தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2

This entry is part of 23 in the series 20050609_Issue

கே.ஜே.ரமெஷ்


சென்ற வாரத் தொடர்ச்சி….

லிண்டா பிரவுன் வழக்கில் கறுப்பர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதைப் பார்த்தோம். ஆனால் 1951ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த சட்டப்பூர்வமான போராட்டம் 1954ம் ஆண்டு மே மாதம் தான் முடிவடைந்தது. இடைப்பட்ட காலத்தில் நடந்த தார்ணாக்களும் போராட்டங்களும், கறுப்பர்கள் எதிர்கொண்ட தாக்குதல்களும் கணக்கற்றவை. இனி இரண்டாவதாக நடந்த சம்பவத்தைப் பார்ப்போம். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் தென் பகுதியில் கறுப்பர்களை பிரித்து ஒதுக்கி வைக்கும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தான் பேரூந்துகளின் பின்புறம் அவர்களுக்கென்று சில இருக்கைகள் ஒதுக்கி வைப்பது. கறுப்பர்கள் வெள்ளயர்களுடன் ஒன்றாக இருக்கவோ வெள்ளையர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் உட்காரவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. தேவைப்பட்டால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த சில இருக்கைகளையும் வெள்ளையர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை சட்டமும் இருந்தது. அலபாமா மாகாணத்தில் இருந்த மாண்ட்காமெரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

‘ரோசா பார்க்ஸ் ‘ ஒரு நடுத்தர வயதுடைய கறுப்பின மாது. ஒரு தையற் கடையில் உதவியாளராகப் பணி புரிந்துகொண்டிருந்தார். 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி ரோசா பார்க்ஸ் மிகவும் களைத்துப் போனவராய் வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பேரூந்து ஒன்றில் வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். அமர்ந்தது மட்டுமல்லாமல் களைப்பு மிகுதியால் தன் இருக்கையை ஒரு வெள்ளையனுக்கு விட்டுக் கொடுக்கவும் மறுத்து விட்டார். உண்மையில் வேலை முடிந்து திரும்பும் எவருக்கும் ஏற்படும் களைப்பு தான் அது. ஆனால் ரோசா பார்க்ஸ் அவ்வாறு நடந்து கொண்டதற்கு உண்மையான காரணம் கறுப்பர்களை மிருகத்தை விட கேவலமாக நடத்துவதைப் பார்த்து ஏற்பட்ட கோபம் தான். அவர் இடத்தைவிட்டு நகர மறுத்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. அதற்கு முன்பும் பல முறை கறுப்பர்கள் அதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இம்முறை கைது செய்யப்பட்டது மாண்ட்காமெரியில் உள்ள கறுப்பின மக்கள் எல்லோராலும் அறியப்பட்ட பிரபலமான ஒரு பெண். ரோசா ஒரு முறை தேசிய கறுப்பின மக்களுக்கான முன்னேற்ற கழகத்தின் (National Association for the Advancement of Colored People) தலைவருக்கு உதவியாளராக இருந்தவர். அவர் கைது செய்யப்பட்ட நேரம் மார்ட்டின் லூதர் கிங் மாண்ட்காமெரியில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த நேரம். கிங்கும் மற்ற கறுப்பினத் தலைவர்களும் ரோசாவின் கைதிற்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் போராட்டம் நடத்தியே தீருவது என்ற முடிவுக்கு வந்தனர். ரோசாவின் கைதுக்கெதிராக என்பதை விட பிரித்து ஒதுக்கி (Segregation) வைக்கும் நடைமுறைக்கெதிரான போராட்டமே அது. அந்த முடிவைத் தொடர்ந்து தேவாலயத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு கறுப்பர்கள் திரளாக வந்திருந்தனர். டாக்டர் கிங் தனது உரையில் நடைமுறை சட்டத்திற்கு எதிராக புறக்கணிப்பு என்ற ஆயுதத்தையே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பேரூந்துகளைப் பயன்படுத்தாமல் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று விளக்கினார். டிசம்பர் 5ம் தேதி புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது. அன்று மாண்ட்காமெரியில் உள்ள கறுப்பர்களில் மிகச்சிலரே பேரூந்துகளைப் பயன்படுத்தினர். மற்றவர்கள் தங்கள் வேலைக்கு நடந்தோ கார் வைத்திருந்தவர்களுடன் தொற்றிக் கொண்டோ தான் வேலை செய்யுமிடத்திற்கு சென்றனர். ஆனால் கார் வைத்திருந்த கறுப்பர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அதனால் சிலர் கழுதைகளின் மேலும் சவாரி செய்ய வேண்டியதாயிற்று. ஆனாலும் கறுப்பின மக்கள் அசெளகரியங்களைப் பொருட்படுத்தாமல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் தலைவர்கள் ஒன்று கூடி ‘மாண்ட்காமெரி மேம்பாட்டுக் கழகம் ‘ (Montgomery Improvement Association) என்ற புதிய அமைப்பு ஒன்றை துவங்கி அதற்கு மார்ட்டின் லூதர் கிங்கைத் தலைவராக நியமித்தனர்.

புறக்கணிப்பு வெற்றிகரமாக நடைபெறவும், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையவாரம்பித்தது. அநேகமாக உடல் உழைப்புத் தேவைப்படும் எல்லாத் தொழிற்சாலைகளும் உழைப்புக்குக் கறுப்பர்களையே நம்பிக் கொண்டிருந்தன. பேரூந்துகளைப் புறக்கணித்ததால் கறுப்பர்களால் நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை. இதனால் கொதிப்படைந்த வெள்ளையர்கள் கறுப்பர்களைத் துன்புறுத்துவது, அவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது என்று வன்முறைகளில் இறங்கினர். கார் வைத்திருக்கும் சிலரை கைது செய்து போராட்டத்தை முறியடிக்க முயன்றனர். இலவசமாக மற்றவர்களின் வண்டிகளில் தொற்றிக்கொள்வதற்காக தெருவோரங்களில் காத்திருப்போரை சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்தார்கள். உச்சக்கட்ட வன்முறையாக டாக்டர் கிங்கின் வீட்டில் வெடி குண்டு வைத்துத் தாக்கினார்கள். கிங், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை காயமின்றி தப்பித்தனர். வெடிகுண்டு சம்பவத்தைக் கேள்விப்பட்ட கறுப்பின மக்கள் வெகுண்டெழுந்தனர். எதிர்தாக்குதல் நடத்தும் வெறியுடன் குழுமிய கூட்டத்தை கிங் ‘வெறுப்புகளை அன்பால் எதிர்கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும் ‘ என்று சாந்தப்படுத்தி தத்தம் வீடுகளுக்கு அமைதியாகத் திரும்புமாறு அறிவுறுத்தினார். புறக்கணிப்புப் போராட்டம் ஒரு வருடமாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் புறக்கணிப்புப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் நாள் உச்ச நீதி மன்றம் அலபாமா மாகாணத்தில் கறுப்பர்களைப் பிரித்து ஒதுக்கி வைக்கும் நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் மாண்ட்காமெரி நகர மேயருக்கும் பேரூந்து கம்பெனி முதலாளிகளுக்கும் தடை உத்தரவைப் பிறப்பித்தது. அதற்கு அடுத்த நாள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் க்லென் ஸ்மைலி என்ற வெள்ளைப் பாதிரியாரும் பொது மக்களுக்கான பேரூந்தில் முன்னால் இருக்கும் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து கொண்டு பயணித்தனர். 381 நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்த புறக்கணிப்புப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது. இது கறுப்பின மக்கள் தீண்டாமைக்கெதிராக அடைந்த இரண்டாவது மாபெறும் வெற்றி.

மாண்ட்காமெரியில் கிடைத்த வெற்றியால் உந்தப்பட்டு ‘ரால்ப் டேவிட் அபெர்நாதி ‘ மற்றும் ‘பாயர்ட் ரஸ்டின் ‘ ஆகியோருடன் ‘தென்னக கிறிஸ்துவ தலைமைத்துவ அமைப்பு ‘ – Southern Christian Leadership Conference (SCLC) என்ற ஒரு அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பு சம உரிமைப் போராட்டத்தை வன்முறையற்ற அமைதியான வழியில் நடத்த உறுதி பூண்டது. பிலிஃப் ராண்டால்ப், பாயர்ட் ரஸ்டின் ஆகியோர் தீண்டாமைக்கெதிராக அமைதிப் போராட்டத்தை ஏற்கனவே வெற்றிகரமாக நடத்தியிருப்பினும் SCLCயின் முக்கியத்துவம் அதற்கு கறுப்பினர் தேவாலயம் போன்ற அமெரிக்கத் தென் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த அமைப்புகளின் ஆதரவு கிடைத்தது தான். அப்போதைய SCLCயின் ஒரே குறிக்கோள் கறுப்பின மக்களின் வாக்காளர் பதிவுக்குப் போராடுவது. வாக்காளர் பதிவுக்கான இயக்கத்தை வழிநடத்திச் செல்ல பாயர்ட் ரஸ்டின் தான் தகுதியானவர் என்று SCLC உணர்ந்திருந்தாலும், அவரது ஓரினச்சேர்க்கைப் பழக்கத்தால் விளைந்த அவப்பெயரைக் கருத்தில் கொண்டு எல்லா பேக்கரை (Ella Baker) தலைமை தாங்குமாறு அழைத்தார்கள். பேக்கர் கடினமாக உழைத்தாலும் லிங்கன் தினத்தன்று தொடங்கிய வாக்காளர் பதிவு இயக்கம் வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மக்களின் கவனத்தை ஈர்க்க அந்த இயக்கம் தவறிவிட்டது.

காந்திஜியால் கவரப்பட்ட கிங் ஆரம்பம் முதலே கத்தியின்றி இரத்தமின்றி அமைதி வழி போராட்டத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். காந்திஜியின் போராட்ட வழிமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைந்த மார்ட்டின் லூதர் கிங் 1959ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குப் பயணமானார். அந்தப் பயணத்தின் முக்கிய குறிக்கோள் காந்திஜியின் அறவழிப் போராட்டங்கள், சத்தியாகிரகங்கள், ஒத்துழையாமை இயக்கம், கீழ்படியாமை ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வதே. அதே சமயம் வாக்காளர் பதிவு தவிர வேறெந்த குறிக்கோளுமற்ற நிலையில், நிதி நெருக்கடியாலும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் SCLC கறுப்பின மக்களின் மீதான அதன் தாக்கத்தை மெதுவாக இழந்து கொண்டிருந்தது. இதனை உணர்ந்த கிங் 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் பாப்டிஸ்ட் தேவாலயத்திலிருந்து தனது பாதிரியார் பதவியைத் துறந்து SCLCயின் முழுநேர பொறுப்பைச் சுமக்கும் நோக்கத்துடன் அட்லாண்டா நகருக்கே வந்து விட்டார்.

இதற்கிடையில் மாண்ட்காமெரியின் வெற்றிக்குப் பிறகு கிங் 1958ம் ஆண்டு ‘Stride Toward Freedom ‘ என்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தில் மாண்ட்காமெரியில் நடந்தவற்றை விவரமாக எழுதிய கிங் அஹிம்சா வழி போராட்டம் குறித்தும் நேரடி நடவடிக்கை குறித்தும் அவரது பார்வையில் விளக்கியுள்ளார். அந்தப் புத்தகம் பெரும் வரவேற்பு பெற்று சம உரிமைப் போராட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இந்த புத்தகத்தை படித்து அதனால் ஈர்க்கப்பட்ட சில கறுப்பின மாணவர்கள் தாங்களாகவே நேரடி நடவடிக்கையை எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர். வடக்கு கரோலினாவில் உள்ள க்ரீன்ஸ்பொரொ என்ற இடத்தில் ஒரு உணவு விடுதி இருந்தது. அங்கு வெள்ளையர்களுக்கு மட்டுமே உணவு விற்பது என்ற கொள்கை பல காலமாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த விடுதியில் கறுப்பின மாணவர்கள் சென்று அமர்ந்து கொள்ளத் தொடங்கினர். அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லையாயினும் அதற்காக அவர்கள் கவலைப் படவில்லை. ஒவ்வொரு நாளும் அங்கு சென்று அமரத் தொடங்கினார்கள். மெதுவாக அவர்களுக்கு ஆதரவாக மற்ற கறுப்பின மாணவர்களும் அவர்களுடன் சென்று அந்த விடுதியில் இருந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். சிறிது நாட்களுக்குப் பிறகு அங்கு வெள்ளையர்கள் உட்கார ஒரு இடம் கூட கிடைக்கமுடியாதவாறு எல்லா இருக்கைகளையும் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன. கோபம் தலைக்கேறிய வெள்ளையர் கும்பல் அந்த மாணவர்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. மாணவர்களோ கிங் அறிவுறுத்தியபடி அவர்களைத் திருப்பித் தாக்காமல் மீண்டும் அந்த இருக்கைகளில் சென்று உட்கார்ந்து கொண்டனர். இந்த புதிய போராட்ட முறை வெகு சீக்கிரமே கறுப்பர்கள் மத்தியில் மிகுந்த தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அதன் விளைவாக அமெரிக்காவின் தென் பகுதி முழுவதும் கறுப்பர்கள் இந்த முறையில் போராடத் துவங்கினார்கள். அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே அந்த உணவு விடுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரித்து ஒதுக்கும் கொடூரம் மறையத் தொடங்கியது. இந்த அஹிம்சா வழிப் போராட்டத்தைப் பயன்படுத்தியே பொதுப்பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அரங்குகள், தேவாலயங்கள் நூலகங்கள், கடற்கரை என்று எல்லா இடங்களிலும் பிரித்து ஒதுக்கும் நடைமுறையை மாற்றி விட்டார்கள். வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் இந்த நூதன முறை போராட்டத்தால் மற்ற இடங்களில் வெற்றியடைந்தாலும் 1963ம் ஆண்டு அலபாமாவில் உள்ள பிர்மிங்காம் நகரில் நடத்திய போராட்டம் முழு அளவில் வெற்றி பெறவில்லை. போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும் பதின்ம வயதினர். காவல்துறை போராட்ட வீரர்களின் மீது நாய்களை ஏவிவிட்டும் தீயணைக்கும் தண்ணீர் குழாய்களைக் கொண்டு அவர்களின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டத்தை முறியடித்தனர். மார்ட்டின் லூதர் கிங் கைது செய்யப்பட்டு பிர்மிங்காமில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து மார்ட்டின் எழுதிய கடிதத்தில் கறுப்பின மக்களை நீதிக்குப் புறம்பான சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அறைகூவல் விடுத்தார். ‘பிர்மிங்காம் சிறையிலிருந்து கடிதம் ‘ என்ற அந்தக் கடிதத்தில் தான் மிகவும் புகழ் வாய்ந்த, மேற்கோள் காட்டக்கூடிய சொற்றொடர்களைக் கையாண்டார். அவற்றுள் சில – ‘ஆழ்ந்த அன்பு இல்லாதவரை ஆழ்ந்த ஏமாற்றங்கள் இருப்பதில்லை ‘. ‘இந்த தலைமுறையில் நாம் கொடியவர்களின் வெறுப்பு மிக்க பேச்சுக்களையும் செயல்களையும் மட்டுமின்றி நல்லவர்களின் வாய்பேசா மெளனத்தைக் குறித்தும் வருத்தப் படவேண்டும் ‘. பிர்மிங்காம் போராட்டத்தைத் தொடர்ந்து கலிபோர்னியா முதல் நியூயார்க் வரை பத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இனி ஜான் எஃப் கென்னடியின் ஆதரவும் அவரது மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சி பற்றியும் கிங்கின் ஒட்டு மொத்த வெற்றி மற்றும் அவரது துக்ககரமான மறைவு குறித்தும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

தொடரும்….

கே.ஜே.ரமெஷ்

kalelno5@yahoo.com

Series Navigation