ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
பி.கே. சிவகுமார்
ஹார்வார்டில் கொடி நாட்டும் பெண்கள்:
பெண்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். வருகிற இலையுதிர்காலத்தில் ஹார்வார்டில் முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆண்களைவிட அதிகம் என்று டைம் எழுதியிருக்கிறது. வித்தியாசம் அதிகமில்லை. மூன்றுதான். இது என்ன ? நம்ம ஊரு எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் டூ முடிவுகளில் பெண்கள் ஆண்களை முந்திச் செய்கிற சாதனைகளைவிடவா என்று கேட்கிறீர்களா ? அதுவும் சரிதான்.
மேலும் இலையுதிர்காலத்தில் முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 18.9% மாணவ மாணவிகள் ஆசிய அமெரிக்கர்களாம். இதில் பெரும்பகுதி சீன மற்றும் இந்திய மூலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயம். 10.3% ஆப்பிரிக்க அமெரிக்கர்களும், 9.5% லத்தினோஸ் (ஸ்பானிய மொழி பேசுபவர்கள்) என்றும் டைம் எழுதுகிறது. இம்மூன்று சதவீதங்களுமே இக்குறிப்பிட்ட பிரிவுகளில் சாதனைகளாம்.
மற்றவர்களை ஒப்பிடும்போது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கல்வியில் அவ்வளவாகத் தொடர்வதில்லை என்று ஒரு பிம்பம் இங்கே நிலவுகிறது. நானும் கொஞ்ச நாள் அப்படி நினைத்திருந்தேன். ஆனால், லத்தினோஸ் என்கிற ஸ்பானிய மொழி பேசுபவர்கள்தான் ஒப்பிடும்போது குறைந்த அளவில் மேற்படிப்பு வரைச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறிய வந்தேன். உதாரணமாக, எத்தனை சதவீதம் பேர் உயர்நிலைக் கல்வி வரை முடிக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தில் லத்தினோஸ் கடைசி இடத்தில் இருப்பதாக கடந்த காலத்தில் புள்ளிவிவரங்கள் சொல்லின. வெள்ளைக்காரர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் இடையே எத்தனை சதவீதம் உயர்நிலைப் பள்ளியை முடிக்கிறார்கள் என்பதில் இருவருக்கும் அதிகப்பட்சம் 3 சதவீதத்துக்கு மேல் வித்தியாசம் இல்லை என்று படித்த ஞாபகம். பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவர்க்கும் அமெரிக்காவில் இலவசக் கல்வி என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நடத்தும் பள்ளிக்கூடங்கள் பெரும்கட்டணத்தை வசூலிக்கின்றன. கல்லூரிக்குப் போகும்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசமாகத் தந்ததற்கும் சேர்த்து வசூலித்து விடுகிறார்கள்.
**** **** ****
நதிகள் இணைப்பும் ரஜினி சால்ஜாப்பும்:
பா.ஜ.க.வுக்குத் தான் ஓட்டுப் போடப் போவதற்குக் காரணமாக நதிநீர் இணைப்பை அக்கட்சித் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ரஜினி. ரஜினி காரணமே சொல்லாமல் பா.ஜ.க.வுக்கு அவர் ஓட்டு என்று சொல்லியிருந்தாலும் அவர் ரசிகர்கள் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அவர் சொல்லியிருப்பது சால்ஜாப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ரஜினியின் அறிக்கையைப் படித்தவுடன் தேர்தலில் நிற்கிற பிற கட்சிகள் தாங்கள் எவ்வளவு ஆண்டுகளாய் நதிகளின் இணைப்புக்குக் குரல் கொடுத்து வருகிறோம் என்று பட்டியலிட ஆரம்பித்து விட்டன. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புப் பற்றிச் சொல்லியிருந்தால் ரஜினி தன் ஓட்டை அனைத்துக் கட்சிகளுக்கும் அளித்துச் செல்லாத ஓட்டாகியிருப்பாரா என்கிற கேள்வி குதர்க்கமானதோ யூகத்தின் அடிப்படையிலானதோ இல்லை. நதிகளின் இணைப்பை எதிர்க்கிற எந்தக் கட்சியும் இருக்க முடியாது. நதிகளின் இணைப்பு அனைத்துக் கட்சிகளின் கொள்கை என்கிற அரசியலாகி வருடங்கள் பல ஓடிவிட்டதை ரஜினி அறியவில்லை என்றும் சொல்ல இயலாது. தபசில் இருந்தாலும் எது நடக்கிறது எங்கே நடக்கிறது என்பதையும் எப்போது வரவேண்டும் என்பதையும் நன்கறிந்தவர் ரஜினி. ரஜினி ஒரு கோடி ரூபாயை நதிகளின் இணைப்புக்குத் தருகிறேன் என்று அறிவித்தபோதும் அதற்கடுத்த ஆண்டுகளிலும் பா.ஜ.க.தான் ஆட்சியிலிருந்தது. அடுத்தத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்காமல், பா.ஜ.க. உடனடியாகவே நதிகளின் இணைப்பைக் கடந்த ஆட்சியிலேயே செயல்படுத்தத் தொடங்கி இருக்கலாம். ஏன் செய்யவில்லை என்றெல்லாம் ரஜினி யோசிக்க மாட்டார். யோசிப்பார் என்று எதிர்பார்ப்பதும் கூடாது.
சொந்தக் காரணங்களுக்காக அல்லது காரணங்கள் இல்லாத அபிமானம் காரணமாக ரஜினி பா.ஜ.க.க்கு இத்தேர்தலில் ஓட்டளிக்க முடிவெடுத்து விட்டார். அதற்கு நியாயம் தேடி நதிநீர் இணைப்பை இழுக்கிறார் என்று தோன்றுகிறது.
நதிகளின் இணைப்பைப் பற்றி எடுத்துக் கொண்டால், தமிழில் அது குறித்து விரிவாகவும் அறிவுபூர்வமாகவும் உருப்படியாகவும் எழுதியிருப்பவர் பழ.நெடுமாறன் ஒருவர் மட்டுமே என்று எண்ணுகிறேன். அவர் புத்தகத்தின் சில பகுதிகளை ஞாநி சில மாதங்களுக்கு முன் தீம்தரிகிடவில் வெளியிட்டார். பழ.நெடுமாறன் தேர்தலில் நின்றால், நதிநீர் இணைப்புக் குறித்து உருப்படியாகப் பேசியதற்கும் எழுதியதற்கும் ரஜினியின் ஓட்டைக் கட்டாயப்படுத்திக் கேட்கலாம். அல்லது, அப்போது பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்க ரஜினி வேறு காரணங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்குமோ ?
ரஜினியும் அவர் ரசிகர்களும் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். தம்முடைய பலத்தை நிரூபிக்கட்டும். அதற்காக அடுத்தவர்களை முட்டாளாக்கும் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
**** **** ****
வார விடுமுறையில் வாசித்தது:
கடந்த வார விடுமுறையில் படித்த புத்தகம் ‘அகென்ய்ன்ஸ்ட் ஆல் எனிமிஸ் ‘. ரிச்சர்ட் கிளார்க் எழுதியது. அமெரிக்காவின் பயங்கரவாத சமாளிப்பு/எதிர்ப்புத் துறையின் தலைவராக இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியவர் கிளார்க். அவரை அரசியல்வாதியின் சாதூர்யம் கொண்டவர் என்று இங்கே பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், புத்தகத்தைப் படிக்கும்போது அரசியல் பேசுகிறார், தன் சொந்த நலன்களுக்காக எழுதியிருக்கிறார் என்கிற எந்த எண்ணமும் வாசகர் மனதில் தோன்றாமல், அவர் எழுதியிருப்பதைச் சராசரி வாசகர் பெருமளவு நம்பச் செய்கிற விவரங்களுடனும் நடையுடனும் புத்தகம் இருப்பது கிளார்க்கின் வெற்றி. சமீபத்தில் அவர் அளித்த வாக்குமூலமும் செப்டம்பர் 11-ல் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் கடமையில் தவறிவிட்டேனென்று மன்னிப்புக் கேட்டதும் நீங்கள் அறிந்ததே.
புத்தகம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. செப்டம்பர் 11, 2001 அன்று காலையில் வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுகிற முதல் அத்தியாயம் (ஏறக்குறைய 34 பக்கங்கள்) பல புதிய தகவல்களையும், அந்தத் துயர நாளின் பரபரப்பையும் அந்தச் சோகத்தை அமெரிக்க அரசாங்கம் எப்படி எதிர்கொண்டது என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒரு துப்பறியும் கதையின் அல்லது சுவாரஸ்யமான வரலாற்று நாவலின் வேகத்துடன் புத்தகம் பேசுவது அதை ஒரே மூச்சில் தொடர்ந்து படித்து முடித்துவிட உதவுகிறது. ஏறக்குறைய 275 பக்கங்கள். நான் நேரமின்மையால் முதல்நாள் 70 பக்கங்களும், இரண்டாம் நாள் மீதியும் படித்தேன். அமெரிக்கர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தார்களேயானால், புஷ் மீண்டும் ஜெயிப்பது கஷ்டம். இந்தப் புத்தகத்தைப் பற்றி நேரம் கிடைத்தால் விவரமாக எழுத வேண்டும். சுருக்கமாக வாசக அனுபவம் எழுதச் சொன்னால் ஒரு வார்த்தையில் சொல்லலாம். படியுங்கள்.
**** **** ****
குளோரியா ஸ்டேநெம்:
குளோரியா ஸ்டாநெம் (Gloria Steinem)ஐ நீங்கள் அறிந்திருக்கக் கூடும். A Thousand Indias என்கிற நூலின் ஆசிரியர். நியூயார்க் இதழைத் தொடங்கியவர்களுள் ஒருவர். அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுபதுகளில் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். Ms என்கிற இதழைத் தொடங்கியவர். சமீபத்திய டைம் இதழ் (ஏப்ரல் 5, 2004) ஒன்றில் 10 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். அவற்றுள் – பின்வரும் கேள்விகளுக்கு அவர் சொல்லிய பதில்கள் கவனத்துக்குரியவை. எழுபது வயதிலும் என்ன போடு போடுகிறார் என்று பாருங்கள். போகிற போக்கில் அவசரமாக நான் செய்திருக்கிற தமிழாக்கத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
‘காலம்காலமாகப் பெண்கள் செய்துவருவதை ஆண்கள் செய்வதற்கானக் காலம் வந்துவிட்டது என்று சொல்லும்போது நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் ? ‘ என்கிற கேள்விக்குப் பின்வருமாறு பதில் சொல்லியிருந்தார்.
‘வேலைக்குப் போகிற பெண்கள் குழந்தை கவனிப்பு, குடும்பத்தை நிர்வகித்தல் போன்ற வேலைகளைச் செய்யும் வரை, அவர்கள் ஒரு வேலையை அல்ல, இரண்டு வேலைகளைச் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், முக்கியமாக – பெண்கள் மட்டுமே அன்பு காட்டியும் சீராட்டி வளர்க்கவும் செய்கிறார்கள், ஆண்களால் அவற்றைச் செய்ய இயலாது என்கிற எண்ணத்துடன் குழந்தைகள் வளர்கிறார்கள். பெண்கள் எந்த அளவுக்கு அக்கறையுடன் குழந்தைகளை வளர்க்கிறார்களோ அதே அளவுக்கு அக்கறையுடன் ஆண்களும் குழந்தைகளை வளர்க்கிற சமூகத்தை அடைவது அத்யாவசியமானதாகும். ‘
‘சில இளம்பெண்கள் பெண்ணியவாதிகள் என்கிற அடையாளத்தை விட்டு ஓடுவதாகத் தெரிகிறது. பெண்களின் உரிமைகள் குறித்த தாகமுடையவர்களாக்க அவர்களை எப்படி உற்சாகப்படுத்துவீர்கள் ? ‘ என்கிற கேள்விக்கு அவர் சொல்லியிருக்கிற பதில் அமெரிக்காவிலும்கூட இன்னும் பெண்விடுதலை முழுமையாகச் சாத்தியப்படவில்லை என்பதை உணர்த்தும்.
‘இளம்பெண்களுக்கு இந்த அடையாளத்துடன் பிரச்னை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்பதே இன்னும் தெரியவில்லை என்று அர்த்தம். ஒரு வேலையை வாங்க முயற்சித்தபோது என் தலைமுறையைச் சார்ந்த பெண்களுக்கு உண்டான விழிப்புணர்வு, இளம்பெண்களுக்கு 10 அல்லது 15 ஆண்டுகள் வேலையில் இருந்த பிறகு, அவர்களுக்கு பதவி உயர்வுகள் மறுக்கப்படும்போது ஏற்படுகிறது. பெண்கள் இளமையில் பழமைவாதியாக இருக்கிறார்கள். வயதாக வயதாக அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறுகிறார்கள். ஏனென்றால், வயதாக அவர்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள். எனவே, ஓர் இளம்பெண் இன்னும் பெண்ணியவாதியாகவில்லை என்றால், கொஞ்சம் காத்திருங்கள் என்றே நான் சொல்வேன். ‘
‘ஓரினத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்குவதற்கானப் போராட்டம் முக்கியமானப் போராட்டமா அல்லது பிற முக்கியமான பெண்களின் பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதலா ? ‘ என்கிற கேள்விக்கு அவர் சொல்லியுள்ள பதில் அதைப் பெண்களின் பிரச்னை என்கிறது.
அவர் சொல்கிறார். ‘இது பெண்களின் பிரச்னை. பால்ரீதியான வித்தியாசம் பெண்கள் குழந்தை பெறுவதற்காக என்னும்போது மட்டுமே சரி என்கிற சித்தாந்தமே பெண்களை ஒடுக்குகிறது. பெண்களின் ஆரோக்கியம் பால்வித்தியாசத்தை இனப்பெருக்கத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதில் இருக்கிறது. இது ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் பொருந்தும். புஷ்ஷீம் வலதுசாரி அணியினரும் அளவுக்கு அதிகமாக இவ்விஷயத்தில் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், ஓரினத் திருமணங்களை எதிர்க்கிறவர்கள்கூட அரசியல் சட்டத் திருத்தம் வேண்டுமென்று கேட்கவில்லை. ‘
**** **** ****
மாணவர்களைப் பெயிலாக்குவது சரியா ?:
சரியாகப் படிக்காத மாணவர்களைப் பெயிலாக்குவது இந்தியக் கல்விமுறையில் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது மூன்றாம் வகுப்புவரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கக்கூடாது என்கிற வழிமுறையைக் கொண்டுவந்தார். அதற்காக – அந்தக் காலத்தில் அவர் விமர்சிக்கவும் பட்டார்.
சிகாகோ நகரத்தில் பெயிலாக்குகிற நடைமுறை இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் – மூன்றாம் வகுப்பில் பெயிலானவர்களுக்கு அடுத்த வருடம் நடந்த தேர்வில் அவர்களிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படவில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்பில் பெயிலானவர்களுக்கு அடுத்த வருடம் நடந்த தேர்வில், மாணவர்களின் தரம் முன்னைவிட மோசமாக இருக்க வாய்ப்பிருப்பதையும் அறிந்திருக்கிறார்கள். (ஆதாரம்: டைம் ஏப்ரல் 5, 2004)
எனவே, ஒரு குழந்தையை ஒரே வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்கள் இருத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
என்னைக் கேட்டால், எட்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. படிப்பில் மோசம் என்று தோன்றுகிற குழந்தைகளைப் பயிற்றுவிக்க பெயிலாக்குவது தவிர வேறு எத்தனையோ உருப்படியான வழிகள் உள்ளன.
**** **** ****
அனைவர்க்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
**** **** ****
- உணவுச் சங்கிலிகள்
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- விளிம்பு
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- காடன்விளி
- கல்யாண ரத்து தீர்மானம்
- காயம்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- இது எப்படி இருக்கு…. ?
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- முரண்பாடுகளின் முழுமை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- வா
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- காசு
- டாலர்க் கனவுகள்
- அனுபவம்
- வெற்றி
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- டான் கில்மோர்
- குளிர்பானங்கள்
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- கவிதை உருவான கதை-2
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- நந்திக் கலம்பகம்.
- குதிரைவால் மரம்
- ஜங் அவுர் அமான்!
- என்னோடு என் கவிதை
- ஓட்டப்பந்தயம்
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- வாழும் வகை
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- அளவுகோல்
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- என்னைப் பொறுத்தவரை
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- உயிர் தொலைத்தல்
- அம்மணம்
- அவதாரம்
- மன்னித்து விடலாம்….
- பகல் மிருகம்
- தீர்மானிக்காதவரை.. .. ..
- வசந்தத்தின் திரட்சி
- கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- என் பிரிய தோழி
- வேர்கள்
- துரோகர்(துரோணர்)
- ஓவியம்
- பரம்பொருள்
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- திரேசா