அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்

This entry is part of 35 in the series 20090926_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


துறைத் தலைவர் ச்சின் – ஹ¤வா தொலைக்காட்சிபேசியில் தோன்றி தம்மை உடனே வந்து பார்க்குமாறு அழைத்தபோது ‘ஷிட்’டென்று அலுத்துக்கொண்டேன். போனமாதத்தில் எங்கள் துறை நடத்திய சிம்போசியத்தின் முடிவில் ஏற்பாடு செய்திருந்த டின்னரின்போது டாய்லெட்டில் அவரது மனைவியும் நானுமாக ”அலரில் தோன்றும் காமத்து மிகுதிக்கு” பரிகாரம் தேடிக்கொண்டிருந்தநேரம், மனிதர் கரடிபோல உள்ளே நுழைந்ததும் பின்னர் அவருடைய ஜிப்பைத் திறந்த வேகத்திலேயே மூடிக்கொண்டு வெளியேறியதும் நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் அழைக்கிறார்.

1950களில் சென்னைப்பல்கலை கழகத் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த ராவ்பகதூர் கருணாகரத் தம்பிரான் உங்களுக்குத் தெரியுமில்லையா? அவருடைய மகள் வயிற்று வாரிசு எனச்சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை இருக்கிறதோ இல்லையோ எனது பாட்டிக்கு நிறையவே இருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தில் தென் கிழக்கு ஆசியமொழிகள் துறை பிரிவில் பேராசிரியராக இருக்கிறேன், பெயர் செழியன். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாட்டியும் நானுமாக இந்தக்கோளில்(1) இருக்கிறோம். எனக்குத் திருமணம் முடித்த கையோடு எனது பெற்றோர்களிருக்கிற அன்னா கோளுக்கே தான் போய்விடப்போவதாக சொல்லிக்கொள்ளும் பாட்டி அதற்கொரு நிபந்தனைவைத்திருக்கிறது. எனக்கு மனைவியாக வரப்போகிறவளுக்கு தமிழ் தெரிந்திருக்கவேண்டும், தமிழ் பேசவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. எங்கள் கோளில் எங்கள் குடும்பத்தையும் சேர்த்து பதினைந்து தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. இரண்டு பெண்கள் என்னோட இரசனைக்கு ஏற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பாட்டி இல்லாதபோது வீட்டுக்கு அழைத்திருந்த ஒருத்தியிடம் இப்படித்தான் ஒருமுறை ‘உன்னாலே தமிழ் பேசமுடியுமெனில் நாமிருவரும் திருமணம் செய்துகொள்ள முடியுமென’ விஸ்கி போதையில் உளறப்போக அவள் “செலியன்! வம்ச விருத்தி செய்யறதுக்கும் தமிழ் பேசறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்னு எனக்குத் தெரியலை, அப்படி பார்த்தா இந்த ஜென்மத்துலே உனக்கு கல்யாணம் ஆகும்னு நான் நினைக்கலை, என்று சொல்லிவிட்டாள். Bitch! எந்த நேரத்தில் சாபமிட்டாளோ, நாற்பது வயது பேச்சுலராக சில சில்லரை விளையாட்டு உரிமைகளுடன் தமிழ்தெரிந்த பெண்ணொருத்தியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

– செழியன் நான் கூப்பிட்டிருந்தது மறந்துபோச்சா? மறந்திடாம வந்துட்டு போங்க. தொலைபேசியில் மீண்டும் ச்சின்-ஹ¤வா, துறைத் தலைவர்.

– மன்னிச்சுக்குங்க, அஞ்சு நிமிடத்திலே அங்கிருப்பேன், என்றேன் அவரிடம். ஆறுமணிக்கு மெய்நிகர் பெண்ணொருத்தியைப்(Virtual girl) பைசாக் தோட்டத்தில் சந்திக்க வேண்டும். இத்தனைக்கும் வீட்டுக்குப் புறப்படற நேரத்தில் கூப்பிடாதீர்கள் சார், வயசுப்பையன்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்குமென்று ஒருமுறை அவரும் நானுமாக முன்னிரவில் சொஷ¤ குடித்துக்கொண்டிருந்தபோது கூறியிருந்தேன். எரிச்சலுடன் வெளியில் வந்து வாக்வே(walkway) பிடித்து, சொன்னதுபோல ஐந்தாவது நிமிடம் எனது துறைத்தலைவர் அலுவலகத்திலிருந்தேன்.

– உட்கார், என்றவர் தரவு ஒலிபரப்பு(Datacasting) ஊடாக பதிவுசெய்திருந்த அழைப்பிதழை என்னிடத்தில் நீட்டினார். பிறகு தொடர்ந்து, ‘நீங்கள் பூமிக்குச் செல்லவேண்டியிருக்கிறது.

– எங்கே?

– இந்தியாவுக்கு, அங்கே தமிழ்நாட்டில் வெகுகாலத்திற்குப் பிறகு உலகத்தமிழ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தின் சார்பில் நீங்கள் கலந்துகொள்கிறீர்கள்.

– மாநாடு எப்போ?

– அடுத்தமாதம் பதினைந்தாம் தேதி. நிறைய நேரமிருக்கிறது. பயண ஏற்பாடுகளை பற்றிய கவலைவேண்டாம் நம்ம துறை அலுவலகம் கவனித்துக்கொள்ளும். தமிழ்- பிராமி எழுத்துக்களைபற்றிய ஆய்வுக்கும் உனது பயணம் உதவறமாதிரி பார்த்துக்கொள். எபிகிரா·பிஸ்டுகள் பற்றிய தகவல்களையும் திரட்டி வச்சிருக்கேன். கூடுதலாக விடுமுறை தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்புகொள். இந்தக் அட்டையைப் பார்.

பெரியவர் டிஜிட்டல் அட்டையொன்றை மேசையில் வைத்தார். எறும்புகளை வரிசைபடுத்தி நிற்கவைத்ததுபோன்று ஆங்கிலத்தில் அட்டையைப் பற்றிய செயல்முறைவிளக்கம். சுமார் 50X50 மி.மீட்டரில் ஒரு திரை. நீலமாய் ஒளிர்ந்த புள்ளியை விரல் தொட்டது. மறுகணம் வெண்ணிறத்தில் பூவொன்று இதழ்விரிப்பதுபோல ஒளிபடர்ந்து திரையை நிறைத்தது: கவர்ச்சிகரமாக வெளிர் நீலத்தில் ஒரு மேலுடுப்பு, அதே நிறத்தில் வெள்ளைச் சட்டைக்குமேலாக ஒரு கழுத்துப்பட்டை, ஓவல் வடிவத்தில் வெள்ளைவெளேரென்றிருந்த முகம், காது மடல்களை கடித்துக்கொண்டு இரு முத்துகள், தலைமுடி பிசிரின்றி இறங்கி பிடறிக்குமேலே கேள்விக்குறியாய் வளைந்திருப்பதுபோல தோற்றம். பல முறை பயிற்சி எடுத்துக்கொண்ட சிரிப்பு. மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி வணங்கினாள். சன்னமான குரலில் வணக்கம் என்றாள். இடைவெளிவிட்டு சொற்களை கவனத்துடன் உச்சரிப்பதுபோல இருந்தது: பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன். அறிமுக உரைக்குப்பிறகு தமிழ்நாட்டு கோவில்கள், பாலை நிலக்காட்சிகள், உருமிமேளம்.. அணைத்தேன்.

பணியில் சேர்ந்த இத்தனை வருடங்களில் பெரியவர் இத்தனை அக்கறையோடு என்னிடம் பேசியதில்லை. எனக்குக் காரணம் புரிந்தது. இருந்தாலும் மனதிலிருந்த சந்தோஷம் அதைவிட பெரிது. வாயெல்லாம் பல்லாக,’ ரொம்ப நன்றி சார் என்றேன். வீட்டுக்குத் திரும்பியதும் செய்தியைக்கேட்ட ஐஸ்வர்யா பாட்டிக்கும் மகிழ்ச்சி.

– “ஏண்டா தம்பி, என்னையும் அழைச்சுபோயேன். இந்தியா எப்படி இருக்கிறதென்று நானுந்தான் பார்க்கிறேனே.

பாட்டி நீ நினைக்கிறமாதிரியெல்லாம் இந்தியா இல்லை. கடலோரமிருந்த ஊர்களில் பல இப்போதில்லைண்ணு சொல்றாங்க. சென்னையிலே கூட இப்போ பாதிதான் இருக்குதாம். டாக்டர் கிட்டே கேட்டுப்பார்ப்போம். விண்கலத்துலே பயணம் செய்ய உங்க உடம்புக்கு முடியுமாண்ணு அவர்தான் சொல்லணும். அவர் முடியாதென்று சொன்னால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. தனியா இருக்க யோசித்தால் நான் வரும்வரை அம்மா அப்பாவோட அன்னா கோளில் இரண்டுவாரம் தங்கிவிட்டு வாயேன்.

– இப்போ போகலை. பூமிக்குப் போயுட்டு நல்லபடியா திரும்பி வா, கோடை விடுமுறைக்கு வேண்டுமானா இருவருமா ‘அன்னா’வுக்குப் போகலாம்.

முதல் இரண்டுநாட்கள், பாட்டி சோர்வாக வீட்டில் இருந்தாள். பிறகு எப்போதும்போல ஒன்பது மணிக்கு ஜிம், பதினோருமணிக்கு கான்·ப்ரன்ஸ் சேம்பரில் பிறகோள்களிலுள்ள தோழிகளுடன் அரட்டை. பகல் ஒருமணிக்கு சின்னதாய் ஒரு லன்ச், குட்டித்தூக்கமென்று மாறிவிட்டாள். இந்தியாவிற்கான எனது பயண நாள் நெருங்க, ரொம்ப அவதிபட்டாள். அங்கே இதெல்லாம் கிடைக்குமோ, கிடைச்சாலும் கலப்பிடமில்லாம இருக்கணுமே என்றபடி அமினோ அமிலம், நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள், கார்போஹைடிரேட்ஸ், கொழுப்பு, உப்பென்ற இரசாயனக் கலவையிலான உணவுமாத்திரைகளை பாட்டில்களில் அடைத்து, தேதிவாரியாக பட்டியலிட்டாள். இந்தியாவில் குடிப்பதற்கன்றி வேறு உபயோகங்களுக்கு நீர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து இறக்குமதியாகியிருந்த ஸ்ப்ரேக்களெல்லாங்கூட தயார்.

காத்திருந்த அந்த மகா மகா நாள் வந்தது. ஐஸ்வர்யா பாட்டியுடன் விண்கல தளத்திற்கு இரவு 8.50க்கெல்லாம் வந்தாயிற்று. பேராசிரியர் ச்சின் – ஹ¤வா துறை நண்பர்களுடன் வந்திருந்தார். எனது முகப்பு மண்டப எண்ணை சரிபார்த்துக்கொண்டு காலடிவைத்தபோது, “டியர் பேரா! அங்கே நல்ல தமிழ் பேசுங்கிளி கிடைக்குமாவென்று பாரேன்”, என்று பாட்டி கூறியபோது, பொய்யாய் அலறியதை கணத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும், “போடா பைத்தியக்காரா எனக்கில்லை உனக்குத்தான்” என்றாள். எனக்குக்கூட, ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தேண்ணு’, கொஞ்சுவதற்கு ஏற்றமாதிரி, தமிழ் தெரிந்த பெண் கிடைத்தால் தேவலாம் போல இருந்தது. ‘முயற்சி பண்றேன் பாட்டி” என்றபோது அவள் கண்களில் துலக்கம், முகச் சுருக்கங்கள் இரட்டிப்பாக, இமைகளை இறக்கி ஒருமுறை என்னை ஏற இறங்கபார்த்துவிட்டு சிரித்தாள். “உண்மையாகவா, பாட்டியை சமாதானப்படுத்த சொன்னதில்லைண்ணு எடுத்துக்கலாமா?”, “தாராளமா என்னை நம்பு. எப்பவாவது இந்தப்பேரன் பாட்டியை ஏமாற்றியதுண்டா? அப்போ சொன்னா சொன்னபடி நடப்பேன். பார்ப்போம்”, எனக்கூறி அவளை அணைத்துக்கொண்டு விடைபெற்றேன்.

கொண்டுவந்த உடமைகளைப் பதிவு செய்துவிட்டு, பயணிகளுக்கான பயோ சோதனைகளை முடித்துக்கொண்டு காத்திருந்தபோது, கூடத்தில் சகப்பயணிகள் மிகக்குறைவாகவே இருந்தனர். இந்தியாவுக்கு எங்கள் கோளிலிருந்து நான் ஒருவன் மாத்திரமே பயணப்படுகிறேன் என்பதை நினைக்க பெருமையா, வருத்தமா என்பது புரியாமல் குழம்பியிருந்தேன். ச்சின்-ஹ¤வா கொடுத்திருந்த தகவல் அட்டை நீலப் புள்ளியியைப் பதினோறாவது முறையாக ஆள்காட்டிவிரல் தன்னிச்சையாகத் தொட்டது. மீண்டும் அதேமுகம், அதே சிரிப்பு, மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி அதே கும்பிடு, சன்னமான குரலில் வணக்கம் என்று ஆரம்பித்து, பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன், என்றது. சென்னை விண்கலத் தலத்தில் எங்கள் ‘சூ-மின் ஸ்பேஸ்ஷிப் ஏஜென்ஸிக்குச்’ சொந்தமான எஸ்.எம்.121 தரையைத் தொட்டபோது எனக்கு பிரயாணக் களைப்பு நிறையவே இருந்தது. ஆனால் அக் களைப்பு சந்தணமாலையுடன் டிஜிட்டல் அட்டையில் பலமுறைபார்த்து மனதில் பதிவு செய்திருந்த பெண்ணைப் பார்த்ததும் போயே போயிற்று.

மிஸ்டர் செழியன்.. என்றாள். கைக்குலுக்குவதற்காக கையை நீட்டியபொழுது அதை மறுத்தவளாய் கைகளைக் குவித்துவணங்கினாள். பின்னர் கடந்த சில தினங்களாக எனக்குப் பலமுறை பழகியிருந்த சிரிப்பினை முகத்தில் வரவழைத்தாள். ‘மிஸ்டர் செழியன்! என்று ஆரம்பித்து, “பெயர் தாமரை, பெண்-வயது 21 என்று சொல்லிக்கொண்டு போனவளை இடைமறித்து, ‘உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் எனது வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறீர்கள், சரிதானா? என்றதும் கலகலவென சிரித்தாள்.

– மனப்பாடமாக நான் சொல்லவந்ததைச் சொல்கிறீர்கள், எப்படி?

– மிஸ் தாமரை குறைந்தது உங்கள் முகத்தையும் குரலும் இங்கே மாத்திரல்ல இங்கேயும் பதித்துவைத்திருக்கிறேன் எனகூறி தலைக்குபோன ஆள்காட்டிவிரலை என் நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்தியதும் அவள் அசல் சிலப்பதிகாரத் தமிழ்ப்பெண்போலவே முகம் சிவந்தாள். மனசுக்குள் பாட்டிவந்துபோனாள்.

– மிஸ்டர் செழியன், போகலாமா? உங்கள் உடமைகள் நீங்கள் தங்கவேண்டிய விடுதிக்குக்போய்விடும். நாம் கடற்கரை ஓரமாக பறக்கலாம். மாநாட்டு வளைவுகள், அலங்காரங்கள் ஆகியவற்றைப் பார்த்ததுபோல இருக்கும்.

இருவருமாக ·பேன்விங் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம், தாமரையே வாகன ஓட்டியின் இடத்தில் அமர்ந்து எஞ்சினை உறுமவைத்தாள், சிவ்வென்று மேலே எழுந்தது. தாமரை கூட பரவாயில்லை பாட்டிகேட்ட மாதிரிதான் இருக்கிறாள்.

– தாமரை உங்களுக்குத் தமிழ் வருமா?

– நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

– நிதானமாக கவனத்துடன் பேசுவதுபோல இருக்கிறது.

– விருந்தினர்களுடன் நாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறகூடாதில்லையா? கீழே பாருங்கள்

– எங்கே?

– நான் சொன்னது ·பேன்விங் கண்ணாடி கவசத்திற்கு வெளியே.

– கடற்கரையையொட்டி இடது புறம் நகரின் குடியிருப்பு டவர்களை அடுத்துத் தெரிவது புகழ்பெற்ற ‘தாத்தா மைதானம்’ அதை முழுவதுமாக வளைத்து தற்காலிகமாக மண்டபம் கட்டியிருக்கிறார்கள். ஒரு இலட்சம்பேர்வரை உள்ளே அமரலாம். அலங்கரித்த வண்ணக் கோபுரங்கள் தெரிகிறதில்லையா அவை விழா மண்டபத்திற்கான நுழைவு வாயில்கள்.

– கடற்கரையையொட்டி நமக்கு வலது புறத்தில் வரிசையாக சூரிய ஒளியில் மின்னுகிற மண்டபங்களும் தமிழ் மாநாடுக்கென்று கட்டப்பட்டதுதானா?

– இல்லை செழியன் அவைகள் தாத்தாக்களின் சமாதிகள்.

– புரியவில்லை.

– கடந்த இருநூறு ஆண்டுகளாக தாத்தாகள் திராவிட முன்னேற்றகட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நிறைய தலைவர்களுக்கு சமாதி கட்டியிருக்கிறோம். அவற்றில் சென்னைக் கடற்கரை முக்கியம். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் தவறாமல் பார்க்கவேண்டிய இடம். நிகழ்ச்சி ஏப்ரல் 18ந்தேதி மாநாடு விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா பட்டியலில் இந்த இடமுமிருக்கு. ஆகையால் கவலை வேண்டாம்.

– அய்யய்யோ, இப்படி என்னென்ன சுற்றுலா தள பட்டியல் வச்சிருக்கீங்க.

– ஏன்?

– இங்கே பார்க்கவேண்டிய இடங்கள் நிறை இருக்கு, அதைவிட்டுட்டு இதையெல்லாம் என்னைக் கேட்காம ஏற்பாடு செஞ்சா எப்படி?

– நீங்க தமிழ்நாட்டுலே பார்க்க நினைச்சது என்னன்னு. சொல்லுங்க. எங்க அதிகாரிகிட்டே பேசிப்பார்க்கிறேன். என்னாலே உங்க நிகழ்ச்சி நிரலை மாற்றமுடியுமென்று தோணலை, ஆனால் முயற்சி செய்யறேன். எதைப்பார்க்கணும், என்ன பார்க்கணுமென்று சொல்லுங்க?

– எங்கப் பாட்டியின் ஆசைப்படி இங்கிருந்து கிளிமாதிரி ஒருத்தியைக் கொண்டுவரணும், அக்கிளி தமிழ்ப் பேசும் கிளியாகவும் இருக்கணும். ஆனால் அது அத்தனை சுலபமானதில்லைண்ணு நினைக்கிறேன்.

– ஏன்?

– என்னோட பாட்டி நினைப்புலே இருக்கிற தமிழ் கிளிக்குச் சேலைகட்டத் தெரியனும், கோலம்போடணும், கும்மி அடிக்கணும், குலவை இடணும் இப்படி நிறைய தகுதிகளைப் பூர்த்தி செய்யணும். பிறகு கடைசியா அவள் தமிழ்பேசணும், அவளோட பேரனுக்கு மனைவியா வரணும்.

– நீங்க சொல்வதுமாதிரியான ஒன்றிரண்டு பெண்களைக் கண்டுபிடிக்கலாம். அது பிரச்சினைகளைல்லை. ஆனா உங்களை மனைவியாக வருவதற்கு சம்மதிப்பாங்களாண்ணு தெரியலை. வேண்டுமானா ஒன்றுசெய்யலாம், உள்ளூர் தினசரிகளில் விளம்பரம் கொடுத்து பார்க்கலாம். உங்கள் கணினிமுகவரிக்கு தகவல் அனுப்புகிறேன். அதில் கொடுத்துள்ள தினசரிகளின் விளம்பரப் பிரிவுக்குள் நுழைந்து, சுருக்கமாக உங்கள் விளம்பரத்தைக் கொடுங்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நீங்கள் தங்கவேண்டிய ஓட்டல் வந்துட்டுது. இறங்கிக்குவோம். நாளை காலை எட்டுமணிக்கெல்லாம் ரிசப்ஷன் ஹாலில் காத்திருக்கவேண்டும். எட்டு முப்பதுக்கு முதலமைச்சர் விருந்தினர்களுடன் மாநாடு ஊர்வலத்தை பார்வையிடுகிறார். ஒழுங்காக எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்திடுங்க ஊர்வலத்தைப் பார்த்து முடிக்க பிற்பகல் இரண்டு ஆகிவிடும். பிறகு ஓட்டலுக்குத் திரும்பி மறுபடியும் மாலை நான்கு முப்பதுக்கு விருந்தினர் நுழைவாயிலில் இருக்கவேண்டும் அப்போதுதான் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு நான்கு ஐம்பதுக்கு விழா மண்டபத்தில் இருக்க முடியும். ஐந்து மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தொடக்கவிழா இருக்கிறது.

விடுதிக்கு முன் இறங்குதளத்தில் ·பேன்விங்கை தரை இறக்கி, விடைபெற்றுக்கொண்டோம்.

* * * * *
மறு நாள் காலை 8.30க்கெல்லாம் ·பிளாஷ்லீடரில் மாநாட்டு ஊர்வலத்தை பார்வையிடவந்துவிட்டோம். முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் சூழ வந்தார். சரியாக 9.00மணிக்குத் தொடங்கிய ஊர்வலத்தில், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டமென்று வந்த ஊர்வலத்தில் இருபது பெண்கள் கைகளில் துடைப்பம், முறமென்று ஏந்திகொண்டு சேலையை முழங்கால்களுக்குமேல் வாரி இடுப்பில் சொருகியபடி வந்தனர். கையிலிருந்த ஊர்வலவிவரணையில் அதுபற்றிய தகவல்களில்லை. குழப்பதுடன் அருகிலிருந்த தாமரையைப் பார்த்தேன்.

– அவர்கள் தமிழர் பண்பாடு பாதுகாப்புப்படையின் பெண்கள் பிரிவினர். இருபதாம் நூற்றாண்டில் பிரசித்தம். தமிழர் பண்பாட்டிற்கு எதிராக ஏதேனும் நடந்தால் இப்படித்தான் வீதியில் இறங்கிவிடுவார்கள். ஒரு சில ரசியல் கட்சிகளிலும் இந்த அணி இருந்திருக்கிறது. அருகிலிருந்த பிரெஞ்சுகாரரும், அமெரிக்கரும் மிக ஆர்வத்துடன் ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

– செழியன் அங்கே பாருங்கள்.

மீண்டும் கவனம் ஊர்வலத்தில் சென்றது. அலங்கரிக்கபட்ட ஊர்வலத்தில் ஆணும் பெண்ணுமாக பத்துபேர் அமர்ந்திருந்தனர்.

– தமிழ் அறிஞர்களா?

– தமிழறிஞர்களுக்கு இங்கே பஞ்சமில்லை, நிறையவே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தேதியில் தமிழில் உரையாடக்கூடியவர்களென்று பத்துபேர்தான். அந்த பத்துபேருக்கும் அரசாங்கம் மரியாதைசெய்ய வேண்டுமில்லையா. விளம்பரம் செய்திருந்தீர்களில்லையா, அதற்கு ஏதாவது பதில்வந்ததா?

-ம் இல்லை.

– நம்பிக்கையை இழக்காதீர்கள். எனக்கு நிஜமாகவே ஒரு தமிழ் பேசும் கிளியைத் தெரியும். உங்கள் பாட்டி எதிர்பார்ப்பிற்கு பொருந்திவருவாள். சொல்லப்போனால் எனக்கு நெருங்கிய தோழி. அவளுக்கு உங்கள் கோளிற்கு வரவும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதமெனில் இன்றைக்கு 15தேதியில்லையா? பத்தொன்பதாம் தேதி உங்களை வந்து பார்க்கச்சொல்கிறேன்.

* * * * *

மிஸ் தாமரை சொன்னதுபோலவே பதினெட்டாம் தேதி மாலை மூன்றுமணி அளவில் சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ் துறை தலைவருடன் பேசிக்கொண்டிருந்தபோது எனது கைக்கடிகாரம் வண்டுபோல ங்கொய் என்றது. காதில்வைத்தேன்.

– மிஸ்டர் செழியன் நான் கோப்பெருந்தேவி பேசறேன். தாமரையோட சினேகிதி. உங்களைப் பார்க்கணும்னு ஓட்டலில் காத்திருக்கேன்.

– தமிழ் பேசுங் கிளியா? மன்னிச்சுக்குங்க இந்த நேரத்துக்கு நான் அங்கேதான் இருக்கவேண்டும். இங்கே பேசிக்கொண்டிருந்ததிலே நேரம்போனது தெரியல்லை. இங்கிருந்து ஓட்டலுக்கு வர 30 நிமிடம் பிடிக்கும் என்கிறார்கள். ஒன்று செய்யுங்கள் வரவேற்பில் கேட்டு எனது அறை சங்கேத எண்ணுள்ள அட்டையைப் பெற்று அறைக்குச்சென்று காத்திருங்கள் வந்துவிடுவேன்.

பதட்டத்துடன், ரொக்கார் ஒன்றை வாடகைக்குப்பிடித்து ஓட்டலில் நுழைந்து, நாற்பதாவது மாடிக்கு லி·ப்டில் வந்து திறந்து வழிவிட்டதும் வாக்வேயில் ஓட்டமாக ஓடி மூச்சிறைக்க கதவைத் தட்டினேன். பாட்டியின் கனவுத் தேவதை சிரித்தபடி வரவேற்றது.

– நான்தான் உங்களை வரவேற்கணும், ஆனா. நிலமை வேறமாதிரி அமைஞ்சுபோச்சு.

– பரவாயில்லை உட்காருங்க.

அமர்ந்தேன். அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

– இவ்வளவு அழகா தாமரைக்கு ஒரு தோழி இருப்பாங்கண்ணு நினைக்கலை. எங்க பாட்டி சொன்ன விதிமுறைகளுக்கு நீங்க பொருந்துவீங்க இல்லையா? ஒன்றிரண்டு பொருந்தலைன்னாலும் பரவாயில்லை, பாட்டியிடம் சமாளித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன். சொல்லுங்க.. உங்களுக்கு சேலைகட்டறது, கோலம்போடறது, கும்மியடிக்கிறது எல்லாம் வருமா?

– வரும்.

– தமிழ் நல்லா பேசுவீங்க.

– பேசுவேன், தடுமாற்றமில்லை. எத்தனை பக்கமென்றாலும் தடுமாறாமல் பேசுவேன்.

– இப்படியொரு தமிழ் பேசுங்கிளியைத்தான் பாட்டி எனக்காகத் தேடிக்கொண்டிருந்தாள். தாமரைக்கு நிறைய நன்றி சொல்லணும்.

– அதற்கு முன்னே ஓரு உண்மையைச் சொல்லணும். நான் நீங்க நினைக்கிறமாதிரி தமிழ்ப் பெண்ணில்லை. நான் பஞ்சாபிலேயிருந்து வறேன். தாமரை கூட கர்னாடகாவைச் சேர்ந்தவங்க. இங்கே நாங்கதான் தமிழ் பேசறோம்.

– எப்படி?

– எல்லாம் சினிமாவுக்காக. சொல்லபோனா இன்றைய தேதியிலே தமிழ் பேசர பெண்களென்றால் அது. நாங்கதான்.

– உங்க சினேகிதி தமிழ் பேசுங்கிளிண்ணு பெருமையா சொன்னாங்க..

– உண்மைதான் ‘தமிழ் பேசுங்கிளி’ங்கிற படத்திலே கூட நடிச்சிருக்கேன்.

அப்போதுதான் கவனித்தேன், மதுரைப்பகத்திலே ஏதோ ஒரு பட்டியைசேர்ந்தவன்போலவிருந்த ஒருவன் டாய்லெட்டிலிருந்து வெளியில் வந்தான்.

– இவரு யாரு?

– இவர் என் கூடத்தான் வந்திருக்கார். பல படங்களில் உதவி இயக்குனரா இருந்திருக்கார்.

– இவரை எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க?

– நான் தமிழ்வசனம் பேசவேண்டுமென்றால் இவர் பக்கத்திலே இருக்கணும்.

– என்னை மன்னிக்கணும் முதலில் இந்த ஆளை அனுப்பிட்டு வரேன். எட்டுபட்டி ஆசாமியை வெளியிற்தள்ளி கதவைச் சாத்தினேன்.

– மிஸ் கோப்பெருந்தேவி எனக்கு இப்போ ஒரே ஒரு வசனந்தான் தேவை, உங்களுக்கு என்னை மணம்செய்துகொள்ள சம்மதமா?

– தாராளமா, இப்பவே நான் தயார். அதற்காக வசனங்களெல்லாம் மனப்பாடமா தெரியும்.

– பாட்டிக்கிட்ட மாத்திரம் நீங்க தமிழ் பேசினா போதும், எங்கிட்ட தேவையில்லை. புரியுதா?

புரிந்தமாதிரிதான் தலையாட்டினாள்.

———————————————————————
1. சூ-மின்- செவ்வாய் கிரகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில், 7826 ஹெக்டர் பரப்பு. (வடகொரிய அதிபருக்குச் சொந்தமாக எங்கள் நாடு இருந்திருக்கிறது. பின்நாட்களில் தென்கொரிய தொழிலதிபர் ஒருவர் நூடில்ஸ்சையும் அரிசியையும் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்து, அசலையும் வட்டியையும் திருப்பிச் வாங்க முடியாத நிலையில், இக்கோளைக் கணக்கில் பற்று வைத்துக்கொண்டிருந்ததாக இணையதளமொன்றிலிருக்கிற தகவலை நம்பவேண்டாம்)

Series Navigation