸ்டுகள், பிகார், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசத்தில் இன்று நக்ஸலைட்டுகள். வரைபடத்தில் இவற்றை ஒரு பார்வை பார்த்தால், இதன் தீவிரம் புரிந்துவிடும். (நேபாளம்) பசுபதியிலிருந்து திருப்பதி வரைக்கும், நக்ஸல் வேலைகளால் ரெட் காரிடார் உருவாகிறது. சாலைகள் போடப்பட்டால், இவர்கள் சாலைகளைப் போட விடுவதில்லை. சாலைகள் போடவில்லை என்றால், சாலைகள் போடவில்லை என்று போராட்டம் நடத்துகிறார்கள். இவ்வாறு உணர்ச்சிப்பூர்வமான மக்களைத் தூண்டிவிட்டு தீவிரவாதத்தை வளர்க்கிறார்கள்.


Series Navigation