விஸ்வரூபம் – அத்தியாயம் பதினேழு

This entry is part of 23 in the series 20081204_Issue

இரா.முருகன்


புகை ரூபத்தில் மடிசார் புடவை கட்டிக் கொண்டு ஒடிசலான தேகவாகு உள்ள ஒரு பெண். அவள் புடவைத் தலைப்பைப் பற்றியபடி ஒரு சின்னப் பெண் குழந்தை. குழந்தைக்கு முகம் மட்டும் இருபது வயசுக்காரி மாதிரி தெரிகிறது. பசியும் தாகமும் தெரியும் கண்கள் ரெண்டு பேருக்கும். அநாதைத் தனமும், யாசிக்க வேண்டி வந்ததைப் பற்றிய அவமானமும் அதையும் தாண்டி அந்த விழிகளில் தெரிகின்றன. கூடவே ஒரு மிரட்சி. இடம், காலம், சுற்றுப்புறம் பற்றிய தெளிவின்மையால் வந்த மிரட்சி அது.

எனக்கு புக்ககம் அம்பலப்புழை. உங்க ஜன்ம ஸ்தலம், உங்க கிரகம்தான். குப்புசாமி அய்யர்வாளுக்கும் விசாலாட்சி மாமிக்கும் நாட்டுப் பொண்டு.

அந்தப் பெண் தலையைக் குனிந்தபடி முணுமுணுப்பாகச் சொன்னாள்.

தெரிசா கண்ணைத் துடைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நடுங்கியது. உடம்பு முழுக்க ரோமக்கால்கள் குத்திட்டு நிற்க அவள் கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட ஒரு வெளியில் வேகமாகக் கலந்து கொண்டிருந்தாள்.

அவளுக்குப் பத்து வயசு. விசாலம் பெரியம்மா பிரியத்தோடு மடியில் இருத்தி உச்சந்தலையில் ராக்கொடி வைத்துத் தலை பின்னுகிறாள். ஆலப்பாட்டு முத்தச்சன் வாங்கி வந்து கொடுத்த அச்சு வெல்லத்தைக் கையில் பிடித்தபடி ஆசையோடு நக்கிக் கொண்டிருக்கிறாள் தெரிசா.

ஏண்டி முண்டை, பெரியம்மா என்ன கரிசனமாத் தலை பின்னி விட்டிண்டிருக்கா. கண்ட சனியனையும் தின்னுண்டே பராக்குப் பாக்கறியே. வயிறா, வண்ணான் தாழியா? அருவதா சருவதா அரைச்சுண்டே கிடக்கியே மூதேவி. வெல்ல அச்சை வெளியிலே எறிஞ்சுட்டு கையலம்பிண்டு வாடி. உன் முத்தச்சனுக்கு போதம் கெட்டுப் போயிடுத்து. இதெல்லாம் வாங்கிண்டு வரலேன்னு யார் அழுதா?

அம்மா சிநேகாம்பா கீச்சுக் கீச்சென்று இரைந்தபடி தாழம்பூவை சின்னச் சின்னத் துண்டாக நறுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறாள். விசாலம் பெரியம்மா மடியில் இவள் இல்லாமல் போனால் இழுத்து வைத்து முதுகில் ரெண்டு சாத்து சாத்தியிருப்பாள் அம்மா.

அச்சு வெல்லத்தை நக்கி கையெல்லாம் எச்சலாக்காதேடி குழந்தே. இந்த வாசனைக்கே எங்கே எங்கேன்னு கட்டெறும்பு வீடு முழுக்க வந்துடும். அதை ஓரமா வைச்சுட்டு சமத்தா தலை பின்னிக்கோ. பின்னியானதும் லட்டு உருண்டை தரேன். சாப்பிட்டு ராத்திரி நடை சாத்த முந்தி அம்பலத்துக்குப் போகலாம்.

விசாலம் பெரியம்மா அவள் கன்னத்தில் மென்மையாக முத்தம் கொடுத்தபடி சொல்கிறாள்.

பெரியம்மா. நான் இப்ப எப்படி அம்பலத்துக்கு வர்றது? ஸ்காட்லாந்துலே கர்த்தரோட போதனையை எல்லாரும் அறியும்படி சொல்லப் புறப்பட்டுப் போயிண்டிருக்கேனே.

தலை பின்னிண்டு போடீ குழந்தே. இதோ ஆச்சு. சித்த நேரம் தான்.

என் தலைமுடியை ஆகப் பாதியா வெட்டி வச்சுருக்கேனே பெரியம்மா. இந்த பீட்டர் தடியன் கல்யாணம் ஆன புதுசிலே அப்படியே விடச் சொன்னான். கப்பல்லே துரைசானிகளைப் பார்த்து என்னமோ தோணித்து. விடுவிடுன்னு நறுக்கிண்டுட்டேன். இப்ப நரைக்க வேறே ஆரம்பிச்சுடுத்து.

இந்த மனுஷனை வேதத்திலேயும் ஏற வேணாம் ஒரு மண்ணும் வேணாம். சாவக்காட்டுக் கிழவன் கடனை விட்டெறிஞ்சுட்டு வாங்கோ. அம்பலக் குளத்திலே முழுக்குப் போட்டுட்டு ஆத்தோட இருக்கலாம்னு சொன்னா கேட்கவே மாட்டேன்னுட்டார். இப்போ பாருங்கோ மன்னி. இவாத்துக்காரன் சட்டமா கோட்டும் சூட்டும் போட்டுண்டு சுருட்டை ஊதிண்டு வந்து நிக்கறான். என்னதான் வெள்ளைக்காரன்னாலும் நம்மாத்து மாப்பிள்ளைன்னு சபையிலே எப்படிச் சொல்றது சொல்லுங்கோ. அந்த அச்சு வெல்லத்தை அப்புறமாத் திங்கலாமேடி சனியனே. கையெல்லாம் எச்சில் ஒழுகறது. பாவாடையிலே தொடச்சுக்கோடி. எச்சில், பத்து ஒண்ணு கிடையாது. தரித்ரம்.

குழந்தையை வையாமே சித்த சும்மா இரேன் சினேகா. சின்ன நறுக்கா இன்னொரு தாழம்பூ மடலை எடுத்துக் கொடு. இங்கே முடி தெரியறது பார்.

குழந்தையா? முப்பத்தஞ்சு வயசு திகஞ்சாச்சு. இன்னும் ஒரு கூறும் இல்லே பாருங்கோ.

குழந்தைன்னா அப்படித்தான். என் பேத்தி இல்லியா?

விசாலம் பெரியம்மா தெரிசாவின் தாடையைத் தொட்டுத் திருப்பி முன்னால் பார்க்க வைக்கிறாள். ரயில் பெட்டியில் எதிர் வரிசை ஆசனத்தில் அந்தக் குழந்தைப் பெண் தெரிசாவைப் பார்த்து சிநேகமாகச் சிரிக்கிறாள்.

வெளியே ஏதோ ஸ்டேஷன் இரைச்சல். பச்சைப் பசேல் என்ற புல்வெளியும், அங்கங்கே பனி இன்னும் விலகாத புகைப்போக்கிகளோடு கூடிய வீடுகளுமாக ஏதோ சிறிய ஸ்டேஷன். இதுதான் கிரந்தமா?

தெரிசாவை விட இறுக்கமாக உடுப்பு அணிந்து உதட்டில் சிவப்புச் சாயத்தைக் குழைத்துப் பூசிய ஒரு சீமாட்டி வண்ணக் குடையை மடக்கியபடி ரயில் பெட்டியில் ஏற ஓட்டமும் நடையுமாக வருகிறாள். அந்தக் குடையும் புது தினுசாக உள்ளது. தெரிசா பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடையும் உடையும் பேச்சும் இந்த வெள்ளைக்கார தேசம் முழுக்க மாறிக் கொண்டிருக்கிறது. அதிலும் பெண்கள் ஒயிலும் சிங்காரம் செய்து கொள்வதும் சொல்லி மாளாத படிக்கு மும்முரமாக முன்னால் முன்னால் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்த்ரிகளும் ஆண்களுக்கு சமானமாக ஓட்டுப் போட்டு பார்லிமெண்டுக்கு மெம்பர்களை அனுப்பி வைக்க வேணும் என்று கூட மான்செஸ்டர் கார்டியனில் அவ்வப்போது யாராவது எழுதுகிறார்கள். லண்டன் டைம்ஸில் ஏனோ இதையெல்லாம் அச்சுப் போடுவதில்லை.

இது என்ன தேசம் சேச்சி?

வெளியே தெரிந்த ஸ்டேஷன் விலகி நகர்ந்து போக, அந்தப் பெண் விசாரித்தாள்.

இவள் எப்படி ஞாபகத்தில் வந்து வந்து தவறிப் போகிறாள்?

தெரிசா பதில் சொன்னபோது அவள் குரலில் அனுதாபமும் வாத்சல்யமும் கூடவே சேர்ந்து வந்தது.

அப்போ இதெல்லாம் கொல்லம், காசர்கோடு, மங்கலாபுரம் பக்கம் இல்லியா? ஏது மனுஷா எல்லாம் வித்தியாசமாத் தெரியறான்னு பார்த்தேன். வாகனமும் தெருவும் எல்லாம் விநோதமா இருக்கே, கவனிச்சியாடீன்னு இந்தக் குழந்தை கிட்டச் சொன்னபோது ரெண்டு பேருக்கும் வேடிக்கை பார்க்கறதுலேயே கொஞ்ச நேரம் எல்லாம் மறந்து போச்சு. இங்கே எப்படி வந்தோம், ஏன் வந்தோம்னு தெரியலை சேச்சி. நீங்க சேச்சின்னு மட்டும் தெரியறது. பசிக்கறது. தாகம் வேறே. அதுவும் ஸ்பஷ்டமா நினைப்புலே இர்

அந்தப் பெண் எழுந்து நின்று இரண்டு கையையும் கூப்பி சேவிக்கப் பார்த்து அது முடியாமல் தளர்வாக திரும்ப இருக்கையில் உட்கார்ந்தாள்.

ரயில் பெட்டியில் தெரிசாவும், முன்னால் இருக்கப்பட்ட பெண்ணும் அவளுடைய குழந்தையும் இருந்த இடம் தவிர மீதி சாம்பலும் கருப்பும் படர்ந்து சத்தம் அடங்கிப் போனது. மங்கலாக வெளிச்சம் ஏதோ கனவில் நிகழ்வது போல படர்ந்த இந்தச் சின்ன வெளியில் காலமும் உறைந்து கிடந்தது.

உன் பேரு என்னம்மா?

பர்வதவர்த்தினி. வர்த்தினின்னு கூப்பிடுவா ஆத்திலே. ராமேஸ்வரம் போய் ராமநாத ஸ்வாமி க்ஷேத்ர நடையிலே இருக்கற ஒரு தீர்த்தம் விடாது ஸ்நானம் செஞ்சு கும்பிட்டு விழுந்து பொறந்த பொண்ணு. ஆத்துக்கு நான் ஒரே பொண்ணு. இவ அப்பாவுக்கு வாக்கப்ப்பட்ட போது எனக்கு பத்து வயசு திகஞ்சு இருந்தது. நீங்களும் குடும்பமும் வேதத்துலே ஏறிப் பிரிஞ்சு போய் ஒரு இருபது வருஷம் கழிச்சு ஏற்பட்ட சம்பந்தம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது.

எனக்கு தெரிஞ்சதை விட தெரியாதது தான் ரொம்ப அதிகம் வர்த்தினி. பெரியப்பாவுக்குப் பிள்ளை பிறந்ததே நீ சொல்லித்தான் தெரியும். எனக்குத் தம்பி. பெயர் என்னன்னு கூடத் தெரியாது.

அம்பலப்புழை குப்புசாமி அய்யர் குமாரன் மகாதேவ அய்யர்.

அந்தப் பெண் குழந்தை சொன்னது. அவள் அம்மா முகத்தில் நாணம் ரேகையாகப் படிந்து விலகியது.

உன் பெயர் என்னடி குட்டி?

குட்டியம்மிணி. அதான் என் பெயர்.

தெரிசாவுக்கு அவளை அருகில் அழைத்துத் தலையை வருட வேணும் போல் இருந்தது. உட்கார்ந்தபடிக்கே கொஞ்சம் முன்னால் வளைந்து அந்தக் குழந்தையின் கையைத் தொட்டாள்.

வெட்டவெளியில் நீண்ட கையில் அசாத்தியமான குளிர் அனுபவப்பட்டது தெரிசாவுக்கு.

நாங்க ரெண்டு பேரும் எப்படியோ இங்கே வந்துட்டோம். அவரையும் பிரிஞ்சுட்டோம். அவரும் எங்களை மாதிரியே காலாகாலமா பசியும் தாகமுமா திரிஞ்சுண்டிருக்கார்.

தெரிசா இருக்கைக்குக் கீழே குனிந்து பழக்கூடையில் தேடி ரொட்டித் துண்டுகளை வாரி அள்ளினாள். எதிரே இருக்கையில் அந்த இரண்டு பேருக்கும் பக்கத்தில் அதையெல்லாம் வைத்துவிட்டு பழக்கூடையை முன்னால் நகர்த்தினாள்.

உள்ளே செருகி இருந்த முலைக்கச்சு பிடித்த பிடியில் கையோடு வந்தது. அதை எடுத்து அந்தக் குழந்தையிடம் கொடுத்தாள்.

போட்டு விடட்டாடி பொண்ணே.

தெரிசா அவளைக் கேட்டாள்.

அப்புறமா நானே போட்டு விடறேன்.

அவளிடமிருந்து வாங்கி தோளில் மாட்டி இருந்த சஞ்சியில் அடைத்துக் கொண்டாள் அவளைப் பெற்றவள்.

சாப்பிடு வரித்தினி. நீயும் எடுத்துக்கோடீ குழந்தே.

தண்ணீர் அடைத்த பெரிய பாத்திரத்தை மூடி திறந்து முன்னால் வைத்தாள் தெரிசா. அதோடு கூட, கலந்து எடுத்து வந்த ஆப்பிள் சாற்றையும் வண்டியின் குலுங்கலில் கீழே விழாமல் ஜாக்கிரதையாக வைத்தாள்.

முன்னால் இருந்த இருவரும் ஆகாரத்தையும் பானத்தையும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர அதை எடுத்து உண்ணவோ பருகவோ செய்யவில்லை.

பசிக்குதுன்னியேம்மா. சாப்பிடு. வெள்ளம், இதரமானது எல்லாம் இதோ வச்சிருக்கு. க்ஷீணம் தீர எடுத்துக்குங்கோ ரெண்டு பேரும்.

அந்தப் பெண் அசையாமல் பழங்களையும் ரொட்டியையும் பார்த்தபடி இருந்தாள்.

தெரிசாவுக்கு சட்டென்று நினைவு வந்தது. என்ன தான் சேச்சி என்று இந்த பிராமண ஸ்திரி தன்னை விளித்தாலும், வேற்று மதத்தில் ஏறிய காரணத்தால் பிரஷ்டையாகப் பார்க்கிறாளோ? தெரிசா பார்த்ததும் தொட்டதும் எல்லாம் தீண்ட ஒண்ணாத வஸ்துவாக அவளுக்கும் அவளுடைய பெண் குழந்தைக்கும் இப்போது தோன்றுகிறதோ?

இல்லே சேச்சி. இந்த ஸ்திதிக்கு வந்த அப்புறம் ஜாதியாவது குலமாவது. காசர்கோட்டிலே சாப்பாட்டுக் கடை வச்சிருந்தபோதும் அவர் தேகண்டத்துக்கு வெளியூர் போயிண்டு இருந்தபோதும் வேண்டிய மட்டுக்கும் ஆசாரம் கொண்டாடியாச்சு. கொல்லூர் அம்பலத்திலே கேர விரதம், பூஜைன்னு இன்னும் நிறைய சீலம். எம் மாமியார் ஒண்ணு விடாம எடுத்துச் சொல்லுவா. ஸ்தாலிச் சொம்புக்குள்ளே ரெண்டு எலும்பு மாத்திரம் மிச்சமா இருந்தாலும் அந்த புண்ணியாத்மா என்னையும் ஆத்துக்காரரையும் என் குழந்தையையும் எப்படி வழிநடத்திண்டு இருந்தா. உங்க விசாலாட்சி பெரியம்மாவைத்தான் சொல்றேன்.

நாம கொல்லூர் போன கதையைச் சொல்லேன் அம்மா.

குழந்தை அம்மாவின் காதில் சொன்னது தெரிசாவுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது.

அதெல்லாம் இருக்கடும், இப்ப ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ.

சாப்பிட்டாச்சே. வெள்ளமும் முட்ட முட்டக் குடிச்சாச்சு. வயிறு நிறைஞ்சு போயிருக்கு.

அந்தப் பெண் வர்த்தினி திருப்தியோடு சொன்னாள். குழந்தை அவள் மடியில் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தது.

தெரிசா முன்னால் இருந்த ஒரு துண்டு ரொட்டியை எடுத்தாள். அதைக் கடித்துச் சாப்பிட சுபாவமாக முற்பட்டபோது எதிரே இருக்கிறவர்கள் பற்றிய நினைவு வந்தது. ரொட்டியைக் கையில் வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு சிறு கஷணத்தைப் பிய்த்து எடுத்து எச்சில் படாமல் வாயில் அன்ணாந்து போட்டுக் கொண்டாள்.

எந்த ருசியும் இல்லாமல் இருந்தது அந்த ரொட்டித் துண்டு. சுபாவமான மணமும் கூட இல்லை.

உங்க ஆகாரத்தையும் பிடுங்கி நான் சாப்பிட்டாச்சு. அவர் தான் பாவம் இதொண்ணும் இல்லாமே எங்கேயோ திரிஞ்சிண்டு இருக்கார்.

வர்த்தினி ஏதோ குற்றம் செய்த மாதிரி தலையைக் குனிந்து கொண்டு ஈன ஸ்வரத்தில் சொன்னாள். அவளுக்குக் கண் நிறைந்து போனது.

நீ ஒரு தப்பும் செய்யலே வர்த்தினி. பசிக்கு ஆகாரம் கழிச்சது தப்பா?

தெரிசா சமாதானம் சொன்னாள். சாப்பிடாமலேயே அவளுக்கு வயிறு நிறைந்திருந்தது. மனசிலும் என்னவென்று சொல்லவொண்ணாத திருப்தி.

தெரிசா ஓடுகிற மோட்டார் வாகனத்தில் பார்த்தது அவள் தம்பி மகாதேவ அய்யனையா? அவனும் இங்கேதான் பிரேதமாக அலைந்து கொண்டிருக்கிறானா?

இல்லே சேச்சி. நாங்க பிரேதம் இல்லே. ஆத்மாவோட கூட ஏதோ ரூபத்திலே இருப்பைத் தக்க வச்சுண்டு இருக்கோம். மங்கலாபுரத்திலே இருந்து கொல்லூர் போற வழியிலே காளை வண்டி குடை சாஞ்சு போகாம இருந்தா முழு உடம்பும் உசிரும் கலந்து நாங்க எல்லோரும் வேறே என்ன என்ன படிக்கோ ஜீவிச்சுண்டு கிடப்போம்.

அந்தப் பெண் தான் இன்னும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறதைப் பார்க்க தெரிசாவுக்கு பாவமாக இருந்தது. குழந்தை மாதிரி அவளும் உறங்கினால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கக் கூடும். வர்த்தினி மட்டும் இல்லை, தெரிசாவும் தான்.

விஷுவுக்கு கொல்லூர் அம்பலத்து பரிசரத்துலே வச்சு உங்க தம்பி வேதையரைப் பார்த்து குசலம் விசாரிக்கணும். பூர்வீக சொத்து பங்கு வச்ச பத்திரத்தை கொடுக்கணும். போன தலைமுறையிலே முறிஞ்சு போன உறவை முடிஞ்ச வரைக்குமாவது புதுப்பிச்சுக்கணும். வேறே வேதம். வேறே சீலம். ஆனாலும் நாம ஒண்ணுக்குள்ளே ஒண்ணுன்னு உறவும் பந்தமும் ஆச்சே. நல்லது கெட்டது நாம எல்லாரும் சேர்ந்து இருக்க வேணாமா? என் மாமியார் தான் கடைசி வரைக்கும் இதைச் சொல்லிண்டு இருந்தா. அவ சொன்னபடிக்குத்தான் இந்த யாத்திரையும். அந்த புண்ணியாத்மாவுக்கே கொல்லூர் யாத்திரை இப்படி நடுவாந்திரத்திலே நிக்கப் போறதுன்னு தெரியாமல் போச்சு. அவா இருந்த ஸ்தாலிச் செம்பு எங்கே போச்சு, என்ன ஆச்சுன்னு கூட தெரியலை.

வர்த்தினி கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

கரிப்புகையும், பனியுமாக வெளியில் இருந்து ஒரு காற்று ரெயிப் பெட்டிக்குள் நுழைந்து போனது. தெரிசா அதை தீர்க்கமாக சுவாசித்தாள்.

வேதையனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்குமா?

தெரிசா, அப்பா ஜான் கிட்டாவய்யருக்கு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை லிகிதம் எழுதி ஷேமலாபம் பரிமாறிக் கொள்வது உண்டுதான். சிரஞ்சீவி வேதையனும், சௌபாக்யவதி பரிபூரணமும் கர்த்தர் அருளால் சகல சௌபாக்கியங்களோடும் தீர்க்க ஆயுசோடும் மனதில் சந்துஷ்டியோடும் எப்பவும் இருக்க என் தினசரி பிரார்த்தனைகளில் சர்வேஸ்வரி மாதாவை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் கிறிஸ்து சபை, தேவாலயம் என்று நிறைய அலைச்சல் வைத்துக் கொள்ளாமல் வீட்டில் இருந்தபடிக்கே தேவ ஊழியம் செய்ய அபேட்சிக்கிறேன். வயசும் தளர்ச்சியும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேணும் இல்லையா அப்பா? உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். எரிவு மிகுந்த பதார்த்தங்களை விலக்கவும்.

தெரிசா எழுதுகிற கடிதங்கள் எல்லாம் இப்படி முடியும். கடைசி பத்தியில் ஒரு வரியாக வேதையன் வந்து போவான். கிட்டாவய்யன் இந்த லிகிதம் கிடைத்து எழுதுகிற பதில் லிகிதத்தில் ஊர் விஷயம், திருச்சபை வம்பு வழக்கு எல்லாம் ஆதியோடந்தமாகச் சொல்லி அவன் நூதனமாக சிட்டைப் படுத்திய சுவிசேஷ கானத்தையும் ராகம், தாளம் இன்னது என்று விளக்கி விட்டுப் பிரதி செய்திருப்பது வழக்கம். அடாணாவும், சஹானாவும் லண்டன் குளிரிலும் நினைப்பில் இருக்க, அந்தக் கடிதங்களே உதவி செய்தன. ஆனால் வேதையன் சம்பந்தப்பட்ட எதையும் எழுதியதே இல்லை அப்பா. எழுத முக்கியமாக எதுவும் அவருக்குத் தெரிந்திருக்காதோ என்னமோ. குப்புசாமி பெரியப்பாவின் மகன், அவன் குடும்பம், அது இருந்த, இருக்கப்பட்ட ஸ்திதி எல்லாம் ஜான் கிட்டாவய்யருக்கு எந்தத் தரத்திலும் மனசிலாகி இருக்கும் என்று தெரிசாவுக்குத் தோன்றவில்லை.

சேச்சி, நாங்க போகணும். அப்புறமா சாவகாசமா ஒரு பொழுதிலே வந்து வார்த்தை சொல்றேன். சரியா?

அந்தப் பெண் எழுந்தாள். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையையும் உலுக்கி எழுப்பினாள். மலங்க மலங்க விழித்தபடி அந்தக் குழந்தையும் ஸ்திரியும் காற்றோடு கரைந்து போனபோது தெரிசாவின் விழிகள் களைப்பால் மூடிக் கொண்டன.

அவள் எழுந்தபோது சாயந்திரம் ஆகியிருந்தது. முன் இருக்கையில் ஒரு கத்தோலிக்க பாதிரியார் உட்கார்ந்திருந்தார். துடைத்து வைத்தது போல ரெயில் பெட்டியை யாரோ விருத்தி செய்திருந்தார்கள். அவள் இருக்கையில் பாதி சாப்பிட்டு அவள் மிச்சம் வைத்த ரொட்டித் துண்டு அப்படியே இருந்தது.

தாமஸ் எங்கே போனான்?
(தொடரும்)

Series Navigation