உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 9

This entry is part of 35 in the series 20080227_Issue

மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


மனித இனத்தின் மீது விரிந்த மனப்பான்மையில் நமக்கு கடமை இருக்க வேண்டும் என்னும் உள்ளுணர்வு பெற வேண்டிய பெருமையை வரலாறு இன்னும் முழுமையாக அடையவில்லை ! அந்த உணர்ச்சி தற்காலம் வரை மத, இனத் தேச வேறுபாடுகளால் தரங்குன்றிப் போயுள்ளது ! உலக மாந்தருக்குள் ஏற்படுத்தப் பட்டுள்ள அந்நியத் தடுப்பரண்களை நாமின்னும் தாண்டிச் செல்லவில்லை !

ஆல்பெர்ட் சுவைஸர், மருத்துவ மேதை [Albert Schweitzer in Reverence for Life (1875-1965)]

—- திருமண வாழ்க்கை பொதுவாகப் பெரிதும் விரும்பப் படுகிறது. காரணம் அது உன்னதக் கவர்ச்சிக்கு நிரம்ப வாய்ப்பளிக்கிறது !

—- திருமணம் மட்டும்தான் தாம்பத்திய சொந்தக்காரருக்குச் சட்ட பூர்வமான ஓர் ஒப்பந்தமாக உள்ளது ! அந்த ஒப்பந்தம் முக்கியமாகக் குறிப்பிடப்படும் (ஆண்-பெண்) உறவைப் பாதுகாக்கும் எல்லா விதிகளையும் நீக்குகிறது !

—- இனவிருத்தியைத் தொடர்வதே திருமண வாழ்வின் முக்கிய வினை என்று சொல்கிறது பொது வழிபாட்டு நூல் !

—- மனித இனத்தின் நெறியற்ற உணர்ச்சியே திருமண வாழ்வில் கிடைக்கும் எதிர்பாராத திருப்தி

—- திருமண வாழ்வினைச் செயற்கை மலட்டுத்தனம் செய்யும் போது அதன் எதிர்பாராத விளைவு நிறைவேறுவதுடன் முக்கிய விளைவை விலக்கவும் முடிகிறது.

—- திருமண வாழ்வைச் செயற்கை முறையில் மலட்டுத்தனமானதே 19 ஆம் நூற்றாண்டின் மிக்க புரட்சிகரமான கண்டுபிடிப்பு !

—- பெரும்பான்மை மாந்தரின் பிரமச்சரிய முறையைக் கண்டிக்கும் எந்தத் திருமண ஏற்பாட்டு விதியும் மனித நெறித்துவத்தை முறிப்பதாகக் கருதித் தீவிரமாக விலக்கப்படும் !

—- நவீனக் குடியரசு யுகத்தில் மொர்மன்களைப் போல் (Mormons) பலதார மணவாழ்க்கையை (Polygamy) முயன்றால் ஒருதார நிலைக்குத் தள்ளப்பட்ட கீழ்மக்கள் அதை எதிர்த்து விலக்குவார் !

—- திருமணம் அல்லது நெறியற்ற வேறெந்த ஒருதார ஒப்பு முறையும் (Monogamy) நாட்டு மனிதருக்குக் பெருங்கேடு விளைவிப்பதாகும். காரணம் அரசியல் விலங்கினமாவதை எதிர்த்து மனிதன் இனப் பெருக்கடைவதற்கு அது தடை விதிக்கிறது !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்: “திருமண வாழ்க்கை”)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 1 பாகம் : 9

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)

6. ஹெக்டர் மலோன் (Hector Malone)

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 1 பாகம் : 9)

கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.

(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. நூலகத்தில் ராம்ஸ்டனும், அக்டேவியசும் உரையாடி வரும்போது, வேலைக்காரி மேரி ஜான் டான்னர், ஆன்னி வொயிட்·பீல்டு ஆகியோர் வந்திருப்பதை அறிவிக்கும் போது ராம்ஸ்டன் கோபப்பட்டு வரவேற்க மறுக்கிறார். இறுதில் ராம்ஸ்டன் டான்னருடன் வேண்டா விருப்புடன் உரையாடுகிறார். உரையாடலில் ஆன்னியும் அவளது அன்னையும் கலந்து கொள்கிறார்கள். ஆன்னியின் திருமணப் பேச்சில் அனைவரும் ஈடுபடுகிறார். அப்போது ராம்ஸ்டன் அக்டேவியஸ் தங்கை வயலட்டைப் பற்றி ஓர் அந்தரங்கச் செய்தியை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி தருகிறார். வயலட் ஒருவனுடன் தொடர்பு கொண்டு கர்ப்பவதியானது தெரிந்து போய் அவளை எப்படி ஒளித்து வைப்பது என்பது பிரச்சனையாகி விட்டது. அதற்கொரு முடிவு காண சூசன் ராம்ஸ்டனும் அக்டேவியசும் வயலட்டை அழைத்து வருகிறார்.

[மிஸ் சூசன் ராம்ஸ்டன் வயதானள். சற்று கர்வக்காரி. சாதாரண உடை அணிந்துள்ளாள். நிமிர்ந்த பார்வையுடன் நடந்து நாற்காலியில் அமர்கிறாள்.]

மிஸ் சூசன் ராம்ஸ்டன்: இந்த அந்தரங்க விவகாரத்தை ஒரே அடியாகக் கை கழுவி விட்டேன் ! எனக்குத் தலைவலி வந்து விட்டது. வயலட் லண்டனுக்குப் போக மாட்டாளாம் ! நான் பேசிக் களைத்து விட்டேன். கள்ளக் காதலன் பெயரைச் சொல்ல மாட்டாளாம் ! வயலட் வாயிக்குப் பூட்டுப் போட்டு சாவியை எறிந்து விட்டாள் !

ஜான் டான்னர்: [பரிவுடன்] அவளுடைய நல்ல சேதியை நம்மிடம் பகிர்ந்து கொள்ள விருப்ப மில்லா விட்டால் நாம் என்ன செய்ய முடியும் ?

மிஸ். சூசன் ராம்ஸ்டன்: தானாக விழாத பழத்தைத் தடியால் அடித்தால் விழும் ! யாரிடமாவது தடி உள்ளதா ? தடி இருந்தாலும் யார் அடி கொடுப்பது ?

அக்டேவியஸ்: தடி இருந்தாலும் அடி கொடுக்க முடியா தென்னால் ! வயது வந்த குமரிப் பெண் மீது யார் கைவைப்பார் ? வயலட் பள்ளிச் சிறுமி யில்லை ! வாலிபக் குமரி அவள் !

மிஸ். சூசன் ரம்ஸ்டன்: ஓருத்தன் கைப்பட்டு விட்டாளே வயலட் ! துணிச்சல் அவனுக்கா ? அல்லது அனுமதித்த இவளுக்கா ?

ஜான் டான்னர்: யாரும் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை ! ஆசீர்வதிக்காத நாம்தான் தவறு செய்கிறோம். வயலட்டின் காதலனை வரவேற்போம் ! வயிற்றில் பிள்ளை வளர்க்கும் வயலட்டுக்கு ஆவன செய்வோம் ! அதுதான் குமரித் தாயிக்கும், வளரும் குழந்தைக்கும் நல்லது ! அவள் ஒளிந்து கொண்டு ஏன் டாக்டரை பார்க்க வேண்டும் ? நாமே அழைத்துச் செல்வோம் ! தள்ளி வைத்துத் தண்டனை கொடுக்க வேண்டாம் ! பிள்ளைக்காரி ! பேதலித்திருக்கிறாள் !

மிஸ் சூசன் ராம்ஸ்டன்: லண்டனுக்குப் போக மாட்டேன் என்று ஏன் சொல்லுகிறாள் தெரியுமா ? காதலனைப் பிரிய மனமில்லையாம் !

ஆன்னி வொயிட்·பீல்டு: அக்டேவியஸ் ! நீ பேசிப் பார்த்தாயா ?

அக்டேவியஸ்: மிஸ் ராம்ஸ்டனிடம் கொஞ்சமாது சொல்லி யிருக்கிறாள் ! என்னை நேராகப் பார்த்துப் பேச அவள் வெட்கப்படுகிறாள் ! அது மட்டுமல்ல. என்னோடு அவளினித் தங்க மாட்டாளாம். அவனோடுதான் வசிப்பாளாம் ! அவனோடுதான் வாழ்வாளாம் !

ஆன்னி: [இடைமறித்து] அதோ வயலட் படியிறங்கி வருகிறாள் ! நாமெல்லாம் கனிவோடு கேட்டால் சொல்வாள் ! அவளைப் பரிவோடு நடத்துங்கள்.

[வயலட் மெதுவாக வந்து நிற்கிறாள். ரோபக் ராம்ஸ்டன் எழுந்து சென்று வரவேற்று ஒரு நாற்காலியில் உட்கார வைக்கிறார். மிக்க இளமையுடன் எழிலுடன் காணப் படுகிறாள். அவளது கண்கள் யாரையும் கூர்ந்து நோக்காமல் மேலே பார்க்கின்றன]

ஜான் டான்னர்: வா வயலட் ! வந்து ஓய்வெடுத்துக்கொள் ! உடல் நலமா ? மருத்துவ மனைக்குப் போக வேண்டுமா ? நான் உடன் வருகிறேன். என் காரில் அழைத்துச் செல்கிறேன்.

வயலட்: [பரிவுடன் டான்னரைப் பார்த்த்] நன்றி ஜான் ! கனிவான ஒரு மனித ஆத்மாவுடன் பேசுவதில் களிப்பு உண்டாகுது எனக்கு ! சகோதரனுக்கு நண்பன் ! எனக்கும் நண்பன் இப்போது.

ஜான் டான்னர்: எப்போதும் நான் அருகில் இருக்கிறேன் உனக்கு ! நான் உன் பக்கம் வயலட் ! நீ செய்தவற்றை நான் குறை கூறமாட்டேன். அதற்குப் பதிலாக உன்னைப் பாராட்டுகிறேன். உனக்கு வாழ்த்து. உன் சிசுவுக்கு வாழ்த்து ! உன்னை யார் கண்டித்துப் பேசினாலும் எனக்கு வருத்தம் தருகிறது !

வயலட்: நிரம்ப நன்றி ஜான் ! நீதான் முதன்முதலில் என்னை வாழ்த்தியவன் ! நீதான் முதன்முதலில் என் சிசுவை வாழ்த்தியவன் ! நீதான் முதன்முதலில் என்னை ஒரு மனிதப் பிறவியாக எண்ணியவன் ! என்னை வரவேற்றவன் ! பரிவுள்ள மனிதர் சிலர் இன்னும் வாழ்கிறார் என்று என் முன்வந்து காட்டிக் கொண்டவன் ! நான் செய்தது தவறில்லை என்று துணிச்சலாய்க் கூறியவன் !

ஜான் டான்னர்: நீ செய்தது முற்றிலும் நியாயமானது. அதில் எனக்குச் சந்தேகமில்லை !

வயலட்: நான் செய்ததில் எந்தத் தவறுமில்லை என்று கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஆனால் தவறி விட்டேன் என்றென்னைக் கடிபவர் எண்ணிக்கையே அதிகம் ! நான் செய்தது தவறென்று எனக்குத் தெரியவில்லை ! மற்றவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பது மன வேதனை தருகிறது எனக்கு !

ஜான் டான்னர்: மற்றவர் மனதில் அப்படித் தோன்றலாம். அதற்கு நீ ஏன் வேதனைப் பட வேண்டும் ? உன் உள்ளம் வழிகாட்டும் பாதையில் போனது சரியே ! மனிதர் விதி வேறு ! உடலின் விதி வேறு ! உடலின் விதியைப் பின்பற்றினாய் நீ ! பெண் தாயாவதைத் தடுப்பவர் மனிதரா ? உனது துணிச்சலைப் பாராட்டுகிறேன் ! உனது உறுதியான முற்போக்கை மெச்சுகிறேன் ! நீ திருமணம் ஆகாது மகப்பேறை வைத்தது தவறாகத் தெரிய வில்லை எனக்கு !

வயலட்: [கோபத்துடன்] ஜான் ! நீ என்னைக் கெட்ட நடத்தை உடையவள் என்று மறைமுகமாகச் சொல்கிறாயா ? சூசன் ராம்ஸ்டனும் அப்படித்தான் என்னைத் திட்டினாள் ! நான் எல்லா திட்டுகளையும் பொறுத்துக் கொண்டேன் ! உண்மையைத் தெரிந்தால் நீங்கள் யாரும் இப்படி என்னை எடைபோட மாட்டீர் ! இப்போது சொல்கிறேன் ! எல்லாரும் கேட்டுக் கொள்வீர் ! எனது திருமணம் ரகசியமாக நடந்தது ! என் கணவருக்காக அதை நான் மறைக்க வேண்டி வந்தது ! நான் திருமணம் ஆனவள் ! அக்டேவியஸ் கேள் ! நான் திருமணம் ஆனவள் ! என் வயிற்றில் வளரும் சிசு சட்ட பூர்வமான தம்பதிகளின் குழந்தை ! என் கணவன் கள்ளக் காதலன் இல்லை !

அக்டேவியஸ்: [கவனமுடன்] என்ன ? உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா ?

வயலட்: ஆமாம் சகோதரா ! நான் திருமணம் ஆனவள் ! எனக்குத் திருமணம் ஆகும் என்று
நீங்கள் யாரும் நம்பவில்லை ! என் மோதிரம் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியாக உள்ளது. திருமணம் ஆனதை ஒருவர் கூட கேட்கவில்லை !

ஜான் டான்னர்: என்னை மன்னித்து விடுவாயா வயலட் ? நானும் உண்மை தெரியாமல் உளறி விட்டேன் ! உனக்குத் திருமணம் ஆனது யாருக்கும் தெரியாமல் போய் விட்டதே ! நீ யாரிடமும் சொல்லவில்லை !

வயலட்: இல்லை ஆன்னிக்கு எல்லாம் தெரியுமே ! என் திருமணத்தைப் பற்றி ஆன்னிடம் நான் சொல்லியிருக்கிறேன்.

ஜான் டான்னர்: ஆன்னி ! நீ ஊமைக் கிழத்தி ! எப்படி ஒன்றும் தெரியாதவள் போல் நடித்தாய் ? என்னிடம் முதலில் சொல்லி இருந்தால் இப்படி இக்கட்டான நிலையெனக்கு ஏற்பட்டிருக்காது !

ஆன்னி: வயலட் எனக்குச் சொன்னாலும் செய்தியை ரகசியமாக வைக்கச் சொன்னாள். தான்தான் மற்றவருக்கு முதலாகத் தக்க தருணத்தில் சொல்ல வேண்டும் என்று என்னைத் தடுத்தவள்.

ரோபக் ராம்ஸ்டன்: வயலட் ! என்னை மன்னிக்க வேண்டும் நீ ! உன்னை மிகவும் கீழாக மதித்தவன் நான் ! திருமணம் உனக்கு நடந்துவிட்டது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே !

அக்டேவியஸ்: சகோதரி ! உன்னை வாழ்த்த வேண்டியன் நான் ! என்ன சொல்வ தென்று எனக்குத் தெரியவில்லை ! உன் மருத்துவச் செலவுகளை நான் கவனித்துக் கொள்கிறேன். உன் வயிற்றுப் பிள்ளைக்கு என்னைத்தான் ஞானப் பிதாவாக (Godfather) ஏற்றுக் கொள்ள வேண்டும். ஞானப் பிதாவாக ஏற்றுக் கொள்வாயா வயலட் ?

சூசன் ராம்ஸ்டன்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] ஆயினும் நீ உன் சகோதரனுக்குச் சொல்லாமல் ஏன் ரகசியமாக வைத்தாய் ? உன் உடன் பிறந்த சகோதரன் ! அவருக்கு மறைத்து ஏன் திருமணம் செய்து கொண்டாய் ? ஏன் உங்கள் உறவு அற்றுப் போனது ? நீ ஒரு சுயநலக்காரி ! உற்றார், உறவினர், சுற்றம் வேண்டாம் என்பவள் எங்கள் முன்பு ஏன் வர வேண்டும் ?

வயலட்: நான் சுயநலக்காரிதான் ! நான் என் நலனைத் தேடிக் கொண்டால் அது தவறா ? சூசன் நீ ஒரு வேசக்காரி ! முன்னால் பரிவோடு பேசிக்கொண்டு, பின்னால் தடியால் அடிக்கிறாய் ! நீ என் சிநேகியா அல்லது பகையாளியா என்பது தெளிவாய்த் தெரிய வில்லை ! திருமணம் செய்து கொண்ட வாலிபப் பெண்ணைச் சிறுமி போல் நடத்தும் நீதான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் !

ஜான் டான்னர்: கோபப்படாதே வயலட் ! நாங்கள் உனது நண்பர்கள்தான் ! அறிவில்லாமல் உன்னைப் பற்றி அவதூறு பேசினோம் ! மன்னித்து விடு எம்மை !

வயலட்: என்னைப் பற்றிப் பேசிய உங்கள் அவதூறுகளைக் கேட்டால் என் கணவருக்கு அதிர்ச்சி உண்டாகும் ! உங்களுடன் உறவாடுவதை நிறுத்தச் சொல்வார் !

ரோபக் ராம்ஸ்டன்: நானும் மன்னிப்புக் கேட்கிறேன் வயலட் ! உன்னை மிகவும் கீழாகப் பேசியவன் முதலில் நான்தான் !

சூசன் ராம்ஸ்டன்: யார் யாரிடம் மன்னிப்புக் கேட்பது ? ரோபக் ! நீ வயதில் முதியவன். மன்னிப்புக் கேட்க வேண்டியவள் குமரி வயலட் ! அவள்தான் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டவள் !

வயலட்: சூசன் ! நீ மிகவும் மோசக்காரி ! நான் ஏன் இப்படிச் செய்தேன் என்பது உன்னால் உணர முடியாது ! நீ பெண்ணாகத் தோன்றினாலும், ஆணாகப் பிறக்க வேண்டியவள் ! என்னிடம் குற்றம் காண்பதில் ஆனந்தம் அடைகிறாய் ! உன் வேடிக்கைப் பேச்சு என் பொறுமையின் எல்லையைத் தாண்டி விட்டது ! இனி நான் உங்கள் முன்னின்று நியாயம் கேட்பது மூடத்தன மானது ! நான் உடனே போகிறேன் ! (வயலட் ஆவேசமாக வெளியேறுகிறாள். அனைவரும் வைத்த கண் வாங்காமல் அவள் போவதைக் கண்டு வருந்துகிறார்)

ஜான் டான்னர்: சூசன் நீதான் அவளை நோக வைத்து விட்டாய் ! நீதான் அவளை வெளியே விரட்டி விட்டவள் ! சிசுவை வயிற்றில் வளர்க்கும் குமரிப்பெண் இப்படி மனம் நொந்து ஓடக் கூடாது ! அவளுக்கும் நலன் தராது ! அந்தச் சிசுவுக்கும் நலன் தராது !

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan February 26, 2008)]

Series Navigation