நடந்தாய், வாழி

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

அ.முத்துலிங்கம்


கவிகளுக்கு ஆற்றின் மீது ஒரு மோகம் உண்டு. ‘ஆறு ஓடுகிறது ‘ என்பார்கள். ‘பொங்கி வழிகிறது ‘ என்பார்கள். ‘கரை உடைத்து பாய்கிறது ‘ என்பார்கள். ஆனால் சிலப்பதிகாரம் செய்த இளங்கோ மட்டும் ‘ஆறு நடந்தது ‘ என்கிறார்.

கோவலனும் மாதவியும் கூடிக் கழித்த நாட்கள் இனிமையானவை. மாதவியே தஞ்சம் என்று அவளில் விடுதல் அறியா விருப்பினன் ஆகி கோவலன் மயக்கத்தில் கிடந்தான். அந்த இன்பம் நீடிக்கவில்லை. விரைவிலேயே அவர்களுக்குள் ஊடல் பிறந்தது.

யாழை மீட்டி கோவலன் கானல் வாிப் பாடல்களை இசைக்கிறான்.

மான் நெடுங்கண் மாதவி வாளாவிருப்பாளா ? அவளும் பாடினாள், காவிாியை நோக்கி.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப

மணிப்பூ ஆடை அது போர்த்துக்

கருங்கயல் கண் விழித்து, ஒல்கி

நடந்தாய், வாழி காவோி.

இப்படி ஆரம்பித்து, ஒரு குறிப்புணர்த்துவது போல இன்னும் சில பாடல்கள். சிறு ஊடலாக கோவலன் மனத்திலே அரும்பிய பொறாமைப் பொறி கொழுந்து விட்டது. மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் என மாதவியை உதறிவிட்டுப் பிாிந்தான். இப்படி இரண்டு காதலர்கள் பிாிவதற்கு காவிாி அன்றே காரணமாகிவிட்டது.

கம்பர் காலத்தில் காவிாி நடந்து வந்ததாகத் தொியவில்லை. பாய்ந்து கரைபுரண்டு வந்தது. ஒரு முறை நுங்கும் நுரையுமாக பொங்கிய காவோி கரையை உடைத்துவிட்டது. அப்பொழுது கம்பர் ஒரு பாடல் பாடினார்.

கன்னி அழிந்தனள் கங்கை திறம்பினள்

பொன்னி கரையழிந்து போனாளென் ெ றிந்நீர்

உரைகிடக்க லாமோ உலகுடைய தாயே

கரை கடக்கலாகாது காண்.

உடனேயே காவிாி கட்டுப்பட்டு அமைதியாகிவிட்டதாம். அப்படி ஒரு கதை.

கம்பர் பாடிய ராமாயணத்தில் முதல் காண்டம் பாலகாண்டம். அது இருபத்திரண்டு படலங்களைக் கொண்டது. அதில் முதலாவது ஆற்றுப்படலம். ஆற்றின் சிறப்பை பாடிய பிறகுதான் நாட்டைப் பற்றி பாடுவது வழக்கம். கம்பர் கோசல நாட்டு சரயு நதியை வர்ணித்து இருபது பாடல்கள் பாடிய பிறகே நாட்டைப் பாடுகிறார். ஆறுதான் நாட்டுக்கு உயிர் என்பதால் அதை முதலில் பாடினார் என்பார்கள். அந்த இருபதாவது பாடல் ‘ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாயதன்றே ‘ என்று முடிகிறது. உடம்பில் தாிக்கும் உயிரைப்போல சரயு நதி உலாவியது என்று கம்பர் ஆற்றுப்படலத்தை நிறைவு செய்கிறார்.

பாரதியார் காவிாியைப் பற்றி அல்ல, எல்லா நதிகளைப் பற்றியும் பாடியிருக்கிறார். ஆனால் பாரதியாருடைய நதிகள் நடக்கவில்லை, உலாவவில்லை, அவை ஓடின.

‘காவிாி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

கண்டதோர் வையை பொருனை நதி – என

மேவிய யாறு பலவோட ‘ என்றார் பாரதியார்.

ஆதியில் இருந்தே நாட்டுக்கு உயிர் நதிகள். அதுபோல ஆற்றுநீர் பங்கீடும் ஆதியானது. உலகத்து நாகாிகம் முதலில் எகிப்து தேசத்தின் நைல் நதிப் பிரதேசத்தில் தோன்றியது. இந்த நதி உலகத்திலேயே நீளமானது. இது எத்தியோப்பியாவிலும், உகண்டாவிலும் உற்பத்தியாகி, சூடானில் ஒன்றாகி, எகிப்து வழியே பாய்ந்து கடலிலே கலக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நைல் நதியே எகிப்தின் நீர்ப்பாசனத்துக்கு உயிராயிருந்தது. அந்த பாரம்பாியம் கருதி 1929ல் எகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் ஏற்பட்ட தண்ணீர் பங்கீடு ஒப்பந்தத்தில் எகிப்து வருடத்துக்கு 48 bcm தண்ணீரை எடுத்துக்கொண்டு சூடானுக்கு வெறும் 4 bcm தண்ணீரை கொடுத்தது. இவ்வளவுக்கும் நைல் நதி சூடானுக்கு ஊடாகவே பாய்ந்து எகிப்தை அடைகிறது.

இந்த ஒப்பந்தம் 1959 ல் மறுபாிசீலனை செய்யப்பட்டு சூடானின் பங்கு 18.5 bcm என்றும், எகிப்தின் பங்கு 55.5 bcm என்றும் உயர்த்தப்பட்டது. இந்த இரண்டு பொிய நாடுகளும் சுமுகமாக இன்றுவரை ஒப்பந்தப்படி தண்ணீரை பங்குபோட்டு அனுபவிக்கின்றன.

ஆனால் காவிாி நீரைப் பங்குபோடும் பிரச்சினை இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது. பத்திாிகைகளும், வார இதழ்களும், மாசிகைகளும், வானொலியும், தொலைக்காட்சியும், இணையத் தளங்களும் இந்தப் பிரச்சினையை இடையறாது அலசுகின்றன. இணக்கம் எட்டாமலே போகிறது.

கர்நாடகத்தில் பிறந்து தமிழ் நாட்டுக்கு வருகிறது காவோி. கர்நாடகத்தில் நீர்பாசனப் பரப்பு வருடாவருடம் கூடிக்கொண்டே போகிறது. தமிழ் நாட்டுக்கு வரும் தண்ணீர் அதனால் குறைகிறது. தொன்றுதொட்டு தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வளம் தந்தது காவோி. இரு மாநிலங்களின் நீர்ப்பாசன நிலப்பரப்பு விகிதத்தில் தண்ணீரை பங்கீடு செய்தாலே போதுமானது என்கிறார்கள் நிபுணர்கள். ஆனாலும் ஒப்பந்தம் புறக்கணிக்கப் படுகிறது.

ாநடந்தாய் வாழி, காவோிா என்றார் இளங்கோ அடிகள். காவோிக்கு ஓர் அவசரமும் இல்லை. அது ஆடி, அசைந்து நடந்து வருகிறது. வருடா வருடம் காவோிப் பிரச்சனையும் கூடவே வந்துகொண்டிருக்கிறது. முதலமைச்சர்களும், பிரதமரும் செயலிழந்து போய் நிற்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உதாசீனப்படுத்தப் படுகிறது. இதற்கு ஒரு தீர்வு வேகமாகக் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அதுவும் ஆடி, அசைந்துதான் வரும்போல படுகிறது.

muttu@earthlink.net

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்