புன்னகைக்கும் இயந்திரங்கள் -2

This entry is part of 35 in the series 20080821_Issue

இராம. வயிரவன்


என் காரியதரிசி ரோபோவைத் தொடர்பு கொண்டேன். இரண்டு நூற்றாண்டு திரைப்படங்களை, நாவல்கள், பத்திரிக்கைகளைத் தொகுத்து வைக்கச் சொல்லியிருந்தேன். எல்லாம் தயாராய் இருப்பதாய்ச் சொன்னது. ஆங்காங்கே ஒரு ரஸ் பார்த்து விட வேண்டும் அதுவும் அடுத்த முதியவரைச் சந்திக்குமுன் என நினைத்துக் கொண்டேன். அது சந்தேகங்கள் ஏதேனும் எழுந்தால் கிழவரிடம் விளக்கம் பெற ஏதுவாக இருக்கும் என்பது என் எண்ணம்.

திரைப்படத் தொகுப்பை பார்த்துக் கொண்டே வந்தேன். தொகுப்பு பின்னோக்கி விரிந்தது. போகப் போக ஒன்றை உணர முடிந்தது. அது ஒரு காலக் கட்டத்தில் ஆண்கள் ஹீரோக்களாகவும், ஆண்களை முன்னிமைப் படுத்தியுமே கதைகள் பின்னப்பட்டிருப்பது தெரிந்தது. பெண்கள் வெறும் கவர்ச்சிக் கன்னிகளாகவும் காதலிகளாகவுமே வந்து போனார்கள். அப்படியானால் ஒரு காலத்தில் ஆணாதிக்கம் இருந்திருக்கிறாதா என்ற கேள்வி எழுந்தது. மேலும் விவரம் அறிய வேண்டும் எனக் குறித்துக் கொண்டேன். என் தாத்தா சொன்ன ‘குடும்பம்’, அது எப்படிச் செயல் பட்டது என்பதையெல்லாம் படங்களின் வாயிலாகப் புரிந்து தெளிந்து கொள்ள முடிந்தது. மக்களிடம் இருந்து இப்போது இல்லாமல்போன சிரிப்பையும், சந்தோசத்தையும் படங்களிலே பார்க்க முடிந்தது.

பத்திரிக்கைகளைப் புரட்டினேன். ஆணாதிக்கம் பற்றி ஏதேனும் தெரிந்து கொள்ள முடிகிறதா எனப் பார்த்தேன். தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை. ஒரு செய்தி கிடைத்தது. பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த செய்தி அது. தொடர்ந்து பின்னோக்கி அது பற்றிய செய்திகளைத் தேடினேன். பல பெண்ணுரிமைச் சங்கங்கள் இருந்த செய்திகள் கிடைத்தன. பெண்ணுரிமை பாடிய பல கவிதைகள், ஆணுக்குப் பெண் சமம் என்று ஆர்ப்பரித்த கவிதைகள் கிடைத்தன. இன்னும் சற்று பின்னோக்கிப் பார்த்தேன். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம், பெண்களை வீட்டில் பூட்டி வைத்திருந்த காலம் இருந்திருப்பது தெரிந்தது.

எனக்கு இது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. இன்றைக்குப் பெண்களின் நிலை எப்படி மாறிவிட்டது என்பது பிரமிப்பூட்டியது. பெண்ணடிமை என்பது இருந்திருக்கிறது என்பதற்கான சுவடே இல்லாத வளர்ச்சி. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? கடைசிக் கிழவரிடம் என் சந்திப்பை நினைவூட்டியது செல்வி. அவரின் பின்னணி என்ன? எனக் கேட்டேன். தயாராய் வைத்திருந்த தகவல்களை அளித்தது செல்வி. பெயர் : பிலிப் தாமோதர், பணி: ஆசிரியர், சிறப்புத் தகுதிகள்: எழுத்தாளர், கவிஞர். என் தேடலுக்கு இவர் நல்ல பங்களிப்பைச் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

கேட்க வேண்டிய எல்லாக் கேள்விகளுடனும் அவரைச் சென்றடைந்தேன். பிலிப் தாமோதர் கட்டு விடாமல் இருந்தார். அவர் பார்வை தீர்க்கமாய் இருந்தது. இந்த வயதிலும் இப்படி ஒருவர் என நினைத்துக் கொண்டேன். என் நோக்கத்தையும், சந்தேகங்களையும் அவர் முன் வைத்து விட்டு அவர் பேசக் காத்திருந்தேன். என் தேவைகளை அவர் எளிதில் புரிந்து கொண்டார். என் பதிவுக் கருவிகள் பதிந்து கொள்ளத் தயாராய் இருந்தன. என் தாத்தாவைப் போலவே இவரும் பேசப்போகிறார். அதன் மூலம் அவர் மனம் லேசாகக்கூடும் என்கிற நினைப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

தாத்தா செருமிக் கொண்டு பேசினார். ‘19ம் நூற்றாண்டில் பெண்ணடிமை இருந்தது உண்மை. அந்த நூற்றாண்டின் இறுதியில் அதற்கான மீட்புக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. 20ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் அந்த மீட்புக்குரல்கள் இன்னும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. பெண்கள் ஆண்களுக்குச் சமமாக படிக்க ஆரம்பித்தார்கள். அதுவரையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பெண் மிகச் சிறந்த குடும்ப நிர்வாகி. குடும்பத்தில் வேலைக்குச் சென்று திரும்பும் கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் நல்ல வடிகாலாகவும், நல்ல துணையாகவும் இருந்து அவர்களை நெறிப்படுத்துபவளாகவும் இருந்து வந்திருக்கிறாள். அதுமட்டுமல்ல வீட்டில் இருந்த வயது வந்த பெற்றோரையும் அவள்தான் கவனித்து வந்திருக்கிறாள். ஒருகட்டத்தில் பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள். அப்பத்தான் பல மாற்றங்கள் ஏற்பட்டன தம்பி. பல பெண்கள் வேலைக்குச் சென்று பொருளீட்டியதோடு குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பையும் திறம்படச் செய்தார்கள். சிலரால் அது முடியவில்லை. அப்போதுதான் பிள்ளைக் காப்பகங்கள் அவர்களுக்கு உதவ ஏற்பட்டிருக்க வேண்டும். சிலர் பணிப் பெண்களை வைத்துக் கொண்டார்கள். முதியோர் இல்லங்கள் முளைத்தன. இந்த பிள்ளைக் காப்பகங்கள், பணிப்பெண்கள், முதியோர் இல்லங்கள் எல்லாம் பெண்களின் பிசிகல் வேலைகளைத்தான் பகிர்ந்து கொள்ள முடிந்தனவே தவிர, மனம் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. பெண்கள் வேலைக்குப் போனதால் குடும்பப் பொருளாதாரம் பெருகியது. அதில் ஒரு பகுதி செலவே காப்பகங்களுக்குப் போதுமானதாய் இருந்தது. உபரியான பணத்தில் கூடுதல் வசதிகளை பெருக்கிக் கொண்டான் மனிதன். அந்த வசதிகள் தந்த மயக்கத்தில் பெண் வேலைக்குச் செல்வது அத்தியாவசியத் தேவையாகிப் போனது. அதனால் ஏற்பட்ட மனம் சார்ந்த இழப்புக்களை அவன் பெரிது படுத்தவில்லை. அதுதான் இன்று இப்படி விடிந்திருக்கிறது.’ பெரியவரின் விளக்கமான உரை என் கேள்விகளுக்குப் பதிலாய் இருந்தது. அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றுக் கொண்டேன்.

* * *

அன்றைய நாள் காலை பல எதிர்பார்ப்புக்களோடு விடிந்தது. என் தலைமை அதிகாரியோடு பல ஒத்திகைகள், பல மாற்றங்கள், எல்லாவற்றுக்கும் பிறகு எனக்கான மேடை தயாராய் இருந்தது.

அரங்கம் அமைச்சர்கள், எம்.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள், மீடியாக்காரர்கள், விஞ்ஞானிகள், ரோபோக்கள் என நிறைந்திருந்தது. வெர்ச்சுவல் அரங்கிலும் பல அமைப்புக்கள் கொக்கி போட்டுக் காத்திருந்தார்கள். பல பெண் அமைப்புக்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது.

மேடையில் நானும், தலைமை அதிகாரி மட்டும். உதவிக்காக செல்வி. எல்லாக் கருவிகளும் சரியாக இயங்குகின்றன என்ற சமிக்ஞை கிடைக்கப் பெற்றதும் தலைவர் எழுந்து நின்றார் முன்னுரைக்காக. விளக்குகள் ஒளிர்ந்தன.

‘என் பிரியமான மனித குலப் பிரதிநிதிகளே எல்லோருக்கும் வணக்கம். இந்த 22ம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தனிமனித உயர்வில் தன்னிறைவு அடைந்துள்ளோம். அறிவியல் வளர்ச்சியால் உலகம் சிறிதினும் சிறிதாகி விட்டது. ஆனால் மனிதர்களுக்கு இடையேயான இடைவெளிதான் அதிகரித்து விட்டது. அவர்கள் தங்களைச் சுற்றிக் கூண்டுகளை அமைத்துக் கொண்டு சிறைகளுக்குள் வாழ்வதைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். முனைவர் திரு ராம் அவர்களின் பரிந்துரைகளின்படி அரசாங்கம் வெளியிடப்போகும் முடிவுகள் மனிதகுலத்திற்கு பயனளிக்கும் என உறுதியளிக்கிறேன். திரு. ராம் அவர்களை அவரது கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுப் பேச அழைக்கிறேன்’ என்னை அழைத்து அமர்ந்தார்.

நான் எழுந்தேன். சம்பிரதாயப்படி, காரியதரிசியிடமிருந்து கோப்புக்களைப் பெற்று தலைமை அதிகாரியிடம் சமர்ப்பித்தேன். கை தட்டினார்கள்.கூட்டம் கைதட்டி அடங்கியதும் பேச ஆரம்பித்தேன்.

‘அனைவருக்கும் வணக்கம்.’

‘ஏன் நாம் சந்தோசமாக இருக்கிறோமா? கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன்.

‘இல்லை’ என்றது கூட்டம்.

‘என்ன காரணம்? – நாம் வாழும் முறைதான் அதற்குக் காரணம்.’ என்றேன்.

‘ஆமாம்’, ‘எஸ்’, ‘யூஆர் ரைட்’ – என்ற பதில்கள் கூட்டத்திலிருந்து வந்தன. கூட்டத்தின் ரெஸ்பான்ஸ் எனக்கு நம்பிக்கை ஊட்டியது.

மனிதகுலம் மாறிப்போனதை, உலகம் சுருங்கிப் போனாலும் மனிதர்களுக்குள் இடைவெளி அதிகமாகிப்போனதை உதாரணங்களோடு எடுத்துச் சொன்னேன்.

‘ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் எதற்கு? சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும்தான். ஆனால் அந்தப் பகிர்தல் இப்போது இல்லாமல் போய்விட்டது. கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் இவர்களுக்கிடையேயான உறவு என்பது பிறந்த நாளில், திருமணநாளில், ஒரு மணி நேரச்சந்திப்பாகவோ, ஒரு நாள் சந்திப்பாகவோ மாறிப்போனது இப்போது. நான் என் மனைவியை கடந்த ஒரு வருடத்தில் இரண்டு முறைகளும், பிள்ளைகளை 4 முறைகளும்தான் நேரில் சந்தித்திருக்கிறேன். நீங்கள் ?’ கூட்டத்தில் ஒருவரைக் கை காட்டினேன்.

‘மனைவியை – ஒரு முறையும், பிள்ளைகளை இரண்டு முறையும்..’ என்ற பதில் வந்தது.

‘காரணம் – நம் ஒவ்வொருவரையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள ப்ரொபெசனல் நிலையங்கள் இருக்கின்றன. உடல் சுகம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சுதந்திரம் அளித்தது. அதுவும் ஒரு கோப்பி, டீ சாப்பிடுவது போல சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. திருமணம் என்ற ஒன்று அதனைக் கட்டுப்படுத்தவில்லை. ஒரு நாளின் 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியையும் எப்படிப் பணமாக்கலாம் என்பதில் மனிதர்கள் முனைப்புக் காட்டியதும் ஒரு காரணம். அவர்கள் அதற்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராய் இருந்தார்கள்.’ நான் பேசப் பேச கூட்டம் சீரியசாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

தேவையான இடங்களில் ஆதாரங்களாக பல திரைக்காட்சிகளை, முதியவர்களிடம் நடத்திய உரையாடல்களை போட்டுக்காட்டினேன்.

‘ஆக நான் முக்கியமாகக் கேட்டுக் கொள்வது இதுதான்..’ என்று கூறி சற்று இடைவெளி விட்டேன். கூட்டம் உன்னித்துக் கேட்டுக் கொண்டிருந்தது. எனது முத்தாய்ப்புச் செய்தியினை உணர்வுபூர்வமாக முன்வைத்தேன்.

‘மனிதன் இயந்திரம் சார்ந்து வாழ்தல் படிப்படியாய்க் குறைந்து மனிதன் சார்ந்து வாழ்தல் வேண்டும். அதற்கு நம் மூதாதையர் காலத்தில் இருந்து பின் அழிந்து போன ‘குடும்பம்’ என்கிற அடிப்படை அமைப்பு உயிர் பெற வேண்டும். அப்பா, அம்மா மனைவி, குழந்தைகள் என ஒரே குடும்பமாய் வாழும் போது பகிர்தல் சாத்தியமாகும். அது நம் கவலைகளுக்கெல்லாம் வடிகாலாய் அமையும். மன உளைச்சல் குறையும்.’

என் பேச்சின் ஊடே சில ரோபோக்களின் தலைகள் ஆடியதைக் கவனித்தேன். அவற்றின் எல்யீடி கண்கள் குரூரம் காட்டியதைக் குறித்துக் கொண்டேன். பின்னர் ஆபத்து ஏதும் இருக்கிறதா என அறிய வேண்டும்.

‘மனிதர்களே காதல் செய்யுங்கள். சக மனிதர்களிடம் பேசுங்கள். சிரியுங்கள்.’ என்ற லேசர் வாசகங்கள் ஆடிட்டோரியத்துக்குள் அங்கங்கே தோன்றி ஓடின ஸ்பெசல் எபெக்ட்டாக.

‘நன்றி’ – என் உரையினை முடித்துக் கொண்டேன். கைதட்டுக்கள். கூட்டத்தினரின் அங்கீகரிப்புக்கள்தான் கைதட்டுக்களாக மாறியிருப்பதாகத் தோன்றியது. சந்தோசமாக இருந்தது. அரசாங்க அதிகாரி கைகுலுக்கிப் பாராட்டினார். நன்றி சொன்னேன்.

அன்று மாலை அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்புக்கள் வெளியானது. பெண்கள் ஊதியத்தோடு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு ‘குடும்பத்தை’ நிர்மாணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனினும் இந்த முடிவு எடுக்கும் சுதந்திரம் அவர்களிடமே விடப்படுகிறது. படிப்படியாக முதியோர் இல்லங்களும், குழந்தைக்காப்பகங்களும் மூடப்படும். இவற்றோடு ரோபோ ஆராய்ச்சி பற்றிய முக்கிய அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிட்டது. அது விஞ்ஞானிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும். ரோபோ பயிற்சிக்கும், ரோபோக்களுக்கு உணர்வுகளை உள்வைக்க முனைகிற ஆராய்ச்சிக்கும் உடனடித் தடையும் அறிவிக்கப் பட்டது. வீட்டுப்பணிகளுக்கான ரோபோக்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும். ரோபோக்கள் வருங்காலத்தில் விபத்து, மற்றும் நெருக்கடி காலங்களிலும், முக்கியமான அலுவலகப் பணிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும்.

அறிவிப்புக்கள் எனக்கு திருப்தியளித்தன. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற செய்தி இனிமேல்தான் தெரிய வரும். அதற்குமுன் என் மனைவி என்ன முடிவெடுத்திருப்பாள் என அறிய ஆவலோடு வீடு புகுந்தேன். என் பெற்றோர், தாத்தா, பிள்ளைகள் என எல்லோரும் என்னை வரவேற்று என்னைத் திக்குமுக்காடச் செய்தார்கள். ஆனால் அவள் எங்கே? சில நொடிகள் என்னைத் தவிக்கவிட்டு பின் ரகசிய அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

‘அரசாங்க அறிவிப்புக்கள் நல்ல முடிவுகள். உங்கள் வெற்றிக்கு என் பாராட்டுக்கள். உங்களுடன், பிள்ளைகளுடன் சேர வந்துவிட்டேன்’ எனக் கூறி என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். எனக்குச் சந்தோசமாக இருந்தது.

ராபர்ட் இயந்திரத் தப்படிகள் வைத்து முன்னே வந்து நின்றது. என்ன சொல்லப் போகிறது என நினைத்தேன். தலையை ஆட்டி அதன் கேமராக் கண்களால் என் முகத்தை வருடிப் படித்தது. ‘நீங்கள் இப்போது மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். எனக்கு விடை கொடுங்கள் பாஸ்’ என்று புன்னகையோடு சொல்லிவிட்டுக் கடந்து போனது.

***

Series Navigation