வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

மத்தளராயன்


‘அங்கமாலி பக்கம் எளவூர் பகவதி அம்பலத்தில் தூக்கம் ‘ என்று மலையாளப் பத்திரிகைகள் எட்டுக் காலத் தலைப்பில் அலறி, கேரள அரசை, முக்கியமாகக் காவல் துறை அதிகாரிகளின் நிம்மதியான உறக்கத்தை ஒரு வாரமாகத் தட்டிப் பறித்த எளவூர்த் தூக்கமானது ஒரு வழியாக நடக்காமல் போன நிம்மதி பலருக்கும்.

தூக்கம் என்றால், கோவிலுக்குள் பகவதியின் பக்தர்கள் படுத்துத் தூங்குகிற சமாசாரமில்லை. இந்த பக்த ஜனங்கள் முதுகில் கூர்மையான வேல்களைக் குத்திக் கொள்வார்கள். அப்புறம் முதுகு வேலைச் சங்கிலியில் பிணைத்து உயரமான மரக் கம்பத்தில் கொக்கி போட்டு இழுத்து மாட்டித் தொங்கியபடிக்கே கோவிலை வலம் வருவார்கள் இவர்கள். இப்படித் தூக்கி நிறுத்தி ஆலயப் பிரதட்சணம் வைப்பதுதான் எளவூர்த் தூக்கம். மலேசியத் தமிழர்கள் முருகன் கோவிலில் கொண்டாடும் தைப்பூச வழிபாட்டுக்கும் இதற்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு.

பதினாறு வருடம் முன்புவரை நடந்து வந்த எளவூர்த் தூக்கச் சடங்கு அதன் வன்முறை வெளிப்பாட்டை உறுதியாக எதிர்த்த சுவாமி பூமானந்த தீர்த்தர் போன்ற துறவிகளின் முயற்சியால் இல்லாது போனது. ஆனால் இந்த ஆண்டு எளவூர் பகவதி அம்பல நிர்வாகிகள் அதைத் திரும்பக் கொண்டுவர முடிவு செய்தார்கள். கோவிலில் பூசை வைக்கும் தாந்த்ரி மூலம் அஷ்டமாங்கல்யப் பிரச்னம் வைத்துப் பார்த்துத் தேவி உத்திரவு கொடுத்தபடி இதை ஆரம்பிப்பதாக பகவதியையும் பூசாரியையும் இதில் இழுத்து விட்டார்கள் இவர்கள். கோவில் வருமானத்தைப் பெருக்கவே ஒழிந்து போன வழக்கத்தைத் திரும்பக் கொண்டு வருவதாகப் பெரும்பான்மை மக்கள் நினைக்க, பூமானந்தா திரும்ப எதிர்க்குரல் கொடுத்தார்.

ஆச்சரியப்படத்தக்க விதத்தில் கேரள அரசியல் கட்சிகள் எல்லாம் இந்தச் சடங்கு தொடரக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்துக் கொண்டிருக்க, அங்கே காலூன்றத் துடித்துக் கொண்டிருக்கும் சிவசேனையோ கோவில் நிர்வாகிகளோடு கூட்டுச் சேர்ந்து இது எப்படியும் நடந்தே தீரும் என்று சூளுரைத்தது. போன தலைமுறை கேரளீய இளைஞர்களைச் செங்கொடி காந்தமாக ஈர்த்து புரட்சி வழியில் நடக்க வைத்தது என்றால், தற்போது மதங்கள் உயர்த்தும் கொடிகள் அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன . சிவசேனைக்கும், எளவூர்த் தூக்கத்துக்கும் ஆதரவாகத் திரண்ட கூட்டத்தில் இளைஞர்கள் அதிகம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

தூக்கம் நடைபெறாது என்று கலெக்டர் அறிவிக்க, நடத்தியே தீருவோம் என்றது சிவசேனை. எதிர்த்து போராடத் துறவிகள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டத்தோடு யாத்திரையாக எளவூருக்கு வந்த பூமானந்தா சாமியாரை, ஊருக்குள் நுழைவதற்கு முன்பே ‘அமைதியை நிலைநிறுத்த ‘ போலீஸ் கைது செய்தது. கோவிலுக்குள் கலவரமான சூழ்நிலை. போன வியாழக்கிழமை பகல் முதல் கூடிய அங்கே பக்தர் கூட்டம், உள்ளே போலீஸ் நுழைவதை எதிர்த்தது. ஆனாலும் காவல்துறை நேரே உள்ளே நுழைந்து, பக்தர்களை முதுகில் குத்திய வேலால் கட்டித் தூக்கித் தொங்கவிடும் தூக்குக் காரனையும், கோவில் நிர்வாகிகளையும் கைது செய்ததோடு தூக்குமரம், இரும்புக் கொக்கி இத்யாதி பொருட்களையும் கைப்பற்றி எடுத்துப் போனது.

வெள்ளிக்கிழமை எப்படியும் தூக்கம் நடந்தே தீரும் என்று அடம் பிடித்த பக்தர்களும் அவர்களை வழி நடத்தியவர்களும் வெள்ளி காலையில் இறங்கி வந்தார்கள். சும்மா வேலைப் பிடித்துக் கொண்டு வலம் வந்து பெயருக்கு சடங்கு நடத்திவிட்டுத் திரும்பலாம் என்று இவர்கள் முடிவு செய்ய, கோவில் பூசாரிகள் ஒத்துக் கொள்ளவில்லை. நடந்தா முழுசா நடந்து எல்லோரும் தொங்கணும். இல்லே ஒண்ணும் நடக்கக் கூடாது. இப்படி வேலைப் பிடிச்சுக்கிட்டு வெறுமனே சுத்த இன்னொரு பிரச்னம் வைத்து பகவதி அனுமதி வாங்கணும் என்பது அவர்களின் பிடிவாதம்.

வேலை எடுத்து வைத்துவிட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கக் கிளம்ப, ஆக எப்படியோ எளவூர்த் தூக்கம் இல்லாமல் போனது.

இது இப்படி இருக்க, மாத்ருபூமியில் ஒரு வாசகர் கடிதம்.

ஏப்ரல் பதினொன்று உங்க பத்திரிகை முதல் பக்கத்திலே குரூரமான ஒரு காட்சியை வெளியிட்டு விளம்பரப்படுத்தியிருக்கீங்களே. இதுவும் ஒரு ஸ்டண்டு தானே. பகுத்தறிவுவாதிகள் மாயமில்லே மந்திரமில்லேன்னு இதையும் செஞ்சு காட்டுவாங்களே.

கடிதத்தின் எள்ளல் தொனி என்ன விஷயம் என்று அறியத் தூண்ட, பத்து நாள் முந்திய பத்திரிகையைத் தேடியெடுத்துப் பார்த்தேன். அது ஈஸ்ட்டர் தினமான ஞாயிறன்று வெளியானது. முதல் பக்கத்தில் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த ஏசுநாதரின் சித்திரம்.

அடுத்த தலைமுறைக்கு அடுத்து வரப் போகும் தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

****

சுவிட்சர்லாந்தின் இருபத்தையாயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சாதுவாகத் தொடங்கும் ஆவணப் படம் ஒன்றை அண்மையில் காண வாய்ப்புக் கிட்டியது. நாடக ஆசிரியரும் தயாரிப்பாளருமான நண்பர் சி.அண்ணாமலை தான் இயக்கிய அந்த ஆவணப் படத்தின் குறுந்தகட்டை அனுப்பியிருந்தார். கணையாழி, சுபமங்களா போன்ற இலக்கிய இதழ்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த அண்ணாமலை தற்போது பி.பி.சியில் பணியாற்றி வருகிறார். இலக்கியப் பத்திரிகையோ, பிரித்தானிய ஒலிபரப்புப் பாட்டியம்மாவான அரசு நிறுவனமோ எங்கே இருந்தாலும் நான் அறிந்த பத்துப் பதினைந்து வருடமாக அண்ணாமலையின் இதயம் முழுக்கத் தமிழ் நாடகம்தான். நாடக வளர்ச்சிக்கு மேடையிலும் மேடைக்குப் பின்னும் சிறப்பாகத் தொண்டாற்றி வருகிற அண்ணாமலைக்கும் சுவிட்சர்லாந்துத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு ?

இந்த இருபத்தையாயிரம் பேரில் முக்காலே மூணு பாகம், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள். இவர்களில் பலரும் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு நாளைக்கு இருபது மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றி ஓய்வு என்பதே அனுபவிக்க முடியாத ஒரு வசதி என்றாகிப் போனவர்கள். பிறந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெறியப்பட்ட துயரமும், உற்றார் உறவினரைப் பிரிந்த துக்கமும் தவிர, உயிர்வாழ வேண்டி இப்படி வாதனை வேறு. ஆனாலும் அவர்கள் மனதில் கொழுந்து விட்டெறியும் இன, மொழி, சமூக, தனிமனித வாழ்க்கை பற்றிய கனவுகளையும், லட்சியங்களையும், நிராசைகளையும், வெற்றிகளையும் கலை வெளிப்பாடுவாக்குவதின் மூலம் இந்த முகமறியாத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்தையும், நாடகம் போன்ற நிகழ் கலைகளையும் முன்னெடுத்துப் போவதில் தமிழகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் எத்தனையோ படி மேலேதான். அண்ணாமலையின் ஆவணப்படம் அதை அழுத்தமாகச் சொல்கிறது.

பதினைந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் தமிழ் நாடக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தற்போது சுவிஸ் நாடக அரங்கில் குறிப்பிடத்தகுந்த சக்தியாகவும் முன்னோக்கி நடப்பதாகத் தெரிய வருவதில் மகிழ்ச்சிதான். அது மட்டுமில்லை, தமிழர்களும், சுவிஸ் நாடகக் கலைஞர்களும் பங்கு பெறும் இந்த நாடகங்கள் தமிழில் மட்டுமின்றி ஜெர்மன் மொழியிலும் அமைந்து உலக அரங்கில் தமிழ்க் கருத்தாக்கம் இடம் பெற வழிவகுப்பதில் இரட்டை மகிழ்ச்சி.

இந்த நல்ல காரியத்தில் ஆண்டன் பொன்ராசாவின் பங்கு முக்கியமானது. ‘மறளம் ‘ என்ற நாடகத்தில் தொடங்கிய பணி இது. சுவிஸ்காரர்கள் தமிழ் மாநிலத்தில் அகதிகளாகப் புகும் அங்கதத்தை உள்ளடக்கி, புலம் பெயர்ந்த துக்கத்தை முழு வட்டம் சுழலத் திருப்பி அதைக் நாடகம் என்ற கலை வடிவமாக்க, அதை அனுபவித்த ஒருவரால் தான் முடியும்.

இதற்கு அடுத்து, ஓடிக் கொண்டே இருக்கும் ஓர் இனத்தைப் பற்றிய ‘ஸ்ரீசலாமி ‘ நாடகம் கவனிப்போடு, பரிசும் பெற்றது. தொடர்ந்து ‘பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும் ‘, ‘ஐயோ ‘ போன்ற நாடகங்கள் மூலம் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்ற இந்த நாடகக் குழுவின் வெற்றியில் ஈழக் கூத்தன் என்ற லண்டன் தாசீசியஸின் பணியும் குறிப்பிட வேண்டியது.

இவர்களின் வெற்றி, சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த மற்றத் தமிழ் நாடகக் குழுக்களையும் நாடகப் புரிதலையும், உள்ளடக்கத்தையும், உருவாக்கத்தைப் பற்றியும் யோசிக்க வைக்க, சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி மூன்றாண்டுகள் முன் உருவம் கொண்டது. பொன்ராசா, தாசீசியஸ் போன்றோரோடு தமிழக நாடக ஆசிரியரும் கலைஞருமான வேலு சரவணன், இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரும், சுவிஸ் நாடக இயக்குனர்களும் வகுப்பெடுக்க இங்கே மாணவர்கள் பயின்றது உடலை நெகிழ்வாக வைப்பதற்கான பயிற்சிகள் தொடங்கி, மரபார்ந்த கூத்தாட்டம், பாட்டு, இன்னும் தமிழில் எழுதப் பயிற்சி என்று பலவும்.

வகுப்பறை மட்டுமின்றி, முறை சாராத கல்வியாகவும் பயிற்சி. உடல் ரீதியான வன்முறைப் பிரயோகம் இன்றி வார்த்தைகளால் காயப்படுத்தி ஒருவரைக் கோபமூட்டுவது போன்ற இவை மாணவர்களுக்கு அப்படியான வன்முறையை எப்படிச் சமாளித்து வெற்றி கொள்வது என்றும் மறைமுகமாகவேனும் சொல்லித்தரத் தவரவில்லை என்று இக்கல்லூரியில் மூன்றாண்டு படித்துப் பட்டம் வாங்கிய மாணவர்களும், மாணவியரும் குறும்படத்தில் விரிவாகச் சொல்கிறார்கள். வகுப்பில் பயிற்சியாக இவர்கள் தயாரித்து இயக்கி நடித்த கடலம்மா, மலையப்பா போன்ற நாடகங்கள், இன்னும் நிறைய தாசீசியஸ்களும், வேலு சரவணன், ஆண்டன் பொன்ராசாக்களும் உருவாகிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.

அண்ணாமலை தன் பங்குக்கு சுவிஸ் நாடகக் கல்லூரிக்காக, ‘அல்ப்ஸ் கூத்தாடிகள் ‘ என்ற நாடகத்தை எழுதி இயக்கியிருப்பதாகச் சொன்னார்.

இவர்கள் அத்தனை பேரையும் வாழ்த்தும் மத்தளராயனுக்கு ஒரு சிறிய ஆதங்கமும் உண்டு. கூத்தும், இசையும் பிரதானப்பட, நிகழ்காலப் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்டு மரபையும் நவீனத்தையும் இழைத்துத் தமிழ் நாடகம் வளர்வது தேவைதான். என்றாலும் இதற்கு ஒரு எல்லை இருப்பதாக நினைக்கிறேன். அளவுக்கு அதிகமாக ஆட்ட பாட்டம் அமையும் போது, அயர்வு மேலிடப் பார்வையாளர் கவனம் சிதறலாம். சொல்ல வந்த கருத்து போய்ச் சேராமலே தொலைந்து விடும் அபாயமும் உண்டு.

பார்சி தியேட்டரில் தொடங்கி, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் வழி முன்னேறி, அறிஞர் அண்ணா, டி.கே.ஷண்முகம், சகஸ்ரநாமம், கோமல் சாமிநாதன் போன்றோரால் நடனமும் பாட்டும் இன்றி, வசனமும் நடிப்புமே பிரதானமானதாகக் கொண்டு வளர்ந்த தடத்திலிருந்து மாறித் தமிழ் நாடகம் திரும்ப இப்படி முழுக்க மரபுக்குள் ஆட்ட பாட்டத்தோடு திரும்பப் போக வேண்டியதில்லை.

அப்படியாகும் போது, நாடகப் புரிதல் உள்ள குறைந்த பட்சம் படைப்பாளிகளும், கலைஞர்களும், பார்வையாளர்களும் தமிழுக்குக் கிடைக்கலாம். ஆனால் மராத்தி நாடக மேடையில் பெருவெற்றி பெற்ற விஜய் டெண்டுல்கர், சத்யதேவ் துபே, மகேஷ் எல்குஞ்ச்வர், பெரோஸ் கான் போன்ற நாடக ஆசிரியர்களும், ‘சகாராம் பைண்டர் ‘, ‘காசிராம் கொத்வால் ‘, ‘ வாதே சிராபந்தி ‘, ‘ஷாந்ததா, கோர்ட் சாலு ஆகே ‘, ‘கமலா ‘, ‘காந்தி வெர்சஸ் காந்தி ‘ போன்ற நல்ல நாடகங்களுக்கு இணையான படைப்புகளும் கொண்ட இன்னொரு வகை பேரலல் தியேட்டர் தமிழுக்குக் கிட்டாமல் போய்விடும். எப்படிப் பார்த்தாலும் இழப்பு நமக்குத்தான்.

****

ஹரிதகம் என்ற இணையத் தளத்துக்கு நண்பர் ஜெயமோகன் ஆற்றுப்படுத்தினார். நவீன மலையாளக் கவிதைகளுக்கானது இது.

மெல்ல மலையாளக் கவிதையில் ஒரு மாறுதல் நிகழ்வது தெரிகிறது. மரபும், அடர்த்தியான படிமங்களும் முன் நிற்க விஷ்ணு நாராயணன் நம்பூத்ரி, அக்கித்தம், சுகதகுமாரி போன்ற மூத்த சமகாலக் கவிஞர்கள் எழுதும் கவிதைகளிலிருந்து நிறைய விலகி மொழியை நெகிழ்த்தி, கவிதானுபவத்தைச் சிக்கனமான வாக்குகளில் உண்டாக்கும் இந்த இளம் கவிஞர்களுக்கு அய்யப்பப் பணிக்கரும், சச்சிதானந்தனும் முன்னோடி.

பெண் கவிமொழியில் இந்த நெகிழ்வோடு கூட ஒரு புதிய துணிச்சலும் தென்படுகிறது. மாதவிக் குட்டியும், சாரா ஜோசஃபும் உரைநடையில் சாதித்தது தற்போது கவிதையில் கடந்து வந்திருக்கிறது.

பழைய எழுத்துப் பெண்ணுங்களே

ஸ்வப்னக்காரிகளே

ஆட்டக்காரிகளே

பாட்டுக்காரிகளே

வேச்யகளே

என்று சகல பெண்களையும் விளித்து

சுவடுகள் சுவடுகள்

பாட்டுகள் பாட்டுகள்

கண்ணுகள் தொலிகள்

எல்லாம் ஊஞ்ஞாலினெப்போலெ (ஊஞ்சல் போல்) உயரும்போள்

என்றெ ரஹஸ்யம் நிங்ஙளிளேக்குப் பகராம்

என்று வி.எம்.கிரிஜா தன் கவிதையில் சொல்லும் ரகசியம் –

என் வீட்டுத் தோட்ட மண்ணில்

ஷொரணூர் வழியில்

பசும்புல்போல் வாடையடித்துச்

சுகம் தரும்

அவன் உடலில் ரோமங்கள்.

வித்தியாசமாக, மிக எளிய, அகராதியைத் தேடி ஓட வேண்டாத சொற்களில் சொல்லப்படும் கவிதைகள் நிறைய. கல்லூரியில் வேதியல் விரிவுரையாளரான மோஹனகிருஷ்ணன் காலடி எழுதிய ‘சங்கரேட்டன்றெ ஆன ‘ இது –

சங்கரேட்டனின் யானை

—-

பள்ளிக்கூடம் விட்டாச்சு.

இந்தப் பக்கம் இழுத்தால்

அந்தப் பக்கம் போகும் ஜன்னல்களின்

காதைப் பிடித்து முறுக்கி

கூறுகெட்ட கதவுகளின்

தலையில் குட்டி அடைத்தார்

ஸ்கூல் பியூன் சங்கரேட்டன்.

சுரேஷ்குமாரின் சோற்றுப் பாத்திரம்

ராதிகாவின் குடை

ஞாபக மறதி வாத்தியாரின் பொடி டப்பா

எல்லாம் பெருக்கி வாரினார்.

முகம்மது குட்டியின் முக்கட்டையைக் கண்டார். எடுக்கவில்லை.

மூணு பி வகுப்பு கரும்பலகையில்

அழிக்க மறந்துபோன ஒரு யானை.

என்ன செய்யலாம் என்று யோசித்தபடி

முதல் பெஞ்சில் உட்கார்ந்தார் சங்கரேட்டன்.

யானை சொன்னது :

மலைவெள்ளத்தில் அடித்து வரப்பட்டேன்.

பள்ளிக்கூடம் கண்டு இங்கே படியேறினேன்.

டிராயிங் மாஸ்டர் கட்டிப் போட்டார்.

பள்ளிக்கூடத்திலேயே இருந்துக்கறேனே.

பகல் கஞ்சி குடிக்கக் கிடைக்கும்.

காலையில் காவல் நிற்பேன்.

தலைசுற்றி மயக்கம் போட்டு விழும் குழந்தைகளை

முதுகிலேற்றி வீட்டில் விட்டு வருவேன்.

சங்கரேட்டனுக்கும் ஹெட்மாஸ்டருக்கும்

ஆளுக்கொரு மோதிரம் ரகசியமாய்த் தருவேன்.

கதைகேட்டுத் தூங்கிப் போனார் சங்கரேட்டன்.

அடுத்த நாள் கணக்கெடுக்க வந்த ஏ.இ.ஓ கண்டது

உதைத்து மிதித்து உடைந்த

பெஞ்ச் தோட்டத்தை.

புதுக்கவிதையின் சாத்தியங்களில் அது நீர்த்துப் போவதும் ஒன்று. மலையாளக் கவிதைக்கும் அது நேராதிருக்கட்டும்.

மத்தளராயன்

—-

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்