மூர்த்தி எங்கே?

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

தி.சு.பா


அந்த 40 பேர் முகத்திலும் சந்தோஷக்களை தாண்டவமாடியது. இருக்காதா பின்ன? ஆறு மாதங்களுக்குப் பிறகு ‘ப்ராஜக்ட் ட்ரீட்’ போக இருக்கிறார்கள். பெரிய மென்பொருள் நிறுவனம் அது. இந்தியாவிலிருந்து ‘ஆன்சைட்’ அதாவது அட்லான்டா, அமெரிக்கா வந்து, ஒரு ‘ப்ராஜக்ட்’ (திட்டப்பணி) க்காக சரியாக 40 பேர் வேலை செய்கிறார்கள்.

லட்சலட்சமாக சம்பாதிக்கிறார்கள். அப்படி இருப்பவருக்கு தினமும் விருந்து தானே? இதில் குதூகலமாவதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதில் நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கின்றது. முதலில் திட்டப்பணி மேலாளரிடமிருந்து விருந்திற்கு அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அதன் பிறகு எல்லோரையும் ஒன்று சேர்த்து விருந்துக்கான தேதி, இடம், நேரத்தைத் தீர்மானிப்பதற்கு ஒரு யுகம் பிடிக்கும். அமெரிக்காவிலும் சைவம் தவிர வேறு எதுவும் வாயில் வைக்காத ‘தேசி’ கோஷ்டி (இந்தியர்) உண்டு.

“அந்த ஹோட்டல் வேண்டாம் பா….இங்க வெஜ் ஃபுட் நல்லாவே இருக்காது…அய்ய! இதுவா? ஆம்பியன்ஸ் படு கேவலமா இருக்கும்…..அய்யோ இந்த ரெஸ்டாரண்டா? பட்ஜெட் என்னானு பார்த்துக்கோபா, பில்லு பழுத்துறும்…” என்று கருத்து மாற்றி கருத்து வந்து கொண்டே இருக்கும்.

இத்தனை கருத்துக்களையும் உள்வாங்கி, சீர்தூக்கிப் பார்த்து, எல்லோரையும் திருப்திப்படுத்தக் கூடிய ஓர் உணவகம் தேர்ந்தெடுக்க அசாத்திய திறமை வேண்டும். விருந்திற்கு ஏற்பாடு செய்பவன் ஓர் அபார ஆசாமியாக இருந்தாலொழிய இதெல்லாம் ரொம்ப கஷ்டம். இதெல்லாவற்றிற்கும் மேல் விருந்திற்கு செல்லும் நாளில் வேலைப்பளு அதிகம் ஆகி விடக்கூடாது. இதற்காக வேண்டுதல் எல்லாம் கூட நடக்கும்.

‘மீன் ஒன்றிற்காக காத்திருக்குமாம் கொக்கு’ என்பது போல் ‘விருந்திற்காக காத்திருக்கும் ஐ.டி. இளைஞர் பட்டாளம்!’. விருந்திற்குச் செல்வதென்பது ஒரு ‘மினி திருவிழா’ போல ஜேஜே என்றிருக்கும். விருந்து பற்றிய மின்னஞ்சல் வந்த அடுத்த விநாடி முதல் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். மனதே வராது! மற்ற நேரங்களிலும் வேலை செய்ய மாட்டார்கள், அது வேறு விஷயம்! ஒருவரை ஒருவர் ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள். கிண்டலும் பரிகாச பேச்சுமாக அலுவலகமே களை கட்டும்.

அன்று காலை 9:33 மணிக்கு விருந்து ஏற்பாடு செய்யும் ப்ரசாத்திடமிருந்து மின்னஞ்சல் வந்தது. இத்தாலி உணவகம் ஒன்றிற்கு போக இருப்பதாகவும், சரியாக 11:45க்கு உணவகம் வாசலில் அவனை சந்திக்குமாறும், மதியம் 12மணிக்கு மதிய உணவு ஆரம்பிக்கப்படுமென்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தது.

பாலாஜி 9:34க்கெல்லாம் கல்பனாவை தொலைபேசியில் அழைத்தான். “ஹே, கல்பனா! நீ செலெக்ட் பண்ண ரெஸ்டாரண்ட் தான் போல இருக்கு? கலக்கு…” என்று வழிந்தான்.

“ஹா…ஹா…ஹா…எஸ்! இது வரைக்கும் நாம இட்டாலி ரெஸ்டாரண்ட்க்கு போனதே இல்லை. சூஷி ரெஸ்டாரண்ட் பயங்கர போருப்பா, அதான்..ம்ம்.” என்று பதிலுக்கு பாலாஜியிடம் வழிந்தாள் கல்பனா.

அவர்கள் இருவரும் அவனைப் பார்ப்பதும், இவனைப் பார்ப்பதும் என்று அதோடு வேலை செய்வதை மூட்டைக் கட்டி வைத்தனர். ஒரு மணி நேரம் செலவழித்து காபி குடித்தனர்.

“ஹே பாலாஜி! நீ ஹோட்டல்ல என் பக்கதுல உட்கார்ந்துக்க, ஒகே வா?” என்று எல்லோர் முன்பும் பாலஜியிடம் கேட்டாள் கல்பனா.

“ம்” என்று மட்டும் சொல்லி விட்டு திருட்டு முழி முழித்தான் பாலாஜி.

“ஹேஹேஹேஹேஹேஹே……..” என்று எல்லோரும் சேர்ந்து பாலஜியையும் கல்பனாவையும் ஓட்டினார்கள்.

பாலாஜிக்கும் கல்பனாவுக்கும் கொஞ்ச நாட்களாக ‘டேஷ்’ ‘டேஷ்’.

“போங்கடா! வேலய பார்த்துக்கிட்டு” என்று பாலாஜி தன் அருகில் இருந்த ஒருவன் வயிற்றில் தன் கையை அழுத்தி, லேசாக அவனைத் தள்ளிவிட்டு எல்லோருக்கும் பதிலடி கொடுத்தான்.

“வேலையா? இனிமேல் நாளைக்கு தான்” என்றாள் ஸ்ருதி.

“ஆமா! ஆமா! அப்படியே மத்யானம் சினிமா போய்ட வேண்டியது தான்” என்று ஆரம்பித்தான் கிருஷ்ணா.

“சினிமாவா? சான்ஸே இல்ல…நான் போய் தூங்க போறேன்பா” என்றான் ரெட்டி.

“என்னோட கார்ல சின்ன ப்ராப்ளம்…அதை இன்னிக்கு மத்யானம் செக் பண்ண போறேன்…யாராவது எனக்கு கம்பனி தர்றீங்களா?” என்று கேட்டுவிட்டு பரிதாபமாக பார்த்தான் சாத்விக்.

“மச்சி நான் வரேன்டா” என்றான் சினாய் ஜேக்கப் குதூகலமாக.

“மனோஜ்! காபி குடிக்கல?” என்று குசலம் விசாரித்தாள் ஸ்வேதா.

“ம்ஹ்ம்…அப்புறம் லன்சல சரியா சாப்பிட முடியாது”

“அடப் பாவி………….”

இப்படி வெட்டி அரட்டை அடித்தே மேலும் ஒரு மணி நேரத்தைத் தள்ளினார்கள்.

“லெட்ஸ் ஆல் லீவ் பா….இப்போ கிளம்பினால் தான் சரியா இருக்கும்…” என்றான் ப்ரசாத். 40 பேரையும் கட்டி மேய்ப்பது சாதாரண விஷயம் இல்லை.

“டேய், பாலாஜி! உன் கார்ல யார் யாரைக் கூட்டிகிட்டு வரப்போற?” என்றான் ப்ரசாத்.

“ஹே, ப்ரசாத்! இது என்ன கேள்வி? அவன் கார் ல யாரு வருவா?” என்றான் ரெட்டி.

“டேய், விளயாடாதீங்கபா! டைம் ஆயிடுச்சு” என்று கடிந்து கொண்டான் ப்ராசாத்.

“அவன் கடக்கறான் டா..நான், கல்பனா, மகேஷ், அப்புறம் ரவி நாலும் பேரும் என் கார் ல வந்துர்றோம்…” என்றான் பாலாஜி.

“அஷ்வின்! உங்க செவென்த் ஃப்ளோர் ல இருக்கறவங்ககிட்ட எல்லாம் கொஞ்சம் சொல்லிடறீங்களா?” என்று கேட்டுக் கொண்டான் ப்ரசாத்.

ப்ராசாத் ஒவ்வொருவரிடமும் போய் கிளம்ப சொன்னான். அந்த 40 பேரில் 30 வயதிற்குட்பட்டவர் 28 பேரும், 30 முதல் 40 வயதிற்குட்பட்டவர் 11 பேரும், 40 வயதுக்கு மேல் ஒருவரும் இருந்தனர். திட்டப்பணி மேலாளர் கணேஷ்! மூர்த்திக்கு 45 வயது ஆனாலும் தன்னை விட இளையவரான கணேஷிற்கு கீழ் தான் வேலை பார்த்தார். மூர்த்தி இல்லாத சமயங்களில் அவரை ‘பெருசு’ என்று தான் மற்றவர்கள் அழைப்பார்கள். வயது அதிகம் ஆன காரணத்தினால், ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று தான் இருப்பார் மூர்த்தி.

மணி 11.45!

சாரி சாரியாக கிளம்ப தொடங்கினார்கள். எல்லோரிடமும் கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கு சுதந்திரம் கிடைத்தது போலதொரு சந்தோஷம்! எல்லோரையும் கிளப்பியபின் தான் ப்ரசாத் கிளம்பினான். அவனுக்கு அதற்குள் கொஞ்சம் தலைவலி வந்திருந்தது. அலுவலகத்திலிருந்து 10நிமிட பயணம் தான். நடுவாந்திரமான உணவகம்! வாசலில் கும்பல் ரொம்பி வழிந்தது. ப்ரசாத் அதன் வாசலில் வந்திறங்கி, உணவக நிர்வாகி ஒருவரிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மேஜைகள் பற்றி விவரம் கேட்டுக்கொண்டான். 40 பேர் என்பதால் ஒரே மேஜைக்கு வாய்ப்பில்லை என்றும், 3 மேஜைகள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நிர்வாகி கூறினார்.

மீண்டும் வாசலுக்கு வந்தவன், “டேய், பாலாஜி! சஞ்சய் எங்கடா?”

“அவன், குமார், மனோஜ் லாம் தம்மடிக்க போய்ட்டாங்க…”

“ஏன்டா இப்படி காமெடி பண்ணிக்கிட்டு திரியறீங்க?” என்று செல்லமாக கடிந்து கொண்டான்.

“என்ன கேட்டா?” என்று கோபித்துக் கொண்டான் பாலாஜி.

“எல்லாரும் வந்தாச்சா இல்லியா?” என்றார் கணேஷ்.

“சாத்விக் கார் மெக்கானிக்கை பார்த்துட்டு வர்றேன்னு சொன்னான் கணேஷ்” என்றான் நவீன்.

“கணேஷ்! ஏற்கனவே 10 நிமிஷம் லேட்…ஹோட்டல் மேனேஜர் மொறைக்கற மாதிரி எனக்கு தோணுது” என்று பரிதாபமாக சொன்னான் ப்ரசாத்.

“ப்ரசாத்! டோன்ட் வொர்ரி…லெட்ஸ் மேக் க மூவ்…லேட்டா வர்றவங்க ஜாயின் பண்ணிக்குவாங்க” என்று கணேஷ் சொன்னதும் ஒவ்வொருவராக ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள்.

“சார்! ஹௌ மெனி மெம்பர்ஸ்” என்றான் அந்த மெக்ஸிகன் சர்வர்.

“ஃபார்ட்டீ” என்று தீர்மானமாக சொன்னான் ப்ரசாத்.

முப்பது பேர் கிட்ட தான் வந்து இருப்பார்கள் போலத் தெரிந்தது. சாத்விக், அப்புறம் அந்த ‘தம் கோஷ்டி’, இன்னும் யார் யார் வரவில்லை என்று ப்ரசாத்திற்கே புரியவில்லை. கணேஷ் சமாதானப்படுத்தியதால் யார் பற்றியும் கண்டு கொள்ளாமல் மதிய உணவிற்கு ஆர்டர் செய்ய ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து விருந்திற்கு வந்தவர் ஒவ்வொருவராக ஆர்டர் செய்ய ஆரம்பித்தனர். 5-10 நிமிடங்கள் கழித்து ‘தம் கோஷ்டி’ உள்ளே நிழைந்தது. அவர்களைத் தொடர்ந்து சாத்விக், சினாய் வந்தனர்.

40 பேரை வைத்துப் பார்க்கும் பொழுது, சற்று சிறிய உணவகமாகத் தான் தெரிந்தது. ‘கசமுச கசமுச’ என்று சந்தைக்கடை மாதிரி ஆங்காங்கே பேச்சுக் குரல்கள், சிரிப்பொலிகள், சாப்பிடும் பொழுது எழும் தட்டு, ஸ்பூன் ஓசைகள். 10 பேர் அமரக் கூடிய மேஜையில் 13பேர் அமர்த்தப்பட்டிருந்தனர். மூன்று நீளமான மேஜைகள் குறுக்கும் நெடுக்குமாக போடப்பட்டிருந்ததில் தான் இவர்கள் அனைவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். ஒரு மேஜைக்கும் அடுத்த மேஜைக்கும் இடைவெளி ஒன்னரை அடி தான் இருக்கும். உணவகம் முழுவதற்கும் சேர்த்து ஒரே ஒரு ராட்சத சாண்டிலியர் விளக்கு அந்த அறையின் நடுவில் தொங்கி கொண்டிருந்தது. ஒவ்வொரு மேஜைக்கும் அலங்காரமாக ‘ஹரிக்கேன்’ விளக்கு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நான்கு சுவரிலும் படுக்கவைக்கப்பட்டிருந்த செவ்வகக் கண்ணாடி. அந்த அறையில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் எல்லோராலும் ஒரு கண்ணாடியிலாவது தாங்கள் சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டே சாப்பிட முடியும். உணவகம் பழைய கால முறைப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கண்ணாடிக்கும் இந்த பக்கம், இது வரை இந்தியர் எவரும் பார்த்திராத இத்தாலிய தலைவர் படமும், அந்த பக்கம் கலை ஓவியமும் மாட்டப்பட்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் பூக்கொத்துக்கள் அந்த அறைக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. மிக நெருக்கமாக மேஜைகள் போடப்பட்டிருந்ததால் பக்கத்து மேஜையில் பரிமாறப்பட்ட உணவின் வாசனை அடுத்த மேஜையில் இருப்பவருக்கு பசியைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

ஆலிவ் சாலட், பாஸ்தா, எக்ப்லேண்ட் உணவு வகைகள், லாப்ஸ்டர், திராமிசு அது இது என்று இத்தாலிய விருந்தை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தனர் இந்த 40 பேரும். மூன்று மேஜையில் ஒரு மேஜை முழுவதும் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்கள் அமர்ந்திருந்தனர். அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது. அய்யராத்து அகல்யாவுக்கு மாற்றி அசைவ உணவை வைத்துவிட்டுப் போய்விட்டான் அந்த மெக்ஸிகன் சர்வர். அவள் வாந்தி எடுக்காத குறையாக புலம்பி தீர்த்தாள்.

“கணேஷ்! இப்படி ஹேம் டிஷ் ஐ எனக்கு வச்சுட்டானே”

“வெயிட் அகல்யா! லெட் மீ கால் த ஹோட்டல் மேனேஜர்” என்று அகல்யாவை சாந்தபடுத்தினார் கணேஷ்.

தவறு செய்த மெக்ஸிகன் சர்வரை அழைத்து, மேலாளரை அழைக்கும்படி வினவினார் கணேஷ். சற்று நேரத்திற்கு முன் உணவகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த ஒருவருக்கு ‘ஹார்ட் அட்டேக்’ வந்து விட்டதாகவும், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக் கொண்டிருப்பதால் மேலாளர் இன்னும் 15நிமிடங்கள் கழித்து தான் வருவார் என்றும் கணேஷிடம் கூறினான். கணேஷ் கோபமாக இருப்பதைப் புரிந்து கொண்ட அவன், தான் பொய் சொல்லவில்லை என்றவிதமாக உணவக வாசலில் சிவப்பு விளக்கு துடிதுடிக்க நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸைக் காண்பித்தான்.

அதன் பின் 20நிமிடங்கள் ஆன பிறகு மேலாளர் கணேஷைச் சந்தித்தார். கணேஷ் அவரிடம் மெக்ஸிகன் சர்வர் அகல்யாவுக்கு இழைத்தக் கொடுமையைப் பற்றி விவரித்தார். அந்த மேஜையில் அமர்ந்திருப்பவர் அனைவரும் சைவம் என்று ஆரம்பத்திலேயே தெள்ளத்தெளிவாகக் கூறியபிறகும் இவ்வாறு நடந்துவிட்டதாக கணேஷ் மேலாளரிடம் புகார் அளித்தார். மேலாளர் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார். அதன்பிறகு, அகல்யாவிடமும், கணேஷிடமும் மாறி மாறி அங்கு வரும்போதெல்லாம் மன்னிப்புக் கோரி கொண்டிருந்தார்.

விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்பர் நம் முன்னோர். இங்கே மூன்று மணி நேரம்! 12 மணிக்கு ஆரம்பித்த விருந்து 3மணி வரை நீடித்தது. மூக்குப்பிடிக்க தின்று தீர்த்ததால், ஒருசில பேர் சோர்ந்து போயிருந்தனர். மூன்றும் பெரிய மேஜை என்பதால் சில பேர் யார் யார் என்ன செய்கிறார்கள் என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தனர். ‘அவன் எங்க இருக்கான்? அவள் எங்க இருக்காள்?” என்ற விதமாக பார்த்தார்கள். பார்த்ததோடு மட்டுமில்லாமல் “சாப்பாடு எப்படி இருந்தது?” என்று சைகையால் சிலர் வினவி கொண்டிருந்தனர். ஒருவன் தலையை ஆட்டி “எப்படி?” என்று கேட்க இன்னொருவன் “ஏதோ” என்ற விதமாக உதட்டைச் சுளிக்கினான். ‘தம் கோஷ்டி’ அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

கணேஷ் பில் வரவழைத்தார். ப்ரசாத்திடம் பில்லை காண்பித்து சரி பார்க்க செய்தார். அது ‘ஃபேமிலி ஸ்டைல்’ மதிய உணவு. 39 தலைக்கு வரி உட்பட 1400 டாலரும் சொச்சமுமாக பில் காண்பித்தது.

“கணேஷ்! நாம 40 பேர். ஆனா இவங்க 39 பேருக்கு மட்டும் தான் பில் போட்டிருக்காங்க…என்ன பண்றது”?

“அந்த சர்வர் வந்தது மொதக்கொண்டு சொதப்பல் தான் பா…அவனைக் கூப்பிடு…40 பேருன்னு சொல்லி பில்லை மாத்த சொல்லு”

கணேஷ் அருகே இருந்த சினாய், “பரவால்ல கணேஷ்…39 பேருக்கு மட்டும் பே பண்ணிடலாம்” என்றான் குறும்பாக.

அவனை பார்த்து லேசாக முறைத்த கணேஷ், “ப்ரசாத்! சீக்கிரம் அவன்ட சொல்லுப்பா, களம்பலாம் டைம் ஆச்சு” என்றார்.

ப்ரசாத் சர்வரை அழைக்காமல் மேலாளரை அழைத்து விஷயத்தைச் சொன்னான். மேலாளர் மீண்டும் கோபமுற்று சர்வரை இவர்கள் முன் கேள்வி கேட்டார். எல்லோருடைய ஆச்சர்யதிற்குமிணங்க அவன், தான் இந்த முறை தவறு செய்யவில்லை என்றும், 39 பேர் தான் சாப்பிட்டனர் என்றும் அடித்துச் சொன்னான். ப்ரசாத் சற்று எரிச்சலுடன் தாங்கள் 40 பேர் தான் என்று சொன்னான். யாரும் சாப்பிட்ட பிறகு வெளியே செல்லவில்லை என்பதை ஊர்ஜிதபடுத்திக் கொண்ட மேலாளர் ஒருமுறை இருக்கும் தலைகளை எண்ணினார்.

“1,2,3,…..10…..”

எல்லோரும் ஆவலுடன் முடிவுக்குக் காத்திருந்தனர்.

“….20…30….35…”

அவர் 39ல் கொண்டு வந்து முடித்தார். எல்லோருக்கும் ஆச்சர்யம்!

“விருந்திற்கு வராத நபர் யார்? காணாமல் போன அந்த நபர் யார்?” என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். 40 பேர் என்பதால் ஏறக்குறைய 5நிமிடம் பிடித்தது அவரைக் கண்டுபிடிக்க.

“மூர்த்தி தான்பா வரலை” என்றான் ப்ரசாத்.

“மூர்த்தி எங்கே?” என்றார் கணேஷ்.

“ஆபீசிலிருந்து நாம களம்பறப்ப அவர்ட நான்தான் சொன்னேன்!” என்றான் பாலாஜி.

“நான் அவரை ஆபீஸ் கார் பார்க்கிங் ல பார்த்தேனே!” என்றாள் ஸ்ருதி.

“சரி வெளில போய் பேசலாம்” என்று எல்லோரையும் வாசலுக்கு வரும்படி அழைத்தார் கணேஷ்.

உணவகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த கணேஷ், “யாராவது அவருக்கு ஃபோன் பண்ணுங்களேன்?” என்றார்.

“நான் பண்ணிட்டேன்! வாய்ஸ் மெயிலுக்கு போகுது…எடுக்க மாட்டேங்கறாரு” என்றான் ப்ரசாத்.

“அவரு எப்போதுமே இப்படித் தான் கணேஷ்…நம்ம கூட ஒட்டவே மாட்டாரு” என்று பேசி கொண்டே நடந்தான் பாலாஜி.

கணேஷுக்கு சந்தேகமாக இருந்தது. உணவகத்தை விட்டு வெளியே வந்தவர் மீண்டும் ஒருமுறை கேட்டார், “மூர்த்தி எங்கே?”

முற்றும்.


balaji.trichy@gmail.com

Series Navigation

தி.சு.பா

தி.சு.பா