ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 2

This entry is part of 18 in the series 20010204_Issue

தேஜஸ்வினி நிரஞ்சனா


பேழைகளில் உள்ள மொழி மற்றும் படிமங்கள், பத்திரிகைக் கட்டுரைகள் , தலையங்கங்கள் இவற்றினது போன்றே உள்ளன. ஆனால் தொனியில் மாறுபாடு உள்ளது : பத்திரிகைக் கட்டுரைகளில் உள்ள கம்பீர தொனியும், கிண்டலும் பேழைகளில் நகைச்சுவையும் நட்சத்திரமான ராஜ்குமார் மீது அன்பு வெளிப்பாடுமாய் மாற்றம் பெறுகின்றன. உதவாக்கரை அரசியல் வாதிகள் தான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று சொல்லி, அவர்களைச் செயல் படத் தூண்டுகின்றன கட்டுரைகள். பேழைகளிலும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளையும், கர்னாடக அரசியல் வாதிகளையும் குற்றம் சாட்டுகிறார்கள். ‘ இந்த அரசியல் வாதிகளை ஏன் வீரப்பன் கடத்திக் கொண்டு போக வில்லை ? விதான செளதாவில் உள்ள வெள்ளையானைகள் உலக வங்கிப் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் – இவர்களை ஏன் கடத்த வில்லை ? ‘ (ஆரண்யதள்ளி அண்ணவரு- காட்டில் அண்ணா) , பதில் என்னவென்றால், மக்கள் இந்த அரசியல் வாதிகள் பற்றித் துளிக்கூடக் கவலைப் படவில்லை என்பதாம். அதனால் வீரப்பன் குறிக்கோள் நிறைவேறாது என்பதாம். ஒரு பேழை கதர், காக்கி அணிபவர்களை விமர்சிக்கிறது. அவர்கள் சேலை உடுத்தி, வளையல்கள் போட்டுக்கொண்டு கரண்டி பிடிக்கப் போகலாம் என்று சொல்கிறது. ( காட்டில் நமது அண்ணா). கன்னடியரின் குணங்களும், மன நிலையும் , இந்தப் பேழைகளில் எப்படி வெளிப்படுகிறது என்பது , இழப்பையும், சோகத்தையும் இதில் பிணைத்துள்ள முறையில் வெளீயாகிறது.

இந்தப் பேழைகளில் நடமாடும் கதா பாத்திரங்கள் – கல்லண்ணா, ஏரண்ணா, சாங்கியா, பால்யா, பஷீர் , காத்தூனப்பா – இவர்கள் தம் அபிமான நாயகனின் நிலைக்காக வருத்தம் தெரிவிக்கும் போதே, மிகுந்த நகைச்சுவையும் வெளிப்படுகிறது. வீரப்பனை நோக்கியோ, அல்லது கதாபாத்திரங்களை நோக்கியோ இந்த நகைச்சுவை வீசப் படுகிறது. கன்னட பேழைகளில் மாண்டியா பகுதியில் பேசப்படும் மொழி பாணி கையாளப் படுகிறது. பழைய மைசூர் ராஜ்யமாகட்டும், இப்போதைய தென் கர்நாடகம் ஆகட்டும்- மாண்டியா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பெங்களூர் – மைசூருக்கிடையில் மாண்டியா பகுதி மிகுந்த செழிப்பான பூமி. 1930-களில் மைசூர் திவான் எம் விஸ்வேஸ்வரய்யா கட்டிய வாய்க்கால்கள் இதற்குப் பயன் பட்டன. மாண்டியா பகுதியின் வொக்காலிக இனத்தினர் அரசியல் பொருளாதார வலிமை பெற்றவர்கள். பணக்கார கெளடர் இன விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சுஞ்சுனாகிரி மடத்தை ஸ்தாபிக்க உதவினார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சியில் மாண்டியா நபர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும். இப்போதைய முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா-வும் மாண்டியாவைச் சேர்ந்தவரே. இந்தப் பகுதியிலிருந்து முதலமைச்சர் பதவி வகித்த முதல் நபரும் இவரே. கன்னடப் படங்களில் பொதுவாக தென் கர்னாடகத்தின் மத்திய தர வர்க்கப் பேச்சு மொழி கையாளப் படுகிறது. கிட்டத் தட்ட இதுவே வானொலி, தொலைக்காட்சிக்கும் பயன் படுகிறது. தொழிலாளர்களின் பேச்சு மொழி – ஏறத் தாழ மாண்டியா கிராமவாசிகளின் மொழி போன்றது – நகைச்சுவைப் பகுதிகளுக்குப் பயன் படுகிறது.

ராஜ்குமாரை உயர்த்திப் பேசுதலும், வீரப்பனைத் தாழ்த்துவதுமே இந்தப் பேழைகளின் நோக்கம். இந்தப் பேழிகளில் வெளிப்படும் ராஜ்குமார பற்றிய சித்திரம், கன்னட ரசிகர்களைப் பற்றியும் சித்தரிப்புப் பெற உதவுகிறது.ராஜ்குமார புகழ் பாடப் படுகிறது — டாக்டர் ராஜ் அவர்கள் வாழ்க என்றோ , வெறுமே ராஜண்ணா என்று ஜெபித்த படியோ – அவரை கன்னடத காண்டாரவா, கன்னடத குலதிலகா ( கன்னடரி அணிகலன், கன்னடர் திலகம்) , கெண்டக்கி கர்னல் (அமெரிக்க விருது ஒன்றின் குறிப்பீடு) தாதா சாகேப் ஃபால்கே விஜேதா( தாதா சாகேப் ஃபால்கே விருது வென்றவர்) படவர பந்து( ஏழைகளின் தோழன்) , பத்ம பூஷண், கன்னடர்களின் தெய்வம், பஹாதூர் கண்டு (வீரத் திருமகன் – ராஜ்குமார் நடித்த படத்தின் தலைப்பு – அடங்காப் பிடாரியை அடக்குதல் (ஷேக்ஸ்பியரின் ‘The Taming of the Shrew ‘ நாடகத்தைத் தழுஇய படம்) என்றெல்லாம் பல படியாக. பேழைகள் வீரப்பனைன் எல்லா நிபந்தனைகளையும் குறிப்பிட்ட போதும், முக்கியமாய் இரண்டு நிபந்தனைகளை முன்னிறுத்துகிறது. காவேரி நீர்ப் பிரசினை, மொழிப் பிரசினை. ஆனால், அ இ அ தி மு க வின் முக்கியஸ்தர் வெளியிட்ட பேழையிலும் சரி, இந்தி, உருது மொழு பேழைகளிலும் சரி, மொழிப் பிரசினை குறிப்பிடப் படவில்லை.இந்தப் பேழைகளில் சகவாழ்வு வலியுறுத்தப் படுகிறது . ‘ஹமாரா ஸ்டேட் அச்சா ரஹ்னா ‘ என்று பஷிர் ‘ஆஜ் கா வீரப்பன் ‘ என்ற பேழையில் பேசுகிறான். காத்தூனப்பா நாடகக் கம்பனியின் பேழை இது. தென் மானில உர்து மொழியில் உள்ளது இது. கன்னட, தெலுங்கு பகுதிகள் மட்டும் தீரேந்திர கோபால் என்ற நகைச்சுவை நடிகரையும், என் டி ராமராவ், தெலுங்கு நகைச்சுவை நடிகர் நூதன் பிரசாத் இவர்களை மிமிக்ரி செய்கிறது. நதி நீர்ப் பிரசினையில் தான் இந்தப் பேச்சு குவிகிறது. வீரப்பனின் ‘அநியாயமான ‘ கோரிக்கையாய் இது கூறப் படுகிறது. ‘காட்டுல எதுக்குப்பா அவனுக்குத் தண்ணி ? ‘ இங்கு ஒரு சிரிப்புக் கதையும் சொல்லப் படுகிறது. ஒரு கவுடர் தமிழ் நாடு வழியாகக் காரில் போகிறார். அப்போது ஒரு விபத்து நடக்கிறது. அவருடைய காரின் பின் சக்கரம், குழியில் இறங்கிக் கொள்கிறது. என்ன செய்வதென்று அவர் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐந்து பேர் வந்து கன்னடத்தில் அவரிடம் பேசி உதவி வேண்டுமா என்று கேட்கிறார்கள். கவுடர் வியப்புடன் ‘உங்களூக்குக் கன்னடம் எப்படித் தெரியும் ? ‘ என்று கேட்கிறார். நாங்கள் மாண்டியா பகுதியில் விவசாய வேலை பார்த்தோம் என்று கூறுகிறார்கள். பிறகு காரைப் பள்ளத்திலிருந்து தூக்கிவிட்டு, கவுடரை வழியனுப்பி வைக்கிறார்கள். நன்றியுடன் கவுடர் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஐந்நூறு நோட்டுகளைத் தருகிறார். உதவி செய்தவர்கள் பணம் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள். கவுடர் வற்புறுத்தவும் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். போகுமுன்பு, கர்நாடகம் தான் தண்ணீரைத் திறந்து விட்டதே , இந்தப் பகுதியில் தண்ணீர் நிறைய கிடைக்கிறதா என்று கேட்கிறார். ஆமாம் , நிறைய தண்ணீர் கிடைக்கிறது என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். அப்படியானால் பயிர்ப் பாசனம் நன்றாய் இருக்குமே என்கிறார். நாங்கள் விவசாயம் எல்லாம் செய்வதில்லை என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். இந்தப் பள்ளத்தை தோண்டிவிட்டு இங்கே இருப்போம். ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு கார்கள் மாட்டிக் கொள்ளும் எடுத்துவிட்டுப் பணம் சம்பாதிக்கிறோம் என்கிறார்கள். கவுடர் ‘ தமிழர்கள் தான் எவ்வளவு புத்திசாலிகள் ‘ என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இங்கு வீரப்பனால் தவறு இழைக்கப் படுவது, மாண்டியா பகுதியில் உள்ள விவச்சயிக்குத் தான் என்று சுட்டிக் காட்டப் படுகிறது. மாண்டியாவிற்கு நிய்யயமாய்ச் சேர வேண்டிய காவிரி தமிழ் நாட்டிற்குத் திசை திருப்பப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. ‘காடுகள்ள கட்ட முத்து ‘ (காட்டுத் திருடன் களவாடிய முத்து) என்ற பேழையில் ஒரு கதா பாத்திரம் சொல்கிறது : அவர்களுக்கு மூன்று போகம், நமக்கு இரண்டு தான். இன்னொரு பேழையில் ‘நமக்குப் பின்னால் கழுவத் தண்ணீர் இல்லை, அவர்களுக்கு டி.எம்.சி வேண்டுமாம் ‘ என்று வசனம் வருகிறது. ‘நரஹந்தகான பாலெயள்ளி கருணாதீன ஹிருதயா ‘ ( நாட்டின் இதயமே கொலைகாரன் பிடியில்) என்ற பேழைக்கு ‘ரசிகர்களின் இதயத்தின் ஆழத்திலிருந்து ‘ என்று துணைத் தலைப்புத் தரப்பட்டுள்ளது. இதை பெங்களூர் பழனி எழுதி, வட கர்நாடக பாணியில், கே தேவராஜ் கோகக் மொழியாக்கம் செய்துள்ளார்.

தமிழர்களும் ‘நாமும் ‘

கன்னடியர் யார் என்றா கேள்விக்கு அவர் யாராக இல்லை என்பதன் மூலமாய்ப் பதில் சொல்லப் படுகிறது. ஆகஸ்ட் 25, 2000 தேதியிட்ட ‘ஹை பெங்களூர் ‘ தலையங்கத்தில் தமிழர்களுக்கு அவர்கள் மொழியின் மேல் அசட்டுப் பெருமை (துரபிமானா) இருப்பதாய்ச் சொல்கிறது. இந்த அசட்டுப் பெருமையும், ‘நாம் ‘ ஒரு பெருமிதமும் இல்லாததால் மிகுந்த துயரத்துக்குள்ளாகிறோம் என்று சொல்கிறது. நம்மைப் போலல்லாமல், தமிழர்கள் தேசவிரோதிகள் – எல் டி டி ஈ, ஐ எஸ் ஐ – போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சொல்கிறது. ‘நாமோ ‘ மிகுந்த மரியாதைக்குரியவர்கள்.

இந்த விதமாய் வீரப்பன் தமிழன் என்ற முறையில் அடையாளம் காணப் படுகிறான். கொள்ளைக் காரனாக அல்ல. இந்த அடையாளப் படுத்துதலுக்கு வீரப்பனின் புதிய கூட்டாளிகள் காரணம் என்பதும், இதனால், தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் பாதிப்புகளும் வேறு. நான் இங்கு முக்கியமாய் அலசவிருப்பது ‘கன்னடியர் அடையாளம் ‘ என்ற கோட்பாட்டினை இது எப்படிப் பாதிக்கிறட்து என்பது தான். ‘ வேற்று மொழி பேசும் வேறு எவருமே இந்த அளவு கன்னடியர் இதயத்தைக் கிழித்து, சுய மரியாதையைக் காயப் படுத்தவில்லை ‘ என்கிறது ஹை பெங்களூர் செப்டம்பர் 1,2000 தேதியிட்ட தலையங்கம். ஒரு வாரம் கழித்து ‘ஹை பெங்களூர் ‘ மீண்டும் கேட்கிறது : ‘ இவ்வளவு நடந்த பின்பும் நாம் பொறுமை காக்கத் தான் வேண்டுமா ? ‘ தமிழ் பயங்கரவாதம், எல் டி டி ஈ -யின் ஹெராயின் விற்பனை, வீரப்பன்-மாறன்-கருணாநிதி இவர்களிடையே ஒட்டுறவு என்றெல்லாம் பேசுகிறது. ‘அவர்களின் ‘ இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் இவற்றுடன் ‘நமது ‘ பூஜை, பஜனை, உருண்டு செய்யும் பிரார்த்தனைகள் இவற்றுடன் ஒப்பீடு செய்கிறது. கன்னடியர்கள் ஏன் இப்படி அனாதரவாய் ஆகிவிட்டனர் என்று கேட்கிறது ? நம் குழாயில் வரும் தண்ணீர் கூட அவர்கள் துப்பாக்கி முனையில் கட்டுப் படுத்தப் படும் என்கிறது.

கன்னடியரின் பொறுமையும், இந்த ஆண்மையைப் பற்றிய பொது விவாத்தில் இடம் பெறுகிறது. ‘ஹை பெங்களூர் ‘ சொல்கிறது : ‘அரசாங்கமே 200 தமிழ்ப் பள்ளிகளை நடத்துகிறது. பெங்களூரிலே 12 தமிழ் கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். ஐ ஏ எஸ் -இல் பல தமிழர்கள் இருக்கிறார்கள். போலிஸிலும் பலர் இருக்கிறார்கள். நாமும் அவர்களை நேசித்தோம், சகித்துக் கொண்டோம். ஆனால் இவ்வளவு நடந்த பின்பும், தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடந்த பின்பும் நம் கையாலாகாத பொறுமை அவசியம் தானா ? ‘ (செப் 1, 2000) .எல்லாப் பேழைகளிலும் ஒரு விஷயம் தவறாமல் வருகிறது: ‘ பெங்களூரில் தமிழர்கள் சேரி இருப்பது போல, சென்னையில் கன்னடியர் சேரி இருக்கிறதா ? ‘ அதாவது , சென்னையில் இருக்கும் கன்னடியர்கள் தமிழர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார்களாம். ஆனால், கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் பிடிவாதமாகத் தனியாய் இருக்கிறார்களாம். இது கன்னடியர்களின் நல்ல பண்பைச் சொல்வதாகவும், கன்னடியர்களின் பொறுமையால் தான் இந்த தமிழ்ப் பகுதிகள் தனியாய் உருவாகியிருப்பதாகவும் சொல்கிறது.

எல்லாத் தமிழர்களும் இப்படியல்ல. ‘கத்தேகனு கொத்து கஸ்தூரி கம்பு ? ‘ (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ?) பேழையில் ஒரு நல்ல தமிழரும் வருகிறார். ராஜ் குமார் கன்னடியர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் அண்ணன் போன்றவரே என்று இவர் பேசுகிறார்.

(தொடரும்)

Series Navigation