ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -6

This entry is part of 28 in the series 20100227_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“மதத்தின் உதவியின்றி எப்படி ஒரு நாட்டை ஆட்சி செய்வது ? செல்வீகச் சமத்துவமின்மைத் (Inequality of Fortune) தவிர்த்துச் சமூகம் நிலைத்திருக்க முடியாது ! ஆனால் செல்வீகச் சமத்துவமின்மை மதத்தின் துணையின்றி வரவேற்கப்பட மாட்டாது ! நானொரு காத்தலிக் மதத்தினனாக மாறிய பிறகுதான் வெண்டீ (Vendளூe)* இனத்தாரைச் சாமாதானப் படுத்த முடிந்தது. நான் யூதரை ஆட்சி செய்ய நேர்ந்தால் சாலமன் ஆலயத்தை மீண்டும் கட்டிப் புதுப்பிப்பேன் ! சொர்க்கம் என்பது மனித ஆத்மாக்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றடையும் ஓர் மைய அரங்கம் !”

நெப்போலியன் (வெண்டீ யுத்தம்) (1800-1815)


Fig. 1
Impatient Napoleon

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

Fig. 2
Spy Woman Helena

ஹெலினா: உங்கள் குதிரையில் என் சகோதரன் எங்கே சுற்றித் திரிகிறான் என்பது எனக்குத் தெரியாது. லெ·ப்டினென்ட் ஒருவருக்குத்தான் அவன் இருப்பிடம் தெரியும். அவர்தான் என் சகோதரனைப் பிடிக்க முடியும்.

நெப்போலியன்: நீவீர் இருவரும் இரட்டையர் அல்லவா ? எப்படி உனக்குத் தெரியாமல் இருக்கும் ? ஆனால் பெண்கள் துணிந்து பொய் சொல்வார் ! உண்மை எப்போதாவது பேசுவாயா ? என்னிடம் யாரும் பொய் பேசக் கூடாது ! நான் யார் தெரியுமா ?

ஹெலினா: (இத்தாலியர் உச்சரிப்பில்) ஓ எனக்குத் தெரியுமே ! நீங்கள் உன்னதப் புகழ் பெற்ற ஜெனரல் நெப்போலியன் பௌனபார்ட் !

நெப்பொலியன்: (சற்று கோபத்துடன்) பௌனபார்ட் இல்லை ! போனபார்ட் மேடம் போன்பார்ட் ! எங்கே ஓவென்று வாயைப் பிளந்து சரியாக உச்சரி !

ஹெலினா: (உதாசீனமாக) நாங்கள் எல்லாம் பௌனபார்ட் என்றுதான் சொல்வோம் ! எப்படி உச்சரித்தாலும் நெப்போலியன் நெப்போலியன் தானே ! யார் உங்களை வெல்ல முடியும் ?

நெப்பொலியன்: நான் பெண்களிடம் தோற்றுப் போகிறேன் ! என் பேரைச் சரிவரச் சொல்ல உன்னை வற்புறுத்த முடியவில்லை என்னால் ! என் கடிதங்களை உன் சகோதரனிடமிருந்து பெற்று வரச் சொன்னேன் ! நீ மறுக்கிறாய் ! கொண்டு வந்தால் உனக்குச் சன்மானம் கிடைக்கும் ! (கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து கொண்டு) இந்த நறுமணம் உன் மீதும் வீசுகிறது ! இந்தக் கைக்குட்டை எனக்குக் கொடுத்தவன் எனது லெ·ப்டினென்ட் ! அவனுக்கு இதைக் கொடுத்தவன் உன் வஞ்சகச் சகோதரன் ! (அதட்டலோடு) அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வருவாயா ?

ஹெலினா: (கம்பீரமாக நிமிர்ந்து) ஜெனரல் ! பெண்டிரை நீங்கள் மிரட்டுவது உண்டா ? உங்களுக்குக் கடிதங்கள் தேவையென்றால் என்னை ஏன் மிரட்டுகிறீர் ? ஏமாந்தது உங்கள் லெ·ப்டினென்ட். ஆனால் மிரட்டுவது நீங்கள் !

நெப்பொலியன்: (அழுத்தமாக) ஆமாம் ! அதுவும் பொய் பேசும் பெண்ணை அறவே பிடிக்காது !

ஹெலினா: (அசட்டையாக) எனக்குப் புரிய வில்லை நீங்கள் சொல்வது ! உண்மை எதுவென்று தெரியாத நீங்கள் பொய்யை எப்படிக் கண்டுபிடித்தீர் ?

நெப்பொலியன்: இந்தக் கைக்குட்டை நறுமணத்தில் ! உன் அழகு மேனியில் இதே நறுமணம் வீசுகிறது ! நீ இங்கு வந்திருக்கும் காரணம் எனக்குத் தெரியும். நீ ஒற்று உளவு செய்யும் ஒர் ஆஸ்டிரிய மாது ! ஊழியத்துக்கு உன்னை வைத்திருக்கும் உன் அதிகாரிகளுக்குத் தெரியம், நான் ஆறு மைல் தூரத்தில் இருக்கிறேன் என்று. என் பகைவர் எதிர்பாராத இடத்தில் நான் காணப் படுபவன் ! இப்போது நீ சிங்கத்தின் குகையில் நுழைந்திருக்கிறாய் பெண்ணே ! வரவேற்கிறேன் உன்னை ! நீ மிக்கத் தைரியசாலி ! அறிவோடு நடந்து கொள் ! விரையம் செய்ய நேர மில்லை எனக்கு ! எங்கே இருக்கும் என் கடிதங்கள் ?

ஹெலினா: (கண்களில் கண்ணீருடன் மனமுடைந்து) நானா தைரியசாலி ? உங்கள் சிறுஅதட்டலே என் கண்களைக் குலுக்கி விட்டது ! கொஞ்சமும் தெரிவில்லை உமக்கு ! இன்றைய நாள் பூராவும் நான் மனமுடைந்து பயத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். ஒவ்வொரு சந்தேக நோக்கும் பளுவோடு என் நெஞ்சைத் தாக்கிறது ! பயமுறுத்தலும், அதட்டலும் இதயத்தைப் புண்ணாக்குகிறது ! உம்மைப் போல் ஒவ்வொருவனும் நெஞ்சுறுதியோடு இருக்க முடியுமா ? நானொரு பெண் ! ஓர் ஆண் தளபதியைப் போல் பெண் ஒருத்தி தீரமாய் இருப்பாளா ? நானொரு கோழைப் பெண் ! வன்முறைக்கு அஞ்சி ஒளிபவள் நான் ! அபாயத்துக்குள் சிக்கிக் கொள்வது எனக்கு வேதனை அளிக்கும்.

நெப்போலியன்: பிறகு ஏன் அபாயத்தில் நுழைந்திருக்கிறாய் ? பிரெஞ்ச் நாட்டின் புனித நங்கை ஜோன் ஆ·ப் ஆர்க்கைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்காயா ? அந்தப் பெண்ணைப் போலொரு வாளேந்திய வீர மங்கை இதுவரைப் பிறக்க வில்லை ! அவள் ஒரு போர்த் தளபதி ! பிரெஞ்ச் ராணுவத்தை முன்னடத்திச் சென்று பிரிட்டனை விரட்டிய வீராங்கனை அவள் ! நீ ஒற்று வேலை புரியும் உளவுப் பெண் ! சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட செம்மறி ஆடு !

ஹெலினா: வேறு வழியில்லை எனக்கு ! யாரையும் நம்ப முடியவில்லை ! எனக்குத் தெரியும். இப்போது நான் தப்ப முடியாது ! எல்லாம் உம்மால்தான் ! உமக்கோ அச்சமில்லை ! நெஞ்சில் இரக்க மில்லை ! உயிர்கள் மீது பரிவில்லாத் தளபதி ! (தள்ளாடி வீழ்ந்து மண்டி இடுகிறாள்.) ஜெனரல் ஸார் ! என்னைப் போக அனுமதி செய்வீர் ! வினாக்களில் என்னைத் துளைக்காமல் விட்டுவிடுவீர் ! உங்கள் கடிதங்களை உமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறேன் ! நிச்சயமாய் ! சத்தியமாய் !

நெப்போலியன்: (மனமிரங்கி) சரி ! நான் அவற்றுக்குக் காத்திருக்கிறேன் ! போய்க் கொண்டுவா !

Fig. 3
Napoleon’s Italian War

ஹெலினா: (பெருமூச்சு விட்டு மெதுவாக எழுந்து) கனிவான மொழிக்கு என் பணிவான நன்றி ! அவற்றைக் கொண்டுவந்து சேர்க்கிறேன் ! என் அறையில்தான் உள்ளன ! நான் போகலாமா ?

நெப்போலியன்: நானும் உன் கூட வருகிறேன் !

ஹெலினா: என் பின்னால் நீங்கள் வருவதை நான் விரும்பவில்லை ஜெனரல் ! நம்புங்கள் என்னை ! தனிப்பட்ட என் அறைக்கு ஓர் ஆடவன் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் !

நெப்போலியன்: அப்படியானால் நீ இங்கே இரு ! நான் உன் அறையில் தேடி எடுத்துக் கொள்கிறேன்.

ஹெலினா: (அறுவறுப்புடன்) தேடி ஏமாந்து போவீர் ஜெனரல் ! அந்தக் கடிதங்கள் மெய்யாக என் அறையில் இல்லை !

நெப்போலியன்: என்ன சொன்னாய் ? இருக்கு என்பது உண்மையா ? இல்லை என்பது உண்மையா ? என்னைக் குழப்பி அடிக்கிறாய் பெண்ணே !

+++++++++
(Vendளூe)* : The Vendளூe (French) is a Region in west central France, on the Atlantic Ocean. The name Vendளூe is taken from the Vendளூe River which runs through the south-eastern part of the Region. The Hundred Years’ War (1337-1453) turned much of the Vendளூe into a battleground.
Since the Vendளூe held a considerable number of influential Protestants, including control by Jeanne d’Albret the region was greatly affected by the French Wars of Religion which broke out in 1562 and continued until 1598.
In 1815, when Napoleon returned from Elba for his Hundred Days, La Vendளூe refused to recognise him and stayed loyal to King Louis XVIII . General Lamarque led 10,000 men into La Vendளூe to pacify the Region.
+++++++++

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 24, 2010)

Series Navigation