(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

This entry is part of 33 in the series 20070802_Issue

சி. ஜெயபாரதன், கனடா


சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் !
மதுவருந்த மாட்டேன் அங்கு !
புலால் உண்ண மாட்டேன் அங்கு !
வைக்கோல் மெத்தையில் நான் துயிலேன் !
ரோமானிய மன்றக் கூண்டில் என்னை
ஏற்றலாம் என்று கனவு காணாதீர் !
ரோமானிய வீதிகளில் எல்லாம் என்னை
வெற்றிச் சிறை மாதாய்க் காட்டிச்
சுற்றிடலாம் என்று மட்டும் எண்ணாதீர் !
அதற்குப் பதில் எகிப்தின் குப்பைக் கிடங்கில்
புதைந்து போவதில் பூரிப்ப டைவேன் !
என்னாட்டில் மாபெரும் பிரமிட் ஆலயம்
எழுந்து நிற்குது என்னை ஏற்றுக் கொள்ள ! (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எனக்குள்ள தெய்வ நியதி இது:
என் வேந்தருக்கும் என் பிரபுவுக்கும் அடி பணிவது !
எனது காரணங்களைத் தெளிவு படுத்துவேன்.
என் காம இச்சைக் குறைகள், மிகைகள்
என் பலவீனமாய் ஒப்புக் கொள்வேன் ! …
ஈதோ என் நிதியாளர், எடுத்துக் கொடுப்பார்
எனது சொத்து, நகை, பொன் நாணயம்
அனைத்தும் கொடுப்பார் உமக்கு !
என்னிறுதி உறுதி மொழி அது ! …. (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

+++++++++++++++

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவைக் காண தூதனை அனுப்புகிறான். சாமர்த்தியமாகப் பேசி கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறார் ரோமானியப் படையினர்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் ரோமானியப் படையுடன் நுழைந்து தந்திரமாகப் பேசிக் கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறான்.

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] அயோக்கியர்களே ! அருகில் நிற்காதீர் ! சிறைப்பட்டாலும், நான் சிறையில் கிடப்பேன் என்று மட்டும் எண்ணாதீர் ! புலால் உண்ண மாட்டேன் நான் ! மதுவருந்த மாட்டேன் நான் ! வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் நான் ! பட்டினி கிடந்து சாவேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ! ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று அவமானம் செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் ! அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் ! பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள ! தள்ளி நிற்பீர் ! உங்கள் மூச்சுக் காற்று கூட என்மீது படக் கூடாது ! உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது ! தூரமாய்த் தள்ளி நிற்பீர் ! நான் எகிப்த் மகாராணி !

புரோகியூலியஸ்: மனதைத் தளர விடாதீர் மகாராணி ! உங்கள் உயிருக்குப் பங்கம் விளையாது !

கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்னை மான பங்கப் படுத்த உங்கள் படை தயாராக இருப்பது எனக்குத் தெரியாமல் போகவில்லை !

[அப்போது தொலபெல்லா உள்ளே நுழைகிறான்]

தொலபெல்லா: புரோகியூலியஸ் ! நீ என்ன பண்ணி விட்டாய் ? மகாராணி கோபத்துடன் தோன்றுகிறார் ! தளபதி அக்டேவியஸ் ஆணைப்படி செய்தாயா ? அல்லது அவமானப் படுத்தினாயா ? அக்டேவியஸ் உன்னை அழைக்கிறார், போ நான் மகாராணியைப் பாதுகாக்கிறேன்.

புரோகியூலியஸ்: போகிறேன். மகராணியை மதிப்புடன்தான் நடத்தினேன் அவ்விதமே நீயும் நடத்து. பரிவுடன் பேசு. பண்புடன் பேசு. பாசமுடன் பேசு [கிளியோபாத்ராவைப் பார்த்து] மகராணி ! உங்கள் சார்பாக அக்டேவியஸிடம் நான் என்ன சொல்ல வேண்டும் ?

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] செத்துப் போவேன் என்று சொல் !

புரோகியூலிஸ்: [அதிர்ச்சி அடைந்து] மகாராணி ! எப்படிச் சொல்வேன் அதை ? அவராட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கிறேன். போய் வருகிறேன். [போகிறான்]

தொலபெல்லா: மதிப்புக்குரிய மகாராணி ! நான் சொன்னதைக் கேட்டீர் அல்லவா ! என் கடன் உங்களைப் காப்பதே ! அஞ்ச வேண்டாம் !

கிளியோபாத்ரா: அப்படிச் சொல்லித்தான் என்னைச் சிறைப்படுத்தி யுள்ளார். சிறைப்பட்ட எனது உறுப்புகள் யாவும் செயலற்றுப் போயுள்ளன ! என்ன சொன்னாய் நீ என்பது செவியில் படவில்லை எனக்கு.

தொலபெல்லா: [பரிவுடன்] உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் மோசடி செய்பவன் அல்லன். முழு நம்பிக்கை வைக்கலாம் என்மேல் !

கிளியோபாத்ரா: [ஆத்திரமாக] ரோமானியக் களிமண் எல்லாம் ஒன்றுதான் ! நிறம் வேறாகத் தெரிந்தாலும் குணம் ஒன்றுதான் ! உன் பையில் என்ன சூட்சம் ஒளிந்துள்ளது ? இப்போது போனாரே உமது முதல் தூதர் அவர் சாமர்த்தியமாகப் பேசி என்னைச் சிறைப்படுத்திச் சென்றார். சுற்றி வந்து வஞ்சகமாய்ச் சதி செய்யாமல் நேராகவே உங்கள் திட்டத்தை வெளியிடலாம். நான் அடைபட்டுப் போன மான் ! என் கனவைச் சொன்னால் நீ சிரிப்பாய் !

தொலபெல்லா: நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை மகாராணி !

கிளியோபாத்ரா: நான் மனத்துயரில் கிடக்கிறேன். எனது முதற்கனவின் விளைவாக ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸரின் மனைவியாக மாறினேன். அவர் கொல்லப்பட்ட பிறகு அடுத்த என் கனவில் ஆண்டனி மூவரில் ஒரு சக்கரவர்த்தியாக எனக்குத் துணை இருந்தார். இனி அப்படி ஒரு கனவு, தூக்கம் வராத எனக்குத் தோன்றுமா ? கனவு வந்தாலும் அப்படி ஒரு மாவீரரை நான் இனிக் காண்பேனா ?

தொலபெல்லா: நிச்சயம் காண்பீர் மகாராணி ! உங்கள் புதுக்கனவு பலிக்கும் ! அடுத்து வருகிறார் அக்டேவியஸ் !

கிளியோபாத்ரா: ஓக் மரம்போல் உறுதியான ஆண்டனி தேவலோகம் சென்று விட்டார். ஆங்கு
சூரிய சந்திரரைப் பாதையில் சீராகத் தூண்டி விட்டு, இச்சிறிய பூமிக்கு விளக்கேற்றினார் ! அந்த விளக்கொளியை அணைக்க இப்போது புயல் அடிக்கப் போகிறது !

தொலபெல்லா: முற்றிலும் உண்மை மகாராணி !

கிளியோபாத்ரா: [சற்று கூர்மையாகப் பார்த்து] எனக்கு அந்தப் புயலைப் பற்றிச் சொல்வாயா ?

தொலபெல்லா: நீங்கள் கேட்பது புதிர்போல உள்ளது ! புரியும்படிச் சொல்வீரா ?

கிளியோபாத்ரா: [மிக்கக் கவலையுடன்] அக்டேவியஸ் என்னை என்ன செய்யப் போகிறார் என்பது
உனக்குத் தெரியுமா ?

தொலபெல்லா: எனக்குத் தெரிந்ததைச் சொல்ல அச்சம் உண்டாகுது ! ஆனால் அஞ்ச வேண்டிய தில்லை மகாராணி ! என்வாயால் நான் அதைச் சொல்லக் கூடாது ! சொன்னால் என் தலை துண்டாகும் !

கிளியோபாத்ரா: [கனிவுடன்] நான் படும் இன்னலை அறிவாய் நீ ! தயவு செய்து சொல் ! என் மீது பரிவு காட்டு ! உன் அன்பு மனதைத் திறந்து காட்டு !

தொலபெல்லா: [தடுமாறிக் கொண்டு] மகாராணி ! அக்டேவியஸ் உங்களைக் கண்ணியமாகவே நடத்துவார் ! கவலைப் படாதீர் !

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] பொய் சொல்கிறாய் நீயும் ! அறிவு கெட்டவனே சொல் ! ரோமாபுரித் தெரு வீதிகளில் விலங்கிட்டு என்னை வெற்றிச் சின்னமாய் நடத்திச் செல்லப் போகிறார், இல்லையா ?

தொலபெல்லா: ஈதோ தளபதியே வருகிறார். கேளுங்கள். தன் சகாக்களுடன் உங்களைக் காண வருகிறார்.

[ரோமானியக் காவலன் முன்னறிவிக்க அக்டேவியஸ் இராணுவ உடையில் தனது சகாக்களான காலஸ், மாசொனஸ் உடன்வர முன்னே வருகிறார். காவலர் யாவரும் இரைச்சலின்றி அமைதியாக அணியில் நிற்கிறார்.]

காவலன்: [பலத்த குரலில்] ஓதுங்கி நிற்பீர் ! ரோமாபுரித் தளபதி மாண்புமிகு அக்டேவியஸ் வருகிறார்.

அக்டேவியஸ்: [ஆர்வமாக] எங்கே எகிப்த் பேரரசி ?

தொலபெல்லா: ஈதோ இருக்கிறார் மகாராணி எமது பாதுகாப்பில் !

கிளியோபாத்ரா: [முன்வந்து மண்டியிட்டு] வந்தனம். வருக, வருக மாவீரர் அக்டேவியஸ் ! உங்கள் தடம்பட்டு எனது எகிப்த் நாடு புனிதம் அடைகிறது ! உங்கள் ஆட்சிக்கு அடிபணிகிறது ! உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய எகிப்தரசி இங்கே காத்திருக்கிறாள் !

அக்டேவியஸ் [கண்ணியமாக] மண்டியிடத் தேவையில்லை மகாராணி ! எழுந்து உனது ஆசனத்தில் உட்காருவீர் !

கிளியோபாத்ரா: [எழுந்த வண்ணம்] அப்படித்தான் எங்கள் தெய்வ நியதியில் எழுதப்பட்டிருக்கிறது. என் பிரபுவுக்கும், என் தெய்வத்துக்கும் நான் கீழ்ப்படிந்து வணங்கக் கடமைப் பட்டவள் !

அக்டேவியஸ்: உனது செயல்கள் எனக்குப் பிடிக்கா விட்டாலும் எகிப்த் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு ரோமைச் சார்ந்தது. எமக்கு நீ உண்டாக்கிய காயங்கள் ஆறவில்லை ஆயினும், சந்தர்ப்பத்தால் நேர்ந்தன என்று அவற்றை ஒதுக்கி வைக்கிறேன்.

கிளியோபாத்ரா: [தலை தூக்கி] நான் என்ன காயங்கள் உமக்கு உண்டாக்கினேன் ? எப்போது உண்டாக்கினேன் ?

அக்டேவியஸ்: முதலில் சீஸரின் மனைவி கல்பூர்ணியாவை நீ காயப்படுத்தினாய் ! இரண்டாவது ஆண்டனியின் மனைவி அக்டேவியாவை நீ புண்படுத்தினாய் ! அக்டேவியா என்னருமைச் சகோதரி ! அடுத்து சீஸருக்கு ஆண்வாரிசை அளித்து ரோமாபுரி செனட்டாரைக் காயப்படுத்தினாய் ! ஒரு கீழ்நாட்டரசியின் மகன் ரோமாபுரிக்குப் பட்டத்து அரசனாய் வரலாம் என்னும் பயத்தை உண்டாக்கி விட்டாய் ! எகிப்துக்குக் கப்பம் வாங்க வரும் அத்தனை தளபதிகளையும் வசீகரப் படுத்தி விடுகிறாய் ! ரோமானிய மாதரிடம் இல்லாத ஒரு மந்திர சக்தி ஏதோ எகிப்த் மகாராணிக்கு உள்ளது !

கிளியோபாத்ரா: ரோமாபுரியின் குளிர்ச்சியை வெறுத்து எகிப்தின் வெப்பத்தை நாடி வருபவர் உமது படைத் தளபதிகள் ! நான் அவரைத் தேடிப் போகவில்லை ! எகிப்தில் அவருக்குச் சுதந்திரம் அதிகம் ! சுகபோகம் அதிகம் ! உபசரிப்பு அதிகம் ! மதுவும், மாதரும், மன மகிழ்ச்சியும் அதிகம் ! ரோமாபுரியில் ஏன் அவை எல்லாம் மலிவாகக் கிடைப்பதில்லை ?

அக்டேவியஸ்: எகிப்தில் திறமையாகப் பேசும் மாதர் அதிகம் என்பது நன்கு தெரிகிறது ! மகாராணி ! இப்போது நான் சொல்வதைக் கேட்பீர் ! என் நிபந்தனைக்கு உட்பட்டால் உமக்குச் சலுகைகள் அளிப்பேன். ஒப்பா விட்டால் …. !

கிளியோபாத்ரா: என் நிபந்தனைக்கு உடன்பட்டால், உங்கள் நிபந்தனைக்கு நான் உடன்படுவேன். சரி நான் ஒப்பா விட்டால் … என்னை என்ன செய்வீர் ?

அக்டேவியஸ்: [ஆச்சரியமுடன்] ஓ ! உங்கள் நிபந்தனை ? சொல்வீர் ! ஒப்பா விடாலும், அதைக் கேட்கிறேன், சொல்வீர் !

கிளியோபாத்ரா: எனது சொத்து, நகை, பொன் நாணயங்கள் அத்தனையும் உங்களுக்குத் தருகிறேன். எகிப்த் முழுவதையும் ரோமுக்குத் தந்து விடுகிறேன் ! ஆனால் எகிப்த் நாட்டுக்கு என் மகன் சிஸேரியனை மன்னனாக ஆக்க வேண்டும் ! அதுவே என் வேண்டுகோள், பரிவான நிபந்தனை.

அக்டேவியஸ்: [சற்று சிந்தித்து] அதற்கு நான் உடனே பதில் அளிக்க இயலாது. ஆனால் அதற்கொரு நிபந்தனை விடுகிறேன் ! சிஸேரியனை முதலில் நீ எங்களிடம் விட்டுவிட வேண்டும். ரோமில் அவனை அழைத்துச் சென்று நாங்கள் அரசாளப் பயிற்சிகள் அளிக்க வேண்டும் !

கிளியோபாத்ரா: [ஆழ்ந்து சிந்தித்து] நானிதை எப்படி நம்புவது ? சிஸேரியனை ரோம் செனட்டார் எவருக்குமே பிடிக்காது ! சீஸருக்கு நேர்ந்த அதே கதிதான் அவரது மகனுக்கும் கிடைக்கும். ஓநாயிடம் எப்படி முயல் குட்டியை ஒப்படைப்பது ? சிஸேரியனுக்கு ரோமில் யார் பாதுகாப்பு அளிப்பது என்று கூறுவீரா ? என்னருமை மகனை உங்கள் கையில் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை !

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 1, 2007)]

Series Navigation