விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று

This entry is part of 37 in the series 20090625_Issue

இரா.முருகன்


5 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 20 , திங்கள்கிழமை

அந்தப் பிள்ளை சொந்த ஊர் திருக்கழுக்கன்றம் என்று சொன்னதுமே அவன் மேல் ஒரு வாஞ்சை தானே வந்து மனசில் குடியேறிவிட்டது என் லலிதாம்பிகே. ரொம்பவும் தான் கஷ்டப்படுத்தி விட்டேன் அவனை. எதுக்காக அடிக்க வேணும்?

அவன் வயசில் நான் எருமை மாடு மாதிரி நாள் முழுக்க தூங்கியிருக்கிறேன். உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட முதல் மாசம் ராத்திரி முழுக்க உன்னைத் தொந்தரவு படுத்திவிட்டு விடிந்தது கூடத் தெரியாமல் கோட்டுவாய் விட்டபடி பகலெல்லாம் இடுப்பில் ஈரம் காயக் காய அசந்து உறங்கியே கழித்திருக்கிறேன்.

என்னை எதுக்கு ஏன் என்று கேள்வி கேட்பார் யாருமில்லாத காரணத்தால் உறங்கியும் போகித்தும் உண்டும் நேரம் முழுக்கக் கழித்த வயதில் அவன் தூர தேசத்துக்கு சமுத்திரம் கடந்து வந்து இப்படி அடிமை ஊழியம் செய்துகொண்டிருக்கிறான். எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக இல்லாமல் வேறென்ன?

ரொம்ப அடிச்சுட்டேனாடா. வலிக்கறதோ என்று கேட்க ஆரம்பித்தபோது அவன் நிமிர்ந்து ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

தெலுங்கன் வரதராஜ ரெட்டி சுத்தத் தமிழ்ப் பிராமணக் கொச்சையில் பேசினால் பையன் மிரளாமல் என்ன செய்வான்? பூணூலைக் கழற்றி எறிந்து பெயரை மாற்றி குடுமியைச் சிரைத்து கட்டையாக மீசை வைத்துக்கொண்டு ரெட்டியாக சஞ்சரிக்க முற்பட்டாலும் ஆபத்து அவசரத்துக்கு இந்த பாழாய்ப் போன பார்ப்பாரப் பேச்சு நாக்கில் புகுந்து இழவெடுக்கிற கொடுமையை என்ன சொல்ல.

எங்க ஊர்லோ கோவிலு அய்ரு. அரவவாளு. அடி பட்டாகே மந்திரிக்கறதுலே பெத்த கை. ஆயனகாரு தோட்டத்துலே ஒக தொங்கா மாமுடிபண்டு அதாம்பா மாம்பளம் களவாடிச்சு. அய்ரு அவன அடியடின்னு அடிச்சுது. அப்புறம்கா மருந்து பெட்டி மந்த்ரம் செப்தாரு. அப்புடு அய்ரு அரவத்திலே மாட்லாடினாரு. அதி கதா நியாபகம் வந்துச்சு பிட்டா. தெல்சா?

மனசறிந்து பொய் சொன்னேன். சின்னப் பையனுக்கு இது போதும். வரதராஜ ரெட்டியோ வேறே ஒருத்தனோ, அவன் மேல் கரிசனப்பட, கோபம் கொண்டு திட்டினதுக்காக மெய்யாலுமே வருத்தப்படுகிறான் என்று தெரிந்தால் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

ரெட்டியாரே உங்களை தப்பா நினைச்சுக்க என்ன இருக்கு? எல்லாம் என் கிரகம். கண்ணு காணாத இடத்துலே வந்து கஷ்டப்படணும்னு தலையிலே எளுதினதை அளிச்சு எளுத முடியுமா?

அவன் கண்கலங்கினான். அவன் தோளில் கை வைத்து ஆறுதலாக அணைத்துக் கொண்டேன். நமக்கு ஒரு குழந்தை இருந்தால் இந்நேரம் இவன் மாதிரித்தான், என்ன ஒரு மூணு நாலு வயசு குறைந்தவனாக இருப்பான்.

நான் பாட்டுக்கு கழுக்குன்றத்துலே கூழோ மோரோ குடிச்சுட்டு கிடந்தேன் ரெட்டியாரே. அப்பன் குடிகாரன். அம்மா கிடையாது. பக்கத்து வீட்டு அய்யர் ஊட்டம்மா தான் ஐயோ பாவம்னு பரிதாபப்பட்டு எடுத்து வளர்த்துச்சு. அதுக்கு எம்மேலே பெத்த பிள்ளை மாதிரி பிரியம்.

எனக்கு ஏதோ பொறி தட்டின மாதிரி இருந்தது. யாரு அம்மா என்று விட்டேத்தியாக விசாரித்தேன்.

வீட்டுக்காரர் விட்டுட்டு பட்டாளத்துக்குப் போயிட்டாராம். பட்டணக்கரையிலே இருந்து பொறந்த வீட்டுக்குத் திரும்பி வந்துச்சு. நான் இங்க வரச்சொல்ல, காசிக்கு பரிவாரமாப் போன கூட்டத்திலே அதுவும் இருந்துச்சு. நீயும் வாடான்னு கூப்பிட்டுச்சு அய்யரு ஊட்டம்மா. போயிருக்கலாம். என்னமோ கிரகம் இங்கே வந்து விளுந்துட்டேன் அடியும் உதையும் வாங்கி மிச்சம் நாளை நவுத்த.

நீதான். நீயேதான். காசிக்குப் போயிருக்கிறாய். அதுதான் என் கடுதாசி எதுக்கும் பதில் இல்லை. திரும்பி வந்திருப்பாய் இப்போ என்று நிச்சயமாக நினைக்கிறேன். சரிதானே கண்ணே?

அவன் தொலைவில் பார்த்தபடி கண் நிறைந்து போயிருந்தான்.

அது இது வாங்கிக் கொடுத்து, மாசாமாசம் பட்டணத்துக்கு வந்து வாடகை வசூலிச்சுக் கொடுத்து. முழுசா ஒத்த ரூபா கொடுக்கும் அம்மா. இந்நேரம் காசியிலே இருந்து திருப்பி வந்திருக்கும். யாரு வாடகை வசூலிக்கப் போய்ட்டு வராங்களோ.

அவன் உன்னைத்தான் சொல்கிறான் என்று ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. நம்மாத்துக்கு வாடகை வசூல் பண்ண வந்தவன். உன்னைச் சுற்றி இருந்து கவனித்துக் கொள்கிற கூட்டத்தில் ஒருத்தனாக இருந்தவன். நீ வாஞ்சையாக சாதம் போட்டு வளர்த்த பிள்ளை.

தூரத்தில் இரைகிற சமுத்திரத்தைப் பார்த்தபடி ஒண்ணுமே பேசாமல் இருந்தேன். பேச என்ன இருக்கு? அவன் துக்கம் என் துக்கம்.

மகன் மாதிரி குசினி வாசல்லே உக்கார வச்சு பருப்பு சோறு போடும். கையெல்லாம் நெய்வாசம் அடிக்கும் தெரியுமா? தமிளு பேசமாட்டீங்களே. எப்படி புரியும்?

எனக்கு நடுமுதுகில் மயிர்க்கூச்செறிந்தது லலிதே.

ஆக அங்கே சுத்தி இங்கே சுத்தி நீ ஜீவனோடு கொஞ்சத்துக்குக் கொஞ்சம் சுகமாக இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கே. எங்கேயோ.

நான் என்னிக்காவது அங்கே திரும்பி வந்தால் நேரே உன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து.

வேண்டாமா? சரி, கையைப் பிடித்து மாரோடு அணைத்துக் கூட்டி வந்து மிச்ச காலம் எல்லாம் கூடவே இருப்பேன். அது அரை நாள், கால் மணி நேரம் இருந்தல் கூட சரிதான். உன் மடியில் தான் என் உயிர் போகுமடி என் உசுர்க் கண்மணீ. அந்த நாளிலே நான் சுத்த ஆத்மாவாக இருப்பேன். இப்போது மாதிரி இல்லை.

இப்போ. இன்னிக்கு என்னமோ எனக்குள்ளே இப்படி ஒரு ராட்சசத்தனம் புகுந்து ஆட்டி வைக்கிறதே, என்ன செய்வேன் சொல்லு. எல்லாம் சமுத்திரம் தாண்டி வந்த தோஷம் தான்.

பெரியவா சும்மாவா சொன்னா, பிராமணன் சமுத்திரம் கடந்து கப்பல் ஏறி அந்நிய தேசம் போகப்படாது. அவனவனுக்கு விதிச்ச கர்மத்தை பூர்த்தி பண்ணிக் கொண்டு அவனவன் இருக்கப்பட்ட ஸ்தலத்திலேயே கஷ்டமோ நஷ்டமோ இருந்து ஆயுசு பரியந்தம் ஜீவிக்க வேணுமென்று எழுதியிருக்காமே.

அதெல்லாம் பிராமணனுக்கு சரிதான். என்னை மாதிரி ஸ்திரிலோலனாய் அலஞ்சு யௌவன ஸ்திரியின் பருத்த ஸ்தனத்தில் மனசு பறிகொடுத்து பீஜம் விரைத்து நடந்து அவளை சம்போக நேரத்தில் கொன்னு போட்டதாய் ஜெயிலில் சிட்சை அனுபவித்த படுபாவி யாருண்டு? நான் எந்த எழவெடுத்த வேதப் பிரகாரம் பிராமணன் ஆகலாம் சொல்லு.

சுபாவமாகவே இருக்கப்பட்ட குரூரம் இந்த ஏகாந்தமான சந்தர்ப்பத்தில் மனசில் அழுத்தி அழுத்தி கொடூரனாக்குகிறதோ என்னமோ. எனக்கு சொல்லத் தெரியலை. இதையெல்லாம் களையச் சொல்லி பிரார்த்தித்து, கபாலீசுவரர் சமேத கற்பகாம்பாள் அம்மன் ஸ்துதியாக வெண்பா எழுதலாம். ஆனால் யாப்பு எல்லாம் சுத்தமாக மறந்து போச்சு. மனசு முழுக்க எரிச்சலும் குரோதமும் இருக்கும்போது பாட்டு எப்படி வரும்?

இந்த சமுத்திரக் காற்றில் ஏதோ நச்சு விஷயம் கலந்து இருக்கிறது லலிதே. நிச்சயமாகச் சொல்றேன். இந்தக் காற்றை சுவாசித்தபடி பத்து நாள் இருந்தால் பசுமாட்டை, பிறந்த சிசுவைக் கூடத் தலையில் பாராங்கல்லைப் போட்டு நசுக்கிக் கூழாக்க வெறி வந்து சேர்ந்து விடும். அதெல்லாம் பாவம் என்கிற உணர்ச்சியே இருக்காது. நரகத்துக்குப் போக வைக்கும் அது. எந்த நரகம்னு கேட்டா சொல்லத் தெரியலை. இருக்கா என்ன நரகமும் சொர்க்கமும்?

ரௌராவாதி நரகம் எல்லாம் சும்மா திவசத்துக்கு வந்து எள்ளுருண்டையும் இஞ்சித் துவையலும் வழித்துத் தின்னு விட்டு ஏப்பம் விட்டபடி வைதீகர்கள் திரிக்கிற கயறு. அவாள் தொடையில் தேய்த்துத் தேய்த்து கல் தக்ளியில் நூற்கிற பூணூல் கூட அறுந்து போகும். இந்த பாவ புண்ணியக் கட்டுக் கதைச் சரடு தலைமுறை தலைமுறையாக எல்லாரையும் கட்டிப் போட்டிருக்கிறது. தப்பு செய்யாமல் தடுக்க இது மட்டும் போதுமான்னு தெரியலை லலிதா. உனக்கு என்னம்மா தோணறது?

சமுத்திரக் கரைக் காத்து மாத்திரம் இல்லை குத்தம் சொல்ல. இங்கே இப்படி கூரைக் கொட்டகை போட்டு ஒரு பெரிய ஜனக் கூட்டமாக ஒரே இடத்தில் தங்கி இருக்கிறதில், எந்த நியம நிஷ்டையும் இல்லாமல் குளிக்கக் கூட நேரம் இன்றி யாரோ பிருஷ்டம் அலம்பிய கையால் சமைத்த சோற்றை அரக்கப் பரக்க உண்டு விட்டு வேலைக்கு ஓடுகிறது கூட மகா தப்புதான்.

காயத்ரி சொல்லி ஜபிக்க வேண்டாம். அதெல்லாம் உள்ளூர் பிராமணாள் நேரம் தவறாமல் செய்து கொள்ளட்டும். சாப்பாட்டுக்கு ஒரு மரியாதை கொடுக்கிற தோதில் குளித்து தெய்வத்தை மனசாற நினைத்து கிழக்கு பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு சாப்பிட்டுப் போகலாமில்லையா? உடம்பு வணங்க மாட்டேன் என்கிறதே, என்ன செய்வேன் சொல்லு.

மற்ற படிக்கு கள்ளுத் தண்ணி, சாராயம் என்று இந்த மகாலிங்கய்யன் வரதராஜ ரெட்டி எந்த தப்பு தண்டாவுக்கும் போறதில்லை. ஸ்திரி லோலன் தான். ஆனால் அது இப்போது மனசுக்கு உள்ளே மடங்கி அடங்கி ஒண்ணுமில்லாமல் போகப் போறதே. உனக்கு மாஞ்சு மாஞ்சு கடிதாசு எழுதறது அதுக்குத்தானே செல்லமே.

என்ன சொல்ல வந்தேன்? ஆமா, சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடாக, கொஞ்சம் போலாவது நியம நிஷ்டையை அனுஷ்டித்தால் இப்படி அசாத்தியக் கோபமும் கொடூரமும் எனக்கு வந்து சேராது.

சுபாவமாக, கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் கோபப்பட்டு, கொஞ்சம் பொய் சொல்லி, கொஞ்சம் ஜீவிதத்தில் நம்பிக்கை வச்சு நாலு காசு சேர்ந்ததும் திரும்பி வந்து உன்னைக் கூட்டிப் போகப் போகிற அற்ப ஜீவன். உடம்பின் வலுவை சக்தியை எல்லாம் இனிமேலும் கொடூரத்திலே தீர்த்துக் கொள்ளாதவனாக நான் இருப்பேன்.

குளிச்சுட்டுத் திங்கணும். ஒரு ஸ்தோத்ரமாவது சொல்லணும். இல்லை தேவாரம், திருவாசகம். உட்கார்ந்து ஸ்ரத்தையாக நினைச்சால் தானே எல்லாம் நினைவு வரும்.

குளித்தால் மட்டும் போறாதுன்னு தோணறதுடி. ஆழாக்கு அரிசியைப் பொங்கி இறக்க எத்தனை நேரம் பிடிக்கப் போறது. இந்த எழவு தூக்கத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி ஒரு மணி நேரம் முந்தி எழுந்தால் ஒரு சாதமும் புளித்தண்ணி கரைச்ச ரசமும் பண்ணி இறக்கிவிட மாட்டேனா? இங்கே லயத்தில் பொதுவாக சமைக்கிற இடத்தில் கொஞ்சம் ரசப்பொடி கேட்டால் இல்லையென்றா சொல்லப் போறான்? ஹெட் மஸ்தூர் ஆச்சே நான்.

நாளைக்கே பக்கத்து கிராமத்துக்கு ஒரு நடை போய் அரிசியும் வெங்கலப் பானையும் வாங்கி வந்துடணும். ரசம் வைக்க ஈயச் சொம்பு கிடைக்காவிட்டாலும் வாயகலமான பாத்திரம் கிடைக்கும். அதையும் வாங்கி வந்து விடணும். கொஞ்சம் பழகினால் காய்கறிக் கூட்டு, குழம்பு, ரசம் எல்லாம் கூட வைக்கலாம். பொறுத்துக்கணும். இதுலே ஆரம்பிக்கலாம் அரிஸ்ரீ சொல்லி.

சரிடி குழந்தே. தூக்கம் கண்ணைச் சுத்திக் கொண்டு வருது. நடு ராத்திரியாகி இருக்கும் போல இருக்கு. காடா விளக்கு முணுக் முணுக்குன்னு பிராணன் போகிற கிழவி மாதிரி போக்கு காட்டுகிறது. அது உசிரை விடறதுக்குள் நான் உனக்கு வாயாற ஒரு முத்தம் ஈந்து இதை முடிச்சுக்கறேன் லலிதே.

9 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 24 , வெள்ளிக்கிழமை

ஆச்சு, நாலஞ்சு நாளாக சுயம்பாகம் அமர்க்களப் பட்டுண்டிருக்கு.

முதல் நாள் சாதம் விதை விதையாக கொட்டக் கொட்ட முழிச்சுண்டு நின்னுது. அதில் புளித் தண்ணியை விட்டால் ரெண்டும் ஜன்ம வைரிகள் மாதிரி சேராமல் ஒண்ணை ஒண்ணு எதிர்த்துக் கொண்டு வந்தது. எப்படியோ முழுங்கி வைத்தாலும் வயித்துக்குள் போய் அதுகள் தன் பாட்டுக்கு சண்டையைத் தொடர்ந்ததில் அஜீர்ணமாகி நாலைந்து தடவை வயத்தாலே போனேன். அப்புறம் ஸ்வஸ்தமாச்சுடி ஸ்வாமி அனுக்ரஹத்தாலும் உன் நல்ல மனசாலும்.

முந்தாநாள் கூத்து இன்னும் விசேஷம். சாதம் காய்ச்சல்காரனுக்கு கரைச்சுக் கொடுக்கிற புனர்பாகம் மாதிரி ஏகத்துக்குக் குழைந்து போய்விட்டது. ஆனாலும் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ரசம் சுகமான வாடையோடு வெகு அற்புதமாக கொதிச்சு இறங்கினது. லயம் சமையல்காரனே வாசனை பார்த்து வாயிலும் ஒரு சிராங்காய் விட்டு நாக்கை சப்புக்கொட்டினான்.

ரெட்டிகாரு பிரமாதமா சமையல் பண்ணியிருக்கீங்களே. என்னை மாதிரி ஜன்மா ஜன்ம அடுப்புக்காரனுக்கும் வராத கைமணம் இல்லையோ இது என்று வாயாரப் புகழ்ந்துவிட்டுப் போனான் அவன்.

ஹெட் மஸ்தூரை ஸ்துதி செய்தால் அவன் சம்பளம் ஒரு ரூபாய், ஒண்ணரை ரூபாய் மதிப்புக்குக் கூடும். சொந்த தேசம் போகும்போது கூடுதல் தொகைக்கு ஒரு பசுமாடு வாங்குவான். இல்லை, பெண்டாட்டிக்கு சுண்டுவிரலில் போடுற மாதிரியாவது சிண்ணூண்டுக்கு ஒரு தங்க மோதிரம் வாங்கிக் கடுதாசில் சுற்றி எடுத்துப் போவான். ஆனாலும் இதுக்காக என்னை புகழவில்லை. ஒரு தொழில்காரன் அதே தொழிலில் சிரத்தை காட்டிய இன்னொருத்தனை மனசாரப் பாராட்டினதாக அது இருந்தது சந்தோஷமான விஷயம்.

கொஞ்சம் யோசித்து அந்த சமையல்காரன் லயத்து ஜனக் கூட்டத்துக்காக வைத்த புளிக்குழம்பையும் ஒரு குவளை நிறையக் கேட்டு வாங்கிக் கொண்டேன். ஆனால் சுயம்பாகமான செய்யாத வஸ்துவை எப்படி சாப்பிடுவது? ஆகவே அதை வாங்கி நாலைந்து கொத்துமல்லியைக் கிள்ளிப்போட்டு, கூடவே நிறறய தண்ணீரும் மிளகாய் விழுதும் சேர்த்து என் சமையல் ஆக்கிவிட்டேன். மடிக்கு மடியும் ஆச்சு. உப்பு உரைப்பு என் பழக்கத்துக்கு ஏற்றபடியும் ஆச்சு.

இப்படி காலையில் சமைக்கிறதை பத்திரமாக வைத்து ராத்திரிக்கும் கொஞ்சம் தயிரோ மோரோ குத்திச் சாப்பிடவும் இப்போ பழகி விட்டது. சமுத்திரக் கரையாக இருந்தாலும் இங்கே பாலும் தயிரும் அபரிமிதமாகக் கிடைக்கிறது என்கிறதை உனக்குச் சொல்லியாக வேணும்.

இன்னொரு விஷயம் நான் சாப்பிடாதது. சமுத்ர புஷ்பம். அதாண்டி, மீன். என்னென்னமோ பேர் சொல்கிறான்கள் தமிழிலும் தெலுங்கிலும் அதுக்கு. ஜனக் கூட்டத்தில் முக்காலே மூணுவீசம் பேரும் ருஜித்து சாப்பிடுகிற வஸ்து அது.

நேத்து மதியம் சமையல்காரன் ஒரு பாத்திரத்தோடு ஏதோ வயித்தைக் குமட்டுகிற மீன் கூட்டோ பொரியலோ பண்ணி எனக்காக எடுத்து வந்து விட்டான்.

ரெட்டிகாரு, ஜாதி ஆசாரம் மீறி ஏன் இப்படி சுத்த சைவமாக இருக்கீங்க என்று உரிமையோடு கேட்டவனிடம் அதெல்லாம் ஒரு நேர்ச்சைக்காக விட்டொழித்தேன் என்று பொய் சொன்னேன்.

பெண்டாட்டி சாகக் கிடந்தபோது கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரனுக்கு நேர்ந்தபடிக்கு மீனும் கோழியும் இறைச்சியும் எல்லாம் விலக்கு இப்போ. மனசைக் கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி பழகி விட்டது.

பொய் சொல்லிச் சொல்லிப் பழகிவிட்ட படியால் இதுவும் சரம் சரமாக வந்து விழுந்தது.

இன்னிக்கு சாயந்திரம் வெய்யில் தாழ்ந்து ரொம்பவே நேரம் சென்று லயத்தில் என் குடிலுக்குத் திரும்பினேன். காலம்பற வடித்த சாதம் காய்ந்து கருவாடாகிப் போய் அதில் எறும்பு வேறே மொய்க்க ஆரம்பித்திருந்தது. இது சாப்பிட பிரயோஜனப்படாதே, எடுத்துக் கொட்டி ஏனத்தைக் கழுவிட்டு இன்னொரு கை அரிசி வேகவைக்க வேண்டியதுதான் என்று தீர்மானத்தோடு தண்ணீர் சேந்த கிணற்றுப் பக்கம் நடந்தேன்.

கலுபிலுவென்று ஏகப்பட்ட இரைச்சல் அந்த வெளிச்சம் மங்கின நேரத்தில். சாயந்திரம் கப்பலில் வந்து இறங்கிய கிட்டத்தட்ட இருபது பேர் அங்கே புதுசாக எழுப்பிக் கொடுத்த குடில்களில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரைச்சலை அடக்குகிற தோரணையில் கொஞ்ச நேரம் இரைந்து கத்தி நான் யார் என்பதை ஒருவாறு உணர்த்தினேன். எல்லாம் நம்ம ஊர் தமிழ் ஜனம். ஜாக்கிரதையாக தெலுங்கன் தமிழ் பேசுகிற தோரணையில் அவர்களிடம் என் பதவி, உத்யோக ஸ்திதி இன்னோரன்ன விஷயங்களை விளக்கி அங்கே துரையும் துரைசானிகளும் இல்லாத போது, அது நித்தியப்படிக்கு சதா நடக்கிற விஷயமாச்சே, நான் தான் அவர்கள் எல்லோருக்கும் எஜமானன் என்று புரிய வைத்தேன். ஒரு சங்கடமான மௌனம் சுற்றி அடர்த்தியாக நிற்க அவர்கள் எல்லோரும் கலைந்து போனார்கள்.

சோற்றுப் பாத்திரத்தில் இருந்த பழைய சோறைக் கீழே மண்தரையில் கவிழ்த்தேன். நாய் பூனை ஏதாவது ராத்திரி வந்தால் தின்றுவிட்டுப் போகட்டும். கிணற்றில் நீர் சேந்தி பாத்திரத்தை அலம்பிக் கொண்டிருந்தபோது பின்னால் ஏதோ சத்தம். வளையல் குலுங்குகிற ஓசை அது.

திரும்பிப் பார்த்ததும் தெரிந்த முகம். ஐயோ என்னத்தைச் சொல்வேன். சாமி சத்தியமாக நிஜம் இது.

அந்தப் பெண்பிள்ளை யார் தெரியுமோடி? சாட்சாத் ரெட்டியக் கன்யகை தான்.

நான் கழுக்குன்றம் மலையில் ரெட்டை ஸ்தனத்தையும் ஆரத் தழுவிச் சுகிக்க ஆரம்பித்தபோது உசிரோடு இருந்து அது ரெண்டும் கழுகாக மாறின போது உசிர் போய் ரத்தப் பிரவாகத்தில் சவமாகக் கிடந்தாளே அவளேதான்.

கல்யாணி. தெலுங்கு ரதி. கல்யாணி. ரதி. ரதி. ரதி.

அய்யரே கழுக்குன்றத்துலே பாதியிலே விட்டுட்டுப் போயிட்டீரே. மீதியை உங்கப்பனா வந்து முடிச்சு வைப்பான்?

அவள் நமுட்டுச் சிரிப்புடன் தமிழில் கேட்டாள். என் கையில் வைத்திருந்த பாத்திரம் நழுவி உள்ளே இருந்த ஜலம் எல்லாம் காலில் கொட்ட பாதம் மேலேயே விழுந்தது. அது ரத்தம் மாதிரி கொழகொழவென்று காலை நனைத்து சிவப்பாக ஒரு விநாடி தெரிய உடம்பெல்லாம் நடுக்கம் ஏற்பட்டது.

திரும்பியே பார்க்காமல் நடக்க முற்பட்டேன். அவள் குரல் பின்னால் இருந்து தொடர்ந்தது.

அய்யரே, லட்டு உருண்டை, பானகம், கனிஞ்ச வாழைப் பழம். எல்லாம் இன்னும் கொஞ்சம் வேணும். கழுகு பார்த்திருக்கீரா? ஜோடிக் கழுகு? இதோ.

அவள் மேல் சேலையை விலக்கினாள். பருத்த மார்பகங்கள் கழுகாகக் கவிந்து என்னை வாவா என்று ஈர்க்க இதமாக இருட்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

கல்யாணி, அடி என் கல்யாணி. எனக்கு வேறென்ன வேணுமடி?

நீதான் நீயேதான்.

சாப்பாடும் சமையலும் கோவிலும் குளமும் ஸ்நானமும் ஸ்கலிதமும் வேலையும் கூலியும் எல்லாம் அப்புறம். நீ கிடைத்தால் போதுமடி கல்யாணி.

நான் மோகாவேசத்தோடு தமிழில் சொல்ல வாயெடுத்தபோது பின்னால் இருந்து ஒரு ஆம்பிளை குரல் கேட்டது.

ஏன் புள்ளே. எட்டு மஸ்தூரு தெலுங்குக்காரர். அவர்கிட்டே தமிழ்லே என்னத்தைச் சொல்லிக்கிட்டு நிக்கறே? பாவம் மனுஷர் பாஷை புரியாம முழிக்கிறார் பாரு.

அவன் முகம் ஒரு சாயலுக்கு கிழங்கனைப் போல் இருந்தது. ஆனாலும் இவன் தெலுங்கன் இல்லை. இந்தக் கல்யாணியும்.

பசியோட இருக்கீங்க போல. பாவம். நான் சுடச்சுட சோறு பொங்கித் தரேன். சாப்பிட்டுங்கன்னேன்.

அவள் பொய் சொன்னாள். என் கல்யாணி. எனக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது.

(தொடரும்)

Series Navigation