குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?

This entry is part of 61 in the series 20040805_Issue

ஞாநி


கும்பகோணத்தில் நடந்தது வெறும் தீ விபத்தல்ல. குழந்தைகள் படுகொலை. எப்படி போபால் விஷ வாயு கசிவில் கம்பெனி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தது வெறும் விபத்தில்லையோ அது போலவே கும்பகோணம் படுகொலைக்கும் அரசின் மெத்தனமே பொறுப்பு. அது ஜெயலலிதா அரசா, கருணாநிதி அரசா என்ற அற்ப அரசியலைத் தாண்டி அசல் உண்மைகளை ஆராய்ந்தால் கடந்த 12 ஆண்டுகளில் இருவர் ஆட்சியிலும் நர்சரி பள்ளி விஷயத்தில் காட்டிய அலட்சியமே இதற்குக் காரணம். இரு கழக அரசுகளும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தீம்தரிகிட ஆசிரியர் ஞாநி, ஜுனியர் விகடன் இதழில் கும்பகோணம் கொடுமைக்கு கீற்றுக் கொட்டகை மட்டும் காரணமா ? என்ற தலைப்பில் எழுதி வரும் தொடர் கட்டுரை சில மாற்றங்களுடன் தீம்தரிகிட/ திண்ணை வாசகர்களுக்காக இங்கே தரப்படுகிறது.

ஒரு குழந்தை எந்தக் காரணத்தினால் இறந்து போனாலும், அது இயற்கையானது அல்ல. அது தன் பிறந்த சமூகத்தால் கொல்லப்பட்டதாகவே அர்த்தம். – கிரேக்க அறிஞர் டெமோஃபினஸ்

குடந்தையில் சாம்பலாகிப் போன சின்னஞ்சிறு தளிர்கள் எந்த நாளிலும் நமக்கு சொல்லப்போவதில்லை எப்படி அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று.

இளம் குருத்துகளுடன் சேர்ந்து சாம்பலான முதிர்ந்த தென்னங்கீற்றுகளுக்கு வாய்(ப்பு) இருந்தால் அவை நிச்சயம் புலம்பும். பச்சிளம் பாலகர்களைக் கொன்ற பழியை எங்கள் மீது சுமத்தி விட்டு நீங்கள் எல்லாரும் தப்பிக்கப் பார்க்கிறீர்களே என்று.

உலகப் புகழ் பெற்ற கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளியிலும், மதுரை காந்தி கிராம கல்வி வளாகத்திலும் நீண்ட காலம் கீற்றுக் கொட்டகைகளில்தான் வகுப்புகள் நடந்து வந்தன. அங்கெல்லாம் இத்தகைய நிலைமை ஒரு போதும் ஏற்படவில்லை.

சென்னை நகரின் சேரிகளில் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. குடிசைகள் சாம்பலாகியிருக்கின்றன. குடிசைக்குள் தூங்கிய ஓரிரு குழந்தைகள், காப்பாற்றச் சென்று சிக்கியவர் தவிர வேறு எவரும் பொதுவாக இந்த தீ விபத்துகளில் இறப்பதில்லை.

ஒரு துண்டு கீற்று கூட இல்லாத கான்க்ரீட் பிரும்மாண்டங்களான எல்.ஐ.சி கட்டடத்திலும், அண்மையில் ஸ்பென்சர் பிளாசா வளாகத்தின் மூன்றாவது பகுதியிலும் தீ விபத்து நடந்தது உண்டு. அவற்றிலும் உயிர்ச் சேதம் இல்லை.

ஆனால் ஸ்ரீரங்கம் திருமணக் கூடத்திலும் குடந்தை நர்சரி பள்ளியிலும் மட்டும் ஏன் இத்தனை பெரும் உயிரிழப்பு ?

காரணம் கீற்றுக் கூரை அல்ல. தப்பிச் செல்ல பல வழிகள் இல்லாமல், ஒற்றை வழி மட்டுமே இருந்த குறுகலான கோடவுன் போன்ற ஆடுகளை அடைக்கும் பட்டி போன்ற நெருக்கடியான கட்டட அமைப்புதான். தமிழ்நாடு முழுவதும் அத்தனை பள்ளிகளிலும் கீற்றுக் கூரைக்கு பதில் கான்க்ரீட் கூரையே அமைத்தாலும், மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டால், குறுகலான கட்டட அமைப்பும் ஒற்றை வழியும் மட்டுமே இருந்தால், மறுபடியும் பெரும் உயிரிழப்பு எற்படுவதை அந்த கான்க்ரீட் கூரையாலும் தடுத்து விட முடியாது என்பதே கசப்பான உண்மை.

ஆனால் கீற்றுக் கூரையை வில்லனாக்கி, இன்னும் பத்து நாட்களுக்குள் எல்லா கீற்றுக் கூரைகளும் அஸ்பெஸ்டாஸ், தகர, கான்க்ரீட் கூரைகளாக வேண்டுமென்று கெடுபிடி செய்து அரசு உத்தரவிடுவதும், அதை (ஆச்சரியமாக) எதிர்க்கட்சித் தலைவர் வரவேற்பதும் ஏன் ?

உண்மையில் மக்கள் கவனம் உண்மைகளை அறியவிடாவண்ணம் திசை திருப்பப்படுகிறது. அந்த உண்மைகள் தெரிந்தால், குடந்தையில் குழந்தைகளைக் கொன்றது கீற்றுக்கூரையல்ல, கடந்த பதினைந்தாண்டுகளக தி.மு.க அரசும், அ.தி.மு.க அரசும் காட்டிய அலட்சியமும் மெத்தனமும்தான் என்பது அம்பலமாகிவிடும்.

அந்த அலட்சியமும் மெத்தனமும் என்ன என்று அலசுவோமா ?

மழலையர் கல்விக்கு அடிப்படையானவை மூன்று – விளையாட்டின் மூலம் கல்வி, விசாலமான இட வசதி, தேர்ச்சியுடைய ஆசிரியர்கள்.

இந்த மூன்றும் 99 சதவிகித நர்சரிப் பள்ளிகளில் இல்லை. ஆனால் இவை இருக்கிறதா இல்லையா என்று கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசுடையது. அந்தப் பொறுப்பை தமிழக அரசு எப்படி நிறைவேற்றியிருக்கிறது ?

செகண்டரி கிரேட் டாச்சருக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உண்டு. உயர் நிலைப் பள்ளியானால் பி.எட் படித்திருக்க வேண்டும். அல்லது போஸ்ட் கிராஜுவேட்டாக வாவது இருக்க வேண்டும். இதெல்லாம் அரசு விதிகள்.

நர்சரி பள்ளி ஆசிரியராவதற்கு என்ன தகுதி ?

எதுவும் தேவையில்லை. மாண்ட்டிசோரி முறைப் பயிற்சி என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில பள்ளிக்கூட போர்டுகளில் கூட அப்படிப் போட்டுக் கொள்வார்கள். ஆனால் நடைமுறையில் அரசு எந்த விதியையும் இதற்கு விதிக்கவில்லை. எட்டாவது படித்த, பத்தாவது, பிளஸ் டூ படித்த பல பெண்களுக்கு வீட்டுக்கருகேயே இருக்கும் நர்சரிப் பள்ளியில் 500 ரூபாய் மாதச்சம்பளத்தில் டாச்சராகிவிடுவது, வசதியாக இருக்கிறது. பயிற்சியில்லாத இவர்களை வேலைக்கு வைப்பது நர்சரி உரிமையாளருக்கும் வசதி. குழந்தைகளைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. தீ விபத்து ஏற்பட்டால், அவர்களை வெளியேற்றாமல் வகுப்புக்குள்ளேயே வைத்து கிரில் கேட்டைப் பூட்டி விட்டுப் போய்விடும் அளவுக்குதான் இந்த டாச்சர்களின் ஐ.க்யூ இருக்கிறது.

நர்சரிப் பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான அமைப்புகளுக்கு என்று அரசு விதிகளும் இல்லை. உதவியும் இல்லை.

பயிற்சியில்லாத அரைக்கூலி ஆசிரியர்கள், இட வசதியில்லாத கோடவுன் கட்டடங்கள் இவற்றில் நர்சரி பள்ளிகள் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் என்ற பெயர்ப் பலகைகளுடன் இயங்குவதைப் பற்றி எதுவும் செய்ய விரும்பாத அரசு, சாமர்த்தியமாக பிரச்சினையே கீற்றுக் கொட்டகைதான் என்பது போல விஷயத்தை திசை திருப்புகிறது.

இதனால் லாபம் சிமெண்ட், இரும்பு, அஸ்பெஸ்டாஸ் வியாபாரிகளுக்கும் கட்டட காண்ட்டிராக்டர்களுக்கும், காண்ட்டிராக்ட் தரும் – எடுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும்தானே தவிர, குழந்தைகளுக்கு அல்ல. ஏற்கனவே நர்சரி பள்ளிகளில் நியாயமில்லத கட்டணம் வசூலிக்கும் நிர்வாகங்கள் இனி கட்டடச் செலவை காரனம் காட்டி அதிகமாக வசூலிக்கத்தான் இது வழி வகுக்கும்.

ஆங்கில மோகத்தின் அடிப்படையில் இயங்கும் இந்த சுமார் இருபதாயிரம் பள்ளிகளுக்கு மாற்றாக தமிழகமெங்கும் குழந்தைகள் மீதும் விளையாட்டின் முலம் கல்வி முறையின் மீதும் ஆழ்ந்த அக்கறை உடைய தாய்மொழி வழிக் கல்விப் பள்ளிகள் சுமார் எழுபது இருக்கின்றன.

மிகக் குறைந்த கட்டணத்தில் நடக்கும் இவை பெரும்பாலும் கூரைக் கொட்டகையிலேயே நடக்கின்றன. ஆனால் குறுகிய கட்டடங்களில் அல்ல. திறந்த வெளியில் விசாலமாக நடக்கின்றன. அரசின் புதிய கெடுபிடியால் இவற்றில் பல மூடப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய துயரத்தை ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்துவதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் ஏ.சி இல்லையே என்கிறது தி.மு.க சார்பு தொலைக்காட்சி. ஏதோ இதற்கு முன்பு ஐம்பதாண்டுகளாக ஏ.சி இருந்தது போலவும் இப்போதுதான் அது எடுக்கப்பட்டுவிட்டது போலவும்.

தயாநிதி மாறனை பிரதமர் அனுப்பி வைக்கிறார் என்றதும் முதல்வர் ஜெயலலிதா முந்திக் கொண்டு குடந்தைக்கு செல்கிறார். தொகுதி எம்.பி மணிசங்கர அய்யரை பிரதமர் அனுப்பாமல் ஏன் தயாநிதியை அனுப்பினார் என்று அரசியல் நோக்கர்கள் ஆய்வு செய்யத் தொடங்கும்போதே அய்யர் அழைப்பின் பேரில் ராகுல் காந்தி வருவதாக அறிவிக்கப்படுகிறது. ராகுல் வந்தால் போதாது என்று சோனியாவும் வருகிறார். மூட்டுப்பிரச்சினை இல்லாவிட்டால் நிச்சயம் வாஜ்பாயியும் வந்திருப்பார். சரஸ்வதி பள்ளியாக இல்லாமல் பாத்திமா பள்ளியாக இருந்திருந்தால் ராம கோபாலனும் அத்வானியும் முதல் நாளே ஓடோடி வந்து நிர்வாகத்தைக் கண்டித்திருப்பார்கள். சினிமாக்காரர்கள், கொட்டகை வசூலை பாதிக்கும் விதத்தில் காட்சிகளை ரத்து செய்யாமல் படப்பிடிப்பை மட்டும் ரத்து செய்து அஞ்சலி செலுத்துகிறார்கள். மக்களின் உணர்ச்சியோடு தொடர்புடைய பிரச்சினை என்பதால் இதில் அறிக்கை விடும் வாய்ப்பை யாரும் நழுவ விடுவதாக இல்லை.

ஆனால் உணர்ச்சிகளை வடித்த பிறகு சற்று நிதானமாக அறிவைப் பயன்படுத்தி இந்த பிரச்சினையை நாம் ஆழமாக யோசித்தாக வேண்டும். அப்போதுதான் எதிர்கால துயரங்களைத் தவிர்க்க முடியும்.

நர்சரி பள்ளிகள் தமிழ் நாட்டில் போதிய இட வசதி, பயிற்சியும் தகுதியும் உள்ள ஆசிரியர்கள் இல்லாமல் நடப்பதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்காதது மட்டும் அல்ல. அரசே நியமித்த கமிட்டிகளின் பரிந்துரை அறிக்கைகளையும் கிடப்பில் போட்டு விட்டது.

முன்னாள் துணை வேந்தரும் பள்ளிக் கல்வி அனுபவம் உள்ள கல்வியாளருமான டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு தலைமையில் 1991ல் போடப்பட்ட கமிட்டியின் அறிக்கையில் நர்சரிப் பள்ளிகளின் எல்லா குறைபாடுகளைப் பற்றியும் அலசி ஆராய்ந்து பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை கடந்த 13 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசும் சரி, ஜெயலலிதா அரசும் சரி நிறைவேற்றவே இல்லை.

1992ல் சிட்டிபாபு கமிட்டி அளித்த பரிந்துரைகளின்படி நடந்திருந்தால் குடந்தை துயரங்கள் போன்றவை நிச்சயம் நடந்தே இருக்க முடியாது என்பது உறுதி. சிட்டிபாபு குழு என்பது என்ன ?

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள், குறிப்பாக நர்சரிப் பள்ளிகள் மோசமான கட்டடங்களில், தகுதியற்ற ஆசிரியர்களுடன் குழந்தைகளின் உயிருக்கும் அறிவுக்கும் ஆபத்து விளைவிக்கும் வண்ணம் நடந்து வருகின்றன என்று இப்போது அரசே அங்கலாய்க்கிறது ; தொடக்கக் கல்வி இயக்குநர் முதல் பல அதிகாரிகள் மீது நடவடிக்கை இப்போது அவசர அவசரமாக எடுக்கப்படுகிறது.

அப்படியானால் இத்தனை காலமாக நர்சரிப் பள்ளிகளின் அவல நிலை அரசுக்குத் தெரியாதா ? இப்போதுதான் தெரிய வந்திருக்கிறதா ?

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்பதற்கான ஆதாரம்தான் சிட்டிபாபு கமிட்டி அறிக்கை.

தமிழ்நாடு முழுவதும் அரசு அங்கீகாரமே இல்லாமல் நர்சரி முதல் மெட்ரிகுலேஷன் வரை ஆயிரக்கணக்கான பள்ளிகள் இயங்கிவரும் ஆபத்து பற்றி 1976லேயே பள்ளிக் கல்வி இயக்குநர் லாரன்ஸ் தலைமையிலான ஒரு கமிட்டி பரிந்துரைகளை அளித்தது. அது கிடைத்து 15 வருடங்கள் கழித்துதான் பள்ளிகளை ஒழுங்கு படுத்துவதற்கான நெறிமுறைகள் (code of regulations) ஒன்றை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பள்ளி நிர்வாகங்கள் இதற்கு எதிராக போர்க் கொடி உயர்த்தின. தாங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்று பள்ளி நடத்த முடியாது என்று சொல்லிவிட்டன.

இதையடுத்துதான் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு தலைமையில் டிசம்பர் 1991ல் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி உறுப்பினர்களாக அவ்வை நடராஜன், ராஜம்மாள் தேவதாஸ், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற கல்வியாளர்கள் மட்டுமின்றி நர்சரிப் பள்ளி நிர்வாகிகள் பிரதி நிதிகளும் ஆசிரியர்களும் , கல்வித்துறை அதிகாரிகளுமாக மொத்தம் 17 பேர் அறிவிக்கப்பட்டனர்.

பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பல பள்ளிகளை நேரில் பார்வையிட்டு, பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை அறிஞர்கள், நீதிபதிகள், துணை வேந்தர்கள், சமூக சேவகர்கள் என்று அநேகரின் கருத்துக்களைக் கேட்டு எட்டு மாதப் பணிக்குப் பிறகு ஆகஸ்ட் 1992ல் சிட்டிபாபு கமிட்டி தன் விரிவான அறிக்கையை அரசிடம் தந்தது.

கமிட்டி முன்பு கருத்து தெரிவித்த முக்கியமானவர்கள் பட்டியலில் ம.பொ.சிவஞானம், மால்கம் ஆதிசேஷய்யா, நெ.து.சுந்தரவடிவேலு, நா.மகாலிங்கம், வா.செ.குழந்தைசாமி, எம்.ஆனந்தகிருஷ்ணன், மீனா சுவாமிநாதன் ஆகியோரும் உள்ளனர்.

இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்த சிட்டிபாபு கமிட்டி தொகுத்துத் தந்திருக்கிற சில புள்ளி விவரங்களைப் பார்த்தாலே, எப்படி இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டில் ஆரம்பக்கல்வி குறிப்பாக நர்சரிக் கல்வி என்ற பெயரில் பெற்றோரிடம் கொள்ளையடித்து, ஆசிரியர்களை ஏய்த்து குழந்தைகளை வதைத்து வந்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரியும்.

அரசு அங்கீகாரமே இல்லாத பள்ளிகள் மொத்தம் 15 ஆயிரம் இருப்பதாக ( 1992ல்) சிட்டிபாபு குழு மதிப்பிட்டது. இவர்கள் எல்லாருக்கும் ஒரு கேள்வித்தாளை கமிட்டி அனுப்பியது. ஆனால் பதில் நிரப்பி அனுப்பியவர்கள் 5349 பள்ளிகள் மட்டும்தான்.

இந்த பதில்களை வைத்துக் கணக்கிட்டபோதே பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன. மக்களின் சராசரி வருமானம் ஆண்டு தோறும் ஐந்து சதவிகிதமாவது உயருகிறதோ இல்லையோ, அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் பள்ளிகள் எண்ணிக்கை வருடத்துக்கு எட்டு முதல் ஒன்பது சதவிகிதம் வரை ஏறிக் கொண்டே போயிருக்கிறது.

அதிலும் 1984 முதல் 1988 வரை நான்கே ஆண்டுகளில் 1777 புதிய பள்ளிகள் இப்படி முளைத்திருக்கின்றன. 1989ல் 443. 1990ல் 490. 1991ல் 530. இதெல்லாம் பதில் கிடைத்த 5349க்குள்ளான கணக்கு. பதிலனுப்பாத பத்தாயிரம் பள்ளிகள் பற்றி ஒன்றும் தெரியாது.

இந்த அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மொத்தம் சுமார் ஒன்பது லட்சம் குழந்தைகள். இவர்களில் எட்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் படித்தது ஆங்கில மீடியம். வெறும் 41 ஆயிரம் பேர்தான் தமிழ் ,மீடியம்.

ஆங்கில மீடியம் என்ற மோகம் கிராமங்களைப் பிடித்து ஆட்டியதால் இந்த பள்ளிகளில் 58 சதவிகிதம் அமைந்தது கிராமங்களில்தான். பள்ளிகளை ஒரு முறையான பதிவு பெற்ற அமைப்பு எதுவும் நடத்தவில்லை. சுமார் 60 சதவிகிதம் தனி நபர்கள் நடத்துபவை. மொத்த 5349 பள்ளிகளில் 1358 நர்சரிகள். 3532 தொடக்கப் பள்ளிகள்.

குழந்தைகள் என்றதுமே ஓடி விளையாடு பாப்பா என்றுதான் பாரதிக்குப் பாடத் தோன்றியது. நர்சரியில் விளையாட்டின் மூலம் கல்வி கற்பிப்பதுதான் சிறந்த முறை என்று வலியுறுத்தாத அறிஞர்களே இல்லை. ஆனால், குழந்தை விளையாட அல்ல, நடந்து போனாலே தடுக்கி விழாமல் நடக்கும் பள்ளிகளைப் பார்ப்பதே அபூர்வம். குடந்தைப் பள்ளியில் ஒப்புக்குக் கூட ஒரு சிறு விளையாடுமிடமோ, மைதானமோ கிடையாது. கீழ் தளத்தில் பெரிய குழந்தைகளுக்கும் மாடியில் மழலைகளுக்கும் வகுப்பு நடத்திய விசித்திரப் பள்ளி அது.

சிட்டிபாபு அறிக்கை சுட்டிக் காட்டும் வேதனை – விளையாடி கற்க வேண்டிய எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகளுக்கு 200 ரூபாய்க்கு நோட்டும், டெக்ஸ்ட் புக்கும் தலையில் கட்டும் பள்ளிகள் எண்ணிக்கை 93 சதவிகிதம். டை, ஷுஸ், யூனிஃபார்ம் என்று பாமரப் பெற்றோரின் மனதைக் கவர்வதற்கு இன்னொரு 300 ரூபாய் என்று வசூல் ராஜாக்களாக 87 சதவிகிதப் பள்ளிகள்.

(வாசகர்கள் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும் – இந்த புள்ளி விவரங்கள், பண மதிப்பு எல்லாம் 12 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த நிலை. இன்று பல மடங்கு அதிகம்.)

இது தவிர வருடாந்தரக் கட்டணமாக எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகளிடம் 300 ரூபாய்க்கு மேல்

( 1991ல்) வசூலித்த பள்ளிகள் 45 சதவிகிதம்.

இந்தப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு கொடுத்த சம்பளம் என்ன ? மொத்தம் 30 ஆயிரம் ஆசிரியர்களில் 22 ஆயிரம் பேருக்கு மாதம் 500 ரூபாய்க்கும் குறைவு. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரிகள்.

நர்சரிப் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு மாண்ட்டிசோரி முறையிலோ வேறு முறையிலோ எப்படி கல்வி கற்பிக்க வேண்டும் என்பது பற்றி எந்தப் பயிற்சியும் இல்லாத ஆசிரியர்கள்தான் அதிகம். ( சுமார் 75 சதவிகிதம்).

இதில் மிகப் பெரிய கொடுமை என்ன என்றால் 1991ல் இப்படி அரைக் கூலிகளாக பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் இந்த அங்கீகாரமற்ற பள்ளிகளில் இருந்து கொண்டிருந்தபோது, அதே ஆண்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 70 ஆயிரத்துக்கும் மேல். இதற்குக் காரணம் பள்ளி நிர்வாகங்கள் குறைந்த சம்பளத்தில் யாரையாவது டாச்சராக்கி லாபம் சம்பாதிக்கப் பார்த்ததுதான்.

டாச்சர் சம்பளத்துக்கே இப்படிக் கணக்கிடும் நிர்வாகங்கள் பள்ளிக் கட்டடங்கள் பற்றியா கவலைப்படுவார்கள் ?

சிட்டிபாபு கமிட்டி மதிப்பீட்டின்படி, 1991ல், 46 சதவிகித பள்ளிகளில் பக்கா கட்டடங்கள் கிடையாது. கமிட்டி அறிக்கை சொல்கிறது – ‘ ஒரு இயந்திரப் பட்டறையில் ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். சில கிராமங்களில்,மாட்டுத்தொழுவத்தில் குழந்தைகளை உட்காரவைத்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள். பல பள்ளிகளில் பெயரளவுக்கு கூட விளையாட்டு மைதானமோ, கழிப்பறையோ கிடையாது. ‘

சிட்டிபாபு கமிட்டி முன்னால் 1992ல் இருந்த பெரிய பிரச்சினை அங்கீகாரம் இல்லாத ஆயிரக்கணக்கான நர்சரி ப்பள்ளிகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது எப்படி என்பதுதான்.

1976ல் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் 36,056. அங்கீகாரம் இல்லாதவை 11,487 தான். ஆனால் 1992ல், 16 வருடங்களில் அங்கீகாரம் இல்லாதவை 5349 ஆகவும் பெற்றவை 40,882 ஆகவும் இருந்தன. உண்மையில் கமிட்டிக்கு பதிலனுப்பாத அங்கீகாரமற்ற பள்ளிகள் இன்னொரு 4700.

இவற்றையெல்லாம் அங்கீகரிப்பது என்றால் எந்த சட்டத்தின் அடிப்படையில் அங்கீகரிப்பது ? நர்சரி பள்ளி என்பது ஏற்கனவே உள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் 1973ன் கீழ் வருமா வராதா ? சட்ட விதிகளை பரிசீலித்த சிட்டிபாபு கமிட்டி வருமென்றே தீர்மானித்தது. ஆனாலும் ஒரு சிக்கல். இந்த சட்டத்தின் கீழ் நர்சரி பள்ளிகளுக்கெல்லாம் அங்கீகாரம் கொடுத்தால், கூடவே அரசு அவற்றுக்கு நிதி உதவி ( aid) தரவேண்டும் என்பது சட்டத்தின் இன்னொரு விதி. உடனடியாக நிதி உதவி தர வேண்டுமென்று சட்டத்தில் கட்டாயம் இல்லையென்றாலும், அரசின் நிதி நிலைமை மேம்படும்போது தரவேண்டும் என்றும் சட்டம் சொல்லியிருக்கிறது. எப்படி பார்த்தாலும் இவற்றுக்கு எய்ட் தர அரசு ஒப்புக் கொண்டதாகிவிடும். அரசாங்கத்திடமோ பணம் ( இதற்கெல்லாம் !) கிடையாது.எனவே இந்த சட்டத்தின் கீழ் நர்சரிகளை கொண்டு வர வேண்டாம் என்று சிட்டிபாபு கமிட்டி முடிவு செய்தது.

அப்படியானால் நர்சரிகளை ஒழுங்குபடுத்த என்ன செய்வது ? மெட் ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இருப்பது போலவே நெறிமுறை விதிகள் (code of regulations) அறிவிக்கலாம் என்று கமிட்டி கருதியது. ஏற்கனவே இப்படி அறிவித்த நெறிமுறைகளை எதிர்த்து பள்ளி உரிமையாளர்கள் அரசிடம் முறையிட்டதை அடுத்துத்தான் ஆய்வு நடத்த சிட்டிபாபு குழுவே அமைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

சிட்டிபாபு குழு நெறிமுறை விதிகள் தேவை என்று பரிந்துரைத்தது. என்னென்ன நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் விவரமாகப் பட்டியலிட்டது. அங்கீகாரம், கட்டடங்கள், ஆசிரியர் நிலை, கல்விமுறை பற்றிய நெறி முறைகளை மட்டும் பார்க்கலாமா ?

அங்கீகாரம் ( recognition) என்ற சொல் இதர நிதி உதவி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுடன் இவற்றை சமமாக்கிவிடும் என்பதால், அரசு நிதி உதவி இல்லாத , அங்கீகாரமும் இல்லாத இந்த நர்சரி பள்ளிகள் நெறிமுறைப்படி மனு செய்யும்போது, approved அதாவது ஒப்புதல் பெற்ற என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்று கமிட்டி கூறியது.

இனி கமிட்டியின் நெறிமுறைகள்:

கட்டடம் : ‘ எளிதில் தீ பிடிக்கக் கூடிய ஓலைக் கூரை கட்டடங்களோ, குழந்தைகளின் உடல் நலனுக்கு ஆபத்தான துத்தநாக, அஸ்பெஸ்டாஸ் கூரைக் கட்டங்களோ தவிர்க்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் அறையின் அளவு, குழந்தைகளின் எண்ணிக்கை என்ன என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதுவே இங்கும் பின்பற்றப்பட வேண்டும். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்த சான்றிதழ் பொதுப் பணித் துறையிடமிருந்தோ, அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்தோ பெற வேண்டும்.

மைதானம்: விளையாட்டுக்கான மைதானம் இல்லாமல் பள்ளி இருப்பதில் அர்த்தமே இல்லை. முப்பது குழந்தைகள் இருந்தால் அந்த நர்சரியில் குறைந்தபட்சம் 15 X 20/30 சதுர மீட்டர் விளையாடுமிடம் இருக்க வேண்டும்.

ஆசிரியர் நிலை: எழுபது சதவிகிதத்துக்கும் மேல் பயிற்சி இல்லாத ஆசிரியர்களே நர்சரிகளில் இருந்து வரும் நிலையில், அவர்களையெல்லம் உடனடியாக வெளியேற்றினால், கல்விமுறையே ஸ்தம்பித்து விடும். எனவே அவர்கள் எல்லாரையும், பணியில் இருக்கும்போதே முறையன பயிற்சி பெற, கல்வித்துறையின் கற்பித்தல்- ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்புக்கு அனுப்ப வேண்டும். எல்லா ஆசிரியர்களையும் இப்படி பயிற்சி பெறச் செய்தாக வேண்டும். புதிதாக நியமிக்கும் எந்த ஆசிரியரும் ஏற்கனவே பயிற்சி பெறாதவரக இருக்கக் கூடாது.

குறைந்தபட்ச சம்பளம் : பயிற்சி பெறாத எஸ்.எஸ்.எல்.சி படித்த ஆசிரியருக்கு குறைந்தபட்சம்

ரூ 650. பட்டதாரிக்கு ரூ 1400. பயிற்சி பெற்றபின் புதிய சம்பள விகிதம் இதர ஆசிரியர்களைப் போன்று அரசல் நிர்ணயிக்கப்படலாம். ( இது 1992ல் பெரும்பாலோர் ரூ 500க்கும் கீழே பெற்ற போது சொல்லப்பட்ட பரிந்துரை).

நிர்வாகம்: எல்லா பள்ளிகளும் பதிவு செய்யப்பட்ட கமிட்டிகளால்தான் நிர்வாகம் செய்யப்பட வேண்டும்.

கல்விமுறை : எல்லா நர்சரி பள்ளிகளும் விளையாட்டின் மூலம் கல்வி என்ற முறையையே பின்பற்ற வேண்டும். இதில் அனுபவம் உள்ள ஆறு நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து சர்ட்டிபிகேட் தரலாம் என்று கமிட்டி பரிந்துரைத்தது. இதில் நான்கு சில்ரன் கார்டன் பள்ளி, சென்னை, லக்ஷ்மி கல்லூரி, காந்திகிராமம், பாலர் கல்வி நிலையம், சென்னை, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி, கோவை, ஆகிய தனியார் அமைப்புகள்.

சுமார் அறுபது எழுபது பக்கங்கள் உள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கனவே உள்ள நெறிமுறை விதிகளில் சேர்த்து ஆணை பிறப்பித்தாலே போதும் என்று கமிட்டி தெரிவித்தது. அதாவது எந்த நெறிமுறை விதிகளை எதிர்த்து நர்சரி உரிமையாளர்கள் மனு போட்டு கமிட்டி உருவாக்கப்பட்டதோ, அதே நெறிமுறை விதி அரசாணையே போதுமானது என்றது சிட்டிபாபு கமிட்டி.

(சிட்டிபாபு கமிட்டி 1991ல் அமைக்கப்பட்டபோது நர்சரி பள்ளிகளை ஒழுங்குபடுத்துவது பற்றி ஆராய்வது தவிர, எப்படி அவற்றில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவது என்பது பற்றியும் ஆராயும்படி அரசு கேட்டிருந்தது. அதை வலியுறுத்தி கமிட்டி அளித்த பரிந்துரை விவரங்களைப் பிறகு பார்ப்போம்.)

மேலே கமிட்டி சொன்ன பரிந்துரைகளை தமிழக அரசு கடந்த 12 ஆண்டுகளில் நிறைவேற்றியிருந்தால், கும்பகோணத்தில் ஒரு குழந்தை கூட இறக்கும் நிலையே ஏற்பட்டிருக்காது. கூரைக் கட்டடம் இருந்திருக்க முடியாது. பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் இருந்திருக்க முடியாது. மைதானமோ, விளையாடுமிடமோ இல்லாமல் நர்சரியே நடத்தியிருக்க முடியாது.

அப்படியானால் 93 குழந்தைகளின் மரணத்துக்கு உண்மையில் யார் பொறுப்பு வெறும் கீற்றுக்

கூரையா ? அல்ல. அரசுதான்.

இப்போதும் அரசு கமிட்டிகள், விசாரணைக் கமிஷன்களை அமைக்கலாம். அமைக்கிறது. அவையும் அறிக்கைகள் தரும். அவற்றின் மீது என்ன நடவடிக்கை என்பதே கேள்வி.

கமிட்டி அமைப்பதும், அதன் அடிப்படையில் துணைக் குழுக்கள் அமைப்பதும் நடவடிக்கை எடுப்பதற்காக என்பதை விட எடுக்காமல் தள்ளிப் போடுவதற்காகத்தான் என்பது அரசாங்கங்களின் செயல்முறையை அறிந்தவர்களுக்கு தெரியும்.

நர்சரி பள்ளிகள் விஷயத்தில் தமிழக அரசின் இந்த மாதிரி நடவடிக்கைக்கு இதோ ஒரு ‘மாதிரி ‘ :

அங்கீகரிக்கப்பட்ட மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளிகளுக்கான நெறிமுறை விதிக் கோவையின் 8ம் விதியின்படி குழு ஒன்றை அரசாணை மூலம் மார்ச் 29, 2000ல் தமிழக அரசு அமைத்தது. அதாவது சிட்டிபாபு குழு பரிந்துரைகள் வந்த பிறகு.

தொடக்கக் கல்வி இயக்குநர் இதன் தலைவர் ஆவார். மொத்தம் முப்பத்தெட்டு உறுப்பினர்கள். பலர் ஆசிரியர்கள். பலர் நர்சரி உரிமையாளர்கள்.இவர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகள். வருடத்தில் இரு முறையேனும் குறைந்தபட்சம் இந்தக் குழு சந்திக்க வேண்டும் என்பது விதி. நர்சரிகளின் பாடத்திட்டம் முதல் சகல அம்சங்களிலும் ஆலோசனை கூறுவது இந்தக் குழுவின் வேலை. கடந்த நான்காண்டுகளில் இந்தக் குழு குறைந்த பட்சம் எட்டு முறையாவது சந்தித்திருக்க வேண்டும். சந்தித்தது பற்றிய தகவல்கள் இணைய தளத்தில் இல்லை.

குழுவின் விதிகள், உறுப்பினர் பட்டியல் எல்லாம் அரசின் இணைய தளத்தில் உள்ளன. மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்ததும் அதே உறுப்பினர்களுக்கு பதவி நீட்டிக்கப்பட்டதா, அல்லது புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்களா என்பது பற்றியெல்லாம் தகவல் கிடையாது. குடந்தை குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தி அறிவிப்பு வெளியிடும் அளவுக்கு இந்த இணைய தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

குழுவின் முப்பத்தெட்டு உறுப்பினர்களில் புகழ் பெற்ற கல்வியாளரும் முன்னாள் தலைமையாசிரியருமான எஸ்.எஸ்.ராஜகோபாலன் பெயரும் இருந்தது. இந்தக் குழு இதுவரை என்ன செய்தது என்று அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு குழு 2000த்தில் அமைக்கப்பட்டதோ, அதில் அவரும் உறுப்பினராக சேர்க்கப்பட்டதோ, இதுவரை அவருக்கு தெரிவிக்கப்பட்டதே இல்லை என்றார்.

இதுதான் பள்ளிகள் விஷயத்தில் அதுவும் நர்சரி பள்ளிகள் விஷயத்தில் நமது தமிழக அரசு இயங்கிவரும் லட்சணம்.

இப்படிப்பட்ட தமிழக அரசு மறுபடியும் 2002ல் அதே சிட்டிபாபுவைக் கொண்டு இந்த முறை மெட் ரிகுலேஷன் பள்ளிகளைப் பற்றி ஆராய கமிட்டி அமைத்தது. அந்த அறிக்கை ஜுலை 2003ல் அரசுக்குத் தரப்பட்டது. இந்த கமிட்டியில் வெளி அறிஞர்கள் இல்லை. சிட்டிபாபு தவிர மீதி எல்லாருமே கல்வித்துறை அதிகாரிகள்தான்.

சிட்டிபாபு குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால் கும்பகோணம் பள்ளி துயர நிகழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் ஜுலை 25 பொதுக்கூட்டத்தில் பேசியதை மறுத்து மறு நாளே அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ‘சிட்டிபாபு குழுவின் அறிக்கை மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மட்டுமே பற்றியதாகும். ‘ என்று கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் விபத்து நடந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று. அவற்றுக்கானது அல்ல சிட்டிபாபு குழுவின் அறிக்கை. எனவே எஸ்.ஆர்.பி விவரங்களை சரியாகத்தெரிந்துகொள்வது நல்லது என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

முதலமைமச்சர்தான் விவரங்களை சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 2003ல் நியமிக்கப்பட்ட சிட்டிபாபு குழுதான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பற்றியது. 1992ன் சிட்டிபாபு குழு அறிக்கை நர்சரி பள்ளிகளுக்கானது. கும்பகோணத்தில் கருகிய குழந்தைகளில் அங்கிருந்த நர்சரி பள்ளி குழந்தைகளும் உள்ளனர். அப்படியானால் 2003 பரிந்துரைகளை ஏற்றதாகச் சொல்லும் அரசு, 1992 பரிந்துரைகளை ஏற்று செயல் படுத்த வில்லையா ? தான் முதல்வராக இருந்தபோது நியமித்த குழுவைப் பற்றி முதல்வருக்கே தெரியாதா ? செலக்டிவ் அம்னீஷியா ?

1992ல் நர்சரிகளையும் 2003ல் மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஆய்வு செய்த சிட்டிபாபு குழு இரண்டாவது முறை சொன்னது என்ன என்று பார்ப்போம்.

(தொடரும்)

dheemtharikida@hotmail.com

Series Navigation