விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு

This entry is part of 44 in the series 20090813_Issue

இரா.முருகன்


ஜனவரி 9 1903 – சுபகிருது வருஷம் , மார்கழி 25 வெள்ளிக்கிழமை

நன்னாத்தான் இருக்குடா நாயுடு. பொட்டியும் சட்டியுமா இங்கேயே குடித்தனம் நடத்தற உத்தேசமா?

நீலகண்டய்யன் விசாரித்தபடி குவளை நிறைய நுரைக்க நுரைக்க தளும்பி இருந்த எலுமிச்சம்பழ ஷர்பத்தை வாய்க்கு மேலே உயர்த்தினான்.

துரை அனுமதி கொடுத்தா அதுக்கும் தயார்தான். குடக்கூலி மிச்சமாச்சே. என்ன சொல்றே?

நாயுடு திரும்பிப் பார்த்தபோது நீலகண்டய்யன் கன்னத்தில் எல்லாம் எலுமிச்சை சாறு வடிந்து மூக்கில் புரையேறி இருமிக் கொண்டிருந்தான்.

அய்யரே இப்படி அண்ணாந்து ஊத்தி மூக்காலே குடிக்கணும்னு எந்த வேதத்துலே எளுதி வச்சிருக்கு. லோட்டாவோட மல்லுக் கட்டாம குடியேன்.

எச்சல் பண்றது அனாசாரம்டா நாயுடு.

நீலகண்டன் தலையில் தட்டிக் கொண்டு குவளையை வாய்க்குப் பக்கத்தில் கொண்டு போனான். அப்படியே வைத்துப் பானம் பண்ண என்னவோ தயக்கம்.

உன் எச்சி தானே. என்ன பண்ணிடப் போறது? சொர்க்கத்துலே விடமாட்டேன்னு எவனாவது பன்னாடை சொன்னா இந்த நாயுடு பேரைச் சொல்லு.

ஆமாடா, உன் அதிகாரம் எங்கே தான் கொடி கட்டிப் பறக்கலே. ஜாம்ஜாம்னு, இருக்கப்பட்ட இடம் எல்லாம் ராஜா மாதிரி இருடாப்பா நீ.

நீலகண்டன் சீப்பிக் குடிக்க ஆரம்பித்தான். தப்புக் காரியம் செய்கிற குழந்தையின் குறுகுறுப்பு அவன் முகத்தில் தெரிந்தது. போதாக்குறைக்கு ஷர்பத்தில் நன்னாரி சாறும், ஏகப்பட்ட சர்க்கரையும் சேர்த்திருந்ததால் முட்டாய் சாப்பிட்ட ஆனந்தம்.

ராஜா மாதிரி நான் எங்கே இருக்க? வருஷம் பொறக்கச் சொல்லவே ஏழாம் எட்வர்ட் சக்கரவர்த்தியை இந்துஸ்தானத்து ராஜான்னு ஏற்படுத்தி உத்தரவு வந்தாச்சே. உங்க நேவிகேஷன் ஆபீசுலே கடுதாசி ஏதும் வரல்லியா?

வராம என்ன? எல்லோரும் கூடி நின்னு கொடியேத்தி காட் சேவ் தி கிங்க் பாடிட்டு ஆத்துக்குப் போனோம்.

உத்தமமான காரியம் அய்யரே. பாத்துக்கிட்டே இரு. இனிமேல் கொண்டு நம்ம ஊர்லே திரியற நண்டு சிண்டு பெருந்தலை அதாம்பா, பாரப்பட்டி ஜமீந்தார், கண்டனூர் மகாராஜா, சாத்தூரு சக்கரவர்த்தி எல்லாத் தாயோளியும் ஒளிஞ்சானுக.

நாயுடு முகத்தில் அலாதியான திருப்தி தெரிந்தது. ராஜ வம்ச சொத்து பாகப்பிரிவினை தாவா எதாவது ஹைகோர்ட் வரை வந்து ஜட்ஜ், வக்கீல், சிரஸ்தார், நாஸர், அமீனா, டவாலி என்று மண்டையைக் குழப்பி அவனைத் தூங்க விடாமல் அடித்திருக்கும் போல. நீலகண்டனுக்கு அப்படித்தான் அர்த்தமாகியது.

இப்போதெல்லாம் பழைய மகாராஜக்கள் யுத்தம் புரிகிறது கோர்ட் கச்சேரிப் படியேறித்தான். துரைகளும் மயிலாப்பூர் வக்கீல்களும் திருப்தியாக மூணு வேளை சாப்பிட்டு நித்திரை போய் எழுந்து சுகமாக இருக்க இந்த காகிதக் கட்டு யுத்தங்கள் இல்லையோ வழி செய்கின்றன?

நீலகண்டன் ஷர்பத்தை முழுக்கக் குடித்து முடித்து குவளையை மேஜைமேல் ஜாக்கிரதையாக வைத்தான். மேல் சட்டையில் இருந்து சின்ன உருமாலை எடுத்து வாயைத் துடைத்துக் கொண்டான்.

சொல்லு அய்யரே. வந்த நேரம் தொட்டு கம்முனு உக்காந்திருக்கியே.

அட பாவி, பேச விடாம வெங்காய வடை மண்ணாங்கட்டின்னு கொடுத்து வாயை அடைச்சுட்டு பேச்சு வேறேயாடா உனக்கு?

நீலகண்டன் பரம சந்தோஷமாகச் சிரித்தான். மகாலிங்க அண்ணா விவகாரத்தைக் கூட இன்னொரு விசை இங்கே வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்படி நல்ல சிநேகிதமும் வாய்க்கு ருஜியான ஆகாரமும் ஜன்னல் வழியே சுகமாக இறங்குகிற சமுத்திரத்து ஈரக் காற்றும் தினமுமா கிடைக்கும்? மனசு லேசாக, சும்மா வாய் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும் சுகம் போதும் இப்போதைக்கு அவனுக்கு.

கள்ளியம்பெட்டியில் இருந்து நாலைந்து காகிதக் கட்டுகளை மேஜை மேல் தொப்பென்று போட்டுவிட்டு பெட்டியை மூடினான் நாயுடு. மேஜையில் இருந்து சுற்றிவர தூசி பறந்து ரெண்டு பேரையும் அடுக்கடுக்காகத் தும்ம வைத்தது. அந்தக் காகிதத்திலேயே ஒன்றை உருவி மூக்கைத் துடைத்துக் கொண்டான் அவன்.

பாழாப் போறவன் கையை அலம்பிட்டு காகிதத்தைத் தொட்டா என்ன? மூக்கை வேறே அதிலே சிந்தறான் முட்டாள். வம்போ வழக்கோ ஜாதகமோ விருதா விஷயமோ, எழுதி வச்ச பேப்பர் எல்லாம் சரஸ்வதி ஆச்சே?

நாயுடு வெளியே சுவரை ஒட்டி வைத்திருந்த இரும்பு வாளிப் பக்கம் நடந்தான்.

அவன் திரும்பி வந்தபோது நீலகண்டன் நாக்கில் ஷர்பத் அசட்டுத் தித்திப்பு பாக்கி. ஞாபகம் இருக்கும்போதே கேட்டுவிட வேண்டியதுதான்.

ஏண்டா நாயுடு, என் தமையன் சிக்ஷை முடிஞ்சு வெளியே வந்துட்டான்னு தெரியும். அப்புறம் எங்கே போனான்னு கச்சேரி ரிக்கார்டு எதாவது கிடைக்குமா?

எங்கே அய்யரே கிடைக்கப் போறது? பொதுவா, வெளியே போற கைதிகளை கொஞ்ச நாள் தொடர்ந்து விலாசம் வாங்கி அப்பப்போ கண்காணிக்கணும்னு இருக்கு. ஆனா, இப்படி கச்சேரியும் ஜெயிலும் ரொம்பி வழியறபோது அதுக்கெல்லாம் ஏது நேரம்? போறியா, மகாராஜனா போ. திரும்பி மட்டும் வந்துடாதே. அதான் எல்லார் கிட்டேயும் ஜெயில் சூப்ரண்டு துரை சொல்லி அனுப்புவார்.

உனக்கு எப்படிடா தெரியும் அதெல்லாம்? பக்கத்துலே நின்னு பார்த்த மாதிரி சொல்றே. நானும் சர்க்கார் உத்தியோகஸ்தன் தான். கப்பல்லே வரவன் போறவன் விவரணை தவிர ஒரு புண்ணாக்கும் தெரியாது.

நாவிகேஷன் ஹெட் கிளார்க்குக்கு அது தெரிஞ்சா போறும் அய்யரே. சிரஸ்தாருக்கு சர்க்கார் துரைகளோட மர்ம ஸ்தானத்து மசிரு நீள அகலம் கூட அத்துப்படியாகி இருக்கணும். என்ன உத்தியோகம் போ.

துரைகளும் சர்வாங்கம் பண்ணிப்பாளாடா?

அய்யரே, வேணாம். அப்புறம் துரைசானிகளைப் பத்தி கேட்பே. வாயைப் பிடுங்காதே.

அவனுக்கு அதுவும் தெரிந்திருக்கலாம். நீலகண்டனுக்கு சொல்லாவிட்டால் பரவாயில்லை.

அவாள்ளாம் சுபிட்சமா இருக்கட்டும்டா நாயுடு. விட்டுத்தொலை.

அவனுங்க நாசமாப் போகட்டும். மத்தவங்க விவகாரம் எப்படியோ. ஜெயில் சூப்பரண்டு மூச்சு விட்டாக் கூட எனக்கு கேட்கும். கக்கூஸ் களுவ வந்த பையனை, நல்லாக் கேட்டுக்க, பையனை கையைப் பிடிச்சு இளுத்த தடியன் அந்தக் கசுமாலம்.

இதெல்லாம் கூட நடக்குமா என்ன? எப்படி உனக்குத் தெரிய வந்தது?

நீலகண்டன் ஆச்சரியத்தின் உச்சிக்கே போய் விட்டான்.

சூப்ரண்டு துரை குமஸ்தன் நம்ம தோஸ்த் ஆச்சே. துரைக்கு பொண்ணுகளை விட நல்ல வடிவா இருக்கப்பட்ட கறுப்பு பையன்களைத்தான் பிடிக்குமாம்.

அட தேவுடா. இப்படியுமா லோகத்திலே.

நீலகண்டன் இன்னொரு தடவை அடக்க மாட்டாமல் சிரித்தான்.

அட, அது வேறே மாதிரி குஷால் அய்யரே. குசினிக்காரன், தோட்டக்காரன்னு வீட்டு வேலைக்கு சின்ன வயசுப் பிள்ளையா இட்டாறச் சொல்லி குமஸ்தனை நச்சரிக்கிறானாம். சொல்றாம்பா நம்ப தோஸ்த்.

எதுக்கும் குமஸ்தனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு.

அங்க மட்டும் என்ன வாழுது? அவனும் குஷால் பேர்வழிதான்.

நிசமா?

அட, துரை போல கருத்த பையன் எல்லாம் தேடற கழிசடை இல்லை’பா. திம்சுக்கட்டை மாதிரி பொண்ணு மாட்டினா உன்னைய மாதிரி சரி என்னைய மாதிரி எச்சி விடுவான். திருவாலூர் பெரிய பாப்பா சொன்னேனே. அவ தங்காச்சி சின்னப் பாப்பா தொடுப்பு அவனுக்கு.

இதுவும் தெரியுமா? இனிமேலே என்ன பாக்கி இருக்கு? அவா ரமித்த திதி, நட்சத்திரம், நேரம் இதெல்லாம் தான் சொல்லணும்.

சூப்பிரண்டு குமஸ்தன் ஆதியப்ப முதலி இருக்கானே. அவன் மச்சக் காரன் அய்யரே. உங்க அண்ணாத்தை போலன்னு வச்சுக்கயேன். பொண்ணுங்க எல்லாம் ஓடி வந்து மேலே விளுந்து பிடுங்கற ஆகிருதி களவாணிப் பயலுக்கு. சின்னப் பாப்பா விளுந்தவ எந்திருக்கவே இல்லே. அவளைப் பாத்திருக்கியா? மெத்தை தலகாணியே வேணாம். அப்படி திம்முனு ஒரு உடம்பு கட்டு.

நாயுடுவை சின்னப் பாப்பா, பெரிய பாப்பா அங்க விசேஷங்களில் இருந்து திரும்ப சாமானிய ஸ்திதிக்குக் கொண்டு வர பேச்சை மாற்ற வேண்டிப் போனது நீலகண்டனுக்கு.

ஏண்டா நாயுடு இங்கே கச்சேரியிலே எதுக்கு இடிச்சுப் பொளிச்சு புதுசா ஏதோ கட்டிண்டு இருக்கா? இதெல்லாம் வந்தே அதிக காலம் ஆகலியே?

அதை ஏன் கேக்கறே அய்யரே. ஐகோர்ட்டு இப்ப சொல்ல ஒரே கந்தர்கோளமாயிட்டுக் கெடக்கு. கிரகசாரம்.

நாயுடு சொல்லிக் கொண்டே மேஜை மேல் சப்பணம் கட்டி உட்கார்ந்தான். இது ஆபீசா பிரம்மச்சாரி பிள்ளைகள் குடக்கூலிக்கு திருவல்லிக்கேணி பக்கம் இடம் பிடித்து வாசம் செய்கிற ஸ்தலமா என்று நீலகண்டனுக்கு ஒரு வினாடி சந்தேகம்.

அவன் புறங்கையை அப்படியும் இப்படியும் அசைத்துப் பார்த்தான். கையலம்பி விட்டு வரலாமா? நாயுடு உபயோகப்படுத்தி வெளியே மிச்சம் இருந்த வாளித் தண்ணீர் அதுக்கு சரிப்படாது.

நாயுடு கள்ளியம்பெட்டியில் இருந்து எடுத்துப் போட்ட பழைய காகிதக் கட்டில் இருந்து சுவாதீனமாக இன்னொரு காகிதத்தை உருவி நீலகண்டனிடம் கொடுத்தான். கையில் படிந்திருந்த கடலை எண்ணெய் மிச்சத்தை அதில் துடைத்துக் கொண்டான் நீலகண்டன்.

இது மட்டும் சரஸ்வதி இல்லையோ? மனசு கேட்டது. சாயந்திரம் சந்தி பண்ணும்போது ரெண்டு காயத்ரி அதிகமாகச் சொல்லிவிட்டால் சரியாப் போச்சு.

ஜனவரி ஒண்ணாந்தேதி எட்வர்ட் ராஜாவுக்கு நம்ம தேசத்து சக்கரவர்த்தியா முடி சூட்டினாங்க இல்லே. அதைக் கொண்டாடணுமாம். நம்பெருமாள் செட்டியைக் இந்த ஷணமே கூட்டிட்டு வான்னு அடம்.

அது யாருடா நாயுடு நம்பெருமாள் செட்டி?

கோர்ட்டைக் கட்டிக் கொடுத்த ஆசாமி’பா. நம்மாளுன்னாலும் வெள்ளைக்காரனுக்கே சவால் விடற மாதிரி என்னமா கட்டி இருக்கான் பாரு. அவனை வச்சே கோர்ட்டு உள்ளாற புதுசா கல்லுக் கட்டிடம் எளுப்பி கவ்னர் துரையை வச்சுத் திறந்து வைக்கணும்னு ஜட்ஜ் மாருங்க திட்டம் போட்டாங்க.

நல்ல விஷயம் தானே?

என்ன நல்ல விஷயம். நாசமாப் போறவனுங்க கவ்னரை ப்ரீதிப் படுத்தினா சுருக்கா சீமைக்கு திரும்பி சவுக்கியமா இருக்கலாம்னு ஆலோசனை பண்றாங்க. அவனுங்க தான் இப்படின்னா நம்மாளு வக்கீல் இருக்கானுங்களே, இவங்க பண்ற கொடுமை தாங்கலேப்பா.

என்ன வேணுமாம் நம்மூர் வக்கீல்களுக்கு?

விட்டா கவ்னருக்கு பாதபூஜையே பண்ணி. அதோட நிறுத்துவானுங்கங்கறே? கால் களுவின தண்ணியை சிரசிலே தெளிச்சு வீட்டுக்காரிக்கும் புகட்டி விடுவாங்க. காலுன்னா இடக்கரடக்கல்.

நாயுடு தன் புட்டத்தில் தட்டிக் காட்டிச் சொன்னான்.

அய்யோ, வேணாம்டா. சாப்பிட்டது எல்லாம் எதுக்களிச்சுண்டு வந்துடும்.

நீலகண்டன் அவசரமாக அவனைத் தடுத்துக் கையைக் காட்டினான்.

புதுக் கட்டடம் கட்ட பழசை இடிக்க வேணாமா? உள்ளே வேறே எங்கேயும் சரிப்படாதுன்னு பாதிரியும் சொல்லிட்டான். நம்ம குடுமிக்கார சோசியனும் ஆமான்னுட்டான். நம்பெருமாள் செட்டிக்கு நாலு காசு ஆதாயம்னு ஜாதகத்திலே எளுதியிருக்கு போல. ரிக்கார்ட் ஆபீஸ்லே கை வச்சுட்டானுங்க. பழைய டாக்குமெண்ட் எல்லாம் வச்சிருக்கற இடம்.

எந்த தஸ்தாவேஜ்? கேஸ் நடந்தது, சிக்ஷை விதிச்சது இதெல்லாமா?

ஆமா. வேறே என்ன இங்கே. சின்னப் பாப்பா பெரிய பாப்பா முலையை அளந்து கன பரிமாணம் குறிச்சா வச்சிருக்கோம். கண்றாவி கேசு, வாய்தா, வக்காலத்து, கீழ்க் கோர்ட்டு அப்பீல், ஜட்ஜ்மெண்ட் இந்த எளவு தான் பொளுது முச்சூடும்.

ரிக்கார்ட் ஆபீஸில் மகாலிங்கய்யன் மேலே சர்க்கார் சுமத்திய கேசு விஷயம் இருக்கலாம். மானபங்கப்படுத்தி கொலையும் செய்ததாக குற்றம் நிரூபணம் ஆகாமல் போனதுக்கு தீர்ப்பு கூட அங்கே கிடைக்கக் கூடும். தூக்கு தண்டனை தவிர்த்து அவனை எங்கே கொண்டு போனார்கள்?

ரிக்கார்ட் ஆபீஸ் முக்கிய தஸ்தாவேஜ் எல்லாத்தையும் பத்து இருபது கள்ளியம்பெட்டியிலே அடைச்சு இப்போதைக்கு ஒவ்வொரு ஜட்ஜ் சேம்பரிலும் வைக்கச் சொல்லி உத்தரவு. அதுலே கழிசல் கசம் எல்லாம் பிரிச்சு எடுத்து நம்ம மாதிரி மாச சம்பளக்காரன் கிட்டே எறியச் சொல்லி இன்னொரு ஆர்டர். பாரு, என்ன எல்லாம் நமக்கு வந்து சேர்ந்திருக்கு.

நாயுடு கள்ளியம்பெட்டியைத் திரும்பிப் பார்த்தான்.

நீலகண்டன் கை துடைத்துக் கசக்கிப் போட வைத்திருந்த மக்கிய கடுதாசைக் கவனித்தான். சட்டென்று அவனுக்குள் ஒரு சுவாரசியம். இது என்ன, மதறாஸ் பட்டண ஹைகோர்ட்டில் மலையாளத்தில் எழுதின டாக்குமெண்டு?

தேரடித் தெரு கிருஷ்ணன் கோவில் நம்பூத்ரி தயவில் அவன் கொஞ்சம் போல் மலையாளம் எழுதப் பழகினவன். நம்பூத்ரி பெண் ரதி மாதிரி பெரிய உதட்டோடு இருப்பாள். அவளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்க அப்பனை சிநேகிதம் பிடித்தபோது அந்தப் பெண்பிள்ளை தெலுங்குக்கார தபால் சேவகனோடு மச்சிலிப்பட்டணத்துக்கு ஓடிவிட்டதால் நீலகண்டய்யனின் மலையாள அப்பியாசம் பூர்த்தியாகாமலேயே நின்று போனது.

ஆனாலும் படிச்சது மறக்குமா என்ன?

அம்பலப்புழை சப் ரிஜிஸ்தர் ஓப்பீஸில் அம்பலப்புழை தேகண்டம் தொழிலாகக் கொண்ட குப்புச்சாமி அய்யன் மகனான முப்பது வயசு திகைந்த மகாதேவய்யன் சொந்த புத்தியோடு தன் சிற்றப்பன் ஜான் கிட்டாவய்யன் என்ற கிருஷ்ணமூர்த்தி அய்யன் குமாரன் வேதையனுக்கு எழுதிக் கொடுத்த நிலப் பட்டா கை மாற்றம் ரிஜிஸ்தர் ஆன தேதி கொல்ல வருஷம். எழுத்து எழுத்தாகப் படித்தான் நீலகண்டன்.

மேஜை மேல் வைத்திருந்த காகிதக் கட்டை எடுத்துப் பிரித்தான் அவன். என்னவென்று சொல்ல முடியாத சுவாரசியம். அம்பலப்புழை, குப்புசாமி அய்யன், மகாதேவ அய்யன், கிட்டாவய்யன் இதெல்லாம் என்னமோ ரொம்ப நாள் பழகின இடம், மனுஷ்யர்கள் மாதிரி எலுமிச்சை ஷர்பத்தாக மனதில் ஈரமாக நிறைகிறது.

நாயுடு திரும்ப கள்ளியம்பெட்டியைத் திறந்தான்.

விச்சியா இருக்கியாடா குழந்தே?

யாரோ வயதான ஸ்திரி பேசினது போல் இருந்தடு. நீலகண்டய்யன் காதில் பிரியமாகக் விசாரித்தது அந்தக் குரல்.

நாயுடு ஒரு ஸ்தாலிச் செம்பை பெட்டியில் இருந்து எடுத்து மேஜை மேல் வைத்தான்.

(தொடரும்)
eramurukan@gmail.com

Series Navigation