கடிதங்கள்

This entry is part of 31 in the series 20030525_Issue

மே மாதம் 23 ஆம் தேதி, 2003


அன்புள்ள திண்ணை இணைய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த திண்ணையில் இதழில் ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரைக்கு சி. ஜெயபாரதன். கனடா பதிலளித்திருந்தார்கள்.

அவர் சொன்ன விளக்கங்களில் சில குறைபாடுகள் தெரிகின்றன. அவை கீழே வருமாறு:

1. செர்நேபிள் அணுஉலை விபத்துக்குக் காரணம் மனிதத் தவறுதான் என்று சொல்லியிருக்கிறார் (முதல் விளக்கம்). அப்படிப்பட்ட மனிதத் தவறு கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் நிகழ்ந்தால் அதேபோல மரணங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக நான் கருதுவது தவறாகுமா ?

2. சேர்நேபிள் அணுஉலையின் கட்டுமான வடிவமைப்பைப் போலவே தான் கூடங்குளத்தில் கட்டப்படும் அணுஉலையின் கட்டுமான வடிவமைப்பு என்று சொல்லப்படுகிறது. உண்மையா ?

3. கூடங்குளத்தில் அணுஉலை கட்ட அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தபோது, மக்களின் போராட்டத் தன்மையைத் தணிக்க ‘இங்கு அணுஉலை கட்டப்படுமானால் உங்களுக்கு (அந்தப் பகுதி மக்களுக்கு) வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ‘ என்று அரசு அறிவித்து (ஒரு உத்தியைக் கையாண்டு) போராட்டத்தைத் தணித்ததாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. அணுஉலையால் பாதிப்பில்லையெனில் இப்படிப்பட்ட உத்தியை அரசு ஏன் பயன்படுத்தவேண்டும் ?

4. உணுஉலையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப்பொருட்களின் கழிவுகள் எங்கே போடப்படுகிறது அல்லது சேமிக்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அரசுகளிடமிருந்து பதில் கிடைப்பதேயில்லை.

5. நமது அரசுகள் விபத்து நடந்த பிறகு வெளுயிடும் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற விவரங்கள் பட்டியலலில் நமக்கு எப்போதுமே நம்பத்தன்மை கிடையாது.

அன்புடன்

தி.முரளி, சென்னை-26.

****

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

சென்னை தி. முரளி செர்நோபிள், கூடங்குள அணுமின் உலைகளைப் பற்றிச் சென்ற வாரத்தில் சில வினாக்களை எழுப்பி யிருந்தார். திண்ணை அறிவியல் பகுதியில் மார்ச் 23, 2003 இல் வெளி வந்த, ‘கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் ‘ என்னும் எனது கட்டுரையில் அவரது பல வினாக்களுக்குப் படங்களுடன் பதிலைக் காணலாம்.

1. கேள்வி: செர்நோபிள் அணுமின் உலையில் நேர்ந்த மனிதத் தவறுகள், கூடங்குள அணுமின் உலையிலும் நிகழ்ந்தால், அதே போல மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா ?

எனது பதில்: இல்லை! செர்நோபிள் அணு உலை வெடிப்புக்குக் காரணம் வெறும் மனிதத் தவறுகள் மட்டும் அல்ல! அவற்றுடன் பழுதுகளும், பாதுகாப்பு முறிவுகளும் சேர்ந்து கொண்டு உண்டாக்கிய கோர நிகழ்ச்சி அது! [அடுத்தடுத்த மனிதத் தவறுகள் +மூல டிசைன் பழுதுகள் +துண்டிக்கப் பட்ட வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் +மிதவாக்கி திரள்கரிக் கட்டிகளின் உஷ்ணம் (Moderator, Graphite Blocks Temperature) +கோட்டை அரண் இல்லாமை]. வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் துண்டிக்கப் பட்ட பிறகும், செர்நோபிள் அணு உலை, டிசைன் பழுதால் இயங்கிக் கொண்டிருந்தது! செர்நோபிள் அணு உலைக்குக் கோட்டை அரண் தேவை யில்லை என்று புறக்கணித்தது, ரஷ்ய எஞ்சினியர்கள் செய்த மாபெரும் இமாலயத் தவறு!

கூடங்குள ரஷ்ய அணுமின் உலை VVER-1000 மாடல் V-392 முற்றிலும் வேறுபட்டது! நீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது. கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்க இரட்டைக் கான்கிரீட் அரண்கள் [உள்ளரண் மட்டும் 4 அடித் தடிப்பு] அமைக்கப் பட்டுள்ளன. அத்துடன் வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் துண்டிக்கப் பட்டால், அணு உலையை இயக்க முடியாது! அணு உலைத் தானாக நின்று விடும்!

2. கேள்வி: செர்நோபிள் அணு உலையின் கட்டுமான வடிவமைப்பைப் போலவே தான் கூடங்குள வடிவமைப்பும் உள்ளதா ?

எனது பதில்: இல்லை! செர்நோபிள் (1960-1970) ஆண்டுகளில் குறைந்த நிதியில் டிசைன் செய்யப் பட்ட பிற்போக்கான முதல் பிறப்பு [First Generation] அணு உலை! ஆனால் கூடங்குளத்தில் நிறுவப்படும் VVER-1000 மாடல் V-392, (1990-2001) ஆண்டுகளில் மேம்படுத்தப் பட்ட மூன்றாம் பிறப்பு [Third Generation] நவீன அணு உலை. இரண்டின் கட்டுமான அமைப்புகள் முற்றிலும் மாறுபாட்டவை.

3. கேள்வி: கூடங்குள அணுமின் உலைகள் வட்டார மக்களின் வேலை வாய்ப்புக்களுக்காகக் கட்டப்படுகிறது என்று அரசு ஓர் உத்தியைக் கையாண்டு, அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பைத் தணித்தது!

எனது பதில்: அணுமின் உலைகளைத் திட்டமிடுபவர், அவற்றை அமைக்க இடத்தைத் தேர்ந்தெடுப்பவர், ஐந்தாண்டுக்குப் பின் காணாமல் போகும் வாய்வீச்சு அரசியல் வாதிகள் அல்ல! நிலையான பதவி வகிக்கும் அணு மின்சக்தித் துறை வல்லுநர்கள் [Dept of Atomic Energy, Nuclear Power Corporation of India Ltd], மற்றும் அணுசக்தி அமைச்சகத்தின் நிபுணர்கள் [Ministry of Atomic Energy] கூடி முடிவு செய்யும் நுணுக்கமான ஆய்வுப் பணிகள் அவை!

பாரத மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது ஒரு வரப் பிரசாதம்! மனிதனின் முதல் தேவை வயிற்றுக்கு உணவு! அடுத்த தேவை மூளைக்கு அறிவு! முதலிரண்டு தேவைகளையும் நிச்சயம் பூர்த்தி செய்யும், கூடங்குளத்தில் உருவாகும் அணுமின் நிலையம்!

‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில் அடுக்கு மொழியில் முழக்கி ஆர்ப்பாட்டம் செய்தார்! அது அந்தக் காலம்! பாரதத்திலே மிகப் பெரிய அணுமின் திட்டம் கூடங்குளத்தில் கட்ட முடிவான போது, அணு உலை எதிர்ப்பாளிகள் யாவரும் ஒன்று திரண்டு அதை நிறுத்த இப்போது முற்படுபடுவது விந்தையாக இல்லையா ?

ஆனால் வேலை வாய்ப்புக்கு மட்டும் அணுமின் உலைகள் கட்டப்படுவ தில்லை! அவற்றின் முதல் பயன், முக்கியப் பயன் மின்சக்தி உற்பத்தி. ஒரு பில்லியன் எண்ணிக்கையைத் தாண்டி இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது! அவரது வீட்டு விளக்குகள் எதிர்காலத்தில் எப்படி ஒளி பெறும் ? தேவைப்படும் நூற்றுக் கணக்கான தொழிற்சாலை யந்திரங்களளுக்கு எங்கிருந்து இராப் பகலாய் மின்சாரம் கிடைக்கும் ? அணுசக்தித் துறை 2020 ஆண்டுகளுக்குள் தற்போதைய 2300 MWe ஆற்றல் மின்சக்தி யிலிருந்து, பத்து மடங்கு பெருக்கி 20,000 MWe ஆற்றலை உற்பத்தி செய்யத் திட்ட மிட்டுள்ளது. மனிதருக்கு உயிர் எப்படி முக்கிய மானதோ, அதுபோல் ஒரு நாட்டுக்குத் தேவையானது மின்சக்தி.

4. கேள்வி: அணு உலைகளில் எவ்வாறு கதிரியக்கக் கழிவுகள் சேமிக்கப் படுகின்றன ?

எனது பதில்: அணு உலைகளில் தீய்ந்த எரிக்கோல்களைப் பாதுகாப்பாய் சேமிக்க முதல் சேமிப்பு நீர்த் தடாகம் [Primary Storage Pool], இரண்டாம் சேமிப்பு நீர்த் தடாகம் [Secondary Storage Pool], அடுத்து நீண்ட காலம் வைக்க நிரந்தரச் சேமிப்பு [Permanent Storage] என்று மூன்று நிலைச் சேமிப்பு முறைகள் கையாளப்படுகின்றன. சில அணு உலைகளில் இரண்டாம் நீர்த் தடாகம் இல்லாமல் முதல் தடாகம், நிரந்தரச் சேமிப்பு ஆகிய இரண்டு மட்டும் இருக்கும்.

தீய்ந்த எரிக்கோல்களில் எஞ்சிய பிளக்காத யுரேனியம், உண்டான புளுடோனியம், கழிவுகள் ஆகியவை யாவும் 13 அடி ஆழ நீர்த் தடாகத்தின் கீழ் மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிஞ்சிய வெப்பம் தணிய சேமிக்கப்பட வேண்டும். அடுத்து இரண்டாம் நீர்த் தடாகத்தில் குறைந்தது இரண்டாண்டுகள் வைக்கப் பட்டு 95% வெப்பம் நீக்கப் பட்டு, மூடிய கான்கிரீட் கலன்களில் நிரந்தரமாகச் சேமிக்கப்பட்டு பூமிக்கு அடியில் குறைந்தது நூறடி ஆழத்தில் புதைக்கப்படும்.

சி. ஜெயபாரதன், கனடா.

***

திண்ணை இதழில் கோபிகிருஷ்ணன் பற்றிய ஜெயமோகன் அஞ்சலிக் குறிப்பில் அவரது வயது 53 என்று உள்ளது. அமரந்தா வீட்டில் நடக்கும் கோபியின் இரங்கல் கூட்டம் பற்றிய செய்தியில் அவரது வயது 58 என்று உள்ளது. தினமணி இரங்கல் செய்தியில் 57 என்று உள்ளது. நம்பகமான அவரது பிறந்த வருடமும் தேதியும் :

பிறப்பு 23-08-45

இறப்பு : 10-05-03

ஒரே இதழில் இருவேறு விபரங்கள்.

பெ அய்யனார்

****

ஒரு அனுபவமும் ஒரு அஞ்சலியும்

கோபி கிருஷ்ணனின் மறைவை ‘திண்ணை ‘ மூலம் அறிந்தேன். கடந்த வாரம் ஒரு மாலைநேரம் சுரங்க ரயிலுக்காக காத்திருந்த பொழுது, கறுப்பினப் பெண்பிள்ளை ஒருத்தி ஹலோ சொல்லி என் கையைப் பிடித்துக் குலுக்கினாள். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் நண்பனே ‘ என்று பிடித்த என் கையை குலுக்கியபடியே கூறிய அந்தச் சிறுமி, மந்திர உச்சாடனம்போல மிகக் காம்பீர்யமான குரலில் செபிக்கத் தொடங்கினாள். என் அருகே ரயிலுக்குக் காத்திருந்த சக யாத்திரிகர்கள் அத்தனை பேரும் மெல்ல மெல்ல எழுந்து விலகினர். என்னால் விலக முடியாதவாறு என் கரம் அவள் வசம் இன்னும் இருந்தது. ‘கர்த்தர் வந்துவிட்டார். இஸ்ராயேலுக்கும், மற்றும் மூன்றாமுலக நாடுகளுக்கும் அருள் பாலிப்பார். ஆனால் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு அருளமாட்டார் ‘ என்று திரும்பத் திரும்பக் கூறினாள். எனக்கு அவளைப் பிடித்துக் கொண்டது. அமெரிக்காவுக்கு கர்த்தர் வரவே மாட்டார். அப்படி வந்தாலும் ஒரு இயந்திரத் துப்பாக்கியை ஏந்தியே வருவார்(சேகுவேராவின் பிரதிமை) என எண்ணியிருந்த எனக்கு இந்தச் சிறுமியின் சங்கற்பம் மிக்கப்பிடித்தது. எனினும் வலு சீக்கிரத்திலேயே அவளது பிடிக்குள்ளிருந்து கையை விடுவித்துக் கொண்டு விலகிப் போய் விட்டேன். ஆனால் இதே இடத்தில் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் இருந்திருந்தால் இந்தச் சிறுமிக்கு Hyper Religiosity என்ற நோய்க்குறி இருக்கிறது எனத் தெளிந்துகொண்டு தன்னாலான உளவியல் அறிவுரைப் பணியில் முனைந்திருப்பார் என எண்ணிக் கொண்டேன். ஆனால் கோபி கிருஷ்ணன் இன்றில்லை. அவரது சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றுள் தமிழுக்குப் புதிதான உளவியல்பார்வை கொண்ட கவனங்கள் இருக்கின்றன. திண்ணை வாசகர்கள் அவற்றைப் படிக்கவேண்டும். அதுதான் அவரது வாழ்வுக்கு அர்த்தமாக அமையும்…..

எனக்குப் படிக்கக்கிடைத்த அவரது நூல்கள்…

(1) உள்ளேயிருந்து சில குரல்கள்.

(2) தூயோன்

(3) மானிட வாழ்வு தரும் ஆனந்தம்

(4) சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர் சமூகப்பணி (சஃபியுடன் கூட்டாக எழுதிய கட்டுரை நூல். முன்றில் வெளியீடு)

(5) இடாகினிப் பேய்களும்…

நான் படிக்காத வேறு நூல்களையும். அவர் எழுதி வெளியிட்டிருக்கலாம். அல்லது எழுதி வெளியிடாமல் பல படைப்புகள் இருக்கலாம். அவரது நண்பர்கள் இனிமேல் வெளியிடுவார்கள் என்றே நம்புகிறேன். அதுதான் அவருக்கு சமர்ப்பணமும்கூட.

ஜீவன்.கந்தையா

***

பெயரின் முன்னெழுத்து குறித்து சின்னகருப்பன் இப்படி புலம்பவேண்டியதில்லை.தாயின் பெயரின் முதலெழுத்தினைப் போடுவதால் பண்பாட்டின் வேர்கள் அழியுமெனில் அவை அழிவது நன்று. ஏன் இது தேவை என்பதற்கான காரணங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன.அவர் அதனைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

ஜெயமோகன் உளவியல்சிகிச்சை குறித்த விமர்சனங்களை சரியாகப் புரிந்துகொண்டுள்ளாரா என்று சந்தேகம் எழுகிறது. அவர் முன்வைத்துள்ள தீர்வுகளையும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் சந்திப்பு உரையாடல்களின் தொகுப்பு நூல்களில், குறிப்பாக Commentaries On Living ல், கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளவற்றையும் ஒப்பிட்டால் ஜெயமோகன் முன் வைத்துள்ள கருத்துக்களின் பலவீனம் தெளிவாகும்.உள்வியல் சிகிச்சை குறித்த தன் விமர்சனங்களை அவ்ர் தனிக்க்ட்டுரையாக முன்வைத்தால் அதை விவாதிக்கலாம்.ஆனால் தமிழ் சிறு/இணைய பத்திரிகைகளில் ஒரு எழுத்தாளரை கேவலமாக சித்திரிக்க R.D.Laing, Oliver Sacks போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.எத்தகைய புரிதல்களின் அடிப்படையில் இவை முன்வைக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.ஜெயபாரதன் முன்வைத்துள்ள கருத்துக்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன் , அல்லது குறைந்தபட்சம் ஒரு பட்டியல் (நூல்கள்,கட்டுரைகள்) தருகிறேன்.

இந்தியா டூடே மீதான விமர்சங்கள் சரியானவை. ஆனால் இலக்கிய கூட்டங்கள் நடத்துவோர் அக்கூட்டங்களை மதுபான கடைகள்/பார்களில் நடத்தினால் அதில் எல்லோராலும், குறிப்பாக பெண்கள் பங்கேற்க இயலாது. பிரமீள் போன்ற ஒரு படைப்பாளியைப் பற்றிய ஒரு கூட்டம் பலரும் பங்கேற்கும் விதத்தில் இருக்க வேண்டும். நாம் ஜீன் பால் சார்த்த்ரை நினைவில் கொள்ளவது அவர் மதுபான கடைகளில் விவாதித்தார் என்பதற்காக அல்ல, அவரது எழுத்துக்கள்,செயல்பாடுகளுக்காக.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

Series Navigation