தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3

This entry is part of 32 in the series 20050623_Issue

கே.ஜே.ரமேஷ்


ஜூன் 9ம் தேதி வெளியான பாகத்தின் தொடர்ச்சி….

பின்னர் மார்ட்டின் லூதர் கிங் ஊர் ஊராகச் சென்று தன் பேச்சாற்றலின் திறமையால் கறுப்பின மக்களை சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சம உரிமைப் போராட்டங்களில் பங்கு பெறுமாறு ஊக்குவித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அமைதி வழி போராட்டத்தைத் தொடரும் அதே வேளையில் மாண்ட்காமெரியில் கையாண்டப் பொருளாதாரப் புறக்கணிப்புப் போராட்ட முறையையும் ஊக்கப்படுத்தினார். நாடு தழுவிய அளவில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் சுமார் 10 விழுக்காடு இருந்தனர். அதைச் சுட்டிக்காட்டிய கிங் கறுப்பின மக்கள் தங்களிடம் உள்ள பொருளாதாரச் சக்தியை உணரவேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்ந்தெடுத்து வாங்கும் முறையால் சம உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வியாபாரிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வியாபாரமும் அதன் வழி லாபமும் பெருக வழிவகுக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார். அதே போல கறுப்பர்களுக்கு எதிரானவர்களின் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதால் அவர்களின் பொருளாதார நிலையிலும் ஒரு சரிவை ஏற்படுத்த முடியும் என்பதையும் கூறினார். மேலும் கறுப்பின மக்கள் அனைவரும் ஓட்டுரிமை பெற்றுவிட்டால் கறுப்பர்கள் அரசியல் பலமும் பெற்று விடுவார்கள் என்பது கிங்கின் அசைக்க முடியாத நம்பிக்கை. கறுப்பின மக்களின் ஜனத்தொகை மொத்த ஜனத்தொகையில் குறைந்த விழுக்காடாக இருப்பினும் அவர்கள் ஒருங்கிணைந்து செயல் பட்டால் அதிபர் தேர்தல் முடிவையும் மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளையும் நிர்ணையிக்க முடியும் என்றும் நம்பினார். 1960ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அமெரிக்கக் கறுப்பின மக்கள் ஆதரவுடன் மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்ற ஜான் எஃப் கென்னடியின் வெற்றியே இதற்கு ஒரு உதாரணம். பதவிக்கு வந்த கென்னடி முதல் இரண்டு வருடங்களில் சம உரிமைக்காக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் அதற்கான மசோதா ஒன்று பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது. ஜூன் மாதம் 11ம் தேதி தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அதிபர் கென்னடி அந்த மசோதாவுக்கு ஆதரவாக, ‘அமெரிக்காவில் ஒரே இடத்தில் ஒரே தினத்தில் ஒரு வெள்ளையர் குழந்தையும் ஒரு நீக்ரோ குழந்தையும் பிறந்தால், நீக்ரோ குழந்தை உயர்நிலைப் பள்ளியில் படித்து முடிக்கும் வாய்ப்பு வெள்ளையர் குழந்தையின் வாய்ப்புடன் ஒப்பிடுகையில் ஒரு பாதி தான். அதே போல் கல்லூரி படிப்பு முடிக்க அந்த நீக்ரோ குழந்தையின் வாய்ப்பு மூன்றில் ஒரு பங்கு தான். ஆனால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்க இரு மடங்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. வருடத்திற்கு 10000 டாலர் ஈட்ட அவர்களுக்கு ஏழில் ஒரு பங்கு சாத்தியமே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதே நேரம் அவர்களின் சராசரி வாழ்நாள் வெள்ளையர்களை விட 7 வருடங்கள் குறைவே ‘ என்று பேசினார். கென்னடி கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவாகத் தான் மார்ட்டின் லூதர் கிங் வாஷிங்டனில் அமைதி ஊர்வலம் நடத்தினார். முன்பே பார்த்தபடி சுமார் 250,000 பேர்கள் கலந்து கொண்ட இந்த அமைதி ஊர்வலம் அமெரிக்கக் காங்கிரஸ் அந்த மசோதாவை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பேசிய மார்ட்டின் லூதர் கிங்கின் உரை அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் புகழ் வாய்ந்த உரையாகக் கருதப்படுகிறது. அந்த கூட்டத்தில் தான் கிங் ‘எனக்குள் ஒரு கனவு ‘ என்ற புகழ் வாய்ந்த வரிகளைக் கூறி அவரது கனவையும் விவரித்தார். ‘ எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரும் சமம் என்பதை இந்த நாடு உணர்ந்து செயல்படும். எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் ஜார்ஜியாவின் சிகப்பு மலைத்தொடரில் அடிமைகளின் குழந்தைகளும் அடிமைகளின் எஜமானர்களது குழந்தைகளும் சகோதரத்துவத்துடன் ஒரே மேஜையில் அமர்ந்து கொள்வார்கள். எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் அநீதியாலும் அடக்குமுறையாலும் தகிக்கும் பாலைவனமான மிஸ்ஸிஸிப்பி மாகாணம் விடுதலையும் நீதிநெறியும் தழைக்கும் பாலைவனச் சோலையாக மாறிவிடும். எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் எனது நான்கு குழந்தைகளும் மறுமலர்ச்சியடைந்த இந்த நாட்டில் வாழ்வார்கள். மறுமலர்ச்சியடைந்த இந்த நாட்டில் அவர்கள் தோல் நிறத்தை வைத்து எடைப் போடப்படாமல் அவர்களது நன்னடத்தையின் உள்ளடக்கத்தை வைத்து எடைப்போடப்படுவார்கள் ‘, என்று பேசினார். அந்த பேச்சின் முத்தாய்ப்பாக கிங், ‘விடுதலை மலரும். விடுதலையின் ரீங்காரம் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் எதிரொலிக்கும். அப்போது கடவுளின் குழந்தைகளான வெள்ளையர்களும், கறுப்பினத்தவரும், யூதர்களும், யூதரல்லாதவர்களும், கத்தோலிக்கர்களும், பிராடஸ்டண்ட்டுகளும் ஒன்றாகக் கைகோர்த்து நீக்ரோ இனத்தவரின் பழைய ஆன்மீகப் பாடலான ‘கடைசியில் விடுதலை, கடைசியில் விடுதலை கடவுளுக்கு நன்றி சொல்வோம் கடைசியில் விடுதலை ‘ என்று ஆடிப்பாடும் நாள் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் ‘ என்று பேசினார்.

வாஷிங்டன் ஊர்வலத்தை வன்முறையில்லாமல் வெற்றிகரமாக நடத்திய பிறகு மார்ட்டின் லூதர் கிங்கையும் கறுப்பின மக்களையும் கென்னடியின் மறைவு பேரிடியாகத் தாக்கியது. அமெரிக்கக் காங்கிரஸ் முன் வைத்த மசோதா பற்றிய பரிசீலனை நடந்து கொண்டிருக்கையிலேயே 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடிக்குப் பிறகு அதிபராகப் பதவியேற்றவர் லிண்டன் ஜான்ஸன். பதவிக்கு வருமுன் லிண்டன் ஜான்ஸன் அமெரிக்க மக்களின் சம உரிமைக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று சொல்லமுடியாது. ஆனால் பதவியேற்றவுடன் துடிப்புடன் செயல்பட்டு கென்னடி கொண்டு வந்த மசோதாவைச் சட்டமாக்க உதவினார். 1964 Civil Rights Act என்ற அந்தச் சட்டம் இயற்றப்பட்டதில் காங்கிரஸிடம் அவருக்கிருந்த செல்வாக்கு ஒரு முக்கியக் காரணம். அந்தச் சட்டத்தின் கீழ் இனத்தின் அடிப்படையில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இனத்துவேஷம், தோல் நிறத்தின் அடிப்படையில் பிரித்து ஒதுக்குதல், கறுப்பின மக்களுக்கு சமமான வேலை வாய்ப்பு வழங்காமல் இருப்பது போன்ற யாவையும் சட்டத்திற்குப் புறம்பானவை. மார்ட்டின் லூதர் கிங்குக்கும் கறுப்பின மக்களுக்கும் இது ஒரு மாபெறும் வெற்றி.

சம உரிமையைப் போராடிப் பெற்ற பிறகு, கிங் அமெரிக்காவின் ஒட்டு மொத்த கறுப்பினத்தவர்களுக்கும் ஓட்டுரிமை பெற போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்தார். 1965ம் ஆண்டு மாண்ட்காமெரியில் ஊர்வலமாகச் சென்ற கிங்கின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அதிபர் லிண்டன் ஜான்ஸன் அமெரிக்கக் காங்கிரஸிடம் தனது ‘வாக்குரிமைச் சட்டத்தை ‘ அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். தென் அமெரிக்க அரசியல் வாதிகளின் எதிர்ப்புகளைச் சமாளித்து வாக்குரிமைச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஹெளஸ் ஆஃப் ரெப்ரசெண்டேட்டிவில் 333 ஓட்டுகளும் (48 எதிர்ப்பு ஓட்டுகள்) செனெட்டில் 77 ஓட்டுகளும் (19 எதிர்ப்பு ஓட்டுகள்) அளித்து சட்டத்தை நிறைவேற்றினர். அந்தச் சட்டத்தின் படி மாநில அரசுகள் யாருக்கு ஓட்டுரிமை வழங்கலாம் என்று நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ரத்து செய்தது. மேலும் மாநில அரசு யாருக்கு ஓட்டுரிமை வழங்க மறுக்கின்றதோ அவருக்கு தேசிய அரசு அதே உரிமையை வழங்கலாம் என்று தேசிய அரசு கூடுதல் அதிகாரம் பெறவும் வழி செய்தது. இந்த இரு முக்கியமான சட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட பிறகு கிங் வறுமையால் வாடுவோரின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். இனமும் பொருளாதார நிலையும் ஒன்றுகொன்று பின்னிக் கிடப்பதை கிங் உணர்ந்து கொண்டார். அதனால் செல்வத்தை பகிர்ந்து கொள்வதைப்பற்றி பேச ஆரம்பித்தார். கிங் தனது ‘நாம் ஏன் காத்திருக்க முடியாது ‘ (Why We Can ‘t Wait) என்ற புத்தகத்தை 1964ம் ஆண்டும் ‘இங்கிருந்து நாம் எங்கு செல்கிறோம்- குழப்பத்தை நோக்கியா அல்லது சமுதாயத்தை நோக்கியா ‘ (Where Do We Go from Here-Chaos or Community) என்ற புத்தகத்தை 1967ம் ஆண்டும் எழுதினார். அந்த புத்தகங்களில் அமெரிக்கக் கறுப்பினத்தவரும் ஏழையாக இருக்கும் அமெரிக்க வெள்ளையினத்தவரும் சேர்ந்து போராடினால் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவும் சமுதாயத்தைச் சீர்திருத்தவும் முடியும் என்று எழுதினார்.

முன்பே கூறியது போல் 1966ம் ஆண்டு வியட்னாம் போருக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்த கிங் அதிபர் ஜான்ஸனுக்கும் FBIயின் தலைவர் எட்கர் ஹூவருக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துக் கொண்டிருந்தார். ஹூவரின் FBI ஏஜெண்ட்டுகள் கிங்கை அரசியலை விட்டு விரட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை முதல் பாகத்தில் பார்த்தோம். 1967-68ம் ஆண்டுகளில் மார்ட்டின் லூதர் கிங் தொழிற்சங்கப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். 1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுகாதாரத் துறை ஊழியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக டென்னஸி மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் நகருக்குச் சென்ற கிங் ஏப்ரல் 3ம் தேதி போராட்டத் தொழிலாளர்களுக்காக ஒரு உரை நிகழ்த்தினார். ‘நான் மலையுச்சிக்குச் சென்று வந்தேன் ‘ (I have been to the Mountaintop) என்ற அந்த உரையும் அமெரிக்க வரலாற்றில் ஒரு மறக்க முடியாத உரையாகத் திகழ்ந்தது. உரையின் சாராம்சம் தவிர அவ்வுரை மறக்க முடியாததாக ஆகிவிட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு – கிங் தன் வாழ்வில் நிகழ்த்திய கடைசி உரை அது. அவர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம் – ‘நான் மெம்பிஸுக்கு வந்தவுடன் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறினார்கள். மன விகாரமடைந்த சில வெள்ளைச் சகோதரர்களால் எனக்கு ஆபத்து ஏர்படக்கூடும் என்று கூறினார்கள். என்னவாகுமோ என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்குக் கவலையும் கிடையாது. ஏனென்றால் நான் மலையுச்சிக்குச் சென்று திரும்பி விட்டேன். மலைக்கு அந்தப்பக்கம் நாம் செல்ல வேண்டிய இடத்தைப் பார்த்து விட்டேன். அந்த இடத்திற்கு உங்களுடன் நான் செல்ல முடியாமல் போகலாம். ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நிச்சயம் செல்வோம். எல்லோரையும் போல நானும் நீண்ட நாட்கள் வாழவே ஆசைப் படுகிறேன். ஆனால் அப்படி நடக்கவில்லையென்றாலும் நான் அதற்காகக் கவலைப் படவில்லை. யாருக்காகவும் எதற்காகவும் நான் பயப்படவில்லை. ஜகஜ்ஜோதியாகக் கடவுள் வருவதை என் கண்கள் பார்த்துவிட்டன. கடவுளின் அருளால் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைவோம் ‘ என்று பேசினார். அதற்கு மறு தினம் அவர் தங்கியிருந்த மோட்டேலின் பால்கனியில் நின்று கொண்டிருந்தவரை துப்பாக்கித் தோட்டா ஒன்று மாய்த்தது. சுமார் ஒரு வருடம் கழித்து 1969ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு 99 வருட சிறை வாச தண்டனைப் பெற்றான்.

அமெரிக்க சரித்திரத்திலேயே அதிபர் வாஷிங்டன் மற்றும் யேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த ஒரு தனி நபரின் நினைவாகவும் பொது விடுமுறை அறிவித்ததில்லை. 1986ம் ஆண்டு மூன்றாவதாக மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

kalelno5@yahoo.com

Series Navigation