வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

PS நரேந்திரன்


விழுப்புரத்திலிருந்து கடலூர் போகும் வழியில், பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கும் போது கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது.

தற்போது புதிதாகக் கட்டப் பட்டிருக்கும் பாலத்திலிருந்து சிறிது தொலைவில், இன்னும் நின்று கொண்டிருக்கும் பழைய பாலத்திற்கு மிக அருகில் ஆற்று மண்ணைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். லாரிக் கணக்கில். ஒரு லாரி, இரண்டு லாரி அல்ல. குறைந்தது ஐம்பது லாரிகளாவது இருக்கும். ஆற்றின் ஓரத்தில் பக்காவாகச் சாலை இடப்பட்டு, மிக சிஸ்டமடிக்காக ஆற்றினைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள். Bomb crater-கள் போல மிகப் பெரும் பள்ளங்கள்.

அதே பாலத்தை இன்னொரு முறை இரவு நேரத்தில் கடக்க நேரிட்டது. என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அந்த நடு நிசி நேரத்திலும், பளிச்சென்று மின்சார விளக்குகள் போடப்பட்டு, ஏராளமான லாரிகள் ஆற்றுக்குள் போய் வந்து கொண்டிருந்தன. இரவு பகலாக அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. இது போன்ற அநியாயத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. கொள்ளையிலும் இது மகா மோசமான கொள்ளை இது. கேட்பாரே இல்லாமல் நடக்கும் பகல் கொள்ளை. தமிழ்நாட்டு அரசாங்கம் நடக்கும் லட்சணம்தான் நமக்குத் தெரியும். இந்த ஆற்றினை நம்பி விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் கூடவா தட்டிக் கேட்கக் கூடாது ? அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய விஷயமில்லையா இது ?

எனது மனக்குமுறலை வருத்தத்தோடு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

‘என்ன தம்பி செய்யிறது ? இந்த பாழாப் போன சாதிப் பிரிவினை எங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது ‘ என்றார்.

‘புரியவில்லை. சாதிப் பிரிவினைக்கும் ஆற்று மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்பதற்கும் என்ன சம்பந்தம் ? ‘

‘பெண்ணையாற்று மணலைக் கொள்ளை அடிப்பது இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆளூம் கட்சி மந்திரி. இது இந்தப் பக்கம் இருக்கிற எல்லோருக்கும் தெரியும். ஆனா அவர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர். அந்த சாதிக்காரர்கள் இங்கு நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தட்டிக் கேட்கவும் மாட்டார்கள். நம்மையும் தட்டிக் கேட்க விட மாட்டார்கள். அவர்களூடைய சாதிக்காரர் இல்லையா ? ‘.

(விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வன்னியர்களும், தலித்களும் ஏறக்குறைய சம அளவு இருக்கிறார்கள். சாதிக் கலவரங்கள் இந்தப் பகுதியில் சர்வ சாதாரணம். மிகவும் சென்ஸிட்டிவான ஏரியா இது. சிறு பொறி கூட இந்தப் பகுதி அரசியல்வாதிகளால் பெரு நெருப்பாக ஊதப்பட்டு, அதில் அவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருப்பார்கள். உங்களூக்குத் தெரியாத விஷயமில்லை இது…)

‘பாதிப்பு எல்லோருக்கும்தானே ? நிலத்தடி நீர் கீழே போய் விட்டால் இந்தப் பகுதி கரும்பு விவசாயிகளுக்குத்தான் கேடு. இதில் எல்லா சாதிக்காரர்களும்தானே பாதிக்கப்படுவார்கள் ? ‘

‘உண்மைதான். என்னை மாதிரி சாதாரண ஆட்கள் என்ன செய்ய முடியும் ? கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக இப்படி ஆற்று மண் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளே சும்மா இருக்கிறார்கள். மீறிக் கேட்பவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. இதுதான் இன்றைய நிதர்சனம். என்ன செய்வது ? ‘ என்றார் சோகத்துடன்.

இதுபற்றி இன்னொரு விஷயமறிந்த நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

‘ஒரு லாரி லோடு ஆற்று மணல் ரூ. 4500க்கு சென்னையில் விற்கப்படுகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது 1000 லோடு மணலாவது பெண்ணையாற்றில் அள்ளுகிறார்கள். புதிய ஆட்சி வந்த இந்த மூன்று வருடங்களாக இது நடக்கிறது. எவ்வளவு பணம் புரளுகிறது என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் ‘ என்றார் அவர்.

தமிழ்நாடு பாலைவனமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். மணல் கொள்ளை இப்படியே தொடர்ந்தால், இந்தப் பகுதி பாதிக்கப் படப் போவது சர்வ நிச்சயம். கடவுள்தான் இந்த ஜனங்களைக் காப்பாற்ற வேண்டும். நான் என்ன செய்ய முடியும் ? அடுத்த முறை நான் இந்தப் பக்கம் வரும்போது, பெண்ணையாற்றில் ஒரு ‘மண்ணும் ‘ இருக்காது என்று மனதுக்குப் பட்டது.

இப்படிக் கொள்ளை அடித்துதான் பாலாறு, பாழாறானது. மற்ற ஆறுகளிலும் இதே கதைதான் நடந்து கொண்டிருக்கும் என்பதே என் யூகம்.

இது இப்படியே தொடர்ந்தால், கீழ்க்கண்ட கவிதை வரிகளை இப்படி மாற்றிப் பாட வேண்டிய காலம் வந்தாலும் வரலாம்.

காவிரி தென்பெண்ணை பாலாறு

கரை கண்டதோர் வைகை பொருநைநதி

என மேவிய ஆறுகள் பல ‘காய்ந்து ‘

தன் மேனி ‘வறண்ட ‘ தமிழ்நாடு.

( ‘இப்பவே அப்படித்தான்யா இருக்கு ‘ என்கிறீர்களா ?)

***

தமிழின் பிரபல எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் அவர்கள் பாண்டிச்சேரியில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். முகவரி தெரியாமல், அவரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து ஒரு வழியாக லாஸ் பேட்டையிலிருந்த அவரின் அப்பார்ட்மென்டைக் கண்டுபிடித்தேன்.

அவரைச் சந்தித்த போது என்னை மிகவும் கவர்ந்தது அவரின் எளிமை. தான் ஒரு பிரபலம் என்ற எந்தவித பகட்டு, பாசாங்குகளும் இல்லாமல் அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

நான்கைந்து வருடங்களுக்கு முன், கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் கோவில்பட்டி தாண்டி, அவரின் ‘இடை செவல் ‘ கிராமத்தைப் பார்க்கப் போனதையும், அவரின் ‘கோபல்ல கிராமம் ‘ நாவலில் வரும் கிராமத்தைப் போல இல்லாமல், வெறும் பொட்டல் காட்டுக் கடைத்தெரு போல இருந்ததையும், அதனால் எனக்கு உண்டான ஏமாற்றத்தையும் சொன்னேன்.

‘நீங்க சொல்றது சரிதான். அது வெறும் கடைத்தெரு. ஊர் இன்னும் உள்ளே இரண்டு மூன்று கிலோ மீட்டர் தாண்டி இருக்கு ‘ என்றார்.

‘நீங்கள் ஏன் உங்கள் கிராமத்தையும், ஜனங்களையும் விட்டுவிட்டு இந்த டவுனில் முடங்கிக் கிடக்கிறீர்கள் ? இங்கு என்ன இருக்கிறது ? சத்தத்தையும், வாகனப் புகையைத் தவிர ‘ என்று கேட்டேன்.

‘கிராமம் நகரம் எல்லாம் ஒண்ணுதான். வித்தியாசமில்லே. பாண்டிச்சேரியே ஒரு கிராமீய நகரம். இதை நகரம்னு சொல்ல முடியாது. கிராமம்னும் சொல்ல முடியாது. என்னொட மகன் இங்கே வேலை செய்யறாரு. அதான் இங்கியே வந்துட்டேன் ‘ என்றார்.

இப்படியே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இருட்டி விட்டதால், அவரைத் தொல்லை செய்ய மனமின்றி இன்னொரு முறை வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்து விட்டேன். மீண்டும் சந்திக்க அவகாசம் கிட்டவில்லை.

நான் கண்டவரை, கி.ரா. அவர்கள் மிகுந்த புத்தி கூர்மையுள்ள, கள்ளம் கபடமற்ற, பழுத்த அனுபவமுள்ள மனிதர். அவர் பேசப் பேச எனக்குள் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த அகம்பாவம், ஆணவம் எல்லாம் ‘அண்டர்வேரோடு ‘ அவிழ்ந்து விழுந்த உணர்வு.

நான் நிறை குடமாக இன்னும் ரொம்ப நாளாகும் போலிருக்கிறது!

தமிழுக்கு நிறையச் செய்திருக்கிறார் கி.ரா.

பதிலுக்கு தமிழர்கள் ஒன்று கூடி அவருக்கு ஏதாகினும் நல்லது செய்யவேண்டும்.

***

‘இந்த ஆரோவில்…ஆரோவில்னு சொல்கிறார்களே…அதில் அப்படி என்னதான் இருக்கிறதோ ? அதையுந்தான் போய் பார்த்துவிட்டு வரலாமே ‘ என்று ஒருநாள் ஆரோவில் பக்கம் குடும்பத்தோடு போயிருந்தேன். எல்லோரும் புதிதாகக் கட்டியிருக்கும் ஒரு மண்டபம் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னதால் அதைக் முதலில் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் போனேன்.

சரியான கூட்டம் மண்டபத்தைப் பார்ப்பதற்கு. ஆரோவில் ஊழியர்கள் எல்லோரையும் ஒழுங்கு படுத்தி வரிசையில் நிற்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மலைப் பாம்பு மாதிரி ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். கையில் காமெரா, வாட்டர் பாட்டில் எதுவும் எடுத்துப் போகக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள்.

அதை விட, உள்ளே நுழைந்து வெளியே வரும்வரை யாரும் பேசக்கூடாது. பேசக் கூடாதுன்னா பேசக் கூடாதுதான். மூச்…

வரிசையில் நிற்கும் போது, குறைந்தது ஒரு பதினைந்து பேர்களாவது ‘பேசக் கூடாது ‘ என்று சொல்லி விட்டுப் போனார்கள். இந்தி, இங்கிலீஷ், தமிழ் என மூன்று பாஷைகளிலும்.

‘சே..வெயில் இப்படிக் கொளுத்… ‘

சொல்லி முடிக்குமுன் ஒரு ஆசாமி கிட்டே வந்து ‘உஷ்…பேசக்கூடாது ‘ என்று சொல்லி விட்டுப் போவார். நாங்களாவது பெரியவர்கள். பேசாதிருந்து விடலாம். குழந்தைகள் என்ன செய்வார்கள் ? அவர்களை எப்படி அடக்கி வைக்க முடியும் ?

‘அப்பா கால் வலிக்கிறது. என்னைத் தூக்குங்கள் ‘

‘கொஞ்சம் இரு. இன்னும்… ‘

அதற்குள் ஒரு சதுரவெட்டுத் தலையன் கிட்டே வந்து ‘படிச்சவங்க மாதிரி இருக்கீங்க. பேசாம இருங்க சார் கொஞ்ச நேரம்… ‘ என அதட்டி விட்டுப் போனான்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மண்டபத்திற்குள் பேசாதீர்கள் என்று சொன்னால் சரிதான். அதை நெருங்கவே இன்னும் குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். அதுவரை எப்படி பேசாமல் இருப்பது என்று மலைப்பாக இருந்தது. நர்சரி ஸ்கூல் கெட்டது போங்கள்.

(ஒன்றை உங்களூக்குச் சொல்லியாக வேண்டும். நான் நாத்திகன் இல்லை. கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்காக கண்மூடித்தனமான பக்தியெல்லாம் கிடையாது. சாதாரணமான பக்திதான். நீங்கள் தவறாக நினைத்து விடக் கூடாதில்லையா ? அதற்காகச் சொன்னேன்.)

இவர்கள் பண்ணுகிற கூத்தையெல்லாம் பார்த்துவிட்டு விட்டு எனக்குள் ஒரு பெரிய எதிர்பார்ப்பு. நிமிடத்திற்கு நிமிடம் அந்த எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருந்தது. இங்கே என்னவோ மிக முக்கியமான சங்கதி இருக்கிறது. இதை விடக்கூடாது. எப்படியும் பார்த்துவிட வேண்டும் என மனது கிடந்து துடிக்க ஆரம்பித்து விட்டது.

‘பில்ட் அப் ‘ என்றால் அப்படி ஒரு ‘பில்ட் அப் ‘ கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மண்டபத்தில் நுழைந்தவுடன் எனக்கு முக்தி கிடைத்து, ‘சொய்ங் ‘ என்று சொர்கத்துக்கு போய் விடலாம் என்ற எண்ணத்துடன் பரபரத்துக் கொண்டிருந்தேன்.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு ரொம்ப impressive-ஆன கட்டடம் அது. உலக உருண்டையைப் போல, வெளிப்புறம் எல்லாம் தங்கத் தகடுகள்( ?!) பொருத்தப் பட்டு மின்னிக் கொண்டிருந்தது. எதற்கு இவ்வளவு பணத்தை இதில் கொட்டி வீணாக்கியிருக்கிறார்கள் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்குச் செலவான பணத்தில் பத்து பள்ளிக் கூடம் கட்டி இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். இருக்கட்டும். இருக்கட்டும். கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்களை தவறாகச் சொல்லக்கூடாது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இப்படிப் பலவாறான எதிர்பார்ப்பு, எண்ணங்கள், பரவசத்துடன் உள்ளே நுழைந்தால்….

‘அட படவா ராஸ்கோலுங்களா….இதுக்காடா இந்த அலம்பல் பண்ணிணீங்க…உங்க துனியா கோல் மாதிரி திமாக்கும் கோலா இருக்குதேடா….உங்களையெல்லாம்….நற..நற..நற.. ‘

அமைதி….அமைதி….அமைதி…

இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். விருப்பமிருந்தால் நீங்களே போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

***

அடடா…என்னென்னவோ எழுதி விட்டு, கங்கை கொண்ட சோழபுரம் போனதைப் பற்றி எழுத மறந்துவிட்டேனே…

அடுத்த வாரம் கண்டிப்பாக எழுதுகிறேன்.

***

narendranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்