பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2

This entry is part of 42 in the series 20030626_Issue

ரோரி மக்கார்த்தி


சென்ற மாதம் மனோ தன்னுடைய பாகிஸ்தானிய ஜமீன்தாரிடமிருந்து தப்பி ஓடினார். இந்த 65 வயதான முதியவர் உடல் தளர்ந்து வாழ்நாள் முழுவது ஜமீன்தாருக்காக சிந்து மாகாணத்தின் வயல்களில் உழைத்து நொந்து போய் தோல் வற்றிப் போயிருந்தாலும் கோபத்துடன் இருந்தார்.

‘அந்த ஜமீன்தாரை வெறுக்கிறேன். அவனை மீண்டும் சந்தித்தால் அவனை அடிப்பேன் ‘ என்று சொன்னார்.

இறுதியாக மனோ சுதந்திரமடைந்தார். கடந்த 36 வருடங்களாக அவர் பகலும் இரவும் கரும்பையும், பருத்திச் செடிகளையும் தன்னுடைய ஜமீன்தாருக்காக தெற்கு பாகிஸ்தானில் பராமரித்து வந்தார்.

மனோ தனக்கு கடன் பாக்கி கொடுக்க வேண்டுமென்றும், அந்த கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றும் ஜமீன்தார் சொன்னார். இவரும் இவரைப்போன்ற இன்னும் 1000 பேர்களும் தப்பிவிடக்கூடாது என்று ஆயுதம் தாங்கிய காவலாளிகள் வயல்களைச் சுற்றி காவல் காக்கின்றனர்.

‘நாங்கள் படிப்பறிவு அற்றவர்கள். எங்களுக்கு கணக்குவழக்கெல்லாம் தெரியாது. நாங்கள் கடன் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னார்கள். அது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று சொன்னார்கள். எங்களை வெளியே போகவிடவில்லை ‘ என்று இவர் சொன்னார்.

சிலர் உண்மையிலேயே ஜமீன்தாரிடமிருந்து பணம் பெற்றிருந்தார்கள். மனோ போன்ற மற்றவர்கள் எப்படி தங்களுக்குக் கடன் வந்தது என்றே தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் கொத்தடிமைகள். அல்லது ‘ஹரி ‘க்கள். (ஹரி என்றால் தோற்றவன் என்று பொருள். இந்துக்கள் முஸ்லீம்களிடம் தோற்றவர்கள் என்பதால் அவர்களை ஷரியத் சட்டப்படி அடிமைப்படுத்தலாம் என்பது ஜமீன்தார்கள் தரும் சப்பைக்கட்டு – மொ.பெ) இவர்கள் ஏழைகள். படிப்பறிவற்றவர்கள். இந்த ஜமீன்தார்களிடம் காலம் முழுவதும் வேலை செய்கிறார்கள். இவர்கள் பெறும் கடனுக்கு மாதம் 10 சதவீதம் வட்டி என்று இவர்கள் சொல்கிறார்கள்.

1973இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி கொத்தடிமை முறை சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கப்பட்டது. இருப்பினும், சுமார் 20 லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இன்னும் சிந்து மாநிலம், பஞ்சாப் மாநிலம் போன்ற இடங்களில் இருக்கும் பண்ணைகளில் கொத்தடிமையாக இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பே பாகிஸ்தானின் பெரும் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கக் காரணம். இந்த பணக்காரர்களே பெரும் அரசியல்வாதிகளாகவும், ராணுவதளபதிகளாகவும் இருக்கிறார்கள்.

‘இறுதியில் என்னுடைய கடன் 2,50,000 ரூபாயாக ஆகிவிட்டது. எங்களுக்கு கோதுமைமாவும் பச்சைமிளகாயுமே உணவாகக் கொடுத்தார்கள். எங்களை அடிப்பார்கள், எங்கள் பெண்கள் அடிக்கடி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவார்கள் ‘ என்று மனோ சொல்கிறார்.

ஜமீன்தாரின் குடும்பம் ஒரு சவஅடக்கத்தைப் பார்க்கச் சென்றபோது, மனோவும் இன்னும் 60 பேர்களும் தப்பியோடி, பாகிஸ்தானில் இருக்கும் ஹைதராபாத் அருகே இருக்கும் கோட்ரி நகரத்தில் மனித உரிமைகள் கமிஷன் உருவாக்கிய நான்கு முகாம்களில் ஒன்றில் வாழ்கிறார்கள்.

பெரும்பாலான ஹரிகள் போலவே, மனோவும் ஒரு கீழ்ஜாதி இந்து. ‘தீண்டத்தகாதவர் ‘. இவர் இந்தியாவின் எல்லைக்கோடுக்கு அருகே இருக்கும் தார் பாலைவனத்தைச் சார்ந்தவர். ஜாதி பிரிவினை இல்லை என்று பெருமை பேசும் பாகிஸ்தானில்கூட இவரது கையை தொடுபவர்கள் அரிது.

பெண்களுக்கு இந்த பண்ணைகளில் வாழ்க்கை மிகவும் கொடிது. அதிர்ஷ்டக்காரர்கள் வயல்களில் வேலை செய்கிறார்கள். மீரா அதிர்ஷ்டக்காரி இல்லை. அவர் 16 வயதிலிருந்து பாலியல் அடிமையாக உபயோகப்படுத்தப்பட்டார்.

‘நான் ஜமீன்தாரின் வீட்டில் 15 வருடம் இருந்தேன். எனக்கு ஜமீன்தார் மூலம் இரண்டு குழந்தைகள் உண்டு. ‘ என்று மீரா கூறினார். 36 வயதாகும் மீராவும் தார் பாலைவனத்தைச் சார்ந்த கீழ் ஜாதி இந்து.

‘எனக்கு 16 வயதாகும் போது இது ஆரம்பித்தது. எங்களைத் தொடர்ந்து அடித்தார்கள். நாங்கள் அஞ்சினோம். ஐந்து பெண்கள் அவருக்காக நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் அடிக்கடி பலாத்காரத்துக்கு உட்பட வேண்டி வந்தது ‘ என்று மீரா கூறினார்.

‘ஜமீன்தாரை தூக்கில் போட விரும்புகிறேன் ‘

ஐந்து வருடத்துக்கு முன்னால் அவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் சாகு என்னும் இன்னொரு ஹரியை திருமணம் செய்திருக்கிறார்.

மனித உரிமை சமூக சேவகர்கள் இது மாதிரி கொத்தடிமைகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து உயர்நீதிமன்றம் மூலம் அவர்கள் விடுதலைக்குப் பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த முயற்சி கொஞ்சம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 300 ஹரிக்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மற்றவர்கள் தப்பிவிட்டார்கள். இப்போது கமிஷனின் முகாம்களில் 12000 சுதந்திர ஹரிகள் வாழ்கிறார்கள்.

ஆனால், கொத்தடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 1947இல் விவசாயக் கூலிகளில் 1 சதவீதம் மட்டுமே கொத்தடிமையாக இருந்தார்கள். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை 15 சதவீதமாக அதிகரித்துவிட்டது. கத்தோலிக்க மனித உரிமை அமைப்பான நீதி-அமைதிக்கான தேசிய கமிஷன் என்ற அமைப்பின் அறிக்கை இது.

பல ஜமீன்தார்கள் இந்த கொத்தடிமை முறையை ரவாஜ் என்னும் பல நூற்றாண்டுகளுக்கு முந்திய பிராந்திய பழக்க வழக்கங்களின் எச்ச சொச்சங்கள் என்று கூறுகிறார்கள்.

‘எங்களை ஜமீன்தார்கள் என்று கூறாதீர்கள். அது பழங்காலப் பெயர். நாங்கள் பயிர் வளர்க்கும் விவசாயிகள் (growers) ‘ என்று மஹ்ஃபூஸ் உர்ஸானி கூறுகிறார்.

‘கொத்தடிமை முறை என்பது காலம் காலமாக இருந்துவரும் விஷயம். ஏழைகளின் எல்லாப் பிரச்னைகளையும் என்னால் தீர்க்க இயலாது. வழக்கத்திற்கு எதிராக எதிர் நீச்சல் போட முடியாது ‘ என்று கூறுகிறார்.

Guardian newspaper, UK

Monday July 17, 2000

Series Navigation