ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 3

This entry is part of 18 in the series 20010211_Issue

தேஜஸ்வினி நிரஞ்சனா


கன்னடம், தமிழ் கலந்த கலவை மொழியில் இவர் சொல்கிறார்: ‘ராஜண்ணா உமக்கும் அண்ணா, எமக்கும் அண்ணா. அவர் மேலே எனக்கு ரொம்ப பக்தி இருக்குது ‘ இன்னொரு ‘ நல்ல ‘ தமிழர் பூனைக்கண் ராஜேந்திரா . இவர் பெங்களூர் மாஃபியாவின் நபர். அக்னி (ஆகஸ்ட் 25-2000) -ல் இவர் பேட்டி வருகிறது. மொழி தொடர்பான வன்முறையைக் கண்டிக்கிறார். ‘அந்த கிரிமினலுடன் எங்களைச் சேர்க்க வேண்டாம் ‘ என்கிறார். அந்த இதழிலேயே தலையங்கத்தில் ,தச்சு வேலை சண்முகம், காண்டிராக்டர் அண்ணாமலை இவர்களை விவாதிக்கிறது. ‘ அவர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கு இங்கே வாழும் உரிமை இருக்கிறது; அவர்கள் கன்னடியர்கள் ஆகிற ஒரு சூழ் நிலையை நாம் உருவாக்க வேண்டும். கன்னட நாட்டில் கன்னடம் கற்றுக்கொள்ளாதவர்கள் , கன்னடம் பயன் படுத்தாதவர்கள் யாரும் இங்கே இருக்க முடியாத சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டும். ‘ இங்கு , அரசாங்கம் கன்னடியர்கள் பலவீனமாகிவிட்ட ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டதாய்க் குறிப்பு. தமிழ் இரண்டாவது மொழியாய் இருக்க வேண்டும் என்ற வீரப்பனின் கோரிக்கையை ஒரு பேழை கிண்டல் செய்கிறது. ‘கன்னடம் முதல் மொழியாய்க் கற்பிக்கவே இவ்வளெவு போராட்டம், இதில், தமிழ் இன்னொரு அரசு மொழியாக வேண்டுமாம் ‘ . சிக்கல் முற்ற முற்ற , அரசாங்கத்தின் கையாலாகாத் தனம் பேழைகளில் வலுவாய் வெளிப்படுகிறது. ‘ஹை பெங்களூர் ‘ தலையங்கம் (செப் 15 2000) சொல்கிறது. ‘ தமிழர்கள் கன்னடியர்களை எள்ளி நகையாடும்படித் தான் பார்க்கிறார்கள். ராஜ்குமார் காட்டில் துயரமுற்ற 40 நாட்களை மறந்து விடலாம் ஆனால், தமிழர்கள் கன்னிடியர்களைத் தாழ்த்தியதை கன்னடியர் மறக்கவே மாட்டார்கள். கன்னடியர் ஒவ்வொருவரும் வீட்டில் உட்கார்ந்து வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நீயோ ( எஸ் எம் கிருஷ்ணா – முதல் அமைச்சர் ) எங்களை விடவும் கையாலாகாத் தனமாய் உட்கார்ந்திருக்கிறாய். இப்படி நடக்கலாகாது. வரலாறு நம்மில் எவரையும் மன்னிக்கவே மன்னிக்காது. ‘ வெளியான முதல் பேழையில் , ‘மங்கன கையள்ளி மாணிக்ய ‘ ( குரங்கு கையில் மாணிக்கம்) ‘ஹை பெங்களூர் ‘ தலையங்கங்கள் பலவற்றைத் திரும்பவும் சொல்கிறது. கர்நாடகத்தில் கன்னடியர்களைத் தேடவேண்டியுள்ளது, தமிழர்களின் மொழி குறித்த அசட்டுப் பெருமை, கர்நாடகத்தின் மறு பெயர் பொறுமை, அமைதி, சகவாழ்வு, இப்படியே போனால் கர்நாடகத்திலிருந்து கன்னடியர்கள் வெளியேற வேண்டியது தான் – என்றெல்லாம் பேசுகிறது. ராஜ்குமார் அண்ணா அவர்கள் கடத்தப் பட்டவுடனேயே கர்நாடகம் எரிந்திருக்க வேண்டும். கலவரம் செய்வதற்குப் பதில் நாம் யாகம் செய்கிறோம். வன்முறையைக் கைக்கொள்ளாமல் நாம் பிரார்த்தனையில் இறங்கினோம்; கை முஷ்டியை உயர்த்தாமல், நாம் கைகளைக் குவித்து வணங்கினோம். உருட்டி விடுவதற்குப் பதில் நாம் உருளுசேவை( உருளும் பிரார்த்தனை – அங்கப் பிரதட்சணம் ) யில் இறங்கினோம்; புரட்சித்திலகம் இடாமல் நாம் அமைதித் திலகம் இட்டோம்.;

கன்னட ஆண்மை

‘அக்னி ‘ யில் ஆகஸ்ட் 18,2000 தேதியிட்ட இதழில் மக்களை அறைகூவி அழைத்துக் காட்டிற்குப் போய் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொலைபேசியில் பேசினார்கள் என்று குறிப்பிட்ட ஸ்ரீதர் (ஆசிரியர்) , தீவிரம் வேண்டாம் என்று சொன்னவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். ‘ அஹிம்சை கோழைத்தனம் ஆகிவிடக் கூடாது ‘ ஒரு மாதம் கழித்து மீண்டும் அக்னியில் : ‘ பயத்தை விடு. ஆட்டுக் குட்டி ஆகிவிடாதே ‘ ( செப் 22). கன்னடியர்களையும் , தமிழர்களையும் ஒப்பிட்டுக் காண்பிக்கிற வகையில் ஒரு புதிய கன்னட அடையாளம் எழுப்பப் படுகிறது. ஆகஸ்ட் 25-ல் அக்னியில் ஸ்ரீதர் : ‘ புலியல்ல – வெறும் அலி ‘ என்று கூறும் போது இந்த எதிர்க் குரல் அடையாளம் பெறுகிறது. ‘யார் ஆண்மையுள்ளவன் ? ‘ என்று கேட்கிறார் இவர். வீரப்பனின் இரண்டு படங்கள் – மீசையுடன் ஒன்று , ‘இவனிடம் ஆணின் குணங்கள் உள்ளனவா ? திறந்த மனதுடன் இதை ஆய்வு செய்வொம். ஆண்மை இருக்கிறதா ? குற்றவாளிகளுடம் எனக்குள்ள பரிச்சயத்தை வைத்துப் பார்க்கிறேன். ஆண்மையுள்ளவன் தன் செயல்களைத் தம்பட்டம் அடிக்க மாட்டான். ஒரு நாளில் ஐம்பது மைல் நடப்பதும், காட்டினைப் பற்றி நன்றாய் அறிந்து வைத்து இருப்பதும் ஆண்மையின் அடையாளமா ? இல்லை ‘ ஸ்ரீதர் சொல்கிறார் : ‘ பயிற்சி இருந்தால் எவருமே ஒரு நாளைக்கு ஐம்பது மைல்கள் நடக்கலாம். ஆதிவாசி அனைவருக்கும் காடு பழகிப் போன விஷயம். அதில் என்ன சிறப்பு இருக்கிறது ? ஹிட்லர் ஓர் அலி. கொஞ்சமாவது ஆண்மை அவனுக்கு இருந்திருந்தால் அவன் இவ்வளெள வன்முறையக் கட்டவிழ்த்து விட்டிருக்க மாட்டான். வீரப்பனை என்ன சொல்லி அழைப்பது ? அலியா ? ஆணும் பெண்ணுமல்லாத பிறவியா ? ஒரே குரலில் நம் பையன்கள் சொல்கிறார்கள் – அலி தான் . ‘ இந்தக் கட்டுரையில் ஓர் இடத்தில் கூட ராஜ் குமார் குறிப்பிடப் படவில்லை.ஆனால் அவர் நிச்சயமாய்ப் பின்னணியில் , வீரப்பனின் ஆண்மையை விவாதிக்கும் போது, ஆண்மையின் அடையாளமாய்க் காண்கிறார். ஆண்மை பற்றிய விவாதத்தில் , வீரப்பனின் மீசையும் ஒரு விவாதப் பொருளாகிறது . ‘மீசையில் நெருப்பு வைப்போம், நீ உண்மையான ஆண்பிள்ளையென்றால், கன்னடியர்களை நேருக்கு நேர் பார்க்க வா, கன்னடியர்கள் ஆண்கள் ‘ (ராஜண்ணா திரும்பி வாருங்கள்- பேழையிலிருந்து ) வில்லனின் பிம்பத்தைச் சரிவுறச்செய்ய பல பேழைகளில் இது சொல்லப் படுகிறது ‘ பழங்காலத்தின் பெரும் வீரர்கள் கூட இப்படிப் பெரிய மீசை வைத்துக் கொள்ளவில்லை. இவனுக்கு என்ன தைரியம் ? அவன் மீசையில் வைக்கோல், புழு , பூச்சி, பேன் பிடித்திருக்க வேண்டும் ‘.

இந்த மீசை ‘காடினள்ளி கன்னட ரத்னா ‘ என்ற பேழையில் முக்கிய இடம் பெறுகிறது. ராஜ்குமாருக்கும், வீரப்பனுக்கும் இடையில் நடக்கும் கற்பனை உரையாடலில் ஒரு விஷய்மாய் இது வெளிப்படுகிறது. இதன் உறையில் வழுக்கை விழுந்த , முகம் மழித்த உண்மையான ராஜ்குமார் படம் ஒரு புறமும், இன்ன்னொரு புறம் மீசையுடன் வீரப்பனின் கேலிச் சித்திரமும் இடம் பெறுகிறது. காட்டில் ராஜ் குமாரும் வீரப்பனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜ்குமார் வீரப்பனைப் பார்த்து சரண் அடையும் படி சொல்கிறார். வீரப்பன் சொல்கிறான் : ‘ நான் சரண் அடைந்தால் என் மீசைக்கே கேவலம். ‘ ராஜ் குமார் கேட்கிறார் ‘ உனக்கென்ன, ரொம்ப அருமையான மீசை இருப்பதாய் நினைப்பா ? என் அப்பா புட்டஸ்வாமிய்யா பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா ? என் அப்பாவிற்கு உன்னை விட பெரிய மீசை இருந்ததாக்கும். என் அப்பா மீசையை முறுக்கி நடித்து ரசிகர்களின் கைதட்டல் பெற்றார் (அவர் டிராமா கம்பெனியில் வேலை பார்த்தார்.) நீ ? நீ கொலையும், கொள்ளையும் செய்து கைதட்டல் பெறப் பார்க்கிறாய். உன் மீசை பைசாவிற்குப் பிரயோஜனமில்லை. உன் மீசையைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. மீசையினால் மட்டும் மக்களை பயமுறுத்த முடியும் என்றால் எல்லாரும் மீசை வைத்துக் கொள்வார்களே. மக்களை அன்பு செலுத்தித் தான் வசப் படுத்த முடியும். ‘ கனிவும், பெருமிதமும் நிரம்பிய ராஜ் குமாரின் சித்திரம், கன்னடர்களின் ஆண்மையின் அடையாளம் ஆகிறது. இதே ராஜ்குமார் ரசிகர்களை வன்முறையிலிருந்து தடுத்து ஆண்மையின் இலக்கணத்தை மாற்றி எழுதுகிறார். பழைய இளம் ராஜ் குமாரின் சி ஐ டி, காதலர், வரலாற்று நாயகன் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இன்றைய வயதான ராஜ் குமார் முன்னுக்குத் தள்ளப் படுவாதாய்த் தோன்றுகிறது. பேழைகளிலும், கட்டுரைகளிலும் ராஜ் குமார் வன்முறையைக் கண்டனம் செய்த கோரிக்கைகள் பற்றிப் பல முறை குறிப்புக் காண்கிறது. இதைக் குறிப்பிடும் போது, பேழையின் கதாபாத்திரங்கள் வன்முறையாளர்களாய்த் தாம் மாறாததற்கு இதனையே காரணாமாய்ச் சுட்டுகிறார்கள்.

(தொடரும்)

Series Navigation