இஸ்லாத்தின் தோற்றம்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

தாரிக் அலி (தமிழில்: ஆசாரகீனன்)


[முஸ்லிம்களில் மரபுப் பார்வை இல்லாத சிந்தனையாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் தாரிக் அலி சமீபத்தில் எழுதிய புத்தகம் ‘அடிப்படைவாதங்களின் மோதல் ‘ (The Clash of Fundamentalisms) என்பது. இதில் அமெரிக்காவின் அமைப்பு ரீதியான வன்முறைக்கும், அதை எதிர்ப்பவர்களின் வன்முறைக்கும் அதிகம் வேறுபாடு இல்லை என்று அலி கருதுவதாக ஒரு மதிப்புரை சொல்கிறது. இப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தை இங்கு மொழி பெயர்த்திருக்கிறேன். இடதுசாரி என்று கருதப்படும் தாரிக் அலி இங்கிலாந்தில் வாழ்கிறார். ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதியுள்ளார் என்றாலும் அரசியல் கட்டுரைகளால் ஒரு குறிப்பிடத்தக்க விமர்சகராக மேலைச் சிந்தனை வட்டங்களில் அறியப்படுபவர். விவரண திரைப்படங்களையும் எடுத்துள்ளார். புது இடது மீள்பார்வை (New Left Review) என்னும் முக்கியமான ஓர் ஆய்வு சஞ்சிகையில் ஒரு பதிப்பாளராகப் பணியாற்றி இருப்பதோடு அதில் எழுதி வருபவர். அமெரிக்க இடதுசாரி பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார். இஸ்லாத்தைக் குறித்து, உலகாயதப் பார்வையை அல்லது பொருளியல் பார்வையை மேற்கொள்வது மேலான பலனைத் தரும் என்று கருதுபவர். இவரது பார்வையில் இஸ்லாத்தின் வரலாறு எப்படி உள்ளது என்பதைக் காட்டவே இக் கட்டுரையை மொழி பெயர்த்துள்ளேன். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் முஸ்லிம்கள் நடுவேயும், முஸ்லிம் அல்லாதார் நடுவேயும் இஸ்லாம் குறித்து மட்டுப்பட்ட வகையான, இறை நம்பிக்கை வழி அணுகல் அல்லது மத நூல் வழி அணுகல்தான் தலை தூக்கி நிற்கிறது. வரலாற்று வழி அல்லது சட்டம்/அறவியல் போன்ற இதர அணுகல்கள் கூட பெரும்பாலும் மரபு சார்ந்தே அமைகின்றன. இஸ்லாத்தில் பலவிதமான போக்குகள் உண்டு என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. திருக்குரானிடமிருந்து மிக விலகியவை என்று இல்லாவிட்டாலும், மேற் சொன்ன மரபுப் பார்வையில் இருந்து விலகிய மாற்றுப் பார்வைகள் முஸ்லிம்கள் நடுவே உண்டு என்று காட்டுவது இங்கு நோக்கம். தாரிக் அலிக்கு முஸ்லிம்கள் நடுவே எவ்வளவு வரவேற்பு உண்டு என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் ‘பிறரை ‘ விமர்சிப்பதையாவது முஸ்லிம்கள் விரும்பிப் படிக்கிறார்கள் என்பது தெரிகிறது. முஸ்லிம் அறிஞர்களிடையே நடக்கும் சர்ச்சைகளில் இவருக்கும் அடிக்கடி இடம் கிடைப்பதிலிருந்து இது தெரிகிறது. உதாரணமாக, ‘இஸ்லாத்தில் சகிப்புத்தன்மைக்கு உள்ள இடம் ‘ (The Place of Tolerance in Islam) என்னும் ஒரு சமீபத்து நூலில் காலெத் அபெள எல் ஃபத்ல் என்ற இஸ்லாமிய சட்ட வல்லுனருடன் பல முஸ்லிம் சிந்தனையாளர்கள் நடத்திய வாதம் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் தாரிக் அலி பங்கெடுத்துள்ளார். – மொழிபெயர்ப்பாளர்]

யூதம் [ஜூடாயிஸம்], கிருஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்தும் இன்று நாம் அரசியல் இயக்கங்கள் என்று சொல்வனவற்றின் வடிவமாகவே தொடங்கின. அக் கால கட்டத்தின் அரசியல், கலாச்சாரம் இருந்த நிலையில் ஒரு பொறுப்புள்ள நம்பிக்கை முறையை உருவாக்கி, அதன் வழியே அன்று நிலவிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை எதிர்ப்பதோ, உதிரிகளாகச் சிதறிக் கிடந்த மக்களை ஒன்றிணைப்பதோ அல்லது இந்த இரண்டையுமே சாதிப்பதோ அவசியமாக இருந்தது. இந்த அவசியத்தைக் கருத்தில் கொண்டு, தொடக்க கால இஸ்லாத்தைப் பார்த்தால், அதன் வரலாற்றில் மர்மங்கள் ஏதும் இல்லை. இதை உருவாக்கியவர் (நபி) எதிர்காலம் குறித்த ஒரு தெளிவான திட்டம் உள்ள அரசியல் தலைவராகவும், இதன் வெற்றிகள் காரணமாக அவரது செயல் திட்டங்கள் சரியானவையாகவுமே தோற்றமளிக்கின்றன. தத்துவ மேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஒரு முறை, ஆரம்ப கால இஸ்லாத்தை போல்ஷிவிஸத்துடன் (Bolshevism) ஒப்பிட்டு, இவை இரண்டும் ‘யதார்த்தமானவை, சமூகவயமானவை, ஆன்மீகத்துடன் சம்மந்தம் இல்லாதவை, உலகப் பேரரசை நிறுவும் நோக்கம் கொண்டவை ‘ என்று குறிப்பிட்டார். மாறாக, கிருஸ்தவமானது தனி மனிதரின் சொந்த வாழ்வைச் சார்ந்தது, உள் நோக்கும் ஆன்மீகம் சார்ந்தது என்கிறார் அவர். இக் கருத்து, கிருஸ்தவத்தின் துவக்க காலத்துக்குப் பொருந்துமா என்பது சர்ச்சைக்குரியது என்றாலும், கான்ஸ்டன்டைனுக்குப் [கு1] பொருந்தாது. கிருஸ்தவம் ஒரு பேரரசின் மதமாக மாறி, படையெடுப்புப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கிய பின், அதன் வளர்ச்சி வழக்கமான பாதையிலேயே செல்லத் தொடங்கியது. காட்டாக, 16-ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்பெயினில் ரோமன் கத்தோலிக்க சர்ச் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அவர்கள் தம் [கிருஸ்தவ] நம்பிக்கையைத் தவற விட்டது குறித்து நடத்திய கொடியதொரு விசாரணையில் (spanish inquisition) பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன தகவல்கள், 1930-களில் ஸ்டாலினிஸ்டுகளால் நடத்தப்பட்ட விசாரணைகளில் பாதிக்கப் பட்டவர்களின் அனுபவத்தை ஒத்த விதத்தில் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது. [கு2]

மாறாக, இஸ்லாத்தின் முதல் இரண்டு பத்தாண்டுகள் குறிப்பிடத்தக்க ஜாக்கோபினத் [கு3] தன்மை பொருந்தியதாக இருந்ததாக ரஸ்ஸல் உள்ளுணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்கின்றார். இது உண்மை என்றே நான் கருதுகிறேன். ஒரு புதிய அரசியல் இயக்கம் வெளியிடும் ஆரம்ப பிரகடனத்தின் தீவிரத்தை குரானின் சில பகுதிகள் நினைவூட்டுகின்றன. சில நேரங்களில், யூத மற்றும் கிருஸ்தவ எதிரிகள் பற்றிய தொனி ஒரு தீவிரமான சிறு குழு பிணக்குத் தன்மையுடன் வெளிப்படுகிறது. இஸ்லாத்தின் இந்த பிணக்குத் தன்மையே அதன் துரிதமான வளர்ச்சியின் வரலாற்றை மெய்யாகவே சுவாரசியமானதாக ஆக்குகிறது. (4)

எங்கு ஆரம்பிப்பது ? இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஆனால், நானாக இருந்தால் மரபான தொடக்கத்தைக் கைவிட்டு விட்டு கி.பி. 629-லிருந்து தொடங்குவேன். [அப்போது] இன்னமும் புழக்கத்துக்கு வந்திருக்காத புதிய முஸ்லீம் காலக் கணக்கில் எட்டாம் ஆண்டு அது. மெக்காவில் மக்களிடையே பிரசித்தி பெற்ற பெண் தெய்வமான மனாத்தின் (Manat) ஆலயத்தை நோக்கி 20 ஆயுதம் தாங்கிய குதிரை வீரர்கள் விரைந்து கொண்டிருந்தனர். இவர்களையும், இவர்களின் தலைவனையும் அதிர்ஷ்ட தேவதை என்று கருதப்படும் இப் பெண் தெய்வத்தின் சிலையை தகர்த்தெறிய அனுப்பி வைத்தவர் முகம்மது நபி. ஒரு எட்டு ஆண்டுகளுக்கு நாட்டாரின் (pagan) ஆண் தெய்வமான அல்லா, அவருடைய மூன்று மகள்களான அல்-லட், அல்-உட்சா மற்றும் மனாத் ஆகிய பெண் தெய்வங்களோடு அருகருகே கருதப்படுவதை முகம்மது சகித்துக் கொண்டிருந்தார். அல்-உட்சாவே (அதிகாலைப் பொழுதின் நட்சத்திரமாகக் கருதப்படும் வீனஸ்) முகம்மது நபியின் இனத்தவரான கொரெய்ஷ் எனப்படும் பழங்குடியினரால் பெரிதும் வழிபடப்பட்ட பெண் தெய்வம் என்றாலும் மனாத் (ஊழித் தெய்வம்) தான் அந்தப் பகுதியின் முக்கியமான மூன்று பழங்குடிப் பிரிவினரிடையே பிரபலமாக இருந்த பெண் தெய்வம் ஆவாள். இப் பிரிவினர்களைத் தம் புதிய மதத்துக்குள் கொண்டு வர முகம்மது நபி மிகவும் முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்த எட்டாண்டு கால போர் நிறுத்தத்தை உறுதி செய்தது நிலவிய உள்ளூர் அரசியலே.

ஆனால், எட்டாம் ஆண்டு வாக்கில், நாட்டாரிடையே அவரது எதிரிகள் மற்றும்ம் யூதப் படையினருக்கு எதிராக மூன்று முக்கியமான வெற்றிகள் கிட்டி விட்டன. மெக்காவின் பழங்குடியினருக்கு எதிரான பாதர் போரில், மிகச் சிறிய எண்ணிக்கையிலான படையினரைக் கொண்டே முகம்மது வெற்றி பெற்றுவிட்டார். புதிய மதத்தின் தோள் வலிமையினால் பழங்குடியினர் மிகவும் கவரப்பட்டனர். அதற்குப் பின்னர் கொள்கைச் சமரசங்கள் தேவையற்றவை என்று முடிவு செய்யப்படிருக்க வேண்டும். ஒரு மாலைப் பொழுதில், வெளிச்சம் மங்கத் தொடங்கி பாலைவனத்தை இருள் சூழத் தொடங்கிய போது, புதிய ‘ஒரே கடவுள் ‘ கொள்கையை அமுல்படுத்தும் பொருட்டு இருபது குதிரை வீரர்களுடன் நபியின் பிரதிநிதி வந்து சேர்ந்தார்.

குடய்டில், மனாத்தின் ஆலயம் மெக்காவையும் மதினாவையும் இணைக்கும் சாலையில் நடுவழியில் அமைந்திருந்தது. ஆலயத்தின் பொறுப்பாளர் குதிரைகள் வருவதைக் கண்டார். வீரர்கள் குதிரையிலிருந்து இறங்குவதைக் கண்டும் மெளனமாகவே இருந்தார். இரு தரப்பிலும் வரவேற்புகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மனாத்தைக் கவுரவிக்கவோ அல்லது அடையாளமாக ஏதேனும் காணிக்கை செலுத்தவோ அவர்கள் அங்கு வரவில்லை என்பதை இச் செய்கை உணர்த்தியது. பொறுப்பாளர் அவர்களின் வழியில் குறுக்கிடவில்லை. இஸ்லாமியப் பாரம்பரியம் சொல்வது என்னவென்றால், மிக நுட்பத்துடன் செதுக்கப்பட்டிருந்த மனாத்தின் சிலையை நோக்கி அக் குழுவின் தலைவன் முன்னேறினான். அப்போது எங்கிருந்தோ ஓர் அம்மணமான கரு நிறப் பெண் தோன்றினாள். பொறுப்பாளர் அவளிடம் உரத்த குரலில் சொன்னார்: ‘வா மனாத். உன் கோபத்தின் வலிமையைக் காட்டு! ‘ தன்னுடைய தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு, ஆற்றாமையின் காரணமாக தன் மார்பகங்களில் அடித்துக் கொள்ளத் தொடங்கினாள் மனாத். அதே நேரத்தில் தனக்குக் கொடுமை இழப்பவர்களை சபிக்கவும் செய்தாள். அவளை அடித்தே கொன்றான் சாத் (Sa ‘ad). அதன் பிறகே, இருபது தோழர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து மனாத்தின் சிலையை உடைக்கத் தொடங்கி, அதை முற்றிலும் தூள் தூளாக்கினர். அதே நாளில் அல்-லட் மற்றும் அல்-உட்சா ஆகியோருக்கும் இதே கதி ஏற்பட்டது. இதற்காக அல்லா அழுதாரா ? அல்லது அதை எதிர்த்தாரா ? [கு5] பழங்கதைகள் எதுவும் அல்லாவின் எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

இச் சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் முகம்மது ஓர் இறை வசனத்தைப் பெற்று, குரானின் வரிகளாகச் சொல்லியிருந்தார்:

அல்-லட் மீதோ அல்-உட்சா மீதோ நீங்கள் மனம் செலுத்தி இருக்கிறீர்களா ?

மேலும் மூன்றாம் மாற்றாளான மனாத் மீது ?

உயர்த்தப்பட்ட அன்னப் பறவைகள் அவர்கள்;

அவர்களது இடையீடு எதிர்பார்க்கப்பட வேண்டியதே;

அவர்கள் விருப்பம் புறக்கணிக்கப்படாதது.

மூன்று பெண் தெய்வங்களின் ஆலயங்களும் அழிக்கப்பட்டபின், மேற்கண்ட வரிகளில் கடைசி மூன்றும் நீக்கப்பட்டன. புதிய வசனம் இவ்வாறு மாற்றப்பட்டது:

அல்-லட் பற்றியோ அல்-உட்சா பற்றியோ நீங்கள் நினைத்ததுண்டா ?

மூன்றாவதும் மற்றொருவளுமான மேனட் பற்றியாவது ?

உங்களுக்கோ மகன்கள் வேண்டும், அவனுக்கு மட்டும் மகள்களா ?

இது மிக நியாயமற்ற பாகுபாடு!

நீங்களும் உங்கள் தந்தையரும் இட்டுக்கட்டிய பெயர்கள் மட்டுமே அவர்கள்;

எந்த அதிகாரத்தையும் அவர்களுக்கு அல்லா தந்ததில்லை;

அல்லாவின் வழிகாட்டல் அவர்களிடம் என்றோ வந்துவிட்டாலும்

நம்பிக்கை அற்றவர்கள் ஊகங்கள், மேலும் தமது ஆன்மாவின் அலைப்புகளின் பின்னே போகிறார்கள் பலனேதுமற்று (53.7-11)

வெளியில் இந்த திடார் மாற்றத்துக்கு காரணமாகச் சொல்லப்பட்டது – சாத்தான் முந்தைய வரிகளைத் தந்த்திரமாக நுழைத்து விட்டதாகவும், பின்னர் அல்லா அதை நீக்கி விட்டதும் என்று – அன்று இந்த விளக்கம் அவ்வளவு நம்பக் கூடியதாக இருந்திருக்காது தான். இந்த ‘சாத்தானின் பாக்கள் ‘ நிகழ்ச்சி மத அறிஞர்களையும், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களையும் ஒட்டு மொத்தமாக இடக்கு மடக்கல்கள் நிரம்பிய சப்பைக் கட்டுகள் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளியது. யதார்த்தமோ மிகவும் நேராக வெளிப்படையாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டு காலத்து நபி ஒருவர், அரசியல் தலைமையைக் கையிலெடுக்காமலோ, மேலும் அந்தத் தீபகற்பப் பகுதியில் குதிரையேற்றம், வாள்வீச்சு மற்றும் ராணுவ நுட்பங்களில் லாவகம் காட்டாமலோ ஒரு குழுச் சமூகத்தினரின் உண்மையான ஆன்மீகத் தலைவராவது என்பது சாத்தியமே அல்ல. அரசியல்வாதியாக உரு ஏற்ற நபிதான், தானும் தன் சகாக்களும் ஒதுக்கப்பட்ட நிலை மிகவும் குறையும் வரை, பல கடவுள் வழிபாட்டு முறையின் மீதான இறுதித் தாக்குதலைத் தாமதப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து வைத்திருந்தார். தற்காலிகப் போர் உத்திப்படி காலம் கனியும் வரை இந்த மூன்று பெண் தெய்வங்களை வழிபடுபவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் புத்தியுள்ள செயலாக இருந்தது. இப் புது நம்பிக்கை வழியின் முதல் பத்தாண்டுகளில் காணப்படும் தயக்கங்களுக்கும், குழப்பங்களுக்கும் இதுவே காரணமாகும்.

ஒரே கடவுள் கொள்கையைக் கண்டிப்பாக்க முடிவு செய்யப்பட்ட பின்னர், எந்த சலுகையும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிருஸ்துவ திருச்சபையானது அதன் நாட்டார் முன்னோர்களுடன் ஒரு நிரந்தர சமரசத்துக்கு உடன்படும் நிலைக்குத் தள்ளப்பட்டதோடு, தன் பழங் கதையையும் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. அதைப் புதிதாகப் பின்பற்றத் தொடங்கியவர்களுக்கு வழிபட ஒரு பெண் தெய்வம் கிடைத்தாள். அவளும் ஏதோ ஒரு சாதாரணப் பெண் அல்ல, கடவுளின் குழந்தையையே கருவாய் ஏற்ற பெண். அது கன்னித்தன்மை கெடாத பிறப்பிப்பு என்றாலும், [முந்தைய கடவுளாக விளங்கிய] ஜீயஸ் (Zeus)-ன் பாலியல் சாகசங்களிலிருந்து பெரிதும் விலகியது என்றாலும், நாட்டார் வழிபடல் முறைகளுடன் உள்ள தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக் கொள்வதில் அடைந்த தோல்வி கவனிக்கப்பட்டு இருந்தது.

அல்லாவின் எல்லா மகள்களையும் அல்லது ஏதேனும் ஒரு மகளையாவது இப் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக முகம்மது தேர்ந்தெடுத்திருக்க முடியும். புதியவர்களைக் கவர்ந்திழுப்பதை இது எளிதாக்கி இருக்கக்கூடும் என்றாலும் குழுப் பிரச்சினைகள் இப்படிச் செய்வதற்குத் தடையாயின. தன் போலவே ஒரே கடவுள் கொள்கையுடைய ஒரு போட்டி நம்பிக்கையிடம் இருந்து தன்னை அழுத்தம் திருத்தமாகப் பிரித்துக் காட்டிக் கொள்ள வேண்டிய அதே நேரத்தில், சமகால நாட்டாரியம் [paganism] ஏற்படுத்தும் மனக் கிளர்வுகளையும் ஓரம் கட்டுவது அப் புதிய மதத்துக்கு அவசியமாகியது. கிருஸ்தவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துவதோடு நில்லாமல், தீபகற்ப அரேபியர்களின் பெரும்பான்மைப் பண்பாட்டு பழக்க வழக்கங்களிடமிருந்து விடுவித்துக் கொள்வதற்கும், ஒரு பெண் பல ஆண்களை மணம் செய்து கொள்ளல், பெண்வழி மரபு போன்ற கடந்த கால வழக்கங்களிலிருந்து உணர்வுபூர்வமாக விடுவித்துக் கொள்வதற்கும், தந்தை வழி சமூக வழக்கை முன் வைக்கும் அல்லாவின் ஒருமைத் தன்மையானது கவர்ச்சிகரமான ஒரு பாதையாகத் கருதப்பட்டது. முகம்மது என்னவோ கதிஜாவின் மூன்றாவதும், இளமையானவருமான கணவர்தான். மணமுறிவு என்பது பரவலாக வழக்கத்தில் இருந்ததோடு கணவனைக் கைவிடும் உரிமையும் பெண்களுக்கு இருந்தது. இதனால், கதிஜா தன் கணவர்களுள் ஒருவரை விவகாரத்து செய்ததாகவும், மற்றொரு கணவரைத் தொலைத்து விட்டதாகவும் கருதப்பட்டாலும், இச் சம்பவங்களுக்கான ஆதாரம் மேம்போக்காகவே இருப்பதோடு மட்டுமல்லாமல், முகம்மதுவின் வெற்றிகளுக்குப் பின்னர் இவை எல்லாம் பற்றி அதிகம் பேசப்படவில்லை. இஸ்லாமிய நாட்காட்டி தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு கதிஜா இறந்துவிட்டார்.

இத்தகைய பண்டைப் பாரம்பரியங்களின் பாதிப்பை நாம் குறைத்து மதிப்பிடலாகாது. முகம்மது காட்டிய வழியில் சென்று பிற்கால இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் ஜஹிலியா (அறியாமையின் காலம்) என்று அழைக்கப்பட்டதோ, ‘ஒரே கடவுள் ‘ முறைகள் அளித்ததை விட கோலாகலமானதாகவே (fun) இருந்தது. இஸ்லாத்துக்கு முந்தைய பழங்குடியினரைப் பொறுத்த வரை, கடந்த காலம் என்பது அவர்களுடைய கவிஞர்களின் காப்பில் விடப்பட்டிருந்தது. அக் கவிஞர்கள் பகுதி நேர வரலாற்றாசிரியர்களாக விளங்கியதோடு, பழங்கதைகளையும், உண்மைகளையும் திறம்படக் கலந்து, பழங்குடிப் பெருமிதத்தை உயர்த்தும் வகையில் பாடல்களை எழுதி வந்தனர். எதிர்காலம் என்பது கருதப்படவே இல்லை. நிகழ்காலமே அனைத்திலும் முக்கியமானதாக விளங்கியது. பண்டைக் காலத்து எபிக்யூரியர்களில் [கு6] ஒரு குழுவினரைப் போலவே, ஜஹிலியாவின் அரேபியர்களுடைய கவிதைகள் காட்டுவதைப் பார்த்தால், அவர்கள் வாழ்வை முற்றிலும் அனுபவித்து வாழ்ந்தனர்:

வறுத்த சதை, வீரிய மது கூட்டும் ஒளி,

வேகமாய் ஓடும் ஒட்டகக் கூட்டம் – நிச்சயம்

உன் ஆன்மா சாய்ந்தாடி விரைய வைக்கும் அவளை

வெற்றிடங்களின் நீள அகலங்களூடே;

தங்கச் சரிகைக் கரையிட்ட விலை மிக்க அங்கிகளின் பின் ஏகும்

வெண் நிறச் சிலையொத்த மகளிர்,

செல்வம், குறைகளற்ற வாழ்வு, நோய் பற்றிய அச்சமின்மை,

யாழ்க் கம்பிகள் பாடும் சோக இசை –

வாழ்வின் இன்பங்கள் இவையே. மனிதன் அமைந்தான்

காலத்தின் இரையாக, ஆனால் காலம் என்பதோ மாற்றமே. (7)

குரானோ, பின்வரும் இறைவசனம் ஒன்றால் இதை மறுக்கிறது:

அவர்கள் சொல்கிறார்கள்: ‘இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறேதும் கிடையாது நாம் இறக்கிறோம் மேலும் ஜீவிக்கிறோம்;

காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை ‘. நிச்சயமாக அவர்களுக்கு இது பற்றி ஏதும்

ஞானமில்லை. அவர்கள் வெறுமே ஊகிக்கிறார்கள்.

அவர்களிடம் நம் வசனங்கள் அனைத்துத் தெளிவுடன் ஓதப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், ‘நீங்கள் சொல்வது உண்மையாய் இருந்தால்,

எம் மூதாதையரை எமக்குத் திருப்பிக் கொடுங்கள் ‘ என்பதே.

சொல்லுங்கள்:

‘அல்லாவே உங்களுக்கு உயிர் கொடுக்கிறான் பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்… (45.246)

இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தின் பழங்குடியினரின் மனிதநேயம் பல கவர்ச்சியான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஆனால், அது தன் செயல்முறைகளை தத்துவமாக்கவோ அல்லது அவற்றின் மூலம் பழங்குடிகளை ஒன்றுபடுத்தவோ முடியாததாக இருந்ததால், வாழ்வது பற்றிய உலகளாவிய தத்துவமாக உருவெடுப்பது பற்றி அது நினைக்கக் கூட முடியாதிருந்தது. ஆண் மற்றும் பெண் கடவுளர்களின் எண்ணிக்கைப் பெருக்கமும் அதற்கு ஒரு காரணம். இவையெல்லாம் மனித இயல்புகளுக்கு ஓர் இயற்கையை மீறிய அற்புதத்தன்மை கொடுத்த மறுபதிப்புகளே தவிர வேறல்ல என்றாலும், அவற்றின் மீதான நம்பிக்கைகள் அவ்வப்போது பிளவுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணமாகின. இப் பிளவுகள் பெரும்பாலும் வணிகரீதியில் பழங்குடியினரிடையே உண்டாகும் போட்டியால்தான் எழுந்தன. அன்றைய உலகு நாடோடி வணிகர் குழுக்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அன்றைய உரையாடல்கள் பெரிதும் வணிக பேரங்களைப் பற்றியதாகவே இருந்தன. சமூக மோதல்கள் என்பது மிகச் சாதாரணம்.

முகம்மது இந்த உலகை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார். தம் பாரம்பரியத்தைப் பற்றி பெருமித உணர்வு கொண்ட, இஷ்மாயிலின் வழி வந்தவர்களாகக் தம்மைக் கருதும் குரய்ஷ் என்ற அரபு பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அவர். திருமணத்துக்கு முன்னர், கதிஜாவின் ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளராக பயணம் போகும் வணிகர்களில் ஒருவராக இருந்தவர். அப் பகுதி முழுவதும் பயணம் செய்த அவருக்கு கிருஸ்தவர்கள், யூதர்கள், ஞானிகள் அல்லது பாரம்பரியமாக குருமாராக இருப்போர் வழி செல்பவர் (Magians), மேலும் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த நாட்டார் வழிபாடுகளைச் சார்ந்தவர்கள் ஆகிய அனைவரிடமும் தொடர்பு ஏற்பட்டது.

இப் பயணங்கள் அவருக்குப் பல உள்ளொளிகள் கிட்ட உதவியதுடன், அவருடைய அறிவு விரிவடையவும் உதவின என்றுதான் நாம் கருத வேண்டும். இந்த காலகட்டத்தில், வணிகப் பாதையின் மையமாக மெக்கா இருந்ததா என்பது பற்றி ஆய்வாளரிடையே இன்றும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி அது மையமாக இருந்திராவிட்டாலும், மெக்காவின் வணிகர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இரு பெரும் அண்டை நிலத்தாரைச் சமாளிக்க வேண்டியிருந்தது: பைஜான்டியப் பேரரசின் கிருஸ்தவர்கள் மற்றும் பாரசீகத்தில் இருந்த நெருப்பை வழிபடும் ஜோராஸ்திரர்கள். இந்த இரு சூழல்களிலும் வெற்றி பெறக் கூடிய வணிகராக இருக்க இந்த இரண்டு பிரிவுகளில் எதையும் சார்ந்தவராக இருக்கக் கூடாது. இப் பிரதேசத்தில் பல யூத இனக் குழுக்கள் இருந்தன என்பது உண்மைதான், யூதத்தின் தன்னிலை வரையறுப்பில் அது ஏற்கனவே ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ‘ மதமானதால் அது ஒரு வலுவான மாற்றாக ஆகமுடியாமல் தள்ளப்பட்டது. யூதம் என்றுமே ஒரு மதம் மாற்றும் பாதையாக விளங்கியதில்லை. இத்தகைய மூடிய தன்மையே [அதனுள்ளிருந்து] கிருஸ்தவம் என்ற வடிவில் ஒரு சீர்திருத்த இயக்கம் உருவாகக் காரணமாக ஆனது. ஒரு வேளை பிறரை உள்ளிழுக்கும் [மதம் மாற்றும்] வசதிகள் அதற்கு இருந்திருந்தாலும், நாட்டார் மரபு சார் அரபிகளைக் கவரும் ஈர்ப்பு அதற்கு இல்லை.

முகம்மதின் ஆன்மீகத் தேட்டத்தை ஓரளவு சமூக-பொருளாதார நாட்டங்களும் தூண்டின. வணிகத்தில் அரபியர்களின் நிலையை வலுப்படுத்துவதற்கான விருப்பமும், பொதுவான விதிகளைச் சுமத்தும் தேவையும் (8) இவற்றில் அடங்கும். பொதுவான குறிக்கோள்களைக் கொண்டதும், ஒரே ஒரு நம்பிக்கைக்கு விசுவாசமாக இருக்கக் கூடியதுமான ஒரு பழங்குடியினரின் கூட்டமைப்பே அவரின் தரிசனமாக இருந்தது. [அந்த நம்பிக்கை] புதியதாகவும், உலகுக்கே பொருந்தும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டி இருந்தது. முகம்மது நபிக்கு இஸ்லாம் அரபுப் பழங்குடிகளை இணைக்கும் காரை (Cement) போலப் பயன்பட்டாலும், இஸ்லாம் தொடக்கத்திலிருந்தே வணிகத்தை மட்டுமே உயரிய தொழிலாக கருதியது.

நாடோடி மற்றும் நகர வாழ்வுத் தன்மைகளை ஒருங்கே கொண்ட மனப்பான்மையே இப் புதிய மதத்தின் அடையாளமாக விளங்கியது. நிலத்தில் வேலை செய்த விவசாயிகள் அடிமைத்தனம் கொண்டவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். ஒரு கலப்பையைப் பார்க்க நேர்ந்தபோது நபி சொன்ன வார்த்தைகளை ஹதித் இப்படிப் பதிவு செய்கிறது: ‘நம்பிக்கை உள்ள ஒருவரின் வீட்டில் அது நுழைந்தால் தவறாமல் தரித்திரமும் சேர்ந்து நுழையாமல் இருந்ததில்லை ‘. இந்த மரபு புதிதாய் வார்க்கப் பட்டது என்றாலும், அக் காலகட்டத்தின் நிஜத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

இப் புதிய விதிமுறைகளைப் பின்பற்றுவதென்பது கிராமப்புறங்களில் அனேகமாக முடியாத செயலாகவே இருந்தது என்பது நிச்சயம். ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது என்பது, உதாரணமாக ஒரு ராணுவக் கட்டுப்பாட்டை விதைப்பதிலும், புதிய உறுப்பினர்களின் நாடோடிகளுக்குரிய தறுதலை உள்ளுணர்வுகளை அழிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தது. அத்துடன், நகரங்களில் நம்பிக்கை உள்ளவர்களின் ஒரு சமூகத்தை உருவாக்கும் விதத்திலேயே இப் புதிய மதம் வடிவமைக்கப்பட்டது. இவர்கள் தொழுகைக்குப் பின்னர் சந்திக்கவும், பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது வழி செய்தது. எந்த ஒரு நவீன யுக அரசியல் இயக்கமும் – ஜாகோபின்களோ, போல்ஷ்விக்குகளோ எவருக்கும் – தம் சார்பாளரை ஒரே நாளில் ஐந்து முறைகள் சந்திக்க வைக்க முடியாது.

எனவே, விவசாயிகளுக்கு இப் புதிய நம்பிக்கையால் வலியுறுத்தப்பட்ட நியதிகளுக்கேற்ப தம் வேலை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது முடியாத செயலாக இருந்ததில் வியப்படைய ஏதுமில்லை. இத்தகைய பாமரர்களே சமூக அடுக்குகளில் கடைசியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் கறாரான நியதிகளிலிருந்து ஏற்படத் தொடங்கிய விலகல்களில் பலவும் இஸ்லாமிய கிராமப்புறங்களிலேயே முதலில் தோன்றி வலுப்பெற்றன.

பின்குறிப்புகள்:

கட்டுரையாளர் Tariq Ali பற்றிய இதர விவரங்களைக் காண:

http://www.bbc.co.uk/bbcfour/documentaries/features/feature_tariqali.shtml

http://www.zmag.org/bios/homepage.cfm ?authorID=116

குரானின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவிய வலைப் பக்கம்: www.tamililquran.com.

(எண்) – கட்டுரை ஆசிரியர் குறிப்பு

[குஎண்] – மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

[கு1] ஆள்வதற்கு மிகக் கடினமாகிப் போன ரோம சாம்ராஜ்யத்தில் டையோக்ளிசியன் என்னும் தளபதி அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதை வலுப்படுத்தும் நோக்கத்துடன், அதிகாரத்தைக் கைப்பற்ற நிகழும் ரத்தக் களறியை நிறுத்தவும், நம்பகமான, அமைதியான ஒரு வழியில் அதிகாரம் தொடர்ந்து கை மாற்றித் தரப்படுவதற்கு வழி வகுக்கவும் ரோம சாம்ராஜ்யத்தை இரு பகுதிகளாகப் பிரித்தார். மேற்கில் ரோமைத் நகரைத் தலைநகராகக் கொண்டு ஓர் அதிபருடைய ஆட்சியில் மேலை ரோம சாம்ராஜ்யமும், தெற்கே துருக்கியில் ஒரு .நகரத்தைத் தலைநகராகக் கொண்டு கீழை ரோம சாம்ராஜ்யத்தில் ஓர் அதிபருமாக (சீஸர்- Ceasar) ஆனால் கூட்டாக ஆள்வது என்று ஏற்பாடு செய்தார். இவருக்குப் பிறகு வந்த இரு சீஸர்கள் கூட்டாகச் செயல் பட முடியவில்லை. ஒரு சீஸரின் மகனாகிய கான்ஸ்டன்டைன் (கி.பி. 306- 337) இரு பகுதி ரோம சாம்ராஜ்யத்தை மறுபடி ஒன்றாக்கினார். தலைநகரை ரோம் நகரில் இருந்து துருக்கியில் தனது பெயரிட்ட ஒரு நகரத்துக்கு மாற்றி, கான்ஸ்டான்டிநோபில் என்னும் நகரிலிருந்து ஆட்சி செய்தார். இவரே ரோம சாம்ராஜ்யத்தின் முதல் கிருஸ்தவ சக்ரவர்த்தி. கிருஸ்தவத்தை அரசின் மதமாக ஆக்காவிட்டாலும், கிருஸ்தவத்தில் இருந்த பலவகைப் போக்குகளை ஒன்றிணைத்தால்தான் நிம்மதியாக அரசாள முடியும் என்று புரிந்து கொண்டு, கிருஸ்தவத்தில் இருந்த பல அணிகளைக் கூட்டிப் பேச வைத்து அதன் மூலம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட கிருஸ்தவத்தை உருவாக்க முயன்றார். இதன் பிறகு எழுந்த அரசு சார்ந்த கிருஸ்தவமும், தொடக்கத்தில் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசோடு உறவு வைக்காத போக்காகவோ இருந்த மறு வகைக் கிருஸ்தவமும் இன்றளவும் எதிரெதிராக நிற்கின்றன. கான்ஸ்டன்டைன் காலத்தில்தான் அரசு சார் கிருஸ்தவம் தொடங்கியது எனலாம்.

[கு2] வரலாற்றை திருத்துவது என்பதே தவறான செயல் அல்ல. நடந்தவை குறித்த தகவல்கள் பெருகப் பெருக, பலவகை ஆதாரங்கள் கைவரவும், அவற்றில் நம்பகமானவை என்பனவற்றைத் தொகுக்கும் போது புதிய புரிதல் கிட்டலாம். சமீபத்தில் மேற்சொன்ன விசாரணை குறித்த புதுத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் இறக்கவில்லை, ஓரிரு ஆயிரம் மக்களே கொல்லப்பட்டனர், பெருவாரியான மக்களுக்கு துன்பம் ஏதும் தரப்படவில்லை, விசாரணை செய்த மதகுருமார்கள் பெரும்பாலும் மக்களோடு இணக்கத்துடனேயே செயல்பட்டனர் என்று கிருஸ்தவம் சார்ந்த வரலாற்றாளர்கள் எழுதத் தொடங்கி உள்ளனர். இவர்களில் சிலராவது நம்பத்தக்கவர் என்று கருதப் படுகிறார்கள். தாரிக் அலி இங்கு சொல்வது சில வருடங்கள் முன்பு வரை இருந்த பொதுவான புரிதல். மேலும் உலகாயதப் பார்வை உள்ள, அதிலும் இடதுசாரி அணுகல் உள்ள சிந்தனையாளர்கள் தமது சாரியின் வரலாற்றைத் தொடர்ந்து புதுப்பிக்கத் தயாராக இருப்பர். ஆனால் மற்றவர் பற்றிய தமது புரிதலை அவ்வளவு சுலபமாக மாற்றி விடுவதில்லை. அதே நேரம் இதையும் கவனிக்க வேண்டும். சமீபத்தில் ஆய்வாளர்களுக்குத் திறந்து விடப்பட்ட சோவியத் அரசும் தலைவர்களது கோப்புகளும், ஆவணங்களும் ஸ்டாலின் எத்தகைய கொடூரங்களை சோவியத் ரஷ்ய மக்கள் மீது சுமத்தினார் என்பதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன. இவை இந்திய இடதுசாரியினரின் மனப்பாங்கில் சிறு மாறுதலைக் கூட ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னமும் ஸ்டாலினின் படங்களை வைத்து பூசை செய்கிறார்கள், அவரது நூல்களை இன்னமும் தமது விவிலிய நூலாகப் பாடம் செய்கிறார்கள் என்றுதான் தெரிகிறது.

[கு3] Jacobin – 1789 பிரெஞ்சுப் புரட்சியின் போது, சமத்துவ மக்களாட்சியை விரும்பி, அதே நேரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட ஒரு புரட்சிக் குழு.

(4) புதிய மதம் தோன்றியது ஹிஜாசிலா, பாலஸ்தீனத்திலா அல்லது வேறு எங்காவதா என்பது பற்றித் தொடரும் அறிவுபூர்வமான சர்ச்சையை தொல்லியல் துறையினரிடம் விட்டுவிடலாம். கடந்த முப்பது ஆண்டுகளில், ஜான் வான்ஸ்ப்ரோ (John Wansbrough) மற்றும் பட்ரிசியா க்ரோன் (Patricia Crone) ஆகியோருடைய சீரிய படிப்பு இஸ்லாமிய வரலாற்று ஆராய்ச்சியை உருமாற்றி விட்டது. முகம்மது பற்றிய தொடக்க கால வாழ்வுச் சரிதைகள் ‘மிகுந்த இறை நம்பிக்கையால் எழுந்த கற்பனைகளே ‘ என்று வெளிப்படுத்திக் காட்டியுள்ளதோடு, இஸ்லாமிய அடையாளம், மெக்காவையும் குரானையும் மையத்தில் வைப்பது ஆகியவை அவர் இறந்த பல ஆண்டுகளுக்குப் பின்பே எழுந்ததாகவும் கருதுகின்றனர். நம்பிக்கை மிகுந்த முஸ்லிம்களுக்கு இது மிகவும் அதிர்ச்சி தரக்கூடும் என்பதில் ஐயம் இருக்க முடியாது என்றாலும், இத்தகைய ஆய்வுகள் இஸ்லாமிய வரலாறு பற்றிய ஓர் உலகாயத/மதச் சார்பற்ற கண்ணோட்டத்தை வளர்ப்பதன் அவசியத்தை வலுப்படுத்துகின்றன. இஸ்லாம் தோன்றியது, அதன் வளர்ச்சி அசாதாரணமானது, அது எல்லாக் கண்டங்களுக்கும் பயணித்தது, தனக்கு அண்மையில் இருந்த இரு பேரரசுகளை அது கைப்பற்றியது, மேலும் அட்லாண்டிக் கடலின் கரையையும் அதற்குப் பிறகு தொட்டது ஆகியன அனைத்தும் உண்மை நிகழ்வுகளே. தன் உச்ச நிலையில், உலகின் பெரும் பகுதிகளில் மூன்று முஸ்லிம் பேரரசுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன: இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்ட ஆட்டமன்கள், பாரசீகத்தின் ஸஃபாவித்கள் மற்றும், இந்தியாவின் முகலாயப் பேரரசு ஆகியவை.

[கு5] இங்கு அல்லா என்று தாரிக் அலி குறிப்பது நாட்டாரின் தெய்வமாக இருந்த அல்லா என்பது தெளிவு.

[கு6] எபிக்யூரஸ் (கி.மு. 341-270). கிரேக்க தத்துவ ஞானி. அண்ட பேரண்டத்தில் பொருளும், வெறுமையும் மட்டுமே உள்ளதாகக் கருதியவர். பொருட்களோ அணுக்களின் கூட்டமைவால் உருவாகின்றன. இயக்கம் அணுக்களின் பலவகை அசைவுகளால் நிகழ்கிறது. கடவுளோ அல்லது வேறெந்த தெய்வ சக்தியோ உலகையோ, பொருட்களையோ உருவாக்கவில்லை. அண்டப் பெருவெளி முடிவற்றது, எங்கும் நிறைந்தது. அணுக்களால் ஆனவை எல்லாம் தற்செயலால் உருவானவை, முடிவுள்ளவை. நல்வாழ்வு என்பது நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மீது அன்பும் நட்பும் செலுத்துவதும், எல்லாப் பசிகளுக்கும் அளவோடு உணவளிப்பதிலும் அடைய முடிவது. கடவுள்கள் எங்காவது இருந்தாலும் அவர்களால் நமக்கு எதுவும் நடப்பதில்லை, அவர்கள் நித்தியம் உள்ளவர்களாக இருக்கலாம், நம் வாழ்வு மீது அவர்களுக்கு தாக்கம் ஏதும் இல்லை. ஆகவே மனிதர் தம்மைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தினால் போதும் என்று மூட நம்பிக்கைகள், விளக்க முடியாதவற்றின் மீது கொள்ளும் பயம் ஆகியவற்றை எளிதாக விலக்க வழி செய்தவர் இவர். தன்னிறைவுள்ள அந்தரங்கம், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு மீது செலுத்திய தனிக்கவனம், மேலும் அடிமைகள், பெண்கள் ஆகியோரை விலக்காமல் தன் சமூகத்தில் அனுமதித்தது ஆகிய செயல்களால் இதர நம்பிக்கை வழிகளுக்கு உவப்பில்லாத தத்துவப் பாதையாக இருந்தது இவரது வழி. தொடக்க கால கிருஸ்தவம் இதை அவ நம்பிக்கையோடு பார்த்தது. பதினேழாம் நூற்றாண்டில் மீட்டெடுத்து உயிரூட்டப்பட்ட இவரது தத்துவம் இன்றைய அறிவியலுக்கு அடிப்படையாக அமைந்தது. வாழ்வில் மகிழ்ச்சி ஒன்றுதான் நல்ல விஷயம், ஒழுக்கம் என்று இவர் போதித்தார்.

(7) லயால் (C.J. Lyall) எழுதிய பண்டை அரபுக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் (Translations of Ancient Arabian Poetry) என்ற புத்தகத்திலிருந்து, லண்டன் 1930

(8) இவற்றில் சில குரானிலேயே உள்ளன. புனித நூலானாலும், ஓரளவில் குரான் குறிப்பிடத்தக்க விதமாய் நடைமுறைக்கு உதவுவதாக இருக்கிறது. இரண்டாம் அத்தியாயத்தில் இப்படி உள்ளது (2.282): ‘ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் அதை உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எவனும் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது, அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவனே வாசகத்தைச் சொல்லட்டும் அவன் தன் ரப்பானை (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும் மேலும், அதில் எதையும் குறைத்து விடக் கூடாது… ‘ அல்லது பின்னால் பெண்கள் என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் உள்ளது (4.10-12): ‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான் பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும் இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாாிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்… ‘

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்