தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2

This entry is part of 25 in the series 20050429_Issue

கே ஜே ரமேஷ்


ஜோர்டானிடம் தோல்வியுற்ற பின்னர் மேலும் மூர்க்கமாகத் தீவிரவாதத்தில் ஈடுபட்ட PLO 1972ம் ஆண்டு மியூனிக்கில் (Munich) நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது 11 இஸ்ரேலிய தடகள விளையாட்டு வீரர்களை கொன்று குவித்தனர். PLOவின் இந்த வெறிச்செயலால் உலகத்தின் கண்டனத்திற்கு ஆளானாலும் அவர்கள் பார்வையைத் தன் பக்கம் திருப்பி பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலக மக்களிடம் கொண்டு செல்லவும் முடிந்தது. பின்னர் சூடான் நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் க்லியோ நோயெல்லையும் மற்றுமொரு அதிகாரியான ஜார்ஜ் மூரையும் கொலை செய்த PLO போராளிகளைச் சூடான் அரசு கைது செய்து அராஃபாட் நேரடியாக அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது. இருந்தாலும் அமெரிக்க அரசு எந்த காரணங்களையும் வெளியிடாமல் அந்த விஷயத்தை முற்றிலுமாக மறைத்து அதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளியும் விடுதலை செய்தது.

1973ம் ஆண்டு அக்டோபர் மாதம் எகிப்தும் சிரியாவும் 1967ம் ஆண்டு தாங்கள் பட்ட அவமானத்திற்குப் பழி வாங்கும் திட்டத்தோடு தெற்கே சூயஸ் கால்வாயிலும் வடக்கே கோலன் ஹைட்ஸிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. அந்தப் போரிலும் இஸ்ரேலே வெற்றி பெறவே, PLO தங்கள் போராட்டத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று. பாலஸ்தீனிய விடுதலைக்கு ஆயுதமேந்திப் போராடுவது ஒன்றே வழி என்ற நிலையிலிருந்து ஆயுதப்போராட்டத்துடன் அரசியல் ராஜதந்திரத்தையும் கடைப்பிடிப்பதென்று முடிவு செய்தது. அந்த முடிவுக்குப்பிறகு அராஃபாட் தனது ராஜதந்திரத்தால் PLOவை மிகத்திறமையாகக் கையாண்டு பண்பற்ற காட்டுமிராண்டித்தனமான அமைப்பு என்ற மேற்கத்திய மக்களின் கருத்தை மாற்றி PLO நியாயமாக தனது உரிமைக்காகப் போராடும் ஒரு முறையான அமைப்பு என்று நினைக்க வைத்தார். அதனால் கிடைத்த அங்கீகாரத்தைப் பயன்படுத்தி 1974ம் ஆண்டு ஐ.நா. சபையில் தனது பக்க நியாயங்களை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பைப் பெற்றார். மேலும் அராபிய நாடுகள் யாவும் பாலஸ்தீன மக்களுக்கு ஜோர்டான் பிரதிநிதியாக முயல்வதைத் தடுத்து PLO அமைப்பு மட்டுமே பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியென்று ராபாத் மாநாட்டில் அறிவித்தன. இதனாலும் PLO ஒரு அரசியல் இயக்கமாகத் தன்னை உருமாற்றிக் கொள்ள முடிந்தது.

அராஃபாட் ஒரு பக்கம் உலக நாடுகளிடம் தனது ராஜதந்திரத்தைப் பிரயோகித்து வந்தாலும் இன்னொரு பக்கம் PLO தெற்கு லெபனானிலிருந்து தனது தீவிரவாதத்தை இஸ்ரேலின் மீது கட்டவிழ்த்து விட்டது. லெபனானை ஆண்ட அரசின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உள்நாட்டுப் போரைத் தூண்டியது. அந்தக் கலகத்தில் பல ஆயிரம் லெபனான் மக்கள் மடிவதற்கு அராஃபாட்டும் PLOவும் காரணமாயினர். தொடர்ந்து கொண்டிருந்த தீவிரவாதத்தைத் தாங்க முடியாமல் இஸ்ரேல் 1982ம் ஆண்டு ஜூன் மாதம் தனது தக்குதலை லெபனான் மீது தொடுத்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா போரை நிறுத்தும் நோக்கத்துடன் தலையிட்டு அராஃபாட்டையும் அவரது ஆதரவாளர்களையும் துனிஸியாவிற்கு இடம் பெயர வைத்தது.

அராஃபாட் தலைமைப் பதவியில் இருக்கும் வரை PLOவுடனான எந்த வித சமாதானப் பேச்சு வார்த்தைகளும் பயனுள்ளதாக இருக்காது என்று இஸ்ரேல் நம்பியது. மேலும் PLOவில் சில மிதவாதத் தலைவர்கள் உருவாகக்கூடும், அப்போது அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளமுடியும் என்று தீவிரமாக நம்பியது. ஆனால் மிதவாதத் தலைவர்கள் எவரையும் தலையெடுக்க விடாமல் PLO பார்த்துக் கொண்டது. அப்படியே ஒன்றிரண்டு தலைவர்கள் இஸ்ரேலுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும் அவர்களை அராஃபாட்டின் ஆதரவாளர்கள் கொன்று விடுவார்கள் அன்ற அச்சமும் பரவியிருந்தது. இதனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தவிர்த்து மற்ற உலக நாடுகள் பாலஸ்தீனிய மக்களின் ஏகோபித்தப் பிரதிநிதி அராஃபாட் மட்டுமே என்ற உண்மையை ஒப்புக்கொண்டன. ஐரோப்பியர்கள் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலை அராஃபாட்டுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அராஃபாட்டோ இஸ்ரேலை ஒழிக்கும் தனது கொள்கையை மாற்றிக் கோள்ளவோ அதை அடைவதற்காக PLO மேற்கொண்டிருக்கும் தீவிரவாதத்தைக் கைவிடுவதாகவோ எந்த வாக்குறுதியும் தருவதற்குத் தயாராக இல்லை. இதனால் இஸ்ரேலுக்கும் PLOவுக்கும் நடுவே எந்த சமரச முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

1980களில் அராஃபாட் பல உலக நாடுகளுக்கும் சென்று விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தேடிக்கொண்டிருந்ததன் பயனாக இராக்கின் ஆதரவோடு PLOவை புத்துணர்ச்சியுடன் மீண்டும் கட்டமைத்தார். இதனால் அமைப்புக்குள்ளே தனக்கு எதிராகக் கிளம்பிய எழுச்சியை வெற்றிகரமாக முறியடிக்கவும் அவரால் முடிந்தது. அந்த சமயம் அமெரிக்க அரசின் தொடர்ந்த வற்புறுத்தலினால் தனது நிலையை மாற்றிக் கொள்ளச் சம்மதித்து 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 242வது தீர்மானத்தை ஒப்புக்கொண்டார். அதன் படி இஸ்ரேலை வருங்காலத்தில் அங்கீகரிப்பதாகவும் எல்லாவிதத் தீவிரவாதத்தையும் கைவிடுவதாகவும் உறுதியளித்தார். அதன்படி PLO இஸ்ரேல், வெஸ்ட் பாங்க் மற்றும் காஸா உட்பட்ட பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்னவோ வேறாகிவிட்டது. 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி பாலஸ்தீன தேசிய மன்றம் பிரிட்டிஷ் 1916ல் உருவாக்கிய (இஸ்ரேலை உள்ளடக்கிய) பாலஸ்தீன நாட்டை பிரகடனப்படுத்தி அதற்கு அராஃபாட்டை அதிபராகவும் தேர்ந்தெடுத்துவிட்டது. சமாதான வழிமுறைக்கு அமெரிக்கா அளித்த இன்னொரு வாய்ப்பையும் இழந்து மீண்டும் டெல் அவிவ் பகுதியில் PLO தனது தீவிரவாதத்தைத் தொடர்ந்தது. இதனால் வெறுப்புற்ற அமெரிக்கா PLOவுடனான நேரடிப் பேச்சு வார்த்தைகளைக் கைவிட்டது.

அராபிய நாடுகள் இஸ்ரேலுடன் சமாதானத்திற்கான நட்புக்கரங்களை நீட்டாத வரை இஸ்ரேல்-பாலஸ்தீனிய சமாதான உடன்படிக்கை நடைபெற சாத்தியங்களே இல்லை என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது. இதன் விளைவாக அமெரிக்கா தனது உள்துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் பேக்கரை 1991ம் ஆண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பியது. அவரது முயற்சியின் பயனாக மேட்ரிட்டில் நடந்த மாநாட்டில் PLO, இஸ்ரேல் மற்றும் அராபிய நாடுகள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் அங்கும் ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் தேர்தல்கள் நடந்து புதிய தலைவர்கள் பதவிக்கு வந்தனர். இஸ்ரேலின் புதிய பிரதமரான யிட்ஸாக் ராபின் PLO தரப்புடன் ஆஸ்லோவில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக சமரச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அதன்படி முதல் கட்டமாக பாலஸ்தீனியர்களுக்கு காஸா, ஜெரிக்கோ ஆகிய பகுதிகளில் சுயாட்சிப் புரியவும் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் சுயாட்சியை விரிவு படுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பினரும் மற்றவரை அங்கீகரிப்பதாக எழுதப்பட்ட கடிதங்களை அராஃபாட்டும் யிட்ஸாக் ராபினும் மாற்றிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி வாஷிங்டன் D.C.யில் இரு நாட்டிற்குமிடையே ‘Declaration of Principles ‘ கையெழுத்தானது. அதற்கு மறு வருடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு அராஃபாட், ஷிமோன் பெரெஸ், யிட்ஸாக் ராபின் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது.

1994ம் ஆண்டு அராஃபாட் தனது தலைமையகத்தை வெஸ்ட் பாங்க், காஸாவிற்கு மாற்றினார். ஆஸ்லோ ஒப்பந்தப்படி PA (Palestininan Authority) அரசு செயல்படத் தொடங்கியது. பின்னர் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று PAவை தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஆஸ்லோ ஷரத்துப் படி அந்தத் தேர்தல் முடிவுகள் 1999ம் ஆண்டு வரைக்கும் தான் செல்லுபடியாகும். ஆனால் அராஃபாட் அதற்குப் பிறகு தேர்தலை நடத்தவேயில்லை. மேலும் ஆஸ்லோ ஒப்பந்தப்படி தீவிரவாதத்தை ஒழிக்கும் எவ்வித நடவடிக்கையும் அராஃபாட் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக செய்திவழிச் சாதனங்கள் மூலமாகவும், பள்ளி பாடப்புத்தகங்கள் மூலமாகவும் இஸ்ரேலுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டதாக ஆதாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியாக இஸ்ரேலிய பிரதமரான எஹூட் பாராக்கிற்கும் அராஃபாட்டிற்கும் இடையே கேம்ப் டேவிட் என்னுமிடத்தில் ஒரு ஒரு உச்சமாநாட்டை ஏற்பாடு செய்தார். அதில் பாராக் கிழக்கு ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்டு காஸா மற்றும் வெஸ்ட் பாங்க்கில் 92 விழுக்காட்டுப் பகுதிகளை கொண்ட பாலஸ்தீனிய நாட்டை அராஃபாட்டிற்கு அளிக்க முன்வந்தார். ஆனால் அராஃபாட் இந்த ஏற்பாட்டை ஏற்க மறுத்து விட்டார். இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குப்பின் உடனடியாக PA போர்ப்பிரசாரங்களில் ஈடுபட்டும் கலகங்களைத் தூண்டிவிட்டும் நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது. அராஃபாட் ஆதரவுடன் இயங்கிய அல் அக்சா இண்டிஃபாடா என்ற அமைப்பு அடுத்த நான்கு ஆண்டுகளில் நடத்திய தீவிரவாத கோர தாண்டவங்களினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தும் வழக்கமும் அத்தகைய தற்கொலைப் படையின் உயிர்த்தியாகத்தைப் பெரிய அளவில் போற்றுவதும் பெருகி விட்டதாகக் கூறப்பட்டது. இத்தகையச் செயல்களால் இஸ்ரேலை முழுவதுமாக அழிக்கும் திட்டத்தை அராஃபாட்டும் PAவும் மாற்றிக்கொள்ளவேயில்லை என்பது புலனாயிற்று.

அல் அக்சாவின் உயிர்த்தியாகப் படையை முன்னிருத்தி அராஃபாட் 2000ம் ஆண்டு முதல் 2004 வரை பல குரூரமான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பல செய்தி நிறுவனங்களும் பத்திரிக்கைகளும் அல் அக்ஸாவுக்கும் அராஃபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததில்லை என்று கூறினாலும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அவர்களிடையே இயக்கம் தொடங்கி நிதி வரை எல்லாவற்றிலுமே நெருங்கிய தொடர்பு இருந்ததாக நிரூபிக்கின்றன. அந்த ஆதாரங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

1) 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் BBC துப்புத்துலக்கியதில் ஒவ்வொரு மாதமும் 50000 டாலர்கள் வரை அல் அக்சா குழுவினருக்கு ஃபாட்டா அமைப்பு கொடுத்து வந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது அராஃபாட்டின் அனுமதி இல்லாமல் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

2) 2002ம் ஆண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து அல் அக்சாவுக்கு முறையாக ஒழுங்குபடுத்தபட்டு நிறுவிய ஃபாட்டாவின் நிறுவனங்களிலிருந்து நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்திருப்பது நிரூபிக்கப்பட்டது.

3) அல் அக்சா ஆயுதம் வாங்கியதற்கான ரசீதில் பணப்பட்டுவாடாவை அனுமதித்து அராஃபாட் கையொப்பமிட்ட ஆவணம்

4) அல் அக்சாவின் தலைவர் USA Todayக்கான பேட்டியில் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி கூறியிருப்பது. அதில் அவர், ‘ உண்மையில் நாங்கள் ஃபாட்டாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஃபாட்டாவின் பெயரால் இயங்குவதில்லை. நாங்கள் ஃபாட்டாவின் ஆயுதமேந்தியப் படை. எங்களுக்கு ஃபாட்டாவிடமிருந்து தான் instructions வருகிறது. எங்களது கமாண்டர் யாஸர் அராஃபாட் தான் ‘ என்று கூறியிருந்தார்.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் அராஃபாட் ஆதரவளித்து வந்தார். இதனால் அவ்வியக்கங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் இறந்த ஏராளமான அப்பாவி இஸ்ரேல் பொதுமக்களுக்கு அராஃபாட்டே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மேலும் 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேலிய கப்பற்படையினரால் பிடிக்கப்பட்ட, காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த PAவுக்குச் சொந்தமான கப்பலில் 50 டன் எடையுள்ள ஆயுதங்களும் வெடி குண்டுகளும், நிலத்திலிருந்து நிலத்திற்கு செலுத்தும் ஏவுகணைகளும் இருந்தன.

ஜூன் 2002ல் அமெரிக்க அதிபர் புஷ் தீவிரவாதத்திற்குத் துணை போகும் அராஃபாட்டை பதவியிலிருந்து விலக்கக் கோரினார். சமாதானத்திற்கு உதவும் வகையில் தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு புதிய தலைமைத் தேவைப்படுகிறது என்ற புஷ் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரசினையை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு புதிய பாதைக்கான தனது ஆதரவையும் தெரிவித்தார். இஸ்ரேல் தனது பங்குக்கு அராஃபாட்டை அவரது ரமால்லா வளாகத்திலேயே தனிமைப்படுத்தியது. இறுதியில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஹமுட் அப்பாஸ் பாலஸ்தீனத்திற்கு பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றவுடன் சமாதனத்திற்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி மற்ற நாடுகளுடனான ராஜதந்திர உறவை மேம்படுத்தத் தொடங்கினார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டு அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு அராஃபாட் காரணமாயிருந்தார். அதனால் சமாதான முயற்சிகளும் மெதுவடைந்தது.

அராஃபாட் அவரது கடைசி காலங்களில் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் ‘parkinson ‘s disease ‘ என்ற நரம்புத் தளர்ச்சி நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தார் என்ற வதந்தியில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் வதந்திகளுக்கு உரம் சேர்க்கும் வகையில் அவரது மரணத்திற்கான சரியான காரணங்கள் வெளியிடப் படவில்லை. அவருக்கு ஓரினச்சேர்க்கைப் பழக்கம் இருந்ததென்றும் அதனால் எய்ட்ஸ் நோய் தொற்றி இறந்தார் என்ற வதந்தியும் நிலவுகின்றது. 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் உடல் நலம் மிகவும் மோசமடைந்தவுடன் இஸ்ரேல் அவரை பாரீஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதி அளித்தது. நவம்பர் மாதம் 11ம் தேதியன்று மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது. பிறகு அவரது உடல் கெய்ரோவிற்குக் கொண்டு வரப்பட்டு, பல நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் சடங்குகள் நடந்தேறின. அவரது ஆதரவாளர்கள் அவரது உடலை ஜெருசலேம் நகரில் புதைக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இஸ்ரேல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் ரமால்லாவில் அவரது தலைமையகத்திற்குப் பக்கத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டது.

அராஃபாட் ஒரு தீவிரவாதத் தலைவர் என்ற நிலையிலிருந்து ஒரு சுதந்திர நாட்டின் தலைவனாக மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் அவ்வாறான மாற்றத்திற்கு எதிராக அவரது மனத்தடையே காரணமாகி விட்டது. பாலஸ்தீனத்திற்கு ஆயுதம் கொண்டே விடுதலைப் பெற்றுவிடமுடியும் என்ற தீராத தாகம் கொண்டிருந்த அராஃபாட் தனது வழிமுறைகளை மாற்றிக் கொண்டு இஸ்ரேலுடன் சமாதானமாகச் சென்றிருந்தால் இன்று பாலஸ்தீனியர்கள் சுதந்திரக் காற்றை அனுபவித்திருப்பார்கள். மிக நீண்ட காலமாக அவர்கள் படும் துன்பங்களையும் தவிர்த்திருக்க முடியும்.

அராஃபாட்டின் தாக்கம் அவர் மேற்கொண்ட தீவிரவாதம், பயமுறுத்திப் பணியவைக்கும் குணம், பலவந்தமாகப் பணம் பறிக்கும் செயல், பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்திற்காக சேர்ந்த நிதியுதவியிலிருந்து கையாடல் செய்து தனக்கென்று சொத்து சேர்த்தல் போன்றவற்றையெல்லாம் கடந்து கொலைவெறியுடன் கூடிய, இஸ்ரேலுக்கு எதிராக புனிதப்போரைத் தொடரவைக்கும் மனநிலையுடன் கூடிய ஒரு தலைமுறையையே உருவாக்கி வைத்திருப்பதில் தெரிகிறது. அந்தக் கொடிய தாக்கம் நீங்க இன்னும் எத்தனைத் தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமோ ?

கே.ஜே.ரமேஷ்

Kalelno5@yahoo.com

Series Navigation