சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
வாஸந்தி
மனக்கதவம் தாள் திறவாய்….
வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,
தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,
ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி— ‘தமிழ் சாதி ‘–பாரதி
தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து கர்நாடகத்துத் தலைநகரமான பெங்களூருக்கு வந்ததிலிருந்து தமிழோசைக்கான ஏக்கம் என்னை வாட்டுகிறது என்றால் அது ஒரு சம்பிரதாயமான வாக்கியமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும். பெங்களூரின் மிக மோசமான சாலைகளும் போக்குவரத்து நெரிசல்களும் , அடிக்கடி எரிச்சலூட்டும் மின்சார வெட்டுகளும் என்னை சென்னை வாழ்வுக்குக்கூட ஏங்க வைக்கின்றன என்றால் சென்னைவாசிகள் அது மிகைப்படுத்தப்பட்ட ‘தமிழ் நாட்டுப் ‘ பற்றாக நினைப்பார்கள்.
ஆனால் இங்கிருக்கும் ஒரு விஷயம் என்னை அசர வைக்கிறது. கன்னட திரைப்படங்கள் மட்டுமே திரை அரங்குகளில் காட்டப்படவேண்டும் என்ற கோஷம் இங்கு எழுந்தபோது இது என்ன சின்னத்தனம் என்று மாய்ந்திருக்கிறேன்.அது கர்நாடகத்தின் வேருடன் ஒட்டாத பண்பு என்று புரிய வைக்கும் நிகழ்ச்சிகள் இங்கு நிறையக் காணக்கிடைக்கின்றன.
தமிழ் இலக்கியவாதிகள் அறிவுஜீவிகள் எல்லோரும் ஒரு நடை கர்நாடகத்துக்கு வந்து இங்கு நடக்கும் இலக்கிய கூட்டங்களைப் பாருங்கள். திறந்த வெளியில் நின்று புதிய சுகந்த காற்றை சுவாசிப்பதுபோன்ற சுகானுபவத்தை பெறுவீர்கள். மொழி இனம் ஜாதி பேதங்கள் தலைத் தூக்காத இங்கிதமான இலக்கிய சூழலைக் கற்பனையாவது செய்து பாருங்கள். கர்நாடகத்துக்குப் பெருமை சேர்த்தவர் யாராக இருந்தாலும், அவரது தாய் மொழி வேறாக இருந்தாலும், ஆங்கிலத்தில் மட்டுமே புலமைக் கொண்டவராக இருந்தாலும் கர்நாடகத்தின் மகன் அல்லது மகள் என்று கொண்டாடும் கன்னடியரின், அரசு ஸ்தாபனங்களின் இயல்பு தமிழகம் உணராத பண்பு. கன்னடத்தில் எழுதிய
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்ற தமிழர் மிகச் சிறந்த கன்னட மொழி படைப்பாளி என்று இன்றும் கர்நாடகத்தின் தலைமகனாகப் போற்றப்படுகிறார்.[மகா கவி பாரதியும் உ.வே.சுவாமிநாத ஐயரும் தமிழில் எழுதியவர்கள். அவர்கள் அசட்டுத்தனமாக அந்தணகுலத்தில்
பிறந்ததற்காக தமிழகம் அநேகமாக ஓரம் கட்டிவிட்டது இங்கு எவருக்கும் தெரியாது] ஆங்கிலப் பேராசிரியரும் கன்னட ஆங்கில இலக்கியத்தில் புலமையும் மிக்க ஸி.டி.நரஸைய்யா என்ற தெலுங்கர் அண்மையில் மறைந்தபோது கர்நாடகம் தனது ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்துவிட்டதாக அரசியல் தலைவர்களும் இலக்கிய வாதிகளும் துக்கம் தெரிவித்தார்கள். கர்நாடக ராஜ்யோத்சவ விருது அவருக்கு ஏற்கனவே அளித்து அரசு கெளரவித்திருக்கிறது. கொங்கிணி பேசும் கிரீஷ் கார்நாடும், மராட்டி பேசும் , ஆங்கிலத்தில் எழுதும் சசி தேஷ்பாண்டேயும் கர்நாடகத்தின் செல்லப் பிரஜைகள். அவர்களது புத்தக வெளியீடுகள் வாசிப்புகள் கூட்டங்களுக்குத் திரளாக வரும் எழுத்தாள வாசகக் கூட்டம் பரவசத்தை ஏற்படுத்துவது. எல்லாரும் எல்லாக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்துப் பேசுகிறார்கள். வி.எஸ். நைப்பால் சசி தேஷ்பாண்டேயின் எழுத்தை விமரிசித்தார் என்பதற்காகவே அவர்
சமீபத்தில் பெங்களூர் வந்தபோது அவரது கூட்டத்தை இலக்கியவாதிகள் மட்டுமல்ல விசுவாசமிக்க வாசகர்களும் புரக்கணித்தார்கள்! இந்த அரவணைக்கும் பண்பே அகில இந்திய அரங்கில் அவர்களது மதிப்பைக் கூட்டும் முக்கிய காரணியாகத் தோன்றுகிறது.
தில்லியில் ஞான பீடப் பரிசு ஆலோசனைக்குழுவில் இருந்த ஒரு அறிஞர் என்னிடம் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் வர்க்கத்தைப்பற்றி குறை சொன்னது நினைவுக்கு வருகிறது. ஞான பீட பரிசுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள் சரியாகப் பரிந்துரைக்கப் படுவதில்லை என்றார். பரிந்துரை என்பது மற்றவர்களால் – அறிஞர்களால் , சக எழுத்தாளர்களால் செய்யப்படவேண்டியது.தமிழுக்கு வருபவை மிகக் குறைவாக, சிரத்தை இல்லாமல் எழுதப்பட்டவையாக, சில சமயங்களில் மோசமான ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாக இருப்பதை என்னிடம் காண்பித்தார். எழுத்தாளரின் எழுத்து இந்தியிலோ ஆங்கிலத்திலோ மற்ற மொழியிலோ கிடைக்காத பட்சத்தில், குறைந்தபட்சம் பரிந்துரையாளரின் வலுவான சிபாரிசு தேர்வுசெய்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கும் என்றார். மலையாளத்திற்கும் கன்னடத்திற்கும் வந்திருந்த பரிந்துரைகள் மிக அசத்தலாக இருந்ததை நான் பார்த்தேன். சக எழுத்தாளர்கள் எழுதியிருந்த பாராட்டுகளும் அச்சில் வந்திருந்த விமரிசன பாராட்டுகளும் படைப்புகளின் மொழிபெயர்ப்புடன் மிகத் தரமாக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தன.
தமிழுக்கு ஞானபீடப் பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று கூட்டத்துக்குக் கூட்டம் நாம் அங்கலாய்ப்போம். வடக்கத்தியானின் சூழ்ச்சி என்று பொருமுவோம். இந்த ஆண்டு நமக்குக் கிடைத்தே விட்டது.
ஆனால் அதைக் கொண்டாடக்கூட நமக்குத்தெரியாது. நமக்கு அரசியல் பேசித்தான் பழக்கம். என்றோ கிடைத்திருக்கவேண்டிய விருது அது என்றாலும், விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் இல்லாவிட்டாலும் எழுத்தாளரின் அரசியல் நமக்கு முக்கியமாகிவிடும். தமிழுக்கு அவர் ஆற்றிய பணியைவிட அவரது எழுத்தில் இருக்கும் பரந்துபட்ட பார்வைக்கெல்லாம் நோக்கம் கற்பிக்கப்படும். கருப்பு அல்லது வெள்ளை என்கிற சமாச்சாரம் கூட இங்கு இல்லை. நமக்கு எல்லாமே கருப்பாகத்தெரிவதால் மற்ற வண்ணங்களுக்கு எண்ணங்களுக்கு இந்த அகண்ட பரப்பில் இடம் உண்டு என்கிற பிரக்ஞை நமக்கு இல்லை. அவர் திராவிட இயக்கத்தின் விமர்சகரா ?வட மொழியான சம்ஸ்க்ருதம் தனக்குப் பிடித்த மொழி என்கிறாரா ? அப்படியானால் அவர் தமிழ் விரோதி. அவர் பார்ப்பன வகுப்பினரை அல்லது இந்து மத ஸ்தாபனங்களை ஆதரிப்பதுபோல் எழுதியிருக்கிறாரா ? தமிழினத்துக்குச் செய்யும் துரோகமல்லவா அது! கிழிக்கவேண்டும் அவரை. முதலாவது பார்ப்பனரல்லாத ஒருவர் அப்படி எழுதக் காரணமென்ன ? உள் நோக்கம் நிச்சயமாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை..
தமிழகத்தின் சாபக்கேடு இது. மொழிப்பற்று போய் அதை ஜாதி அரசியல் ஆக்கிரமித்து வெகு காலமாகிவிட்டது. செத்த பல்லியையே திரும்பத் திரும்ப அடிக்கும் சூரத்தனம் மட்டுமே இந்த அரசியலில் வெளிப்படுவது. எல்லா சன்னல்களையும் மூடிக்கொண்டு அறைக்குள் அடிக்கும் பேடித்தனம். பாப்பாப்பட்டியிலும்
கீரிப்பட்டியிலும் ஜனநாயக விரோத சக்திகள் ஆட்டிப்படைப்பதன் பின்னணியில் இருக்கும் காரணிகள் என்ன என்று இலக்கிய விமர்சகர்களும் தமிழ் பாதுகாவலர்களும் ஏன் பகிரங்கமாக விவாதிப்பதில்லை ?
தமிழர்களின் முக்கியத்துவங்கள் இடம் மாறித்தான் போய்விட்டன.
vaasanthi@hathway.com
- கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா
- இரயில் பயணங்களில்…
- ராணி
- பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்
- இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1
- பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!
- இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?
- கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?
- ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
- அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்
- சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- கூண்டுகள்
- திருவண்டம் – 2
- அவனும் அவளும்
- கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- அசையும் நிழல்கள்
- காற்றுப் பிரிந்த போது. .
- நட்போடு வாழ்தல்
- முயல்தலில் ஒளிர்தலானது….
- அபகரிப்பு
- The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1
- கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்
- வேட்கை வேண்டும்
- அகவியின் நூல் வெளியீடும் விமர்சனமும் -அறிவிப்பு
- தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:
- ஒரு கடிதம்
- வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)
- காலம் எழுதிய கவிதை – ஒன்று
- எங்கே என் அம்புலி ?
- தோழமையுடன்….