விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திநாலு

This entry is part of 27 in the series 20090507_Issue

இரா.முருகன்


29 ஏப்ரல் 1938 – ஈஸ்வர வருஷம் சித்திரை 17, வெள்ளிக்கிழமை

விடிகாலையிலேயே ஏகாம்பர அய்யர் ஓட்டலில் இண்டு இடுக்கு விடாமல் ஆள் அடைஞ்சு உட்கார்ந்து இட்லி தின்றபடி இருந்தார்கள். பாண்டி தேசத்தில் இருந்து கன்யாகுமரியும் சுசீந்தரமும் அனந்தபுரியும் ஏறி இறங்கித் தொழுது அம்பலப்புழைக்கு வந்திருக்கிற பெருங்கூட்டம் அது. பாண்டிக் காரனுக்கே கைவந்த சாமர்த்தியமாக சாப்பிட்டபடியே ஏக சத்தத்தோடு எல்லாரும் வார்த்தை வேறு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சாப்பிடாமல் ஒருத்தனும் அம்பலம் தொழப் படி சவட்ட மாட்டான் என்று நடேசனுக்குத் தோன்றியது. வயிற்றில் பசியை வைத்துக் கொண்டு கிருஷ்ணனை நினைத்தால் இட்லி ரூபமாகத்தான் பகவான் தெரிவான் என்று கோணக்கட்சி பேசினது மனசு, போத்தி வக்கீல் மாதிரி. சரிதாண்டா என்றான் எல்லாம் தெரிந்த ஸ்ரீக்ருஷ்ணன் கடைக் கல்லாவுக்கு நேர் பின்னால் படத்தில் சிரித்தபடி.

அண்ணா, வெங்காயம் போடாம ஆச்சாரமாப் பண்ணின வடை. தேக அசொக்கியம் ஏதும் ஏற்படாது, எம்புட்டு சாப்பிட்டாலும். இன்னும் ரெண்டு போட்டுக்குங்கோ.

இனிமேல் தின்றால் வயிறு ஊதி படீரென்று வெடித்து விடும் ஸ்திதியில் இருந்த ஒருத்தன் கிட்டத்தட்ட இலையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு வேண்டாம் வேண்டாம் என்று மன்றாட அவனுடைய இலையில் இன்னும் இரண்டு வடையைப் போட்டு விட்டு பஞ்சாமி பெருஞ் சத்தத்தோடு சொன்னான் –

திருச்சூர் பூரத்துலே பதினோரு யானை நின்னாலும் பந்த்ரெண்டு ஒண்ணு வந்தா கொஞ்சம் நகர்ந்து வழிவிடுறதில்லையா?

தமிழன் ஆசையோடு வடையை சட்டினியில் புரட்டி வாயில் போட்டுக் கொண்டான். தண்ணீ தண்ணீ என்று கண்ணில் ஜலம் வர காரம் சாப்பிட்டுக் கதறிய அவனுக்கு பஞ்சாமி லோட்டா நிறைய வெள்ளம் எடுத்து வந்து கொடுத்தான். அதைக் குடித்து விட்டு அவன் முகம் போன போக்கை கொஞ்ச நேரம் சுவாரசியமாக நோட்டம் விட்டார் நடேசன்.

இதென்னது கோமூத்ரத்திலே மிளகுப் பொடியைக் கலக்கிக் கொண்டு வந்திருக்கீர்?

தமிழன் எகிற பஞ்சாமி அது கரிங்காலியும், ஏலத்தரியும், ராமச்சமும் கலந்த பச்சை வெள்ளம். அனல் சூட்டுக்கும் வயிற்று வேதனைக்கும் இதமானது என்று புரிய வைத்தான். கூடவே கல்லாவில் வைத்திருந்த கரிங்காலிப் பொடி சூரண பொட்டலங்களை ஒரு அணா, அரை அணா விகிதத்தில் அந்தக் கூட்டத்தின் தலையில் கட்டவும் அவனுக்குக் கழிந்த நேர்த்தியை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனார் நடேசன்.

பஞ்சாமி பம்பரமாகச் சுழன்று ஒருத்தரையும் விடாமல், ஊசிப் போக ஆரம்பித்த முந்தைய நாள் வடையைச் சாப்பிட வைப்பதை நடேசன் கடையில் படியேறியபோதே கவனித்தார். எண்ணெய்ச் சட்டியில் இன்னொரு தடவை பொறித்து வெகு காரமான குழம்பும் சட்னியுமாக இலையில் விழுந்ததை அந்த மண்டன்மார் எல்லாரும் தேவ பிரசாதமாகக் கருதி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பஞ்சாமி கையில் சாம்பார் வாளியோடு நடேசனைப் பார்த்தான்.

வாரும் ஓய், நாலு வடை சுடச்சுட எடுத்து வைக்கட்டா? இட்டலியும் உண்டு.

பஞ்சாமியை இட்டலி மட்டும் எடுத்து வரச் சொன்னார் நடேசன். கூட சட்டினி, சாம்பார் என்று பிருஷ்டத்தில் எரிவை உண்டாக்கும் எந்த சங்கதியும் வேண்டாம். கொஞ்சம் வெல்லம், இல்லாத பட்சத்தில் ஒரு முட்டைக் கரண்டி அஸ்கா. போதும்.

கடையில் நுழைந்தபோது ஏகாம்பர அய்யரைக் கல்லாவில் காணாதது பற்றிக் குழப்பமாக இருந்தது நடேசனுக்கு. இந்த நேரத்துக்கு வீட்டில் வென்னீர்க் குளியும், தேவாரமும் முடித்திருப்பாரே அய்யர்? அது கழிந்து இலை போட்டு விஸ்தாரமான பிராம்மண போஜனமாக சாப்பாடும் முடித்து அவர் இங்கே காசு வாங்கிப் போட்டுக் கொண்டு ஏப்பத்தோடு உட்கார்ந்திருக்கிற பொழுது இல்லையா இது? ஏகாம்பர அய்யர் இல்லாமல் சாப்பிட்டு, பஞ்சாமி காசு கேட்டு வைத்தால்?

குடையை ஈட்டி மாதிரி முன்னால் பிடித்துக் கொண்டு ஏகாம்பர அய்யர் படி ஏறி வருவதைப் பார்க்க நிம்மதி வந்தது நடேசனுக்கு. அவரிடம் சொல்ல வர்த்தமானம் ஏகப்பட்டது இருக்கிறது. அய்யருக்காக நடேசன் பிரதி செய்யும் தறுவாயில் எழுத்து எல்லாம் உதிர்ந்து போன டாக்குமெண்ட் பற்றியும் அதில் உண்டு.

நடேசன் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நீலகண்டன் வக்கீலும் சக வக்கீலன்மாரும் பிரம்ம ஞான சபையில் முந்தின நாள் ராத்திரி சியான்ஸ் வைத்தது முடிந்தபோது நடு ராத்திரியாகி விட்டது. சியான்ஸ் என்ற அதியற்புதமான பதமே நடேசனுக்கு ரொம்ப தாமதமாக, முந்தைய நாள் ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் தான் தெரிய வந்தது.

ஐ ஆம் பர்வதவர்தினி. இண்டர்ட் இன் எடின்பரோ.

ஸ்கோட்லாந்து தேசம் எடின்பரோ பட்டணத்தில் ஒரு கிறிஸ்தியானி கல்லறையில் அடக்கமாகி இருக்கும் தமிழ் பிராமண ஸ்திரி பேசறாள்.

சதுரம் சதுரமாகக் கோடு கிழித்த காகிதத்தைக் காட்டி நீலகண்டன் பிள்ளை நடேசனுக்குச் சொன்னபோது நடேசன் அட்சரம் புரியாமல் அவரைப் பார்த்தார்.

காகிதத்தில் பள்ளிக்கூடக் குழந்தை எழுதிப் பழகின மாதிரி ஏ, பி, சி, டி மொத்தமும் எழுதி சதுரத்தில் அடைத்து அதுக்கு மேல் ரரஜா தலைக் காசை வைத்து நகர்த்திக் கொண்டிருந்தார்கள் பக்கத்தில் போத்தி வக்கீலும் இன்னும் ரெண்டு வக்கீல்களும்.

வக்கீலன்மார் எல்லாம் சத்தியாக்கிரஹம், கும்பளங்காய் என்று காந்தி கட்சி பேசித் திரிந்து திரிந்து தலைக்கு வட்டு பிடித்து விட்டிருக்கும் என்று முதலில் நினைத்தார் நடேசன்.

நீலகண்டன் பிள்ளையை சத்தம் போட வேண்டாம் என்று போத்தி வக்கீல் உதட்டில் விரலை வைத்து சைகை காட்டும்போது கொளுத்தி வைத்திருந்த மெழுகுவர்த்தி அம்பலத்தில் பத்ர தீபம் போல கொழுந்து விட்டு ஜகஜ்ஜோதியாக ஒரு கணம் ஒளிர்ந்து அடுத்த கணம் புகை கவிந்தது. அதற்கும் அடுத்த கணம் அது திரும்ப வெகு பிரகாசமாக வெளிச்சம் போட்ட போது நடேசனுக்கு ஒரு வினாடி மூச்சு நின்று போனது. யக்ஷிக் கதை மாதிரி இல்லையோ இருக்கு இது?

ஆவி பேசுகிறது என்றார் நீலகண்டன் வக்கீல் நடேசன் காதில் மட்டும் விழும்படியாக. கைகால் நடுங்க ஆரம்பிக்க, அம்பலப்புழை கிருஷ்ணனை உடனடியாக வரும்படி கூப்பிட்டார் நடேசன்.

வர சாத்தியப்படாதுடா நடேசா.

கிருஷ்ணன் அம்பலத்தில் நின்றபடிக்கு உறக்கச் சுவட்டோடு சொல்லிவிட்டான்.

நடேசனுக்கு மூச்சுத் திணறல் உண்டானதைப் பார்த்த நீலகண்டன் வக்கீல் மெல்ல அவர் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தார். பானையில் இருந்து ஒரு மடக்கு தணுத்த வெள்ளம் குடிக்கச் சொன்னார் அவர். கிட்டத்தட்ட முழுப் பானை வெள்ளமும் தொண்டை கடந்து போன பிறகு நடேசனுக்கு போதம் வந்தது.

வக்கீல் சாரே, என்னவாக்கும் நடக்கறது முறிக்குள்ளே?

சியான்ஸ் என்றார் நீலகண்டன் வக்கீல். அப்புறம் வெகு சுருக்கமாக ஆவிகள் வந்து அந்தப் பலகையில் இங்கிலீஷ் எழுத்து மூலம் வர்த்தமானம் சொல்வதைப் பற்றி விளக்கினார் அவர்.

இங்கிலீஷ் தெரியாத ஆவிகள் கூட இதிலே வந்து பேசுமோ?

நடேசன் கேட்க, நீலகண்டன் பிள்ளை அவர் அறியாமையை நினைத்துச் சிரித்தார்.

மேலே போனதுக்கு அப்புறம் எல்லோருக்கும் இங்கிலீஷ் அர்த்தமாகிடும்.

வக்கீல் சொன்னால் சரியாக இருக்கும். காந்தி கிறுக்கு பிடித்து கோர்ட் பக்கமே போகமாட்டேன் என்று தீர்மானத்தோடு ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டு வீட்டில் உட்கார்ந்தாலும் மனுஷருக்கு விஷய ஞானம் அபாரம்.

காகிதத்தில் வந்து பேசுகிற ஆவி எதுவும் கூடி இருக்கப்பட்டவர்கள் மேலே குடி புகாது என்றும் வக்கீல் நிச்சயமாகச் சொல்ல, நடேசனுக்கு இருந்த பயம் மெல்ல விலகி, வக்கீலைத் தொடர்ந்து திரும்ப சியான்ஸ் பார்க்க உள்ளே போனார் அவர்.

அவர் சியான்ஸ் முறிக்குள் போனபோது மெழுகுவர்த்தி அணைந்து திரும்ப அதை உயிர்க்க வைக்க மும்முரமாக ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

டோண்ட் பிலீவ் தட். ஷீ இஸ் நாட் பர்வதவர்த்தினி.

போத்தி வக்கீல் திரும்பத் திரும்பச் சொன்னார். பக்கத்தில் யாரோ ஆமோதித்தார்கள்.

சியான்சில் வந்து களேபரம் விளைவிக்க என்றே ஏதோ ஒரு வெள்ளைக்கார ஆவி குறுக்கே புகுந்து குழப்பி விட்டுப் போனதாம் இத்தனை நேரம். இப்போது வந்திருப்பது சுத்த பத்தமான பாரத தேசத்து உயிராம்.

வக்கீலன்மார் எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்று நடேசனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் சட்டம் படித்தவர்கள் சொன்னால் நம்பலாம் என்று அவருக்கு அம்பலப்புழை ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான்.

புதுசாக காகிதத்தில் வந்த ஆவி சொன்னது இந்தப்படிக்கு இருந்தது –

நான் அம்பலப்புழை மகாதேவய்யன். இங்கே பிரஸ்தாபமான ஸ்திரி பர்வதவர்த்தினி என் பார்யை ஆவாள். அவள் எந்தப் பட்டணத்திலும், நஸ்ராணி கல்லறை எதிலும் அடக்கமாகவில்லை என்பதை வெகு வினயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கொல்ல வருஷம் ஆயிரத்து எழுபத்து நாலில் நானும் அவளும் பெண்குட்டி குஞ்ஞம்மிணியுமாக கொல்லூர் போனபோது நாங்கள் மூணு பேரும் தொலைந்து போனோம். மரித்துப் போகவில்லை. காலமும் நேரமும் இல்லாத வெளியில் சதா சுற்றி அலைகிற படிக்கு விதிக்கப்பட்ட துர்பாக்கியசாலிகள் நாங்கள்.

இங்கே இருக்கப்பட்ட நடேசன் என்ற வக்கீல் குமஸ்தனுக்கு ஒரு வார்த்தை சொல்லி நான் கிளம்பிப் போகிறேன்.

அவனும் ஏகாம்பர அய்யன் என்ற சாப்பாட்டுக் கடைக்காரனும் காணாமல் போக்கிய டோக்குமெண்ட் கோப்பி தற்போது மதராஸ் பட்டணத்தில் உள்ளது. மகா கனம் பொருந்திய நீலகண்டன் பிள்ளை வக்கீல் இதை நல்லபடிக்கு சிரத்தையில் செலுத்தி நடேசனுக்கு உதவி செய்ய வேண்டிக் கொள்கிறேன். கிருஷ்ணார்ப்பணம்.

எழுத்து எழுத்தாக போத்தி வக்கீல் எழுதிக் கொண்டே இருக்க, நீலகண்டன் பிள்ளை வக்கீல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக் கொண்டே போனார். அவர் படிக்கும்போதே நடேசனுக்கு அதெல்லாம் அர்த்தம் ஆனது. அந்த ஆவி அய்யனோ, அம்பலப்புழை கிருஷ்ணனோ அவருடைய இங்கிலீஷ் ஞானத்தையும் ஒரே ராத்திரியில் விருத்தி செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இன்னும் ரெண்டு இட்லி போடட்டா நடேசன்?

பஞ்சாமி அவர் இலையைக் காட்டிக் கேட்டபோது நினைவை சியான்ஸில் இருந்து வலுக்கட்டாயமாகப் பிய்த்துக் கொண்டு ஏகாம்பர அய்யர் ஓட்டல் பாண்டிக் களேபங்களோடு ஐக்கியமானார் நடேசன்.

அவர் கை அலம்பி வந்தபோது தான் ஏகாம்பர அய்யர் கல்லாவுக்கு பக்கமாக போட்டிருந்த மர ஸ்டூலில் அவரை உட்காரச் சொல்லிக் கை காட்டியது.

ராத்திரி சியான்சுக்குப் போயிருந்தீரோ?

எங்கே ஆரம்பிக்கலாம் என்று நடேசன் தீர்மானத்துக்கு வந்திருக்காத நிலையில் சட்டென்று பட்டர் அடியையும் முடியையும் சேர்த்துப் பிடித்ததும் தடுமாறிப் போனார் நடேசன். இவருக்கு எப்படியோ காற்று வாக்கில் சியான்ஸ் பிரஸ்தாபம் வந்து சேர்ந்து விட்டிருக்கிறது. அதுவும் ராத்திரி விடிந்து விடிகாலை ஆவதற்குள்.

பாண்டி பட்டன்மார் எட்டுக் கண்ணும் விட்டெறிய ஆள் அம்பு வைத்து நிர்வாகம் செய்து காசு பார்க்கிறது சும்மாவா என்ன? இப்படி ஊரில் நடக்கிற ஒண்ணு விடாமல் தெரிந்து வைத்திருக்கிற சாமர்த்தியமும் அதுக்கு ரொம்பவே ஒத்தாசை செய்திருக்க வேணும்.

சியான்ஸ் காகிதத்தில் வந்தவன் ஏகாம்பர அய்யருடைய டோக்குமெண்ட் பற்றிச் சொன்னது கூட வார்த்தை பிசகாமல் அய்யர் வசம் வந்து சேர்ந்திருந்தது.

காலையில் அம்பலம் படிஞ்ஞாறே நடையில் போத்தி வக்கீலைப் பார்த்தேன்.

அவர் சொன்னபோது தான் நடேசனுக்கு விஷயம் விளங்கியது. போத்தி சொன்னாரோ, இல்லை அம்பலத்துக்குள் பகவான் தான் சொன்னாரோ, சங்கதி தெரிந்தால் சரிதான்.

அந்த டோக்குமெண்ட் எப்படி எங்க குடும்பத்துக்கு வந்ததுன்னு சியான்ஸிலே சொல்லப்பட்டிருக்காதே?

சொன்னதாக நடேசனுக்கு நினைவு இல்லை. அவர் கவனிக்காமல் விட்டிருக்கலாம். எல்லாமே இங்கிலீஷில் இருந்ததே. ஆனாலும் நேற்று ராத்திரிக்கு முழுக்க முழுக்க அந்த பாஷை அர்த்தமானதால் அப்படி ஏதும் நடந்திருக்க முடியாதுதான்.

ஏகாம்பர அய்யர் கேட்டதோடு நிறுத்தாமல் கல்லாவில் காசை வாங்கிப் போட்டு மீதி சில்லறை கொடுத்தபடி சுறுசுறுப்பாக நாற்பது வருஷப் பழைய கதையை நிதானமாகச் சொல்லி முடித்தார் நடேசனிடம்.

அந்த வேதக்காரன் எங்க தகப்பனார் விஸ்வநாத அய்யருக்கு ஒத்தி வச்சுப் போன நிலப் பத்திரம் தான் நீர் டோக்குமெண்ட் கோப்பி செய்ய எடுத்தது.

ஏகாம்பர அய்யர் நடேசனிடம் சொன்னபோது அம்பலப்புழை அம்பலத்தில் சீவேலியும் ஸ்ரீபலியும் முடிந்து செண்டை முழங்குகிறது காற்றோடு வந்தது.

ஓய் நடேசன், நான் முடிவு எடுத்தாச்சு.

ஏகாம்பர அய்யர் நடேசனைக் கூர்ந்து பார்த்தார்.

நீர் உடனே கிளம்பி மதராஸுக்குப் போய்ட்டு வாரும். நீலகண்டன் வக்கீலும் போத்தி வக்கீலும் நீர் அங்கே செய்ய வேண்டியதெல்லாம் என்னவாக்கும்னு சொல்லுவா. செலவுக்கு காசு பத்தி யாதொரு கவலையும் பட வேணாம். நானாச்சு அதுக்கு.

போய்ட்டு வா என்றான் கிருஷ்ணனும்.

(தொடரும்)

Series Navigation