கால நதிக்கரையில் – அத்தியாயம் – 22

This entry is part of 34 in the series 20070906_Issue

வே.சபாநாயகம்அய்யனார் கோவில் இருக்கும் இலுப்ப மரத்தடியில் வந்து நின்றார்கள். கோவிலும், அதற்கு வெளியே இருக்கும் அய்யனார் சிலையும், எதிரில் நிற்கும் இரட்டைக் குதிரைகளும், அவற்றின் இரு புறமும் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீரர்களும் அப்படியேதான் அன்று பார்த்த மாதிரியே இருந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்தபடியே வண்ணமற்று, பாசி ஏறி, பீடங்களில் சின்னச் சின்ன அரசங்கன்றுகள் முளைத்திருந்ததில் மாற்றம் எதுவும் காணோம். புதுப்பிக்கவோ வண்ணம் பூசவோ அக்கறை காட்டவில்லை என்றாலும் பின்னப் படுத்தப்படுத்தாமலும் சேதம் எதுவும் விளைவிக்காமலும் இருந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஒருவேளை அய்யனாரிடம் இருக்கும் பயம் காரணமாக யாரும் அதைத் தொட்டிருக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது.

சின்ன வயதில் சிதம்பரம் அவ்வளவு பெரிய அய்யனார் சுதைச் சிற்பத்தை வேறு எங்கும் பார்த்தில்லை. சிலை அமர்ந்திருக்கும் பீடமே ஒர் ஆள் உயரத்துக்கு இருக்கும். சிலை அதற்கு மேல் பிரம்மாண்டமாக இரண்டு ஆள் உயரத்துக்கு இருக்கும். பெரியவர்களும் அண்ணாந்து தான் அய்யனாரின் முகத்தைப் பார்க்க முடியும். பல ஊர்களில் இருப்பது போல உறுப்புகள் சரியான விகிதத்தில் அமையாது ஏதோ குறை இருக்கிற மாதிரி இல்லாமல், கச்சிதமான சிற்ப சாஸ்திர அளவுக் கேற்றபடி அமைக்கப் பட்டதாக அழகாக கம்பீரமாக இருக்கும். அழகு மட்டுமிருந்தால் உக்கிரம் இருக்காது என்பதாலோ என்னவோ, கோழி முட்டை அளவுக்குப் பெரிய விழித்த கண்கள் கருநீலக் கண்ணாடிக் கோலிகள் போல ஜொலிக்கும்படியும், முறுக்கிய பெரிய கனத்த மீசைகளுடனும் சிற்பி செய்திருக்கக் கூடும். சின்னப் பிள்ளை கள் தனியே நின்று பார்த்தால் பயந்து விடுவார்கள். ஆனால் கலையழகு மிக்க அப்படிப் பட்ட அய்யனார் சிலையை அவர் இதுவரை பார்த்ததில்லை.

குதிரைகள் இரண்டும்கூட அம்சமாய், சிற்ப சாஸ்திரப்படி அமைக்கப் பட்டவை போல அழகாய் இருக்கும். சேணம், கடிவாளம் எல்லாம் வேலைப் பாடுகளுடன் இருக்கும். வலுவான கால்கள் திடமான குளம்புகளுடன் ஊன்றியபடி வேட்டைக்குக்
கிளம்பும் துடிப்புடன் சற்றே தலைதாழ்த்து நிற்கிற மாதிரி தெரியும். வலது பக்கக்குதிரையின் அருகில் கடிவாளத்தைப் பிடித்திருக்கும் வீரனின் காலடியில் ஒரு துடியான வேட்டை நாயும் ஓடத் தயாராக நிற்பதுபோலக் காணப்படும். மொத்தத்தில் அது ஒரு அழகிய சிற்பக் கூடம் போலவே சிதம்பரத்துக்குத் தோன்றியது. சின்ன வயதில் பயமுறுத்தல் காரணமாக அருகில் சென்று பார்த்திராததால் அதன் சிற்ப அருமை தெரியாது போயிற்று. ஒரு பயம் கலந்த கவர்ச்சி மட்டுமே அந்த வயதில் அவருக்கு அவற்றைக் கடக்கும் போது இருந்தது. இப்போது இது நம்மூர்க் கலைக்கூடம் என்று பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளலாம் என்கிறமாதிரி ஒரு விதப் புத்துணர்வுடன் சிலைகளை வலம் வந்தார். நெடுஞ்சாலைகளிலும், சில ஊர்களிலும், திரைப்படங்களிலும் – பளீரென்கிற வண்ணப் பூச்சுடனும், என்றும் புது மெருகுடனும் காணப் படுகிற அய்யனார் சிலைகளைப் போல இது இல்லை என்றாலூம் வண்ணம் பூசாமலே கருமையும் பசுமையும் கலந்த அந்தப் பழைமை அவருக்குப் பிடித்திருந்தது.

எல்லா ஊரையும் போல அய்யனார் பற்றிய கதைகள் இங்கும் உண்டு. தொந்திமாமா சின்ன வயதில் நிறையச் சொல்லி இருக்கிறார். நள்ளிரவில் அய்யனார் தீவட்டி வெளிச்சத்தில் தன் படைகளோடு கணகணவென சேங்கண்டியும் மணியும்
ஒலிக்க, தாரை தப்பட்டைகள் முழங்க வேட்டைக்குப் போவார் என்றும் அப்போது எதிர்ப்படும் யாரும் ரத்தம் கக்கிச் செத்துப் போவார்கள் என்றும், அவர் வேட்டைக்குப் போவதை யாரும் வீட்டுக்கு வெளியில் நின்று பார்க்கவும் கூடாது என்றும் மாமா
சொன்னவை ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போதெல்லாம், வீட்டுத் தெருநடையில் அவரும் மற்ற பிள்ளைகளும் படுத்திருக்கையில், எழுப்பி உள்ளே போய்ப் படுக்க வைக்க இதுமாதிரி அம்மா பயமுறுத்தியதுண்டு. ஆனால் தொந்தி மாமாவிடம், தான்
ஒருபோதும் இரவில் அப்படி அய்யனார் வேட்டைக்குச் செல்லும் ஆரவாரத்தைக் கேட்டதில்லையே என்று கேட்டபோது, அய்யனார் வேட்டைக்குப் போகும்போது மக்கள் எல்லாம் அப்போதைக்குப் பிரக்ஞை இல்லாத மாயத் தூக்கத்தில் இருப்பார் கள் என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பு வந்தது.

அய்யனார் கோவில் பற்றி இன்னொரு பயமுறுத்தலும் உண்டு. உச்சி வேளை யில் பெண்கள் – குறிப்பாக இளம்பெண்கள் அய்யனார் கோவில் பக்கம் போகக் கூடாது என்றும் போனால் அங்கே இலுப்பை மரத்தில் வாசம் செய்கிற முனி பிடித்துக் கொள்ளும் என்றும் சொல்வார்கள். யாராவது இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மயக்கம் போட்டு விழுந்தாலோ, பயத்தால் அரண்டவள் போல் விழித்தாலோ – அய்யனார் கோவில் வழியே உச்சி நேரத்தில் போனதால்தான் என்று தீர்மானமாய்ச் சொல்லி
விடுவார்கள். பூசாரியைக் கூப்பிட்டுக் காட்டினால் அவன் நிச்சயம் அது இலுப்ப மரத்து முனியின் சேட்டைதான் என்றும் பூஜை போட்டு ஓட்டியாக வேண்டும் என்றும் சொல்வான். இலுப்பை முனியின் தயவில் பூசாரிக்கு அடிக்கடி பிழைப்பு நடக்கும்.

அப்படி ஒருதடவை ஒரு பெண்ணுக்குப் பூசாரி பேயோட்டிய நிகழ்ச்சியை அருகிருந்து பார்த்தது சிதம்பரத்துக்கு இப்போது நினைவுக்கு வந்தது.

எதிர் வீட்டுக்கு புதிதாக ஒரு சின்னப்பெண் திருமணமாகி வந்திருந்தாள். வீட்டு நினைவோ என்னவோ அவள் எப்போதும் சுரத்தின்றியே இருந்தாள். அதனால் அவள் கணவனும் மாமியாரும் அவளை எதாவது குற்றம் குறை சொல்லி முகம் சுருங்க வைப்பார்கள். ஒருதடவை மதிய நேரத்தில் அவள் மடேலென்று நின்ற நிலைக்கு வெட்டிய மரம்போல விழுந்துவிட்டாள். சாப்பாடு நேரம் என்பதால் கனவன் வீட்டில் தான் இருந்தான். அவள் விழுந்ததைப் பார்த்துவிட்டு அவள் மாமியார் வீரிட்டாள். கணவன் ஓடித் தூக்கினான். அக்கம்பக்கம் இருந்தவர்கள் கணத்தில் கூடி விட்டார்கள். பெண் நினைவிழந்து மரக்கட்டைபோலக் கிடந்தாள். முகத்தில் தண்ணீர் தெளித்தும் காற்றுப் பட விசிறியும் அவள் அசையவில்லை. ஆளுக்கு ஆள் ஒன்று சொல்ல ஆரம்பித் தார்கள். தெருவின் கடைசி வீட்டுப் பாட்டி சொன்னாள்: “இப்பதான் அவ அய்யனார் கோயில் பக்கத்திலேர்ந்து வந்ததப் பாத்தேன். அதான்!”

எல்லோருக்கும் அதுதான் காரணமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே பூசாரிக்கு ஆள் போயிற்று. அவன் வந்து விபூதி பூசி வேப்பிலை அடித்து மந்திரித்ததும் அவள் லேசாக அசைந்தாள். “இது அந்த இலுப்ப முனியோட வேல
தான்! ஒண்ணும் பயப்படவேணாம். கழுதெய நான் வெரட்டி அடிக்கிறேன்” என்று கணவனுக்கும் மாமியாருக்கும் தைரியம் சொன்னான். “பாவம், புதுப் பொண்ணு! பூசாரி சொன்னபடி செய்யப்பா” என்று சொல்லி விட்டுக் கூடி இருந்தவர்கள் கலைந்தார்கள்.

அதன்படியே இரண்டு நாளில் முனிஓட்டுதல் ஆரம்பமாயிற்று. பூசாரி, சிந்தை சரியாக உள்ளவர்களே பார்த்ததும் பயப்படும்படியான பயங்கர ஒப்பனையுடன் – அகன்ற நெற்றியை முழுதும் அடைத்து விபூதி பூசி, புருவத்துக்கும் முன் நெற்றிக்கும் இடையில் பெரிய ரூபாய் நாணயத்தை விடப் பெரிதான ரத்தச் சிவப்பில் குங்குமம் வைத்து, திருகிவிட்ட அடர்ந்த மீசையுடன் கையில் உடுக்கையும் வேப்பிலைக் கொத்துமாக வந்தான். முனி பிடித்திருப்பதாக அவன் சொன்ன பெண்ணைக் கூடத்தில் உட்கார வைத்து, புகை மூட்டத்தை எழுப்பி, உடுக்கையை ஓங்கியடித்து, கர்ணகடூரமான குரலில் ஏதொ ஒரு பாட்டைப் பாடியதே அந்தப் பெண்ணை மிரட்டி இருக்கும். சடேலென்று ஒரு குத்து திருநீரை அள்ளிப் பெண்ணின் முகத்தில் அடித்தான் பூசாரி. அதில் சற்றே மருண்டு தலையை அசைத்து தூசிப்படலத்தை விலக்க முயன்றவளை நோக்கி வேகமாக வேப்பங் கொத்தை விசிறிச் சுழற்றினான். “ம்ம்ம்…..ஆடு…..!” என்று தலையில் வேப்பங் கொத்தால் அடித்தான். பாவம், பெண் அரண்டு போய்க் கண்கள் சொருக ஒரு பக்கமாய்ச் சரிந்தாள்.

“ஏய்! எங்கிட்டியே ஒன் வேலயக் காட்டுறியா? இந்த ஜாலக்குக்கெல்லாம் நான் ஏமாந்துட மாட்டேன். ம்ம்ம்…ஆடு!” என்று மறுபடியும் வேப்பங் கொத்தால் அடித்தான். “ஐயோ! அடிக்காதே அடிக்காதே!” என்று என்று அவள் அரற்றினாள். “அப்ப ஆடு!” என்று வேப்பங் கொத்தைச் சுழற்றி விசிறினான். அடிக்குப் பயந்தோ அல்லது ‘தந்னைப் பேய் பிடிக்கவில்லை, மாமியார், கணவன் இருவரும் அனுசரணையாக இல்லாமல் வதைப்பதுதான் காரணம்’ என்றால் யாரும் தனக்கு ஆதரவாகப் பேசப் போவதில்லை என்று உணர்ந்தோ, அவள் தலை லேசாக ஆட ஆரம்பித்தது.

“பாத்தியா! அடின்னதும் அதுக்குப் பயம் வந்துடுச்சி” என்று அதற்குள் கூடி விட்ட அண்டை அயல் கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. சிதம்பரமும் அந்தக் கூட்டத்தில் ஒரு பார்வையாளராக இருந்தார். பெண்ணின் தலையாட்டம் பூசாரியின்
வேப்பங் கொத்தின் வேகச் சுழற்சிக்கு ஏற்ப வேகமெடுத்து சக்கர வட்டமாகச் சுழன்றது. பெண்ணுக்கு நீண்ட கூந்தல். அது பரந்து விரிந்து சுழன்றது பயமூட்டுவதாக இருந்தது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது. சுழற்சிக்கு ஏற்ப உடல் இடுப்பு வரை ஆட்டுக்கல் சுழற்றப் படுவது போல வளைந்து திருகி சுழன்றது. பிறகு எத்தனை
நாளைக்கு உடம்பு வலிக்குமோ என்று மனம் கசிந்தார்.

”ஏய்! சொல்லு யாரு நீ? இலுப்ப மரத்து முனிதானே?” என்று வேப்பங்கொத்தால் பெண்ணின் தலையில் சுளீரென்று அடித்தான் பூசாரி. பார்த்துக் கொண்டி ருந்த சிதம்பரத்துக்கு வலித்தது. ‘கிறீச்’சென்று கத்தியபடி அந்தப் பெண் பின்னால்
சாய்ந்து பிரக்ஞை அற்றவளானாள்.

“சரி! இண்ணைக்குப் போதும். நாளைக்கு மீதியக் கேட்டுக்கிறேன்” என்று பூசாரி தன் கடையைக் கட்டினான். ‘ஆருன்னு சொல்லி, போறேன்னு சொல்ற வரைக்கும் பூசாரி உடமாட்டான்’ என்று ஒரு கிழவர் தனக்குச் சொல்கிறமாதிரி மற்றவர்களுக்கும் சொன்னார். இப்படி எத்தனையோ முறை பார்த்திருக்கிற அனுபவம் அதில் தொனித்தது.

இப்படி எத்தனையோ முறை அந்தச் சித்திரவதை தொடர்ந்தது. அந்தப் பெண்ணுக்கு புதிதாக வாழ வந்த இடத்தில், இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லை. அறிவியலும், மருத்துவ ஆராய்ச்சிகளும் வளர்ந்துள்ள இன்றைய நிலை யிலேயே கூட ‘இது மூட நம்பிக்கை, பேயும் இல்லை முனியும் இல்லை – இது மனோவியாதி; மருத்துவரிடம் காட்டுங்கள்’ என்று உணர்ந்து வழிகாட்டுபவர்கள் இல்லாத போது, அறியாமையும் மூடநம்பிக்கையும் மிகுந்த அந்தக் காலத்தில் யாருக்கு அவளைக் காப்பாற்றத் தெரிந்திருக்கும்? கடைசியாக பூசாரியே அலுத்துப்போய், “இது இங்கக் கட்டுப்படலீங்க; பேசாம குணசீலத்துக்கு அழச்சிக்கிட்டுப்போயி அங்க ஒரு மண்டலம் கோயிலச் சுத்த வையுங்க” என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினான்.

பிறகு ஓராண்டுக்கு மேலாகப் பிரமை தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அவள் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததும்தான் சரியாயிற்று. அவளுக்குச் சரியாயிற்று என்பதை விட அவளுடைய மாமியாருக்கும் கணவனுக்கும் புத்தி சரியா
யிற்று என்று சொல்லவேண்டும்.

“சரி, போலாமா?” என்ற மருதுவின் குரல் சிதம்பரத்தைப் பழைய நினைவுகளிலிருந்து மீட்டது.

“ஒவ்வொரு எடமும் பழைய நினைவுகளக் கிளறிவிட்டுடுது” என்றபடி நடந்தார்.

இருவரும் அய்யனார் கோவில் திடலிலிருந்து கீழமந்தையை நோக்கி நடந்தார்கள்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation