கடிதங்கள்

This entry is part of 31 in the series 20031002_Issue

அக்டோபர் 3, 2003திண்ணைக்குழு குறிப்பு:

இந்த வாரத் திண்ணை தாமதமாக வெளிவருகிறது. தவிர்க்கமுடியாத தொழில்நுட்பப்பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதனை தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் 3 வரை திண்ணைகுழு பெற்ற படைப்புக்களே இங்கு வெளியாகின்றன. வரும் வார திண்ணை இதழ் வெள்ளியன்று வெளியாகும்


ஞாநியின் ‘பாய்ஸ் ‘ பற்றிய கட்டுரையை விமர்சித்து பெங்களூர் வாசகர் எழுதிய கடிதம் கண்டேன். ‘ஒரு பெண்ணைப்பார்த்து ‘உங்கள் மார்பகங்களை திண்மையாக்க என்ன செய்கிறீர்கள் ? ‘ என ஒரு ஆண் நேரிடையாகத்தானே கேட்கிறார். இதைவிட என்ன நேர்மையை ஞாநி எதிர்பார்க்கிறார் ? ‘ எனக் கேட்பது சிறுபிள்ளைத்தனமான வாதம். நேர்மை என்பதன் முழு அர்த்தத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது கட்டுகிறது. நேரிடையாக கேட்பது மட்டுமே நேர்மையல்ல. புதுமணத் தம்பதியரிடம் போய் முதலிரவில் என்ன செய்தீர்கள் எனக் கேட்டுவிட்டு, நேரிடையாகத்தானே கேட்டேன். என்ன ஒரு நேர்மை என்று கூறமுடியாது. ‘இங்கிதம் ‘ என்பதாகத் தமிழில் ஒரு அருமையான வார்த்தையுள்ளது! ஒரு கொலைக்குற்றவாளி ‘நான் கொலை செய்துவிட்டேன். ‘ என்று கூறினால் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டான் என்று தான் கூறுவார்களேயொழிய, அவன் நேர்மையாக நடந்து கொண்டான் என்று கூறமாட்டார்கள்!

உண்மையோடு அறம் சேர்ந்தால் தான் அது நேர்மை. (எதிலும் அறத்தைக் கலப்பது பண்டைய தமிழர்களின் குணம்.). அறம் ஒழுக்கத்தோடு இருந்தால்தான் அதற்கே மதிப்பு. ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் ‘ என்று ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தோடு இயைந்தால்தான் உண்மை, நேர்மை அனைத்திற்கும் மதிப்பே. ஒழுக்கத்தை புறக்கணிக்கும் உண்மைகளும் நேர்மைகளும் குப்பைகளே.

ஒழுக்கக்குறைவான படங்களும் – யார் எடுத்திருந்தாலும், யார் வசனம் எழுதியிருந்தாலும் – குப்பைகளே. ஒழுக்கக்குறைவான, இங்கிதமற்ற நாவல்களும், எழுத்துக்களும் – யார் எழுதியிருந்தாலும் – குப்பைகளே. ஒழுக்கக்குறைவாக நடப்பவர்களும் – யாராக இருந்தாலும் – மதிப்பற்ற குப்பைக்கு சமமே.

– பித்தன்


அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு,

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அன்பும் அருளும் பொழியட்டும்.

நான் திண்ணையை நேசித்து வாசிக்கும் (மலேசியாவிலிருந்து) வாசகன் .

மாற்றுகருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதாக கூறிஆரம்பத்தில் ‘இஸ்லாமிய எதிர்ப்பு ‘ செய்திகளை, கட்டுரைகளை அடிக்கடி தாங்கி வந்த திண்ணையில் தோற்றம் தற்போது

‘நடுநிலைமை ‘க்கு மாறியிருப்பது என் போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

திண்ணையில் வெளியிடப்படும் கதைகள், இலக்கிய கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மிகவும் கருத்துள்ளதாக வாசிப்பவரை சிந்திக்கவைப்பதாக தோன்றுகிறது.

இரா.முருகன் மற்றிம் ஜெயமோகனின் எழுத்துக்கள் மீது என்னை மோகம் கொள்ளச் செய்தது திண்ணைதான். இன்னும் எழுத தோன்றுகிறது ஆனால் நேரமில்லை..முடிவாக..ஒவ்வொரு தடவையும் ‘திண்ணையை ‘ விட்டு வெளிவரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டோம் என்ற உணர்வுடன் வருகிறேன்..திண்ணையின் பணி தொடர, வளர ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கா.மெளலாசா


Dear Editor,

I suggest that you incorporate the publication date of each Thinnai magazine within the opening page masthead, instead of at the bottom of the page, where it apears insignificant & does not grab attention.

Thank you.

Dr.R.Karthigesu.


ஆபிதீன் எழுதிய சிறுகதை சென்ற இதழில் சிறப்பாக இருந்தது. அ.முத்துலிங்கத்தில் கட்டுரையும் சுவாரஸியமான வாசிப்பனுபவத்தை அளித்தது. பொதுவாக நம் இதழ்களில் குறைவாகவே நல்ல வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள் கிடைக்கின்றன. ஆபிதீனின் கதையில் பல இடங்கள் நுட்ப்மான அங்கதங்கள் உள்ளன. காசர்கோட்டில் இஸ்லாமிய நண்பர்களுடன் நெருங்கி பழகிய காலத்தில் அறிந்த நல்ல அரபு சொற்களை இவரது எழுத்தில் அங்கதமாகவும் நுட்பமான மாறுதல்களுடனும் காணமுடிகிறது. [ஏறத்தாழ இதேபோன்ற சுவாரஸியமான ஒரு கதையை சமீபத்தைய /காலம்/ இதழில் மணிவேலுப்பிள்ளை எழுதியிருந்தார்] பாராட்டுக்கள்

அரசூர்வம்சம் அழகான அங்கதத்துடன் உள்ளது. [25 நண்பர்களுக்கு அதைபடிக்கும்படி எழுதினேன். பத்துபேர் பிரிண்ட் எடுத்து அனுப்பு என்று எனக்கே செலவு வைக்க முயன்றார்கள்]. ஆனால் முருகன் எவ்வளவு முயன்றாலும் சரித்திரம் எழுதப்படுவதில் உள்ள உண்மையான அபத்தத்தை தன் புனைவால் எட்ட முடியாது . ஓர் உதாரணம் . தர்மபுரிமாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின்பேர் ‘டெங்கனிக்கோட்டா ‘ .தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள மிகவும் பிற்பட்ட பகுதி இது. டெங்கனிக்கோட்டா என்றால் தெலுங்கின் ஒரு கிளைமொழியில் தெற்குக் கோட்டை என்று பெயர். அதை இருபது வருடம் முன்பு தூய தமிழில் ‘தேன் கனி கோட்டை ‘ என்று மாற்றினார்கள். பிறகு எப்படியோ அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனியுடன் சேர்த்து தானமாக கொடுத்த ஊர் அது , ஆகவேதான் அப்பெயர் என்று ஒரு கூற்று ஆரம்பித்தது. அங்கே அவ்வையார்பெயரில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை. தர்மபுரிதான் அதியமான் ஆண்ட தகடூர் என்று ஒரு நம்பிக்கை ஏற்கனவே உண்டு .. ஆகவே அதையே தகடூர் என்கிறார்கள். அங்கே நெல்லிக்கனி சம்பந்தமான ஏகப்பட்ட அரசு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதற்கும் ஆதாரம் கிடையாது. ‘அதுமன்கோட்டை ‘ என்ற புராதன ஊரும் நடுவே சென்ராயபெருமாள் கோவிலும் உள்ளது. ஊர் 10 ஆம் நூற்றாண்டைத் தாண்டியது. அதை முப்பதுவருடம் முன்பு ‘அதியமான் கோட்டை ‘ என்று பெயர் மாற்றி ஒட்டுமொத்த தர்மபுரியையே தகடூர் ஆக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் நமது ‘வம்ச ‘ கதைகள் எழுதப்படுகின்றன. முருகன் கதை எழுதுவதை விட இதே அரசூர்வம்சகதையை வரலாற்றாய்வா க மேலும் சி ல கல்வெட்டு ஆய்வுகளுடம் இருபதுவருடம் செய்தால் இதுவும் நம் வரலாறாகிவிடும்.

ஜெயமோகன்


பாய்ஸ் படம் குறித்து.

திரைப்படங்கள் மக்களை நல்லவர்களாக்குவதில்லை. இது போலவே இவை எவரையும் கெடுப்பதுமில்லை.

ஒரு திரைப்படத்தால் அழிந்து போகக்கூடிய அளவுக்கு ஓரினத்தின் பண்பாடு (ஓரினத்துக்கென்று ஒரு தனிப்பண்பாடு இல்லை என்பது என் எண்ணம்) அவ்வளவு உறுதியற்றதாக இருந்தால் அப்படிப்பட்ட பண்பாடு வாழ்வதை விட அழிவது மேல்.

தங்களுக்குப் பிடிக்காத திரைப்படத்துக்குத் தணிக்கை கோருபவர்களுக்கும் தலிபான்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்னும் எச்சரிக்கை (A படம் என்றிருந்தது போல) தரவேண்டியது அரசின்,படத்தயாரிப்பாளரின் கடமை.

பரிமளம்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

‘மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநி ‘ என்னும் எனது சென்ற வாரக் கட்டுரையில் ஒரு சிறு தசமப் புள்ளி பிழை மின்சார உற்பத்தி எண்ணிகையில் காணப்பட்டது. கீழே அடைப்புக்குள் சாய்வு எழுத்துக்களில் திருத்தமான எண்ணிக்கையே சரியானது.

இந்தியாவைப் போல் மற்றும் 30 உலக நாடுகள் 438 அணுமின் உலைகளை இயக்கி [2001 அறிக்கை] 351,327 MWe மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன! அடுத்து 31 அணு உலைகள் கட்டப்பட்டு இன்னும் 27,756 MWe அதிக மின்னாற்றல் உலகெங்கும் பெருகப் போகிறது! [2000 ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் 2,447.53 பில்லியன் யூனிட் [KWh] மின்சாரம் உற்பத்தியாகி யுள்ளது!] மேலும் அமெரிக்கா, கனடா நாடுகளில் வயதாகி முன்பு மூடப்பட்ட பழைய அணு உலைகள், பல புதுப்பிக்கப்பட்டு மின்சாரம் பற்றாக் குறைப் பிரச்சனையை நிவர்த்தி செய்யத் தயாராக்கப் படுகின்றன.

சி. ஜெயபாரதன், கனடா


ஆசிரியருக்கு

சூர்யாவின் கட்டுரை வலுவான ஆதாரங்கள் அற்றது,அவர் முன்வைக்கும் உதாரணங்களும் பொருத்தமானதாக இல்லை, ஆனால் ஏதோ உலக மகா உண்மையை சொல்கிற தொனி கட்டுரையில் உள்ளது.இந்த வித்ததில் அவர் ஜெயமோகன் எழுதும் கட்டுரைகளின் ‘தரத்தை ‘ எட்ட முயன்றுள்ளார்.கட்டுரையின் நீளம்தான் குறைவு.மற்றப்படி ஜெயமோகனின் கட்டுரைகளுடன் ஒப்பிடத்தக்கது அது.விக்ரமனின் முதல் படம் புது வசந்தம் பெரும் வெற்றி, ஆனால் அடுத்த படம் படு தோல்வி.அதன் பின் அவரது எல்லாப் படங்களும் ஒரே மாதிரியான வெற்றி/தோல்விப் படங்கள் என்று சொல்ல முடியாது.பாரதிராஜாவின்முதல் தோல்விப்படம் நிழல்கள்.அலைகள் ஒய்வதில்லை வெற்றி பெற்றது, காதல் ஒவியம் தோல்வியுற்றது.கொடி பறக்குது படமும் அவர் இயக்கியதுதான், வேதம் புதிதும் அவர் இயக்கியதுதான்.இளையராஜாவின் வீழ்ச்சிக்கு காரணம் ஒருவர் அவரை அறைந்ததா ? என்ன பிதற்றல் இது ?.

காஞ்சி சங்கரமடம் ஆதிசங்கரர் நிறுவியது அல்ல என்ற சர்ச்சை பழையது.சமீபத்தில் கூட இப்போதுள்ள காஞ்சி சங்கராச்சாரியரை விமர்சித்து சில ஹிந்த்துவ அமைப்புகள் அறிக்கை விட்ட போது ஒரு ஹிந்த்த்வ ஆதரவு இணைய தளம் இதே சர்ச்சையைப் பற்றி எழுதியது. தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடாதிபதிகள் தீண்டாமை ஒழிப்பு,தமிழில் வழிபாடு,சமூக சீர்திருத்தம் போன்றவற்றை முன்னெடுத்து ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால் காஞ்சி மடத்தின் செல்வாக்கினை குறைத்திருக்க முடியும். அவர்கள் ஊடகங்க்ளையும் பயன்படுத்தத் தவறினர். காஞ்சி மடத்தை இன்று கருணாநிதி விமர்சிக்கிறார், ஆனால் ஸ்டாலின் முன்பு குடும்பத்துடன் காஞ்சி சங்கராச்சாரியரை சந்த்தித்தாக செய்திகள் வெளியாயின. எனவே காஞ்சி மடத்தை மட்டும் விமர்சித்துப்பயனில்லை.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


Series Navigation