ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5

This entry is part of 52 in the series 20040513_Issue

பி.கே. சிவகுமார்


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் – 2004:

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இப்பாராளுமன்றத் தேர்தலில் சரிவைக் கண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கெதிரான கொள்கைகள் உடைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக, சரத்பவாரின் நேஷனலிஸ்டிக் காங்கிரஸ் பார்ட்டி இன்னபிற ஆகியன வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை, பா.ஜ.க கூட்டணி வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, மக்கள் பா.ஜ.க கூட்டணிக்கெதிராக தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் எனத் தெரிகிறது. சோனியா காந்தி பிரதமராகக் கூடும். அவர் வெளிநாட்டவர் என்கிற வாதம் இனிமேல் பா.ஜ.க தொண்டர்கள் அல்லது காங்கிரஸைப் பிடிக்காதவர்கள் நடுவில் மட்டுமே எடுபடக் கூடும். பொதுமக்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே கூட இவ்வாதம் பொதுமக்களிடம் எடுபடாததாலேயே பா.ஜ.க இதுவரை தனியாக அறுதிப் பெரும்பான்மை பெற இயலாமல் இருந்தது. சொல்லப் போனால், 1999 தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனலாம். கூட்டணிக் கட்சிகளின் வலிமையாலேயே 1999-ல் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இப்போது அதேபோன்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடும். இந்தியாவுக்கு கூட்டணி ஆட்சிதான் இன்றைய தேவை. அறுதிப் பெரும்பான்மை பெற்று நடத்தப்படும் தனிக்கட்சி ஆட்சிகளைவிட கூட்டணி ஆட்சி நல்ல விளைவுகளைத் தரும்.

சோனியா காந்தி ஒருமுறைப் பிரதமராகிவிட்டால், பின்னர் அவர் வெளிநாட்டவர் என்ற வாதம் அவரை அப்படிச் சொல்பவர்களிடமேகூட மதிப்பிழந்துவிடக் கூடும். என்னைப் பொறுத்தவரை சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற கருத்து உப்புச் சப்பில்லாதது. சோனியா காந்தி இந்தியக் குடிமகள். அவர் கூட்டணிக்கு வாக்களித்தப் பொதுமக்களுக்கு அவர் பிரதமராவதில் ஆட்சேபணை இல்லை. எனவே, அவர் பிரதமராக வேண்டும். பின்னர், பிரதமராய் அவர் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லையென்றால், வாக்காளர்களுக்கு வேறுவழிகள் உள்ளன. அனுபவம் இல்லை என்று சோனியாகாந்தியைப் பற்றிச் சொல்கிறார்கள். அனுபவத்துடன் யாரும் பிறப்பதில்லை. அவர் திறமையான பிரதமரா என்பதைக் காலம் சொல்லும். சோனியா காந்தி இன்னொரு நரேந்திர மோடியாக இருக்க மாட்டார் என்பதால் அவர் பிரதமராவதை வரவேற்கிறேன்.

காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்காமல், கூட்டணி ஆட்சி அமைப்பது நாட்டுக்கு நல்லது. அந்தக் கூட்டணி அமைச்சரவையில் திமுக, பாமக, மதிமுக, சரத்பவாரின் கட்சி என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளூம், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கட்சிகளும் பங்கேற்க வேண்டும். இது பிரச்னைகளில் ஒத்த கருத்தை அடையவும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் காக்கவும் உதவும். திமுக மத்திய அரசில் பங்கேற்காது என்று சொன்னதைக் கருணாநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது தி.மு.க.வுக்கும் உதவிகரமாகவே அமையும் என்பதை அறியாதவர் அல்ல அவர். எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாத ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தங்கள் கட்சியினரைக் காப்பாற்றிக் கொள்ள தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது உதவும். பா.ஜ.க. தோற்றிருந்தாலும் அதன் செல்வாக்கு கணிசமாக உள்ளது. எனவே, காங்கிரஸீம் அதன் கூட்டணி கட்சிகளும் அதைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல், ஊழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நாட்டு நலன், பொதுமக்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முக்கியப் பிரச்னைகளில் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்கள் நினைத்துவிடக் கூடும்.

சோனியா வெளிநாட்டவர், ராமர் கோவில் விவகாரம், போபர்ஸ் ஊழல், பரம்பரை ஆட்சி என்று உதவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்காமல், பா.ஜ.க. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், ஜீவாதாரப் பிரச்னைகள் ஆகியவற்றுள் கவனம் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து வியூகங்கள் வகுத்தாலோ பத்திரிகைகள் பாராட்டினாலோ வென்றுவிட முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அருண் ஜெட்லியும், பிரமோத் மகாஜனும் படித்தவர்களைக் கவர்ந்த அளவுக்குப் பாமரர்களைக் கவரவில்லை. அதற்குக் காரணம் – பாமரர்களைக் கணக்கில் கொள்ளாமல் – இந்தியா ஒளிர்கிறது என்கிற பிரமையில் பாமரனும் விழுந்துவிடுவான் என்று நினைத்ததே.

மாநிலத்தில் 50,638 கோடி கடனை வைத்துக் கொண்டு, விவசாயிகளின் தேவைகள், மக்களின் பிற பிரச்னைகள் ஆகியவற்றுக்குச் சமமாக நிதியும் கவனமும் ஒதுக்காமல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை மக்களுக்கேற்றவாறும் மக்களைப் பாதிக்காதவாறும் கொண்டுவராமல் செய்தித்தாள்களிலும் இணையத்திலும் தொழில்நுட்ப ஆட்சியாளர் என்று பெயர் வாங்க முனைபவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் சந்திரபாபு நாயுடுக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இலவசமாக மின்சாரம் முதலியன தருவது சரியில்லை என்று படித்தோரில் சிலர் நினைக்கிறார்கள். ப.சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசிய கூட்டம் ஒன்றில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட விவசாயம் போன்றவற்றுக்கு அரசாங்கம் கொடுக்கிற சலுகைகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி, இந்தியா போன்ற நாடுகளின் விவசாயிகளூக்கு இத்தகைய சலுகைகள் எவ்வளவு அத்யாவசியமானவை என்று விளக்கியது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் அரசாங்கம் தருகிற சலுகைகளின் அளவு ஆராயப்பட்டபின் குறைக்கப்படலாமே ஒழிய, அவற்றை முழுமையாக நீக்க வேண்டும் என்று சொல்வதை பொருளாதார நிபுணர்கள்கூட அங்கீகரிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களின்பால் அக்கறை காட்டுகிற பொதுஅறிவுடையக் கொள்கைகள் நிறைந்த பொருளாதார சீர்திருத்தங்களை (Economic reforms with human face and common sense) வரப்போகும் ஆட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புவோம்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தோற்றிருக்கிறார். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவராக இருந்தால், 1996 தேர்தல் தோல்விக்குப் பின்னரே அவர் அதைக் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் இன்னமும் அதீதமான தன்னம்பிக்கை, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதைக் கேட்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் – அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. காணாமல் போய்விடும். கொள்கைகள் ஏதுமின்றித் தனிநபர் கவர்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இத்தகைய அதிர்ச்சி வைத்தியங்கள் அவசியம் தேவை.

பா.ஜ.க. போன்ற கட்சிகளின் குறுகிய மதவாத நோக்கங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கும் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஏற்படக் கூடிய நீண்டகாலப் பிரச்னைகள் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியின் அவசியம் குறித்து போர்க்கால அடிப்படையில் குரல் கொடுத்து வந்த ஹர்கிஷண்சிங் சுர்ஜித் போன்ற தலைவர்களுக்கு – மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து சகமனிதரை நேசிக்கிற ஒவ்வொரு இந்தியரும் சொல்கிற நன்றியாகவே இத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்தியாவின் வாக்காளர்கள் அதிபுத்திசாலிகள் என்பதையும், கத்தியின்றி ரத்தமின்றி மாறுதல்களைக் கொண்டுவருவதில் ஜனநாயகத்துக்கு இணையில்லை என்பதையும் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பதைவிட – மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற ஜனநாயகம் ஜெயித்திருக்கிறது. வாக்களித்துத் தங்கள் வலிமையைக் காட்டிய இந்தியாவின் கோடானுகோடி வாக்காளர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.

**** **** ****

எழுத்தாளர்களைப் பற்றிய குறும்படங்கள்:

சாகித்திய அக்காதெமி எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடும் விவரணப் படங்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களுக்கு ஒரு சமூகம் திருப்பிக் கொடுக்க வேண்டிய மரியாதையின் ஓர் அடையாளமாகவும், எழுத்தாளர்களை விஷீவல் மீடியம் வழியே அவர்களின் வாசகர்களுக்குக் காட்டுகிற வரலாற்று ஆவணமாகவும் இப்படங்கள் அமைகின்றன.

ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் சா.கந்தசாமி இயக்கிய ஜெயகாந்தன் விவரணப் படத்தைப் பார்த்தேன். சமீபத்தில் அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனையும், ரவி சுப்ரமணியன் இயக்கிய இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞனையும் பார்க்க நேர்ந்தது. இவ்விரண்டுப் படங்களையும் பார்த்தபின் மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் விவரணப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. இம்மூன்றையும் இங்கே ஒப்பிடவோ மதிப்பிடவோ போவதில்லை. இம்மூன்றைப் பற்றியும் எனக்குத் தனித்தனியே கருத்துகள் உள்ளன என்பது இருக்கட்டும்.

எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைப் பற்றிய என் பொதுவான கருத்துகளை முன்வைப்பது மட்டுமே நான் இப்போது செய்யப்போவது.

எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்கள் பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. எழுத்தாளரின் குழந்தைப் பருவம், அவர் படைப்புகளின் சில பகுதிகளை எழுத்தாளரோ பிறரோ வாசித்துக் காட்டுவது, எழுத்தாளரின் குடும்ப விவரங்கள், எழுத்தாளரே தன்னைப் பற்றிப் பேசுவது, தமிழின் பிற முக்கியமான படைப்பாளிகள் எழுத்தாளர் பற்றிய தன் கருத்துகளைச் சொல்வது ஆகியவை அவற்றுள் சில.

ஓர் எழுத்தாளரைப் பற்றியக் குறும்படத்தில் இவையெல்லாம் அவசியமே. ஆனாலும், நான் பார்த்த மூன்று படங்களுமே எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. இயக்குனர்கள் மூன்று பேருமே கலைஞர்கள். தங்களுக்கே உரித்தான வகையில் படத்தை அணுகியும் இயக்கியும் இருக்கிறார்கள். எனவே, என் திருப்தியின்மைக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால், இயக்குனர்களுக்குக் கிடைத்திருக்கிற சொற்ப நேரத்தைச் சொல்லத் தோன்றுகிறது. முப்பது நிமிடங்களுக்குள் ஓர் எழுத்தாளரின் ஆளுமையை, சமூகத்தில் அவர் படைப்புகளும் அவரும் ஏற்படுத்தியிருக்கிற பிம்பத்தை, சலனங்களை முழுமையாக வெளிக்கொண்டு வந்துவிட முடியாது.

எனவே, சாகித்திய அக்காதெமி இனிமேல் இப்படங்களுக்கான நேரத்தை குறைந்தபட்சம் ஒருமணி நேரமாக மாற்ற முன்வரவேண்டும். ஒருமணி நேரமாவது கிடைத்தால்தான் இயக்குனர்கள் ஓர் எழுத்தாளரின் பல்வேறு ஆளுமைகளில் சிலவற்றையாவது முழுமையாக வெளிக்கொணர முடியும். உதாரணமாக, இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞன் படம், அவரின் நாடகப் படைப்புகள், அதுசார்ந்த கருத்துகள் என்று முக்கால்வாசி நேரம் அதிலேயே சுற்றி வருகிறது. ஆனால், சிறுகதை, நாவல் ஆகியவற்றில் இ.பா செய்த சாதனைகளின் பக்கம் சரியாகக் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போயிருக்கலாம். இ.பா. நாவலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பு நாடகத்தைப் பற்றியதாக இருக்கிறது என்பதால், இ.பா.வின் நாடகப் பங்களிப்பு பற்றியே இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கக் கூடும். இத்தகைய படங்களின் நோக்கம் முடிந்த அளவு ஓர் எழுத்தாளரின் எல்லாத் துறைகளையும் அவற்றில் அவர் செய்த பங்களிப்புகளையும் விவரமாக வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்று நான் நம்புகிறேன். அதற்கு இயக்குனருக்கு அதிக நேரம் தேவை. அது கொடுக்கப்படவும் வேண்டும். இங்கே இ.பா. பற்றிய படத்தை ஓர் உதாரணத்துக்காகவே எடுத்துக் கொண்டுள்ளேன். குறை சொல்வதற்காக அல்ல. இதையே மற்ற படங்களிலும் நான் உணர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் தாங்கள் சொல்ல விரும்பிய கருத்துகளைத் தாங்கள் சொல்ல விரும்பிய வண்ணம் இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதால் இது இயக்குனர்களின் குறையல்ல.

வாழ்நாள் முழுவதும் தம் எழுத்துகளால் தமிழ்ச் சமூகத்திடையே கருத்தாக்கங்களையும், எதிர்விளைவுகளையும், சலனங்களையும், மாற்றங்களையும், விவாதங்களையும் கொண்டுவந்த எழுத்தாளர்கள் பற்றி முப்பது நிமிடங்களில் சொல் என்று இயக்குனர்களைச் சொல்வது, அந்த எழுத்தாளருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய முயற்சிகள் எவருக்கும் திருப்தியற்றவையாகவும், குறைபட்டுப் போனவையாகவும் உணரப்பட வாய்ப்புகளும் தருவதாக இருக்கும்.

எனவே, சாகித்திய அக்காதெமி இப்படங்களுக்கான நேரத்தை உயர்த்தி அதற்கேற்றவாறு உதவித்தொகையையும் உயர்த்துவது இன்றியமையாதது. சாகித்திய அக்காதெமியின் குழுவில் இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் அதற்காக ஆவன செய்ய வேண்டும்.

—-

Series Navigation