விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று

This entry is part of 45 in the series 20081009_Issue

இரா.முருகன்


மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய துரைகளின் பாதாரவிந்த கமலங்களில் தெண்டனிட்டு, மதராஸ் பட்டணம் மயிலாப்பூர் கஸ்பா வெங்கடேச அக்ரஹாரம் வைத்தியநாத சர்மன் புத்ரனும் உன்னத நியாயசபை ஏற்படுத்தியபடி காராக்ரஹத்தில் தெண்டனை அனுபவிக்கிற அடிமை ஸ்மார்த்த ப்ராமணனுமான லிங்கம் என்ற மகாலிங்கய்யன் (வயசு இருபத்தொன்பது) சமர்ப்பிக்கிற கருணை மனுவின் தொடர்ச்சியாகும் இது. பிரபுக்கள் இதுக்கு முந்தியதை வாசித்திருக்க வேணுமென யாசிக்கிறேன்.

திருக்கழுக்குன்றத்தில் தொழுதுவிட்டு, கழுகுகளின் தரிசனமும் முடித்துவர உத்தேசித்து நான் மாத்திரம் கிளம்பியது என் பூஜ்ய பிதாவின் சிரார்த்தம் முடிந்த தேய்பிறையில் திரயோதசிக்கு அடுத்த சதுர்த்தசியன்றைக்கு. அமாவாசைக்குக் கடையடைப்பு. முந்தின ரெண்டு தினமும் கடையில் ரஜா சொல்லியிருந்தேன்.

சிரார்த்த தினத்தில் விஷ்ணு இலையில் சாப்பிட்டு சோமனும் தட்சிணையுமாக புரோகித சிகாமணிகள் இடுப்புத் துண்டை விரிக்கச் சொல்லி ஏப்பம் விட்டபடி நடந்து போன பிறகு நானும் சித்தே சிரம பரிகாரம் செய்து எழுந்தேன். பிறகு கொத்தவால்சாவடி போய் ஏற்கனவே பிரஸ்தாபித்த பாலையா என்ற தெலுங்கனிடம், ரெட்டை மாடு பூட்டிய வண்டியில் திருக்கழுக்குன்றம போய்வர ஒரு ரூபாய் அச்சாரம் கொடுத்துவிட்டு சாயரட்சையோடு வீட்டுக்கு வந்தேன். அடுத்த நாள் பகலில் கிளம்ப வேண்டும் என்று உத்தேசித்து வைத்திருந்தபடி சதுர்த்தசியன்று வெய்யில் தாழ்ந்து கிளம்பியானது. வீட்டு ஸ்திரி பிரஷ்டையாக ஒதுங்க வேண்டிப் போனதால் தனியாகவே போகவேண்டி வந்த கஷ்டத்தை முந்தின லிகிதத்தில் தெண்டனிட்டு உரைத்தது துரைகள் கடைக்கண் பார்வையில் பட்டிருக்கக் கூடும்.

எட்டு பிரம்மரிஷிகளில் ரெண்டு ரெண்டு பேராக கழுகு உருவில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து ஆறு பேர் முக்தியடைய மிச்சம் ரெண்டு பேர் இந்தக் கலியுகத்தில் கழுகாக அலைந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறது கழுக்குன்றம் தலபுராணம். இந்தத் தகவல் என் தகப்பனார் சேகரித்து வைத்து செல்லரிக்கத் தொடங்கியிருந்த அச்சு புத்தகம் ஒன்றிலிருந்து நான் கிளம்புகிற நேரத்தில் கிடைத்தது. போகத்தைப் பற்றி ஆசிரியப்பாவும், கொச்சகக் கலிப்பாவும் எழுதாமல் இப்படியான ஸ்தல புராணங்களை இயற்றியிருந்தால் நான் காராக்ரஹத்தில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க மாட்டேனோ என்னமோ. அது எந்தப்படிக்கும் போகட்டும். துரைகள் தொடர்ந்து மேலே படிக்க உத்தரவாகணும்.

பட்டணத்திலே பிறந்து, சமுத்திரக் காற்றைக் குடித்துக் கொண்டு, மயிலாப்பூர் திருக்குளத்து ஜலத்தில் குளித்துத் தொழுது குடத்தில் சேந்தி வந்து, கொத்தவால் சாவடியில் காய்கறி, பழ வர்க்கங்களும், ஆடியப்ப நாயக்கன் சந்தில் அரிசியுமாக வாங்கி வந்ததை நறுக்கியும் கொதிக்கவும் வேகவும் வைத்தும் ஆகாரம் செய்து நித்திரை போய் எழுகிற தினசரி ஆச்சாரத்தில் இருக்கப்பட்டவன் நான். என் போன்றவர்களுக்கு திருக்கழுக்குன்ற யாத்திரை போன்றவை ஒரு சந்தோஷத்தையும் தரமாட்டாது. சதுப்பு நிலங்களையும் களிமண் பூமியையும் கடந்து, நடுவே கல்லும் முள்ளுமான பாதையில் சிரமத்தோடு போனால், பாதி தூரம் போவதற்குள் அது முடிந்து போகும். அப்புறம் வண்டி முன்னேற முடியாதபடி சேறும் சகதியும். எருமை மாடுகளும், வராகங்களும் நீந்தித் திளைத்துக் கொண்டிருக்கும் மடு. அந்தப் பிரதேசத்துக் கரையில் மாடுகளை நடத்தியபடி ஒரு தடவையும், வண்டியை ஜாக்கிரதையாக இழுக்க வண்டிக்காரனுக்கு ஒத்தாசை செய்தபடி இன்னொரு தடவையும் போய்வந்த பிறகு சகதி கடந்து திரும்ப வண்டி பூட்டி ஓட்டலானோம்.

வழியில் ஒரு கிராமம் தட்டுப்பட்டது. பெரிய மைதானமாக பக்கத்தில் நீர்நிலையோடு கூட இருந்ததால், வண்டிக்காரன் இங்கேயே தங்கி விட்டு விடிந்து இரண்டு மணி நேரம்போல் யாத்திரையைத் தொடர்ந்தால் திருக்கழுக்குன்றம் போய்விடலாம் என்றான். அவன் இங்கே ஏற்கனவே பல தடவை வந்து அனுபவப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. மாட்டை அவிழ்த்துக் கட்டி கூளம் வைத்த பிறகு உத்தேசித்திருந்தபடிக்கோ என்னமோ கள்ளுக் குடிக்க மேற்கே பார்த்து நடந்து போய்விட்டான்.

நான் கொண்டு போயிருந்த அவலை மோர் விட்டுப் பிசைந்து நாலைந்து உருண்டை ராப்போஜனமாக சாப்பிட்டான பிறகு சிரார்த்தத்துக்குச் செய்து மீந்த எள்ளுருண்டை நாலைந்தையும் தின்றேன். கொண்டு வந்திருந்த சுத்த ஜலத்தை ஒரு மடக்கு அருந்தியானது. அப்புறம் கொஞ்சம் அந்தத் தரிசில் லாந்திவிட்டு, பூச்சி பொட்டு இல்லாத இடமாகப் பார்த்து துண்டை விரித்து நித்திரை போக சித்தம் செய்தேன். பக்கத்திலே நீர்நிலையில் நீர் அலையடிக்கிறதும், ராப்பறவை இரைகிறதும், தவளைக் கூச்சலும் தவிர வேறு சத்தம் இல்லை. நானும் மேலே கவிந்த ஆகாசத்தில் நட்சத்திரமுமாக தனியாகக் கிடந்த பொழுது அது. காற்று ஆனந்தகரமாக வந்து தாலாட்டு பாடி கண்ணயரச் சொன்னபோது நான் சத்தியமாக பகவத் விஷயமாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆறு பிரம்மகுமாரர்கள் கழுகாக அவதாரம் செய்து முக்தி அடைந்து மற்ற ரெண்டு பேருக்காக பக்தவத்சலேசுவரரின் காலடியில் காத்திருக்கிறதை மனதில் வெண்பாவாகச் செய்கிறபோது இரண்டு அடிகளே இயற்றி முடியக் கண்ணயர்ந்து போனேன்.

திடீரென்று அந்த மைதானத்தில் களேபரமாகச் சத்தம் கேட்டு விழிப்பு வந்து விட்டது. எழுந்து உட்கார்ந்தேன். மட்டக் குதிரைகளை அவிழ்த்து பாறாங்கல்லில் கட்டி கொள்ளும் புல்லும் போட்டிருந்த வாசனை நாசியில் இதமாக ஏறியது. ஓரமாகத் தீ மூட்டி வள்ளிக்கிழங்கை சுட்டுக் கொண்டிருந்த ஒரு ஆணும் பக்கத்தில் உலையேற்றி அரிசி பொங்கும் பெண்ணுமாக யாரோ உரத்த தெலுங்கில் பேசுவது கேட்டது. கூடவே வயசான சிலரும் துணி விரிப்பில் உட்கார்ந்தபடிக்கு நடுவிலே நடுவிலே வார்த்தை சொன்னபடி இருந்தார்கள்.

சூளை பங்காரு தாசி சிநேகிதத்தால் அடியேனுக்குத் தெலுங்கு நன்றாகவே அர்த்தமாகும் என்பதால் அந்த வர்த்தமானம் முழுக்கக் காது கொடுத்துக் கேட்டேன். அந்தப் பெண்ணுக்கு வள்ளிக்குழங்கு சுட்டுக் கொண்டிருந்த ஆம்பிளை அக்காள் புருஷன் முறையாக வேண்டும். அக்காள் நாலு மாசம் முன்பு வைசூரி போட்டு மரித்துப் போய்விட்டாள். அவளுக்கு ரெண்டு வயசில் ஒரு குழந்தை உண்டு. பெரியவர்கள் உட்கார்ந்திருந்த துணி விரிப்பில் நடுவிலே அது உறக்கத்தில் இருக்கிறது. குழந்தையையும் அக்காள் புருஷனையும் அக்காள் இடத்தில் இருந்து கவனித்துக் கொள்ள இந்தப் பெண்ணை வள்ளிக் கிழங்கனுக்கு கழுக்குன்றத்தில் வைத்து கல்யாணம் செய்து கொடுக்கவே எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறார்கள். அமாவாசை கழிந்து பிரதமை அன்று விடிகாலை கோவில் சந்நிதியில் வைத்து மாங்கல்ய தாரணம் நடக்கிறது.

கல்யாணம் கழிந்து நீ மாத்திரம் என் கூட வந்தால் போதும். குழந்தை வர வேணாம்.

கிழங்கன் சொல்கிறான். அது அவனுக்குப் பிறந்தது இல்லையாம். அவனுடைய சிநேகிதனான சிப்பாய் ஒருத்தன் வீட்டுக்கு வரப்போக இருந்ததால் அவனுடையதாக இருக்கலாமாம். தவிர வருஷத்தில் எட்டு மாசம் உப்பும் புளியும் விற்க மலைநாடு, குடகுநாடு என்று அவன் திரிந்து கொண்டிருப்பதால், இரண்டு வருடத்துக்கு முன் மழைக்காலத்தில் அவளுக்குக் கருப்பிடித்திருக்க வாய்ப்பு இல்லையாம். அப்போது அவன் துளு பேசுகிற பூமியில் மங்களூர் என்ற இடத்தில் திருவிழாவுக்காக ஒரு மாதம் கடை போட்டிருந்தானாம்.

அதெல்லாம் சரிதான். நடுவிலே ஒரு வாரம் பத்துநாள் போல வந்துவிட்டுப் போனது நினைவு இருக்கோ என்று வயதான யாரோ கேட்டார்கள். அவன் ஒரு நிமிஷம் சும்மா இருந்தான். அப்புறம் கிழங்கைத் திருப்பிப் போட்டு சுட்டபடி மெலிசான குரலில் சொன்னான்.

அப்போ, தேக சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாதபடி அசந்தர்ப்பமான சூழ்நிலை எனக்கு.

வருஷம் ஒருதடவை மட்டும் சுரக்கும் ஆண்தன்மை கொண்டவனா நீ என்று கையில் அகப்பைக் கரண்டியோடு கேட்டாள் அந்தப் பெண். பின்னால் பெரியவர்களில் யாரோ சிரிக்கிற சத்தம் குதிரை கனைப்போடு சேர்ந்து வந்தது.

பிரதமையும் அமாவாசையும் எதுக்கடி மச்சினிச்சி? இப்பவே வந்து படு. நான் யாருன்னு காட்டறேன்.

அந்த தெலுங்கன் தீய்ந்த வள்ளிக்கிழங்கை உயர்த்திப் பிடித்துக் காட்டினான். நான் இந்த வர்த்தமானம் அலுத்து திரும்ப நித்திரை போக யத்தனித்தபோது அரிசி கொதித்த உலையில் பிரகாசமாக அக்னி கொழுந்து விட்டெறிந்தது. வெளிச்சத்தில் அந்தக் கன்யகையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தேன். சதைப் பிடிப்பு இல்லாத முகமும் குச்சி குச்சியான கையுமாக இருந்தாலும் அவளுக்கு வேண்டிய தசையை எல்லாம் உருட்டி மார்பில் வைத்துத் திணித்திருந்தான் பிரம்மதேவன். இவ்வளவு பெரிய ஸ்தனங்களோடு நான் யாரையும் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிழைத்துக் கிடந்தால் பார்ப்பேன் என்பதும் நிச்சயம் இல்லை.

அப்புறம் ராத்திரி முழுக்க அந்த பயோதரங்கள் என் மனதில் அழுந்திப் படாதபாடு படுத்தினவண்ணம் இருந்தன. ரிஷிகுமாரர்கள் பற்றி யாத்த வெண்பா அந்தரத்தில் நிற்க, இந்த முலைகளின் விஷயமாக அச்சு வெல்லம் போன்ற கிட்டத்தட்ட நூறு செய்யுட்களை மனதிலேயே இயற்றித் தீர்த்தேன். ஒரு தடவை கூட இந்திரியம் வெளிப்படாமல் ஒரு சீரும் அசையும் தப்பாமல் இப்படி ஒரு நூறு பாக்களை இயற்றியதை ஊருக்குத் திரும்பியதும் முதலியைப் பார்த்துக் கொடுத்து புத்தகமாக அச்சுப் போடவேண்டூம் என்று மனதில் திடமாக தீர்மானமானது. கழுக்குன்றம் போய் இனி என்னவாகப் போகிறது? இப்படியே வீட்டுக்குப் போய் லலிதாம்பிகையைக் கட்டாயப்படுத்தி சுகித்தால் இங்கே வந்த பெலன் சித்தியாகும் என்றும் தோன்றியது. பாதகி இப்போது பார்த்து தீண்டலாக இருப்பது உடனடியாக நினைவு வந்து மனசாகிய உலையை அவித்துப் போட்டது. பங்காரு தாசியும் பரலோகம் போயாகிவிட்டது. இந்த ராத்திரியில் இப்படி சிருங்கார நினைப்பில் கிடந்து உழல என்ன பாவம் செய்தேன் என்று யோசித்தபடி நெடுநேரம் விழித்திருந்தேன். அந்தத் தெலுங்கு ரதி அவ்வப்போது பேசின குரல் மட்டும் காதில் அமிர்தமாக வர்ஷித்துக் கொண்டிருந்தது. அவளோடு மனம் போனபோக்கில் கற்பிதமாகச் சுகித்தபடி எப்போது உறங்கினேனோ தெரியாது.

காலையில் எழுந்ததுமே அவள் குரல் தான் காதில் கேட்டது. நீர்நிலையில் நான் குளிக்கிறபோது அவள் குளித்துக் கரையேறி இருந்தாள். உடம்போடு ஒட்டிய ஈரத் துணியோடு கையில் ஒரு குடமும் ஏந்தி கரையில் அவள் நடந்து போனாள். முழுக்க நனைந்த வெள்ளை வஸ்திரத்துக்குள்ளே அசைந்த அந்த ஒய்யாரம் தண்ணீருக்குள்ளேயே என்னை இன்னொரு தடவை அசுத்தப்படுத்திப் போட்டது. காமம் தவிர்க்கச் சொல்லி பகவானை வேண்டுகிற ஸ்லோகத்தை எல்லாம் மனதில் சொல்லி தியானிக்க முற்பட்டாலும் அவளுடைய இடுப்புக்கு மேல்பட்ட தேகம் மட்டும் பிடிவாதமாக மனதில் ஈரம் உலராமல் ஈஷிக் கொண்டு அலைக்கழித்தது.

வண்டிக்காரன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தபோது நான் உள்ளே இருந்து அந்தக் கூட்டத்தைத் தேடினேன். எங்களுக்கு முன்பே அவர்கள் கிளம்பியாயிருந்தபடியால் மைதானம் வெறுமையாக இருந்தது. முழுக்கத் தின்று முடிக்காமல் பாதை நடுவில் கிடந்த வள்ளிக்கிழங்கு வண்டி ரோதையில் நசுங்கியது. ராத்திரியில் அதை நெருப்பில் வைத்துச் சுட்டவன் நாளைக்கு அவளுடைய தேகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்ற நினைப்பு காலை நேரத்துக்குப் பொருந்தாமல் வந்தது.

அவன் போன வண்டி கவிழ்ந்து காலுக்கு நடுவே சக்கரம் ஏறிக் கூழாக நசுங்கி சண்டாளன் மடியட்டும். நான் அந்த ஸ்தன்ய ரதியை என் ரதத்தில் ஏற்றிக்கொண்டு மயிலாப்பூர் வெங்கடேச அக்கிரஹாரம் திரும்பி விடுவேன். லலிதாம்பிகை கிணற்றடியில் கந்தல் சுருணையில் படுத்தபடி பார்த்தாலும் பாதகமில்லை. பொடிக்கடைக்கு இன்னும் ஒரு மாதம் சம்பளம் இல்லாத ரஜா சொல்லிவிட்டு இந்தப் பெண்ணின் நெஞ்சுக்கு நடுவே சதா முகம் புதைத்துக் கிடப்பேன். காமம் அத்தனை கொடியது. ஊர் பேர் தெரியாத அன்னிய ஸ்திரியை இச்சிக்க வைப்பது.

கொஞ்சம் வேகமாக வண்டியை ஓட்டுமய்யா. இத்தனை மெதுவாகப் போனால் கழுகு பகல் போஜனம் முடித்துப் போய் ராத்திரி ஆந்தைகள் முழிப்பதைத்தான் தெரிசனம் செய்து வர வேண்டியிருக்கும் என்று வண்டிக்காரனிடம் சொன்னேன். உள்ளபடிக்கு அவன் விரசாகத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். இன்னும் வேகமாகப் போனால் தெலுங்கு கோஷ்டியைப் பார்க்கலாம் என்ற நப்பாசை என்னைக் கொண்டு செலுத்தியதால் பொய் சொல்ல வேண்டிப் போனது.

பட்சி தீர்த்தக் கரையில் வண்டி நின்றது. இங்கே ஒரு முழுக்கு போட்டால் பூர்வ ஜென்ம பாவம் தொலையும். இறங்குகிறீரா?

வண்டிக்காரன் கேட்டான். அது தொலைந்து என்ன? இந்த ஜன்மத்துக்கும் இனி வரப்போகிறதுக்கும் எல்லாம் சேர்த்து இப்படி ஏற்றிக் கொண்டே போகிறேனே?

மேலே போகலாம் என்று சொல்ல நினைத்தாலும் கரையில் தெலுங்குக்காரர்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து நானும் சாடி இறங்கினேன். அந்த அப்சரஸோடு சாக்கடையில் அமிழ வேண்டி வந்தாலும் உடனே இறங்க நான் தயாராக இருந்தேன். அவள் எங்கே? வள்ளிக்கிழங்கன் மட்டும் கண்ணில் பட்டான்.

கேட்டுவிடலாமா இவனிடம்? என்ன கேட்பது?

இங்கே ஸ்நானம் பண்ணலாமா?

அவன் கூட வந்திருந்த பெரியவர்களில் யாரோ என்னை அரைகுறை தமிழில் கேட்டார்கள். நான் திரும்பிப் பார்த்தேன். முக்காலும் பாசி படர்ந்திருந்த திருக்குளம் அது. பிருஷ்ட சுத்திக்கு தவிர வேறு எதுக்கும் அந்த ஜலத்தை இங்கே யாரும் உபயோகிப்பதில்லை என்று அர்த்தமானது. அவள் எங்கே?

வேடு கட்டிய தலைமுடியோடு அவள் பட்சி தீர்த்தத்தை ஒட்டிய புதர்கள் பக்கம் இருந்து நடந்து வந்தாள். அற்ப சங்கை தீர்த்து வந்திருக்கிறாள். குளத்தில் காலை மட்டும் அளைந்து அவள் சுத்தி செய்வதைப் பார்த்தேன். காலில் வெள்ளி கொலுசு சூரிய உதயத்தில் தகதகவென மின்னியது. அதை மட்டுமா பார்த்தேன்?

இங்கே குளித்தால் நீங்கள் ஊர் போய் ரோகத்தில் படுக்கச் சரியாக இருக்கும். தலையில் மட்டும் புரோட்சித்துப் போனால் பட்ட இடத்தில் கொஞ்சம் போல முடி உதிரும். உசிதப்படி செய்து கொள்ளும்.

நான் நல்ல தெலுங்கில் சொன்னேன். ஈரக் காலோடு சேலையை உயர்த்திப் பிடித்தபடி கெண்டைக்கால் ரோமம் தெரிய முன்னால் வந்தாள் அவள். நான் சொன்னதில் ஹாஸ்யத்தைக் கண்டு கலகலவென்று சிரித்தாள். அவளைக் கட்டப் போகிறவன் சுட்ட கிழங்கு போல முகத்தை வீர்க்க வைத்துக்கொண்டான். எனக்கு என்ன போச்சு? நான் தரையைப் பார்த்தபடி நின்றேன். அந்தக் கால்களை.

எல்லா வண்டிகளும் ஒரே வேகத்தில் குன்றின் அடிவாரம் வரை போனபோது என் மாட்டு வண்டி அவள் இருந்த மட்டக் குதிரை வண்டிக்குப் பின்னாலேயே தொடர்ந்தது. குன்றம் போகவே வேண்டாம். கழுகு தெரிசனமும் வேண்டாம். இப்படியே தொடர்ந்து இவளை வெறித்தபடி லகரியோடு ஜீவிதம் முழுக்க யாத்திரையாகிக் கொண்டிருக்க அந்த நிமிடத்தில் நான் சித்தமாக இருந்தேன்.

அடிவாரத்தில் வண்டிகள் நின்றன. எல்லா வண்டிக்காரர்களும் ஜாக்கிரதையாக ஓட்டி வந்த வாகனங்களை நிறுத்தி இறங்கினார்கள். சாராயக்கடை என்று எழுதி வைத்த ஒரு தென்னோலை வேய்ந்த குடிசை உடனடியாகக் கண்ணில் பட்டது.

அவர்கள் யாரும் கழுகு தரிசனத்துக்கு வருவதாகத் தெரியவில்லை.

சாமிகளே, நீங்க மேலே போய் தரிசனம் முடிஞ்சு ஜல்தியா திரும்பி வாங்க. கழுகு வந்த பிற்பாடு உடனே கிளம்பினா, நாளை விடியற நேரம் உங்க பேட்டை போய்ச் சேர்ந்திடலாம்.

நான் வண்டிக்காரன் பசியாற கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்தேன். சாராயக் கடைக்குப் போகாதே என்று அவனுக்கு நல்லுபதேசமும் செய்தபடி நாலு பக்கமும் பார்வையால் மேய்ந்தேன். சுந்தரி நினைப்பில் மனசு அடித்துக்கொண்டது. அவள் கையைப் பற்றிக் கொண்டு கொங்கை மலையேறி அல்குல் தடாகத்தில் விழுவேனோ என பழம்பாட்டு எல்லாம் மனதில் வந்து அடைசலாகப் புகுந்தது.

குன்றின் உச்சிக்கு நடக்கும்போது பின்னால் பேச்சுச் சத்தம். திரும்பினால் அவள் தான் வந்து கொண்டிருக்கிறாள். கூட சிரமத்தோடு நடக்கிற வயதான பெண் அவளுடைய தாயாராக இருக்கும் என்று பட்டது. தோளில் ஒரு குழந்தையைச் சுமந்தபடி வந்தாள் அந்தக் கிழவி. மூத்த மகள் பெற்றதாக இருக்கும். கிழங்கன் இதுக்கு பிதா இல்லை என்று பிரஸ்தாபித்திருந்தான் இல்லையா? குழந்தை முகத்தில் ஜாடையைத் தேடினேன். எல்லாமே வள்ளிக்கிழங்காகத் தெரிந்தது.

இப்படி ஆண்பிள்ளைகள் யாரும் வரமாட்டேன்னு அடம் பிடிக்கறது நல்லாவா இருக்கு?

வயதில் மூத்த பெண் கேட்டாள்.

சாராயம் விக்கற கடையைப் பார்த்தாச்சில்லே. இனிமே நாளைக்கு கல்யாண நேரத்துக்குத்தான் கண்ணுலே படுவாங்க. அத்தையும் கால்வலின்னு தங்கிட்டா. கழுகு, காக்கா எல்லாம் நாளைக்கே சாவகாசமா பார்த்துக்கறாளாம்.

அவள் சொன்னபடி என்னைப் பார்த்தாள். நீ விரலை நீட்டினால் உடனே பற்றிக்கொண்டு கூடவே வந்துடுவேன் என்று அந்தப் பார்வையை அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

வெய்யில் தகிக்க ஆரம்பிக்க குழந்தை உஷ்ணம் தாங்காமல் அழ ஆரம்பித்தது. ஒரு கல் மண்டப வாசலில் குழந்தையை நிறுத்தி வயதானவளும் நின்றாள்.

எனக்கும் மூச்சு முட்டுது பொண்ணே. நான் இங்கேயே ரெண்டு பழத்தை உரிச்சுப் போட்டுக்கறேன். கொண்டு வந்த புளிசோற்றை குழந்தைக்கு ஊட்டிவிட்டு, நீரும் புகட்டி அவனைத் தூங்க வைக்கறேன். இனி ஆயுசுக்கும் இவன் என்னோடதான். என் மகளைப் பத்தி தூஷணை செய்யறானே நல்லா இருப்பானா இவனோட அப்பன்?

அவளுக்கு மூச்சு வாங்கியது. அழுதபடி முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்தாள்.

திரும்பவும் அவனே எனக்கு மாப்பிள்ளையா வாய்க்கணும்னு தலைவிதி. போறது, எனக்கும் சேர்த்து தரிசனம் செஞ்சு சீக்கிரமா வந்து சேரு. கழுகைப் பார்த்து கன்னத்திலே போட்டுக்கோ. பக்கமா எல்லாம் போயிடாதே. கொத்திடும். ஜாக்கிரதையா இருடி கல்யாணி. நாளைக்கு கல்யாணம் ஆகப்போறவ.

ஆக, அந்த அதிரூப சுந்தரிக்குப் பெயர் கல்யாணி.

கல்யாணி மாத்திரம் எனக்குப் பின்னால் நடந்து வந்தாள். நான் கல்யாணியின் நடைக்கு ஈடாக என் வேகத்தைக் குறைத்தேன். இப்போது கல்யாணிக்கு ஜதையாகக் கூடவே நடந்தேன். கல்யாணி என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். கசகசவென்று வியர்வை கல்யாணியின் ரவிக்கையை நனைத்து என் கண்ணில், நாசியில் போதை ஏற்றியது.

கல்யாணி, உனக்கு ஒரு முத்தம் போடட்டுமாடி? கன்னத்தில், கழுத்தில். இன்னும் கழுகு கொத்தாத இடத்தில், வலத்தில். கல்யாணி. அடி என் கல்யாணீ.

(தொடரும்)

Series Navigation