விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது

This entry is part of 32 in the series 20081225_Issue

இரா.முருகன்


திருமேனி. அகத்து திருமேனி உண்டோ?

கிட்டாவய்யன் வாசலில் ஒச்சை கேட்டுக் கண் விழித்தான்.

யாராக்கும் இப்படி ஒரு பக்கம் விடிந்து கொண்டிருக்கும்போதே ஊளையிட்டு உபத்திரவப் படுத்துகிறது? திருமேனியா? எடோ கழுவேறி, எந்தத் திருமேனி வேணும் உனக்கு? இங்கேயும் எங்கேயும் நாற்றம் பிடித்த மேனியும் யோனியும் தவிர வேறேதும் உண்டா என்ன.

திருமேனி.

மேல் தோர்த்தைப் போர்த்திக் கொண்டு வாசலுக்கு வந்தபோது அங்கே கெச்சலாக ஒரு பிராமணன் நின்றிருப்பதைக் கண்டான் கிட்டாவய்யன். மாத்வன் என்று நெற்றியில் கோபி முத்திரை நேரடியாக விலாசம் சொன்னது. கன்னடத்துக் காரன். கடன் கேட்க யாராவது அனுப்பி வைத்திருக்கிறார்களா இவனை? என்னத்தை அடமானம் பிடித்துக் கடன் தர? காதில் அழுக்கான கடுக்கன் பத்து சக்கரம் பெறுமா? இடம் மாறி வந்து இழவெடுக்கிறான் போல. புறத்தாக்கித் துரத்தணும்.

யார் வேணுமய்யா உனக்கு?

கிட்டாவய்யன் கேட்டபோதே அவனுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் சாவக்காட்டு வயசன் நினைவுக்கு வந்தான். இப்படித்தான், இதைவிட தரித்திரனாக அலைந்து கொண்டிருந்தவன் அவன். கிட்டாவய்யன் சமைக்கப் போன இடத்தில் காய்கறி நறுக்கிக் கொடுத்து ஒத்தாசை செய்ய வந்து ஒரு கும்பா சோற்றை மட்டும் யாசித்தவன். சொறி நாயைப் போல அவனை அடித்துப் புறத்தாக்கின அப்புறம் ஒரு திருநாளில் சாவக்காட்டான் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். கிட்டாவய்யன் அவன் தயவுக்காக வாசல் படியேறிக் காத்துக் கிடக்க வேண்டிப் போனது.

ஆகட்டுமே, கிட்டாவய்யனை ஜான் கிட்டாவய்யன் ஆக்கி இந்த ரெண்டு கட்டு வீட்டையும் வீட்டில் தனத்தையும் உண்டாக்கிக் கொடுத்தது சாவக்காட்டானும் கிறிஸ்து நாதரும் தானே?

இவன் யாரோ தெரியவில்லை. இவனையும் சவிட்டி இன்னொரு சாவக்காட்டான் ஆக்க வேண்டாம். இருக்கப்பட்ட வேதத்தில் இருந்து இறங்கி இன்னொரு வேதத்தில் ஏற வயசும் தளர்ச்சியும் அனுமதிக்கப் போவது இல்லை கிட்டாவய்யனை. இருக்கும் காலம் வரை ஜான் கிட்டாவய்யனாகவே இருந்துவிட்டு அப்புறம் குரிசுப் பள்ளிக்குப் பின்னால் சவக் குடீரத்தில் அடங்கி விடத்தான் இனிமேல் கொண்டு நேரம் இருக்கிறது. ஆவி மேலே போகும்போது பரிசுத்த ஆவியின் கலந்தாலும் பகவான் கிருஷ்ணனில் லயித்தாலும் கிட்டாவய்யனுக்கு எந்த விரோதமும் இல்லை. நல்லதுக்குத்தான் அது எல்லாம்.

நமஸ்காரம் திருமேனி. இளைய திருமேனி அகத்துண்டோ?

மாத்வ பிராமணன் பிட்சை வாங்கத் தயாரானது போல் அங்க வஸ்திரத்தைத் தோளில் இருந்து இறக்கிக் கையில் தழையத் தழைய வைத்துக் கொண்டு வெகுவான மரியாதையோடு விசாரித்தான். அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது கிட்டாவய்யனுக்கு.

இடம் மாறி வந்திருக்கிறீர். வலியது, செறியது, வண்ணம் கொண்டு தடி வச்சதுன்னு எந்தத் தோதில் பட்ட திருமேனியும் இங்கே இல்லை. அச்சு அசல் கிறிஸ்தியானி கிரஹம் இது. மேலே வாசல் நிலையைப் பாரும்.

கிறிஸ்து நாதருக்கும் ஸ்தோத்ரம்.

மாத்வன் சத்தத்தைக் கூட்டிச் சொல்லி, வீட்டு நிலைவாசலில் பதித்திருந்த குரிசை அம்பலத்தில் தொழுகிறது போல் ரெண்டு கையையும் சிரசில் உயர்த்தி சேவித்தான்.

வேதையன் வாசலுக்கு வந்து என்ன விஷயம் என்று எட்டிப் பார்த்தது அப்போதுதான்.

ஓய் துளுவரே, வாரும், வாரும். எப்படி என் இருப்பிடம் தெரிந்தது?

வேதையன் வாத்சல்யத்தோடு மாத்வனை விசாரித்ததில் கிட்டாவய்யன் வெகுவாக ஆச்சரியப்பட்டுப் போனான். இவனுக்கு கலாசாலை உபாத்தியாயர்கள், படிக்கிற பிள்ளைகள் தவிர இந்தத் தரத்திலும் சிநேகிதர்கள் இருக்கிறதை முதல் தடவையாகப் பார்க்கிறான் அவன்.

அப்பன், நான் சொன்னேனே, மங்கலாபுரம் போனபோது கூடவே இருந்து சகல ஒத்தாசையும் செய்து கொடுத்தது இந்த மாத்வ பிராமணப் பிள்ளைதான்.

வேதையன் அது மட்டும்தான் சொல்லியிருந்தான். லாவணி போன விஷயமோ, கொட்டகையிலேயே கண் அயர்ந்து கிடந்து விடிகாலையில் எழுந்தபோது உடம்பு சூடு அனலாகத் தகிக்க, கல்லறைப் பக்கம் வந்து சேர்ந்ததையோ சொல்லவில்லை. காளை வண்டியில் வந்த குடும்பத்தைப் பற்றிச் சொன்னதாகவும் நினைவு இல்லை. அவ்வப்போது தூக்கத்தில் ஆழ்ந்தபோது வேணுமானால் இதில் சிலதையாவது அப்பனுக்குச் சொல்லியிருக்கலாம். ஜன்னி வந்து பிதற்றுவதாகக் கருதி அதற்கு யாதொரு கவனிப்பையும் கொடுத்திருக்க மாட்டான் கிட்டாவய்யன்.

காலில் சலங்கையும் பெண் வேஷமுமாக லாவணி ஆடினதாகச் சொன்னாயே இந்தப் பிராமணன் தானா? அது முதுகில் கிரந்தி புறப்பட்டு பூணூலை வலம் இடமாகப் போட்டுக் கொண்ட யாரோ அசத்து இல்லையோ?

கிட்டாவய்யன் தோண்டித் துருவ, வேதையனுக்கு மங்கலாபுரத்தில் வண்டி இறங்கியதும் இறங்கிய ஊத்தைப்பல் துளுவனும் உடனடியாக நினைவுக்கு வந்தான். மனசு தான் என்ன மாதிரியான ரசாயனம் எல்லாம் உற்பத்தி செய்கிறது. நினைப்பும் நடக்கிறதும், கற்பித்துக் கொண்டதும், நிஜமா நிழலா என்று நிச்சயமாகத் தெரியாத இன்னும் சிலவுமாகக் கொட்டிக் கலந்து அவ்வப்போது அது களிமண் பிரதிமை மாதிரிப் பிடிக்கிறது. ஜூர வேகத்தில் இப்படியான பிரதிமை ஒன்றை அப்பனுக்குக் கைமாற்றியாகி விட்டது. அவனும் அதை வைத்துக் கொண்டு களிக்கட்டும்.

உட்காருமய்யா, நின்று கொண்டே இருக்கீரே.

வேதையன் வாசல் திண்ணையைக் காட்டினான்.

துளுவன் மரத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து முழங்காலை ரெண்டு கையாலும் கட்டிக் கொண்டு மேற்கொண்டு வார்த்தை கேட்க ஆயத்தமானான்.

கையை எடும். அப்படிக் கட்டினால் பீடை வந்து சேரும்.

ஜான் கிட்டாவய்யனுக்குள் இருந்த பழைய கிட்டாவய்யன் உடனே அதைத் தடுத்தான்.

கிறிஸ்தியானி மனையிலும் இந்த ஆசாரம் எல்லாம் உண்டு என்பதிலே மெத்த சந்தோஷம் ஸ்வாமி.

துளுவன் முன்னால் நீண்ட கையை ஜாக்கிரதையாக மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு தலையைக் கவிழ்த்து எத்தனையாவது தடவையாகவோ சேவித்தான்.

கிறிஸ்தியானியானால் என்ன, வைதீகமானால் தான் என்ன, புண்யத்தைத் தேட வேண்டிய பொழுதில் அல்லாததைச் செய்யக் கிஞ்சித்தும் அனுமதிக்காதே. சரி அது நில்க்கட்டும். உம் பெயர் தான் என்ன? எவ்விடத்து ஸ்வதேசி நீர்?

துளுவனுக்குச் சாப்பிடக் கொடுக்க உள்ளே இருந்து வெல்லமும் தேங்காயும் எடுத்துவரப் போன வேதையன் ஒரு வினாடி நின்றான். அவனுக்கும் தெரியாத ஒன்று இவனுடைய பெயரும் மேல் விலாசமும் மற்றதும்.

அடியேன் துர்க்கா பட்டன். விளிக்கிறதும் அதேபடிதான். துளு நாட்டில் இருந்து காசர்கோடு வந்து அப்புறம் திரும்பத் துளு பூமிக்கும் சீரங்கப் பட்டணத்துக்கும் அலைபாய்ந்து இப்போ மங்கலாபுரத்தோடு ஒதுங்கிக் கிடக்கிற குடும்பம். கஷ்ட ஜீவிதம் தான். இல்லாமல் இருந்தால் தூசி தும்பு போல அலைக்கழிய வேணாமே.

நானும் பாண்டியில் இருந்து இங்கே அம்பலப்புழைக்கு வந்து குடியேறின சமையல் காரப் பிராமணன் தான் என்று சொல்ல உத்தேசித்து வேண்டாம் என்று தோன்ற வெறுமனே பார்த்தான் கிட்டாவய்யன். அம்பலப்புழையில் இருந்து திரும்ப பாண்டிக்குப் போயிருந்தால் என்னவாகி இருக்கும்? பெரிதாக ஒன்றும் மாற்றம் இருக்காது. குரிசு இல்லாமல் மார்பில் பூணூலும் சிவன் கோவில் வீபுதியும் பாண்டி நாட்டுப் புழுக்கத்தால் கஷ்கத்தில் சதா வியர்வையும் கூடி இருக்கும்.

பாண்டி திரும்பப் போய் சுகஜீவனம் நடத்துவார் இல்லையா என்ன? கிட்டாவய்யனுக்கு தன் ஆக இளைய சகோதரி பகவதி நினைப்பு சட்டென்று வந்தது. அரசூரில் அவளையும் அவளைக் கட்டிய சங்கரய்யரையும்தான் போய்ப் பார்த்துத்தான் எத்தனை வருஷமாகி விட்டது. சாப்பாட்டுக் கடை நடத்துகிறதிலும், சிநேகாம்பாள் படுத்த படுக்கையாகக் கிடந்து காலமானதிலும், கோட்டயத்தில் இருந்து கண்ணூருக்கு வந்து வீடு கட்டி கடை வைத்துத் தொழில் தொடங்குகிறதிலும், ரெண்டு பெண்பிள்ளைகள் வெள்ளைக்கார துரைமார்களை புருஷன்மாராக வரிந்து கொண்டு சீமைக்குக் கப்பலேறியதிலும், தொடர்ந்து வேதையன் கல்யாணத்திலும் தற்போது அவனுக்கு காய்ச்சலுக்குத் தேனில் சூரணம் குழைத்துக் கொடுத்து சிஷ்ருஷை செய்கிறதிலும் முக்காலே மூணு வீசம் வாழ்க்கை கழிந்து போய்விட்டது. இனி ஜீவித்திருக்கும் அற்ப காலத்தில் உடன் பிறந்தவளை ஒரு நடை போய் பார்க்காவிட்டால் கட்டை திருப்தியாக வேகுமா? வேக என்ன இருக்கு? மனசு உலுக்கியது. அவனே பார்த்துப் பார்த்துக் கட்டின குரிசுப் பள்ளி பின்னால் மண்ணுக்குள் முடங்க வேண்டிய உடம்பு இல்லையா இது? சரி, ஏதோ ஒண்ணு. அடங்கின அப்புறம் இந்த லோகத்துக்கு அனுபவிக்கவும் சிரமப்படவும் என்னென்னைக்குமாகத் திரும்பாதது. பகவதிக் குட்டி, க்ஷேமமா இருக்கியா அம்மா? மாப்பிள்ளை எப்படி இருக்கார்? புகையிலைக்கடை விருத்தியா நடக்கறதா? உன்னைப் பார்க்கணும் போல இருக்குடி குழந்தே.

கிட்டாவய்யன் கண்ணில் குளம் கோர்த்து நின்ற கண்ணீரை இமையை இறுக்க மூடி வெளியே தளும்பாமல் நிறுத்திக் கொண்டான். இந்த பட்டனைப் பார்த்து யோக க்ஷேமம் விசாரித்து ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை. அவனுக்கு முன்னால் தாரைதாரையாகக் கண்ணீர் வடிய விம்மி விதிர்த்து அழ அவனுக்கு சரிப்படாது. பட்டன் மாதிரி வெறும் பயல் இல்லை கிட்டாவய்யன். ஜான் கிட்டாவய்யனாக்கும்.

ஆனாலும் அரசூருக்கு சீக்கிரம் ஒரு பயணம் வைக்க வேண்டும். உடம்பு ஒத்துழைத்தாலும் இல்லாது போனாலும். அது மனசில் உறுதியாகத் தோன்ற சரிதான் என்று தலையைக் குலுக்கிக் கொண்டான். துர்க்கா பட்டன் அவனை ஒரு வினாடி உற்றுப் பார்த்து விட்டுத் திரும்பத் தூணில் ஆதரவாகச் சாய்ந்து கொண்டான்.

பட்டரே. துர்க்கா பட்டரே. உமக்காகத்தான் இந்த சம்பாரத்தைக் குடிக்க எடுத்து வந்தேன். தேங்காயும் வெல்லமும் கூட உண்டு. பசியாறிக் கொள்ளும். கை எதுவும் அளையாமல், அடுப்பில் சுடவைத்தும் வேகவைத்தும் பாகம் பண்ணாமல் எடுத்து வந்த ஆகாரம். உம் மடி ஆச்சாரத்துக்கு கேடு வருத்தாதது இதெல்லாம்.

வேதையன் கையில் கொண்டு வந்த ஸ்தாலி செம்பையும் வாழை இலை மூடிய தாம்பாளத்தையும் துளுவன் முன் வைத்தபடி சொன்னான்.

ஊர்க் கோடியில் இருந்து வழி விசாரித்தபடி நடந்து வந்த அசதியால் தூணில் சாய்ந்தபடிக்கே களைத்துக் கண்ணயரத் தொடங்கியிதருந்த துர்க்கா பட்டன் கண் திறந்ததும், மோர் நிறைத்த செம்பு தான் முதலில் பிரத்யட்சமானது.

காளை வண்டியில் வந்த ஒரு பிராமணன் அவனை வேதையன் கிரஹத்துக்கு வழி சொல்லி அனுப்பினானே. அவன் கையில் வைத்திருந்ததும் இதே போல் ஒன்று இல்லையா? ஓரத்தில் கொஞ்சம் நசுங்கி இருந்தது அந்தச் செம்பு. காளைவண்டி குடைசாய்ந்தபோது அதற்குக் கேடு வந்ததாகச் சொன்னான் அடையாளம் தெரியாத அந்த பிராமணன். செம்பில் வெள்ளம் இருந்தால் தாகத்துக்குத் தரமுடியுமா என்று துர்க்கா பட்டன் கேட்டதற்கு அதற்குள் பானம் செய்கிற ஆகாரம் செய்கிற தோதில் எதுவும் இல்லை என்றான் காளைவண்டிக் காரன். போகிறது. அவனை வழியில் வைத்துக் கண்டிருக்காவிட்டால் துர்க்கா பட்டன் வேதையனைத் தேடி இன்னும் சுற்றி அலைந்து கொண்டிருப்பான்.

அவனை மங்கலாபுரத்தில் இருந்து இங்கே வரச் சொல்லித் தூண்டியது என்ன? எத்தனை யோசித்தும் பதில் தெரியவில்லை துர்க்கா பட்டனுக்கு. எல்லாம் கிடக்கட்டும். பசியும் தாகமும் முன்னால் வந்து நிற்கிறது இப்போது. அப்போ, லஜ்ஜைப் படாமல் கேட்டு வாங்கிப் புசியும். மனதில் காளைவண்டிக்காரன் சொல்லியபடி வண்டியை ஓட்டிப் போனான்.

பட்டன் கிட்டாவய்யனை நிமிர்ந்து பார்த்தபடி எழுந்தான்.

ஸ்வாமி, க்ஷமிக்கணும். ஒரு கைப்பிடி அன்னம். அது இல்லையா, பிட்டு, இட்டலி, உப்பிட்டு விடிகாலையில் உண்டாக்கின ஏதாவது இருந்தாலும் கொடுத்தால் புண்ணியமாகப் போகும். வெட்கத்தை விட்டு யாசிக்கிறேன். உங்க கிட்டேயும் அண்ணா கிட்டேயும் கேட்க எதுக்கு வெட்கப் படணும்? தயவு செய்யுங்கோ. கூட மாட இங்கே பணி எடுக்கறேன். பசி தாளலை. போஜனம் மாத்ரம் போதும்.

அவன் பூணூலை இழுத்துக் காட்டி இரண்டு கைகளுக்கு நடுவில் அதைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, கிட்டாவய்யனைத் தெண்டனிட்டு நமஸ்கரித்தான்

கிட்டாவய்யன் சட்டென்று எழுந்து நின்றான். அவனுக்கு தேகம் முழுக்க தடதடவென்று நடுங்கியது. இது அச்சு அசலாக சாவக்காட்டு வேதக்காரப் பிராமணன் வார்த்தை. நடவடிக்கை. கைமள் வீட்டு புடமுறிக்கு சமையல் செய்யப் போனபோது கறிகாய் நறுக்கிக் கொடுத்து ஒத்தாசை செய்ய வந்த சாவக்காட்டானை சவிட்டுத் தள்ளி இத்தனை வருடம் கழித்து அந்த வார்த்தை திரும்ப அவனுக்கு முன் கைகூப்பி நிற்கிறது. சவிட்டின அவன் இப்போது வேதத்தில் ஏறினவன். யாசிக்கிறவன் அதில் இல்லாதவன். சக்கரம் கறங்கி ஒரு சுற்று சுற்றி திரும்ப ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது போல.

உந்தும் சவிட்டுமாகத் துள்ள கிட்டாவய்யன் காலுக்கு இனி சக்தி இல்லை. ஆனாலும் அவனுக்கு நடக்க முடியும். தட்டுத் தடுமாறியாவது நடந்து உள்ளே போய் இந்த துர்க்கா பட்டன் பசியாறத் தேவையானதை எடுத்து வரமுடியும்.

அவன் வீட்டுக்கு உள்ளே போனபோது காலையில் ஆகாரம் கழித்து மிச்சம் இருந்த நாலு தோசைகளும், தேங்காய்த் துவையலும் அப்படியே மூடி வைத்த பாத்திரம் கண்ணில் பட்டது. உச்சைக்கு ஊணின் போது சம்பாரம் விரகிய சாதத்தோடு தொட்டுக்கொள்ளவும், மிஞ்சிய பட்சத்தில் ராப்போஜனத்தோடு சேர்த்துக் கழிக்கவுமாக எடுத்து வைத்தது. ராத்திரி இது ஆறி அவலாகிக் காய்ந்து போகாமல், பட்டன் வயிற்றில் போய்ச் சேரட்டும்.

வேதையன் தேங்காயும் வெல்லமும் வைத்த தாம்பாளத்தை நகர்த்தி வைத்தபோது துர்க்கா பட்டன் தடுத்தான்,

இதுவும் இருக்கட்டும் அண்ணா, ஒண்ணொண்ணா கழிக்கலாம். திருமேனி, வேணாம். அம்மாவா. இதுவும் வேணாம். மாமா, அந்த தோசை லட்சுமியை கொஞ்சம் என் கையில் வைத்து நமஸ்கரிக்கக் கொடுங்கோ. உபகாரமாக இருக்கும்.

தேங்காய்த் துவையல் லட்சுமியில்லையா? வேதையன் சிரித்தபடி கேட்டான்.

அதுக்கு வேணுமானால் சுத்த கிறிஸ்தியானியாக ஒரு நாமகரணம் செய்துடலாம் என்றான் பட்டன் தோசையை விண்டு வாயில் போட்டபடி.

பரிபூரணம் அப்படீன்னு மட்டும் வச்சுடாதீர்.

வேதையன் சொல்லிக் கொண்டிருந்தபோது வாசலில் தபால் சேவகன் குடையும் கையுமாக விரசாக நடந்து வந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

வைக்கத்தில் இருந்து மங்கள வார்த்தை வருது.

வேதையன் மனம் சொன்னது. அது தப்பாக இருக்காது என்று நிச்சயமாகப் பட்டது.

(தொடரும்)

Series Navigation