கடிதங்கள்

This entry is part of 42 in the series 20030626_Issue

ஜூன் 26, 2003ஆசிரியருக்கு,

எந்த இலக்கிய விமரிசனமும் அவ்விமரிசகனின் கோணத்தையும் ,அளவுகோல்களையும் இலக்கியப் படைப்புகள்மீது பிரயோகித்துப் பார்ப்பதுதான் என்பது இவ்விஷயத்தில் ஆரம்ப அறிமுகம் கொண்டவர்களுக்கு தெரிந்ததே. இலக்கிய விமரிசனம் செய்பவன் தன் வாழ்க்கைமற்றும் வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையில், படைப்பாளியாக இருந்தால் தன் படைப்பனுபவங்களின் அடிபப்டையில் அவ்வளவுகோலை உருவாக்கியிருப்பான்.

தொழில்நுட்பம் என்பது பயன்பாட்டுக்கு வந்த அறிவியல். அறிவியல் ஊகங்களின் Hypothesis தளத்திலேயே பிற அறிதல்முறைகளுடன் உரையாட முடியும். இதெல்லாம் அடிப்படைகள். விவாதிக்கவேண்டிய புது விஷயங்கள் அல்ல.

மேற்கோள்களுடன் விவாதிக்கப் பாய்ந்து வருபவர்கள் ஓரளவு சுயமாக யோசிக்கும் பழக்கமும் கொண்டிருப்பது நல்லது

**

காலச்சுவடு பிரசுரித்துள்ள மனு குறித்து.

சொல் புதிதுக்கு எம். வேதசகாய குமார் அனுப்பிய கதையை நண்பர் ஆர். எம். சதக்கத்துல்லா பிரசுரித்தபோது அதன் பின் இருந்த அவருக்கும் காலச்சுவடுக்கும் இடையேயான மோதல்களை அவர் அறிந்திருக்கவில்லை . நான் இதழ் தயாரிப்பு சமயத்தில் டாமன் அஜந்தாபயணத்தில் இருந்தேன். இவ்விதழே சற்று அவசர கதியில் — பெரும்பாலும் திண்ணை , மருதம் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து — தயாரிக்கப்பட்டது.

ஒரு கதை மீதான வாசிப்புகள் பல. அதற்கு அதன் ஆசிரியர் கூட பொறுப்பு ஏற்க முடியாது . பிரசுரிக்கும் இதழ் அதை பொறுப்பேற்பது சாத்தியமேயல்ல. இருப்பினும் இக்கதையை தங்கள் மீதான அவதூறாக காலச்சுவடு கருதுவதனால் ஆசிரியர் குழு சார்பில் மன்னிப்பு கோருகிறோம். சொல்புதிதுக்கு எவரையுமே அவமதிக்கும் நோக்கம் கிடையாது .

படைப்பாளிகள் மீதான வன்முறையைப் பற்றி இனிமேலேனும் காலச்சுவடு சிந்திக்கும் என நம்புகிறேன். கடந்த பத்துவருடத்தைய அதன் இதழ்களை சேர்த்துப் படிக்கும் எவருக்குமே ஒன்று தெரியும். தமிழ் இலக்கியவாதிகளைப்பற்றி மிக அதிகமான வசைகளையும் அவதூறுகளையும் பிரசுரித்த இதழ் அதுதான். ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னொருவரிடம் கேட்டு எழுதிவாங்கி போடுவதும், அதற்கு பதிலை மற்றவரிடம் கேட்டுவாங்கிப் போடுவதும் அதன் பாணி. இதன் எதிர்மறை விளைவுகளைப்பற்றி நான் அவர்களிடம் எச்சரித்ததும் உண்டு. கடைசி உதாரணம் ஆர்.பி ராஜநாயகம் கட்டுரை . காலச்சுவடுதான் அவதூறுக்கென தனி பகுதியை துவக்கிய முதல் தமிழ் சிற்றிதழ்.இவ்வுத்தி ஆரம்பகாலத்தில் அதற்கு பரபரப்பான வாசகர்களை உருவாக்கியது .இன்று தமிழில் உள்ள மனவருத்தங்களில் பெரும்பகுதி இவ்விதழால் உருவாக்கப்பவைதான்.

தொடர்ந்து காலச்சுவடின் அவதூறு மற்றும் வசையால் மனம் வருந்தி அதை எழுத்தில் பதிவு செய்துள்ள மூத்த எழுத்தாளர்கள் பலர் உண்டு. கோவை ஞானி, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன் , தேவதேவன் என பட்டியல் பெரிது . அதெல்லாம் வன்முறையாக இவர்களுக்கு படவில்லை .சுந்தர ராமசாமி தாக்கப்படுகிறார் என்று கொண்டால்கூட அது மட்டுமே படைப்பாளிகள் மீதான வன்முறையாக படுகிறது.

திண்ணைக்கு அனுப்பபட்ட கடிதம் காலச்சுவடு நடத்திய இரு கூட்டங்களில் பங்கு கொண்ட படைப்பாளிகளிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கியது. பல மூத்த படைப்பாளிகள் காலச்சுவடு நடத்திய வன்முறைகளைப் பற்றிய உணர்வு உடையவர்கள் அதில் கையெழுத்து போடவில்லை . அப்பட்டமான அவதூறுகளை சலிக்காமல் வெளியிடும் இவ்விதழ் எங்கள் விளம்பரதாரர்களையும் சந்தாதாரர்களையும் தடுக்கும் நோக்குடன் ஒரு கதை மீதான தங்கள் வாசிப்பை பிரச்சாரம் செய்கிறது. பல்லாயிரம் ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட வேண்டுகோள்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பபடுகின்றன. இதுவும் எழுத்து மற்றும் கலாச்சார இயக்கம் மீதான வன்முறைதான்.

ஜெயமோகன்

***


தொ. பரமசிவனின் 1939ம் ஆண்டு நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரிசன ஆலயப்பிரவேசக் கட்டுரை மிக நன்றாக அமைந்து இருக்கிறது. அந்தப் பிரச்சனையின் பல்வேறு அம்சங்களின் சரித்திரத்தை நுணுக்கமாக பரமசிவன் எழுதியுள்ளார். இன்றைய தலைமுறைகள் கட்டாயம் வாசித்தறிய வேண்டுமான கட்டுரையாக இது அமைந்திருக்கிறது. அம்பேத்கார் எண்ணியதைப்போலதான சமூக அமைப்பு வரும் நாளைப் பின்னே தள்ளுவதான முயற்சியில் இருக்கும் பழம்பெருச்சாளிகள் சரித்திரத்தின் போக்கை அறியக் கட்டாயம் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டும்,

பரம்சிவனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

எஸ். ஸ்ரீதரன்


வணக்கம். சென்றதற்கு முந்தைய வாரம் ‘வேதம் நீ ‘ என்ற என் கவிதையை திண்ணைக்கு அனுப்பி இருந்தேன். ஆனால் , என்ன காரணமோ, பிரசுரமாகவில்லை. சென்ற வாரம் திங்கள் அன்று ‘அலைக்கழிப்பு ‘ என்ற கவிதை அனுப்பி இருந்தேன். வெளிளி காலை அவை பிரசுரமாகி இருந்தன. திண்ணைக்கு என்ன நேர்ந்தது ? ஏன் மாற்றுகிறீர்கள் ? இது தவறுதலால் நேர்ந்ததா ? அல்லது இனி வெளிளிதோறும் திண்ணையின் வாரம் தொடங்குகிறதா, என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும்.

நன்றி!

வேதா


திண்ணைக்குழு :

வியாழக்கிழமை மாலை (கிழக்கு கடற்கரை அமெரிக்க நேரம்) திண்ணை வெளியாகும். இந்த மாற்றம் எங்கள் வசதிக்காகத்தானே தவிர வேறொன்றும் காரணமில்லை.


இந்தவாரத் திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜாவின் பெண்களுக்கு மட்டும் வேறு அளவுகோல்கள் பயன்படுத்தும் சமூகத்தைச் சாடுவதாக இருந்தது. கோபாலகிருஷ்ணனின் கவிதையும் பெண்ணடிமைத்தனத்தைவரிக்கு வரி படம்பிடிப்பதாக இருந்தது. இது போன்ற படைப்புகளை திண்ணையில் இன்னும் எதிர்பார்க்கிறேன்.

-இனியவன் செல்வன்


ஆசிரியருக்கு

மந்திரவாதி சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. காஞ்சனா தாமோதரன் இவ்வாரக்குறிப்பில் நான் குறிப்பிட்டுள்ள நூலைப் படித்துவிட்டு எழுதவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

எழுத்தாளர்கள்,வாசகர்கள் கூட்டறிக்கை ஒரு கிசுகிசு பாணி சிறுகதைக்கு தேவையற்ற முக்கியத்துவம் தருவதாக்த தோன்றுகிறது.அவர்கள் கூறுவது போல் அக்கதை உள்ளதெனில் அது கண்டிக்கதக்கது, ஆனால் பயங்கரவாதம் என்று கூறுவது சரியல்ல.பயங்கரவாதம் என்ற சொல்லில் உள்ள அரசியலை நாம் அறிவோம்.அதிகபட்சம் அக்கதை ஒரு தனிநபர் மீதான ஒரு அவதூற்றின் இன்னொரு வடிவம்.கிசுகிசுக்களை சிறுகதை வடிவத்தில் எழுதினாலும் அதன் தன்மை அதுதான்.இதனை விரும்பாத வாசகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பல வழிகளில் தெரிவிக்கலாம்.அந்த இதழை திருப்பி அனுப்பலாம்.கடிதம் மூலம் தங்கள் கருத்தினைத் தெரிவிக்கலாம்.தங்கள் சந்தாவை ரத்து செய்யலாம்

தனி நபர்களை மையமாக வைத்து அவர்கள் வாழ்வை/வாழ்க்கை நிகழ்ச்சிகளை புனைவு வடிவத்தில் எழுதுவது புதிதல்ல, அதன் நோக்கம், தரம் என்ன என்பதே கேள்வி. [நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் scientific fiction என்ற வகையை சேர்ந்த நூல் (The One True Platonic Heaven: A Scientific Fiction on The Limits of Knowledge -John L.Casti-Joseph Henry Press – 2003) கடந்த நூற்றண்டில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள்,வாழ்ந்த சில விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. ]

கிசுகிசுக்களை இலக்கியம்/இலக்கிய விவாதம் என்ற பெயரில் முன்வைப்பது புதிதல்ல.புலிநகக் கொன்றை நாவலை முன்வைத்து திண்ணையில் பிரசுரமான கடித விவாதமே இதற்கு ஒரு உதாரணம்.அதை நான் கண்டித்து எழுதிய போது என் எழுத்திற்கு காரணம் கற்பித்தவர்கள் இன்று என்ன சொல்லப்போகிறார்கள். சிறுபத்திரிகைகள்,சிறுபத்திரிகை சார்நதவர்கள் தங்களுக்குள் ஒரு code of ethics வகுத்துக்கொண்டு செயல்படுவது நல்லது.பிற பத்திரிகைகள், படைப்பாளிகள் மீது கருத்து ரீதியான விமர்சனம் மட்டுமே வெளியிடப்படும் எண்ற நிலைப்பாட்டினை சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்க வேண்டும். ஒரு சிறுபத்திரிகைக்கு கொடுக்கும் விலைக்கு இன்று இணையத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் செலவழிக்க முடியும்.ஒரு மணி நேரம் இணையத்தில் செலவழிப்பதே மேல் என்று வாசகர்கள் கருதும் நிலைதான் உள்ளது. ஹிந்து போன்ற நாளிதழ்களின் தலையங்கப்பக்க கட்டுரைகளின் தரம் கூட இல்லாத கட்டுரைகள்தான் சிறுபத்திரிகைகளில் பெரும்பாலும் வெளியாகின்றன என்று கருதத்தோன்றுகிறது.மொழிபெயர்ப்புகள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இலக்கியம்,விமர்சனம் என்பவை மட்டுமே சிறுபத்திரிகைகளின் பலம் என்றாலும் அவையாவது மிகத்தரமாக இருக்கவேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்க வேண்டும்.

சர்சைக்குறிய சிறுகதையின் தலைப்பு வடுவூர் துரைசாமி ஐயங்கார் காலத்து நாவல் தலைப்புகளை நினைவுபடுத்துகிறது. எழுதப்படுவது கிசுகிசு என்றாலும் தலைப்பாவது ‘இலக்கியத்தரமாக ‘ இருக்கலாமே (உ-ம் தொடரும் குரல்களின் இடறும் வரலாறுகள், குகைக்குள் உறங்கும் நிழல்களின் விசித்திரக் கனவுகள்).

நாகரத்தினம் கிருஷ்ணா முன்பு மு.வ பற்றி எழுதினார், இப்போது சுஜாதா.அடுத்து அவர் குரும்பூர் குப்புசாமியின் படைப்புகள் உலகத்தரமானவை என்று எழுதக்கூடும்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


குற்றமும் தண்டனையும்

அரவிந்தன்

இதைவிடக் கீழ்த்தரமான வரிகளை இதுவரை படித்ததில்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். பாலுணர்வைத் தூண்டுவதற்காகவே எழுதப்படும் சரோஜாதேவி சாகித்தியங்களும் பிரபலங்களைத் தோலுரித்துக்காட்டும் சாக்கில் கடைவிரிக்கப்படும் ஆபாச இதழியலும்கூட இதைவிட மேலானவை. காரணம் அவை தம் தரத்தைப் பட்டவர்த்தனமாக முன்வைத்து, தம் நிஜ முகத்தைக் காட்டியபடி. பேசுபவை. சொல் புதிது ஏப்ரல்-ஜூன் 2003 இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கும் ‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ என்ற ‘சிறுகதை ‘ தமிழ் இலக்கிய இதழியல் உலகில் இதுவரை யாரும் தொட்டிராத சிகரத்தைத் தொட்டிருக்கிறது. வக்கிரம், கயமைத்தனம் ஆகியவற்றின் உருவமான அருவருப்பூட்டும் சிகரம். ‘சிறுகதை ‘ என்ற கலை வடிவத்தின் பெயரால் அதை வெளியிட்டிருப்பதன் மூலம், ஒரு கலை வடிவத்தின் மீது காறித் துப்புவதற்கு ஒப்பான கேவலத்தை ‘சொல் புதிது ‘ நிகழ்த்தியிருக்கிறது.

‘கட்டுடைத்தல் ‘ மூலம் இந்தக் கதை குறிப்பிடும் நபர்களைக் ‘கண்டுபிடிக்க ‘ வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு மிகவும் வெளிப்படையாக, மட்டரகமான சினிமா கிசுகிசு பாணியில் எழுதப்பட்டுள்ளது இந்தக் கதை. தமிழ் இலக்கியச் சூழலுடன் குறைந்தபட்ச பரிச்சயம் உள்ளவர்கள்கூட இந்தக் கதையைத் ‘தெளிவாக ‘ப் புரிந்துகொள்ள முடியும். ‘சொல்புதி ‘தின் முதன்மை ஆலோசகர் என்று குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் அதன் சர்வாதிகார ஆசிரியராகச் செயல்பட்டுவரும் ஷெயமோகனுக்கும் காலச்சுவடு இதழுக்கும் இடையில் நிலவும் சில பிரச்சினைகளின் – குறிப்பாக ஊட்டியில் ஷெயமோகன் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு – விகாரமான பரிணாமம் என்று இந்தக் கதையைச் சொல்லலாம். அவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.

இந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஷநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஷநாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.

இதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார். மேலே குறிப்பிடப்பட்டிருப்பவர்களை நாய்களாக உருவகித்து விமர்சிக்கிறது இந்தக் கதை. இதில் வரும் ‘சந்தேகக் ‘ குறிப்புகளை இங்குக் குறிப்பிட்டால் இந்தக் கட்டுரை ஆபாசக் கட்டுரையாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

தரக்குறைவான உத்தியின் மூலம் ‘சொல் புதிது ‘ (ஜெயமோகன்) ‘காலச்சுவடு ‘ சம்பந்தப்பட்டவர்களை அவமானப்படுத்த முயன்றிருக்கிறது.

வெளிப்படையாகத் தாக்கப்படும் ஒரு நபர் சட்டபூர்வமான வழிகளில் அதற்கான பரிகாரம் தேடும் வாய்ப்பைப் பெறுகிறார். மறைமுகத் தாக்குதலுக்கு இலக்காகும் நபர் அவமானத்தை மெளனமாக விழுங்கிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அல்லது தாக்குதலின் தரத்துக்கு இணையாக, தரக்குறைவான நடவடிக்கைகளில் இறங்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார். நியாயமற்ற, மறைமுகத் தாக்குதல்கள் தனி நபர்களை மட்டுமின்றி, சூழலையும் மாசுபடுத்திவிடுவது இப்படித்தான் சாத்தியமாகிறது. இத்தகைய ஒரு செயலுக்குப் பங்குதாரர் என்ற முறையில் ஜெயமோகனும் இதற்குக் களம் அமைத்துக்கொடுத்த ‘சொல் புதிது ‘ம் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்பது இந்த இழிசெயலுக்குக் குறைந்தபட்ச பிராயச்சித்தமாக இருக்கும். ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு இந்தக் குற்ற உணர்வைச் சிறிதேனும் குறைக்கும் என்பதே என் முன்னாள் நண்பருக்கு நான் கூற விரும்பும் ஆலோசனை.

அரவிந்தன்

(சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன – திண்ணை குழு)

***

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,

எஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .

சுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .

வசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால் நெ .து .சுந்தரவடிவேலு வ .செ குழந்தை சாமி வ .சுப மாணிக்கம் போன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் ? யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் ?

இது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.

‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதைகளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.

நவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுந்சிநாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ? ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.

படைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் ? உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா ? கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் ? விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா ?

இலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத்துவது நோய்க்கூறான மனநிலை .

எம் வேதசகாயகுமார்

(சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன – திண்ணை குழு)


ஆசிரியருக்கு,

சொல்புதிது வெளியிட்ட கதை மீதான விமரிசனமாக ஒரு கடிதம் பார்வைக்கு வந்தது .

இக்கடிதம் சொல்புதிதுக்கு அனுப்பப்படுகிறது என்று சொல்லப்பட்டு கையெழுத்து சேகரிக்கப்பட்டது. ஆனால் சொல்லுக்கு இதுவரை அனுப்பப் படவில்லை. உங்கள் இணைய தளத்திலிருந்து எடுத்து விளக்கத்துடன் அச்சாகிவரும் இதழில் வெளியிட்டிருக்கிறோம்.

ஆனால் இக்கடிதம் பெரும் பொருள்செலவில் எங்கள் விளம்பரதாரர்கள் , நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவருக்கும் அனுப்பபட்டு சொல் புதிதுக்கு செய்யப்படும் உதவிகள் நிறுத்தப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது. சொல்புதிது இஸ்லாமியத் தீவிரவாத இதழ் என்ற பிரச்சாரமும் அதி தீவிரமாக நடக்கிறது.

இந்த விவாதமே சொல்புதிதை நிறுத்தும்பொருட்டுச் செய்யப்படும் வேலைதான் . சொல் புதிது இச்சதிகளைதாண்டி வெளிவரும்.

இவ்விஷயத்தை குமுதத்துக்கு கொண்டுபோக இவர்கள் செய்த முயற்சி எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. குமுதம் போன்ற வணிக இதழ்களை கண்டிக்கும் இவர்கள் இப்படி ஒரு தேவை வரும்போது குமுதத்தை அதற்குப் பயன்படுத்திக் கொள்வது சிற்றிதழ் இயக்கத்தையே சிறுமைப்படுத்துவதில் கொண்டுபோய் விடுகிறது.

எம் வேதசகாயகுமார் அவர்களால் எழுதப்பட்ட கதை அது. அதை தங்கள் மீதான அவதூறு என்பவர்கள் உண்மையில் அது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்கிறார்கள் . நாங்கள் அப்படி கருதவில்லை. அது சூழலின் தார்மீக வீழ்ச்சி பற்றிய அங்கதமாகவே எண்ணினோம். அதன் மீதான வாசிப்புகள்பல இருக்கலாம் . அதற்கு அதன் ஆசிரியர் கூட பொறுப்பு ஏற்கவேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் நண்பர்கள் அக்கதைமீது அதிருப்தி கொண்டிருப்பதனால் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் அக்கதையை எவ்வித உள்நோக்கமும் இல்லாமல்தான் வெளியிட்டோம். எவரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை . கடந்த 12 சொல்புதிது இதழ்களை பார்த்தவர்கள் அவற்றில் அவதூறு, தனிநபர் வசைகள் எப்போதுமே அச்சானதில்லை என்பதைக் காணலாம். எங்கள் மீது காலச்சுவடு வெளியிட்ட நீண்ட அவதூறுக் கட்டுரைகளுக்கான பதிலைக்கூட ஓரிரு மென்மையான சொற்கள் வழியாகவே பதிவுசெய்தோம்

கடிதத்தில் கையெழுத்திட்ட எழுத்தாளர்களும் மற்றவர்களும் காலச்சுவடு தொடர்ந்து எத்தனை பக்கங்கள் அவதூறு வசை நக்கல்களை எழுத்தாளர்கள் மீது இறைத்துள்ளது என்பதை கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறோம். தமிழ் சிற்றிதழ்களில் அவதூறுக்கென ஒவ்வொரு இதழிலும் பக்கம் ஒதுக்கிய இதழ் அதுவே. வசைகள் இல்லாத ஒரு இதழ் கூட அது வெளியிட்டதில்லை . இனிமேல் இவர்களாவது தொடர்ந்து காலச்சுவடை கண்காணித்து கட்டுப்படுத்தினால் அது தமிழ் சூழலுக்கு நல்லது . இதை ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறோம்

ஆர்.எம் .சதக்கத்துல்லா

ஆசிரியர் சொல்புதிது

மற்றும் ஆசிரியர் குழு


Series Navigation