ஆண் என்ற காட்டுமிராண்டி – இறுதிப்பகுதி

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

மார்வின் ஹாரிஸ்

(இது savage male என்ற அத்யாயத்தின் இறுதிப்பகுதி. சென்றவாரம் இதன் முதல் பகுதி வெளியானது)

யானோமாமோ மக்களின் ‘ஆண் சாவினிஸத்தின் ‘ வெளிப்பாடாக, இரண்டு ஆண்கள் போடும் சண்டையின் தீவிரத்தை கூறலாம். இதற்கு இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் அடுத்த ஆள் எதுவரை தாங்குவான் என்ற எல்லையை அறியும்வரை போடும் சண்டையைப் பார்க்கலாம். நெஞ்சில் அடிப்பது என்பது ஒருவரை ஒருவர் துன்புறுத்தும் ஒரு முறை.

உடல்களில் சிவப்பும் கறுப்பும் வண்ணம் தீட்டப்பட்டு, வெள்ளை இறக்கைகள் தலையில் ஒட்டப்பட்டு, ஆண்குறிகள் மேலே இழுத்து வயிற்றில் கட்டப்பட்டு உரக்கக்கத்திக்கொண்டும், கூச்சல்போட்டுக்கொண்டும் இருக்கும் ஆண்கள் கூட்டத்தைக் கற்பனைசெய்யுங்கள். இவர்கள் தங்கள் கைகளில் விற்களையும் அம்புகளையும் கொண்டும், கோடாரிகளையும், கதைகளையும் வீச்சரிவாற்களையும் கொண்டும் இவைகளை தேய்த்து ஒலியெழுப்பிக்கொண்டும் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக்கொண்டும் இருப்பார்கள். ஆண்கள் விருந்தினர்களும் விருந்து கொடுப்பவர்களும் எனப் பிரிந்து, யானோமாமோ கிராமத்தின் ஒரு மத்திய இடத்தில் வட்டமாக சுற்றி அமர்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களை இன்னும் பெரிய வட்டத்துக்கு வெளியே இருந்து பெண்களும் குழந்தைகளும் கவலையுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். விருந்து கொடுப்பவர்கள் விருந்தினர்களை தங்கள் தோட்டத்திலிருந்து திருடிவிட்டார்கள் எனக்குற்றம் சாட்டுவார்கள். விருந்தினர்கள் இவர்களை கஞ்சர்கள் எனவும், நல்ல உணவை விருந்து கொடுக்க வேண்டியவர்களே தின்றுவிட்டார்கள் என்றும் திருப்பித் திட்டுவார்கள். விருந்தினர்களுக்கு ஏற்கெனவே நல்ல பரிசுகள் வழங்கிவிட்டார்கள் என்றும் ஏன் அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குப்போகவேண்டியதுதானே என்று விருந்து கொடுப்பவர்கள் திருப்பிக்கேட்பார்கள். இவர்களை துரத்த விருந்து கொடுப்பவர்கள் நெஞ்சில் அடித்து சண்டை போட அழைப்பார்கள்.

விருந்து கொடுக்கும் கிராமத்திலிருந்து ஒரு போராளி மத்திக்குத் தள்ளப்படுவான். இவன் தன்னுடைய கால்களை விரித்து நின்று, தன்னுடைய கைகளை தன் முதுகுக்குப்பின்னர் வைத்து தள்ளி, தன்னுடைய நெஞ்சை எதிராளி குழுவுக்கு முன்னால் நிமிர்த்திக் காட்டுவான். விருந்தாளிகளின் கிராமத்திலிருந்து ஒரு ஆள் களத்துக்குள் இறங்குகிறான். அவன் அவனது எதிராளியை கவனமாகவும் அமைதியாகவும் பார்த்துவிட்டு அவனது நிற்கும் அமைப்பை மாற்றுகிறான். முதலாமவனின் இடது கையை எடுத்து அவன் தலை மீது வைத்து இந்த புதிய நிற்கும் அமைப்பை பார்க்கிறான். பிறகு இறுதி மாற்றத்தை ஏற்படுத்துகிறான். இவனது எதிராளி சரியான நிலையில் நின்றதும் அவனை கை எட்டும் தூரத்தில் நிறுத்தி, இவன் உறுதியாக நிலத்தில் நின்றுகொண்டு, அடிக்கடி தூரத்தை சரிபார்த்துக்கொண்டு, பிறகு முஷ்டியை இறுக்கி தன்னுடைய வலிமையெல்லாம் கொண்டு மாரின் மீது சற்றே தோளுக்குக் கீழ் குத்துகிறான். அடிபட்ட மனிதன் சற்றே ஆடுகிறான். முழங்கால்கள் வளைகின்றன. தலை ஆடுகிறது. ஆனால் மெளனமாக முகமாற்றமில்லாமல் நிற்கிறான். இவனது ஆதரவாளர்கள் கத்துகிறார்கள் ‘இன்னொன்று! ‘. இதே காட்சி மீண்டும் நடத்தப்படுகிறது. அடிபட்ட மனிதனின் நெஞ்சில் பெரிய வீக்கம் உருவாகிறது. இருப்பினும் அவன் தன்னை மீண்டும் நிலை நிறுத்தி நிற்கிறான். அவனது எதிரியாள், மீண்டும் அவனை சரியாக நிறுத்துகிறான். தூரத்தை அளந்து பார்க்கிறான் பிறகு பின்னுக்கு வந்து மீண்டும் ஒரு குத்தினை அதே இடத்தில் கொடுக்கிறான். அதனை வாங்கியவனின் முழங்கால்கள் வளைந்து தரையில் அமிழ்கிறான். அவனை அடித்தவன் தன் கைகளை வெற்றிகரமாக தன் தலைக்கு மே உயர்த்தி அடிபட்டவனைச் சுற்றி நடனமாடுகிறான். பயங்கரமான உறுமும் ஒலிகளுடன் வேகமாக ஆடுவதில் அவனது கால்களை அந்தப் புழுதியில் பார்க்கக்கூட முடிவதில்லை. அடித்தவனின் ஆரவாரமான ஆதரவாளர்கள் தங்களது மர ஆயுதங்களை மேலும் கீழும் அடித்து ஒலிஎழுப்பிக்கொண்டே உட்கார்ந்தவாறே குதிக்கிறார்கள். விழுந்தவனின் ஆதரவாளர்கள் இவனை இன்னும் அடி வாங்குமாறு தூண்டுகிறார்கள். ஒவ்வொரு அடி வாங்குவதற்கும் அவன் ஒரு அடி அடித்தவனுக்கு திருப்பிக்கொடுக்கலாம். எவ்வளவு அடி இவன் வாங்குகிறானோ அதே அளவு அடியை இவன் அவனுக்குத் திருப்பிக்கொடுத்து அவனை உடைத்து அவனை விட்டுக்கொடுக்குமாறு செய்யலாம். இன்னும் இரண்டு அடி வாங்கியபின்னர், அடி வாங்கியவனின் இடது மார்பு வீங்கி சிவந்திருக்கிறது. இவனது ஆதரவாளர்களின் வெறிக்கூச்சலிலுக்கு நடுவே, போதும் என சைகை காண்பிக்கிறான். இவன் இப்போது தன்னை அடித்தவனை அடிவாங்க நிற்கும்படி கேட்கிறான்.

நெப்போலியன் சாக்னான் பார்த்ததை பதிவேட்டில் பதிந்துவைத்திருந்ததையே நான் இங்கு காட்சியாக விவரிக்கிறேன். எல்லா நெஞ்சு அடி சண்டைகளையும் போலவே இதுவும் வன்முறை அதிகரித்து, ஒரு குழு இன்னொரு குழுவை அதிகமாக அடிக்கும்வரைக்கும் நீடிக்கிறது. விருந்து கொடுப்பவர்கள் கிராமத்தில் அடிவாங்க நெஞ்சுகள் தீர்ந்து போனாலும், அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வர விருப்பமில்லை. ஆகவே, விருந்தினர்களை இன்னொரு சண்டைக்கு இழுக்கிறார்கள். இது பக்கவாட்டில் அடிப்பது. நெஞ்செலும்புகளுக்குக் கீழே வெறும் கையால் எதிராளியை அடிக்கும் சண்டை. இந்த இடத்தில் அடிவாங்கினால், வாங்கியவனின் வயிற்று டயஃபரம் உணர்விழந்துவிடும். ஆள் மூச்சுப்பிடித்துக்கொண்டு உணர்விழந்து தரையில் சரிவான். இந்த சண்டையில் தன் ஆதரவாளன் உணர்விழந்து கிடப்பதைப் பார்க்கும் ஆட்கள் இரண்டு குழுவிலும் தங்கள் தங்கள் விற்களையும் விஷ அம்புகளையும் எடுத்துக்கொள்வார்கள். இந்த நேரத்தில் இருட்டாக ஆரம்பித்துவிட்டது. பெண்களும் குழந்தைகளும் அழ ஆரம்பித்தார்கள். ஆண்களுக்கு பின்னால் ஓடி பாதுகாப்பு திரையாக இருப்பார்கள். விருந்தினர்களும் விருந்து கொடுத்தவர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து களத்தின் எதிரெதிர் முனையில் நின்றார்கள். வில்லாளிகளின் இறுதிக் கோட்டில் நின்றுகொண்டு சாக்னான் இதனைப் பார்த்துக்கொண்டிருந்தார். விருந்தினர்கள் தங்களது கைகளில் எரியும் கொள்ளிகளைப் பிடித்தவாறு கிராமத்தை விட்டு வெளியேறி காட்டின் இருட்டில் மறைவதை நிம்மதிப்பெருமூச்சோடு பார்த்தார்.

சிலவேளைகளில் நெஞ்சு அடி சண்டைக்கு நடுவிலேயே சண்டை தீவிரமாகிவிடும். கைகளில் கற்களை வைத்து நெஞ்சில் அடித்து எதிராளியை ரத்தம் கக்க வைப்பார்கள். விருந்தினர்களும் விருந்து கொடுப்பவர்களும் ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்திக்கொள்வதற்கு தங்கள் கத்திகளை வைத்தும் சண்டை போட்டுக்கொள்வார்கள். கத்தியின் பட்டையான இடத்தைக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வார்கள். ஏதேனும் தவறாக இழுத்துவிட்டால் கீறி ரத்தம் பொங்கி அதுவே சண்டை தீவிரமாக ஆவதற்குக் காரணமாகிவிடும்.

அடுத்த படி பெரிய வன்முறைச்சண்டை என்பது மரக்கட்டை கொண்டு அடித்துக்கொள்வது. இன்னொருவன் மீது கடுப்பு இருக்கும் ஒருவன் அவனை தன் தலைமீது கட்டையால் அடிக்கச்சொல்லி சவால் விடுவான். சவால் விடுபவன் தன்னுடைய கட்டையை தரையில் ஊன்றி நின்று அதன் மீது சாய்ந்து கொண்டு தன் தலையை குனிவான். அவனது எதிராள் தன்னுடைய குச்சியின் மெல்லிய முனையைப் பிடித்துக்கொண்டு தடிமனான முனையால் இவனது தலையில் எலும்பு உடையும் தீவிரத்தோடு அடிப்பான். ஒரு அடி வாங்கியபின்னர், அடிவாங்கியவன் உடனே தன் எதிரியை தன்னுடைய கட்டை மூலம் அதே மாதிரி அடிக்க உரிமை பெறுகிறான்.

ஒரு சாதாரண யானோமாமோ ஆண்மகனின் தலையில் ஏராளமான அசிங்கமான வடுக்கள் இருக்கும் என்று சாக்னான் கூறுகிறார். பழங்கால ஜெர்மானியர்கள் போல, யானோமாமோவும் இந்த வடுக்களை பெருமைகளாக கருதுகிறார்கள். தங்களது தலையை மழித்து இந்த வடுக்களை எல்லோருக்கும் காட்டும்படிக்கு அதன் மீது சிவப்பு நிறத்தைப் பூசி ஒவ்வொரு வடுவும் தெளிவாகத்தெரியும்படி காட்டுகிறார்கள். நாற்பது வயது வரைக்கும் ஒரு யானோமாமோ ஆண் இருந்தானென்றால், அவனது தலையில் 20க்கும் மேற்பட்ட வடுக்கள் ஒரு சாலைவரைபடம் போல இருக்கும் என்று சாக்னான் குறிப்பிடுகிறார்.

இது போன்ற இருவர் பங்குபெறும் சண்டைகள் ஒரு கிராமத்துக்குள்ளேயே இருப்பவர்களிடமும் இரண்டு கிராமத்தைச் சார்ந்தவர்களிடமும் நடக்கலாம். நெருங்கிய உறவினர்கள்கூட, தங்கள் வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள, இது போன்ற ஆயுதமேந்திய சண்டையில் பங்குபெறுவார்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இப்படி நடந்த சண்டையை சாக்னான் பதிவு செய்திருக்கிறார். பழுப்பதற்காக அப்பா தொங்கப்போட்டிருந்த வாழைப்பழங்களை பையன் தின்றுவிட்டான். திருட்டு கண்டுபிடிக்கப்பட்டதும், அப்பாவுக்கு கோபம் வந்து, வீட்டைச்சுற்றி போட்டிருக்கும் வேலியிலிருந்து ஒரு கழியை பிடுங்கி பையன் தலையில் ஒரே போடாக போட்டார். பையனும் ஒரு கழியை பிடுங்கி அப்பாவின் தலையில் போட்டான். உடனே கிராமத்து ஆட்களெல்லாம் கூடி தங்கள் தங்களுக்கு அப்பாவையோ. மகனையோ ஊக்குவிக்க ஆதரவு தெரிவித்து கூக்குரலிட்டு சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கொஞ்சநேரத்தில் எல்லோரும் இந்த சண்டையில் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் அடிக்க ஆரம்பித்ததில், எதற்காக சண்டை என்பது மறந்து போய் சண்டை மட்டுமே முக்கியமாக ஆகிவிட்டது. கொஞ்சநேரத்தில் உடைந்த விரல்களும், காயம்பட்ட தோள்களும், கிழிக்கப்பட்ட தலைகளுமாக ரணகளம். இருவர் போட்டுக்கொண்டிருக்கும் சண்டையில் ரத்தத்தைப் பார்த்ததும், வேடிக்கை பார்க்க வந்தவர்களும் கலந்து கொண்டு ரணகளமாவது வழக்கம்.

கொலைக்கு சற்றே குறைந்த ஒரு சண்டையும் யானோமாமோ ஆண்கள் போடுவார்கள். அது ஈட்டிச் சண்டை. ஆறு அடி நீளமுள்ள செடியை பிடுங்கி அதனை உரித்து சிவப்பு கறுப்பு வண்னங்கள் தீட்டி, அதன் முனையை கூர்மையாக சீவி வைத்துக்கொள்வார்கள். இவைகள் மூலம் பெரும் காயங்களை ஏற்படுத்தலாம். ஆனால் கொன்றுவிடப் போதுமானதில்லை.

போர் என்பது யானோமாமோ மக்களின் வாழ்க்கைமுறையின் உச்சரீதியான வெளிப்பாடு. மாரிங் இன மக்கள் போலன்றி, யானோமாமோ எந்த ஒரு பாதுகாப்பான சமாதான உடன் படிக்கையையும் ஏற்படுத்த எந்த உபாயமும் இல்லை. பக்கத்து கிராமங்களுடன் நிறைய கூட்டணிகளை ஏற்படுத்திக்கொண்டாலும், குழுக்களுக்கு இடையே ஏராளமாக முடிவற்ற நம்பிக்கையின்மை, தீய வதந்திகள், கடைந்தெடுத்த துரோகம் எல்லாம் இருக்கும். நான் ஏற்கெனவே எப்படிப்பட்ட களிக்கொண்டாட்டத்தை இவர்கள் விருந்தினருக்கும் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த விருந்துகள் ஏற்கெனவே இருக்கும் நட்புறவை, கூட்டணியை வலுப்படுத்த வேண்டியவை. ஆனால், இறுக்கமான கூட்டாளிகள் கூட தீவிரமாகவும் வன்முறை மிகுந்தும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்கள். இந்த விருந்துகளில் நடக்கும் எல்லா பீற்றலும், பாலுறவு காட்சிகளும் இருந்தாலும், கடைசி விருந்தாளி வீட்டுக்குப்போகும் வரைக்கும், அந்த நட்புறவுக்காக என்று சொல்லி ஆரம்பிக்கும் விருந்தின் முடிவு கணிக்க முடியாததே. இந்த விருந்துகளில் பங்குபெறும் அனைவருக்கும், இப்படிப்பட்ட விருந்து கொடுக்கிறேன் என்று அழைத்து வந்த விருந்தினர்களை படுகொலை செய்யமுயன்ற பழைய நிகழ்ச்சிகள் தெரியும். இப்படி தங்களைக் கொல்ல முயல்வார்கள் என்று முன்பே யூகித்து திட்டமிட்டு, விருந்து கொடுக்க முயன்ற கிராமத்தினரை படுகொலை செய்யமுயன்ற விருந்தினர்கள் கதையும் தெரியும். 1950இல் நான் நெஞ்சு அடித்து சண்டை போட்டதைப் பார்த்து விவரித்த கிராமத்தினர்கள் இப்படிப்பட்ட ஒரு துரோகத்தனமான விருந்தில் மாட்டிக்கொண்டார்கள். தங்களது கிராமத்திலிருந்து இரண்டு நாள் பயணம் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கு புது கூட்டணியை ஏற்படுத்த முயன்றார்கள். அவர்களது விருந்துகொடுப்பவர்கள் இவர்களை ஒன்றுமே நடக்காதது போல நடனமாட அழைத்தார்கள். அது முடிந்ததும் அவர்கள் தங்கள்குடிசைகளுக்குச் சென்று ஓய்வெடுத்தார்கள். அப்போது இவர்களை அந்த கிராமத்தினர் கோடாலிகளாலும் தடிகளாலும் தாக்கினர்கள். 12 ஆண்கள் இறந்தார்கள். தப்பித்து வெளியே ஓடும்போது அவர்களுக்காகவே காட்டில் காத்திருந்த கும்பலாலும் அவர்கள் தாக்கப்பட்டார்கள். ஏராளமான ஆண்கள் இறந்தார்கள் பலர் படுகாயமடைந்தார்கள்.

யானோமாமோ மக்கள் எப்போதும் துரோகத்துக்காக கவலைப்படுகிறார்கள். சமீபத்திய ராணுவ கூட்டணிகளை சமீபத்திய ராணுவ வெற்றி தோல்விகள் மூலமே நிச்சயிக்கிறார்கள். இதில் எந்த நீண்டகால கூட்டணியும் கிடையாது. மக்களையும் மூலப்பொருட்களையும் விவாதமின்றி பிரித்துக்கொள்ளும் ஆசையும் கிடையாது. ஒரு கிராமம் படு மோசமாக ஒரு ராணுவத்தாக்குதலில் அடிவாங்கினால், அந்த கிராமம் மீண்டும் மீண்டும் தாக்கப்படும் என்பது நிச்சயம். முன்னாள் கூட்டாளிகளே இந்த கிராமத்தைத் தாக்குவார்கள். பல ஆண்களை இழந்த கிராமத்தினருக்கு ஒரே வழி தங்கள்கூட்டாளி கிராமத்துடன் இணைந்து கொண்டு வாழ்வதுதான். ஆனால் எந்த குழுவும் இவர்களை (செண்டிமெண்டல் காரணமாக) சேர்த்துக்கொள்ளாது. தற்காலிக உணவுக்கும் பாதுகாப்புக்கும் வேண்டி கூட்டாளிகள் தோற்கடிக்கப்பட்ட கிராமத்தின் பெண்களை பரிசுகளாகக் கேட்பார்கள்.

மறைந்திருந்து தாக்குதல், துரோகத்தனமான விருந்துகள், திருட்டுத்தனமான திடார் தாக்குதல் ஆகியவையே யானோமாமோ மக்களின் போர்முறையின் முக்கிய குணாம்சங்கள். பீற்றலையும் இரண்டுபேர் செய்யும் சண்டையையும் தாண்டினால், அவர்களது முக்கிய குறிக்கோளே எத்தனை எதிரி ஆண்களைக் கொல்லமுடியுமோ அவ்வளவு ஆண்களைக் கொல்வதும், எதிரி கிராமத்துப்பெண்களை எவ்வளவுக்குக் கவர்ந்து வரமுடியுமோ அவ்வளவு கவர்ந்து வருவதும், அதனை தங்களது பக்கத்து ஆண்கள் இழப்பு அதிகமின்றி செய்வதும்தான். திடார் தாக்குதலின்போது, யானோமாமோ போர்வீரர்கள் எதிரியை இரவில் சத்தமின்றி நெருங்குகிறார்கள். வெளிச்சமின்றி, விடியலின் முதல் வெளிச்சம் வரும்வரை காட்டின் ஈரத்தில் நடுங்கிக்கொண்டு காத்திருக்கிறார்கள். மிக்க தைரியமுள்ளவன் யாராவது எதிரி கிராமத்திற்குள் நழுவிச் சென்று அங்கு மரங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் வலைக்கட்டிலில் தூங்கும் ஆணைக் கொல்வான். மற்றப்படி, வெளியே வந்த ஆண்களைக்கொல்வதும், தண்ணீர் எடுக்க வந்த பெண்களை கவர்வதும்தான் இவர்கள் செய்வது. நிறைய ஆட்கள் கூட்டமாக வருவது தெரிந்தால், குருட்டுத்தனமாக அந்த கிராமத்தின் மீது அம்புகளைப் பொழிந்துவிட்டு ஓடிவிடுவார்கள். இப்படிப்பட்ட திடார் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. சாக்னான் இருந்த அந்த 15 மாதங்களில் 25 தடவை அவர் இருந்த கிராமம் தாக்கப்பட்டது. நிச்சயம் மானுடவியல் துறைக்காக அவர் கொண்ட தைரியமும் அவரது தனிப்பட்ட திறமையும்தான் அவர் உயிரோடு இருந்ததன் காரணம்.

ஏன் யானோமாமோ மக்கள் இப்படி அடிக்கடி போர் புரிகிறார்கள் ? பேராசிரியர் சாக்னான் இதற்கு திருப்திகரமான விடைகளைச் சொல்லவில்லை. யானோமாமோ மக்கள் சொல்லும் காரணங்களை அவர் ஒப்புக்கொள்கிறார். பெரும்பாலான சண்டைகள், திடார் தாக்குதல்கள் இன்னும் பல போர்க்கால கலவரங்கள் பெண்கள் பற்றிய சண்டைகளால் உருவாகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள். பெண்கள் நிச்சயம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். ஏறத்தாழ நாலில் ஒரு யானோமாமோ ஆண் போரினால் இறந்தாலும், 120 ஆண்களுக்கு 100 பெண்களே இருக்கிறார்கள். இந்த நிலையை மோசமாக்க, கிராமத்து தலைவர்கள் அல்லது பெரும் போர்வீரர்கள் தங்களுக்கென 4 அல்லது 5 பெண்களை திருமணம் செய்துகொள்கிறார்கள். தந்தையர்கள் தங்கள் மகள்களை கிராமத்தின் தலைவர் அல்லது பெரும் போராளிகளிடம் செல்வாக்கை பெற்றுக்கொள்வதற்காக குழந்தைப்பருவத்திலேயே திருமணம் செய்துவைத்துவிடுவதால், பாலுறவு ரீதியில் தயாராக இருக்கும் எல்லாப் பெண்களுமே திருமணம் ஆனவர்கள். இது பெரும்பாலான ஆண்களை, கள்ள உறவு தவிர, எந்தவித இருபாலுறவு சந்தோஷமும் கிடைக்காதபடி செய்துவிடுகிறது. புருஷனுடன் சண்டைபோடும், விருப்பமின்றி வாழும் பெண்களை மாலையில் திருமணமாகாத முரட்டு போராளி ஆண்கள் சந்திக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் எல்லோரும் கிராமத்தைவிட்டு வெளியே சென்று காலைக்கடன்களைக் கழிக்கச்செல்லும்போது காட்டின் பாதுகாப்பில் சந்திக்கிறார்கள்.

யானோமாமோ கணவன் தன்னுடைய மனைவியை சந்தோஷமாக தன்னுடைய இளைய சகோதரனுடனோ அல்லது தன்னுடைய தோழனுடனோ பகிர்ந்து கொள்வான். ஆனால், அப்படி மற்றவனால் சந்தோஷம் அடைந்த ஆண்கள், கொடுத்தவனுக்கு நன்றிக்கடன் படுகிறார்கள். அடுத்த போரில் பிடித்துக்கொண்டுவரப்பட்ட ஒரு பெண்ணைத்தர வேண்டும் அல்லது அவன் சொல்லும் எடுபிடி வேலைகளைச் செய்யவேண்டும். பெரும் பெயர் சாதிக்க விரும்பும் ஒரு இளைஞன் இப்படி தன்னை இன்னொருவனுக்குக் கடனாளியாக்கிக்கொள்ள விரும்பமாட்டான். இதற்குப்பதிலாக ஏற்கெனவே திருமணமான கிராமத்தின் பெண்களை கெஞ்சியோ அல்லது மிரட்டியோ தனக்கு ஏற்பாடு செய்துகொள்ளவே முயலுவான். மாதவிடாய் வரும்முன்னரே இந்த யானோமாமோ பெண்களுக்குத் திருமணம் ஆகிவிடுவதால், யானோமாமோ ஆண்கள் பக்கத்துவீட்டு பெண்களையே தீவிரமாக துரத்துவார்கள். யானோமாமோ ஆண் இதனைக்கண்டுபிடித்ததும் அடையும் தலைக்கு ஏறிய கோபம், தன் மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டாளே என்பதற்காக அல்ல, அப்படி தன் மனைவியைக் கொண்டவன் தனக்கு பரிசுப்பொருட்களை கொடுப்பதிலிருந்தும், எடுபிடி வேலைகளைச் செய்வதிலிருந்தும் தன்னை ஏமாற்றிவிட்டானே என்பதால்தான்.

எதிரி கிராமங்களிலிருந்து பிடித்துவரப்படும் பெண்கள் யானோமாமோ போர்முறையின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. திடார் தாக்குதல் நடத்தி பெண்களைப்பிடித்துவந்த கும்பல் தாங்கள் பாதுகாப்பான தூரத்துக்கு வந்துவிட்டோம் என்று உணர்ந்ததுமே, கைப்பற்றப்பட்ட பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இவர்கள் தங்களது கிராமத்துக்குத் திரும்பியதும், இந்தப்பெண்களை வீட்டிலேயே தங்கிவிட்ட கிராமத்து ஆண்களிடம் கொடுக்கிறார்கள். இவர்கள் இந்தப்பெண்களை மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பிறகு பல விவாதங்களுக்கும் பேரங்களுக்கும் முடிவில் இந்தப் பெண்களை குறிப்பிட்ட போர் வீரர்களுக்கு மனைவியாக இருக்கப் பணிக்கிறார்கள்.

திகிலடையச் செய்யும் நிகழ்ச்சி ஒன்று, பிரேசிலியப்பெண்ணான ஹெலனா வலெரோ அவர்களால் சொல்லப்பட்டது. இவர் 10 வயதாக இருக்கும்போது ஒரு யானோமாமோ திடார் தாக்குதல் கும்பலால் பிடிக்கப்பட்டார். இவளைப்பிடித்தவர்கள் தங்களுக்குள் இவளுக்காக சண்டைபோட்டுக்கொள்ளத் துவங்கினர். ஒரு கும்பல் இன்னொருகும்பலை கொண்றுதீர்த்தது. அது மட்டுமின்றி, அந்தக்கும்பலின் குழந்தைகளையும் தலையை கல்லால் உடைத்துக்கொன்றது. பிடிக்கப்பட்ட பெண்களை தங்கள் கிராமத்துக்கு கூட்டிச் சென்றனர். இவள் தன்னுடைய பெரும்பாலான வாழ்க்கையை பலருக்கு மனைவியாக இருந்து, ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு கும்பல்களால் கடத்தப்பட்டு, இதில் தப்பிக்க காட்டுக்கு ஓடி அங்கு மீண்டும் பிடிக்கப்பட்டு பல கணவன்களுக்கு மனைவியாக இருந்து பல குழந்தைகளைப் பெற்று இறுதியில் ஒரு மதபோதகர் வீட்டுக்கு ஓடி தப்பித்தாள்.

பெண்கள் பற்றாக்குறை, குழந்தை மணம், கள்ள உறவு, பலதாரமணம், பெண்களை போரில் கைப்பற்றி கூட்டிவருவது ஆகியவை அனைத்தும் யானோமாமோ போரின் அடிப்படை பாலுறவே என்று குறிப்பிட்டுச் சொல்கின்றன. இருப்பினும் ஒரே ஒரு விஷயம் விளக்கமுடியாமல் இருக்கிறது. அது இந்த பெண்கள் பற்றாக்குறை என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதே. யானோமாமோ மக்கள் தொடர்ந்து பெரும்பாலான பெண் குழந்தைகளை பிறக்கும்போதே கொன்றுவிடுகிறார்கள். பாரபட்சமான அக்கறை மூலம் மட்டுமின்றி, உண்மையிலேயே பெண் சிசுக்கொலையைச் செய்கிறார்கள்.

ஆண்கள் தங்களது முதல் குழந்தை ஆணாக இருக்கவேண்டும் என கோருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கும்வரை, பிறக்கும் பெண்குழந்தைகளைக்கொன்றுவிடுகிறார்கள். அதன் பின்னர், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குழந்தைகளைக்கொல்லலாம். யானோமாமோ பெண்கள் தங்கள்குழந்தைகளை காட்டுக்கொடியில் கழுத்தை இறுக்கி கொல்கிறார்கள். (இன்னும் பல முறைகள் விளக்கப்பட்டுள்ளன.. மொகு) வெறுமே காட்டுத்தரையில் குழந்தையை போட்டுவிட்டுப் போய்விடுவதும் உண்டு. இப்படிப்பட்ட பெண்சிசுக்கொலைகளின் விளைவு குழந்தைகளின் எண்ணிக்கையில் சுமார் 154 ஆண்களுக்கு 100 பெண்களே இருக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை அடைய படும் கஷ்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், பாலுறவை விடவும் முக்கியமான சக்திவாய்ந்த இன்னொரு சக்திதான், தாங்கள் மிகவும் விரும்பி போராடும் குறிக்கோளான பெண்ணை, சிசுவிலேயே அழிக்கத் தூண்டுகிறது என்றே கருதவேண்டும்.

சிசுக்கொலையும் முரடான போர்முறையும் வாழ்க்கையாகக்கொண்ட யானோமாமோ நிலத்தின் ஒரு மர்மமான அங்கம் அங்கு எந்தவிதமான மக்கள்தொகை அழுத்தம் இல்லாமல் இருப்பதும், மூலப்பொருட்கள் மிதமிஞ்சிக் கிடைப்பதும். யானோமாமோ மக்கள் தங்களுடைய முக்கிய உணவாக தங்கள் தோட்டங்களில் விளையும் வாழைப்பழங்களை உண்கிறார்கள். மாரிங் இன மக்கள் போல, இவர்களும் காட்டை எரித்துத்தான் இந்த தோட்டங்களை உருவாக்க முடியும். ஆனால், வாழை மரங்கள், யாம் கிழங்குகள் போலவோ அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் போலவோ கிடையாது. இவை வருடம் முழுவதும் காய்த்து, கொடுக்கும் உழைப்புக்கு அதிகமாகவே விளைந்து பல வருடங்கள் பயன் தரும். யானோமாமோ மக்கள் உலகத்தின் மிகப்பெரிய பூமத்தியரேகைக்காடுகளில் மிக வளமையான பகுதியில் வாழ்வதால், இவர்கள் ‘மரங்களை தின்று ‘ விடுகிறார்கள் எனக்கருதவும் ஏதும் காரணமில்லை. ஒரு சராசரி யானோமாமோ கிராமத்தில் சுமார் 100 அல்லது 200 பேர்களே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கிராமம், எங்கும் நகராமல் மிக எளிதில் வாழைமரங்களை உருவாக்கி உட்கார்ந்து சாப்பிடலாம். இருப்பினும் இந்த யானோமாமோ கிராமங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. வேறெந்த காட்டை எரித்து விவசாயம் செய்யும் அமேஜான் காட்டு மக்களைவிட அதிக வேகத்தில் இவர்கள் நகர்ந்து தங்கள் தோட்டங்களை இன்னொரு இடத்தில் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் பிரிந்து பிரிந்து, தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதற்குக் காரணம் இவர்கள் தொடர்ந்து பெண்களுக்காக சண்டை போட்டுக்கொண்டே இருப்பதும், தொடர்ந்து போரிலேயே இருப்பதும்தான் என்று கூறுகிறார் சாக்னான். அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருப்பதும், அவர்கள் பெண்களுக்காக சண்டை போடுவதும் அவர்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதுதான் என்று சரியாகச்சொல்லலாம் என்று நான் கூறுகிறேன். யானோமாமோ மக்கள் காட்டை எரித்து வெட்டி தோட்டம் உண்டாக்கும் தோட்டக்கார பழங்குடிகளில் ஒரு சராசரி பழங்குடி அல்ல. இவர்களது மூதாதையர்கள் நாடோடி வேட்டைக்காரர்கள். பெரும் ஆறுகளிலிருந்து வெகுதொலைவில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து காட்டுப்பொருட்களை தங்களது முக்கிய ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்தவர்கள். மிகச்சமீபத்தில்தான் அவர்கள் வாழைப்பழங்களை தங்கள் முக்கிய உணவாக கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் வாழைமரங்கள் மிகச்சமீபத்தில் போர்ச்சுகீஸியர்களாலும் ஸ்பானியர்களாலும் இந்த தென்னமெரிக்காவுக்குக்கொண்டுவரப்பட்டவை. மிகச் சமீபகாலம் வரைக்கும் அமெரிக்க இந்தியர்களின் (பழங்குடிகளின்) மக்கள்தொகை பெரும் நதிகளின் ஓரத்திலும், அதன் துணை நதிகளின் ஓரத்திலுமே இருந்தது. யானோமாமோ போன்ற பழங்குடிகள் நதிகளுக்கு வெகு தூரங்களில் இந்த நதிக்கரை ஓர மக்களின் கண்பார்வைக்கு வெளியே இருந்தார்கள். நதிக்கரையோர மக்களிடம் பெரிய படகுகளும் பெரும் கிராமங்களும் இருந்ததால் நதிக்கரையோர பழங்குடிகள் வெகுதூரம் பயணிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நதிக்கரையோர கிராமங்கள் ரப்பர் வியாபாரத்துக்காக அழிக்கப்பட்டன. பிரேசிலிய மற்றும் வெனிசூவெலா குடியிருப்பினர்களுக்காகவும் இவை அழிக்கப்பட்டன. அமேஜான் காட்டு பழங்குடி மக்களின் அழிப்பில் தப்பித்தவர்கள் இந்த நாடோடி இந்தியர்களே (foot Indians). இவர்களது நாடோடி வாழ்க்கையே, வெள்ளைக்காரர்களின் துப்பாக்கியிலிருந்தும், அவர்களது வியாதிகளிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றியது.

இன்றும் யானோமாமோ மக்கள் தங்களது கால் போன போக்கு வாழ்க்கை வரலாற்றின் தெளிவான அடையாளங்களை வெளிப்படுத்துகிறார்கள். இன்றும் அவர்களுக்கு எப்படி படகுகளை கட்டுவது என்பது தெரியாது. இத்தனைக்கும் அவர்களது இன்றைய முக்கிய குடியிருப்புகள் இருப்பது ஒரினோகோ, மாவாகா ஆறுகளின் கரையோரங்களிலேயே. இந்த ஆறுகளில் ஏராளமான சத்துள்ள மீன்களும் நீர் விலங்குகளும் இருந்தாலும், இவர்கள் மிகக்குறைந்த அளவே மீன் பிடிக்கிறார்கள். வாழைக்காய்களை வேகவைத்தால் சுவையாக இருக்கும் என்றாலும், இவர்களுக்கு எப்படி சமையல் பாண்டம் செய்வது எனத்தெரியாது. இறுதியாக எப்படி கல்லால் கோடாலிகளைச் செய்வது எனத்தெரியாது. இத்தனைக்கும் இவர்கள் தங்கள் வாழைத்தோட்டங்களை உருவாக்குவதற்கு எஃகு கோடாலிகளை உபயோகப்படுத்துகிறார்கள்.

சமீபத்திய யானோமாமோ மக்களின் வரலாற்றை ஊகித்துச் சொல்கிறேன். பிரேசிலுக்கும் வெனிசூவெலாவுக்கு இடையே இருக்கும் தொலைதூர மலைகளில் நாடோடி யானோமாமோ மக்கள் வாழ்ந்துவந்தார்கள். மிகச்சமீபத்திலேயே வாழைமரத்தோட்டங்களை உருவாக்கும் பரிசோதனையில் இறங்கினார்கள். இந்த பயிர்கள் அவர்களுக்கு ஒரு ஆளின் தேவைக்கு அதிகமாகவே இருக்கும் கலோரி உணவை தருகிறது. இதனால் யானோமாமோ மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. அமேஜான் பள்ளத்தாக்கில் இருக்கும் பழங்குடிகளில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் யானோமாமோ மக்களே. ஆனால் வாழைத்தோட்டங்களில் ஒருமுக்கியமான குறைபாடு இருக்கிறது. இவைகளில் புரோட்டானே கிடையாது. முந்தைய நாடோடி வேட்டைக்காரர்களாக இருந்தவரை, அவர்களது புரோட்டான் காட்டு விலங்குகளான, மான், பெக்கரி, டபிர், எறும்புத்தின்னி, ஆர்மடில்லோ, குரங்குகள், முதலைகள், பகா, அகுட்டி, பல்லிகள் பாம்புகள், ஆமைகள் முதலியவற்றை உண்டு தங்கள் புரோட்டானைப் பெற்றுக்கொண்டார்கள். வசதியான தோட்டப்பயிர்கள் அதிகரிக்க அதிகரிக்க, அதனால், மனித மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரிக்கவும், இந்த விலங்குகள் இன்னும் படு தீவிரத்துடன் வேட்டையாடப்பட்டன. தீவிர வேட்டையாடுதலால், காட்டு விலங்கு மக்கள்தொகை வெகுவிரைவிலேயே முடிவுக்குக்கொண்டுவரப்படும் அல்லது விரட்டப்பட்டுவிடும் என்பது அறிந்ததே. வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னர், அமேஜான் மக்கள் விலங்கு ஒழிப்பை தடுக்க மீன் பிடித்து தங்கள் புரோட்டானைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் யானோமாமோவினரால் இதனைச் செய்யமுடியவில்லை.

அமேஜான் நிபுணர்களான ஜேன், எரிக் ரோஸ் ஆகியோர்கள் இந்த புரோட்டான் பற்றாக்குறையே யானோமாமோ மக்களுக்கு இடையே இருக்கும் போர்களுக்கும், பிரிவுக்கும் காரணம் என்றும், அதற்கு பாலுறவு பிரச்னைகள் காரணமல்ல என்றும் கூறுகிறார்கள். நான் ஒப்புக்கொள்கிறேன். யானோமாமோ மக்கள் ‘காட்டைத் தின்றுவிட்டார்கள் ‘. அதன் மரங்களை அல்ல, அதன் விலங்குகளை. அதன் விளைவாகவே, அதிகப்படியான போர்களையும், துரோகத்தையும், சிசுக்கொலையையும், முரட்டுத்தனமான பாலியல் வாழ்க்கையையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

யானோமாமோ மக்களிடையே பசிக்கு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒரு வார்த்தை வெறும் வயிற்றைக் குறிக்க உதவுகிறது. இன்னொரு வார்த்தை நிறைந்தவயிறு மாமிசக்கறிக்கு ஆசைப்படுவதை குறிக்கிறது. மாமிசக்கறிக்கான பசி என்பது யானோமாமோ மக்களின் பாடல்களிலும் கவிதைகளிலும் அடிக்கடி வரும் ஒரு கரு. யானோமாமோ மக்களின் விருந்தில் முக்கியமான அங்கம் மாமிசக்கறி. ஹெலனா வெலரோ சொன்ன வாழ்க்கைக்கதையில் அவள் குறிப்பிடுவது போல, ஒரு யானோமமோ பெண் ஒரு யானோமாமோ ஆணை கூனிக்குறுகச் செய்யவேண்டுமாயின், அவனுக்குச் சரியாக வேட்டையாடத்தெரியாது என்று குறை சொல்லவேண்டியதுதான். யானோமாமோ வேட்டையாளிகள் யானோமாமோ கிராமங்களிலிருந்து வெறுங்கையோடு திரும்பக்கூடாது என்பதற்காக, வேட்டை விலங்குகளுக்காக தொலைதூரம் பிரயாணம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நிறைய பெரிய விலங்குகளைக்கொண்டுவர 10 அல்லது 12 நாட்கள் பயணம் வேண்டும். சாக்னான் அவர்களே தானும் பங்கு கொண்ட ஒரு வேட்டைப் பயணத்தில் சென்றதையும், பல பத்தாண்டுகளாக வேட்டையாடாத ஒரு பகுதியில் வேட்டையாடியும், அந்த வேட்டையில் போனவர்களுக்குக்கூட போதுமான விலங்குகளைப் பிடிக்க முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சராசரி யானோமாமோ கிராமம் இன்னொரு பக்கத்து யானோமாமோ கிராமத்திலிருந்து சுமார் 1 நாள் தொலைவிலேயே இருப்பதால், வேட்டைக்களங்களின் எல்லைகள் இன்னொரு கிராமத்தின் வேட்டைக்களங்களின் எல்லையை எளிதில் கடக்கின்றன். இந்த கிராமங்கள் ஒரே தட்டுப்பாடான மூலப்பொருட்களுக்காக போட்டியிடுகின்றன. அந்த மூலப்பொருள் பெண்களல்ல, புரோட்டான்.

காட்டுமிராண்டி முரட்டு ஆள் என்ற புதிரை விடுவிக்க இந்த தீர்ப்பை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏன் யானோமாமோ பெண்கள் தாங்களும் கூடவே சேர்ந்து பெண்கள் மீதான சுரண்டலைச் செய்கிறார்கள் என்பதையும், ஏன் ஆண்குழந்தைகளை பார்க்கிறார்கள், பெண் குழந்தைகளை உதாசீனம் செய்கிறார்கள் என்பதையும் நடைமுறையில் பொருந்துவதாக விளக்குகிறது. யானோமாமோ ஆண்கள் தங்களுக்கு மகள்களைவிட, மகன்களையே விரும்புகிறார்கள் என்பது உண்மைதான். தன் கணவனுக்கு ஆண்பிள்ளைகளைக்கொடுக்காத மனைவி தன் கணவனால் அதிகம் அடிக்கப்படுவாள் என்பதும் உண்மைதான். இருப்பினும், யானோமாமோ பெண்கள். தங்களுக்கு வசதிப்படும் என்பதற்காக, மிக எளிதாக பெண்களை அதிகம் உருவாக்கியும், ஆண்களை குறைத்தும், முரடு இல்லாமலும் வளர்த்து விட முடியும். பெண்கள் காட்டில் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள். கிராமத்தைவிட்டு வெளியே எந்த ஆணும் இல்லாத இடத்தில் பெற்றுக்கொள்கிறார்கள். இதன் பொருள், முதலாவது ஆண் குழந்தை பிறந்ததும், பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் ஆண்சிசுக்கொலை செய்துவிட முடியும். கூடவே, கணவன் கண்டுபிடிக்க முடியாமல், எல்லா ஆண் குழந்தைகளையும் பாரபட்சமாக நடத்தி உதாசீனம் செய்துவிட முடியும்.

யானோமாமோ குழந்தைவளர்ப்பில் ஒரு பெண் எப்படி முழு கட்டுப்பாட்டையும் செலுத்துகிறாள் என்பதையும், எப்படி ஆண்-பெண் குழந்தை எண்ணிக்கை வித்தியாசத்தை மாற்றமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணத்தை நான் சொல்ல முடியும். சாக்னான் ஒருமுறை ஒரு நன்றாக கொழுத்த வளமையான இளம் தாய் ஒருத்தி உணவு உண்டுகொண்டிருந்தாள். இந்த உணவு ஒரு மசித்த வாழைப்பழ மசியல். இதனை ஒரு குழந்தையும் செரிக்க முடியும். இவளுக்கு அருகே, இரண்டு வயது பையன், எலும்பும் தோலுமாக அழுக்காக, சாவின் அருகாமையில் இருக்கிறான். சாக்னான் இந்தப் பெண்ணிடம் ஏன் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்க மாட்டேன் என்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவள், இந்தக் குழந்தைக்கு முன்பு வயிற்றுப்போக்கு வந்துவிட்டது என்றும், அதனால் இவள் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டாள் என்று சொன்னாள். இதனால், இவளது பால் சுரப்பது நின்றுவிட்டது என்றும், வேறெந்த உணவும் இவனுக்குச் சாப்பிடத்தெரியாது என்றும் சொன்னாள். சாக்னான் இவளைக் கட்டாயப்படுத்தி அவனுக்குச் சாப்பாடு கொடுக்கும்படி வற்புறுத்தினார். குழந்தை வெகுவேகமாக அந்த உணவைச் சாப்பிட்டான். இதன் மூலம் சாக்னான், ‘அந்தப்பெண் இவனை வேண்டுமென்றே பசியால் கொல்ல முயற்சிக்கிறாள் ‘ என்று முடிவுக்கு வந்தார்.

ஆண்கள் பெண்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டுமே நேரடியான பெண் சிசுக்கொலைக்கும், மறைமுகமான பாரபட்சத்தின்மூலம் பெண் சிசுக்கொலைக்கும் காரணமில்லை என்பது மேற்கண்ட உதாரணத்தின் மூலம் விளங்கும். நான் மேலே சொன்னது போல, ஆண்களின் விருப்பத்தை உதாசீனம் செய்ய ஏராளமான வழிகள் பெண்களுக்கு இருப்பது மேற்கண்ட உதாரணத்தின் மூலம் விளங்கும். பெண்களின் விருப்பத்தின் பேரிலேயே யானோமாமோ குழந்தைவளர்ப்பில் நிறைய ஆண் குழந்தைகளும் குறைவான பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். யானோமாமோ மக்கள் வாழும் நிலத்தின் பொருட்களைச் சாப்பிட ஏற்கெனவே நிறைய யானோமாமோ மக்கள் இருக்கிறார்கள் என்ற காரணமே இந்த விருப்பத்தின் ஆதாரம். ஆண்கள் நிறைய இருப்பதும், பெண்கள் குறைவாக இருப்பதும், ஒரு ஆளுக்கு கிடைக்கும் புரோட்டானை அதிகரிக்கிறது( ஏனெனில் ஆண்கள் வேட்டையாளிகள்) என்பதையும், குறைவான மக்கள்தொகை பெருக்கத்தையும் அடிக்கோடிடுகிறது. இதன் அர்த்தம், நிறைய போர்கள். மகள்களை வளர்க்க முடியாததால் ஆண்களை நிறைய வளர்ப்பதற்கு, யானோமாமோ இனத்தினரும் மாரிங் இனத்தினரும் கொடுக்கும் விலையே போர்கள். ஆனால் யானோமாமோ மக்கள் இன்னும் அதிகமாக இதற்கு விலை கொடுக்கிறார்கள் ஏனெனில் மாரிங் இனத்தினரை விட இவர்கள் தாங்கள் வாழும் இடத்தின் தாங்கும் சக்தியை நாசம் செய்துவிட்டார்கள்.

சில பெண்விடுதலையாளர்கள், போர்முறைக்கும் ஆணுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்திருந்தாலும், ஆண் சதித்திட்டத்தின் பலிகடாக்களே பெண்கள் என்றும், ஆண்களே ஆயுதங்களை உபயோகிக்கக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். ஏன் பெண்களுக்கும் போர்முறையைச் சொல்லித்தரக்கூடாது எனக் கேட்கிறார்கள். பெண்கள் நிழலில் ஒதுங்கி விதியை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்தைவிட, ஆண்கள் பெண்கள் இருவருமே போராளிகளாக இருக்கும் ஒரு கிராமம் இன்னும் வலிமையானதாக இருக்குமே என்றும் கேட்கிறார்கள்.

ஏன் முரட்டுத்தன உருவாக்கம் (Brutalization) ஆண்களையே குறிவைத்து இருக்க வேண்டும் ? ஏன் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் போர்முறை தொழில்நுட்பத்தை கையாள பயிற்றுவிக்கக்கூடாது ? இது முக்கியமான கேள்வி. நான் இதற்கு பதில் என்று, ஆண் அல்லது பெண், முரடாகவும், கடுமையாகவும் இருக்க வைக்கும் ‘மனிதர்களை பயிற்றுவிக்கும் பிரச்னையே ‘ காரணம் எனக் கூறுகிறேன்.

சமூகங்களில் இரண்டு முக்கியமான முறைகளில் முரட்டுத்தனம் வளர்க்கப்படுகிறது. உணவு, வசதி, ஆரோக்கியமான வாழ்வு ஆகியவை மிகவும் முரட்டான ஆளுக்கு பரிசாகக் கிடைக்கும் என்று முரட்டுத்தனத்தை வளர்ப்பது. இரண்டாவது, மிகவும் முரடான ஆளுக்கு அதிகமான பாலுறவு பரிசுகளும், பாலுறவு அதிகாரங்களும் கிடைக்கும் என பங்கிடுவது. மேற்கண்ட இரண்டு திட்டங்களிலும், உணவு, வசதி ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொடுக்காமலிருப்பது என்பது ராணுவ ரீதியில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக்கூடியது. யானோமாமோ மக்களுக்கு மிகவும் தீவிரமாக உந்தப்பட்ட கொலைகாரர்கள் போர்வீரர்களாக வேண்டும். மற்ற சமூக வேலைகளைச் செய்ய அவர்கள் வலிமையுள்ளவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருக்க வேண்டும். ஆகவே, பாலுறவு கிடைக்காமல் அடிப்பதே முரட்டான ஆட்களை உருவாக்க சிறந்த வழி. பாலுறவு இன்றி காய்வது என்பது சண்டை போட அதிக சக்தியைக் கொடுக்கிறது. அந்த சண்டை போடும் சக்தியை குறைப்பதில்லை.

நமது பழங்குடியின் ஆண் ஆதிக்கக்காரர்களான சிக்மண்ட் பிராய்ட், கோண்ராட் லோரென்ஸ், ராபர்ட் அர்ட்ரே (Sigmund Freud, Konrad Lorenz, Robert Ardrey) ஆகியோரின் பொய் அறிவியலுக்கு எதிர்த்திசையில் என் வாதம் ஓடுகிறது. இந்த விஷயத்தில் நமக்குக் கிடைத்த அறிவெல்லாம், ஆண்கள் இயற்கையிலேயே முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் இருப்பதால்தான் ஆண்கள் சமூகத்தில் பெறும் நிலையும் முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் இருக்கிறது. ஆனால், ஆண் பால் பெண்பாலுக்கும் முரட்டுத்தனத்துக்கும் இடையேயான உறவு என்பது, சிசுக்கொலைக்கும் போருக்கும் இடையேயான உறவைப்போலவே செயற்கையானது. பாலுறவு என்பது முரட்டுத்தன சக்திக்கும், காட்டுத்தனமான நடத்தைக்கும் மூலப்பொருள் என்பது எதனாலென்றால், ஆண் ஆதிக்க சமூக அமைப்புக்கள் இந்த சலுகைகளை முரட்டு ஆண்களுக்கு கொடுப்பதாலும், முரடற்ற ஆண்களுக்கு இவைகளை மறுப்பதாலுமே.

இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட முரட்டுத்தன காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளும், முரட்டுத்தன உருவாக்கமும் பெண்கள் மீது ஏன் திணிக்கப்படக்கூடாது என்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. உள்ளுணர்வு ரீதியில் மென்மையும், அடிதடிக்குப்போகாத குணமும், தாய்மையுள்ள பெண் என்ற கருத்துருவங்களும், ஆணாதிக்க சமூகங்கள் உள்ளார்ந்த முறையில் முரட்டுத்தனமான ஆண் என்ற கருத்துருவத்தைக் காப்பதற்காக ஏற்படுத்திய கட்டுக்கதைகளே. ‘ஆண்மை நிரம்பிய ‘ பெண்கள் மட்டுமே மற்ற ஆண்களுடன் பாலுறவு கொள்ளலாம் என்று அனுமதித்தால், பெண்கள் உள்ளுணர்வு ரீதியில் இயற்கையிலேயே முரடானவர்கள், காட்டுமிராண்டியானவர்கள் என்று எல்லோரையும் நம்பவைப்பதும் எளிதே.

பாலுறவு என்பதை முரட்டுத்தனமான, ஆக்கிரமிப்பு மனமுள்ள நடத்தையை ஊக்குவிக்க உபயோகப்படுத்தினால், இரண்டு பால்களையும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி ஒரே அளவு முரட்டுத்தனம் ஆக்க முடியாது. இருவரில் ஒருபாலை அதிக முரட்டுத்தனத்துடன் பயிற்றுவிக்க வேண்டும். இரண்டையும் அப்படி ஆக்கமுடியாது. இருவரையும் முரடர்களாய் ஆக்குவது என்பது இரு பால்களுக்கு இடையே போரை உருவாக்குவது என்பது தான். யானோமாமோ மக்களிடையே, பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே ஆயுதம் தாங்கிய போராக, போர்க்களத்து வீரத்துக்கு பரிசாக ஒருவரை ஒருவர் கவர்ந்து கொள்ளும் போராக ஆகிவிடும். வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், தைரியத்துக்கு பரிசாக பாலுறவை வைத்தால், இரண்டு பால்களில் ஒன்றுக்கு கோழைத்தனத்தைச் சொல்லித்தர வேண்டும்.

மேற்கண்ட இந்த விஷயங்கள் பெண் விடுதலையாளர்களின் கோஷமான ‘உடலியல் ரீதியான அமைப்பு விதியல்ல ‘ (Anatomy is not destiny) என்ற வார்த்தையை சற்றே மாற்றக்கோருகின்றன. மனித உடலமைப்பு சில சூழ்நிலைகளில் விதியாகிவிடுகிறது. மக்கள்தொகைப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த போர்முறை ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படும்போது, போர்முறை என்பது கையால் எடுத்து சுழற்றக்கூடிய ஆயுதங்களால் அமைந்திருக்கும்போது, ஆண் ஆதிக்க வாழ்க்கைமுறை நிச்சயம் முன்னுக்கு வரும். மேற்கண்ட இரண்டு கட்டுப்பாடுகளும் இன்றைய நவீன வாழ்க்கையில் இல்லை என்னும்போது, ஆண் ஆதிக்க வாழ்க்கைமுறை கீழிறங்கும் என்பது பெண் விடுதலையாளர்கள் கணிப்பது போலவே உண்மைதான். ஆணாதிக்க வாழ்க்கைமுறை என்பது இன்னும் அதி வேகத்தில் இறங்குவதற்கும், இறுதியில் உண்மையான ஆண் பெண் சமத்துவம் வருவதற்கும், இன்றைய போலீஸ், ராணுவ சக்திகளை முழுமையாக நீக்க வேண்டும். போலீஸ், மற்றும் ராணுவத்தின் தேவையைக் கோருகிற விஷயங்களை ஒழிப்பதன்மூலம் இந்த மாறுதல் வரும் என்றும், ஆள் பலத்தைப் பொறுத்து இல்லாத போர்முறை தந்திரங்களால் இது வராது என்றும் நம்புவோம்.

பெண் விடுதலையின் விளைவாக போலீஸ் தலைமைக்கும், அணுகுண்டு ஆயுதத்தலைமைக்கும் பெண்கள் வந்தால், நாம் யானோமாமோவை விட கொஞ்சம்தான் நாம் முன்னேறியிருப்போம்.

(அத்யாயம் முடிவு பெற்றது)

Series Navigation