பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2

This entry is part of 42 in the series 20031023_Issue

வின் டெலோரியா


( Excerpt from the book: God Is Red – A Native View of Religion – by Vine Deloria, Jr.

கடவுள் சிவப்பானவர் – பழங்குடி பார்வையில் மதம் – வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து (A Native View of Religion – by Vine Deloria, Jr.) செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா இருக்கிறார். )

உலகத்தில் பழங்குடியினரின் நிலை கிரிஸ்துவத்தின் இடையூறால், நிரந்தரமாக காலனியாதிக்கத்தின் கீழ் நிலைப்படுத்தப்பட்டது. இந்தப் பழங்குடியினர் தங்கள் நிலத்துக்கு உரிமையாளர்களாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, கிரிஸ்துவக் கடவுளின் சந்தோஷத்தின் பொருட்டு இதுவரை அனுபவித்துவந்ததாகவும், இப்போது ஐரோப்பிய நாடுகளுக்குக் கொடுக்கப்படுவதாகவும் பார்க்கப்பட்டது. ஏதேனும் ஒரு நாட்டுக்குள் புகுந்த அல்லது ஏதேனும் ஒரு பழங்குடியினரைச் சந்தித்த ஸ்பானியர்கள், Requirement என்ற ஒன்றைப் படித்தார்கள். அது அடிப்படையில் கிரிஸ்துவ பார்வையில் இருக்கும் வரலாறான, ஆதாம் ஏவாள் ஏடன் தோட்டத்திலிருந்து ஆரம்பித்து, போப்பாண்டவர் ரோமில் ஆட்சி செய்வது வரை ஒப்பிப்பது. அதன் பிறகு இந்தப் பழங்குடியினர்கள் போப்பாண்டவருக்கு விசுவாசமாக ஆகும்படியும், ஸ்பெயின் அரசருக்கு விசுவாசமாக ஆகும்படியும் கோரப்பட்டார்கள். கிரிஸ்துவத்துக்கு அடிபணிய மறுப்பதும், ஸ்பானியப் பேரரசுக்கு அடிபணிய மறுப்பதும், இந்த மக்களிடமிருந்து நிலத்தை ‘மீட்க ‘ அவர்கள் மீது போர் தொடுப்பது ஐரோப்பியர்களுக்கு சட்டப்பூர்வமான ஆன்மீக தொண்டாக ஆகிறது.

மீண்டும் மீண்டும், கிரிஸ்துவ மதக்கொள்கைகள் கிரிஸ்துவ நாடுகளின் செயல்களை நியாயப்படுத்தப் பயன்பட்டன. ‘Just war ‘ என்னும் நேர்மையான போரின் கொள்கைகளை நிர்ணயிக்க பல நூற்றாண்டுகள் விவாதித்தனர். அமெரிக்கா ருஷ்யாவின் அணு ஆயுதத்தாக்குதல்களுக்கு பயப்பிராந்தி அடைந்து கிடந்த நாட்களில், உங்கள் வீட்டு குண்டு பாதுகாப்பு அறைக்குள் நுழைய முயற்சி செய்யும் வேற்று மனிதர்களைக் கொல்வது நியாயமானதா நியாயமற்றதா என்று புரோட்டஸ்டண்ட் கிரிஸ்தவ மத தத்துவவாதிகள் விவாதம் செய்து கொண்டிருந்தது போன்றதே இதுவும். கிரிஸ்துவ கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த பழங்குடியினர்கள் இந்த நேர்மையான கிரிஸ்துவ போரை சந்திக்க நேர்ந்தது, ஏனெனில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்ட உண்மையை இன்று அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததே.

இப்படிப்பட்ட வேற்றுநில ஆய்வுகளும், காலனியாதிக்கமும் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே, பழங்குடிகளின் உரிமைகள் பற்றிய விவாதங்களும் விரிவடைந்தன. அன்றைய தேதிக்கு உலகத்தை விளக்க கிடைத்த ஒரே தத்துவ அடிப்படை அரிஸ்டாட்டிலின் தத்துவமே. அவரோ மனித குலத்தை மனிதர்கள் என்றும் அடிமைகள் என்றும் இரண்டாகப் பிரித்துவைத்திருந்தார். பழங்குடியினர் எதிர்ப்பு மதத் தத்துவவாதிகள் அரிஸ்டாட்டிலின் மீது தாவி ஏறிக்கொண்டு பழங்குடியினர்கள் அடிமைப்படுத்தப்படலாம் என்ற தங்களது சிந்தனையை நிரூபிக்க முனைந்தார்கள். பழங்குடியினருக்கு ஆதரவாக இருந்த கிரிஸ்தவ மதத்தத்துவ வாதிகளும், இந்தப் பழங்குடியினர்கள் உண்மையான மத நம்பிக்கைக்குள் வரும் வரைக்கும் இவர்கள் மீது வன்முறையைச் செலுத்ததலாம் என்றே ஒப்புக்கொண்டார்கள்.

சாலமங்கா இடத்தில் 1526இல் பிரான்ஸிஸ்கோ டெ விட்டோரியா அவர்கள் அரிஸ்டாட்டிலை உபயோகப்படுத்திக்கொண்டு பழங்குடியினருக்கு சொத்துரிமை மற்றும் சுதந்திரத்தை மறுக்கும் போக்கை தாக்கினார். மதமாற்றத்துக்கு உட்படாத பழங்குடியினர்கள் மீது வன்முறை நடப்பதையும், அவர்கள் கேவலமாக நடத்தப்படுவதையும் கண்ட விட்டோரியா, கிரிஸ்தவர்கள் பழங்குடியினரை கட்டாய மதமாற்றம் செய்வதை தடை செய்தார். ஆனால், அவரும் கிரிஸ்தவ வியாபார உரிமைகள் பேரில் பழங்குடியினர் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை நியாயப்படுத்தினார். ஏனெனில் கடவுள் எல்லா தேசங்களும் ஒன்றோடு ஒன்று வியாபாரம் செய்யவேண்டும் என்று நிர்ணயித்துள்ளதாக கூறினார். எந்த நாடும் எந்த குழுவும் வியாபாரத்தைத் தடுத்தால், அவர்களை வெற்றிகொள்வது என்பது வியாபார உரிமைகளைப் பாதுகாப்பது என்றும் கூறினார். இந்த அடிப்படையிலேயே ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுக்கீசியர்கள் ‘புதிய ‘ நிலங்களையும் அந்த ‘புதிய ‘ மக்களையும் ஆக்கிரமித்தார்கள்.

1550இல் இரண்டுவிதமான கிரிஸ்துவ மத தத்துவவாதிகள் தோன்றினார்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் புரிந்து கொள்ளல் படி ‘புதிய உலகத்தின் ‘ மக்களுக்கு இருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகள் பற்றி விவாதித்தார்கள். இந்த இரண்டு புரிதல்களுமே புதிய உலகத்தை சுரண்டுவதையும் அந்த மக்களை அடிமைப்படுத்துவதையும் நியாயப்படுத்தின. பாதிரியார் பார்த்தாலமோ டெ லஸ் காஸஸ், பழங்குடியினர் பக்கத்தை எடுத்துக்கொண்டார். ஜ்உவான் டெ செபுல்வேடா எதிர்நிலைப்பாட்டை எடுத்து, இந்த பழங்குடியினர் பூண்டோடு அழிக்கப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும் ஆதரித்தார். 1493இல் எழுதப்பட்ட போப்பாண்டவர் கட்டளையை, ஸ்பெயின் அமைதியான முறையில் பழங்குடியினரிடம் கிரிஸ்துவ மதம் போதிக்கப்படவேண்டும், அவர்களது சொத்துரிமை மதிக்கப்படவேண்டும் என்றும் சொல்வதாக பார்த்தலமோ டெ லஸ் காஸஸ் விளக்கமளித்தார்.

செபுல்வேடா, அரிஸ்டாட்டிலிய தத்துவ நிலைப்பாட்டிலிருந்து, பழங்குடியினர்கள் தெளிவாக அடிமைப்படுத்தப்பட வேண்டிய கூட்டம் என்று வரையறுத்தார். ஸ்பெயின் பழங்குடியினரை அடிமைப்படுத்துவதை பழங்குடியினர் எதிர்ப்பது என்பது ஒழுக்கரீதியில் தவறானது என்றும், கடவுள் அவர்களை அடிமைகளாக நிர்ணயித்திருக்கும்போது, பழங்குடியினர் அடிமைகளாக ஆகாமல் ஸ்பெயினை எதிர்ப்பது என்பது கடவுளை எதிர்ப்பதற்கு ஒப்பானது என்றும் அவர் வாதிட்டார். செபுல்வேடாவைப் பொறுத்தமட்டில் தூய கிரிஸ்துவ வெறியே ‘பழைய உலகம் ‘ (ஐரோப்பா) ‘புதிய உலகத்தை ‘ (பழங்குடியினர்) சந்திப்பதால் உருவாகும் பிரச்னைகளைத் தீர்க்க வழி. அவர் விவாதத்தில் முழுக்க முழுக்க வெற்றிகொள்ளாவிட்டாலும், அவரது கருத்துக்களை பழங்குடியினர் உலகத்துக்குச் சென்ற ஐரோப்பியர்கள் முழுவதும் ஒப்புக்கொண்டார்கள். அவருக்குப்பின்னால் நடந்தவைகள் மூலம் அவர் விவாதத்தில் வெற்றிகொண்டார் என்றே கூறலாம்.

மற்ற ஐரோப்பிய நாடுகளும் இது போன்ற புதிய நிலங்களைக் கண்டுபிடிக்கவும் புதிய மக்களை அடிமைப்படுத்தவும் தீவிரமாக இறங்க ஆரம்பிக்க, பழங்குடியினரின் சட்டப்பூர்வமான சொத்துரிமை மற்றும் இதர உரிமைகள் பற்றிய விவாதங்கள் மற்றும் அந்த உரிமைகளுக்கான போராட்டங்கள், நடைமுறையைப் பொறுத்த மட்டில் சுத்தமாக காணாமல் போய்விட்டன. தூர தேசங்களில் இருந்த நிலங்களின் மீது யாருக்கு உரிமை என்பதுதான் இந்த ஐரோப்பிய தேசங்களுக்கு முக்கியமானதாக இருந்ததே ஒழிய, இவர்கள் ஆக்கிரமித்த அந்த நிலங்களில் வாழ்பவர்களின் உரிமைகள் முக்கியமானதாக இல்லை. இந்த கிரகத்தை போப்பாண்டவரிடம் நிர்வகிக்க கடவுள் விட்டுச்சென்றிருக்கிறார் என்ற கிரிஸ்தவக் கொள்கை வெகு விரைவிலேயே மதச்சார்பற்றதாக ஆக்கப்பட்டு, ஐரோப்பிய தேசங்கள் முக்கியமாக கிரிஸ்தவ தேசங்கள், நுழைந்த இடங்களில் இருக்கும் மக்களை அடிமைப்படுத்தி வெற்றிகொள்ள தேவையான நியாயமாக ஆக்கப்பட்டது. இந்த மதக்கொள்கை மதச்சார்பற்றதாக ஆக்கப்பட்டதுடன், இதன் நியாயத்தை யாராலும் கேள்வி கேட்கமுடியாமல் போய்விட்டது. இதன் பாதிப்பு வெளிப்படையானது. இதன் விளைவுகள் ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு திருப்திகரமானவையாக இருந்தன.

படிப்படியாக, காலனியாதிக்க ஐரோப்பிய சக்திகள் கிரிஸ்துவமற்ற மற்ற தேசங்களின் உரிமைகளோடு இணைத்து தங்களது உரிமைகளை வகுத்துக்குள்ள முனைந்தன. ஐரோப்பியர்கள் படையெடுத்துவந்து நிலங்களை ஆக்கிரமிக்கும் வரைக்கும், பாரம்பரியமாக பழங்குடியினர் வாழ்ந்துவந்த நிலங்கள் பழங்குடியினருக்கே உரியவை. அப்போது, ஐரோப்பிய நாடுகள் அந்த நிலங்களை வாங்கியோ வெற்றிகொண்டோ அடையலாம். ஆனால், மற்ற ஐரோப்பிய தேசங்களைப் பொறுத்த மட்டில், இன்னொரு ஐரோப்பிய தேசத்தைப் பொறுத்த மட்டில், எது முதன் முதலில் ஒரு புதிய நாட்டை ஆக்கிரமித்ததோ அல்லது எதனிடம் அதிகமான ராணுவ பலம் இருக்கிறதோ அவைகளின் நிலச் சொந்தம் கொண்டாடுவது ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த நிலங்களில் உண்மையிலேயே வாழ்ந்துவந்த பழங்குடியினர்களின் உரிமைகளோ முழுக்க முழுக்க அவர்களை ஆக்கிரமிக்கும் கிரிஸ்துவ நாட்டின் தயவிலேயே இருந்தன.

வட அமெரிக்க கண்டத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற போரில், பல ஐரோப்பிய நாடுகளின் நிலம் சொந்த கொண்டாடும் கோரிக்கைகள் மெல்ல மெல்ல அழியக்காரணம் இங்கிலாந்து தொடர்ந்து பல தேசங்களை வெற்றிகொண்டதும், அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக பல நாடுகள் தங்களது நிலக் கோரிக்கைகளை விட்டுக்கொடுத்ததும் ஆகும். ஐரோப்பிய போர்கள் இங்கிலாந்துக்கும், ப்ரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் ஹாலந்துக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நடந்துகொண்டிருக்கும்போது, பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. இங்கிலாந்து போர்களில் வெற்றி பெற்றதும், காலனிஸ்டுகள் (அமெரிக்காவில் வாழ வந்த வெள்ளையர்கள்) தங்களது தாய் நாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்திடம் தோல்வியுற்றதால் ப்ரான்ஸ் இந்த காலனிஸ்டுகளுக்கு உதவ முன்வந்தது, இவற்றால் இந்த காலனிஸ்டுகள் தங்களை இங்கிலாந்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்துக்கொண்டார்கள்.

புதிய நாடு என்ற தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டதும் இந்த புதிய நாடு செய்த முதல் வேலை தங்கள் தாய்நாடு, இங்கிலாந்து, எந்த கொள்கைகளின் அடிப்படையில் (கண்டுபிடித்தவர்களே உரிமை Doctrine of Discovery) அமெரிக்காவை ஆண்டதோ அதன் கொள்கைகளுக்கு வாரிசாக, அந்த கோரிக்கைகளுக்கு வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டதுதான். ஆகவே அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இந்த கண்டத்தின் பழங்குடியினரிடம் நியாயமாக நடந்துகொள்ள எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது. மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவை கொள்ளையடித்துவிட்டு இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் கொள்ளையடிக்கக் கிளம்பிய கிரிஸ்துவ நாடுகளின் வாரிசாக தன்னையும் அதே பாரம்பரியத்தில் நிறுத்திக்கொண்டது. அமெரிக்க நாட்டின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு, இந்த நிலங்களை எந்த நேரம் வேண்டுமானாலும் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையிலேயே ஆனது.

1787இல் நார்த்வெஸ்ட் ஆர்டினஸ் என்ற சட்டத்தின் மூலமே பழங்குடியினரின் நிலச்சொத்துரிமை பற்றிய முதல் சட்டப்பூர்வமான கிரிஸ்துவ வெளிப்பாடு வெளியானது. இதில் அமெரிக்கக் காங்கிரஸ் (சட்டமன்றம்) ஜஸ்ட் வார்ஸ் எனப்படும் நேர்மையான போர்களைத் தவிர வேறொன்றிலும் பழங்குடியினர் நிலம் கைப்பற்றப்படமாட்டாது என்று கூறியது. எதிர்பார்த்ததுபோலவே, ஜஸ்ட் வார்ஸ் என்று ஏதும் இல்லை. பழங்குடியினர் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டன. நூறு வருடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டபின்னர், இன்று ரிஸர்வேஷன் எனப்படும் சில சிதிலமான நிலங்களில் உயிர் தப்பிப்பிழைத்த பழங்குடியினர் வாழ்வது அதிர்ஷ்டமே.

*********************************************************************************************

Series Navigation