கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23

This entry is part of 33 in the series 20070913_Issue

வே.சபாநாயகம்


இந்தக் கீழமந்தை சற்று விஸ்தாரமானது. திரௌபதை அம்மன் கோயில் அருகில் உள்ள கீழமந்தை, கரிநாளில் ஊர் இளைஞர்கள் சரணாக் கட்டுவதற்கும் ‘சடுகுடு’ விளையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரௌபதை அம்மன் கோயில் அரவான் களபலி, அக்னி எல்லாம் இந்த மந்தையில் தான் நடக்கும். அவையும் கூட பஞ்சாயத்து ஏற்பட்டு பொதுத் தண்ணீர்த் தொட்டியும், சிறுவர் பூங்காவும் அமைத்தபின் நடத்த இடமின்றி நின்றே போயின. அப்புறம் பூங்காவுக்கு எதிரில் உள்ள சின்னத்
திடலில் மட்டும் தெருக்கூத்தும் நாடகமும் நடைபெற்று வந்தன.

பூங்காவை நெருங்கியதும் அதன் அலங்கோலத்தைப் பார்த்து, “என்னப்பா இப்டி ஆயிட்டுது? சுத்துச் சுவரெல்லாம் இடிஞ்சு கெடக்கு, விளயாட்டுப் பொருள்கள் இருந்த சுவடே தெரியல!” என்றார் சிதம்பரம் மருதுவிடம்.

“இப்ப பஞ்சாயத்துத் தலைவர்னு யார் இருக்காங்க? பஞ்சாயத்து எலக்ஷன் நடந்து பத்து வருஷமாச்சே! நிர்வாக அதிகாரின்னு இருக்காங்க. அவங்க டவுன் லேர்ந்து எப்பவாச்சும் நெனச்சுக்கிட்டா வருவாங்க, வரி வசூல்பண்ண! மத்தபடி ஊர் வளர்ச்சிக்கு அக்கற காட்டுனாத்தானே?” என்றான் மருது.

“இங்க நாடகம் நடக்குமே, அதுவாவது நடக்குதா?”

“நடேச ஆசாரி இருந்த வரிக்கும் அன்னப் படையல ஒட்டி சிறுத்தொண்டர் நாடகம் நடந்துக்கிட்டிருந்துது. அவருக்கப்றம் எடுத்து நடத்த ஆளு இல்லே”

அந்த இடத்தில் முதன் முதல் அவர் பார்த்த தெருக்கூத்து ஞாபகத்துக்கு வந்தது. அப்போது சிதம்பரம் மிகவும் சிறு பிள்ளை. எதிர் வீட்டுத் தொந்தி மாமாதான் அந்த நாடகத்தை பார்க்க அவரைத் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வந்தார். மேடைக்கு எதிரே சாக்குகளும், பாய்களும் விரித்து ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் உட்கார்ந்திருக்க மாமா அவரை மேடைமீதே ஒரு ஒரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். நாடகம் ஆரம்பித்து கொஞ்சம் பார்த்தவர் – நடுநிசியைத் தாண்டிவிட்ட நேரம் – மாமா மடியிலேயே தூங்கி விட்டார்.

திடீலென மேடை அதிர, இடிபோல முழக்கமும் காட்டுக் கத்தலும் கேட்டுப் பதறி எழுந்த போது பார்த்த காட்சி பயத்தை எழுப்ப, ‘வீல்’ என அலறினார்.

மேடையில் ஒரே கூட்டமும் இரைச்சலுமாய் இருந்தது. கூட்டத்திலிருந்த எல்லோரும் கன்னங்கரேலென்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு, அடர்த்தியான மீசையும் கனத்த புருவமும் பெரிய குங்குமப் பொட்டும் கருப்பு உடையும், கையில் உலக்கையுமாய் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் பிரதானமாக, பெரிய கிரீடம் தரித்து கரிய முகத்தில் பெருத்த பயங்கர மீசையும் அடர்ந்த புருவமும் நெற்றியில் விபூதிப் பட்டையும் அதன் நடுவில் பெரிய குங்குமப் பொட்டும், கனத்த சரீரத்தில் கருப்புப் பட்டு உடையும் வலது கையில் பெரிய கதாயுதமும், இடது கையில் மாட்டின் தலைக்கயிறு போல கயிற்றுச் சுருளுமாய், பயங்கரமாய் விழித்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். “எம தருமன் நானே! ஏழேழு லோகத்துக்கும் எம தருமன் நானே!’ என்று உரத்த குரலில் பாடினார். அவரைச் சுற்றி நின்றவர்கள் கைகளில் இருந்த உலக்கைகளை ‘டமால் டமால்’ என மேடைமீது இடித்துப் பயத்தை அதிகரித்தார்கள்.

பயந்து வீரிட்ட சிதம்பரத்தை மாமா அணைத்துப் பிடித்தபடி, “ஒண்ணும் பயப்படாதே! எம தர்பார் நடக்குது. அதோ, அவுருதான் எமன்” என்று மத்தியில் கிரீடத்துடன் நின்றிருந்த கனத்த ஆளைக் காட்டினார். “மத்தவங்க எல்லாம் எமகிங்கரன்க” என்றார்.

மேல மந்தையில் ஒருதடவை மாரியம்மன் கோயில் விழாவுக்காக ஒரு நாடகம் நடந்தது. அது இதுபோல மேடையில் நடக்கவில்லை. அது வடக்கத்தி நாடகமாம். அவர்கள் தரையில் பார்வையாளர்களின் கண்மட்டத்தில்தான் ஆடுவார்களாம். தொந்தி மாமா சொல்லி இருக்கிறார். அதுவானால் இது போல உலக்கைகளை டமால் டமால் என்று பலகையில் இடிக்க முடியாது.

அப்போது பக்கத்துக் கிராமங்களில் அடிக்கடி நாடகமும் தெருக்கூத்தும் நடக்கும். தொந்தி மாமா சிதம்பரத்தை தோளில் தூக்கிக் கொண்டு அங்கெல்லாம் அழைத்துப் போய்க் காட்டி இருக்கிறார். அப்போது பார்த்த நாடகங்களும் கூத்துக்களும், சிதம்பரத்துக்கு சிறுவயதில் படித்த கதைப் புத்தகங்களைப் போலவே இன்னும் ஞாபகத்தில் இதுக்கிறது. அப்போதைய புகழ்பெற்ற ராஜபார்ட் நடிகர் சோழமாதேவி நடேசன் என்பவர் எட்டுக் கட்டைச் சுதியில் உரத்துப் பாடுவது கூப்பிடு தொலைவுவரை கேட்கும். அப்போதெல்லாம் ஒலிபெருக்கி நாடக மேடைக்குப் புழக்கத்துக்கு வரவில்லை. அதே போல பபூன் வேஷத்துக்கு மதனத்தூர் குண்டு என்பவர் பிரபலம். இவர்களை அழைத்து நாடகம் போடுவதும் அதைப் பார்க்க வாய்ப்புக் கிடைப்பதும் அப்போது சாதனைகளாகப் பேசப்பட்டன. தான் சோழமாதேவி நடேசனையும், மதனத்தூர் குண்டுவையும் பார்த்தது பற்றியும் அவர்களது நடிப்பையும், பாட்டையும் சின்ன வயதிலேயே தொந்தி மாமா தயவால் ரசிக்கும் வாய்ப்பு பெற்றது பற்றியும் சிதம்பரம் இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பார்.

பக்கத்து நகர டெண்ட் கொட்டகைகளில் தாம் பார்த்து வந்த சினிமாக்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசிப் பரவசப்படுவது போலவே, இந்த நாடகங்களைப் பார்த்து விட்டு வரும் ஒரு வாலிபக்குழுவினர் வாய் உருக நாள் முழுதும் பேசி மகிழ்வார்கள் அவர்களில் முக்கியமானவர் எதிர்வீட்டு தங்கராசுப் பிள்ளை. அவர் நல்ல ரசிகர். நன்கு பாடவும் கூடியவர். அவருக்குத் திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. அதுவரை வெளி நாடகக் குழுதான் இங்கு வந்து நாடகம் போட்டிருக்கிறது. ஏன் நம்மூர்ப் பையன் களை வைத்து நாடகம் போடக் கூடாது என்று தன் சகாக்களைக் கலந்து ஆலோசித்து அதைச் செயல்படுத்தவும் முனைந்தார். ஆர்வமுள்ள இளைஞர்களும் ஊர்ப்பெரியவர்களில் பலரும் ஆதரவு தரவே நாடக மன்றம் ஒன்று உருவாயிற்று.

தங்கராசுப் பிள்ளைக்குத் தெரிந்த நாடக வாத்தியார் ஒருத்தர் சிதம்பரத்தில் இருந்தார். அவர் நவாப் ராஜமாணிக்கம் போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுவில் இருந்தவர். அவருக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் எல்லா நாடகங்களும் பாடம். சிவாஜி கணேசனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்ததாக அவர் சொல்லிக் கொண்டார்.அவரைப் போய் அழைத்து வந்து நாடகம் சொல்லித்தர ஏற்பாடு செய்யப் பட்டது. அவருக்கு குடி இருக்க ஜாகையும் தினமும் ஒருவர் வீட்டில் சாப்பாடும் ஏற்பாடாயிற்று.

முதல் நாடகம் ‘சம்பூர்ண ராமாயணம்’ என்று முடிவாயிற்று. ஊரிலுள்ள பாடத் தெரிந்த, தெரியாத இளவட்டங்களை எல்லாம் கட்டாயமாக நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். போருக்கு வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும் என்கிற மாதிரி எல்லா வீடுகளிலிருந்தும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டார்கள். நிறையப்பேர் இருந்தால்தானே செலவைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்கும்? சின்னப் பையன்கள் கூட – ஒரு வீட்டுக்கு ஒருவர் என்று தேடும் போது வாலிபர்கள் தேறாவிட்டால் – வற்புறுத்தி சேர்க்கப்பட்டார்கள். எல்லோருக்கும் வேஷம் இருந்தது. மூன்று நாள் நாடக மில்லையா? மூன்று நாட்களுக்கும் மூன்று ராமர், மூன்று சீதை, பால ராம லட்சுமணர்கள், நிறைய வானரங்கள்……என்று எல்லோருக்கும் பங்களிப்பு இருந்தது.

முன்னிரவில் எட்டு மணிக்கு எல்லோரும் நாடகப் பயிற்சிக்கென்று தெரிவு செய்யப்பட்ட ஊர்ப் பொதுச் சாவடியில் கூடிவிட வேண்டும். நள்ளிரவு வரை தினமும் பயிற்சி நடக்கும். பயிற்சியைப் பார்க்க ஒரு கும்பல் தினமும் சாவடி முன் கூடிவிடும்.
தூக்கம் வராதவர்களுக்கும், பொழுது போகாத பெருசுகளுக்கும் அப்போது அதுதான் பொழுது போக்க உதவிற்று. இரவுநேரத்தில் சுகமாகத் தூங்க நிணைப்பவர்களுக்கு சாவடியிலிருந்து எழும் – தாளத்துக்கோ எந்த ஒழுங்குக்கோ ஒத்து வராத கர்ணகடூர
பாட்டுக்களும் வசனங்களும் இடைஞ்சல் செய்ய, எப்போதடா இந்த ஒத்திகை முடிவுக்கு வரும் என்ற ஏக்கத்தை உண்டாக்கியது.

நாடக வாத்தியாரின் பாடுதான் பாவம்! எந்த விதத்திலும் – நடிப்பு, சாரீரம் எதுவும் ஒத்து வராத மலட்டுக் கலைஞர்(!)களுடன் – அவர் மொழியில் சொன்னால் – மாரடிக்க வேண்டி இருந்தது. ‘சிவாஜி’க்கெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு இந்த மரமண்டைகளுக்கெல்லாம் சொல்லித் தரவேண்டியிருக்கிற தன் விதியை நொந்து கொண்டு அவர் அடிக்கடி தலையில் அடித்துக் கொள்வார். என்ன செய்வது? பிழைப் புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே! அவரது நலிந்த தோற்றமும் தள்ளாமையும்
அதட்டிக் கற்பிக்கிற திறமின்மையும் காரணமாய், பிள்ளைகளுக்கு அவ்வளவாக அவரிடம் மதிப்பு இல்லை. “இவராவது சிவாஜிக்குப் பாடம் சொல்லித் தரவாவது? எல்லாம் டுப்!” என்றே அவர்கள் ஏளனம் செய்து வந்தார்கள். ஆனால் ஒரு நாள் அவர் அடிக்கடி
“சிவாஜிக்கு எங்கிட்ட ரொம்ப மரியாதை. அவரு வீட்டுலே எந்த விசேஷம்னாலும் இண்ணைக்கும் மறக்காமெ எனக்கு அழைப்பு வரும்” என்று சொல்லி வந்ததை மெய்ப்பிக்கிற மாதிரி சிவாஜியின் மகள் திருமணத்துக்கு அவருக்கு அழைப்பிதழ் வந்தே விட்டது. அலங்காரமான, பெரிய விலை உயர்ந்த அந்த அழைப்பிழைப் பார்த்த பிறகு தான் அவர்களின் அலட்சியமும் அவமதிப்பும் நீங்கியது. ஆனாலும் வாத்தியார் மிகவும் பொறுமைசாலி. இவர்களது அறியாமைக்காக ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை. தன் அருமை தெரிந்தவராய் தங்கராசுப் பிள்ளை ஒருவர் இருப்பதே அவருக்குப் போதுமான தாக இருந்தது.

நடேச ஆசாரிதான் ராஜபார்ட். பால ராமர் தவிர்த்து இரண்டாவது மூன்றாவது நாளின் ராமர் அவர்தான். அவரை விட்டால் சுமாராகக் கூட நடிக்கவோ பாடவோ ஆள் இல்லை. நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பதிலும் வாத்தியாருக்குப்
பிரச்சினைதான். வசதியற்ற அல்லது மேல் ஜாதியல்லாத ஒருவனை ராஜா வேஷத்துக் குப் போட்டு விட்டு, வசதியான மேல் ஜாதிப் பையனை அவனுக்குக் கீழே மந்திரியாகவோ சேவகனாகவோ போட்டுவிட முடியாது. கீழ்ஜாதி ராஜா வேஷக்காரன் “அடேய்! சேவகா” என்று அழைத்தால் மேல்ஜாதி சேவக வேஷக்காரன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து, எப்படி “ப்ரபோ!” என்று தண்டனிட்டு வணங்க முடியும்? ஆகக்கூடி பாத்திரத்துக்குப் பொருத்தமான ஆளாகத் தேர்வு செய்யாமல் அந்தஸ்துக்கு ஏற்ற வேஷமாகத் தர வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரையும் திருப்தி செய்ய வேண்டிய நிலையில் வாத்தியார் இருந்தார். தங்கராசுப் பிள்ளை உதவியோடு எப்படியோ சமாளித்து நாடகப் பயிற்சியைத் தொடங்கினார்.

மூன்றுமாதம் கடுமையாய்ப் பயிற்சி தரப்பட்டதும், கோடையில் ஒருநாள் முதல் கன்னி நாடகத்தை வெகு விமர்சையாய் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அக்னி மற்றும் ஊர்த் திருவிழாக்களுக்கு சொந்த பந்தங்களை அழைப்பது மாதிரி இந்த நாடக அரங்கேற்றத்துக்கும் அழைப்புகள் போய் ஊரே திமிலோகப்பட்டது. இந்த உறவினர்களில் அதிகமும் நாடக நடிகர்களின் விருந்தாளிகளே. அவர்கள் வந்திருப்பது முக்கியமாக நாடகம் பார்க்க அல்ல; நாடகத்தில் மேடை ஏறும் தம் உறவுப் பையனுக்கு, கல்யாணத்தில் மொய் எழுதுகிறமாதிரி மாலை, புத்தாடைகள், மைனர்செயின், மோதிரம் முதலியவற்றை, மேடையில் ஏறி அணிவித்துக் கவுரவிக்கத்தான். நடிப்பு பாட்டு எல்லாம் அவர்களுக்கு முக்கியமே அல்ல.

அப்பொழுது சிதம்பரம், கல்லூரியில் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தார். நாடக ஏற்பாட்டைக் கவனித்த தங்கராசுப் பிள்ளைக்கு சிதம்பரத்தின் கலை ரசனையும் திறமையும் தெரியும். அதனால் உள்ளூர்ப்பள்ளி மாணவர்களைக்
கொண்டு குட்டி நாடகம் ஒன்றை நடுவில் ஒருநாள் நடத்தக் கேட்டுக் கொண்டார். அதன்படி சிதம்பரம் ஐந்தாம் வகுப்புப் புத்தகத்தில் இருந்த “சாணக்கியன் சபதம்” என்ற ஒரே ஒரு காட்சி மட்டுமே கொண்ட குட்டி நாடகம் ஒன்றை சின்னப் பையன்களுக்குப் பயிற்சி கொடுத்து மேடை ஏற்றினார். பெரியவர்களது நடிப்பைவிட குழந்தைகளது நடிப்பு வெகுவாக மக்களைக் கவர்ந்தது.அதிலிருந்து மக்கள் ஒவ்வொரு வருஷ நாடகத்தின் நடுவிலும் சிதம்பரம் ஒரு குழந்தை நாடகத்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதும், அதன்படி சிதம்பரம் சிவாஜிகணேசன் சினிமாக்களில் இடையே நடித்த ‘சாம்ராட் அசோகன்’, ‘சாக்ரட்டீஸ்’ போன்ற நாடகங்களை குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து மேடை ஏற்றி மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றதும் இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு அன்றைய புகழ்பெற்ற சினிமாப் பாடல் களின் மெட்டுக்களில் சில பாடல்களும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்ததும் நினை வுக்கு வருகிறது.

பாராட்டுக் கிடைத்த உற்சாகத்தில், சிதம்பரம் ஒரு முழு நாடமே எழுதி ஊர்நாடகம் நடக்கும்போது நடத்தவும், தானும் அதில் நடிக்கவும் ஆசைப் பட்டதும், அதை அறிந்த அப்பா ‘நம் கௌவுரத்துக்கு மேடையேறி கூத்தாடி மாதிரி நடிப்பது குறைச்சல்’ என்று நினைப்பதாக அம்மா சொன்னதும் அந்த ஆசையை விட வேண்டி வந்ததும் நினைவில் ஓடியது.

அடுத்தடுத்த நாடகங்களுக்கு நடேச ஆசாரியே நாடக வாத்தியார் ஆனார். அதற்குப் பிறகு தொடர்ந்து கோடையில் அன்னப் படையலுக்கு சிறுத்தொண்டர் நாடகத்தை நடத்துவது அவரது பொறுப்பாயிற்று.

“இப்போது நடேச ஆசாரியும் இல்ல, நாடகம் நடத்துன தங்கராசுப் பிள்ளையும் இல்ல! அதானால மந்தையில் நாடகம் பாக்குற வாய்ப்பும் இல்லாமப் போய்ட்டுது” என்று மருது சோகத்தோடு சொன்னான்.

(தொடரும்)

Series Navigation