பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 3

This entry is part of 20 in the series 20011118_Issue

ராஜன் குறை


14. ஆங்கிலத்தில் ‘கேஸ்ட் ‘ ‘கிளாஸ் ‘ (caste/class) என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது தமிழில் ‘சாதி–வகுப்பு ‘ என்று சொல்லப்படுவனவாகும். சாதி–பிறப்பினால் உள்ளது; வகுப்பு—தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம், சாதி நிலை, அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது. மேல் நாட்டில் சாதி இல்லாததால், அங்கு பொதுவுடமைக்கு முதலில் வகுப்புச் சண்டை துவக்க வேண்டியதாயிற்று. இங்கு சாதி இருப்பதால் பொதுவுடமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்.

பார்ப்பானும், பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடமை வேஷம் போடுவதால், சாதிச் சங்கதியை மூடிவிட்டு, ஆகாத காரியமான–ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாத வகுப்பு (class) உணர்ச்சியைப் பற்றி பேசி — சாதியை ஒழிக்கப் பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்; சாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப்பார்க்கிறார்கள். பார்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிகாரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாகவேண்டும். இதிலேயே அரைப்பாகம் பொதுவுடைமை ஏற்பட்டுவிடும். அதாவது, சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும், சாதியினால் சுரண்டப்படுபவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.

பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பால பாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

( ‘குடி அரசு ‘ — தலையங்கம் — 25-3-1944)

15. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறத் என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திராவிடர் கழகத்திற்கு கவலையில்லை என்று சொல்லமுடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகிறது. பணக்காரத்தன்மைக்கு பார்ப்பனீயமும், மேல்சாதி–கீழ்சாதி தன்மையும், கடவுள்தன்மையும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக் கொண்டே இருப்பார்கள். சாக்கடையும், கொசுக்களையும் ஒழித்தால் தான் அழுக்கு தண்ணீரையும் மலேரியாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால் தான், திராவிடர் கழகம் ‘பணக்காரத்தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை ‘ என்று கருதி, இதைச் செய்கின்றது.

பணக்காரத்தன்மைக்கு எளிதில் எதிர்ப்பு கிடைக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்பு கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால் முதலில் சுலபமானதைச் செய்துக் கொண்டு பிறகு கஷ்டமானதை செய்துகொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

ஆகையால், நாம் இந்த கம்யூனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம், அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் சென்று நிற்கும்.

(சொற்பொழிவு— ‘விடுதலை ‘ 4-10-1951)

16. பொதுவாக, சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினை பலப்படுத்தி, சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த எந்திரத்தை கொண்டு வந்து அதோடு இணைத்து தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தக்கதும் ஆகும். என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன். போராடத் தோன்றியதாக தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம். ஒரு இயந்திரத்தை கழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம் போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி, பின்னால் அது உலகத்தையே ஒன்று படுத்த–உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மை சக்தியும் பெருமையும் வெளியாகும்.

( ‘குடி அரசு ‘ — தலையங்கம்– 17-2-1929)

17. நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம் ) சமூகத்துறையிலுள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரியின் முதல் அனேக செலவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமென்று கருதியதால் பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம். என்றாலும் அரசாங்கத்தார் தப்பபிப்ராயத்தைக் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறைப் பிரயோகம் ஆரம்பித்து விட்டார்கள் என்று உணர்கிறேன். இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்து கொண்டேன். ஆனால், ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின்மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும், சாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு சாதி, மதக்காரர்கள் மனம் புண்படும் படியோ, அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் சாதி மதக் கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்னும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்திரவும் மனக் கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும், முயற்சிகளும், நிலைமைகளும் இருந்ததால், நான் இந்தச் சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்.

சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம். என்றாலும், நம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ, திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை. ஆதலால், யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய் விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.

( ‘குடி அரசு ‘ — அறிக்கை– 31-3-1935)

———————————————————————————————-

2. தேசிய இன விடுதலை என்பதில் உறுதியான நிலையெடுக்கத் தவறிவிட்டவர்;

தேசிய இனத்தைத் தமிழ்மொழி என்ற மொழியடைப்படையில் தீர்மானிப்பதா ? அல்லது திராவிட இன அடிப்படையில் தீர்மானிப்பதா ? ‘தமிழ்நாடு தமிழர்க்கே ‘ என்பதும் ‘திராவிட நாடு—-திராவிடர்க்கே ‘ என்ற கோஷமு மாறி மாறியே தொடக்கத்தில் ஒலிக்கின்றன, பின்னர் பெரியார் இன அடிப்படையில் கேட்பதே சரியானது உறுதி எனசெய்து விடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம்–மொழியடிப்படையில் ‘பார்ப்பான் நானும் தமிழ்தான் பேசுகிறேன் என்று வந்துவிடுவானே, என்பதுதான். பிற மூன்று மாநிலங்களில் யாரும் கோரவில்லையே என்று கேட்டதற்கு அவர்களுக்காகவும் நான்தான் பேசவேண்டும் என்று கூறிவிடுகிறார். பின்னர் மொழிவாரி மாநிலங்கள் 1956யில் பிரிந்தவுடன்— இனி திராவிட நாடு தமிழ்நாடுதான் எனத் தெளிவுபடுத்திவிடுகிறார். இதைக்காட்டிலும் மத அடிப்படையில் நாடு கோருவது ஜின்னாவுக்கு எளிதாகஇருந்தது. இருவருமே பிரிவினைக்கோரிக்கையை வைத்தது 1940யில் என்றாலும், ஜின்னாவைப்போல் உள்நாட்டு போர் நடத்தியாவது தனி நாடு பெரும் தீவிரமும், அதற்கான ஆதரவும் பெரியாருக்கில்லை. அது தவிர பெரியார் பாணியில் தொடர்ந்து பிரசாரம் செய்து, மக்களாதரவை உண்டாக்கி அதன் பின் வன்முறை இன்றி நாடு பிரிவினையைப் பெறுவதற்கு நீண்டகால அவகாசம் வேண்டும். காங்கிரஸ் பிரசாரம், காந்தியின் வெகுஜன செல்வாக்கு மிக்க ‘மகாத்மா பிம்பம் ‘ ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரியார் அன்றிலிருந்து இறுதிவரை ‘தனித் தமிழ்நாடு ‘ கோரிக்கையை எழுப்பிக் கொண்டுதானிருந்தார். இவை அனைத்தையும் விட இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் தனி நாடு கேட்பதற்கு அவர் காட்டிய ஒரே காரணம் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புதான். வடநாட்டுடன் இணைந்துள்ள வரையில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது என்பதையே அவர் ஒவ்வொரு சொற்பொழிவிலும் வழியுறுத்துகிறார். இந்தித் திணிப்பும்—எதிர்ப்பும் அவரது கோரிக்கைக்கு வலிவு ஏற்படுத்தினாலும், தேசிய இனப் போராட்டத்தை உருவாக்க இந்தச் சொல்லாடல் போதுமா என்பது சந்தேகமே. பெரியார் சுயமரியாதை இயக்க காலத்தில் தேசம், தேசியம், தேசாபிமானம் போன்றவைகளைக் கற்பிதங்களாக வர்ணித்திருக்கிறார். தேசியம் பேசுவதில் அவருக்கொரு உள்ளார்ந்த சிக்கல் இருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது எனவே அவரது பார்ப்பன எதிர்ப்பே தனிநாடு கோரிக்கையாக உருப்பெற்றது என்பதை மேற்கண்ட விவரங்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

———————————————————————————————————–

Series Navigation