உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)

This entry is part of 44 in the series 20080410_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


. . . . ஞானி தேவைக்கு மேல் மிகையாக வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டான்.

. . . . நானொரு வயோதிகன் அல்லன். நான் வயதானவன் என்பது இப்போது நானிருப்பதற்கு 15 ஆண்டுகள் மேலாக இருப்பது !

. . . . மனிதன் ஒருவன் அன்னியனுடன் மதிப்புடன் நாகரீகமாகப் பழகுவது அவனை உலகக் குடிமகனாக் காட்டுகிறது.

. . . . ஆராய்ச்சி செய்பவன் உறுதிப்பாடுடன் தொடங்கினால், ஐயப்பாட்டில் முடிப்பான் ! ஐயப்பாடுடன் ஆரம்பிப்பவன் உறுதிப்பாடுடன் முடிப்பான் !

. . . . விளக்கு ஒளிவீச வேண்டுமானால் அங்கு இருள் பரவி இருக்க வேண்டும் !

. . . . பழிக்குப்பழி வாங்குபவன் பகைவனுக்குச் சமமாகிறான். அவ்விதம் பழி வாங்காதவன் உயர் மனிதன் ஆகிறான் !

. . . . இருவர் காதலிக்கும் போது புத்தி கூர்மையில் இருக்க இயலாது !

பிரான்சிஸ் பேகன் ஆங்கில மேதை (1561-1626)
. . . . மிதப்போக்கு (Moderation) : மிதப்போக்குப் பண்பாடு அதன் சார்பில் கருதப்பட்டு ஒருபோதும் போற்றப் படுவதில்லை ! மிதப்போக்கு நேர்மை மனிதன் ! அவனது மிதப்போக்கு உத்தம மனைவி ! மதுபானம் மிதக் குடிப்போர் இருவரும் ! வசிப்பது மிதத்தன்மை உடல்நல இல்லம் ! அதுதான் நடுத்தர வகுப்புக் குடும்பம் !

. . . . உணரப்படாத சுயத்துவம் (The Unconscious Self) : உணரப்படாத சுயத்துவம் மெய்யான ஓர் உன்னத மேம்பாடு ! மூச்சுத் திணறும் போது உணரும் உன் சுயப்பாடு அதற்கு இடையூறு விளைவிக்கிறது !

. . . . நியாயவாதி (The Reasonable Man) : நியாயத்துக்குக் கட்டுப்படும் மனிதன் உலகத்துடன் ஒத்துப்போகத் தன்னை மாற்றிக் கொள்கிறான். நியாயத்துக்குக் கட்டுப்படாதவன் உலகத்தைத் தன்னிச்சைக்கு வளைக்க அழுத்தமாய் முற்படுகிறான் ! ஆதலால் அனைத்துலக முன்னேற்றங்களும் அநியாயவாதிகளைச் சார்ந்தே உள்ளன !

நியாயத்துக்குப் பணிபவன் கண்ணுக்குத் தெரிவதில்லை ! நியாயத்தனம் அதை கைப்பற்ற வலுவில்லாத உள்ளத்தை எல்லாம் அடிமைப்படுத்துகிறது !

. . . . பழக்க ஒழுக்கம் (Decency) : பழக்க ஒழுக்கம் நடைமுறை அநாகரீகத்தின் மௌனச் சதி ! (Decency is Indecency’s Conspiracy of Silence).

. . . . அனுபவம் (Experience) : மனிதரின் ஞானம் அனுபவத்தின் விளைவுகளல்ல; அது ஒப்புமைச் சார்புள்ளது (Relative in Proportion) ! வெறும் அனுபவத்தால் மட்டும் மனிதன் கற்றுக் கொள்ள முடியு மென்றால், லண்டனின் கற்கள் உயர்ந்த ஞானிகளை விட உன்னத அறிவு கொண்டவையாக இருக்கும் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 2
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 2)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு முதிய மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனை உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான்.

தாஞ் சுவான் : வா வாலிப அழகியே வா ! உன்னைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். வயதான ஓர் மூதாட்டி இங்கு சில மணிநேரம் என்னுடன் வாதாடிக் கொண்டிருந்தாள் ! நரகத்தில்தான் கிளியோபாத்ரா போன்ற பேரழகிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் ! அது இப்போது மெய்யாகி விட்டது ! நீ யார் ? எதற்காக நரகத்துக்கு வந்தாய் என்று தெரியுமா ?

வாலிப மங்கை: நான் ஒருகாலத்தில் பூமியில் ஆன்னி வொயிட்·பீல்டாகப் பிறந்தவள் ! கிளியோபாத்ரா என்னை விட அழகியா ? அவளுக்குக் கோண மூக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ! பூலோகத்தில் எத்தனையோ ஆடவர் இதயத்தைப் பிளந்திருக்கிறேன் ! ஆசை காட்டி மோசம் செய்தவள் நான் ! பூலோகமே பெண்ணுக்கு நரகம்தான் ! பெண்ணுக்கு இறைவன் நரகம் அளிக்காமல் என்ன தருவான் என்று நினைத்தீர் ? கடவுள் ஆணாக இருந்தால் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதிதான் வழங்கும் !

தாஞ் சுவான் : அப்படி நியாயப்படுத்துவது சரியில்லை ! நீ ஒரு வாலிப மங்கை ! எங்கெல்லாம் பெண்டிர் இருக்கிறாரோ அங்கெல்லாம் நரகம்தான் ! இப்படி நான் முத்திரை இடுவதற்கு ஆத்திரப் படாதே ! அஞ்சாதே ! ஆச்சரியப் படாதே ! நீ விரும்பியவை எல்லாம் இங்கே உனக்குக் கிடைக்கும் ! சொர்க்கத்தில் அப்படியல்ல ! நீ ஆசைப்படுபவை அங்கு அகப்படாது ! உனக்குத் தேவையான சாத்தான் உதவி நரகத்தில் உள்ளது ! அவனை நீ வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் ! கூலி தர வேண்டியதில்லை !

வாலிப மங்கை : என்ன சாத்தான் உதவியா ? சாத்தானை நான் ஏன் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் ? அதுவும் இலவசமாக ? கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரிந்து கொள்வதா ?

தாஞ் சுவான் : எந்த வேலைக்காரன்தான் சாத்தானாக இல்லை ?

வாலிப மங்கை : தேவதைகள் ஏன் வேலைக்கு வருவார் ? சாத்தான்கள்தான் வேலைக்கு வருவார் ! சண்டை போட்டு உயிரை வாங்குவார் ! வேலையை விட்டு நீக்கினால், யூனியன் கொடியைத் தூக்கிக் கொண்டு அவரது தலைவன் வந்து விடுவான் !

தாஞ் சுவான் : நீ வயதில் இளையவள் ஆனாலும் அறிவில் மேதையாய் இருக்கிறாய் ! உனக்கு என்ன வயது இப்போது ?

வாலிப மங்கை : அநாகரீகக் கேள்வி இது ? நீவீர் எந்த பள்ளிக்கூடத்தில் படித்தீர் ? ஒரு பெண்ணைப் பார்த்து உன் வயதென்ன என்று கேட்கலாமா ?

தாஞ் சுவான் : நீ அழகாய் இருக்கிறாய் ! நீ அறிவாய்ப் பேசுகிறாய் ! நீ அன்பாய் உரையாடுகிறாய் ! உன்மேல் எனக்கு . . . . . ! வயதைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு வனிதை மேல் வாஞ்சை கொள்ளலாமா ? பார் இது நரகம் ! இது காதல் புரி ! இங்கு நாங்கள் அழகை வழிபடுவோம் ! காதலுக்கு அடிபணிவோம் ! வயதைக் கேட்டால் தவறென்று யாரும் கருத மாட்டார் !

வாலிப மங்கை : அப்படியா ! சொல்கிறேன் என் வயது 30 !

தாஞ் சுவான் : துணிந்து பொய் சொல்கிறாய் பெண்ணே ! ஆனால் நரகத்தில் பொய் சொல்லலாம் என்றொர் உண்மையைச் சொல்கிறேன் ! உனக்கு வயது 30 ஆக இருக்க முடியாது ! உண்மை சொல்பவர் இருப்பது சொர்க்கத்தில் ! பொய் சொல்பவர் இருப்பது நரகத்தில் ! உனது உண்மையான வயதை அறிய முடியாது இங்கே !

வாலிப மங்கை : எனக்குப் பிடித்த வயதைத்தான் நான் யார் கேட்டாலும் சொல்வேன் ! உண்மை வயதைச் சொன்னால் வாலிபர் என்னை விட்டு ஓடி விடுகிறார் !

தாஞ் சுவான் : உண்மைதான் ! ஓர் அழகிய பெண் எப்போதும் உண்மை பேசமாட்டாள் ! நீ சொல்வதில் பாதிப் பொய் உள்ளது !

வாலிப மங்கை : இல்லை ! நான் சொன்னது பாதி உண்மை ! முழுப் பொய்யை நான் சொல்வ தில்லை !

தாஞ் சுவான் : பாதிப் பொய்யும் பாதி உண்மையும் வேறல்ல ! பாதி உண்மை யென்றால் உன் வயது முப்பதில் பாதி பதினைந்தா ?

வாலிப மங்கை : எப்போது நான் பிறந்தேன் என்பது எனக்கு எப்படித் தெரியும் ? எனக்கு ஞாப மறதி அதிகம் ! என் வயதை ஒரு கிழவர் கேட்டால் முப்பது என்று சொல்வேன் ! வாலிபர் ஒருவர் கேட்டால் இருபது என்பேன் ! போன வருடம் என் வயதைப் பதினெட்டு என்று ஒரு ரோமியோக்குச் சொன்னேன் ! உனக்கு நான் சொல்லும் வயது பதினாறு !

தாஞ் சுவான் : (ஆச்சரியமுடன்) அதென்ன ஒவ்வோர் ஆண்டும் ஆணுக்கு வயது ஏறும் போது, பெண்ணுக்கு வயது இறங்கிக் கொண்டு போகிறது ? பதினெட்டுக்குப் பிறகு பத்தொன்பது அல்லவா ? நீ பதினாறு என்று குறைத்துச் சொல்கிறாயே ?

வாலிப மங்கை: ஆணை விடப் பெண்ணுக்கு ஆயுள் நீளமென்று தெரியாதா ? உமது வயது ஏறும் ! எமது வயது இறங்கும் ! ஆணுக்குப் பெண் எதிராகப் படைக்கப் பட்டவள் என்று உமக்குத் தெரியாதா ?

தாஞ் சுவான் : நீ இந்த வயதில் அறிவுக் களஞ்சியமாக எப்படி வளர்ந்தாய் ? நீ சொர்க்கத்தில் வாழ வேண்டியவள் ! தவறிப் போய் நரகத்தில் தள்ளப் பட்டிருக்கிறாய் ! பெண்ணே ! நீ யாரென்று இப்போது எனக்குத் தெரிகிறது !

வாலிப மங்கை : ஆகா ! என்னை உனக்குத் தெரியுமா ? இப்போது ஓர் உண்மையை நான் சொல்கிறேன் ! நீவீர் யாரென்று எனக்குத் தெரியும் ! என்னைக் காதலிப்பதாய்க் கூறி என்னைப் பின்னால் விரட்டி வந்தவன் நீ ! தந்தைக்கு அது தெரிந்து விட்டது ! அவர் உன்னை விரட்டச் சண்டை யிட்டார் ! வாட்போரில் என்னருமைத் தந்தையைக் கொன்ற கொலைகாரன் நீ !

தாஞ் சுவான் : நீ உன் தந்தையைத் தேடி இங்கு வந்திருக்கிறாய் ! இல்லையா ? அவர் எங்கு இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும் !

வாலிப மங்கை : (ஆர்வமுடன்) அவர் இங்கே எந்தப் பகுதியில் இருக்கிறார் ?

தாஞ் சுவான் : இல்லை ! அவர் இங்கில்லை ! சொர்க்கத்தில் இருக்கிறார் !

வாலிப மங்கை : என் தந்தை ஓர் உத்தமர் ! நான் காணாமல் தவிக்கிறேன் ! மேலிருந்து அவர் நம்மை நோக்குகிறார் ! அவரைக் கொன்ற ஒரு கொலையாளியுடன் அவரது புதல்வி உரையாடிக் கொண்டிருக்கிறாள் என்றால் அவர் என்ன நினைப்பார் ?

தாஞ் சுவான் : நாமவரைச் சந்திக்க முடிந்தால் !

வாலிப மங்கை : நாம் எப்படி அவரைச் சந்திக்க முடியும் ? அவர் சொர்க்கத்தில் அல்லவா இருக்கிறார் ! அவரை நீ ஏன் பார்க்க வேண்டும் ? உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றத் தன்னுயிரை இழந்தவர் ! நீ ஒரு கொலையாளி ! அவரது நெடுங்காலப் பகைவன் ! அவர் அருகில் நிற்கக் கூடத் தகுதியற்றவன் !

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 9, 2008)]

Series Navigation