பெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள்

This entry is part of 16 in the series 20011104_Issue

ராஜன்குறை


(நிறப்பிரிகை 1993 ஏப்ரல்)

முன்னுரையாகச் சில முக்கியமான குறிப்புகள் :

இக்கட்டுரை ஆய்வு நடந்தபின் எழுதப்படுவதல்ல. ஆய்விற்கான தயாரிப்பாக எழுதப்படுவது. இதில் கூறப்படும் கருத்துக்கள் ஆய்வின் முடிவுகள் (Findings) அல்ல, ஆய்விற்கான முன் அனுமானங்கள் (Hypothesis).

பெரியாரின் ஐம்பது ஆண்டு கால இயக்கத்தின் களம் மிக விரிவானது. அவருடைய உச்சரிப்புகள் அன்றாடம் தலையங்கங்களாக, கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் பதிவுகளாக, சிறு பிரசுரங்களாக வெளியானவை. இவற்றிற்கான எதிர் வினைகளும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஏராளமாகப் பதிவாகியுள்ளவை. இவை மட்டுமின்றி அக்காலக் கட்டத்தில் பதிவுகள் அனைத்தையும் நுட்பமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்வதின் மூலமாகவே பெரியாரியம் என நாம் செய்யக்கூடிய வரையறை முற்றிலும் சரியானதா; பெரியாரின் இயக்கம் அவ்வரையறைக்குப் பொருந்துமாறு முற்றிலும் இருந்ததா; பெரியாரியம் அனைத்து மக்களின் விடுதலைக்கு அன்று எவ்வளவு தூரம் உதவக்கூடியதாக இருந்தது; இன்று எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்; போன்ற கேள்விகளுக்கு உறுதியான விடைகளைப் பெற முடியும். ஆயின் அத்தகைய விரிவான ஆய்வினை உடனடியாக மேற்கொள்ளும் சாத்தியமில்லாததால் பெரியாரின் உச்சரிப்புகளையும், இயக்கத்தையும் ஓரளவு பரிசீலித்து சிந்தித்துப் பார்த்ததில் உருவாகிய சில முன் அனுமானங்களை மிதக்க விடுவதன் மூலம் ஆய்வினை ஒரு கூட்டுச் செயல்பாடாக மாற்ற இக்கட்டுரை விளைகிறது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த, இயக்கம் சாராத சிந்தனையாளர்கள் பெரியார் பற்றிய அவர்களது சேகரிப்புகளையும், கணிப்புகளையும் வெளியிட இக்கட்டுரை தூண்டுதலாக அமைய முனைகிறது.

இக்கட்டுரையில் தரப்படும் பெரியாரின் மேற்கோள்கள் எதையும் நிருபிப்பதற்காகத் தரப்படுவதல்ல. முன் அனுமானங்களுக்கான தூண்டுதல்களே அவை. எனவே அந்த அனுமானங்களை மறுக்க விரும்புபவர்கள் பதட்டமின்றி, நிதானமாக ஆய்வு நோக்கிலும், விவாதப்பூர்வமாகவும் கருத்துக்கள் வைக்கலாம். ஆய்வின் போக்கிலும், விவாதங்களினுடாகவும் அனுமானங்கள் உறுதிப்படலாம், மாற்றமடையலாம் அல்லது கைவிடப்படலாம்.


01. நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலே தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையென்றால் அது நியாயமும், ஒழுங்குமாகாது.

(திருப்பூரில் சொற்பொழிவு — ‘புரட்சி ‘ 17-12-1933.)


பெரியாரியம் — வரையறையும், விளக்கமும் :

வரையறை :

1. சாதிப்படி நிலையமைப்பை தகர்ப்பதே, சாதி ஒழிப்பே இந்திய சமூகத்தின் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பிரதான அரசியல் நடவடிக்கை.

2. சாதிப்படி நிலை அமைப்பை கருத்தியல் ரீதியாக பலமுனைகளிலும் தாக்குவதும், பொதுக் கருத்தியலாக நிலை நிற்கும் சாதீயக் கருத்தியலை வெகுஜனச் சொல்லாடல் களத்திலேயே முறியடிப்பதும் சாதி ஒழிப்பிற்கான செயல்முறை, இதற்கு முனைப்புத் தரும்படியாக அமையக்கூடியவை குறியீட்டழிப்புப் போராட்டங்கள்.

3. சாதீயப் படிநிலை அமைப்பின் மேல் அடுக்கு மட்டுமல்ல பார்ப்பன சாதி என்பது. அதற்கான சட்டகம் (Frame) பார்ப்பனின் இருப்பே, பார்ப்பனியத்தின் இருப்பிற்கான பொருளியல் அடிப்படை.

4. பார்ப்பனனைத் தனிமைப் படுத்துவது, பார்ப்பன விலக்கம் ஆகிய முதற்கட்ட நடவடிக்கையில் வெகுஜன ஈடுபாட்டின் மூலமே சாதீய சட்டகத்தை குலைப்பது மட்டுமின்றி, சாதீயத்தை வெகுஜன சொல்லாடல் களத்தில் சுலபமாக ஒழிக்க முடியும்.

[இங்கு பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் பெரியாரால் பயன்படுத்தப்படாதவையாக இருக்கலாம். ஆனால் சமகால அரசியல் சிந்தனைகளுடன் பரிச்சயம் கொண்ட நாம் சொற்றொடர்கள் மூலமாகவே அவர் சிந்தனைகளை அடையாளப்படுத்த இயலும், இதற்கான அடிப்படை அவருடைய சொற்களிலேயே இருப்பது அவரை வாசிப்பவர்களுக்கு புலப்படும்].

விளக்கம் :

1. சாதிப்படி நிலை தகர்ப்பே, சாதி ஒழிப்பே உடனடி அரசியல் நடவடிக்கை :

சாதிப் படி நிலையைத் தகர்க்க சாதிச் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் வகுப்புவாரி உரிமைகள், இடஒதுக்கீடு ஆகியவற்றைக் கோருவது, சாதி ஒழிப்பிற்காகக் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்வது ஆகியவை பெரியார் தொடர்ந்து வலியுறுத்திய நடைமுறைகள். இந்திய சமூகத்தை இவ் வகையில் ஜனநாயகப் படுத்தியபிறகே பிற வேலைகளை மேற்கொள்வது பொருத்தம் என்பதைத் தெளிவாக உணர்ந்தும், வெளிப்படுத்தியுமிருக்கிறார். டாக்டர் அம்பேத்கர் அவர்களும் இதே கருத்தினை அவருக்கேயுரிய வழியில் வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் கூற்றுக்களை முன்வைத்து ஜாதி ஒழிப்பை ஜனநாயகப் புரட்சி என்ற கோணத்தில் விளக்கி அ. மார்க்ஸ் சமீபத்தில் மக்கள் கல்வி இயக்கம் வெளியிட்ட ‘டாக்டர் அம்பேகரின் போர்க்குரல் ‘ என்ற பிரசுரத்தில் எழுதியுள்ளது இவ்விஷயத்தில் தெளிவைத் தரும்.

இந்தியத் தன்னிலை என்பது, சாதீயத்தன்னிலையாகவே உள்ளது. அதாவது ஒரு மனித உயிரியின் கல்வி, தொழில், உணவு, உடை, மணமுறை இன்னும் சொன்னால் அதன் அசைவுகள், நடவடிக்கைகள் அனைத்துமே சாதியால் நிர்ணயிக்கப்பட்டதாகவே இருக்கின்றன.

இவ்வாறாக தேர்வுகளற்ற, நிர்ணயிக்கப்பட்ட வாழ்வில்; சமூக தளத்தில் இயக்கம் முற்றிலும் குறுக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திரம், ஜனநாயகம் போன்ற விஷயங்கள் சாதி உயிரிக்கு முற்றிலும் அந்நியமானவையே. சமத்துவம் என்ற பேச்சிற்கே இடமில்லை மிகக் கொடூரமான, கட்டுறுதி மிக்க சமூக ஒழுங்கு அமைப்பு சாதீயத்தால் நிலைப்பெற்றிருப்பதை பல்வேறு சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். அதிகாரம் என்பது அரசிடம் மட்டும் குவிந்திருப்பதல்ல, பல்வேறு மட்டங்களில் சமூக, மனித உறவுகளில் விரவி இருப்பது என்பன போன்ற சிந்தனைகளைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட சாதிச் சமூகமென்பது அதி—நிர்வாக, அதி–அரசாங்க (Super–bueracratic, Super–Governmental Structures) அமைப்பாக செயல்படுவதாகவும் கணிக்க முடியும். இந்நிலையே சாதீயத்தை நமது பிரதான எதிரியாக்குகிறது.

2. பார்ப்பன எதிர்ப்பே, சாதி எதிரிப்பின் பிரதான அம்சம்:

பார்ப்பன சாதி, சாதிச் சமூகத்தின் மேலடுக்காக இருப்பது மட்டுமல்லாமல், சாதீயத்திற்கான குறியீட்டு அர்த்தத்தையும், நியாயத்தையும் வழங்குவது. இன்று வரையிலும் பார்ப்பன இருப்பை முன்னிலைப்படுத்தியே எந்த ஒரு சாதியும் தனக்குக் கீழுள்ள சாதியின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சொல்லாடலை உருவாக்கிக்கொள்கிறது. சாதீயத்தை நிலைப்படுத்த உதவும் மறுஜென்மம், சாத்திரங்கள், கடவுளர்கள் போன்ற புனைவுகளை தொடர்ந்து மறு உற்பத்தி செய்தும், பிரசாரம் செய்தும் வந்தவர்களும் பார்ப்பனர்கள் தாம். சாதிப்படி நிலை அமைப்பு பார்ப்பன முன் மாதிரியின்றி பெரிதும் பலவீனப் பட்டுவிடும். சாதிச் சின்னங்களை சட்ட விரோதமென அறிவிக்கவேண்டாமா வென்று 1950ல் பெரியார் கேட்பதலிருந்து சமூக உளவியல் குறியீடுகளின் பங்கினை அவர் கணித்திருப்பது புலனாகும்.

3. பொதுக் கருத்தியலே எதிரி; வெகுஜனச் சொல்லாடல் களமே போர்க்களம்:

சாதீயம் சமூகத்தில் நிலைபெற்றுவிட்ட ஒரு கருத்தியலாகும். மனித உயிரிகள் தன்னை இன்ன சாதியென்றும், இவர்களைவிட உயர்ந்தவன், இவர்களை விடத் தாழ்ந்தவன் என்றும் இயல்பாகவே ஏற்றுக் கொண்டு நம்புகின்றன. மிகுந்த தாழ்ந்த சாதியென அடையாளமிடப்பட்டவரும் கூட தங்கள் நிலையை நியாயமென ஏற்றுக் கொண்டு நம்பி அனுசரிக்கும் படியாக பொதுகருத்தியல் ஆழமாகவும், அகலமாகவும் நிலைபெற்றுவிட்டது. எனவே பெரியார் மிகப்பரவலான, கடுமையான பிரசாரத்தின் மூலம் இக்கருத்தியலை முறியடிப்பதே தனது யுத்த தந்திரமெனக் கொண்டார். இப்பிரசாரத்திற்கு ஏற்றவாறே தனது அனைத்து அரசியல் நிலைபாடுகளையும் வைத்துக் கொண்டார். அவரது சமரசங்களைப் பற்றிப் பேசும்போது, அவரது இந்த அரசியலடிப் படையை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் பேச்சுரிமை, எழுத்துரிமை எதையும் அனுமதிக்காத ஒரு பாசிச அரசில், பொதுக் கருத்தியலையே தனது இருப்பிற்காக நம்பியிருக்கிற அரசில் பெரியாரின் போர்முறை பயனற்றது. அவர் வெறுத்த ரகசியமும், பலாத்காரமும் அங்கு இன்றியமையாதவை. அத்தகைய நிலையில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை அவரது பன்முகப் பிரசாரங்களில், வெளிப்படும் ஆழ்ந்த சிந்தனைகளின் சாயலில் தேடிப் பார்க்கலாம். இக்கட்டுரையின் எல்லைக்குள் அம்முயற்சி அடங்காது.

1. ஆகையால், முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவு தெரிந்துவிட வேண்டும். இரண்டாவதாக, ஒரு மனிதனுக்குக் கீழோ, மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்குமேல், சாதி வித்யாசத்திற்கு ஆதாரமுள்ளவைகளை அடியோடு அழிக்க முயலவேண்டும். அப்படிச் செய்யாமல் உயர்வு, தாழ்வைப் போக்கிவிடலாமென்று கருதுதல் நுனிமரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும். சாதி ஆசாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சாதியை மதத்திலிருந்து பிரித்துக் கவ்வ வேண்டும். இப்படி பிரிப்பதற்கு முடியாத வரையில் சாதியும், மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியேயாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும், மதத்தையும், பிணைத்துக் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக்கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால், சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்துச் சாம்பலாக வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, மதமானது வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான். ஆனால் இந்த வேதம், கடவுளுடன் சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதிலும் பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் தலையிலும் கைவைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவுதான் கொடுக்கும். இதில்தான் பெருத்த சங்கடப்படக்கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக்கூடாது. எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வராது. இப்படி நாம் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் எல்லாவற்றையும் சேர்த்துக் கொளுத்தும்போது உண்மையில் ஏதாவது சத்து இருந்தால் அது அழியாது. இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்து போகுமேயென்றால். அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தை பொசுக்கும்போது வேதமும் பொசுங்கிப் போவதாய் இருந்தால் அந்த வேதம் என்பது இப்போதே வெந்துபோகட்டும். வேதத்தை ஓட்டும் போது கடவுளும் ஓடி விடுவாரென்றால் அந்தக் கடவுள் என்பது இந்த நிமிஷத்திலேயே ஓடி விடட்டும். அப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.

(திருச்சியில், 29-9-1929ல் சொற்பொழிவு— ‘திராவிடன் ‘ தினசரி— 5-10-1929 )

2. சுதந்திரம் அடைந்த நாட்டிலே பார்ப்பனர்கள் ஏன் இருக்க வேண்டும் ? சூத்திரர்கள் ஏன் இருக்க வேண்டும் ? பஞ்சமர் ஏன் ? என்று கேட்டிருக்கிறீர்களா ? அப்படிக் கேட்டால் வகுப்புத் துவேசமா ? கூறுகிறார்களே வகுப்புத் துவேஷம் என்று ‘

ஜனவரி 26ஆம் தேதி முதற்கொண்டு பார்ப்பான் இருக்கக்கூடாது; இருந்தால் ஆறு மாதம் கடுங்காவல் என்று சட்டம் எழுத வேண்டாமா ? இன்றும் பார்ப்பான் தன்னைப் பார்ப்பான் என்று பூணூல் போட்டுக்கொண்டிருக்கிறான் ‘.

சாதியை ஒழிக்கத் திட்டம் எழுதுகிறார்களே, சர்க்கார் ‘ இனிமேல் சாதியைக் குறிக்கும் சின்னத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவேண்டாமா ? அதற்கு ஒரு சட்டம் செய்ய வேண்டாமா ? இன்னமும் ஏன் பூணூல் இருக்கிறது ? ஏன் இன்னமும் பூணூலை ஒப்புக்கொள்ள வேண்டும், இந்த சர்க்கார் ?

(செங்கற்பட்டில் 5-11-1950ல் சொற்பொழிவு ‘விடுதலை ‘ 12-11-50)

3. ஆகவே, இந்த ஆட்சி சமத்துவ ஆட்சி அல்ல; சுதந்திர ஆட்சி அல்ல; ஒரு சுரண்டல் ஆட்சி என்றுதான் நாங்கள் சொல்கிறோம். எங்கள் நாடு எங்களுக்கு வந்துவிடுமேயானால் கட்டாயம் இன்றைய தினம் நாங்கள் சொல்லுகின்ற இந்த உத்தரைப் போடுவோம். இந்த நாட்டிலே எவனாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருந்தால் ஒரு வருடம் ஜெயில் என்று சட்டம் செய்வோம்.

(செங்கற்பட்டில், 5-11-1950ல் சொற்பொழிவு – ‘விடுதலை ‘ 12-11-1950)

4. மார்க்ஸ் நினைத்திருப்பாரா, இந்த நாட்டில் பார்ப்பனர்கள் என்கிற சதிகாரர்கள் செய்து வருகிற கொடுமைகளையும், புரிந்து வருகிற ஆதிக்கத்தையும், நடத்துகிற சதித்திட்டங்களையும் மற்றும் இந்த நாட்டின் சொந்த மக்கள் பிறவிச் சூத்திரர்களாக்கப்பட்டு, வேசி மக்களாய்க் கருதப்படுகிற நிலைமையையும் பற்றி ? அதற்கு ஏற்ற மதம், சாஸ்திரம், கடவுள் பற்றி ? ஆதலாலேயே, அவர் அந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி நிலவி வந்த முதலாளித்துவம், அதன் ஆதிக்கமுறைகள், அவைகளுக்கு மதம் அளிக்கும் ஆதரவு பற்றிச் சொல்லிப் போனாரே தவிர, இந்த நாட்டைப் பற்றி– பாவம், அவர் என்ன கண்டார் ?

ரஷியாவில் என்னை அதிசயமாகக் கேட்டார்களே ‘ ரஷியாவில் ஒரு மாணவன் என்னைப் பார்த்து, ‘என்ன, உங்கள் நாட்டிலே மகாராஜாக்கள் இருக்கிறார்களாமே ‘ அதுபோலவே பறையர் இருக்கிறார்களாமே ‘ அவர்களெல்லாம் எப்படி இருப்பார்கள் ? ‘ என்று அதிசயமாகக் கேட்டான். (அதாவது மகாராஜா, பறையர் இருக்கிறார்களாமே ‘ என்று) நான் சொன்னேன் — ‘அதோடு மட்டுமல்ல— பார்ப்பானும் அதாவது பிராமணன் என்பவனும் எங்கள் நாட்டில் இருக்கிறான் ‘ என்றேன்.

அவனைப் பற்றியும் சொன்னேன்; அதற்கு அவன் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டான். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், அந்த நாட்டிலே இதைப் பற்றித் தெரியாது. அப்படி இருக்கும்போது அதுதான் ‘வேதவாக்கு ‘ ‘ஞான சூத்திரம் ‘ என்று சொன்னால், என்ன அர்த்தம் ?

(பொன்மலையில், 10-9-1952ல் சொற்பொழிவு– ‘விடுதலை ‘ 20-9-1952)

5. நமது நாடு இன்றைக்கும் சாதி அமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே, நமது நாடு இன்றும் மத அமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அது போலவே, நமது நாடு இன்றும் பொருளாதார பேத அமைப்பிலேயே இருந்து வருகிறது.

இவற்றையெல்லாம் விட மோசம், மிக மிகக் கீழ்த் தரமான மூட நம்பிக்கை அமைப்பிலேயே நம் நாடு இருந்து வருகிறது.

இந்த நிலையில், மக்களுக்குப் போதிய கல்வி இல்லாத அமைப்பில், கல்வியிலும் பேதநிலை உள்ள கல்வி அமைப்பில் நமது நாடு இருந்து வருகிறது.

இவ்வளவு பேத நிலை அமைப்பு உள்ள நாட்டில் — ஜனநாயகம் என்றால் இதன் பொருள் என்ன ? நாட்டில் ஒரு பெரும் சூதாட்டம் நடந்து வருகிறது. சூதில் வலுத்தவன் ஆட்சியாக நடந்து வருகிறது என்று தானே கொள்ளவேண்டும் ?

( ‘விடுதலை ‘ — தலையங்கம் — 11-3-1967)

6. இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தில் வேறு எங்கும் இல்லாததும், மனிதத் தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் —- அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத்தன்மையும் நாகரீகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப் போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும்– முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம். அவைகளில் முதலாவதது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பல கோடி ஜன சங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புலுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே— அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்கவேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் — எந்தக் காரணத்தை முன்னிட்டும் — இந்தியாவில் இனி அரை நிமிடம் கூட இருக்க விடக் கூடாதவைகளாகும்.

[ ‘பகுத்தறிவு ‘ — கட்டுரை — 1938, இதழ் 10, மலர் 3]


நினைவு கொள்ளப்படும் பெரியார் :

பொதுவாக மக்கள் பரப்பில் பெரியார் குறித்த உடனடி நினைவுகளாக உள்ளவை எவையென்று பார்த்தால் நாத்திகமும், பார்ப்பன, புராண எதிர்ப்பாகவுமே இருக்கின்றன. இவற்றை இங்கு சிறிதளவு பரிசீலிக்க வேண்டும்.

1. நாத்திகம்: தீவிரமாக நாத்திகப்பிரச்சாரம் மேற்கொண்டதில் உலக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெரியாருக்குண்டு என்று கூறப்படுவது உண்மையே. ஆனால் அவருடைய நாத்திகம், சாதி ஒழிப்பை முன்னிட்டே வலியுறுத்தப்பட்டது என்பதை பலமுறை கூறியுள்ளார். இதன் பொருள் அவர் நாத்திகம் போலித்தனமானதென்பதில்லை. அவர் வாழ்வின் இறுதி நாட்களில் தீவிர நாத்தீகப் பிரச்சாரத்துடன் ‘அனைத்துச் சாதியினர் அர்ச்சகராதல் ‘ ‘கர்ப்பக்கிரகப் பிரவேசம் ‘ போன்றவற்றிற்கான போராட்டத்தை நடத்தியதை சிந்திக்க வேண்டும். நாத்திகத்தை மட்டும் வலியுறுத்துவதானால் ஆலயம் குறித்த போராட்டமெதற்கு ? சாதீயக் கருத்தியலை, சுரண்டலை கடவுள் நம்பிக்கை காத்து நிற்பதாலேயே அவர் தீவிர நாத்தீகப் பிரச்சாரம் மேற்கொண்டதை கட்டுரையின் மேற்கோள். 1–ல் காணலாம். இதுபோன்று பல்வேறு சமயங்களில் அவர் தெளிவுபடுத்தியிருப்பதை அவர் உச்சரிப்புகளை படிப்பவர் கவனிக்கலாம். இங்கு பிரச்சினை என்னவெனில் ஒரு சாதி ஒழிப்புப் போராளியை வெறும் நாத்திகப் பிரசாரகராகச் சுருக்கிப் பார்க்கும் வரலாற்றுத் தவறை செய்யக்கூடாது என்பதுதான் மற்றபடி நவீன மேற்கத்திய சிந்தனைகளையொத்த சிந்தனைப் போக்குகள் அவரிடமிருந்ததற்கான தடயங்கள் அவர் உச்சரிப்புகளிலுள்ளன.

உதாரணமாக அவரது இறுதிச் சொற்பொழிவில் ஆத்திகத்துடனான ஒரு உரையாடல் தன்மையினை அங்கீகரித்துப் பேசுகின்ற பாங்கினை கவனிப்பவர்கள் அவர் முரட்டுத்தனமாகவும் நாத்திகம் பேசியதாகக் கூறுவது பிழையானது என்பதை உணரலாம். [மேற்கோள் 7]


7. கடவுள் சங்கதியை எடுத்தால் ஒருவனுக்கு ஒருவன் நம்பிக்கைக்காரனும், நம்பிக்கை இல்லாதவனும்—- அவனை இவன் முட்டாள் என்று தான் சொல்லியாகணும்; இவனை அவன் முட்டாள் என்றுதான் சொல்லித்தானாகணும்; ஆனாலும் நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாய் வைத்துக் கடவுள் சங்கதியை பேசுகிறதினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்; மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள் கொஞ்சம் கடுமையாய்த்தான் பேசுவார்கள் — நம்மைவிட மோசமாக.

உதாரணமாகச் சொல்லுவேன்; நாலாயிரப்பிரபந்தம் பாடின ஆழ்வார்கள் — தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள்— இந்தப் பயலகள் சொன்னதைவிட நாங்கள் அதிகமாய்ச் சொல்லுகிறதில்லை. அதை மனதிலே வைத்துக் கொள்ளுங்கள். நாம், இவனைத்தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பயல்கள் சொன்னாற்போல, அவர்கள் பெண்டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை. நீங்கள் நினைக்கணும் ‘ என்னடா, இப்படிச் சொல்லுகிறானே என்று சிலபேருக்குக் கோபம் இருக்கும்.

ஆனால் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் பாடியிருக்கிறவன், ‘கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் கொல்ல வேணும்; அதுதான் கடவுள் பக்தனுக்கு அடையாளம் ‘ அப்படியென்று பாடியிருக்கிறான். தேவாரம் பாடியவன், ‘கடவுள் இல்லை ‘ என்கிறவன் பெண்டாட்டிகிட்டேயெல்லாம் நான் படுக்கணும்; கடவுளே, எனக்கு அந்த வசதி பண்ணிக் கொடு ‘ ‘ என்று கேட்டு இருக்கிறான். யார் என்று கேட்பீர்கள்; பேர் கூடச் சொல்லுவேன். சம்பந்தர் என்கிற ஒரு பக்தன்–பக்தனாம் அந்த அயோக்கியப் பயல் ? அவன் சொல்லியிருக்கிறான் ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிகிட்டேயெல்லாம் நான் படுக்கணும் ‘ என்று கடவுளைக் கேட்கிறான்; இசைத்துவை ‘ என்று (கேட்கிறான்).

நாலாயிரப் பிரபந்தத்திலே ஓர் ஆழ்வார்—- தொண்டரடிப்பொடி என்கிறவன்— ‘கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு, வெட்டு ‘ ‘ என்கிறான். இது பாட்டிலே நடந்தது. காரியத்திலே எவ்வளவு நடந்திருக்கிறது தெரியுமா ? ‘

[சென்னை தியாகராய நகர்— 19-12-1973]

ஆத்திக—நாத்திகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது ஒரு பயனற்ற விஷயம் என்றே தெரிகிறது. ஏனெனில், ஆத்திகமும்—-நாத்திகமும் 100க்கு 90 பேர்களின் அபிப்ராயங்கள் பழக்க வழக்கங்களால், பிறர் சொல்லிக் கொடுப்பதால், சேர்க்கையால் ஏற்படுவதையே ஒழிய, ஒரு இயற்கை உணர்ச்சி அல்ல. அன்றியும் பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவைகளைப்போல இயற்கையால் ஏற்படும் எண்ணமல்ல. அதைப்பற்றி மனிதன் கவலைப்பட வேண்டியதில்லை; அது இன்று ஒரு ஆராய்ச்சி விஷயமாகி நாகரீக விஷயமாகவும் பேசப்பட்டு வருகிறது. மனிதனுக்குக் கட்டும், காவலும் சட்டமும், போலீசுமாகத்தான் இருக்கின்றனவே ஒழிய கடவுளோ, நரகமோ, சாஸ்திரமோ, ஒழுக்கமோ கட்டிக் காப்பாற்றிவிடவில்லை; அனுபவத்திலும் எவனும் அவற்றின் மீது எந்த பொறுப்பையும் சுமத்துவதுமில்லை.

ஆனால், ஆத்திக—நாத்திகம் என்பது பயனற்ற பிரச்சினையாகும். மற்றும், அது அவனுடைய சொந்தபுத்தி, யோசனையைப் பொருத்ததாகும்.

ஆதலால் நமது வாழ்வில் ஏற்பட வேண்டிய இன்ப–துன்பங்களுக்கும், முற்போக்குக்கும். மாறுதலுக்கும் ஆத்திக—நாத்திகத்தைக் கொண்டுவந்து குறுக்கே போட்டுக்க்கொண்டு யாரும் கஷ்டப்படவேண்டியதில்லை.

நம்மைப் பொறுத்தவரை எந்த அளவில் ஆத்திகத்தில் பிரவேசிக்கிறோம் என்று நினைப்பீர்களானால். வாழ்க்கையின் நலன்களை கடவுளின் மீது பொறுப்பேற்றுவதும், கடவுளுக்காகச் செல்வங்களை, மக்களின் வாழ்க்கைக்குரிய பொருள்களை பாழாக்குவதையும் பொறுத்த அளவில்தான் பிரவேசிக்கின்றோம்.

மற்றபடி, எவன் எத்தனை கடவுளை எந்த விதமாக நினைத்துக் கொண்டாலும், வணங்கினாலும், அவற்றோடு பேசினாலும், அதுவாகவே ஆகிவிட்டாலும் நமக்கு அக்கறை இல்லை.

உலகத்தைப் பொது என்றும், உலகப்பொருள்கள் போக போக்கியங்கள் யாவருக்கும் சமம் என்றும் மனிதன் எண்ண வேண்டும். இதற்குக் கடவுள் குறுக்கிடாமல் இருந்தால் கடவுளைப் பற்றிய வேலை நமக்கு இல்லை; அதைப் பற்றிய கவலையும் நமக்கில்லை. ஆகையால், அதை ஒரு பெரிய பிரச்சனையாக வைத்துக் கொண்டு எவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை.

[புதுக்கோட்டையில், 7-10-1934ல் சொற்பொழிவு– ‘பகுத்தறிவு ‘ 14-10-1934]

9. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்கவழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும்–மனிதனுக்குக் கடவுள், மத உணர்ச்சிகளை உண்டாக்கி விடுகின்றன. அவை எப்படி இருந்தபோதிலும் எங்களுக்கு கவலை இல்லை. அந்த ஆராய்ச்சியில் நாங்கள் சிறிதும் காலத்தையோ, புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்திற்குத் தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது, மனித சுதந்திர சுக வாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாகவுள்ள புரோகிதக்கூட்டத்தார், மதத்தின் பேரால்—- கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள், எங்கள் தொண்டிற்கு, கொள்கைகளுக்குச் சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்கச் சக்தியற்ற கோழைகள் கடவுளையும், மதத்தையும் பற்றிக் குழப்பமாகப் பேசி, அவைகளை குறுக்கே கொண்டுவந்து போட்டு விடுகிறார்கள்.

மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு—தாழ்வு, சாதிபேதம் ஒழிந்து, ஆண்டான்—அடிமைத் தன்மை மாறி ஆணும் பெண்ணும் சகலதுறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் சாதிபேதமும் ஒழிந்தால் தமது உயர்வும் தம் பிழைப்பும் கெடுமென்று எண்ணிப் பாடுபடாது வாழ்ந்துவரும் பார்ப்பனர்கள் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைக் கொண்டு வந்து குறுக்கே போட்டு எங்களைத் தடைப்படுத்தும் போது, அவை எவையாயினும் மனிதசமூக ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திர வாழ்விற்கும் கேடு செய்வதாயிருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிறோம்.

[ஆய்வுக்கவுண்டன் பட்டியில், 23-1-1938ல் சொற்பொழிவு– ‘குடி அரசு ‘ 30-1-38]


Series Navigation