சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்

This entry is part of 36 in the series 20060811_Issue

குமரிமைந்தன்


சடங்குகள் எனப்படுபவை மனித வாழ்வில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளோடு தொடர்புடையன. குழந்தைப் பிறப்பு, பெண் பூப்பெய்தல், திருமணம், சாவு ஆகியவை நிகழும் போது அவை தொடர்பாக வெளிப்படையான காரண காரியத் தொடர்பில்லாமல் பழக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் சில நடைமுறைகள் சடங்குகளாகும். வேளாண்மை தொடர்பாக ஏர் பூட்டுதல், விதைத்தல், நடுதல், அறுவடை போன்ற நிகழ்ச்சிகளின்போதும் இதுபோன்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் குமுக வளர்ச்சிக் கட்டங்களின் வரலாறு, பழைய பொருளியல் உறவுகள், குமுக ஆட்சிமுறைகள், ஆண் பெண் உறவு நிலைகள், மருத்துவம், உளவியல் போன்ற அறிவியல் கூறுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றில் பல மேற்சாதி, கீழ்ச்சாதி என்ற இருசாரருக்கும் பொதுவாக இருந்தாலும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் சில வேறுபாடுகள் உள்ளன. மேற்சாதியினர், குறிப்பாகப் பார்ப்பனர்கள் முழுமையான பெண்ணடிமைத் தனத்தைக் குறிக்கும் வகையில் தம் சடங்குகளை அமைத்துக் கொண்டுள்ளனர். பெண்ணுக்குப் பரியம் கொடுக்காமலிருப்பது, சீதனத்தை வரதட்சிணை என்று குறிப்பிடுவது, பெண்ணை வலியக் கொடுப்பதாகப் பொருட்படும் காசி யாத்திரை போன்றவை இந்த நிகழ்ச்சிகளாகும். இவற்றில் சிலவற்றைப் பிற மேற்சாதியினர் சிலரும் கைக்கொண்டுள்ளனர்.

வேளாண்மைச் சடங்குகளில் பல தொழில் நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சடங்குகள் என்றோ ஒரு நாள் காரணத்தோடு நடைபெற்ற நிகழ்ச்சிகளின் நிழல்களாகவே மக்கள் நடுவில் ஒட்டிக்கொண்டுள்ளன. இவற்றில் பல நாளடைவில் வழக்கொழிந்துவிடும். இருந்தாலும் கற்பனைக் கெட்டாத காலத்தில் இருந்தே மாறுபடாமல் நிலைத்து நின்றுவிடும் மரபுகளும் உண்டு. இவை குமுக வரலாற்றில் எழுதப்படாத பதிவுகளாக நின்று நிலவுகின்றன. பார்ப்பனரை வைத்து மந்திரம் ஓதி இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்போது இச்சடங்குகள் மாற்றப்பட்டு வரலாறு மறைக்கப்பட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமற்ற சடங்குகள் புகுத்தப்படுகின்றன. ஆனால் கீழ்ச்சாதிகளில் இன்றும் அவை உயிரோட்டமுடன் விளங்குகின்றன.

மேற்சாதிக் குடும்பங்களைக் கூர்ந்து நோக்கினால் அங்கு ஒரு வகைப் பெண்ணாட்சி நடைபெறுவதைக் காணலாம். திருமணமான பெண் தனக்கு வேண்டியவற்றுக்காகப் பெற்றோரையோ உடன்பிறந்தாரையோ நெருக்கிப் பெற்றுக் கொள்கிறாள். தன் பிறந்த வீட்டில் நடப்பவற்றிலெல்லாம் தன் உடன்பிறந்தோரின் மனைவியருக்குப் போட்டியாக நின்று தன் தாயுடன் சேர்ந்து நாத்தனார்களைக் கொடுமைப்படுத்துகிறாள். இதே கொடுமைகளைப் புகுந்த வீட்டில் மாமியார் நாத்தனார்களிடம் தானும்படுகிறாள். இவற்றிலெல்லாம் ஆண்கள் தலையிட்டு எதுவும் செய்ய முடிவதில்லை. இவ்வாறு மேற்சாதிக் குடும்பங்களில் பெண்டிராட்சி நிலவினாலும் சடங்குகளில் இது காணப்படுவது இல்லை. அவர்கள் பரியம் கொடுப்பது இல்லை. சீதனத்தை வரதட்சிணை என்ற பெயரில் வழங்குகிறார்கள். பார்ப்பனர் உட்பட மணப்பெண்ணின் பெற்றோரால் வழங்கப்படும் பணம் தவிர்த்த ஏனைய அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தும் அவளுக்கே உரியன. (கீழ்ச் சாதிகளில் மணப்பெண்ணின் பெற்றோரால் வழங்கப்படும் பணத்துக்கு ஈடாக மணமகன் வீட்டாரால் ஓர் அசையாச் சொத்து மணமகள் பெயருக்கு எழுதி வைக்கப்படுவது பழைய வழக்கம்.) அவளது உடன்பாடு இன்றி அவற்றை மணமகனோ அல்லது அவனது குடும்பத்தாரோ எதுவும் செய்ய முடியாது. வல்லந்தமாக வேண்டுமானால் கவர்ந்து கொள்ளலாம். இருந்தும் வரதட்சினை (மணமகனுக்கு வழங்கப்படும் காணிக்கை) என்ற பெயரிலேயே இதனை அழைக்கிறார்கள். பெண்ணை மணமகன் வீட்டார் வந்து கேட்டு மண முடித்தாலும் “காசி யாத்திரை” என்ற சடங்கு மூலம் மணமகளின் தந்தை பெண்ணை மணமகனுக்குத் தானே முன்வந்து (வலிய வந்து) “தானம்” செய்வதாகக் காட்டுகிறார்கள். இங்கு ஆணின் மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காகச் சடங்கு பருப்பொருளியல் மெய்ம்மைக்கு முன் சென்று விட்டது. வரலாற்றளவில் பார்த்தால் பார்ப்பனர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தம் சாதியில் பரியம் கொடுப்பதைத் தடை செய்திருப்தைக் காணலாம்.

மாறாகக் கீழ்ச்சாதிகளிடையில் பழைய பருப்பொருளியல் மெய்ம்மைகளைக் காட்டுவனவாகவும் பெரும்பாலும் அவற்றுக்கு இசைவாகவுமே இவை அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக “மாப்பிள்ளை மறிப்பு” எனும் சடங்கைக் குறிப்பிடலாம். மணமகள் வீட்டினுள் மணமகன் நுழையும்போது மணமகளின் முறை மாப்பிள்ளைகள் அவனை வழிமறிக்கின்றனர். அவர்களுக்குப் பணம் வழங்கிய பின் அவர்கள் ஒதுங்கி விடுகின்றனர். இன்னும் சில சாதியினரிடையில் முறை மாப்பிள்ளைக்கு அவன் விரும்பும் அளவுக்கு அல்லது உறவினர்கள் அவனுடன் கலந்து முடிவு செய்யுமளவுக்குப் பணம் ஈடு கொடுத்த பின்னர் தான் வேறு மணமகனைப் பார்த்து மணமகள் வீட்டார் மணம் பேசவே இயலும். வேறு சில சாதியினரிடையில் சுருள் வைத்தல் எனும் சடங்கு மூலம் இந்த முறை கழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் பார்ப்பனர்களிடையிலும் அவர்களைப் பின்பற்றுவோர்களிடையிலும் இத்தகைய சடங்குகள் பல ஒழிக்கப்பட்டுவிட்டன. மாறாக அவற்றின் இடத்தை மணமகள் மணமகனுக்கு மனைவியாகுமுன் யார் யாருக்கு உடலுறவுக்கு உரிமையாகிறாள் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் காட்டுவிலங்காண்டி நிலையைக் கொண்ட மந்திரங்களும், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற சடங்குகளும் பிடித்துக் கொண்டுள்ளன. சிலப்பதிகாரக் காலத்திலேயே இச்சடங்குகள் நிலைகொண்டு விட்டன.

இந்தச் சடங்குகளைப் பொறுத்தவரையில் முறை மாப்பிள்ளை தவிர்த்த பிறருக்குப் பெண்ணைக் கொடுக்கும் பழக்கம் மிகுதியாகுந்தோறும் இந்தச் சடங்குகள் தேவை இல்லை. ஆண் பெண் தமக்குள் விரும்பித் திருமணம் செய்யும் குமுகத்தை அமைப்பதற்கு இந்த உறவினர்களின் தலையீடு பெரும் தடையாகவே இருக்கும். எனவே இந்த மக்களின் பொருளியல் அடித்தளத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இதனை மாற்றிக் கொள்ளலாம். நாமறிந்த வரையில் மிக எளிதாக மாற்றங்களைப் புகுத்தத் தக்கப் பண்பாட்டுக் கூறு இத்தகைய சடங்குள் தாம், அதிலும் குறிப்பாகத் திருமணச் சடங்குகள் தாம். தமிழ்த் திருமணம் என்றும் சீர்த்திருத்தத் திருமணம் என்றும் திருமணத் துறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இதற்குச் சான்றாகும்.

அதே வேளையில் சாவுச் சடங்குகளில் மாற்றம் செய்வது அவ்வளவு எளிதாயில்லை. இருந்தாலும் அவற்றிலும் மாற்றங்கள் நிகழாமல் இல்லை. ஒருவர் இறந்து விட்டால் கருமாதி எனப்படும் பதினாறாம் நாள் சடங்கில் தலைமகன் தலை மழிக்கப்பட்டு “உருமால் கட்டுதல்” எனப்படும் சடங்கு நடைபெறும். இதைச் சில சாதியினர் “பட்டங்கட்டுதல்” என்றும் அழைக்கின்றனர். பெண்வழிக் குமுகங்களில் “தாய்க்குத் தலைமகன், தந்தைக்கு இளைய மகன்” என்ற மரபும் நிலவுகிறது. இந்த வழக்கம் தலைமகனுரிமை (Male Primogeniture) எனப்படும். இதில் ஆண் வழி அல்லது தந்தை வழித் தலைமகனுரிமை (Patrilineal male Primogeniture) பெண் வழி அல்லது தாய் வழித் தலைமகனுரிமை (Matrilineal male Primogeniture) என்று இரு வகையுண்டு. இங்கிலாந்து அரச குடும்பத்தில் தந்தைவழி தலைமகனுரிமை வழக்கில் உள்ளது. ஆண்மகவு இல்லாவிடில் தலைமகளுரிமை உண்டு. ஆனால் அங்குள்ள சீமான்கள் (Lords) குடும்பத்தில் தலைமகனுரிமை மட்டுமே உண்டு. மலையாளத்து நம்பூதிரிகள் குடும்பத்தில் ஆண்வழித் தலைமகனுரிமையும் நாயர்கள் குடும்பத்தில் பெண்வழித் தலைமகனுரிமையும் நிலவுகின்றன. தமிழர்களிடையில் முன்பு பெண் வழித் தலைமகனுரிமையிலிருந்து பின்னர் ஆண்வழித் தலைமகனுரிமையாக மாறியமைக்குச் சான்றுகள் உள்ளன. சில மலைவாழ் மக்களிடையில் தவிரத் தமிழகத்தில தலைமகளுரிமைக்குத் தடையங்கள் இல்லையென்றே கூற வேண்டும்.

இன்று தலைமகன் உரிமையோ தலைமகளுரிமையோ இல்லையென்று தான் கூற வேண்டும். ஆனால் அதன் எச்சமாகச் சில சடங்குகள் நிலவுகின்றன. அதுதான் மூத்த மகனுக்கு உருமால் கட்டுதல் என்பது. இது கூட மாற்றமடைந்து வருகிறது. பெற்றோரின் சொத்தில் சம உரிமை இருப்பதால் ஆண் மக்கள் அனைவருக்கும் இந்த “உருமால் கட்டுதல்” நடைபெறுகிறது.

சாவுச் சடங்கில் மாற்றம் பற்றிக் குறிப்பிடும் போது பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சிலருக்கு ஏற்பட்ட நிலையைக் குறிப்பிடுவது நல்லது. ஒருவர் தன் திருமணத்தில் எந்த வித மாற்றமும் செய்து கொள்ளலாம். பிடிவாதம் பிடித்து நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் தன் பிள்ளைகளின் திருமணத்திலோ அல்லது தன் சாவிலோ அதைச் செய்ய முடியாது. பெரியாருக்கு மிக நெருக்கமாயிருந்த சிற்றுண்டிச் சாலை உரிமையாளரான ஒரு பகுத்தறிவாளர் தன் திருமணத்தை எப்படி நடத்தினார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் மகளின் திருமணத்தின் போது முதலில் மாதா கோவிலில் சமய முறைப்படித் திருமணத்தை முடித்து விட்டுப் பின்னர் பெரியார் தலைமையில் “சீர்த்திருத்தத் திருமண” நாடகம் ஆடியிருக்கிறார். பின்னர் அதை அறிந்த பெரியார் மனம் வருந்தியிருக்கிறார். அந்த அன்பர் செத்த போது மத எதிர்ப்பாளரான அவரது பிணத்தை மாதா கோயில் இடுகாட்டில் வைக்க மதகுரு மறுத்துவிட்டார். மருமகனின் செல்வாக்கைப் பயன்படுத்திப் பின்னர் அப்பிணம் மாதா கோயில் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இது ஓரளவு நாட்டுப் புறத்தில் நிகழ்ந்தது. நாட்டுப் புறத்தில் நிலமுள்ளவர்களில் பெரும்பாலோர் சொந்த நிலத்தில் கல்லறை அமைப்பதுண்டு. நாம் குறிப்பிட்ட பெரியார் அன்பருக்குச் சொந்த நிலங்களும் இருந்திருக்கும், ஏனென்றால் அவர் ஓரளவு செல்வம் படைத்தவர். ஆனால் அவரது குடும்பத்தார்க்குப் பகுத்தறிவுச் சிந்தனையோ தந்தையின் தன்மானத்தைப் பற்றிய கவலையோ இல்லாததால் தன் வாழ்நாளில் ஓரளவு தன்மானத்துடன் (தன் மகள் திருமணத்தின் போது உறவினர்களின் நெருக்குதலுக்கு ஆளாகிச் சமய முறையில் திருமணம் நடத்த ஒப்புக்கொண்டதால் ஒரளவு என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டியுள்ளது) வாழ்ந்த அவரது பிணம் மத குருக்களின் காலடியில் மண்டியிட வேண்டியதாயிற்று. எனவே சடங்குகளில் மாற்றம் செய்யும் போது அதற்குரிய பொருளியல், குமுகச் சூழல் உருவாகாமல் தனித்துச் சிலர் மட்டும் மேற்கொள்ளும் முயற்சிகள் பயனளிக்காது. ஆனால் தலைமகனுக்கு மட்டும் சொத்தின் உரிமையிருந்த நிலைமாறி அனைதது ஆண் மக்களுக்கும் சம உரிமை என்ற நிலை வந்தபோது சிறுகச் சிறுக உருமால் கட்டும் சடங்கிலும் எளிதாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டுப் புறங்களில் நடக்கும் சடங்குகளில் இன்றும் ஒரு சிறப்புக்கூறு உண்டு. அவற்றில் ஒருவகைப் பொதுவுடைமைச் சாயல் தென்படும். இவற்றுக்கு எடுத்துக்காட்டாக “மாற்றுக் கொடுத்தல்”, (மாற்று விரித்தல் அல்ல, அது அரசால் ஒவ்வொரு சாதிக்கும் வழங்கப்பட்ட “விருது” ஆகும். இந்தச் சிறப்புரிமையைப் பெறுவதும் இடங்கை – வலங்கைப் போராட்டங்களின் நோக்கங்களில் ஒன்றாகும்[1]) நிகழ்ச்சி வீட்டுக்கு ஊரார் சீர் செய்தல், மொய் எழுதுதல் முதலியன ஆகும்.

மாற்றுக் கொடுத்தல் என்பது ஒரு பெண் பூப்பெய்தியதும் அவளுக்கு வண்ணார் தான் வெளுத்து வைத்திருக்கும் அவ்வூரார் துணிகளில் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து அந்தப் பெண் அணிந்திருந்த துணியை வெளுப்பதற்காக எடுத்துப் போவதாகும். இதற்காக அவருக்குப் பூப்பெய்தல் சடங்கின்போது சிறப்புச் செய்வதுண்டு. அதுபோல் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ குறிப்பாக பெண்ணுக்குத் திருமணத்தின் போது மணமகன் கொண்டு வரும் புத்தாடையை உடுத்தும் முன் அவளுக்கு வண்ணார் மாற்று அளிக்கப்படுகிறது. புத்தாடையை இந்த வண்ணார் மாற்றைக் களைந்தே அவள் உடுத்துகிறாள். மணமகனுக்கும் இதுபோல் வண்ணார் மாற்றைக் களைந்தே புத்தாடை உடுத்தப்படுகிறது. இவ்விழாச் சடங்குகள் தவிர பல நாட்டுப்புற பெண்கள் மாதவிடாய் வந்து துணி மாற்றும் போது வண்ணார் மாற்றைப் பெற்றே மாற்றுகிறார்கள். இதில் மாற்றுக் கொடுத்தல் என்பதன் பொருளியல் அடிப்படையும் நம் நாட்டு மக்களின் ஏழ்மை நிலையும் அதை அவர்கள் எதிர்கொண்ட முறையும் புலப்படுகிறது. முன்பு குறிப்பிடப்பட்டதுபோல் ஒரு நேரத்தில் ஒரே சேலையை வைத்து ஒரு பெண் காலங்கழித்து விட முடியும். குளிக்கும்போது சேலையின் ஒரு பகுதியை உடலில் சுற்றிக் கொண்டு மீதிப் பகுதியைத் துவைத்துவிட முடியும். அதுபோல தான் துணியை உலர்த்துவதும். வயலில் வேலை செய்து குளித்து விட்டுத் திரும்பும் பெண்கள் இணையாகத் தத்தம் சேலைகளில் ஒரு முனையை உடலில் சுற்றிக் கொண்டு மறு முனையை மற்றவர் கையில் கொடுத்து உலர்த்திக் கொண்டே வழிநடப்பதை நாம் பார்க்கலாம். இப்படி ஒரே சேலை வைத்திருந்தால் அல்லது ஒரேயொரு மாற்றுச்சேலை மட்டும் இருந்து அது சலவைக்குப் போயிருந்தால் அவ்வூரிலுள்ள இன்னொரு பெண்ணின் சேலை மாற்றாகப் பயன்படுகிறது. அதற்குரிய சலவைக் கூலி வண்ணாருக்கு வழங்கப்பட்டு விடுகிறது. இதுபோல் ஆண்களும் திடீர்த் தேவைகளுக்கு சலவைக்கூலி கொடுத்து “மாற்று”ப் பெறுவதுண்டு. இவ்வாறு துணியுடைமையில் ஒரு பொதுவுடைமை நிலவுகிறது. பூப்பெய்தல் சடங்கில் இந்தப் பொதுவுடைமை தான் செயற்படுகிறது.

திருமணங்களில் நடைபெறும் “மாற்றுக் கொடுத்தல்” இதேபோன்று பொதுவுடைமையைக் குறித்தாலும் அது ஒரு குமுக வரலாற்றுக் கட்டத்தையும் குறிக்கிறது. பெண் திருமணமாவதற்கு முன் தன் பழைய ஆடைக்குப் பகரம் ஒரு மாற்றுச் சேலையை அணிவதன் மூலம் தன் உடை தான் பிறந்த ஊருக்குப் பொதுவுடைமை ஆனது எனவும் அதைத் தான் விட்டு விட்டு மணமகன் வீட்டார் அல்லது ஊரார் வழங்கும் உடையுடனேயே அங்கு செல்ல வேண்டும் என்பதும் புலப்படுகிறது. சொத்துக்கு உடைமை என்று இருக்கும் பெயர் உடை என்ற சொல்லோடு தொடர்புடையதாய் இருப்பதைக் கொண்டு உடை தான் முதன் முதலில் தனி மனிதனின் உடைமையாக இருந்ததோ என்று கருதத் தோன்றுகிறது. அத்தகைய உடையே பொதுவுடைமையாகிவிடும் நிலையை நாம் இச்சடங்கில் காண்கிறோம்.

மணமகனுக்கு “மாற்றுக் கொடுத்தல்” நிகழ்ந்தாலும் அவன் தன் வீட்டார் வழங்கும் உடைகளையே மணவிழாவுக்கு அணிகிறான். இப்போது கணவன் இல்லத்தில் பெண் வாழச் செல்லும் “கணவன் வீட்டு வாழ்வில்” (Virilocal) இது பொருந்தலாம். இப்போது மணப்பெண் கணவன் வீட்டுக்குச் செல்லும்போது தாய் வீட்டிலிருக்கும் தன் பழைய உடைகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றாலும் பழைய வரலாறு சடங்கு வடிவத்தில் நிலைத்து நிற்கிறது. ஆனால் மணமகனுக்கு மாற்று வழங்குவது அதற்கு முந்திய ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. அவன் திருமணத்துக்குப் பின் மனைவி வீட்டுக்குச் சென்று வாழும் “மனைவி வீட்டு வாழ்வை” அது காட்டுகிறது.

இன்று செல்வம் படைத்த குடும்பங்களில் நடைபெறும் மணவிழா போன்றவற்றில் தம் வீட்டுத் துணியையோ அல்லது விழாவுக்கு உரியவரின் துணியையோ தான் மாற்றாகத் தர வேண்டுமென்று வண்ணாரிடம் வற்புறுத்திப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஊரார் விழா நடத்தும் வீட்டினருக்குச் செய்யும் சீர்கள், திருமண வீட்டிற்கு அரிசியும் பெண் திருமணமாயின் அத்துடன் முறுக்கு போன்ற சில பண்டங்களும் பூப்பெய்தல், கருமாதி முதலியவை நடக்கும் வீடுகளுக்கு அரிசியும் எண்ணெய்யும் வாழைப் பழக்குலை, முறுக்கு முதலியனவும் எல்லா விழாக்களுக்கும் மொய்ப் பணமும் கொடுக்கிறார்கள். இதனால் விழா எடுப்போர் அதற்காக பெரும் பொருளோ, பணமோ ஆயத்தப்படுத்தி வைத்திருக்கத் தேவையில்லாமல் போகிறது. விழாவன்று அல்லது அதற்கு முதல் நாளே எல்லா வீடுகளிலிருந்தும் அரிசி முதலியவை வந்து விடுவதால் அரிசி வாங்குவதற்கு என்று பணம் தேவை இல்லை. அப்படியே விலைக் கொடுத்து வாங்கினாலும் ஊராரிடம் இருந்து வரும் அரிசியை விற்று அப்பணத்தை ஈடுகட்டி விடலாம். கடன் வாங்கியிருந்தால் அடைத்து விடலாம். அவ்வாறே காய்கறிகள், பிற செலவுகளை மொய்ப் பணத்தைக் கொண்டு சரிக்கட்டி விடலாம். எனவே நினைத்த நேரத்தில் திருமணம் முதலியவற்றை ஏற்பாடு செய்வதில் பொருளியல் இடர்பாடு இல்லை. அதே போல் எதிர்பாராமல் நிகழும் பூப்பெய்தல், சாவு முதலியவற்றையும் பொருள் வகையில் பெரும் தொல்லை இன்றி எதிர்கொள்ள முடியும். சாவு நிகழ்ச்சியில் பிணம் எடுப்பதற்கு முன் வாய்க்கரிசி என்ற பெயரில் கொடுக்கப்படும் பணம் அந்நாட் செலவை ஈடுகட்டப் பயன்படுகிறது. வாய்க்கரிசி என்ற சொல் முன்பு அரிசியாகக் கொடுத்தது பின்னர் காசாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது. பிணம் எடுக்கும் நாளன்று நாவிதர், வண்ணார், குருக்கள் என்று பல்வகையினர் செய்யும் பணிகளுக்கு அரிசியே வழக்கமாக (இதை சுதந்தரம் என்றும் சுவாதந்திரியம் என்றும் மாமூல் என்றும் வழங்குவர்)க் கொடுக்கப்பட்டது என்பதற்கு இச்சொல் சான்றாக நிற்கிறது.

இவை தவிர திருமணத்தின்போது வழக்கிலிருந்த நடைமுறை நம்மை வியப்பிலாழ்த்துவதாக இருக்கும். சில காலம் முன்பு வரை நாட்டுப்புறங்களில் திருமண விழாக்கள் ஏழுநாட்கள் தொடர்ந்து நடைபெறும். அந்நாட்களில் மணவீட்டில் ஊரார் அனைவரும் கூடி விருந்துண்டு மகிழ்வர். ஏசல், ஊஞ்சல், மஞ்சள் நீர் தெளித்தல் முதலிய சடங்குகளில் இரு வீட்டாரும் ஈடுபட்டு ஊரே பெரும் களியாட்டமாக இருக்கும். தத்தம் வீடுகளிலிருந்து அரிசி முதலியவை கொடுத்தும் மொய்ப்பணம் கொடுத்தும் உண்டாட்டு நடத்தும் ஊர்த் திருவிழாவாகவே ஒவ்வொரு திருமணமும் நடைபெறும். இந்த மணவிழா நாட்களின்போது ஊரில் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. இத்தகைய விழாக்கள் இன்று நின்றுபோன வெற்றிடத்தை நிரப்பத்தான் இன்றைய திரைப்படங்கள் பயன்படுகின்றன என்று சொல்லலாம்.

இன்று ஊரார் மனமுவந்து நின்று மன நிறைவோடு செய்யும் இத்தகைய நிகழ்ச்சிகள் அருகி வருகின்றன. குமுகக் கட்டமைப்பில் ஓர் உடைவு ஏற்பட்டுவிட்டது. அத்துடன் பழைய சாதி உறவுகளிலும் உடைவு ஏற்பட்டு வருகிறது. புதிதாக ஒரு குமுக நெருக்கத்தை உருவாக்கும் வகையில் அனைவரும் கலந்து ஆடிப்பாடி மகிழத் தக்க நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

திருமணங்களுக்குச் சில மாதங்கள் உகந்தவை அல்ல என்று விலக்கப்பட்டுள்ளன. அம்மாதங்கள் வேளாண்மை தொடர்பான பணிகளுக்காக மக்கள் பெருமளவில் ஈடுபடும் மாதங்களாகும். அதேபோல் திருமணத்துக்கு உகந்தவை என்று ஒதுக்கப்பட்டுள்ள மாதங்கள் வேளாண்மைப் பணிகள் இன்றி ஓய்வுள்ள மாதங்களாகும். அவ்வோய்வை களிப்புறச் செலவிடுவதற்கும் இத்திருமண விழாக்கள் முன்பு அவ்வோய்வு மாதங்களில் நடத்தப்பட்டன. மாதங்களுக்கிடையில் இத்தகைய வேறுபாட்டுக்குக் கணிய (சோதிட) அடிப்படை எதுவுமில்லை. அது மட்டுமல்ல எந்த வித உழைப்பிலும் ஈடுபடாத பார்ப்பனர்கள் விலக்கப்பட்ட மாதங்களிலும் திருமணம் நடத்துகின்றனர் என்ற உண்மை இந்தக் கணியக் கருத்துக்குச் சான்று பகர்கிறது. அத்துடன் திருமணம் இல்லா இம்மாதங்களில் அனைத்துப் பொருட்கள் மற்றும் பணிகளின் செலவும் மிகக் குறைவாக இருப்பதால் அவர்கள் அம்மாதங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இப்போது திருமணச் சடங்குகள் மிகவும் சுருங்கி விட்டதால் அனைவரும் அனைத்து மாதங்களிலும் திருமணச் சடங்குகளை வைத்துக் கொள்ளலாம்.

வேளாண்மைச் சடங்குகளில் ஒன்றிரண்டைக் குறிப்பிட வேண்டும்.

வெற்றிலை என்ற தலைப்பிலமைந்த ஒரு நூலில் வெற்றிலைக் கொடிக்காலில் நடவுக்கு முன்பு கோழிக் குருதியையும் குயவர் சூளைச் சாம்பலையும் கலந்து தெளிக்கும் சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அந்நூலாசிரியர் இதனை “வளமைச் சடங்கு” என்று விளக்கம் தருகிறார். கோழிக் குருதி பெண்ணின் மாதவிடாய்க் குருதியைக் குறிக்கிறதாம். மாதவிடாய்க் குருதி இனப்பெருக்கத்தின் அறிகுறி; எனவே வளமையின் அறிகுறி என்று விளக்குகிறார். அதனால் மாதவிடாய்க் குருதி இனப்பெருக்கத்தைத் தருவதுபோல் மண்மீது தெளிக்கப்பட்ட இந்தக் கோழிக் குருதி நல்ல விளைச்சலைத் தரட்டும் என்று தெளிக்கிறார்களாம். குக்குல மக்களிடையில் வழங்கும் அளவ[2] மந்திரம் (Imitation magic) தான் இது என்று ஓங்கி அடிக்கிறார்.

ஆசிரியர் பல “முற்போக்கு” நூல்களைப் படித்ததன் விளைவுதான் இது. ஆனால் நம் நாட்டு நடப்புகளைச் சற்று கூர்ந்து நோட்டமிட்டிருப்பாராயின் இதுபோன்ற “முற்போக்கு” முடிவுகளுக்கு அவர் வந்திருக்க மாட்டார். கோழிக் குருதி ஒரு நச்சுயிர்க் கொல்லியாக (Antibiotic)ப் பயன்படுகிறது. கண்ணில் காயம்பட்டால் கோழிக் குருதியை ஊற்றுகிறோம். புதுமனைகளில் புகு முன்னர் கோழிக் குருதியைத் தெளிக்கிறோம். நம்மூர்க் கோயில் திருவிழாக்களும் கொடை விழாக்களும் அம்மை, கக்கல் – கழிச்சல் (வாந்திபேதி) போன்ற கொள்ளை நோய்கள் தொடர்பாகவே தோற்றம் கொண்டவை. ஓர் ஊரில் கொள்ளை நோய் தாக்கினால் உயரத்தில் ஏற்றப்பட்ட கொடி மூலம் வெளியூரினர்க்கு எச்சரிக்கை செய்வர். உள்ளூரினர் வெளியேறுவதும் புதியவர் எவரும் ஊருள் நுழைவதும் தடுக்கப்படும். கொடியேற்றப்பட்டவுடன் ஊரைச் சுற்றிக் கோழிக் குருதி தெளிக்கப்படும். இவ்வகைப் பயன்பாடுகளில் இருந்து கோழிக் குருதியின் நச்சுயிர்க் கொல்லிப் பண்பை நம்மால் உய்த்துணர முடிகிறது. இவற்றை ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறியும் எண்ணம் நம் நாட்டுக் கற்றோர் மனதில் தோன்றாமலிருக்கவே இவற்றுக்கு அந்த மந்திரம் இந்த மந்திரம் என்று புதிய புதிய பெயர்களைக் கற்பித்துள்ளனர் மேலை “முற்போக்கினர்”. அவற்றை இம்மி பிசகாமல் கடைப்பிடித்துத் திரட்டித் தருகின்றனர் நம் நாட்டு “முற்போக்கு” ஆய்வர்கள்.[3]

அதுபோல் கோயில் கொடைகளில் மதுக் குடம் எடுத்தல், மானோம்பி ஆடு வளர்த்துக் காவு கொடுத்தல் போன்ற சடங்குகள் செய்யப்படுகின்றன.

மதுக் குடம் என்பது அரிசி மாவைப் புளிக்கச் செய்து பெறப்படும் ஒரு மதுவாகும். இதன் செய்முறை பீர் என்ற மதுவின் செய்முறையை ஒத்ததென்று அதை விரிவாக ஆய்ந்துள்ள பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் விளக்கியுள்ளார். இந்த மதுக் குடத்தில் உள்ள மது நன்றாகப் பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.

மதுக் குடம் பொங்குவதற்கு அதாவது நொதிப்பதற்குத் துணை செய்வது ஈற்று (Yeast) எனப்படும் நுண்ணுயிரி. இது காற்றுவெளியில் மிகுந்திருந்தால் மதுவின் நுரைப்பு மிகும். நாம் ஆய வேண்டியது என்னவென்றால் காற்றில் கலந்து இருக்கும் ஈற்றின் அளவுக்கும் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உள்ள தொடர்பு.

ஆடுகளை நேர்ச்சைக்காக வளர்ப்பது வழக்கம். அந்த ஆடுகளைத் தம் விருப்பம் போல் மேயவிட்டு விடுவார்கள். யாரும் தடுக்கவோ துரத்தவோ மாட்டார்கள். கொடை விழா நிறைவின்போது அந்த ஆட்டின் தலையை வெட்டி ஒரு மேடையில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். வெட்டப்பட்ட அந்தத் தலை வாய் திறந்து நீரை அருந்தினால் நல்ல மழை இருக்கும். இல்லை என்றால் மழை இருக்காது என்பது ஒரு நம்பிக்கை. வெட்டப்பட்ட ஆட்டுத் தலையின் இந்தச் செயலுக்கும் காற்று வெளியிலுள்ள ஈரிப்பு விகிதம் அல்லது தூசு இருப்பு போன்ற மழைக் காரணிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையும் நாம் ஆய்வு செய்யலாம்.

இவ்வாறு சடங்குகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் நாம் அவற்றை அனைத்துக் கோணங்களிலுமிருந்து ஆய்வு செய்து நம் முன்னோரின் நடவடிக்கைகளினுள் மறைந்து கிடக்கும் அரசியல், குமுகியல், அறிவியல், தொழிலியல் நுட்பங்களை வெளிப்படுத்த வேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] மாற்று விரித்தல் என்பது இடுகாட்டில் வண்ணார். நாவிதர் போன்ற ஊர்ப் பணியாளர்களுக்குரிய ஊதியத்தை வழங்கும் போது ஊரார் அமர்ந்து கொள்ள வண்ணார் தாம் வெழுத்த துணியை விரித்தல்.

[2] அளவம் என்ற சொல் ஒருவன் செய்வது போல் இன்னொருவன் செய்து காட்டி கேலி செய்வதைக் குறிக்கும் ஒரு வழக்குச் சொல். அளவம் காட்டுதல் என்று இதனைக் குறிப்பிடுவர்.

[3] குயவர் சூளைச் சாம்பல் என்பதற்கு ஆங்கிலம் Potash எனக்கொண்டால் ஆங்கிலத்தில் Pot ash என்ற, வேளாண்மையில் உரமாகப் பயன்படும் வேதிப் பொருளின் பெயர் Pot ash என்ற சொல்லிருந்தே பெறப்பட்டது என்பதுடன் Potassium என்ற தனிமத்தைக் கூட டேவி என்ற அறிவியலாளர் 1807இல் பானைச் சாம்பலிருந்து பிரித்தெடுத்தார் என்ற உண்மை வெளிப்படுகிறது. பார்க்க: Chambers Twentieth Century Dictionary,1972.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation