விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு

This entry is part of 46 in the series 20090108_Issue

இரா.முருகன்


பிராண சகியும் மாதர் குல மாணிக்கமும் தீர்க்க சுமங்கலியுமான லலிதாம்பிகைக்கு அகம்படையானான மகாலிங்க ஐயர் எழுதிக்கொண்டது. இப்பவும் இவிடம் நான் க்ஷேமம். பதில் லிகிதம் எழுதுவித்து உன் க்ஷேமத்தையும் சொல்ல வேண்டியது. நீ மனசாற வழிபாடு பண்ணுகிற திருக்கழுக்குன்றத்து பக்தவத்சல ஸ்வாமி க்ருபையில் உனக்கு குறைவொண்ணும் வராது என் கண்ணே. வரவும் கூடாது என்பதே நான் மனசார பிரார்த்திக்கிறதும்.

நான் இதை அந்நிய தேசத்தில் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். சமுத்திரம் கடந்து முப்பத்து மூணு நாள் கப்பலில் யாத்திரை செய்து இங்கே வந்து ஒரு மாசமாகிறது. வந்தபடிக்கே வயிற்றுப் போக்கும், உப்பு நீர் வாடை நாள்பட சுவாசித்து, போஜனத்தோடு உட்கொண்ட காரணத்தால் தீராத குமட்டலுமாக ரோகம் பிடித்துக் கிடந்து இப்போதுதான் ஸ்வஸ்தமாகி நடக்க முடிகிறது. நாளை முதல்கொண்டு நான் வேலைக்குப் போக வேண்டும். அதுக்கு முந்தி உனக்கு தகவல் அறிவிக்க வேணும் என்று நிச்சயித்து இதை எழுதலானேன். உத்தேசமாக உன் அம்மாள் பேரும் திருக்கழுக்குன்றம் என்று ஊர்ப் பெயரும் மட்டும் விலாசமாகக் கொடுத்து அனுப்பி வைக்கிற இந்தக் கடுதாசு எப்படியாவது உன்னிடம் சேர்ப்பிக்கப்பட்டு விடும் என்று நிச்சயமாக எனக்குத் தெரிகிறது. தக்கவராக, நம் குடும்ப வியவகாரங்களை வெளியே சொல்லாமல் இதைப் படித்து உனக்கு மட்டும் சொல்லி அப்புறம் இதைக் கிஞ்சித்தும் நினைக்காத நல்மனசு உள்ள பெரியவாள் யாரேனும் அங்கே இருக்கக் கூடும். எல்லா ஊரிலும் அன்னார் உண்டு. அவர்கள் மூலம் படிக்கவும் பதில் எழுதவும் செய்ய வேண்டியது.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கீர்த்தியோடும் க்யாதியோடும் நேவிகேஷன் க்ளார்க்காக உத்யோகம் வகித்த மகோத்தமர் வைத்தியநாத அய்யரின் புத்திரனான நான் சகல பிரஷ்டத்துக்கும் அருகதையுள்ளவனாக, நாயினும் கடையோனாக இப்படி மிலேச்ச தேசத்துக்கு வந்து சேர்ந்திருப்பது அநாச்சாரமும், வெளியே சொல்ல அவமானகரமானதுமான விஷயம் என்று எனக்கு வெகு துல்யமாகத் தெரியும். உன்னாலும் பொறுக்க ஒண்ணாத அவமானம் இது. எனினும் உனக்குச் சொல்லாமல் மனசில் பூட்டி வைத்தால் நான் நரகத்துக்குப் போவேன் என்பது நிச்சயம். ஏற்கனவே காராக்ரஹத்தில் அடைபட்டு பீடை பிடித்து ஏழு வருஷம் கழிக்க வேண்டி வந்தது என் துர்பாக்கியம். அது தொடராமல் இருக்க, உன்னையும் வந்து அண்டாமல் அந்தாண்டை விலகி நிற்க தினசரி நீ பக்தவத்சலன் சந்நிதியில் ஒரு இலுப்பெண்ணெய் விளக்காவது ஏற்றி நமஸ்காரம் பண்ணிப் பிரார்த்திக்க வேண்டியது. உனக்கு ஒரு குறைச்சலும் வராது லலிதே.

உன்னை விட்டுப் பிரிந்த ஒரே ஒரு ராத்திரி தொடங்கி அடுத்த நாள் மத்தியானம் வரைக்கும் நான் காமாந்தகாரனாகிப் போகாமல் இருந்திருந்தால் அந்த ரெட்டிப் பெண்ணை மானபங்கப்படுத்தி படுகொலை செய்ததாக வீண் பழியும் அபவாதமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. மதராஸ் பட்டண ஜெயிலில் அடைத்து வைத்து கோர்ட் கச்சேரியில் விசாரித்து என்னைத் தூக்கில் ஏற்றிக் கொன்று போடும்படி தீர்ப்பும் ஆகியிருக்காது. எல்லாம் நான் திருக்கழுக்குன்றம் தனியாகப் போன தினத்தின் விசேஷமல்லாமல் வேறேதுமில்லை என்று இத்தனை வருஷம் பூர்த்தியான பிற்பாடு தெள்ளென விளங்குகிறது எனக்கு. உனக்கும் அதைச் சொல்கிறேன், கேள்.

அன்றைக்கு இங்கிலீஷ் தேதி டிசம்பர் நாலு என்று வெகு பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்தது. 1899-ம் வருஷத்தின் கடைசி மாதத்தில் வந்த அந்த அசுப தினத்தில் ஏழு கிரகங்கள் கூடும் ஜோதிஷ, ஆகாய சாஸ்திர விபரீதமொன்று சம்பவிக்கப் போகிறது என்று அதுக்குப் பத்து தினம் முன்பு, அதாவது என் பூஜ்ய பிதா வருஷாப்திக்கு ரெண்டு நாள் முன்பு எங்கள் மூக்குத்தூள் கடை நிர்வாகியான ராவ்காரு சொல்லியிருந்தார். நான் தான் அங்கே இங்கே அலைந்து திரிவதிலும், பங்காரு தாசி சகோதரன் மூலம் கழுக்குன்றம் யாத்திரை போய்வரக் காளை வண்டி ஏற்பாடு செய்வதிலும் அதை மறந்து போனேன். உனக்கு மாசாந்தர தூரம் முன்கூட்டியே ஏற்பட்டு ஒதுங்க வேண்டி வந்ததும், வேண்டிக் கொண்டபடிக்கு தம்பதி சமேதனாகப் புறப்படாமல், நான் தனியே கழுக்குன்றம் போய் வர வேண்டிப் போனதும் எல்லாம் சேர்ந்து மனசில் உளைச்சல் உண்டான காரணத்தாலேயே அதை மறந்தது.

மறக்காமல் இருந்தாலும் நான் ஜில்லா கலெக்டர், சர்க்கார் மேல் உத்யோகஸ்தன், போலீஸ் சூப்பரெண்ட் போல் அதிகாரத்தை பிரயோகித்து முன் ஜாக்கிரதையாக ஏதும் நடவடிக்கை எடுத்திருக்கச் சக்தியில்லாதவன். மாயவரத்து வித்தைக்கார ஐயங்கார் போல இந்திரஜாலம் ஜெகஜ்ஜாலம் செய்து அந்த ஏழு கிரகத்தையும் ஒன்றோடு ஒன்று பிருஷ்டம் ஈஷ அடித்துப் பிடித்துக் கொண்டு ஒரே ஸ்தலத்தில் நிற்காமல் விலக்கி இருக்கவும் முடியாது. ஆனாலும் குறைந்த பட்ச முஸ்தீபுகளோடு யாத்திரையைத் தள்ளிப் போட்டிருப்பேன். கிரமப்படியான நித்ய ஜீவனத்தைத் தொடர்ந்து உனக்கும் சுபாவமான இனங்களில் பெரிசாகக் குறைச்சல் வைக்காமல் ஜீவனோபாயத்தை மேற்கொண்டு முன்னால் போயிருப்பேன். மைலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் இருக்கப்பட்ட கொஞ்ச நஞ்சம் ஜலத்தில் ஸ்நானம் செய்து கபாலீசுவரரை நமஸ்கரித்து நவக்ரஹ தேவர்களைச் சுற்றி வந்து அதில் ஏழு பேரோ அவர்களின் தாயாதி, பங்காளிகளோ முன்கூட்டிப் பேசி வைத்துக் கொண்டு அபிவாதயே சொல்லி ஒருத்தருக்கு ஒருத்தர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யும்போது என்னை இம்சிக்காமல் இருக்கச் சொல்லி வேண்டியிருப்பேன். எனக்கு இது விஷயமாக வெண்பா எழுதவும் முடியும்.

இந்தப் பாவிக்குத் தூக்கு தண்டனை நிச்சயமாகி ஏதேதோ காரணத்தால் தள்ளிப் போடப்பட்டு ஒவ்வொரு நாளும் கம்பிக் கதவுக்கும் கல் சுவருக்கும் பின்னால் கட்டாந்தரையில் உட்கார்ந்து மனசெல்லாம் தகித்துச் சித்தரவதை அனுபவித்ததை உன்னைப் பார்த்ததும் ஆலிங்கனம் செய்து கொண்டு கண்ணில் தாரைதாரையாக நீர் வடிவதை துடைத்தபடி சொல்ல வேணும். உன் மடியில் முகத்தை வைத்தபடி சிசு மாதிரி கேவி அழுது, உன் காலைத் தொட்டு நமஸ்கரித்து நான் செய்த, நினைத்த பாபம் அத்தனைக்குமாக மன்னித்தருளச் சொல்லிக் கெஞ்ச வேணும் என்றெல்லாம் சித்தம் செய்திருந்தேன். நிராதரவாக உன்னை விட்டுவிட்டு இப்படி அடைபட்டு நீ பசியும் பட்டினியுமாக ஜீவனத்துக்கு வழி இன்றி பரிதவிக்க நேர்ந்தது என்னால்தான். அதற்காகவே எனக்கு ரெண்டு தூக்கு தண்டனை கொடுத்தாலும் தகும். நான் பயந்த, இன்னும் பயப்படுகிற அப்படியான ஸ்திதியில்லாமல் நீ கொஞ்சம் போலவாவது சௌக்கியமாக இருந்தால் அது உன் பூர்வ ஜன்ம பெலன் கொண்டு மட்டுமே.

ஜெயிலுக்கு ஸ்திரிகள் வருவது வழக்கம் இல்லை என்பதாலும், உன் வீட்டுக்காரர்கள் என்று சொல்லக்கூடிய தரத்தில் சகோதரனோ, அத்திம்பேர், அம்மாஞ்சியோ உனக்கு வாய்க்கவில்லை என்பதாலும் நீ என்னை வந்து பார்க்க வரமுடியாமல் போனதை நான் அறிவேன். எத்தனையோ நிலாக்கால ராத்திரிகளில் கம்பிக் கதவில் முட்டிக் கொண்டு உன் கதியை நினைத்து உருகி அழுதிருக்கிறேன். உனக்கு பகவான் எந்தக் குறையும் வைக்கக் கூடாது கண்ணே. நான் கைகூப்பி மந்திரமும், தமிழ்ப் பாட்டும் சொல்லிப் பிரார்த்திக்க நினைக்கிறேன். காயத்ரியும், தேவாரமும், திருவாசகமும் ஒண்ணும் நினைவு வரமாட்டேன் என்கிறது. ஜெயிலும் பிகில் சத்தமும் லாத்திக் கம்பு தட்டுகிற ஒச்சையும் நீச பாஷையும் தவிர வேறேதும் மனதில் வருகிறதுமில்லை.

உன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு வந்த பாபம் காரணம் ஜெயிலில் கழிந்த ஐந்து வருஷமும் தினந்தோறும் பிராண பயம் கூடிக் கொண்டே போனதே அன்றிக் குறையவில்லை. கவ்னர் துரைக்கும் இங்கிலீஷ் தேசத்து சக்ரவர்த்திகளுக்கும் நீளமாக லிகிதம் எழுதி உயிர்ப்பிச்சை தரச் சொல்லி யாசித்து ஒவ்வொரு தினம் கடந்து போகிறபோதும் பகவானுக்கு நன்றி சொல்லி என்னமோ ஜீவித்தேன் போ.

இரண்டு மாசம் முன்பாக திரும்பவும் அந்த கிரகம் எல்லாம் சேர்ந்ததோ என்னமோ அறியேன். என் ராசிக்கு கொஞ்சம் போல் நல்லது செய்யலாம் என்று அதுகளும் தீர்மானித்திருக்கக் கூடும். அதைவிட உன் மாங்கல்ய பலம் பிரதானமாக இதை நிறைவேற்றி இருக்கலாம் என்று இதை எழுதுகிற இந்த நிமிஷத்தில் தோன்றுகிறது. அந்த திருமாங்கல்யச் சரடு சகல தேவதைகளும் ஆசிர்வதித்து ஒரு புண்ய தினத்தில் மனதில் கிஞ்சித்தும் பாப சிந்தனைகள் இன்றி நான் உனக்குக் கழுத்தில் கட்டியது. லண்டன் பட்டணம் வரை அது நீண்டு சர்க்கார் காருண்யத்தையும் கடாட்சத்தையும் நித்தமும் யாசித்து சத்யவானை யமன் கொண்டு போகாமல் ரட்சித்த பதிவிரதா தெய்வம் சாவித்திரி போல் என்னைக் காப்பாற்றியது என்பது திண்ணம். மாட்சிமை பொருந்திய கவெர்மெண்ட் நான் செய்து கொண்ட அபேட்சை மேல் தயை கூர்ந்து மறு விசாரணைக்கு ஏற்பாடு செய்து என் மேல் குற்றம் ஏதும் நிரூபணமாகவில்லை என்று அபிப்ராயம் சொன்னதும் சகல தேவதைகளுக்கும், முக்கியமாக உனக்கும் மனசில் அபிவாதயே சொல்லி நமஸ்கரித்தேன்.

வத சிக்ஷையை மாற்றினாலும் இன்னும் ரெண்டு வருஷம் அடைபட்டுக் கிடக்க வந்த உத்தரவை வெகு சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். பிராண பயம் தொலைத்துத் தலைமுழுகிய சந்தோஷம் அது. அதுக்கு அப்புறம் காராகிரஹத்திலேயே ஜனித்து, வளர்ந்து வந்தவன் போல் அங்கேயும் ஜீவிதம் பழகிப் போனது. உன் நினைவும் முன்னே மாதிரி அடிக்கடி அலைக்கழிக்காமல் வந்து போக, உன்னை மறந்து கூடப் போனேன். ஒரு பாபத்திலிருந்து இன்னொரு பாபத்துக்கு நகர்கிற பாபாத்மா நான். ஒரு சந்தேகமும் இல்லை. எத்தனை தடவை உன்னை மன்னிக்கச் சொல்லி தெண்டனிடுகிறது. குனிந்து என்னை எழுப்பியே உன் முழங்கால் வலிக்க ஆரம்பித்திருக்கும். வேளாவேளைக்கு ஆகாரத்துக்கு வழியில்லாமல் கண் பஞ்சடைந்து தேகம் மெலிந்து வியர்வையும், தளர்ச்சியும் கூடியிருக்கும். நீ உசிரோடு தான் இருக்கிறாயோடி என் கண்ணுக்குக் கண்ணான லலிதாம்பாள் பரமேஸ்வரி ஜகன்மாதாவே.

போன வருஷக் கடைசியில் கிறிஸ்து நாதர் பிறந்த சுபதினத்தை உத்தேசித்தும் சக்ரவர்த்திகளின் க்ஷேமத்தை நாடியும், என்னையும் இன்னும் பத்து கைதிகளையும் விடுவித்து வெளியே அனுப்பச் சொல்லி கோர்ட் கச்சேரி உத்தரவு கிடைத்தது.

நான் அந்தப்படிக்கு வெளியே வந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை நடு மத்தியானத்தில். இனியாவது தப்பு தண்டா செய்யாமல், மனசில் காமமும், இச்சையும் விலக்கி பகவான் பாதத்தைப் பணிந்து ராஜாங்கத்துக்கு விசுவாசமான பிரஜையாக உஜ்ஜீவித்து உய்யும்படி போலீஸ் உத்தியோகஸ்தர்கள் ஒட்டுமொத்தமாகச் சொல்லி என்னை வெளியே அனுப்பி வைத்தார்கள்.

மழை பெய்ய ஆரம்பித்த அந்த மத்தியான காலத்தில் நான் சக்கரவர்த்திகள் தானமாக அளித்து தினசரி துவைத்து நீர்க்காவி ஏறிய நாலு முழ வேஷ்டியும், ஜெயிலில் போட்டுக் கொள்ளக் கொடுத்த காடாத் துணிக் குப்பாயமும், கஷ்கத்தில் துணிப் பையில் அதேபடி கிடைத்த இன்னொரு குப்பாயமும், காசித் துண்டும், அரைப் பவுன் சரட்டில் இடுப்பு அருணாக்கொடியுமாகக் கால் போன போக்கில் நடந்தேன். ஏழு வருஷத்தில் வெகுவாக மாறியிருந்தது பட்டணம். திருக்கழுக்குன்றம் மாறி இருக்காது. கழுகுகள் போஜனம் செய்ய இன்னும் வருகிறதில்லையோ? அந்த பட்சிகளை நினைத்தாலே பயமாக இருக்கு லலிதா.

ஜெயிலில் புஸ்தகம் படித்து மற்ற பிரஜைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த வகையில் எனக்குக் கையில் இருபத்தஞ்சு ரூபாயும், விக்டோரியா மகாராணி தலை போட்டிருந்த முப்பது காசுமாகக் கொடுத்தது உபகாரமாகப் போனது. அது தீர்வதற்குள் வெங்கடேச அக்ரஹாரத்துக்கு வந்து சேர்ந்து அகத்துப் படியேறி உன்னை இறுக்க ஆலிங்கனம் செய்து கொள்ளணும். சின்னதாக இருந்தாலும் அதை முதலீடு பண்ணி கீரைக்கட்டு வாங்கி விற்கிற வியாபாரமாவது செய்து மிச்ச மீதி ஆயுள் பரியந்தம் உன்னைப் பிரியாமல் இருக்க மனசு வேகம் கொண்டது. நீ அங்கே இல்லை என்றும் இன்னொரு மனசு படித்துப் படித்துச் சொன்னது.

மதியம் ஜெயிலில் சாப்பிடக் கிடைத்த கம்பங்களி நடையாக நடந்ததில் முழுக்க ஜீரணமாகி திரும்ப வயிறு இரைய ஆரம்பித்தது. ராத்திரி ஏழு மணிக்கு சாதமும், புளிக் குழம்புமாக போஜனம் கிடைக்க இன்னும் மூணு மணி நேரம் இருக்கிறது என்று என்னையும் அறியாமல் கணக்குப் போட்டேன். காராகிரஹத்தில் ராத்தங்கி இருந்தால் அது கிடைத்திருக்கலாம். இனி ஒவ்வொரு வேளை சோறுக்கும் கஞ்சி, கூழுக்கும் மணியடிக்கக் காத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்பதில் துக்கமும் சந்தோஷமும் கலந்து வந்தது அந்த நிமிஷத்தில்.

கையில் காசு தீர்வதற்குள் வியாபாரம் நடத்த உத்தேசிப்பதோடு கிடைத்தால் ஒரு உத்தியோகத்துக்கும் வழி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. குற்றேவல் என்றாலும் குறைச்சல் இல்லை. கனகதாரா ஸ்தோத்ரம் சொன்ன மாதிரி சொர்ணமழை கொட்டாவிட்டாலும் இடுப்பில் முடிய நாலு காசு வந்தால் சரிதான்.

இந்த யோசனை வந்ததும் வெங்கடேச அக்ரஹாரம் போகிற பாதையில் மேற்கொண்டு நடக்காமல் திரும்பி எங்கள் கடைப் பக்கம் நடக்க ஆரம்பித்தேன். வழியில் ஒரு சாப்பாட்டுக் கடையில் நாலு இட்டலியும் சுண்டலும் வாங்கிச் சாப்பிட்டேன். தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டி இருக்காமல் மர மேஜையும் நாற்காலியும் போட்டு வைத்து பரிமாறிக் கொண்டிருந்த சாப்பாட்டுக் கடை பார்க்க நூதனமாக இருந்தது. காலணாவுக்கு இரண்டு இட்டலி முன்பெல்லாம் கிடைத்ததற்கு மாறாக ஒரே ஒரு இட்டலி மட்டும் கிடைக்கிற விலைவாசி நிலவரத்தில் பயந்து போனேன். குற்றேவல் செய்து இட்டலி தின்ன முடியுமா? இட்டலியும் தோசையும் வீட்டிலேயே செய்துவித்து கூவிக் கூவி விற்றால் சரிப்படுமா? உன்னையே கேட்க வேணும் என தீர்மானித்தேன். ஏழு வருஷம் கழித்துப் பார்க்கிற புருஷன் பெண்டாட்டியிடம் பேசுகிற முதல் விஷயம் இட்டலிக் கடையாகவா இருக்கும்? ஒண்ணும் புரியவில்லையடி.

இட்டலி தின்று முடித்து இலையை எச்சில் தொட்டியில் எறிந்துவிட்டு மர பீப்பாயில் பிடித்து வைத்த உப்புத் தண்ணீரில் கை அலம்பி வந்தபோது ஒரு கூட்டம் யாசகர்கள் கடை வாசலில் நிற்பதும், ஆளுக்கு ஒரு சல்லி வாங்கியபடி அவர்கள் எல்லோரும் கூட்டமாக நடந்து போவதும் பார்வையில் பட்டது. அதற்குள் கடைக்காரன் நான் கொடுத்த விக்டோரியா காசு செல்லாது என்று வேறு காசு தரச் சொன்னான். கவர்மெண்ட் ஆபீசில் வேலை செய்து வாங்கி வந்த பணம். சந்தேகமிருந்தால் என் கூட வா. ஆபீசைக் காட்டுகிறேன் என்றேன். சரி போகலாம் என்று வந்து விடுவானோ என பயம் இருந்தாலும், அவன் என் தீர்மானமான பதிலைக் கேட்டு கொடுத்த துட்டையே வாங்கிக் கொண்டு ஒரு முணுமுணுப்போடு என்னை போக அனுமதித்தான். பாக்கிப் பணம் என்னாச்சு என்று கேட்டேன். போய்யா இங்கே நின்னு தகராறு பண்ணாமே, உன் நாணயத்துக்கு இந்த இட்டலியும் சுண்டலுமே அதிகம் என்றான் அந்தப் பாவி.

வெளியே வந்தபோது தான் கவனித்தேன். தூரத்தில் போய்க் கொண்டிருந்த யாசகர் கூட்டத்தில் மடிசார் புடவையோடு ஒரு பிராம்மண ஸ்திரியும் இருந்தது புலப்பட்டது. நீதானா அது என்று ஒரு நிமிஷம் மனம் அடித்துக் கொண்டது. இருக்காது, நீ தாயார் வீட்டுக்கு பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருப்பாய். அழுதாலும் வயிற்றுக்கு காலோ அரையோ நீதி காட்டி உசிரை உடம்பில் ஓட்ட வைத்தபடி அங்கேயே நாளைக் கடத்திக் கொண்டிருப்பாய் என்று மனதில் இன்னொரு பக்கம் நினைப்பு. ஆனாலும் அந்த ஸ்திரி வலது பக்கம் கொஞ்சம் சரிந்து ஆடி ஆடி நடக்கிற தோரணை நீ நடக்கிற மாதிரி இருக்கிறதே. திரும்பிப் போய்க் கொண்டிருப்பதால் முகமும் புலப்படவில்லை. காலில் அழுக்குச் சுருணை சுற்றியிருக்கிறாள். ரோகியும், நிர்பாக்கியவதியுமான அந்த யாசகி நீ இல்லையே.

பலமாக உன் பெயரைச் சொல்லி நாலு தடவை சத்தம் போட்டேன். அந்த ஸ்திரி திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று மனசார வேண்டிக் கொண்டேன். என்னமோ தோன்ற தெலுங்கிலும் கத்தினேன். யாசகர்கள் கூட்டத்துக்கு என் கூச்சல் காதில் விழத் தடையாக ஜட்கா வண்டிகள் தெரு முழுக்க ஊர்ந்து கொண்டிருந்தன. லலிதாம்பிகே, நீதானா அது?

திரும்பவும் கூவ முற்பட்டபோது, கடைக்காரன் இறங்கி வந்து தோளில் கையை வைத்துக் குலுக்கினான். அவன் பார்வை விரோதமாக இருந்தது.

இங்கே நின்று என்னத்துக்கு இரைச்சல் போட்டு ஊரைக் கூட்டுகிறீர். உமக்கு ஏதாவது சித்தப் பிரமையா இல்லை கடையில் சாப்பிட வருகிறவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுத்து வரவிடாமல் செய்ய உம்மை மயிலாப்பூர் பார்ப்பான் அனுப்பினானா? நீர் கொடுத்த காசைத்தான் மேற்கொண்டு ஏதும் கேட்காது நான் வாங்கி இழவே என்று கல்லாவில் போட்டுக் கொண்டேனே. போதாதா?

அவன் கேட்டபோது தான் கவனித்தேன். பேசிய தமிழ் வித்தியாசமாக இருந்தது. தெலுங்கு இல்லை. இந்துஸ்தானி மாதிரியானது அது. அப்போ, இவனும் உக்கிராணத்தில் சமைக்கிறவனும், எனக்கு இட்டலி கொடுத்தவனும் பிராமணன் இல்லையா? கடை வாசலில் பிராமணாள் சாப்பாட்டுக் கடை என்று எழுதி வைத்த பலகையும் இல்லையே. பேசாமல் காசிப்பாட்டி கடைக்கே போயிருக்கலாமோ என்று மனதில் சஞ்சலம். அத்தோடு யாசகர் கூட்டத்தை மறந்தும் போனேன்.

நான் வேறே எதுவும் பேசாமல் ஒரு ஜட்கா ஏற்பாடு செய்து கொண்டு எங்கள் கடை இருந்த தெரு முனைக்குப் போய் இறங்கினேன். கடை வாசலுக்கே போய் வண்டியை நிறுத்தி இறங்கலாம்தான். ஆனால் நான் என்ன பரதேச பிரயாணமோ, வாரணாசிக்குப் புண்ய ஸ்தல யாத்திரையோ போய்விட்டா திரும்பி இருக்கிறேன். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஏழு வருஷம் சர்க்கார் சிறைச்சாலையில் களி தின்று நீர்க்காவி ஏறிய வேட்டியும் முகத்தில் நாலு நாள் தாடியும் கலைந்த தலையுமாகத் வருகிறேன். இந்தக் கடை நான் திரும்ப நுழைய ஏற்பட்ட இடம் இல்லை. அந்த யாசகர் கூட்டம் வேணுமானால் எனக்குச் சரிப்பட்டு வரலாம். கையில் இருந்த இருபத்தஞ்சு ரூபாய் செலவானால் நானும் அங்கே சேர்ந்து விடலாம். காலில் அழுக்குச் சுருணையோடு நீ நடக்க வேணாம். என் கஷ்கத்தில் துணிப்பையில் பழைய சோமன் இருக்கே. கிழித்துக் கட்டி விடுகிறேன்.

கடைத் தெருவே ஏழெட்டு வருஷத்தில் நிறைய மாறி இருந்தது. கடைக்குக் கொஞ்சம் தொலைவில் நின்று நடவடிக்கைகளைப் பார்த்தேன். ராவ்காரு எங்கே? வாழைப்பட்டையில் மூக்குப்பொடி மடித்துக் கொடுத்த சிநேகிதர்கள் எங்கே? மூக்குத் தூள் வியாபாரம் செய்யும் இடமாகத் தெரியவில்லையே. வேறே என்ன இங்கே விற்கிறார்கள்? யார் நடத்துகிறார்கள்? நம்மைத் தெரிந்திருக்காத பட்சத்தில் ஒரு உத்தியோகத்துக்கு யாசிக்கலாமா? என்ன கொடுத்தாலும் வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு இடுப்பில் முடிந்தபடி திரும்ப வேண்டும். வரும்போது உனக்கும் இட்டலி வாழை இலையில் கட்டச் சொல்லி வாங்கி வரவேண்டும். இந்துஸ்தானி கடையில் வேண்டாம். காசிப்பாட்டி சாப்பாடுக்கடையில்.

ஒரு வேலை வேணும்.

நான் முன்னால் போய் நின்றபோது கல்லாவில் உட்கார்ந்திருந்த துருக்கன் சிரித்தான்.

அரே சைத்தான் கா பச்சா. ஆட்டுத் தோலும் மாட்டுத் தோலும் விக்கற கடையிலே பாப்பாரப் பிள்ளைக்கு என்ன ஜோலி? ஹராம்கோட் ஹட் ஜா.

வைத்தியநாத ஐயர் சைத்தான் இல்லை. அவருக்குப் பிறந்த நான் தான். தோலோ துருத்தியோ இருக்கிற இடத்தில் ஒண்டிக் கொண்டு வேலை பார்க்க சித்தம் செய்து கொண்டவன். வைத்தியநாதய்யன் சீமந்த புத்ரன் மகாலிங்கய்யன் சுபமரணம். இந்த க்ஷணத்தில் இருந்து.

நான் பிராமணன் இல்லை. தெலுங்கு தேசத்தான். வரதராஜ ரெட்டி என்பது என் நாமமாகும்.

(தொடரும்)

Series Navigation