‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!

This entry is part of 29 in the series 20060303_Issue

வ.ந.கிரிதரன்


தமிழ் அரசர்கள் தங்களது இராஜதானிகளையே கோட்டைகளாக அமைப்பது பாதுகாப்புக் காரணங்களினால் ஏற்பட்ட வழக்கம். நல்லூர்க் கோட்டையைப் பற்றி

யாழ்ப்பான வைபவமாலை, கைலாயமாலை, போத்துக்கேய மற்றும் கோகில சந்தேஸ (குயில் விடு தூது) போன்ற சிங்கள நூல்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் தலைமறைவாகவிருந்துவிட்டு, மீண்டும் படையெடுத்து வந்த கனகசூரிய சிங்கையாரியனைப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு கூறும்:

‘….கனகசூரிய சிங்கையாரியன் மதுரையிற் சேர்ந்த பொழுது பாண்டிநாட்டைப் பகுதியாய் ஆண்ட சிற்றரசர் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட, அவன் சகல ஆயுதங்களுடனேயே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து, மேற்கு வாசல் வழியாக நுழைந்தான் ‘ (வைபவமாலை; பக்கம்:47)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மேற்கு வாசலென்பது நலூர்க் கோட்டையிம் மேற்கு வாசலே என்பது வெள்ளிடமலை. இம்மேற்கு வாசலைப்பற்றிப் பறங்கிகளின் படையெடுப்புப் பகுதியிலும் கூறப்பட்டுள்ளது.

‘…யுத்தம் வாசற்புறத்தே நல்லூர்க் கோட்டையின் கோவிலுக்கு முன்னதாகவிருந்த வெளியையே இடமாக நியமித்துக் குறித்த நாளிலே யுத்தத்தை ஆரம்பித்துப் பதினொரு நாளாக நடத்தினார்கள் ‘ (வைபவமாலை; பக்கம் 70).

இந்த யுத்தத்தைப் பற்றிப் போர்த்துகேயரின் குறிப்புகளும் விபரமாக விளக்குகின்றன. Conquest of Ceylon நூலில் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அண்மையில் நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாயில் அமைந்திருந்ததும், யுத்தம் நிகழ்ந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லூர்க் கோட்டைக்கு வடக்கு வாயிலொன்று இருந்த விபரமும், அதற்குப் பாதுகாப்பாகச் சிவாலயமொன்று இருந்த விபரமும் வைபவமாலயில் வரும் சுபதிட்ட முனிவர் கதையில் கூறப்பட்டுள்ளன:

‘…அவ்வாலயங்களில் வடமதில் வாயில் காப்பாக நின்ற சிவாலயம் ஒன்று மாத்திரமே சிவகடாட்சம் பெற்ற ஒருவனால் முதன் முதல் நிறைவேறும் ‘ (வைபவமாலை; பக்கம் 53-54).

நகரின் கிழக்கு அல்லது தெற்கு வாயில்கள் பற்றிய குறிப்புகளை வரலாற்று நூல்களிலிருந்து என்னால் பெற முடியவில்லை. போர்த்துக்கேயரின் நூல்கள் போன்ற வரலாற்று நூல்களை இந்த விடயத்தில் மீண்டுமொருமுறை நுணுகி ஆராய வேண்டுமென்பது எனது அவா. அதன் மூலம் மேலும் பல உண்மைகள் கிடைக்கக் கூடும்.

சந்தை பற்றிய தகவல்கள்!

போர்த்துக்கேயரின் நூல்களிலொன்றான Early Christianity in Ceylon (17th Centuray Narrative) நல்லூர் இராஜதானியிலமைந்திருந்த சந்தை பற்றியும், இச்சந்தையின் நடைமுறைகளை அரசன் தனது மாளிகையிலிருந்து பார்க்கக்கூடியதாகவிருந்ததையும் கூறுகின்றது. இச்சந்தையே முத்திரைச் சந்தையாகவிருக்க வேண்டும். தமிழரசர் காலத்தில் சந்தையில் விற்கப்ப்டும் துணிகள் அரசாங்க முத்திரையிடப்பட்டே விற்கப்பட்டு வந்தனவென்பதை அறியக் கூடியதாகவிருக்கின்றது.

‘..தமிழரசர் காலத்திற்போலவே அரசாட்சி முத்திரையில்லாத துணிகள் விற்கப்படமாட்டா. முத்திரை குத்துவதற்கும் ஒரு வரி அறவிடப்பட்டது.. ‘(யாழ்ப்பாணச்சரித்திரம்; பக்கம் 48).

இதனால்தான் முத்திரைச் சந்தை என்னும் பெயர் தோன்றியிருக்கலாம் போற்படுகின்றது.

யமுனா ஏரி!

தற்போது நல்லூர்ப் பகுதியில் அரிதாகக் காணப்படும் பழமையின் சின்னங்களில் ஒன்றான யமுனாரிபற்றியும் பல்வேறுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. தமிழ் மன்னர்கள் நீராடப் பாவித்த கேணி இதென்பர் ஒரு சாரார். மறுசாராரோ பெரிய கந்தசாமி ஆலயத்திற்குரிய தீர்த்தக் கேணியென்பர். இக்கேணியை முதலாவது சிங்கையாரியராசன் கட்டியதாக வைபவமாலையார் கூறுவார். முதலியார் இராசநாயகமோ கனகசூரிய சிங்கையாரியனின் புத்திரர்களில் ஒருவனான சிங்கைப் பரராசசேகரன் என்பவனே கட்டியமைத்தான் எனக் கூறுவார்.

இந்த யமுனா ஏரி பழைய கந்தசாமி கோவிலிருந்த இடத்திற்கு அண்மையில் இருப்பதாலும், இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான யமுனா நதியினின்றும் கொண்டு வரப்பட்ட நீரைப் பெய்வித்ததால் யமுனாரி என்று அழைக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதாலும், தீர்த்தக் கேணியற்று பெரிய முருகன் கோயிலொன்று இருப்பதற்குச் சாத்தியம் குறைவாகவிருப்பதாலும் இந்த யமுனாரி அரச குடும்பத்தினரால் நீராடப் பாவிக்கப்பட்டது என்பதிலும் பார்க்கப் பழைய கந்தசாமி ஆலயத்திற்குரிய தீர்த்தக் கேணியாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமுடையதாகப் படுகிறது. ‘ப ‘ கரவான இக்கேணி மிகவும் அழகானது. பின்னாளில் அந்நியர் ஆட்சிக் காலங்களில் அவர்களால் நீராடப் பயன்பட்டிருக்கலாம். அதனால்தான் போலும் ஜே.பி.லூயி போன்றோர் இக்கேணியானது தமிழ் அரச குடும்பத்தினரால் நீராடப் பயனபட்டது எனக் கருதினர் போலும்.

நகரமைப்பில் மக்களிருக்கைகள்!

நல்லூர் இராஜதானியில் மக்கள் புரியும் தொழில்களுக்கேற்ப அவர்களுக்குரிய இருக்கைகளும் அமைந்திருந்தன என முதலியார் இராசநாயகம் போன்றோர் கூறுவர். கனகசூரிய சிங்கையாரியனால் மீளக் கைப்பற்றப்பட்ட நல்லூர் புதுக்கியமைக்கப்பட்டதைப் பற்றி யாழ்ப்பாணச் சரித்திரம் பின்வருமாறு கூறும்:

‘..நல்லூர் பல்வளங்களாலும் செறிவுற்றிருத்தலைக்கண்டு அதனாலேயே புதுக்குவான் விழைந்து, இராச வீதிகளும், அரன்மணைகளும் அவற்றைச் சூழந்து குதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும் , நறுமணங்கமழும் செவ்விய மலர் பொலிந்திலங்குஞ் சிங்கார வனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொல்ழிபுரி மக்களிருக்கைகளும் பல்வகை அணிநலஞ் சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், தட்டார், இரத்தின வணிகர், புலவர், இசைநூல் வல்ல பாணர் இவர்களுக்கு வெவ்வேறிருக்கைகளும்… ‘ (யாழ்ப்பாணச்சரித்திரம்) இவ்விதமாக நகர அமைப்பு காணப்பட்டது. இதில் எவ்வளவு தூரம் உண்மையிருந்தது என்பதைப் பின்னர் இந்துக்களின் நகர் அமைப்புக் கோட்பாடுகளைத் தற்போதைய நல்லூரில் காணப்படும் வீதி, மற்றும் காணிப்பெயர்களை ஆராயும்போது கண்டு கொள்ளலாம்.

நகரில் காணப்பட்ட கட்டடங்கள்!

பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதப்படும் கோகில சந்தேஸமென்னும் (குயில் விடு தூது) சிங்கள் நூலில் (இது சப்புமல் குமாரயாவின் யாழ்ப்பாண வெற்றியைப் புகழ்ந்து பாடுவதற்காக எழுதப்பட்டது) நகரில் அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களைப் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.

‘..யாபாபடுனவிலே சிறந்த உயர்ந்த கட்டடங்கள் நிரை நிரையாக உள்ளன. பொன்மயமான கொடிகள் இவற்றினை அலங்கரிக்கின்றன. குபேரனின் தலைநகரான அழகாபுரியுடன் இது ஒப்பிடற்பாலது.. ‘ (யாழ்ப்பாண் இராச்சியம்; கலாநிதி சி.க.சிற்றம்பலம்).

நல்லூர்க் இராஜதானிக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் இருந்ததைப் போர்த்துக்கேயரின் குறிப்புகள் கூறி நிற்கின்றன. இவை கோப்பாய், பண்ணைத்துறை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பண்ணைத்துறைக்கு அண்மையில் காணப்படும் கொட்டடி என்பது கோட்டையடி என்பதன் திரிபாகவே படுகின்றது. இக்கோட்டைகளை நல்லூர் இராஜதானியுடன் இணைக்கப் பிரதான வீதிகள் இருந்ததையும், இவ்வீதிகள் நெடுக ஆங்காங்கே காவலரண்கள் இருந்தமையும் போர்த்துக்கேயரின் நூல்கள் கூறுகின்றன. பறங்கிகள் நல்லூர் இராஜதானிமேல் தொடுத்த போர்பற்றிய விபரஙக்ளை நேர்முக வர்ணனை போன்று குவேறாஸ் குருக்களின் Conquest of Ceylon விபரிக்கின்றது.

—-

Series Navigation