எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)

This entry is part of 37 in the series 20070329_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மேதகு மாண்புடை ராணி! உங்களை
யூத மன்னன் ஏரோத் கூட
கண்முன் காண அஞ்சுவான், சினத்துடன்
களிப்பு மாறிக் கடுகடுக்கும் போது! …. (அலெக்ஸாஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அந்த ஏரோத் மன்னன் தலையை வாங்குவேன்!
ஆண்டனி முன்னின்றி ஆணையிட் டவரைத்
தூண்ட முடியாது எப்படித் தலை அறுப்பேன்? …. (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

(அக்டேவியா) என்னை விட உயரமா? …
அவள் பேசக் கேட்டாயா? வாய்க்குரல் கீச்சலா? …
கோழை மனதா? குள்ள மாதா?
நீண்ட காலம் அவளுடன்
ஆண்டனி வாழ மாட்டார்!
மந்த புத்திக் காரி! குள்ளி! ….
கம்பீரத் தோற்றம் கொண்டவளா? … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
Antony & Octavia

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.


Fig. 1A
Octavia under Stress

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:6

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++


Fig. 1B
Cleopatra, Alexsas &
Messenger

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:6

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:6

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழிகள்: ஈராஸ், சார்மியான், பணியாள் அலெக்ஸாஸ், தூதுவன்

காட்சி அமைப்பு: அலெக்ஸஸ் ரோமுக்குப் போக முடியாமல் ரோமுக்கு அனுப்பிய தூதுவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.

கிளியோபாத்ரா: அலெக்ஸாஸ்! நீதான் ரோமுக்குப் போக வில்லை. யாரை அனுப்பினாய் ரோமுக்கு? ஆண்டனி எப்போது அலெக்ஸாண்டியாவுக்கு வருகிறார்? அக்டேவியா எப்படி இருக்கிறாள் நான் என்று தெரிய வேண்டும்.

அலெக்ஸாஸ்: உங்களிடம் போன தடவை உதை வாங்கினானே, அதே தூதுவன்தான் போயிருக்கிறான். வந்து விட்டான் இப்போது.

கிளியோபாத்ரா: எங்கே அந்தத் தூதுவன்?

அலெக்ஸாஸ்: மகாராணி! உங்கள் முன்வரப் பயந்து போய் ஒளிந்து நிற்கிறான்.


Fig. 2
Cleopatra Ridiculing
Octavia

கிளியோபாத்ரா: [கோபமாக] வரச் சொல் அவனை! போன தடவை என்முன் வந்ததால் அடி வாங்கினான்! இந்த தடவை என்முன் வராததால் அடி வாங்கப் போகிறான்! உடனே அழைத்து வா அவனை!

அலெக்ஸாஸ்: மேதகு மகாராணி! உங்கள் முகம் கடுகடுப்பாய் உள்ள போது, யூதர்களின் அந்த கோர மன்னன் ஏரோத் கூட உங்களுக்கு நேரே நிற்கப் பயப்படுவான். உங்கள் சினத்துக்கு அஞ்சாத ஆண் புலிகள் அலெக்ஸாண்டிரியாவில் கிடையாது.

கிளியோபாத்ரா: போதும் நிறுத்து, அலெக்ஸாஸ்! ஏரோத் எதிரே என்முன் நின்றால், நானே அவன் தலையை வாளால் சீவி விடுவேன்! அந்த பாப வேலையை ஆண்டனி வாளால் செய்ய ஆணை யிடுவேன். ஆனால் ஆண்டனி அருகிலில்லை! ரோமில் அக்டேவியாயை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்! தூதுவனை அழைத்து வா என் கோபம் எரிமலையாய் வெடிக்கும் முன்பு!

[அலெக்ஸாஸ் வெளியே போய் தூதுவனை அழைத்து வருகிறான். அஞ்சி நடுங்கிய வண்ணம் அலெக்ஸாஸ் பின்னால் நடந்து வருகிறான். அடி வாங்கினாலும் தாங்கிக் கொள்ள, எ·குக் கவசம் அணிந்துள்ளான்.]

அலெக்ஸாஸ்: வா, பயப்படாமல் வா. உனக்கு ஒன்றும் நேராது. அடி விழுந்தாலும், உனக்குக் கவசம் உள்ளது.

கிளியோபாத்ரா: நீ பயந்து கொண்டு வருவதைப் பார்த்தால், பாதகச் செய்தி கொண்டு வருவது போல் தோன்றுகிறது எனக்கு!
ஆண்டனியிடம் என் கடிதத்தைக் கொடுத்தாயா? அக்டேவியாவைப் பார்த்தாயா?

தூதுவன்: [மண்டியிட்டு வணங்கித் தழுதழுத்த குரலில்] மகாராணி! தங்கள் கடிதம் கண்டு ஆண்டனி களிப்படைந்தார். இதோ அவரது பதில் கடிதம் தங்களுக்கு. [கடிதத்தைக் கொடுகிறான்]. ஆம் அக்டேவியாவைப் பார்த்தேன்.

கிளியோபாத்ரா: [கடிதத்தை வாங்கிக் கொண்டு] எங்கே பார்த்தாய் அக்டேவியாவை?


Fig. 3
Cleopatra in Her Palace

தூதுவன்: மகாராணி, ரோமில் பார்த்தேன். திருமணம் ஆயினும், அக்டேவியாவின் முகத்தில் நான் மகிழ்ச்சியைக் கணவில்லை! திருமணம் நடந்தாலும், ஆண்டனிக்கும் அவளுடைய சகோதரர் அக்டேவியஸ¤க்கும் மனப்பிளவு மறுபடியும் உண்டாவதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பக்கம் அன்புக் கணவர் ஆண்டனி! மறு பக்கம் ஆற்றல் மிக்க சகோதரர் அக்டேவியஸ்! இரண்டுக்கும் இடையில் அக்டேவியா நசுக்கப் படுகிறாள்.

கிளியோபாத்ரா: [சிரிக்கிறாள்] நல்ல செய்தி அல்லவா அது? நசுங்கிச் கசங்கட்டும் அவள்! என் நெஞ்சை வெந்து போக வைத்தவள்! உன் தகவல் என் நெஞ்சைக் குளிரச் செய்கிறது. ஆண்டனியின் பக்கம் அவள் சேர்ந்தால், அக்டேவியஸ் அவளை ஒதுக்கி விடுவார். அக்டேவியஸின் பக்கம் அவள் சேர்ந்தால் ஆண்டனி அவளைப் புறக்கணிப்பார்! .. ஆமாம், என்னைப் போல் அவள் உயரமா?

தூதுவன்: இல்லை மகாராணி! அக்டேவியா குட்டை! மிகவும் குட்டை! ஆண்டனியின் மார்பு உயரம் கூட இல்லை. முத்தம் கொடுக்க வேண்டு மென்றால், அக்டேவியாவைத் தூக்கித்தான் அவர் முத்தமிட வேண்டும்.

கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] அவள் குள்ளச்சியா? அப்படித்தான் இருப்பாள் என்று நினைத்தேன். குட்டை மாதையும், நெட்டை ஆணையும் பார்த்தால் தந்தை, மகளைப் போல் தெரிவார்கள். ஆண்டனி நடக்கும் போது அவளைப் பின்னே விட்டுத் தான் முன்னே வருவார். யாரும் சிரிக்காமல் இருக்க வேண்டுமே! அவள் குரல் எப்படி உள்ளது? குருவி போல் கீச்சுக் குரலா?

தூதுவன்: ஆமாம் மகாராணி! தாங்கள் சொல்வது சரியே! தாழ்வான குரல், மேலான குடும்பத்தில் பிறந்தாலும்! கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போல் தணிந்த குரல்! கேட்போருக்குக் காதுதான் நீள வேண்டும்!

கிளியோபாத்ரா: என்னை மாதிரிப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்தவள் ரோமில் எங்கே கிடைப்பாள்? ஆண்டனிக்கு ஏற்ற அரசிளங் குமரி எகிப்தில் காத்திருக்க, வேண்டாத குள்ளியை எப்படி அவர் ஏற்றுக் கொள்ளலாம்? எனக்குள்ள வீரம், கம்பீரம், ஆடம்பரம் அக்டேவியாவுக்கு உள்ளதா? ஆண்டனி என்னை மணந்தால், எகிப்த் நாட்டையே அவருக்குச் சீராக அளிப்பேன்! அக்டேவியாவை மணந்த ஆண்டனிக்குப் படுத்துக் கொள்ள ஓர் அரண்மனை கூடக் கிடைக்காது! வேறென்ன விகாரங்கள் அக்டேவியாவுக்கு? சொல்!


Fig. 4
Cleopatra thinks of Anthony

தூதுவன்: நடக்கும் போது நண்டு போல் ஊர்ந்து செல்கிறாள்! நடப்பதும் நிற்பதும் ஒரே மாதிரி! அக்டேவியாவைப் பார்த்தால் உடல்தான் தெரிகிறது! உயிரோட்டமே தெரியவில்லை! நட்ட சிலைப் போல் உள்ளாள்! சுவாசிக்கும் ஓர் உயிர்ப் பிறவியாகக் காணப்பட வில்லை அவள்!

கிளியோபாத்ரா: [வெடிப்புச் சிரிப்புடன்] உண்மையாகவா? குட்டைப் பெண்ணை அக்டேவியஸ் ஆண்டனியின் தோளில் சுமக்க வைத்தது வெகு சாமர்த்தியம்! ஆண்டனியை மைத்துனனாய் வாங்கியது ஒரு பெரும் ராஜ தந்திரம்! அடுத்து என்ன சொல்ல வைத்திருக்கிறாய்?

தூதுவன்: மகாராணி! முக்கியமான தகவலிது! சொல்ல மறந்துவிட்டேன்! நினைவில் இப்போதுதான் வந்தது! அக்டேவியா ஒரு விதவைப் பெண்! கணவனை இழந்தது சமீபத்தில்தான்! அவளுக்கு முப்பது வயதிருக்கலாம் என்று கேள்விப்பட்டேன்!

கிளியோபாத்ரா: [கண்களில் கனல் பறக்க] விதவைப் பெண்ணா அவள்? மெச்சுகிறேன் அக்டேவியஸ் திறமையை! அவள் ஒரு விதவையா? ஆண்டனியை ஏமாற்றி விலை போகாத குதிரையை எப்படி வாங்க வைத்தார்? நேற்றுக் கணவனைப் பறிகொடுத்தவள் எப்படி யின்று ஒருவரை ஏற்றுக் கொண்டாள்? வியப்பாக உள்ளதே! நானும் விதவை மாதுதான்! ஆனால் சீஸர் மாண்ட பத்தாவது நாளே நான் திருமணம் செய்ய வில்லை! … அவள் முகம் வட்டமாக உள்ளதா? கோழி முட்டை மாதிரி உள்ளதா?

தூதுவன்: வட்ட முகம்தான் மகாராணி! அதிலும் கோண வட்டம்தான்! முழுமதி போலில்லை! பதிமூன்றாம் நாள் பிறை போல் முகம்! பார்க்கச் சகிக்க வில்லை!


Fig. 5
The Unhappy Cleopatra

கிளியோபாத்ரா: பதிமூன்றாம் நாள் பிறையா? நல்ல உதாரணம்தான்! அக்டேவியாவுக்குச் சட்டி மூஞ்சி நேராகச் சொல்! முக அம்சம் கூட இல்லையா? கூந்தல் என்ன நிறம்? கூந்தல் நீளமாகத் தொங்குதா?

தூதுவன்: கூந்தல் பழுப்பு நிறம்! நீளமான கூந்தல்தான்! பொய் முடியாக இருக்குமோ என்று சந்தேகப் படுகிறேன்! நெற்றி சிறியது!

கிளியோபாதரா: [புன்னகையுடன்] ஈதோ, வாங்கிக் கொள் பொற்காசுகளை. நல்ல தகவல் இம்முறை கொண்டு வந்திருக்கிறாய்! சரி, போய் வா! [தூதுவன் போகிறான். சார்மியானைப் பார்த்து] சார்மியான்! ஆண்டனி புது மணப்பெண் மோகத்தில் மயங்கிக் கிடக்கிறார்! ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள்! காமம் சொற்ப நாழி! ரோமின் தைபர் நதி ஆண்டனியின் தாகத்தைத் தீர்க்காது! தாகம் தீராத ஆண்டனி நைல் நதியைத் தேடித்தான் வருவார்! எப்போது வருவார் என்பதுதான் தெரிய வேண்டும் எனக்கு. எகிப்துக்கு ஆண்டனியைக் கவர்ந்து வர என்ன தந்திரம் செய்யலாம்? வந்து என் கண்வலையில் மாட்டிக் கொண்ட ஆண்டனியை அரண்மனையில் கட்டிப் போட என்ன செய்யலாம்? சொல் சார்மியான்! சொல்!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 28, 2007)]

Series Navigation