விஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு

This entry is part of 24 in the series 20081211_Issue

இரா.முருகன்


எட்டு மணிக்கு வருவீர்னு பார்த்தா உச்சி கழிஞ்சு வந்திருக்கீர். டோக்குமெண்ட் மிச்சத்தை யாராக்கும் பிரதி பண்றது? நான் பாட்டுக்கு அலைபாஞ்சுண்டு கிடக்கேன். நீர் பரப்பிரம்மமா நிக்கறீரே நடேசன். சுக நித்திரையா? பகல் வெளிச்சமேறினது கூடத் தெரியாம கதவு ஜன்னல் எல்லாத்தையும் அடைச்சு வச்சு உறங்கிட்டீரா இல்லே ஊரைச் சுத்திக் கிறங்கிண்டு இருந்தீரா?

ஏகாம்பர ஐயர் வார்த்தை எரிவில் சிரிப்பைக் குழைத்து நடேசன் மேலே பூசினார். நடேசன் பாஷை புரியாத ஊரில் மாட்டிக் கொண்ட மாதிரி விழித்தார்.

உறங்கித் தான் போய்விட்டிருந்தார் அவர். சொல்லப் போனால் இன்னும் தூக்கத்தில் இருந்து நடேசன் எழுந்திருக்கவே இல்லை. ராத்திரி செட்டியார் கொட்டகையில் டாக்கி பார்க்கப் போனது நினைவு இருக்கிறது. காளை வண்டி, அதை ஓட்டிக் கொண்டு இந்துஸ்தானி மெட்டில் பாட்டும் பாடிக் கொண்டு ஒரு தமிழ்ப் பிராமணன், மூணு மாடிக்கு உயர்ந்து நின்ற ஏகாம்பர ஐயர் ஓட்டல், வயசனான பஞ்சாமி.

உமக்கு எடுத்து வச்ச இட்டலி ஆறி அவலாப் போய் இப்பத்தான் தூக்கிப் போட்டான் பஞ்சாமி. எடோ பஞ்சாமி. போட்டுட்டியா இருக்கா இன்னும்?

இன்னும் போடலை அண்ணா. ஒரு ஈடு காணும். உதுத்து இட்டிலி உப்புமா கிண்டிடட்டுமா?

உள்ளே இருந்து வந்த இந்தப் பஞ்சாமிக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது. பின்னே நேற்று பாதி ராத்திரி கழிந்து பார்த்தது?

பஞ்சாமி, ராத்திரி ரவா உப்புமா கிண்டி எனக்கும் அந்த ஐயருக்கும் கொடுத்தீரே. அது பாக்கி இருந்தாலும் சரி.

நடேசன் சொல்லும்போதே தலை சுற்றிக் கொண்டு வந்தது. அப்படியே கையில் தலையைத் தாங்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்தார்.

ராத்திரி வந்தீரா? யார் கூட?

காளை வண்டி. மகாதேவ ஐயர். பட்டத்திப் பொண்ணு. பெண்குஞ்சு.

அவர் முணுமுணுத்தார். கண் இறுக மூடியிருந்தது.

பஞ்சாமி அருகில் வந்து அவரை மேல் நோட்டமாகப் பார்த்துவிட்டு ஏகாம்பர ஐயர் பக்கம் நகர்ந்தான்.

அண்ணா, இந்த மனுஷரை என்னமோ சல்யப்படுத்தறது. யாராவது ஏதாவது கரைச்சுப் புகட்டி அனுப்பினாளான்னு தெரியலை.

அவன் ஏகாம்பர ஐயர் காதில் சொன்னது நடேசனுக்குத் தெளிவாகக் காதில் விழுந்தது. ஐம்பது வயசு தாண்டியும் காதைக் கூர்மையாகத்தான் வைத்திருக்கிறான் கிருஷ்ணன்.

சங்கில் வைத்து, மூக்கில் பத்திரமாக உணரவைக்கும்படிக்குப் புடவை வாசனை பட மடியில் போட்டுப் புகட்டி அனுப்ப நடேசன் என்ன குழந்தையா? இவன் என்னத்தைச் சொல்கிறான். அபினா? அது இருந்தால் கூட இப்போது நன்றாக இருக்கும். இப்படியே ஓரமாகப் படுத்து அடுத்த தூக்கம் போடலாம். புடவையோடோ வழித்துக் கொண்டோ கல்யாணிக்குட்டியின் மடி கூட வேண்டாம்.

தூக்கம் தானா? அசதியா? அது ஏன் இப்படிச் செத்துத் தூக்கிப் போகக் காத்திருக்கிற மாதிரி என்னமோ கனமாகக் கண்ணை திறக்கவிடமாட்டேன் என்று கவிகிறது? மூச்சையும் நிறுத்திப் போடுமோ இது? காளைவண்டிப் பிரயாணம் அத்தனை அசதியை வரவழைக்குமா என்ன?

அதெல்லாம் இல்லை. நடேசனுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆயுசோடு தான் இருக்கிறார். எழுந்து உட்கார்ந்து சுபாவமாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க வேணும். எழுந்திருக்கணும். இதோ ஒரு நிமிஷம் மாத்திரம். ஐயர்வாள் பொறுத்துக் கொள்ளணும். எடோ பஞ்சாமி, எனக்கு ஒரு சுகக்கேடும் இல்லை. கேட்டியா?

ஆனாலும் நாக்கு எழும்ப மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று புத்தி வேறு அசமஞ்சமாகக் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தது.

பஞ்சாமி. புள்ளிக்கு பசிக் கிறக்கம். வயசாயிண்டு போறதால் வர்ற க்ஷீணம் வேறே. என் வயசு ஆகியிருக்குமா. அதுக்கு மேலேயும் தான். எனக்காவது அகத்திலே கொட்டு ரசமும் சுட்ட அப்பளமும் வச்சுக் கொடுத்து சிஷ்ருஷிக்கவும் தேகத்துக்கு நோக்காடு வந்தா தைலம் காய்ச்சிப் புரட்டிக் குளிப்பிக்கவும் மாமி இருக்கா. வார்த்தை கேட்டு நடக்க, அப்பாவுக்கு வென்னீர் வச்சுக் கொடுன்னு அம்மா கிட்டேப் போய்ச் சொல்ல பெத்துப் போட்ட சந்தானங்கள் வேறே. இந்த மனுஷனுக்கு அதெல்லாம் வேண்டாம்னு கிருஷ்ணஸ்வாமி கல்பிச்சு அனுப்பிட்டாரே. போறது, நீ அந்த இட்டலி உதிர்த்த உப்புமாவைக் கிண்டி எடுத்துண்டு வா. ஒரு துளி இஞ்சி கிள்ளிப் போட்டு இறக்கற முந்தி அரை மூடி நாரிங்கா பிழிஞ்சுடு. சரியா. அப்படியே எனக்கும் ஒரு கை அள்ளி வச்சுடு.

ஏகாம்பர ஐயர் நீளப் பேசியபடி கல்லாவில் இருந்து உள்ளே பார்த்து நடந்த காலொச்சையும் நடேசன் காதில் பட்டது.

ராத்திரி சாப்பிட்ட ரவை உப்புமாவே வயிற்றில் இன்னும் இருந்தது நடேசனுக்கு. இந்தப் பஞ்சாமி தான் கிண்டிக் கொண்டு வந்து சுடச்சுடப் பரிமாறினான்? கூடவே உட்கார்ந்து சாப்பிட்ட பாண்டி பட்டன் எங்கே? ஓரமாகப் பதுங்கின மாதிரி இருந்தபடி இலையில் பரிமாறியதை அள்ளி விழுங்கிய அவனுடைய வீட்டுக்காரி தான் எங்கே? மேலே எல்லாம் ஆகாரத்தை சிந்திக் கொண்டு வாயே உசிராக அவசர அவசரமாக உண்ட குழந்தைப் பெண் என்ன ஆனாள்?

இல்லை, அதெல்லாம் ராத்திரி டாக்கி பார்க்க முந்தி மனசில் தோன்றிய கற்பனை இல்லையோ. அப்போ, டாக்கியில் காளை வண்டியில் அந்தப் பிராமணன் சங்கீதம் பாடிக் கொண்டு போனபோது தான் கைதட்டிக் கொண்டு பக்கத்தில் இருந்தது கூடப் பிரமையா? விடியும் நேரத்தில் அம்பலக் குளங்கரையில் தன்னைக் கொண்டு போய் விட்டுப் போனது அந்தக் காளை வண்டிக் குடும்பம் இல்லையா?

வேண்டாம், இதையொண்ணும் யோசித்து இப்போ ஒண்ணும் ஆகப் போவதில்லை. அம்பலத்தில் அந்தக் கிருஷ்ணஸ்வாமி, கள்ளன் ஸ்ரீகிருஷ்ணன், பகவான் கிருஷ்ண பரமாத்மா நடேசனைக் கொண்டு ஏதேதோ செய்தும் செய்வித்தும் களித்துக் கொண்டிருக்கிறான். இருக்கிறார். நடக்கட்டும்.

கிருஷ்ணா, இன்னிக்கு விடிஞ்சு நான் அம்பலத்துக்கு உள்ளே கேரி வந்து தொழுதேனா? எதுக்குக் கேக்கறேனா? தந்த சுத்தி செஞ்சேனா, குளத்தில் ஒரு முழுக்கு போட்டுட்டு வந்தேனா ஒண்ணும் நினைவில் இல்லே.

வந்தேடா நடேசா. கு:ளிச்சிட்டுத்தான் வந்தே. உடுத்தியிருக்கற புது சோமன் யார் கொடுத்ததுன்னு நினைச்சே.

கிருஷ்ணன் ஏகாம்பர ஐயர் ஓட்டல் கல்லா பின் சுவரில் படத்துக்குள் சுவாதீனமாக மாறி வந்து உட்கார்ந்து சிரித்தான்.

நடேசன் சட்டென்று கண்ணைத் திறந்து இடுப்பைப் பார்த்தார். தரக் கேடில்லாத புது சோமன் அங்கே சுற்றி இருந்தது. இது எப்போ வாங்கினது? கிருஷ்ணன் கொடுத்ததா? காலையில் அம்பலக் குளத்தில் குளித்து விட்டு ஈர முண்டோடு படி ஏறியபோது கரையில் இதுதானாக்கும் இருந்தது. தந்த சுத்தி செய்யக் கடையில் வாங்கிய நம்பூத்ரி சூரணம் இல்லையோ தினசரி உபயோகிப்பது? பழைய மலையாள மனோரமா காகித நறுக்கில் அதை மடித்து இடுப்பில் முடிந்தபடிதானே காலையில் வீட்டுப் படி இறங்குகிற வழக்கம்? கிருஷ்ணா, இன்னொரு தடவை பார்த்துச் சொல்லேன், நான் பல் தேச்சேனா இல்லியா?

அட ராமா, நீ காளை வண்டியில் வரும்போதே அதெல்லாம் முடித்து வந்துட்டியே. நினைவு இல்லையா?

அப்ப, அந்தக் காளை வண்டியும், பிராமணனும், அவன் குடும்பமும், இந்துஸ்தானி சங்கீதமும் எல்லாம் நிஜமா?

இந்துஸ்தானி சங்கீதம் கிராமபோன் பிளேட்டில் கிடைக்கிற சங்கதிடா நடேசா. காளை வண்டி இப்பவும் காணக் கிடைக்கிற ஒண்ணு. மத்தப்படி எனக்கு ஒண்ணும் தெரியாது. உன் புது வேட்டி கொடுத்தது நான் இல்லே. அம்பலத்திலே தொழ வந்த ஒரு பக்தன். பத்து பேருக்கு வஸ்திர தானம் செய்யறதா பிரார்த்தனை. பத்திலே நீ கடைசி. குளத்திலே நீ இறங்கும்போதே கரையிலே உனக்காக வச்சுட்டுப் போய்ட்டான்.

கிருஷ்ணஸ்வாமி படத்தில் உறைந்து போனார். நடேசன் தலைக்கு மேல் கையை உயர்த்திக் கும்பிட்டார்.

என்ன அய்யர்வாள், உம்ம கடையை நடேசன் அம்பலமாக்கற முஸ்தீபோட கேரியிருக்கானா? இது என்ன குருவாயூர் க்ஷேத்ர பிரவேசன சமரம் பார்ட் டூவா?

பலத்த சத்தத்தோடு சிரிப்பு. நடேசன் கண்ணைத் திறக்காமலேயே சுவரில் சாய்ந்தபடட இருந்தார். நாற்காலி இழுபடுகிற சத்தம். மூக்குத் தூள் வாடை. தும்மல். மூக்கு தெறித்துப் போகிற மாதிரி உறிஞ்சுகிற ஒலி. சுப்பிரமணிய போத்தி வக்கீல்தான்.

நடேசன், ஓய் நடேசன்.

போத்தி வக்கீல் குரல் நடேசனை உலுக்கியது. அவர் அசைந்து கொடுக்கவில்லை. ஏகாம்பர ஐயர் ஓட்டலுக்கு அவர் வந்தது வேறே ஏதோ காரியத்தை உத்தேசித்தல்லாமல் இந்த எழவெடுத்த போத்தியோடு வர்த்தமானம் சொல்ல இல்லை. என்னவாக்கும் படி ஏறி வர வைத்த காரியம்? அதுதான் ஓர்மையில்லாமல் இப்போது தொந்தரவு கொடுக்கிறது.

பொம்மனாட்டிக்குத் தூரம் நின்னு போறபோது ப்ராணாவஸ்தையா இருக்கும்பா டாக்டர்மார். நடேசனுக்கு அந்த மாதிரி ஏதோ குழப்பமாக்கும்.

ஏகாம்பர ஐயர் போத்தி வக்கீலிடம் சொன்னதும் நடேசன் காதில் விழத் தவறவில்லல.

மெனொபாஸ். அதிலே ஏது ஓய் ஆம்பளை சமாச்சாரம்? இருந்தா சரிதான். நடேசன், கோணகத்தை ஸ்வப்னத்திலே நனைச்சுக்கறதை நிறுத்திட்டீரா? நம்மாலே அதொண்ணும் முடியலேங்காணும்.

போத்தி வக்கீல் திரும்பச் சிரிக்கும் சத்தம். அவர் எப்பவுமே இப்படித்தான். சர்க்கார் சபை, நாலு பேர் கூடுகிற இடம், சாவடி என்று எல்லாம் கவலை இல்லை. போத்தி கிரிமினல் கேஸ் நடத்துகிற போது கூட்டம் அலைமோதும்.

பக்கத்து வீட்டுக்குள் கூரையைப் பிரித்து இறங்கி அங்கே சயனத்தில் இருந்த ஸ்திரியை வலுக்கட்டாயமாகத் துகிலுரித்து சங்கமித்த காரணத்துக்காக எடப்பாள் வாசுதேவ குறூப்பைக் கச்சேரியில் கொண்டு வந்து நிறுத்தினபோது குறூப்பு தரப்பில் போத்தி வக்கீல்தான் கேஸ் நடத்தினார்.

நடேசனுக்கு இதுவரை படியளந்த, இனியும் கொஞ்ச நாள் கழித்து உத்தியோகத்தைத் தொடர ஒத்தாசை செய்யக்கூடிய நீலகண்டன் வக்கீல் அனுபவித்துச் சொல்லிச் சிரிக்கிற ஒரு பலிதம் நடேசன் நினைவில் வந்து போனது. பாதி நினைவு இருக்கும்போதும் இது மாதிரி விஷயம் எல்லாம் மறக்கமாட்டேன் என்கிறது. போத்தி வக்கீலிடம் சொல்லணும். என்ன என்று?

இந்த போத்திக் கழுவேறி மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்வைத்து நடத்திய வர்த்தமானம் நடேசனுக்கு அரைகுறையாகத்தான் அர்த்தமானது. அதை நீலகண்டன் வக்கீல் ஒரு சந்தோஷமான மனோநிலையில் இருக்கப்பட்ட நேரத்தில் பதம் பிரித்துச் சொன்னதால் மனசில் பதிந்து போயிருந்தது.

பிராதில் எதிர்த் தரப்புப் பெண்பிள்ளையை போத்தி வக்கீல் குறுக்கு விசாரணை செய்தது இந்தத் தோதில் இருந்ததாகத் தகவல்.

வென் ஹி க்ரஷ்ட் யுவர் நிப்பிள் வாஸ் தேர் அ ரஷ் ஓஃப் பிளஷர் ஃபார் யூ? யூ ஸேட் எஸ் டூ ஃபோர்ப்ளே பட் நாட் டு கோர் ப்ளே. உன் முலைக் காம்பை என் கட்சிக்காரன் கசக்கியபோது சுகமாக இருந்ததா உனக்கு? சம்போகத்துக்கு முந்திய களியெல்லாம்.

வாக்கியத்தை முடிக்கவிடாமல் போத்தி வக்கீலை அந்தப் பெண் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்ன பதிலும் அதை விடப் பிரசித்தமானது.

வக்கீலே, உம் வீட்டுக்காரி கிட்டேப் போய்க் கேட்க வேண்டிய வர்த்தமானம் இல்லையோ அது. காலையில் தொழுத்தில் பசுவைக் கறக்க வர தம்பானுக்காக கச்சு களைஞ்சுட்டு தோர்த்தோடு கதவைத் திறக்கறவளாச்சே உன்னைக் கெட்டியோள்? உனக்கு ஏதும் தெரியாது பாவம், சகலமான காம்பிலேயும் அவன் கறந்து முடிக்கற வரைக்கும் நீ சுகமா நித்திரை போயிருப்பே.

மாஜிஸ்ட்ரேட் வர்த்தமானத்தை அந்த மட்டில் நிறுத்தி குறூப்பை ஜெயிலுக்கு அனுப்ப தீர்ப்புச் சொல்வதற்கு முந்தி பெண்பிள்ளைக்காக ஆஜரான ப்ளீடர் குரியக்கோஸ் மாஜிஸ்ட்ரேட் காதில் ஏதோ சொன்னார்.

பிரதிவாதியும் இந்தப் பெண் பிள்ளையும் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்து நாளைக்குப் புடமுறி நடக்கிறதாக வாதி வக்கீல் சொன்னதை ஜட்ஜி காது கொடுத்துக் கேட்டார்.

அது எந்தப் படிக்கு இருந்தாலும் தப்பு நடந்தது என்னமோ உண்மைதான். குறூப்புக்கு அபராதத் தொகையாக இருநூறு ரூபாய் விதிக்கப்படுகிறது. அந்தப் பணம் இந்தப் பெண்பிள்ளைக்குச் செலுத்த வேண்டியது.

அந்தப் பெண் தன் தங்கச் சங்கிலியை அடகு வைத்து கோர்ட்டில் பணம் கட்டினதாக சக குமஸ்தன்கள் சொன்னதும் நடேசனுக்கு நினைவு வந்தது. அதுக்கு அப்புறம் குறூப்பு ஒடுங்கிப் போனான். விதைக் கொட்டையை நெறித்து அவனை வதைத்து இம்சிக்கிற பெண்டாட்டியாகிப் போனாள் கெட்டியவள். அது அவனுக்கு என்ன சுகமாக இருந்ததோ நடேசனுக்குத் தெரியாது. கிருஷ்ணா உமக்குத் தெரியுமா? அடி செருப்பாலே என்றான் கிருஷ்ணன். கண்ணைத் திறந்து பாருடா கழுவேறி. அவன் நடேசனை விரட்டினான்.

நடேசன் கண் திறந்தபோது முகம் பிரகாசமாக இருந்தது. தெளிவாக எழுந்து உட்கார்ந்து ஏகாம்பர ஐயர் ஓட்டலுக்குள் ஒரு தடவை கண்ணை ஓட்டினார். பகல் கழிந்து மூணு மணி என்று கடியாரம் அடித்து விட்டு ஓய்ந்தது. போத்தி வக்கீல் காப்பி குடித்துவிட்டுப் போன காலி வட்டை செட்டில் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

மேல் துண்டால் முகத்தைத் துடைத்தபடி குரிச்சியில் உட்கார்ந்தார் நடேசன்.

அண்ணா, இட்டலி உப்புமா கிண்டியாச்சு.

ஆவி பறக்க ஒரு பெரிய தாம்பாளத்திலும் நைவேத்தியத்துக்கு எடுத்து வைக்கிறதுபோல் இன்னொரு சின்னத் தட்டிலும் உப்புமாவோடு வந்து சேர்ந்தான் பஞ்சாமி.

நடேசனும் எழுந்தாச்சு. என்னய்யா, தலைக்குக் கெறக்கமா இருந்ததா?

ஏகாம்பர ஐயர் ஆதரவாக விசாரித்தார். அவருக்கு வேலை நடக்க வேண்டியிருக்கிறது. நடேசனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. டோக்குமெண்டை பிரதி எடுத்து முடித்துத் தரத்தான் அவர் இங்கே வந்திருப்பது.

தேவாமிர்தமாக இருந்த ஆகாரம் பஞ்சாமி விளம்பியது. சாப்பிட்டபடியே கல்லாவைப் பார்க்க, ஒரு ஸ்பூனால் சின்னத் தட்டில் இருந்து துளித்துளியாக எடுத்து ஆனந்தமாக ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஏகாம்பர ஐயர். நிறையச் சாப்பிட்டு வயிறு நிறைந்து வீட்டுக்குப் போய் கொட்டு ரசம் விரகிய சோற்றைச் சாப்பிட முடியாமல் போனால் வீட்டு அம்மாள் அவரை அரைக்குக் கீழ் கசக்கிக் கூழாக்கி விடக்கூடும். உனக்கு என்னத்துக்கடா அந்தக் கவலை எல்லாம் என்றார் கிருஷ்ணஸ்வாமி.

ஆகாரம் கழிந்து ஒரு வாய் சுடச்சுட கள்ளிச் சொட்டு மாதிரி காப்பியையும் இறக்கியானதும் நாலு ஆள் தெம்பு திரும்ப வந்து சேர்ந்தது நடேசனுக்கு. முந்தின ராத்திரி ஏதோ தலை கிறுகிறுத்து இத்தனை நாழிகை இம்சைப் படுத்திக் கொண்டிருந்தது. இப்போது அதெல்லாம் கிருஷ்ணன் கடாட்சத்திலே ஒழிந்து மனதும் நினைப்பும் சீராகி இருக்கிறது. இல்லையா கிருஷ்ணா?

ஏண்டா புல்லே, உனக்கு எல்லாத்துக்கும் அரிஸ்ரீ எழுதி ஆரம்பிச்சு வைக்கறதுதான் எனக்கு வேலையா? கிருஷ்ணன் கேட்டான்.

பின்னே என்னய்யா வேறே வேலை உனக்கு? நடேசன் திரும்ப கல்லாச் சுவரில் கிருஷ்ணசாமியை இருகையும் கூப்பி சேவித்தார்.

சரி, இப்படியே உட்காரும். க்ஷீணம் மாறிப் போச்சோ இல்லியோ. பஞ்சாமி. அங்கே காப்பி சிந்தினதைத் துடைச்சுட்டு டபராவையும் டம்ளரையும் எடுத்துண்டு போ. நடேசன் மீதிக் காரியத்தை கடகடன்னு முடிச்சுட்டு சாயரட்சை தீபாராதனை பார்க்க அம்பலத்துக்கு இறங்கியாகட்டும்.

பஞ்சாமி சுத்தமாக துடைத்துப் போன மரமேஜையில் ஏகாம்பர ஐயர் டோக்குமெண்டைக் கொண்டு வந்து பூத்தாற்போல் வைத்தார். வீட்டுப் பத்திரம். மகாதேவ அய்யன் நாற்பது வருஷம் முன்பு கோட்டயத்தில் ஒரு வேதையனுக்கு எழுதிக் கொடுத்தது. டோக்குமெண்டோடு கூட, முத்திரைப் பத்திரத்தில் அதை நடேசன் படி எடுத்து முடித்திருந்த வரைக்குமானதையும் எடுத்து வந்து கொடுத்தார் அவர். பேனாவும் மசிக்கூடும் அடுத்து மேசைக்கு வந்து சேர்ந்தன.

நடேசன் டோக்குமெண்டைப் புரட்டினார்.

அது முழுக்க முழுக்க வெற்று வெளுப்பாக எழுத்தின் சுவடே இல்லாமல் இருந்தது.

(தொடரும்)

Series Navigation