முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

விவேகன்


சூத்திரம் ஒன்று

===========

‘அத யோக அனு சாசனம் ‘

[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]

உரை

====

அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப ‘ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .

பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ‘ ‘ அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ‘ என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே…] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால் ‘ என துவங்குகிறது என்கிறார்கள். சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. அதன் பிறகு பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.

ராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம [உலகியல் ] காண்டத்தை அவர் ஜைமினியின் சூத்திரங்களில் உள்ள தர்ம அனுசாசனமாக காண்கிறார் . தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல் துவங்குகிறது என்கிறார் ராமானுஜர்.

பதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள் ‘ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம் ‘ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.

சம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.

சூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம். இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.

அதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும். ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்

ஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது என நான் எச்சரிக்கிறேன் . அப்படி திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் ?

உண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், புறவயமான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நாட்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.

சூத்திரம் இரண்டு

============

‘ யோக: சித்த விருத்தி நிரோத: ‘

[யோகமென்பது மனச்செயல் தடுத்தல் ]

உரை

====

பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.

ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ஃப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆஃப் ஃபிசிக்ஸி ‘ல் அளிக்கும் உவமை.

இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.

இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா ? நாம் மனம் என்று சொல்வது எதை ? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.

ஆனால் மனம் என்பது இதுதானா ? எந்தக் கருவி இந்த படங்களை தயாரிக்கிறது ? எது இவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது இவை ஓடுகின்றன ? இதை பார்ப்பது எந்த விழி ?

மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ‘ ‘இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ‘ ‘ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிரி திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும் ? யோசித்திருக்கிறோமா ? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன ? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன ?

யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி என்றேன். கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.

இது நம் மூலநூல்களில் பலவற்றின் முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .

யோகம் என்றால் என்ன ? மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.

[தொடரும்]

Series Navigation

விவேகன்.

விவேகன்.

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

விவேகன்


1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]

யோகமும் இன்றையமனிதனும்

=======================

பதஞ்சலி யோக சூத்திரத்தை ‘ராஜ யோகம் ‘ என்றபெயரில் சுவாமி விவேகானந்தர் மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார். விவேகானந்தரின் அணுகுமுறை பெரிதும் வேதாந்தம் சார்ந்தது என்பதை காணலாம். அதன் பின் மேற்குலகுக்கு பொருந்தும்விதமாக யோகத்தை விளக்கும் பலவிதமான உரைகள் வந்துள்ளன. பிரம்மஞான சங்கம் சார்ந்த உரைகள் ஹடயோகத்தையும் பதஞ்சலி கூறும் யோகத்தையும் ஒன்றாக இணைக்க முயல்பவையாகும். பல்வேறு யோக மரபுகள் அதன் பிறகு உருவாகியுள்ளன என்று நாம் அறிவோம் . மகரிஷி மகேஷ் யோகியின் உலகப்புகழ் பெற்ற ஆழ்நிலை தியானம் , ரஜனீஷின் தாந்திரீக முறை தியான வழிகள் , இப்போது தமிழ் நாட்டில் பிரபலமாகியுள்ள வேதாத்ரி மகரிஷியின் தியானமுறை , ஜக்கி வாசுதேவ் அவர்களின் தியான முறை , ரவிசங்கர் சுவாமியின் சகஜ ஸ்திதி யோகமுறை முதலியவை போல இன்று குறைந்தது ஐம்பது யோகப் பயிற்சி முறைகளைக் காணமுடியும். இவற்றுக்கெல்லாமே பதஞ்சலியோக சூத்ரங்கள்தான் அடிப்படையாகும் .

இவற்றில் எது சரியானது ? அப்படி எதையும் ஒன்றுக்கொன்று ஒப்பிடமுடியாது என்பதை அவற்றை ஆராய்ந்தால் உணரலாம் . பதஞ்சலி சொல்வது சில அடிப்படை விதிமுறைகளையே. அவற்றை எப்படி செயலாக மாற்றுவது என்பதில் பல்வேறு போக்குகள் உள்ளன. மனிதர்கள் பலவகையானவர்கள். அறிவுத்திறன் , கற்பனை, வாழ்க்கை முறை, கலாச்சார பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் இயல்புகளில் திட்டவட்டமான மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஆகவே உலக மக்கள் அனைவருக்கும் ஒரே வழிமுறைகளை பரிந்துரை செய்ய முடியாது . யோகமே கூட அப்படி ஒற்றைப்படையானதாக என்றுமே இருந்தது இல்லை . அது ஒரேசமயம் பக்திமார்க்கத்துக்கும் தாந்திரீகத்துக்கும் எல்லாம் வழிமுறையாக இருந்துள்ளது என நாம் அறிவோம். ரஜ்னீஷின் தியான முறை ஒரு தர்க்கபூர்வமான விளக்கத்தை அனைத்துக்கும் அளிக்கமுற்படும்போது ஜக்கி வாசுதேவின் வழிமுறை செயல் முறை பயிற்சியையே முதன்மையாக கருதுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரங்கள் எல்லா தியான யோக முறைகளுக்கும் அடிப்படையானவை . இன்றைய நமது வாசிப்பில் நவீன உளவியல் அடிப்படைகளை அவற்றின் மீது போட்டு ஆராய வாய்ப்புகள் உள்ளன. நித்ய சைதன்ய யதி அவ்வாறு ஆராய்ந்து ‘யோக பரிச்சயம் ‘ என்ற முக்கியமான நூலை ஆக்கியுள்ளார்.

நமது இந்த விளக்கமானது இரண்டு அடிப்படைகளில் யோகத்தை புரிந்துகொள்ள முயல்கிறது . நவீன உளவியல் மற்றும் நவீன இலக்கியம். காரணம் நம் மனத்தை நாம் அறிய இப்போது பிரபலமாக உள்ள இரு அறிதல்முறைகள் இவையே.ே மலும் இந்நூல் முக்கியப்படுத்திப் பேசுவது எப்படி மனமற்ற நிலையை , கைவல்யத்தை அடைவது என்பதை அல்ல . நமது மனதை நாம் அறிந்துகொள்ள பதஞ்சலியை துணை கொள்வதே இந்நூலின் நோக்கம்.

ஒருநாளைக்கு பத்து தடவையாவது நாம் மனம் என்கிறோம். மனம் என்றால் என்ன ? நரம்பியல் மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒட்டு மொத்தம்தான் என்று சொல்கிறது . மூளை என்பது நமது நரம்புகளின் மைய முடிச்சாக நமது கழுத்துக்கு மேலே பரிணாமம் மூலம் உருவாகி வந்த ஒன்று .நரம்புகள் மூலம் வந்து சேரும் அறிதல்களை பதிவு செய்த் வைக்கும் இடம் .அப்பதிவுகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி ‘அறிவு ‘ ஆக மாற்றும் இடம். அறிவும் அவ்வறிவின் செயல்பாடுகளை ஒட்டி எழும் உணர்ச்சிகளும் அடங்கியதே நாம் மனம் என்று சொல்வது.அதாவது மூளைக்கும் நடக்கும் நியூரான்களின் இயக்கத்தையே மனம் என்கிறோம்.

நரம்பியலின் இக்கூற்றை உளவியல் முழுக்க ஏற்றுக் கொள்ளாது. அந்த நிர்ணயத்தினை அது ‘நரம்பியல் குறைத்தல்வாதம் ‘ என்று நிராகரித்துவிடும்.மனம் என்பது முற்றிலும் மூளைக்குள் நடைபெறும் ஒரு நிகழ்வு அல்ல.அதற்கு மொழி , கலாச்சாரம், சமூக இயக்கம் ஆகியதளங்கள் சார்ந்து முற்றிலும் புறவயமான ஒரு பின்னணி உள்ளது. கோபம் என்பது ஒரு நரம்பியக்கம்தான் என நரம்பியல் விளக்கிவிடலாம் .ஆனால் அமெரிக்கனுக்கு கோபம் வருகிற விஷயத்துக்கு இந்தியனுக்கு கோபம் வருவதில்லை. அப்படியானால் கோபம் என்ற மன உணர்வின் ஊற்றுமூலம் எங்கே உள்ளது ? அம்மனிதனின் மூளைக்கும் அவன் வாழும் சமூகக்கலச்சார சூழலுக்கும் நடுவேயுள்ள ஒரு சந்திப்புப் புள்ளியில் உள்ளது எனலாமா ?

இலக்கியம் மனம் என்பதைப்பற்றி மிக விரிவாகவும் மிக சூட்சுமமாகவும் பேசிக் கொண்டிருக்கிறது .ஒரு இலக்கியப்படைப்பின் ‘ஆழம் ‘ என்று நாம் சொல்வது பெரும்பாலும் மனிதமன ஆழத்தில் அது எந்த அளவுக்கு பயணம் செய்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. இலக்கியம் வரலாற்றின் சிக்கல்கள் குறித்து பேசலாம். தத்துவ முடிச்சுகள் பற்றி அலசலாம். அரசியல் கருத்துக்களை ஆய்வு செய்யலாம்.ஆனால் அவையெல்லாமே இலக்கிய ஆக்கத்தில் படைப்பூக்கத்துடன் வெளிப்படுகையில் மனிதனின் ஆழ்மனம் சார்ந்த அறிதல்களாகவும் வெளிப்பாடுகளாகவும் மாறியிருப்பதைக் காணலாம்.

மனம் என்பது பலவிதமாக விளக்கப்படுகிறது , முழுமையாக ஒரு போதும் வகுக்கப்படுவதில்லை என்பதே உண்மை. ஏனெனில் மனிதமனம் என்பதை வகுக்க முயல்வதே மனிதமனம்தானே ? பிரபஞ்சத்தில் நாம் அறிவதெல்லாமே மனித மனத்தின் அலகுகளால் அறியப்படுவனவே. அவற்றில் எல்லாம் பொதுவாக மனித மனம் என்ற அலகு அடங்கியிருப்பதனால் அது மெளன இருப்பாக [Silent feature] உள்ளது அவ்வளவுதான் . சாம்ஸ்கி மொழியை அறிவதற்கும் ரோஜர் பென் ரோஸ் பிரபஞ்சத்தை அறிவதற்கும் மிஷேய்ல் ஃபூக்கோ சமூகத்தை ஆய்வதற்கும் பொதுவாக உள்ளது என்ன ? மனிதமனம் உண்மையை அறிய முற்படும் முறை , மனிதமனத்தின் செயல்முறை அல்லவா ?

மானுடப் பொதுமை [Universal] என்ற ஒன்றை நாம் சொல்லும்போது உண்மையில் பொதுமனம் [Universal mind] என்ற ஒன்றை கற்பனை செய்தே அதைச் சொல்கிறோம். அப்படி ஒன்று உண்மையில் உண்டா ? சந்தர்ப்பம் சார்ந்தும் , சூழல் சார்ந்தும் , விஷயம் சார்ந்தும்தான் அப்படி ஒன்றை உருவகம் செய்துகொள்ளமுடிகிறது. ஆகவேதான் தத்துவ வாதிகளில் ஒருசாரார் புறவயம் [Objectivity] என்பதையே நிராகரிப்பவர்களாக உள்ளனர் .

அகம் அல்லது மனம் என்பதை அறிவது என்பது எல்லா அறிவுச் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக உள்ள விஷயமாகும். நீங்கள் என்ற அறிவுத்துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மொழியியல் ,சமூகவியல் , உயிரியல் , கணிதம் — எதுவானாலும் அது மனம் என்பதற்கு ஒரு விளக்கம் அளிக்க முற்படுவதனைக் காணலாம். காரணம் மனம் என்பதை வகுத்த பிறகே அது தன் பிற அலகுகளை வகுக்க முடியும். மேலும் அது தன் அறிதல்களை வகுக்க வகுக்க அவற்றை அறிகிற மனமும் வகுக்கப்பட்டபடியே போகிறது. உதாரணமாக மொழியியல் மொழி என்றால் என்ன என்று வகுத்து மொழியின் பல்வேறு செயல்பாடுகளை வகுக்கும்போது வகுக்கப்படுவது மொழிமூலம் செயல்படும் மனமும்தான் இல்லையா ?

ஆகவே மனம் பற்றிய ஒரு சுயப் புரிதல் என்பது எந்த ஒரு சிந்திக்கும் மனிதனுக்கும் அவசியமானதாகும். நான் எதை அறிகிறேன் என்பது நான் எப்படி அறிகிறேன் என்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது ,அதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது . அதற்கு மிக எளிய வழி தன் மனதை கூர்ந்து கவனிப்பதே .கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றே பொருள் . அப்படியானால் அந்த தியானத்தைமேலும் துல்லியமாக, மேலும் ஆழமாக, செய்வது எப்படி என்று அறிவது அவசியம் . பதஞ்சலி யோக சூத்திரம் அதற்குரிய ஒரு வழிமுறையாகும். நமது இந்நூலில் மனதை அறிய அந்நூலை எப்படித் துணை கொள்வது என்பது மட்டுமே பேசப்பட்டுள்ளது.

எப்படி யோகத்தை பயன்படுத்துவது ?

============================

மனதை அறிய என்ன செய்ய வேண்டும் .வேறு ஒன்றும் செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்திருங்கள். என்ன நடக்கிறது ? அதிகபட்சம் நம்மால் மூன்று நிமிடம் கூட அப்படி அமர்ந்திருக்க முடிவதில்லை .கணிப்பொறியில் நாலாபுறமும் தரவுகள் உள்ளெ வந்துகொட்டும்போது ஓயாது ஓடும் வன்தகடு [Hard disk] போல உள்ளது நம் மனம். நித்ய சைதன்ய யதி தன் ‘யோக பரிச்சயம் ‘ நூலின் முன்னுரையில் மிக அதிகமாக நம்மை பாதிப்பது நமது சருமமே என்று சொல்கிறார் . கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாலே கூட நாம்மூகை காதை காலை சொறிகிறோம். பல இடங்களை தடவிக் கொள்கிறோம்.சசைந்து அமர்வோம். குளிர்கிறது என்றோ புழுங்குகிறது என்றோ எண்ணிக் கொள்வோம். ஒரு கணம் கூட நம்மால் நம் சருமத்தை மறக்க முடியாது.காரணம் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்விரிவுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது நமது சருமமே.

நித்யா சொல்கிறார், நமது மூளை சருமத்தின் நீட்சிதானே என்று. நமது உடலை பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கும் எல்லை அதுதான். ஆகவே நமக்கும்பிரபஞ்சத்துக்கும் இடையேயான முக்கியமான தொடர்பு ஊடகமும் அதுதான்.அதன் பிறகு காதுகள் .அதன் பிறகு நாசி. கண்களைமூடிக் கொள்ளலாம். நாக்கு சற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இவை நமக்கு அறிதல்களை அள்ளி அளித்தபடியே உள்ளன . அவ்வறிதல்கள் எல்லாமே சார்பு நிலை உள்ளவை .ருசி என்கிறோம். குளிர் என்கிறோம். இசை என்கிறோம். இவ்வறிதல்கள் எல்லாமே அதற்கு முன்புள்ள அறிதல்களுடன் ஒப்பிட்டும் , அறிதல்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டும் அறியப்படுபவையே. புலனறிதல்களை தொகுத்து நாம் உருவாக்கும் உண்மைகள் அனைத்துமே ஒப்பிட்டு உருவாக்கப்படுபவை ,சார்புநிலையானவை.

புலன்கள் வழியாக உள்ளே வரும் அறிதல்களை உள்ளே ஏற்கனவே உள்ள அறிதல்களின் பெருங்குவியலில் எங்கே வைப்பது என நம் வன்தகடு தன் தொகுப்புமுறையை கணம்தோறும் மாற்றியபடி சுழன்றபடியே உள்ளது . நாம் அதை மனதின் ‘அர்த்தமற்ற ‘ சுழற்சி என்கிறோம். ஆனால் நாம் இங்கே அர்த்தம் என்று சொல்வது அந்த அறிதல்களை நாம் பிறகு நம் தேவைக்கு ஏற்ப மீட்டு எடுக்கும்போது ஏற்படும் அர்த்தத்தையே. அதாவது அந்த தேவையினால் உருவாகும் அர்த்தத்தை.ஆனால் அவ்வறிதல்கள் உள்ளே போய் இடம் பிடிக்கும்போது அப்படிப்பட்ட தேவைகள் ஏதுமில்லை .அது தன்னிச்சையாக நடக்கிறது

‘ ‘நாய் ஊளை போடுகிறது.நாயெல்லாம் பசித்திருந்தால்தான் ஊளைபோடும்.எனக்கு பசிக்கிறது. இந்தமாதம் முழுக்க டயட்டில் இருக்க வேண்டும். குப்புசாமி நல்ல குண்டு. என் மனைவி அத்தனை குண்டு அல்ல. குண்டுப்பெண்கள் செக்ஸுக்கு உதவமாட்டார்கள் என்று ஹெமிங்வேயின் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது.பாவம் ஹெமிங்வெ சுட்டுக் கொண்டு செத்தான். கிழவனும் கடலும் . ஒரு ஓட்டப்பந்தய வீரன் போரில் முதல் குண்டுச்சத்தம் கேட்டதுமே ஓட ஆரம்பித்துவிட்டான். நேரமாகிறது பசிக்கிறது.நாயின் ஊளை…. ‘ இப்படி போகிறது நமது மனம் இல்லையா ?

இது வெறும் அர்த்தமற்ற இயக்கமா ? இல்லை இங்கே உள்ளே வரும் செய்திகள் அடுக்கப் படுகின்றன. ஆனால் நாம் ‘சிந்திக்கும்போது ‘ இருக்கக் கூடிய அடுக்குமுறை இங்கே இல்லை . ‘ ‘நாய் ஊளை போடுகிறது.ஊளைபோடும் நாய் அனேகமாக பசித்திருக்கும். பசித்த நாய் கடிக்கும். … ‘ நமது ‘சிந்தனை ‘ இப்படிப் போகும் . இங்கே இணைக்கும் புள்ளியாக உள்ளது என்ன ? நாய் பற்றிய எச்சரிக்கை . அப்படி ஒரு மையம் இல்லாமையினால் நமது மன ஓட்டங்களில் சீரான ஒழுங்கு இல்லை. ஒரு எண்ணத்தின் விளிம்பிலிருந்து அடுத்த எண்ணம் பிறக்கிறது . ஓர் எண்ணத்தின் ஒலியிலிருந்து கூட அடுத்த எண்ணம் பிறக்கலாம் .சிலசமயம் அந்த தொடர்பு நமது விழிப்புமனத்துக்கு தெரியாத ஒன்றாகக் கூட இருக்கலாம்.

மனதை அறிய நாம் உட்காரும்போது புலன்வழி அறிதல்கள் , அப்புலனறிதல்களின் இயல்பான அடுக்குமுறை அதாவது ‘எண்ணங்கள் ‘ , அவ்வறிவை நாம் மீட்டெடுக்கும் போது ஒரு நோக்கத்துடன் அடுக்கப்படும் முறை அதாவது ‘சிந்தனை ‘ ஆகியவை கலந்து கலந்து நிகழ்கின்றன. இதையே நாம் மன இயக்கமாக அறிகிறோம். இதை நாம் அறிந்துவிடமுடியுமா ? தொலைக் காட்சியில் ஏழெட்டு சானல்களை ஒரேசமயம் போட்டு பார்க்க முடியுமா ? ஆக அதை தனித்தனியாக அறிய யோகம் சில வழிமுறைகளை பயன்படுத்துகிறது. புலன்களில் இயக்கத்தை சற்றுநேரம் நிறுத்திவிட முடியுமென வைத்துக் கொள்வோம் . சிந்தனையை அதன் பிறகு நிறுத்திவிடமுடியும். பிறகு அகமனம் தனக்குள் இருப்பவற்றை மட்டும் மாற்றி மாற்றி அடுக்கிச் செயல்படுவதைக் காணலாம்.அதன் இயங்குமுறையை அறிவதென்பது நம் மனதை அறிவதற்குச் சமமே .

ஆக பதஞ்சலி யோக சூத்திரங்களை நமது மனதை அறிவதற்கான முற்றிலும் புறவயமான வழிகாட்டியாகக் கொள்ளலாம். அவ்வறிதல் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

பதஞ்சலி முனிவரும் யோக சூத்திரங்களும்

================================

பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1]சமாதி , 2]சாதனை, 3]விபூதி, 4]கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது.

யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல் ,அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே .ஒற்றை வரியில் சொல்லப்போனால் ‘மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக ‘ யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும்.

பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக வியாசன் யோகத்தைக் காண்கிறார் . வாசஸ்பதி மிஸ்ரரின் ‘விசாராதி ‘ என்ற உரையும் புகழ் பெற்றது .

=

****

Series Navigation

விவேகன்.

விவேகன்.

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

விவேகன்


1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]

யோகத்தின் வரலாற்றுப் பின்னணி

———————————————

யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது . தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் ‘ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று இடத்தைப்பற்றிய அறிதல் இல்லாமையே.

பாரத தத்துவ மரபின் தொடக்கப்புள்ளி என்று வேதங்களை சொல்வது வழக்கம். குறிப்பாக ரிக் வேதம் .அதிலும் குறிப்பாக ரிக்வேதத்தில் உள்ள பத்தாம் மண்டிலம். அதில்தான் ஆன்மீக சிந்தனைக்கு அடிப்படையாக அமையக்கூடிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஆதி தரிசனங்கள் பேசப்பட்டுள்ளன. வேதங்களில் பெரும்பகுதி தோத்திரப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கியதே. அவற்றில் தத்துவத்துக்கு மிக குறைவாகவே பங்கு உள்ளது .அனுஷ்டானங்கள் , அதாவது வேள்வி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்கு பாடப்படவேண்டிய மந்திரங்களாகவே அவை உள்ளன. அச்சடங்குகளின் நோக்கம் திட்டவட்டமான சில நன்மைகளே. அதிகாரம் ,செல்வம், வெற்றி, புகழ் முதலியவையே வேதங்களில் வேண்டப்படுகின்றன ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன. வேதங்கள் தத்துவ விவாதங்களுக்கு அடிப்படைகளாக அமைவதைப்பார்க்கிலும் வேள்வி மந்திரங்களாகவே பெரிதும் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

வேதங்கள் ஒற்றைப்படையான கருத்துத் தரப்பினை முன்வைப்பவை அல்ல. அப்படி ஒரு மாயத்தோற்றம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது . வேதகால ஞானிகளில் ஒருமைத்தரிசனம் அடைந்தவர்கள் உள்ளனர் .இருமை தரிசனத்தின் பால் நின்று தன்னை வழிபாட்டாளனாக வைத்துக் கொண்டவர்கள் உள்ளனர். நாத்திகர்களும் உள்ளனர் .குறிப்பாக வேதரிஷியாகிய பிரகஸ்பதியே பாரத லெளகீகவாத மதங்களின் முதல்குரு ஆவார் .வேதங்களின் அடிப்படைக் கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து உருவானதே உபநிடத காலகட்டம் . உபநிடதங்கள் ஏராளமாக உருவாகியிருந்துள்ளன. ஏறத்தாழ ஒத்த கருத்துள்ள உபநிடதங்களே தற்போது தொகுக்கப்பட்டு கிடைத்துள்ளன. அவற்றிலும் பலவகையான அடிப்படை கருத்துமாறுபாடுகள் உள்ளன. உபநிடத காலம் மாபெரும் தத்துவ விவாதங்களின் காலம் என்பதை அவை வலியுறுத்துகின்றன.

அந்த தத்துவ விவாதங்களின் விளைவாக பலவகைப்பட்ட பிரபஞ்சப் பார்வைகள் தத்துவத் தரப்புகளாக வலுப்பெற்று வளர்ந்தன .அவற்றையே தரிசனங்கள் என்கிறோம் . ஆறுதரிசனங்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்றுதான் யோகம். அதன் வரலாற்று நிலை அதுவே .

ஏன் மாறுபட்ட தரப்புகள் ?

———————————

ஏன் அத்தனை மாறுபட்ட தரப்புகள் காணப்படுகின்றன ? அப்படியென்றால் பாரத மெய்ஞானிகள் முழுமுற்றான உண்மையை அடையவில்லையா ? பிற்காலத்தில் தனிமனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டால் நம் மரபின் கருத்து முரண்பாடுகள் நம்மை குழப்பக் கூடும். உபநிடதகாலத்தில் பல ஏசுக்கள் பல முகம்மதுக்கள் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் உபநிடத காலம் என நாம் சொல்வது ஏறத்தாழ ஐநூறு வருட காலகட்டத்தையாகும். அக்கால முக்கிய நூல்கள் பிறகுதான் தொகுக்கப்பட்டன. அவர்களுக்குள் தரிசன வேறுபாடுகளும் காணப்பட்டுள்ளது சாதாரணமே. பிற்கால மெய்ஞானிகளுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள் உள்ளன அல்லவா ?. அப்பட்டமான மதவெறியர்களன்றி வேறு எவருமே அவர்களில் ஒருவர் மட்டுமே ஞானி அவர் சொன்னது மட்டுமே உண்மை என்று சொல்லமாட்டார்கள்.

உண்மை ஒன்றே. அதை விளக்கும் விதமே மாறுபடுகிறது .விளக்கப்படும் போது பேருண்மை ஓர் அனுபவமாக அல்லாமல் ஓர் கருத்தாகவே நம்மை அடைகிறது .பிறவிக் குருடனுக்கு நிறத்தை விளக்கமுயல்வதுபோலத்தான் அதுவும்.அனுபவத்தை பற்றிய எந்த விளக்கமும் அனுபவத்துக்கு பதிலாகாது.அனுபவித்தறிந்த மெய்ஞானிகளின் அனுபவத்தை அவர்களுடைய சொற்கள் வழியாக சென்று துளியேனும் அடைய முயல்வதே அவசியமானது.அவர்கள் விளக்கங்களை ஒப்பிட்டு குழப்பம் அடையும்போது நாம் நம்முடைய அறியாமையையே வெளிப்படுத்துகிறோம். ‘பிரக்ஞையே பிரம்மம் ‘, ‘இங்குள்ள எல்லாவற்றிலும் இறை உறைகிறது ‘, ‘ அளவில்லா கருணையும் நிகரில்லா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் ‘, ‘ ஆதியில் வார்த்தை இருந்தது ‘ போன்ற வரிகளுக்கிடையே ஆழமான அனுபவத்தின் அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. வேறுபாடுகள் புரிதலில் , தர்க்கத்தில், சூழலில்தான் உள்ளன

தரிசனங்களின் அடிப்படைகள்

—————————————-

உபநிடத காலத்த்திலேயே உருவாகி பிறகு வலுப்பெற்ற காலத்தை தரிசனங்களின் காலகட்டம் என்கிறார்கள் . தரிசனங்கள் ஆறு. சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் பூர்வ மீமாம்சம் உத்தர மீமாம்சம் [அல்லது வேதாந்தம்] . தரிசனங்கள் என்பவை அடிப்படையில் வேதங்களை விடவும் காலத்தால் முந்தியவை .அதிபுராதன காலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்த மனித மனத்தில் எப்படியோ உருக்கொண்டவை. பிறகு அவை மெல்ல மெல்ல தத்துவங்களாக வளர்ந்தன. உபநிடதங்களுடன் விவாதித்தே அவை வளர்ச்சி அடைந்தன என்று சொல்லலாம். அதேபோல உபநிடதங்களும் தரிசனங்களின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டன என்று படுகிறது. பிறகு சில முதல் குருநாதர்கள் தரிசனங்களை தொகுத்து சூத்திர நூல்களை ஆக்கி தத்துவத் தரப்புகளாக , மதங்களைப்போல ஆக்கினார்கள் . அவ்வாறு தரிசனங்கள் நமது சிந்தனையின் முக்கிய அடித்தளங்கள் ஆயின.

சாங்கியத்தின் முதல்குரு ‘சாங்கிய காரிகை ‘ என்ற வகுத்துரை நூலை ஆக்கிய கபில மகரிஷி. யோகத்துக்கு ‘யோக சூத்திரங்களை ‘ ஆக்கிய பதஞ்சலி மகரிஷி முதல்குரு. ‘வைசேஷிக சூத்திர ‘ங்களின் ஆசிரியரான கணாத ரிஷி வைசேஷிகத்தின் முதல்குரு. ‘நியாய சூத்திரங்க ‘ளை ஆக்கிய கோதம ரிஷி நியாயத்தின் முதல்குரு எனப்படுகிறார்.பூர்வ மீமாம்சைக்கு ஜைமினியும் உத்தர மீமாம்சைக்கு பாதராயணரும் குருநாதர்கள் .

சாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சமானது செயலூக்கம் , செயலின்மை ,சமநிலை [ ரஜஸ், தமஸ், சத்வம்] என்ற முக்குணங்களினால் ஆன ஆதிப்பிரகிருதியால் [அல்லது மூலயியற்கை] ஆனதாக இருந்தது என்கிறது . அக்குணக்கள் அதில் முழுமையான சமநிலையிலிருந்தன. அந்த சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து நாம் காணுமிந்த சலனவடிவ பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் அந்த செயல்வடிவை அடைவதே அவ்வியற்கையின் நோக்கம் என்கிறது சாங்கியம் . ஆகவே சாங்கியத்தின் அடிப்படைக் கருத்து பொருளிலிருந்தே பொருள் உருவாக முடியும் என்பதாகும். கருத்திலிருந்து பொருள் உருவாக முடியாது என அது வாதிட்டது . இதை அவர்கள் சத் காரிய வாதம் என்றார்கள் .

வேதங்கள் உபநிடதங்கள் போன்றவை பெரும்பாலும் முன்வைக்கும் கருத்து பிரக்ஞையே பொருளை நமக்கு கற்பித்துக் காட்டுகிறது என்பதாகும் . நமது பிரபஞ்சக்காட்சி நம் பிரக்ஞையின் விளைவு . ஒட்டுமொத்த பிரபஞ்சம் அதேபோன்ற ஓர் ஒட்டுமொத்த பிரக்ஞையின் விளைவு. பைபிள் கூட கடவுளின் சொல்லிலிருந்து பிரபஞ்சம் உருவானதாக சொல்கிறது . கடவுள் சக்தியால் பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக சொல்லும் குர் ஆன் கூட அதற்கு உரிய மூலப்பொருள் பற்றி சொல்லவில்லை. அறியமுடியாத மூலக்கருத்தையே அது உருவகம்செய்கிறது. அவை எல்லாமே கருத்துமுதல்வாத தரப்புகள் ஆகும். அந்த ஆதிமூலமான ‘கருத்தே ‘ கடவுள் அல்லது பிரம்மம் அல்லது அல்லா அல்லது யகோவா. ஆனால் சாங்கியம் பொருள்முதல்வாதத் தரப்பு. இந்த வேறுபாட்டை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

வைசேஷிகமும் பொருள்முதல்வாத தரப்புதான். அது ஆதிப் பொருள் அணுக்களே என்கிறது .அடிப்படைப்பொருட்களான நிலம், நீர்,காற்று, நெருப்பு ஆகியவை அவற்றின் ஆகச்சிறிய துகள்களினாலான அணுக்களினாலானவையாகும். அவற்றின் கூட்டு மூலமே பிற பொருட்கள் உருவாகின்றன. வைசேஷிகத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட துணைத்தரிசனமே நியாயம் ஆகும். நியாயம் இவ்வடிப்படைகளை தர்க்கபூர்வமாக எப்படி நிர்ணயிப்பது என்று பேசுகிறது. அதேபோல சாங்கியத்தின் துணைத்தரிசனமே யோகம் . நான்குமே அடிப்படையில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள். அதாவது அவை உருவகித்துக் காட்டும் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு ஸ்தானமே இல்லை .

வேதங்களை முழுமுதல் ஞானமாகவும் வேத அடிப்படையிலான விதிகளையும் சடங்குகளையும் மனிதனை மீறியவையாகவும் குறிப்பிடும் பூர்வ மீமாம்சை புரோகிதர்களின் தரிசனமாகும்.காது இன்று தனியான தரிசனமாக இயங்கவில்லை . ஆனால் இந்துமத்தின் பெரும்பாலும் எல்லா உட்கூறுகளிலும் அது ஊடுருவி உள்ளது.

முழுமுதல் கருத்துவடிவமான பிரம்மமே உண்மை மீதி எல்லாமே அதன் மாயத்தோற்றங்கள் என்று வாதிடுகிறது உத்தரமீமாம்சம். அது பிற்பாடு அத்வைதவேதாந்தமாக வளர்ந்தது .

யோகம் என்ற தரிசனம்

——————————–

சாங்கியத்தின் பிரபஞ்சக் கொள்கையே யோகத்துக்கும் ஏற்புடையது.ஆகவே யோகம் சாங்கியத்துடன் பிணைக்கப்பட்டு ‘சாங்கியயோகம் ‘ என்றே முன்பு குறிப்பிடப்பட்டு வந்தது .

யோகம் எப்படி உருவாயிற்று என்றறிய நாம் ‘புருஷன் ‘ என்ற கருதுகோளை புரிந்துகொள்ளவேண்டும் . உபநிடதங்களுடன் சாங்கியம் விவாதித்தபோது ஒரு முக்கியமான வினா எழுந்தது . மூன்று குணங்கள் எப்படி ,எவரால் அறியப்படுகின்றன ? அறியப்படாதபோது அவை இல்லை என்றல்லவா பொருள் ?

அதற்குப் பதிலாக சாங்கியர் உருவாக்கிய கொள்கைதான் ‘புருஷன் ‘ என்பது. பிரகிருதி என்பதை எப்படி உருவகிக்கிறோம் ? பூமியில் உள்ள அத்தனை பொருட்களையும் ஒட்டு மொத்தமாக தொகுத்து ஒற்றைப் பொருளாக கணித்து பிரகிருதி என்கிறோம் .அதேபோல எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன் .

ஆதியியற்கை போலவே புருஷனும் ஆதிவடிவம் . முதலிறுதி அற்றவன். அவனே பிரகிருதியை பார்ப்பவன், அதன் குணங்களை அவனே அறிகிறான். அவனது அறிதல் மூலமே அக்குணங்கள் உருவாகின்றன.ஒவ்வொரு மனிதனிலும் உறைவது அந்த புருஷனின் ஒரு துளியே .ஆனால் அவனும் முக்குணங்களின் சமநிீலை சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் காணப்படுகிறான். அவன் தன்னை ஒரு துளியாகவே அறியமுடிகிறது.ஆகவே அவன் காணும் பிரகிருதியும் துளிகளாக உள்ளது . புல்நுனியில் தத்தளிக்கும் பனித்துளிமீது உருமாறியபடியே மிதந்துசெல்லும் மேகத்தை பார்க்க முயல்வதுபோன்ற செயல் இது.

ஆகவே முழுமுதல் அறிதலை சாத்தியப்படுத்தும் பொருட்டு யோகம் பிறந்தது. நவீன மொழியில் அதைஇப்படி சொல்லலாம். நாம் பிரபஞ்சத்தை நமது தேவைகள் ,ஆசைகள், நோக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அறிய முடிகிறது. அதாவது நாம் அறிவது நம்மால் திரிக்கப்பட்ட உண்மையையையே .[Distorted truth] மிகப் புறவயமானதாகக் கருதப்படும் அறிவியல் கருத்துக்களில்கூட அதுவே நிகழ்கிறது என கூறும் நவீன சிந்தனையாளர் உண்டு. அதேபோல நாம் நமது உடலின் அமைப்பு , நமது பிறப்பு வளர்ப்புச் சூழல் ,நமது பொதுவான அறிவுச்சூழல், நமது அறிவுத்துறைசார்ந்த தர்க்கங்கள் ,நமது ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வு முறை ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டே நாம் உண்மையை அறிய முடிகிறது .நாம் அறியும் உண்மையானது அவ்வாறு எல்லை வகுக்கப்பட்டதாக உள்ளது. அதைவிட முக்கியமாக நம் அறிதல்களை கட்டுப்படுத்துவது மொழி உருவாக்கும் எல்லையாகும். வழக்கமான மொழி மட்டுமல்ல , அறிவியலிலும் கணிதத்திலும் பயன்படுத்தப்படும் அடையாளமொழி கூட உண்மையைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது நாம் அம்மொழிகள் வழியாக அறிந்து விவாதித்து நிறுவும் எந்த உண்மையும் அம்மொழிகளின் அடிப்படைத் தர்க்கத்துக்கு கட்டுப்பட்டது தான்.

அதாவது நாம் தற்பொழுது பல்வேறு அறிதல்முறைகள் வழியாக அடையும் உண்மையானது துண்டாடப்பட்ட உண்மையாகும் [Fragmented truth ] நவீன அறிவியலில் முக்கியமான குறைபாடாக பலகோணங்களில் பலரால் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம் .ஒரு துறையின் உண்மை பிற துறைகளால் நிராகரிக்கப்படுகிறது .மாசானபு ஃபுகுவேகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ‘ என்ற மகத்தான நூலில் அவர் அத்தகைய ‘துண்டு உண்மை ‘கள் வேளாண்மையில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் எப்படி உலகம் பேரழிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது என நிறுவுவதை காணலாம். ஒரு சிறு துண்டு தான் உண்மை என்றால் மீதியெல்லாமே பொய் என்றுதானே பொருள் ? ஃபுகுவேகா அவ்வடிப்படையில் ஐன்ஸ்டானை முற்றாக நிராகரிக்கிறார் .அவர் அது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை விளக்கும் அரை உண்மைதான் ,அதனால் எந்த பயனும் இல்லை என்கிறார் . ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ‘யில் ஒரு மகத்தான முழு உண்மையின் தரிசனத்தை ஃபுகுவேகா கண்டடைந்ததை அறியலாம்.

ஆகவேதான் மெய்ஞனிகள் ‘எல்லா கருத்துநிலை உண்மைகளும் அரை உண்மைகளே என்றார்கள் ‘ [All phenomenal truths are half truths – நடராஜ குரு Wisdom – The absolute is adorable என்ற நூலில்]பார்க்கும் தரப்பை முழுமைப்படுத்திக் கொள்ளுவதன் வழியாக பார்க்கப்படும் உண்மையை முழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அறிதலே யோகத்தின் ஆதாரம். அது மனதின் சலனங்களை முழுமையாக அழித்து குணங்களில்லாத ,சலனமற்ற ஒரு மனதை அடைய முயல்கிறது . அம்மனம் அறியும் பிரபஞ்சமும் குணங்களில்லாத ,சலனமற்ற ஒன்றாக விளங்கும் .அதுவே முழுமனம் Absolute mind] அது அறியும் உண்மையே முழு உண்மை [Absolute truth ]

மேற்கத்திய அறிவியங்கியல் [Epistemology] மீது மிதமிஞ்சிய நம்பிக்கையையும் மோகத்தையும் நமது கல்விமுறையிலிருந்து பெற்றுக் கொண்ட சிலர் உடனடியாக இந்தக் கருத்தை தூக்கி வீச முயலலாம். அவர்கள் மேற்கத்திய மொழியியல் [Linguistics] உளவியல் [psychology] போன்ற பல அறிவுத்துறைகளில் அதற்கான தேடல் உள்ளதைக் கவனிக்கவேண்டும். யோகம் ஒரு மாயத்தையோ மந்திரத்தையோ அல்லது அற்புதத்தையோ முன்வைக்கவில்லை . அது நம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை . அது வகுத்துரைப்பது பயிற்சிகளையே.

முழுமையான அறிதல் என்பது சாத்தியமா என்ற வினாவை , அறிவுத்துறைகளில் ஈடுபடும் நவீனமனதுக்கே உரிய [ஓர் எல்லைவரை அவசியமான ] ஐயநிலையுடன் [Skepticism ] அணுகலாம். ஆனால் யோகத்தின் பயன்கள் அதன் பல்வேறு திரிபு நிலைகளிலும் ,எளிமைப்படுத்தப்பட்ட நிலைகளிலும்கூட உலகங்கும் நிரூபிக்கப்பட்டவை என்பது நம் முன் உள்ள உண்மை. மிக ஆரம்பநிலையிலேயே கூட நம் மனதின் முழு சக்தியை பயன்படுத்த அவை உதவுகின்றன , நமது அறிதல்களில் மிக ஆழமான மாற்றங்களை உருவாக்குகின்றன .

[தொடரும்]

Series Navigation

விவேகன்.

விவேகன்.

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

விவேகன்


1. யோகம் ஒரு முன்னுரை

இத்தகைய ஒரு நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது . யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது . யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.

நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன . ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை . நம்முடைய லெளகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது .ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம் . நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும் , ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம் ,தத்துவம் ,மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .

அதைவிட அபாயகரமானது , அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள் அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது . நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும் . தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப் பட்டுள்ளன. அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான். குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது . மிதமிஞ்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம். இது அதற்கானமுயற்சி.

ஆன்மீகம் ,தத்துவம், மதம்

முதலில் ஆன்மீகம் தத்துவம் மதம் ஆகிய மூன்றும் வேறு வேறானவை என நாம் திட்டவட்டமாக புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும். ‘ ‘நான் யார் ? எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன ? இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன ? எப்படிச் செயல்படுகின்றன ? ‘ என்றெல்லாம் தொடங்கும் முடிவற்ற அடிப்படைக் கேள்விகள் சிந்திக்க ஆரம்பித்த காலம் முதல் மனித மனத்தில் எழுந்து கொண்டிருப்பவை. மனிதனின் அறிவெல்லாமே இவ்வினாக்களுக்கு பதில் தேடி அவன் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளே . அறிவியல் அக்கேள்விகளுக்கு புறவயமான தளத்தில் விடை தேடுகிறது . நேர் எதிர் திசையில் ஆன்மீகம் பயணம் செய்கிறது .அது அக்கேள்விகளுக்கு அகவயமான தளத்தில் விடைதேட முயல்கிறது .நுண்ணுணர்வுள்ள எவருமே இவ்விரு வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஏற்று பிறிதை நிராகரிக்க மாட்டார்கள். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அறிவியலை நிராகரிக்கவில்லை ,ஐன்ஸ்டான் ஆன்மீகத்தையும் நிராகரிக்கவில்லை .

இப்படிச் சொல்லலாம் . இந்திய மரபில் ‘இதம் ‘ என்ற சொல் ஆன்மீகத்தேடலின் முதல் கண்ணி ஆகும் . ‘இது ‘ என்று அதற்கு பொருள். ‘இது என்ன ? ‘ என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது ஆன்மீக தேடல் . இதற்கு அறிவியலாளன் அப்பொருளை எடுத்து புறவயமாக ஆராய்ந்து விடைகாண முயல்வான் .அப்பொருளை அவன் பல கூறுகளாக பகுத்து அறியலாம் . அப்பொருள் சிலிகன் இரும்பு போன்ற தாதுக்களினாலானது என்று அவன் சொல்லலாம். அத்தாதுக்கள் எந்தெந்த மூலக்கூறுகளினாலானது என அவன் விளக்கலாம் .அணுக்களாக அம்மூலக்கூறுகளை பிரிக்கலாம் . அணுவை துகள்களாகப் பிளக்கலாம். இது பகுத்தல்முறை . நேர்எதிர் திசையில் சென்று அப்பொருளை அவன் பிரபஞ்சத்தின் பிற பொருட்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை மலையுடனும் நிலத்துடனும் சம்பந்தப்படுத்தி அதன் இயல்புகளை அறியலாம். இது தொகுத்தல் முறை .இவ்விரு முறைகளையும் சேர்த்தேகூட அவன் செய்யலாம் .

ஆனால் ஆன்மீகவாதி அப்பொருளை நோக்கி தன் கவனத்தை குவிப்பதில்லை . அப்பொருள் ஏன் அப்படி தனக்கு தெரிகிறது என அவன் யோசிப்பான். தன் புலன்கள் அப்படி அதை காட்டுகின்றன. புலன்கள் மூலம் அப்பொருளை அறிவது எது ? அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது – காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது – காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன ? இவ்வாறெல்லாம் ஆன்மீகம் தனக்குள்ளே ஆழ்ந்து தன்னை ஆராய்ந்து உள்ளே செல்லும் . ஆன்மீக அம்சமில்லாத அடிப்படைச் சிந்தனை இருக்க முடியாது .

ஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக ஆகிவிடுகிறது .காரணம் அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது .அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும் வடிவமும் உருவாகிவிடுகிறது .பேசப்பட்ட ,கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவமாகிவிடுகிறது .அனுபவ நிலையில் அகவயமாக நிற்கும் ஆன்மீகமே தூயது . ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம் . அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன .

தத்துவம் மூலம் சொல்லப்பட்டதை வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும் ஒழுக்கங்களும் மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில் , மடம் , புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும் மரபுகளும் அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும் . மதம் எப்போதுமே சில விடைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம் .அவ்விடைகள் காலவதியாகும் போது மதமும் பழையதாகலாம். தேங்கிய மதம் பொருந்தாத பிடிவாதங்களும் மரபுகளும் நம்பிக்கைகளும் கொண்ட தீய சக்திகூட ஆகலாம்.

தத்துவம் மதத்தைப்போல சில விடைகளுடன் நின்று விடுவதல்ல . தத்துவவாதி கேள்விகளுடன் முன்னகர்கிறவன்தான். ஆனால் அவனுக்கும் ஓர் எல்லை உண்டு . தத்துவம் தன்னுடைய ‘உண்மையை நிர்ணயிக்கும் முறைக்கு ‘ கட்டுப்பட்டது . அம்முறை மறுக்கப்படுகையில் அதுவும் மறுக்கப்படுகிறது.ஆன்மீகம் எந்த கட்டுப்பாடும் இல்லாதது .காரணம் அது முழுமையாகவே அகவயமானது. அதற்கு எந்த நிரந்தரமான அமைப்பும் இல்லை .அதற்கு வடிவமும் இல்லை . ஆகவேதான் குப்பையில் கிடக்கும் சித்தனும் ஐந்துவேளை குளிக்கும் பக்தனும் ஒரே சமயம் ஆன்மீகவாதிகளாக இருக்க முடிகிறது .

யோகம் , தியானம் ,பிரார்த்தனை

நம்மில் பலர் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகவே இதுவரை எண்ணி வருகிறார்கள் . அதற்கேற்ப இன்று யோகம் மற்றும் தியானம் ஆகியவற்றை எளிமைப்படுத்தி கற்பிக்க முயலும் பல நிறுவனங்கள் இம்மூன்றும் ஒன்றே என்பது போன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி வருகின்றன. இவை முற்றிலும் வேறு வேறானவை என்பதை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் . கடவுளை ஒரு ஆதி சிருஷ்டிகர்த்தர் என்றோ , பிதா என்றோ , ஆக்கி காத்து அழிக்கும் சக்தி என்றோ ,ஒவ்வொன்றிலும் உறையும் அறியமுடியாத மர்மமான வல்லமை என்றோ , பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் பெருநியதி என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் . பிரார்த்தனை என்பது அச்சக்தியிடம் செய்யப்படும் உரையாடல். அதனிடம் செய்யப்படும் வேண்டுகோள்.

தியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில் மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் . அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து அதன் சிதறுண்ட இயக்கத்தை சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கிீறது .

ஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர் எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முயல்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .

யோகம் மத வழிபாடா ?

தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லெளகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி.

பழமையில் என்ன இருக்கிறது ?

தமிழ் சூழலில் இத்தகைய பழைய நூல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி எதற்காக பழைய விஷயங்களை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். இது ஒருவகையில் சரிதான். ஒரு சாதாரண வாசகனுக்கு பழைய விஷயங்கள் தேவை இல்லைதான். எளிய முறையில் தியானம் செய்யவோ, யோகம் பயிலவோ முயலும் ஒருவருக்கு கூட அவர் சார்ந்துள்ள அமைப்பு அளிக்கும் அறிமுகமே போதுமானது .

ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடாஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.

பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .

தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார் ? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பெளத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.

உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.

பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.

எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுிடிப்புகள் கூட

நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும் ?

அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டான் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடாசின் ‘குடியரசு ‘ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.

மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும் சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்ப நாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.

ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.

[தொடரும் ]

Series Navigation

விவேகன்.

விவேகன்.