இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)

This entry is part of 20 in the series 20011202_Issue

மஞ்சுளா நவநீதன்


கள்ளுக் கடை – மலிவு விலை சாராயம்

கள்ளுக் கடை திறப்பும் , மலிவு விலை சாராயமும் விற்பனை செய்வதென்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று. முக்கியமாய்க் கள்ளுக் கட்டை திறப்பு. கள்ளுக் கடையும் , கஞ்சாவும் இயற்கை போதை வஸ்துக்கள் என்ற அளவிலும், விவசாயம் சார்ந்த பொருட்கள் என்ற முறையிலும் தடை செய்யப் பட வேண்டாதவை. சாராயம் போன்றவற்றிலிருந்து மக்களை விலக்கவும் இவை ஓரளவு உதவக் கூடும். இந்த முடிவை வரவேற்போம். இனியாவது விஷச் சாராயம் அருந்தி மரணம் பெறும் நிலை தமிழ் நாட்டில் வராது என்று நம்புவோம்.

****

விலைவாசி உயர்வு : கஜானா காலியா ? மூளை காலியா ?

எக்கச்சக்கமாய் விலைவாசி உயர்ந்திருக்கிறது. மக்கள் வேலைக்கோ, வருமானத்திற்கோ உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவது மிக மன்னிக்க முடியாத குற்றம். இதனுடன் சேர்ந்தே பார்க்க வேண்டிய இன்னொரு அம்சம் அரசு வங்கிகளில் வைப்புகளின் வட்டி விகிதம் குறைப்பு. பல பணி ஓய்வு பெற்றவர்கள் வைப்பு நிதியின் வட்டியில் தான் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். மாதச் சம்பளம் மிகக் குறைவாய் வாங்குபவர்கள் தம் வருமானத்தை ஏற்ற எந்த வழியும் இல்லாத போது, விலைவாசிகள் உயர்வதைக் கண்டு என்ன செய்ய முடியும் ? இது தான் உலக மயமாதலின் விளைவு என்றால் வேண்டாம் அந்த உலக மயமாதல்.

அரசின் கீழ் உள்ள பல அமைப்புகளில் சிறப்பாக வேலை நடைபெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் , அரசாங்கம் பெருமுதலீட்டில் ஈடுபட்டு ஒரு அமைப்பைக் கட்டி எழுப்பியபின்பு, தனியாருக்கோ அல்லது கூட்டுறவு அமைப்பிற்கோ விட்டு விட்டு வேறு பணியைத் தொடங்க வேண்டும். போக்குவரத்துத் துறையை முழுக்கவுமே தனியார் வசம் ஒப்புவிக்கலாம். ஆனால் பெரும் கம்பெனிகள் வசம் இல்லாமல், ஓட்டுனர் நடத்துனருக்கு மலிவு விலைக்கு பஸ்ஸையும், தடங்களையும் விற்பனை செய்யலாம்.

வழக்கம் போல முந்தைய ஆட்சியைக் குறை சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. முதல்வர் பன்னீர் செல்வமோ மூச்சு விடக் கூட அனுமதி பெற வேண்டிய நிலை. ஆட்சி செய்யவக்கில்லாதவர்கள் ராஜினாமா செய்து விட்டு, மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்தபின்பு, வனவாசம் போகலாமே.

***********

பேநஸீர் புட்டோ – வரவேற்போம்

இந்தியாவிற்கு வந்து பேநஸீர் புட்டோ சில இடங்களில் பேசியிருக்கிறார். காஷ்மீரில் வெளிநாட்டுக் கொலைகாரர்கள் புரட்சி வேடம் போடுவது பற்றியும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பாகிஸ்தானின் ராணுவம் வேட்டையாடிய பேநஸீர் புட்டோ அல்லது நவாஸ் ஷரீப் தொடர்ந்து பாகிஸ்தான் தலைமை பீடத்தில் இருந்திருந்தால் ஒரு வேளை இந்தியா-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். புட்டோ- ஷரீஃப் இருவருமே ஊழல் புரிந்திருக்கலாம். ஆனால் ஜனநாயக ரீதியாக – சட்ட ரீதியாக அவர்களை தண்டிக்க வேண்டும் . ஆனால் பாகிஸ்தான் ராணுவம் ஜன நாயகத்தைக் கண்டு தான் மிகவும் அஞ்சுகிறது அதனால் தான் மக்களிடையே ஆதரவு உள்ள இந்தத் தலைவர்களை பாகிஸ்தானிற்குள் வரவிடாமல் செய்கிறது. பாகிஸ்தான் மக்களின் முதல் எதிரி பாகிஸ்தான் ராணுவமே. பாகிஸ்தான் துண்டாடப் படவும், ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் உருவாகி வளரவும், காஷ்மீரின் பிணக்காட்டிற்கும் பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம். நவாஸ் ஷரீஃப் உறவினர்கள் பாகிஸ்தான் சமீபத்தில் வந்தது குறித்து பாகிஸ்தான் அரசு பயப் பட்டதற்கும் இதுவே காரணம்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் வரும் வரையில் பாகிஸ்தான்-இந்தியா உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

*********

ஆஃப்கானிஸ்தானில் – இனி என்ன ?

ஒரு வழியாக ஆஃப்கானிஸ்தானில் கூட்டணி அரசு ஏற்படும் வாய்ப்புத் தெரிகிறது. துருக்கியில் தோன்றிய கமால் அதாதுர்க் போன்ற ஒரு பார்வையும் முதிர்ச்சியும் உள்ள தலைவர் ஆஃப்கானிஸ்தானில் இல்லை. ஆஃப்கானிஸ்தானில் உள்ள வெவ்வேறு இனக்குழுக்கள் இணைந்து பணியாற்றுவதும் சந்தேகம். ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயகம் வேரூன்ற உதவி செய்ய வேண்டுயது மேல் நாடுகளின் கடமை.

********

Series Navigation